Monday, October 30, 2023

தேசியத்திற்கு கட்டுப்படாத மதம்!

 தேசியத்திற்கு கட்டுப்படாத மதம்!

==============================

நேற்று (29-10-2023) கேரளாவில் யெகோவா கிறுத்துவ ஜெபக்கூட்டத்தில் 3 குண்டுகள் வெடித்து 2 பெண்கள் இறந்தார்கள். குண்டு வைத்தவர் காவலர்களிடம் சரணைந்தார். 

இவர்களது கடவுள் யகோவா ஆகும். (யூதர்களின் கடவுளும் யகோவா தான்.) யகோவா என்ற கடவுளின் குழந்தையாக 'இயேசு' இவர்களால் கருதப்படுகின்றார், எனவே கிறுத்துவத்தில் ஒரு பிரிவினராக இவர்கள் ஒரு தனிக்கூட்டமாக இயங்குகின்றார்கள். 

இம்மதக்கூட்டம் இந்திய தேசியத்திற்கு எதிராக பல கருத்துகளை தங்கள் மக்களிடம் பரப்புவதாக, நேற்று அம்மத இயக்கத்தைச் சார்ந்தவரும் குண்டு வைத்தவருமான மார்ட்டின் கூறியிருக்கின்றார். இம்மதக்கூட்டம் தேச துரோகத்தில் ஈடுபட இந்திய உச்ச நீதி மன்றமே ஒரு காரணமாக இருக்கின்றது என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். 

இம்மதத்தார்கள் இந்திய தேசிய கீதத்தை பாடமாட்டார்களாம். அது எங்கள் மத அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது என்று இந்திய உச்ச நீதி மன்றத்தில் வழக்குத்தொடுத்து தங்கள் மத உரிமையை நிலைநாட்டி இருக்கின்றார்கள். இந்திய உச்சநீதி மன்றமும் இம்மதத்திற்கு ஆதரவாக பாடவேண்டாம் என தீர்ப்பளித்திருக்கின்றது. 

ஒரு தேசியத்திற்கு கட்டுப்படாத மதம், எந்த தேசியத்தில் இருந்தாலும் அந்த தேசியத்திற்கு ஆபத்துதான். எனவே இந்திய உச்சநீதி மன்றம், நேற்று நடந்த குண்டு வெடிப்பை சாதாரணமாகக் கடந்துச் செல்லாமல், அதில் தங்களது பங்களிப்பும் மறைமுகமாக இருப்பதைக்கருதி, மறு தீர்ப்பை இந்திய தேசத்திற்கு ஆதரவாக வழங்க வேண்டும். 

இதுபோல் இன்னும் எத்தனை மதங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன எனத்தெரியவில்லை. இவர்கள் எல்லாம் தாங்கள் வசிக்கும் "தேசத்தை எதிர்ப்பதே" கடவுள் கொள்கையாக வைத்துள்ளனர் என்பது வேதனை. 

TMR.





Sunday, October 29, 2023

ச.மு.கந்தசாமிபிள்ளை அவர்களின் 99-ஆம் ஆண்டு குருபூஜை அழைப்பிதழ்

சமரச பஜனை - காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அவர்களின்                      99-ஆம் ஆண்டு குருபூஜை அழைப்பிதழ்.


கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து காரணப்பட்டிற்கு, நகர பேருந்து எண்:20 கீழ்கண்ட நேரங்களில் புறப்படும். அப்பேருந்தை பயன்படுத்தி அன்பர்கள் இங்கு வந்து தரிசித்து செல்லலாம்.
காலை 07.00 மணி
மதியம் 02.00 மணி
இரவு 07.00 மணி

ஸ்ரீ இராகவேந்திரர் - இறுதி உரை

ஸ்ரீ இராகவேந்திரர் 

சுவாமிகளின் கடைசி உரை



1671 ஆம் ஆண்டு ராகவேதிர சுவாமிகள் பிருந்தாவனப் பிரவேசத்திற்கு முன் தன் பக்தர்களுக்காக மனம் நெகிழவைக்கும் ஒரு உரையை தந்தார்.


