Wednesday, May 13, 2020

உளவியல் சமூக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையை சரி செய்ய வழி முறைகள்:-


உளவியல் சமூக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையை சரி செய்ய வழி முறைகள்:-

(தி.ம.இராமலிங்கம் - கடலூர்)

(விழுப்புரம் BWDA தொண்டு நிறுவனம் 500 வார்த்தைக்கு மிகாமல் மேற்காணும் தலைப்பில் கட்டுரைப் போட்டி நடத்தினார்கள். அப்போட்டிக்காக எழுதப்பட்ட ஆக்கம் இது. 29-04-2020)

அன்பர்களுக்கு வணக்கம்,

இன்றைய நிலையில் உலகெங்கும் உள்ள மக்கள் கோவிட் 19 என்கின்ற வைரஸ் தொற்று காரணமாக வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றார்கள். உலக மக்கள் முக்கியமாக இந்திய மக்கள் இப்படிப்பட்ட முடக்கத்தை தங்களது வாழ்நாளில் கண்டிருக்க மாட்டார்கள். சுதந்தரமாக சுற்றித் திரிந்த மக்களை திடீரென ஏதோ காரணம் சொல்லி அவர்களை வீட்டுச் சிறையில் அடைக்கும் நேரத்தில் அவர்களது மனம் பாதிப்புள்ளாகின்றது.

சமூக நிலையில் பாதிப்பும் தீர்வும்:

இந்தியாவில் கொரோனா தொற்று துவங்கியவுடன் மக்கள் இல்லங்களில் சிறைபட்டனர். ”தனித்திரு” என்கின்ற வாசகம் மக்களை உளவியல் ரீதியாக மிகவும் பாதித்தது. பலர் தனிமையை விரும்பாவிட்டாலும் சூழல் கருதி ஏற்றுக்கொண்டார்கள். சிலர் இந்தத் தனிமையை எதிர்த்து வீதிக்கு வந்து காவல் துறையிடம் எதிர்த்துப் பேசி தண்டனை பெற்றவர்களும், தங்களுடைய வாகனங்களை இழந்தவர்களும், வழக்கு பெற்றவர்களும் உள்ளனர். இவர்கள் உளவியல் ரீதியாக பாதிப்புக்கு உள்ளானவர்கள். இவர்கள் தங்களது தனிமையான நேரத்தில் பயனுள்ள புத்தகங்கள் படிப்பது, நாளிதழ் படிப்பது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பது, தங்களது கைப்பேசி மூலம் சமூக ஊடகங்களில் பொது மக்களிடம் தொடர்பை வைத்துக்கொள்ளலாம். முக்கியமாக இவர்கள் “நெல்சன் ரோபிசலா மண்டேலா” அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படிக்க வேண்டும். இவரைப் போன்று உலகத்தில் இதுவரை எந்தத் தலைவரும் தனிமையை அனுபவத்ததில்லை. 27 ஆண்டுகள் தொடர்ந்து சிறைவாசம் இருந்த ஒரு மகா மனிதர் இவர். நமது மனம் தடுமாறும்போது, சிறிய கோட்டின் பக்கத்தில் ஒரு பெரிய கோட்டினை வரைந்துவிட வேண்டும். அப்போது நமது பிரச்சனைகள் சிறிய கோடுதான், என்று நமது மனம் சமாதானம் அடைந்துவிடும்.    

அடுத்தது நமது தமிழ்ச் சமூகத்தில் உள்ள அவல நிலை ”மது” என்னும் அரக்கனாகும். தமிழகத்தில் சென்ற 06-04-2020 –ஆம் நாள் கொரானாவால் இறந்தவர்கள் 6 நபர்கள், அதே நேரத்தில் மது தடையால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களும் சரியாக 6 நபர்கள். கொரோனா இறப்பும், மது இறப்பும் சரிசமமான விகிதத்தில் இருந்தன. எனினும் மதுவால் நாம் நினைப்பதுபோன்று பெரிய அளவில் மக்கள் பாதிக்கப்படவில்லை என்ற உண்மை இந்த ஊரடங்கு மூலம் தெரியவந்துள்ளது. எனவே தமிழக அரசு டாஸ்மாக் கடையை இனி திறக்காமல் முழு மதுவிலக்கு கொண்டுவர வேண்டும்.  

பொருளாதார ரீதியில் பாதிப்பும் தீர்வும்:

எந்தவிதமான முன்னறிவிப்புமின்றி ஊரடங்கை எதிர்கொண்ட மக்கள் கொரோனாவைவிட பொருளாதார ரீதியில்தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். முக்கியமாக புலம் பெயர்ந்த கூலி தொழிலாளர்கள்தான் மிகவும் பாதிக்கப்பட்டனர். உண்ண உணவும், இருக்க இடமும் மாநில அரசுகள் அவர்களுக்கு அளித்தாலும், கையில் பணம் இல்லாத நிலையில் அவர்களது உளவியல் பாதிக்கப்பட்டு நடந்தே அவர்களது சொந்த மாநிலத்திற்கு செல்லும் அவல நிலையை ஏற்படுத்தியது. பட்டினி சாவு தமிழகத்தில் ஏற்படவில்லை என்றாலும், பட்டினி கிடப்பவர்கள் ஏராளம்.

