அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி!
இங்ஙனம்:
ஜோதி நிலையம், நடராஜபிள்ளைசாவடி - 609 107.
அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி!
வள்ளலார் 200 விழா – பட்டுக்கோட்டை – 16-07-2023 – சொற்பொழிவு குறிப்புகள்
வள்ளலாரும் காரணப்பட்டாரும்
முனைவர்.தி.ம.சதீஷ் கண்ணன்
அருட்பெருஞ்ஜொதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
அனைவருக்கும் வணக்கம்.
பட்டு மழவராயர் என்பவரால் ஆட்சி செய்யப்பட்டதால் இந்த நகருக்கு பட்டுக்கோட்டை என்று பெயர் வந்தது. அப்படிப்பட்ட பட்டுக்கோட்டையில் வள்ளலார் 200 முப்பெரும் விழாவில் கலந்துக்கொண்டுள்ள உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.
உங்கள் முன்னிலையில் என்னை இன்று நிறுத்திய எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கும், வள்ளற்பெருமானுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்.
மேலும் இவ்விழாவினை மிகச்சிறப்பாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் தமிழக அரசுக்கும், பட்டுக்கோட்டை இந்து சமய அறநிலையத்தாருக்கும், பட்டுக்கோட்டையை சார்ந்த அனைத்து சன்மார்க்க சங்கத்தார்களுக்கும், தமிழ்நாடு அரசின் வள்ளலார் 200 முப்பெரும் விழாச் சிறப்பு உயர் நிலைக்குழுவில் பங்கேற்கும் வள்ளலார் வழித்தோன்றல் திரு.கி.உமாபதி ஐயா அவர்களுக்கும், திரு.மெய்.அருள் நந்தி சிவம் ஐயா அவர்களுக்கும், வடலூர் தலைமைச் சங்கத் தலைவர் திரு.அருள்.நாகலிங்கம் ஐயா அவர்களுக்கும், திருவருட்பா அருள் மழையில் நம்மை எல்லாம் நனைய வைக்கும் மழையூர் சதாசிவம் ஐயா அவர்களுக்கும் மற்றுமுள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது முதற்கண் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
வடலூர் என்றால் வள்ளலார், ஈரோடு என்றால் பெரியார் என்று எவ்வாறு சொல்கின்றோமோ அவ்வாறே பட்டுக்கோட்டை என்றாலே நமக்கு ஞாபகம் வரும் இருவரில் ஒருவர் பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் அவர்களும், பட்டுக்கோட்டை பிரபாகரன் அவர்களும் என சொல்லலாம். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் தனது புகழ்பெற்ற பாடல்களால் தமிழர்களின் மனதில் நிலைகொண்டுள்ளார். அவ்வாறே புதினம் படைப்பில் தலைசிறந்தவராக இருந்தவர் பட்டுக்கோட்டை பிரபாகரன் ஆவார்கள். இவர்கள் இருவரும் பிறந்த இம்மண்ணில் வள்ளலார் 200 ஆவது ஆண்டு விழாவினை கொண்டாடுவதில் நான் மகிழ்ச்சியுறுகின்றேன்.
வள்ளலாரும் காரணப்பட்டாரும் என்ற தலைப்பில் நான் ஒரு சிறு மணித்துளிகள் உங்களுடன் பேச உள்ளேன். வள்ளற்பெருமானின் அணுக்கத்தொண்டர்களில் மிக முக்கியமானவர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை ஆவார்கள். அவரது குடும்பவழி பெயரன்தான் நான் என்பதை உங்களுக்கு அறிமுகம் செய்துக்கொள்கின்றேன். அவர் எனது தாத்தா என்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். வள்ளற்பெருமானின் காலத்திலிருந்தே வழிவழியாக எங்களது குடும்பம் சன்மார்க்கத்தை ஏற்று நடைபயில காரணமாக இருந்தவர் எனது தாத்தா காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை ஆவார்கள்.