அவ்வுரையிலிருந்து சில பகுதிகள்:


1) சரியான வாழ்க்கை நடத்தையின்றி சரியான சிந்தனை வராது.

நல்ல மற்றும் தகுதிக்குரிய மக்களுக்கு செய்யப்படும் உதவி/தர்மம் கடவுளின் பூஜைக்கு நிகராகும்.

2) சாஸ்த்திரத்தை பின்பற்றாமல் தங்களை கடவுள் என்று கூறிக்கொண்டு அதிசயங்களை செய்பவர்களிடமிருந்து விலகி இருங்கள். நானும் ஸ்ரீமத் ஆசாரியாரும் நிறைய அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறோம்.

3) அவையெல்லாம் யோக சித்தியினாலும் கடவுளின் அருளினாலும் எங்களால் செய்ய முடிந்தது. அவற்றில் எந்த பொய்யோ பித்தலாட்டமோ இல்லை. அவ்வதிசயங்கள் கடவுளின் மகிமையையும் அவர் அருளால் ஒருவர் எப்பேற்பட்ட சக்திகளை அடைய முடியும் என்று பறை சாற்றவுமே செய்யப்பட்டது.

4) சரியான ஞானத்தை மிஞ்சிய எந்த அதிசயமோ அற்புதங்களோ கிடையாது சரியான ஞானம் இல்லாமல் செய்யப்படும் அற்புதங்கள் வெறும் சூனிய வித்தையே ஆகும். அவ்வித்தைகளை செய்பவருக்கோ அதை நம்புகிறவருக்கோ எந்த ஒரு நன்மையும் நேராது.

5) கடவுளின் மேல் நல்ல பக்தி இருத்தல் வேண்டும். இப்பக்தி குருட்டு நம்பிக்கையாக இருக்கக்கூடாது'. கடவுளின் மேலான்மையை முழு மனதோடு ஏற்றுக்கொள்ளுதல் பக்தி ஆகும். குருட்டு நம்பிக்கை உண்மையான பக்தி ஆகாது. அது வெறும் முட்டாள்தனமே ஆகும்.

6) நமக்கு கடவுள் மேல் மற்றுமின்றி மற்ற இதர தேவதைகளிடமும் அவர்களின் தகுதிக்கேற்ப பக்தி இருத்தல் வேண்டும்.

இவ்வாறு உரையாற்றிய பிறகு ராகவேந்திரர் பிரணவ மந்திரத்தை ஜபித்துக்கொண்டு ஆழ்ந்த தியானத்தில் இறங்கினார். ஒரு தருவாயில் அவர் கையில் இருந்த ஜபமாலை நின்றது. அந்த அறிகுறியைப் புரிந்துகொண்ட அவர் சீடர்கள் அவரை சுற்றி பிருந்தாவன சுவர் எழுப்பத் தொடங்கினார்கள்.



Monday, October 23, 2023

யூதர்களுக்கான 10 கட்டளைகள்:

 யூதர்களுக்கான 10 கட்டளைகள்:



