Tuesday, November 24, 2015

விடு நீறே

திருவருட்பிரகாச வள்ளலாரின் வழியை நாடுபவர்கள் முதலில் சமயமத சடங்குகளை விடுத்தல் வேண்டும். விபூதி பூசுதல் சைவ சமயத்திற்கு உகந்தது. சன்மார்க்கம் அதனைக் கடந்தது. தயவு செய்து சன்மார்க்கிகள் அதனைக் கடந்து வரவேண்டும். பழக்கம் நம்மை அதிலே இழுக்கும். பல ஆயிரங்கணக்காண கற்பங்களின் ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும். ஜீவ காருண்ய தயவு வந்தால் எல்லாவற்றையும் விட்டு அக்கணமே விடுபடலாம். 

                                                                    விடு நீறே
                                                         (தி.ம.இராமலிங்கம்)

                                                              கலி விருத்தம்

அருட் பெருஞ்ஜோதி அருள் செய்கையில்
குருவருள் எல்லாம் கூடி வருகையில்
மருள்நெறி எல்லாம் மருண் டோடுகையில்
திருநெறி மார்க்கத்தில் தீதாம் விடுநீறே.        1

சுத்த சன்மார்க்கம் சுகந் தருகையில்
நித்தம் நினைக்கும் நெஞ்சம் வருகையில்
சித்த மார்க்கமெலாம் சுருண்டோ டுகையில்
பித்த னெனப்படும் பதரை விடுநீறே.            2

ஞான சபையுள் ஞானம் வருகையில்
வானத்தின் மீதுமயில் வந்தா டுகையில்
கான மதமெல்லாம் குதித்தோ டுகையில்
ஈன சாம்பலை இகழ்ந்து விடுநீறே.            3

வடலூர் பூசம் வந்து பார்க்கையில்
மட மாதர் மயக்கம் தீர்கையில்
இடர் உலக இச்சை விடுகையில்
சுடலை மறக்க சினந்து விடுநீறே.            4

எமபயம் கடந்து எல்லாந் தானாகையில்
நமசிவாய மந்திர நிலை கடக்கையில்
சமயமத வழக்கெலாம் சட மாகையில்
கமலம் மலர்ந்து கூடவே விடுநீறே.            5

ஜீவ காருண்யம் ஜீவனில் இருக்கையில்
ஈவதெனும் மூன்றும் அவனுக்கு அளிக்கையில்
பாவமெனும் மரணம் படுகுழி வீழ்கையில்
சாவதெனும் பழி சாராது விடுநீறே.            6

சாகாக் கல்வியைசுத்த சன்மார்க்கம் அளிக்கையில்
வேகாக்காலை சன்மார்க்க விவேகம் தருகையில்
போகாப்புனலை சன்மார்க்க போகம் விழைகையில்
ஏகாதிபதி அப்பனை இசைந்து விடுநீறே.        7

எல்லா உயிரும் இன்புற்று இருக்கையில்
நல்லான் நடுவில் நெற்றிக்கண் திறக்கையில்
வல்லான் பூட்டை வள்ளல் திறக்கையில்
பொல்லான் பூசும் பூதியாம் விடுநீறே.            8

மாட விளக்கு மாண்புற எரிகையில்
நாட அதனையே நடனம் காணுகையில்
வேடம் போடும் வித்தை மறைகையில்
கூட வருவாரவர் கூடவே விடுநீறே.            9

பொது மார்க்கம் பாரினில் பரவுகையில்
இதுஅது எனஉரைப்பது அரிதா கையில்
மது மயக்கமாம் மதம் ஒழிகையில்
சது மறைகளும் சாய்ந்திட விடுநீறே.            10

For e-book....



https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWdU1seXlWQm9LYjg/view?usp=sharing


விடு நீறே






 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.