இன்று நாம் வள்ளலாரின் 200 ஆம் ஆண்டினை கொண்டாடுவது போன்றே, நமது முத்தமிழ் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினையும் கொண்டாடும் அதே நேரத்தில் வள்ளற்பெருமானின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.க. அவர்கள் சித்தி பெற்று நூறு ஆண்டுகள் இதே சம காலத்தில் வந்திருப்பது ஆச்சரியம் அளிக்கின்றது.
காரணப்பட்டு ச.மு.க. அவர்கள் கடலூர் மாவட்டத்தில் கடலூர் தாலுக்காவில் காரணப்பட்டு என்னும் கிராமத்தில் 1838 ஆம் ஆண்டு பிறப்பெய்தினார். வள்ளற்பெருமான் 1823 ஆம் ஆண்டு வருவிக்கவுற்றார். இவர்கள் இருவருக்கும் 15 வருடம் இடைவெளி உள்ளது. அதாவது வள்ளற்பெருமானைவிட காரணப்பட்டார் 15 வயது சிறியவர். மேலும் வள்ளற்பெருமானும் காரணப்பட்டாரும் சைவ குடும்பத்தில் கருணீகர் குலத்தில் வந்துதித்தவர்கள்.
காரணப்பட்டாரின் தாயார் பெயர் தயிலாம்மாள், தந்தையார் பெயர் முத்துசாமிப்பிள்ளை, மனைவி பெயர் தங்கம். இவருக்கு ஒரே ஒரு மகள் மட்டுமே வாரிசாக இருந்தார்கள். அவரது பெயர் ஜானகி ஆகும். ஜானகிக்கும் திருமணம் ஆகாததால் காரணப்பட்டாரின் வாரிசு ஜானகியுடன் முடிவுற்றது. ஆனால் காரணப்பட்டாரின் தம்பி திரு.ச.மு.தண்டாபாணி பிள்ளை வழியாக வந்த வாரிசுகளில் ஒருவனாக நான் இங்கே வந்து பேசிக்கொண்டுள்ளேன்.
காரணப்பட்டு ச.மு.க. அவர்கள், அவர்களது குலத்தொழிலான கிராம கணக்குப்பிள்ளையாக இருந்து பிறகு தாசில்தார் வரை பணியாற்றினார்கள். இவருக்கு அடிக்கடி நரம்புத்தளர்ச்சியால் தலை ஆட்டம் இருந்துவந்தது. எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் தலையாட்டம் நின்றபாடில்லை. அவ்வமயம் ஒரு நாள் ஒரு சாமியார் இவரது வீட்டிற்கு வந்து, ச.மு.க. அவர்களிடம் வடலூரில் இராமலிங்க சுவாமி என்ற ஒருவர் பொது மக்கள் அனைவருக்கும் பரோபகாரம் செய்து வருகின்றார். அவரைச் சென்று தரிசித்தால் உங்களது நோய் உடனே தீரும் என திருவாய்மலந்து சென்றார்.