நடுத்தர மக்களுக்கோ வேறுவிதமான பிரச்சனைகள் தலைதூக்கியது. இருக்குமிடத்திற்கு வாடகை, வங்கியில் தாங்கள் வாங்கிய பொருட்களுக்கும், கடனுக்கும் மாதாந்தர தவணை கட்டுவது இவைபோன்ற மாதத்திற்கு ஒரு முறை தவறாமல் அளிக்க வேண்டிய நிதிகளை அளிப்பதில் பெரும் சிக்கல் தொற்றிக்கொண்டது. அரசு ஊழியர்கள் தப்பித்தார்கள். மாறாக தனியார் நிறுவன ஊழியர்கள் பெரும்பாலும் மாத ஊதியம் இல்லாமல் தவித்தனர். நம் மக்களிடையே சேமிக்கும் பழக்கம் இல்லாத இன்றைய நிலையில் அனைவரும் உளவியலால் பாதிக்கப்பட்டனர்.

பொருளாதார சிக்கலிலிருந்து மக்களை காக்க மத்திய அரசு சில முயற்சிகளை எடுத்தாலும் அவை பலனளிக்கவில்லை. குடும்பம் ஒன்றிற்கு ஆயிரம் இரண்டாயிரம் என தருவதை விடுத்து, அனைத்து ஆதார் அட்டைக்கும் தலா ஐயாயிரம் ரூபாயினை அவர்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைத்துவிட்டு இரண்டாவது முறையாக ஊரடங்கை நீடித்திருக்க வேண்டும். இதன் மூலம் நூறு கோடி மக்களுக்கும் ஐந்து லட்சம் கோடி தேவைப்பட்டிருக்கும். இத்தொகையில் பாதியை அந்தந்த மாநில அரசுகள் ஏற்கும்படி செய்திருக்கலாம். இவ்வாறு செய்திருந்தால் அனைத்து மக்களும் ஓரளவு நிம்மதியாக இருந்திருப்பார்கள். மேலும் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிக் கடன்கள், தனியார் நிதி நிறுவன கடன் தவணைகள் அனைத்தும் ஊரடங்கு முடியும் வரை வசூலிக்கத் தடை விதித்திருக்க வேண்டும். ஊரடங்கு முடிந்தப்பின்பு அதற்கான வட்டியுடன் வசூல் செய்ய ரிசர்வ் வங்கி வெளிப்படையாக அறிவித்திருக்கலாம்.

கொரோனா ஊரடங்கினால் உலகம் முழுதும் சுற்றுசூழல் தூய்மை அடைந்திருப்பதை நாம் வரவேற்க வேண்டும். தனிமனித ஒழுக்கம் ஓங்கியிருக்கின்றது. இவ்வொழுக்கத்தையும், சுற்று சூழலையும் நாம் ஊரடங்கிற்கு பிறகும் இப்படியே தொடர வேண்டும். வருங்காலங்களில் வருடத்திற்கு பதினைந்து தினங்கள் உலகம் முழுதும் ஒரே நேரத்தில் ஊரடங்கு அமல் படுத்துவது நல்லது. எதிர்காலத்தில் உலக மக்கள் தாவர உணவுகளை மட்டும் எடுத்துக்கொண்டால் கொரோனா போன்ற உயிரிகள் தோன்றுவதை கட்டுப்படுத்த முடியும்.                

எப்படியோ நமது இந்திய மக்கள் கொரோனா ஊரடங்கை மிகத்தீவிரமாக கடைபிடித்து வெற்றி கண்டுவிட்டார்கள். உலக நாடுகளை ஒப்பிடுகையில் நமது நாடு ஒரு புண்ணிய பூமி என்பதை நாம் இவ்வுலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளோம். மத ரீதியாக சில சர்ச்சைகள் எழுந்தாலும், இறுதியில் வேற்றுமையில் ஒற்றுமை என்பதை இந்தியா இந்த கொரோனா மூலம் மீண்டும் நிலைநாட்டியிருக்கின்றது.

(முற்றும்)

1 comment:

  1. உங்களுக்கு நிதி தேவையா? நீங்கள் நிதி தேடுகிறீர்களா? உங்கள் வணிகத்தை பெரிதாக்க நிதி தேடுகிறீர்களா? தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வணிக விரிவாக்கத்திற்கான நிதி பெறவும், எந்த அளவிலும் ஒரு புதிய வணிகத்தை அமைக்கவும் நாங்கள் உதவுகிறோம். 3% மலிவு வட்டி விகிதத்தில் நிதி பெறுங்கள், வணிகத்திற்கும் உங்கள் பில்களை அழிக்கவும் உங்களுக்கு இந்த நிதி தேவையா? மேலும் தகவலுக்கு இப்போது எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள் (Financialserviceoffer876@gmail.com) whats-App +918929509036 வழியாக எங்களை தொடர்பு கொள்ளவும்

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.