+யூத மதத்தை உருவாக்கியவர் மோசஸ்.
+யூத மதத்தின் கடவுள் ’ஜெஹோவா’
+யூத மதத்தின் புனித நூல் ‘தோரா’.
+ யூத மக்களின் தாய் மொழி 'ஹீப்ரு'
யூதர்கள் பின்பற்ற வேண்டிய 10 கட்டளைகள்:
1. ஓர் இறை கொள்கை. (என்னை அன்றி உனக்கு வேறு கடவுள் இல்லை.)
2. உனது வேண்டுதலுக்காக வேறு ஒரு விக்கிரகத்தை (உருவ வழிபாடு) உருவாக்க வேண்டாம்.
3. உனது கடவுளாகிய எனது பெயரை வீணிலே உபயோகிக்க வேண்டாம். (அடிக்கடி எனது பெயரை உச்சரிக்கக்கூடாது. இக்கட்டளையினால் யூதர்கள் ‘இறைவன்’ என்று பொதுவாக தங்கள் கடவுளை அழைக்கின்றார்கள்)
4. உனது ஓய்வு நாளை மிகவும் பரிசுத்தமாக கழிப்பாயாக.
5. உனது தந்தையையும், தாயையும் மிகவும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.
6. கொலை செய்யக் கூடாது.
7. விபச்சாரம் செய்யக் கூடாது.
8. திருடக் கூடாது.
9. பிறருக்கு விரோதமாய் பொய் சாட்சி சொல்லக் கூடாது.
10. பிறரது பொருளுக்கும் சொத்துக்களுக்கும் ஆசை வைக்கக் கூடாது.
மேற்காணும் 10 கட்டளைகளை யூதர்கள் மட்டுமா கடைபிடிக்க வேண்டும். மனிதர்கள் யாவரும் கடைபிடிக்கலாம். முக்கியமாக 6-ஆவது கட்டளை இன்றைக்கு உலகியலில் அவசியம் தேவை.

-TMR

Sunday, October 22, 2023

அருட்பெருஞ்ஜோதி அகவல் - உரை

அருட்பெருஞ்ஜோதி அகவல் - உரை 


பவனத் தினண்டப் பரப்பினெங் கெங்கும்
அவனுக் கவனா மருட்பெருஞ் ஜோதி                  - 132

‘அம்’ என்ற அசை சேர்ந்து ‘பவன்’ என்ற சொல் ‘பவனம்’ என்றாயிற்று. இந்திய நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் இல்லத்தின் பெயர் ‘ஆனந்த பவன்’ என்று அழைக்கப்படுகின்றது. இவ்வாறு ‘பவன்’ என்ற சொல் விசாலமான வீடு  மற்றும் கடைகளுக்கு வழங்கப்படும் பெயராக உள்ளது.

அண்டப் பரப்பு என்பதை நாம் எவ்வாறு புரிந்துக்கொள்ள முடியும்? பூமியின் பரப்பளவு 51 கோடியே 66 ஆயிரம் கிலோ மீட்டர் (51,00,66,000 K.M.) என கண்டுபிடித்தாயிற்று. நமது சூரியனின் பரப்பளவு (51,00,66,000 X 11,990 = 611569,13,40,000 K.M.) நமது பூமியைவிட 11,990 மடங்கு பெரியது. அதாவது 6 இலட்சத்து 11 ஆயிரத்து 569 கோடியே 13 இலட்சத்து 40 ஆயிரம் கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது சூரியன்.