பிறகு ஓர் நாள் ச.மு.க. அவர்கள் வள்ளலாரைக் காண புறப்பட்டார். அவ்வமயம் வள்ளலார் சென்னை வாழ்வை நீத்து கருங்குழியில் ரெட்டியார் வீட்டில் தங்கியிருந்தார். அதனை அறிந்து காரணப்பட்டு ச.மு.க. அவர்கள் கருங்குழி சென்று முதன் முதலாக வள்ளற்பெருமானை தரிசித்து, தன்னுடைய நோயைப்பற்றி வள்ளலாரிடம் எடுத்துரைத்தார். உடனே வள்ளலார் தன்னிடமிருந்த விபூதியைக் கொடுத்து மேனி எங்கும் பூசச்சொன்னார். அவ்வாறே ச.மு.க. அவர்கள் திருநீற்றை பூசியவுடன் அவரது நோய் அங்கேயே சென்றொழிந்தது. எந்த மருந்துக்கும் கட்டுப்படாத நோய் வள்ளலாரின் திருநீற்றினால் தீர்ந்தது என்றால் யாராக இருந்தாலும் தீர்த்துவைத்தவரை பயபக்தியுடன் பார்க்க தொடங்கிவிடுவது இயல்புதானே. அவ்வியல்புக்கேற்ப ச.மு.க. அவர்கள் மிகுந்த ஆச்சரியப்பட்டு வள்ளற்பெருமானின் காலில் விழுந்து ஆசி பெற்றுக்கொண்டதுடன், இன்றிலிருந்து நான் உங்களுக்கு அடிமை என்றும், நான் உங்களை விட்டு செல்லமாட்டேன் என்றும் அடம் பிடித்து வள்ளலாருடனே தங்க எத்தனித்தார். உடனே வள்ளலார் உங்களுக்கு தக்க உத்தியோகம் தருவோம். அது வரை தாங்கள் காரணப்பட்டு சென்று குடும்பம் நடத்தி வாருங்கள் என கட்டளையிடவே, வேறு வழியின்றி ச.மு.க. அவர்கள் நோய் நீங்கி தம்மூர் வந்தடைந்தார்.
இந்த நிகழ்ச்சி நடக்கும் போது வள்ளலாருக்கு 36 வயதாகும். ச.மு.க. விற்கு 21 வயதாகும். பிறகு அவ்வப்போது வள்ளலாரை சந்தித்து செல்லுதல் வாடிக்கையாயிற்று. வள்ளலார் சன்மார்க்க சங்கம் துவங்கியவுடன், அச்சங்கத்தை தமிழகம் முழுதும் சென்று நிறுவுவதில் தன் வாழ்நாள் முழுதும் ச.மு.க. அவர்கள் பாடுபட்டார். இவர் சிறந்த சொற்பொழிவாளர் மற்றும் மரபு கவிதை புனைவதிலும் இராகத்துடன் முறையாக பாடுவதிலும் வல்லவர்.. ச.மு.க.வின் சொற்பொழிவைக்கேட்டு அன்றைய தமிழக மக்கள் பலர் சன்மார்க்க சங்கத்தை சார்ந்து வாழ்ந்தார்கள். தானே கவிதை புனைவதுடன், திருவருடபாவையும் சேர்த்து மக்களிடையே இராகத்துடன் இசைக் கருவிக்கொண்டு பாடி மகிழ்வார். அதனால் இவருக்கு சமரச பஜனை என்ற சிறப்புப் பட்டமும் கிடைத்தது.
வள்லற்பெருமான் சித்திவளாகத்தில் திருக்காப்பிட்டுக்கொண்ட தருணம், பல அடியார்களுடன் ச.மு.க. அவர்களும் அடிகளுடன் இருந்தனர். அங்கிருந்த அடியார்களிடம் வள்லலார் இறுதியாக சில பணிகளை பார்க்கச் சொல்லி ஒவ்வொருத்தருக்கும் பணித்தபோது, ச.மு.க. அவர்களுக்கு ஞான சபை வழிபாட்டை பார்த்துக்கொள்ளும்படி கட்டளையிட்டார். வள்ளலார் அவர்கள் திருக்கதவை மூடும்போது, கடைவிரித்தோம் கொள்வாரில்லை, கட்டிவிட்டோம் என்று சொல்லி தாளிட்டதாக ச.மு.க. அவர்கள் பின்நாளில் தாம் எழுதிய பிரபந்தத்திரட்டு நூலில் எழுதியுள்ளார்கள். இவ்வார்த்தை இன்று சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், இதுதான் வரலாறாக இருக்கின்றது.
இடையில் ச.மு.க அவர்களின் மனைவி காலமாகின்றார்கள். வள்ளலார் திருக்காப்பிட்டுக்கொண்ட பிறகு ச.மு.க. அவர்கள் சன்மார்க்கத்தை பரப்ப தமிழகம் முழுதும் சுற்று பயணம் செல்கின்றார். தனது ஒரே மகளையும் தன்னுடன் அழைத்துக்கொண்டே சன்மார்க்கத்தை பரப்புகின்றார். தன் ஒரே மகளுக்கு திருமணம் கூட செய்து வைக்காமல், இருவரும் இறுதிவரை சன்மார்க்கப்பணிகளை மட்டுமே பார்க்கும்படி இவர்களது வாழ்க்கை அமைந்தது.
இடையில் வள்ளற்பெருமான் செய்த அற்புதங்களை ஆதாரத்துடன் பல அன்பர்களிடமிருந்து கேட்டு தொகுக்கும் வேலையில் பல வருடம் செலவழித்தார். அதன் பயனாக வள்ளலார் சரித்திரத்தை கீர்த்தனையாகவும், உரைநடையாகவும் எழுதி வெளியிட்டார். இவர் பாடிய மொத்த பாடல்களின் எண்ணிக்கை 3507 பாடல்களாகும். வள்ளலாரின் சரித்திரத்தையும், வள்ளலார் பற்றி தாம் பாடிய பாடல்களையும், அன்றைய கால கட்டத்தில் வெளிவராத வள்ளலாரின் உரைநடைகளையும் யாவையும் தொகுத்து “பிரபந்தத்திரட்டு” என்ற பெயருடன் தாம் எழுதிய நூலை 1923 ஆம் ஆண்டு வெளியிட்டார். இந்நூலில் உள்ள வள்ளலாரின் சரித்திரம்தான் இன்று சன்மார்க்க அன்பர்களாலும், பொது மக்களாலும் வள்ளலாரைப்பற்றி அறிந்துக்கொள்ளத்தக்க ஒரே ஆதாரமாக உள்ளது. இந்நூல் தற்காலம் கிடைக்கப்பெறாமல் இருந்த்தால், என்னுடைய தந்தை காலஞ்சென்ற திரு.அ.திருநாவுக்கரசு அவர்கள் ச.மு.க.வின் பிரபந்தத்திரட்டு நூலை சன்மார்க்க திருமுறைகளில் ஏழாம் திருமுறை என வகுத்து மறு பதிப்பு செய்து 2015-ஆம் ஆண்டு வடலூரில் வெளியிட்டார்.
மேலும் ச.மு.க. அவர்கள் 1893-ஆம் ஆண்டு நடந்த வண்ணம் உரைத்தல் என்னும் நூலை பதிப்பித்து வெளியிட்டார். வள்ளலார் அவர்கள் கடலூர் பெண்ணையாற்றில் ஓர் விழாவிற்காக சென்றபோது, அங்கே ஸ்ரீதர நாயக்கர் அவர்களுக்கும் வள்ளலாருக்கும் நடந்த விவாதத்தை அப்படியே எழுத்து வடிவில் புத்தகமாக அச்சடித்ததுதான் இந்த நடந்த வண்ணம் உரைத்தல் என்னும் சிறு நூலாகும். உருவ வழிபாடு தேவையில்லை என்ற ஸ்ரீதர நாயக்கரின் வாதத்தை எதிர்த்து வள்ளலார் உருவ வழிபாடு தேவைதான் என நிறுவியதின் எழுத்தாக்கம்தான் இந்நூலாகும்.
மேலும் ச.மு.க. அவர்கள் வள்ளலார் எழுதிய திருவருட்பா நூலான ஆறு திருமுறைகளையும் ஒரே நூலாக பதிப்பித்து 1924-ஆம் ஆண்டு வெளியிட்டார். இந்நூலில் திருவருட்பா பாடல்கள் அனைத்தையும் சீர் பிரித்து வெளியிட்டார். பொது மக்கள் திருவருட்பாவை எளிமையாக பாடவேண்டும் என்ற நோக்கில் சீர் பிரித்து வெளிவந்த முதல் திருவருட்பா ச.மு.க. அவர்களின் திருவருட்பா பதிப்புதான். ச.மு.க. அவர்கள் வெளியிட்ட அதே திருவருட்பாவை மறு அச்சாக்கம் செய்து, அதாவது இதனை பதிப்பு என்று சொல்லமுடியாது, பழைய நூல் எவ்வாறு உள்ளதோ அதனை அப்படியே மறு அச்சாக்கம் அதாவது ஜெராக்ஸ் காப்பி என்று சொல்லலாம். அவ்வாறு மறு அச்சாக்கம் செய்து 2014 ஆம் ஆண்டு ச.மு.க. வின் திருவருடாபா பதிப்பினை சித்திவளாகத்தில் திரு. வெங்கட் ஐயா அவர்கள் தங்க முலாம் பூசப்பட்டு மிக நேர்த்தியாக வெளியிட்டார்.
வள்ளற்பெருமான் சித்தி வளாகத்தில் உறையத்துவங்கிய காலத்தில், ச.மு.க. அவர்கள் வள்ளலாரின் பாதத்தினை அவரது ஒப்புதலுடன் அளவெடுத்துக்கொண்டார். அந்த அளவிற்கு மிகச் சரியாக சந்தன மரத்தால் ஆன பாதக்குறடு செய்து, அதனைக்கொண்டுச் சென்று வள்ளற்பெருமானிடம் கொடுத்து அந்த பாதக்குறட்டினை அணியச் செய்தார். இவ்வாறு சுமார் ஆறு மாதத்திற்கும் மேல் அந்த பாதக்குறட்டை அணிவிக்கச் செய்த பின்பு அதனை மீண்டும் வள்ளற்பெருமானிடமிருந்து தனது வழிபாட்டிற்காக தனது வீட்டிற்கு கொண்டுவந்து வள்ளற்பெருமான் அருளிய திருவடிப்புகழ்ச்சியினைப் பாடி அவரது பாதக்குறட்டினை வைத்து நித்தமும் வழிபாடு செய்து வந்தார்.
வள்ளற்பெருமான் காரணப்பட்டார் கொடுத்த பாதக்குறட்டினை அணிந்திருந்தபோது, வள்ளலார் தனது தேகத்தை ஞான தேகமாக்கி காரியப்பட்டுக்கொண்டிருந்த காலம் அது. இவ்வுலகிலேயே ஒரு ஒளி தேகியின் பாதக்குறடு இருக்கின்றது என்றால் அது வள்ளலாரின் பாத்க்குறடு மட்டும்தான் என்பது சிறப்பு. அப்படிப்பட்ட பாதக்குறடு வள்ளலார் அணிந்திருந்த நாட்களில் பல சித்தர்கள் வந்து அப்பாதக்குறட்டின் மகிமையை கண்டு வியந்துள்ளனர். ஒளி தேகியின் பாதக்குறட்டில் பாதரசத்தை வைத்து கட்டி மறுநாள் அதனை எடுத்த்ப்பார்த்தால் சொக்கத் தங்கமாகி இருக்கும். அப்படிப்பட்ட பாதக்குறடு இன்றும் பொது மக்கள் வழிபாட்டிற்காக காரணப்பட்டு கிராமத்தில் ச.மு.க. அவர்களின் அருள் நிலையத்தில் வழிபாட்டில் உள்ளது. உலகியர்கள் அனைவருக்கும் காணக்கிடைக்காத ஒரு அதிசயம் காரணப்பட்டில் உள்ளது என்றால் அது மிகையாகாது.
வள்ளற்பெருமானின் அணுக்கத்தொண்டர் சமரச பஜைனை காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அவர்களின் அருள் நிலையத்தில் தினமும் காலையில் கஞ்சி வார்த்தலும், வியாழன் தோறும் மதியம் அன்னதானம் வழங்குவதுடன் அவ்விடம் அனையா தீபத்துடன் சன்மார்க்கர்களை ஈர்த்து வருகின்றது என்று சொல்லி எனது உரையினை இத்துடன் முடிக்கின்றேன். அனைவருக்கும் நன்றி.
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
vallalarmail@gmail.com