இவ்வாறு நாம் முதலில் நமது (ஒரு மனிதனின்) பரப்பளவு எவ்வளவு? எனப் பார்ப்போம். ஒருவனின் கை சாண் அளவில் அவனது உடல் 8 சாண் அளவு கொண்டு இருக்கும். அதுபோல ஒருவனின் கால் பாத அளவில் அவனது உடல் 6 மடங்கு இருக்கும். இதனை கருத்தில் கொண்டு ஒருவனுக்கு இந்த பூமியில் 8 அடிதான் சொந்தம் எனவும் 6 அடிதான் சொந்தம் எனவும் பல தமிழ்ப் பாடல்களை நாம் கேட்டிருப்போம். ஒரு மனிதனை படுக்க வைத்தால், அவனது பரப்பளவு 180 செ.மீ. அதாவது 6 அடி எனலாம். ஒரு கிலோ மீட்டர் 3280 அடி என்றால், 547 மனிதர்களை ஒரு கிலோ மீட்டரில் அடக்கி விடலாம். ஒரு மனிதனை நிற்க வைத்தால், ஒரு கிலோ மீட்டரில் 3280 மனிதர்களை நிற்க வைக்க முடியும். இப்பூமியில் உள்ள அனைத்து மனிதர்களையும் ஒரே இடத்தில் நிற்க வைத்தால், இப்பூமி பந்தின் பரப்பளவில் 0.0000251% இடம் போதுமானது. இப்பூமியில் உள்ள ஒட்டு மொத்த மனிதர்களின் பரப்பளவும், இப்பூமியின் பரப்பளவை ஒப்பிடும்போது எவ்வளவு மிகச்சிறிய அளவீட்டைக் கொண்டுள்ளான் என்பது புரியவருகின்றது. இதில் ஒரு மனிதனின் பரப்பளவைக் கொண்டு இப்பூமியின் பரப்பளவை ஒப்பிடும்போது, ஒரு மனிதன் என்பவன் ஒரு அணு அளவு எனக் கொள்ளலாம். இந்த மனித அணுவை சூரியனின் பரப்பளவில் ஒப்பிடும்போது, மனிதன் என்கின்ற அணுவை 11,990-ஆக உடைத்து அதில் ஒரு பகுதி என, மனித அணு இன்னும் மிகச் சிறிய அணுவாக மாறும். இவ்வாறு நமது மனித பரப்பளவைக் கொண்டு நாம் வசிக்கும் பூமி, நம்மை ஆளும் சூரியன், சூரிய குடும்பங்கள் என அளந்துக் கொண்டே சென்றால், மேற்கண்ட கணக்கின்படி ஒரு மனிதன் என்கின்ற அணுவானது ஒன்றுமில்லாத நிலைக்குச் சென்றுவிடும்.

அண்டம் என்பது நமது சூரியக் குடும்பத்தைப் போல பல சூரிய குடும்பங்கள் அடங்கியது அண்டம் எனக் கொள்ளலாம். இவ்வண்டத்தில் அமைந்துள்ள பல்வேறு கோள்கள், மற்றும் விண்மீன்கள் (சூரியன்கள்) ஆகியவற்றிற்கு இடையில் உள்ள தூரத்தைக் கணக்கிட நாம் ’ஒளியாண்டு’ என்கின்ற அலகினை உபயோகிக்கின்றோம். ஒளியானது ஒரு ஆண்டில் எவ்வளவு தூரம் கடக்கின்றது என்பதைக் கொண்டு ஒளியாண்டு கணக்கிடப்படுகின்றது. அவ்வாறு ஒரு ஒளியாண்டு என்பது (9,46,080,00,00,000) 9 இலட்சத்து 46 ஆயிரத்து 80 கோடி கிலோ மீட்டர் கொண்டதாக உள்ளது. 

இந்த அண்டத்தில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே  உள்ள பரப்பளவு 8.3 ஒளியாண்டு வினாடிகள் ஆகும். அதாவது 0.00001574 ஒளியாண்டு தூரமாகும். சூரியனுக்கும் நமது சூரிய குடும்பத்தில் இறுதியாக உள்ள ப்ளூட்டோ கோளுக்கும் (கோள் என்ற வரையறையிலிருந்து அறிவியலாளர்கள் தற்போது ப்ளூட்டாவை நீக்கியுள்ளார்கள்) இடையில் உள்ள பரப்பளவு அதிகபட்சமாக 6 ஒளியாண்டு மணி நேரங்கள் ஆகும். (6 ஒளியாண்டு அல்ல. 6 Light Hours). ஆறு மணி நேரத்தில் சூரிய ஒளை ப்ளூட்டோவை சென்றடைந்துவிடும்.  

எண்ணற்ற விண்மீன் பேரடைகள் (Galaxy) தன்னகத்தே கொண்டது அண்டம் (Universe) ஆகும். நமது சூரிய குடும்பம் ஒரு விண்மீன் பேரடையில்தான் அடங்கியுள்ளது. இவ்வாறு எண்ணற்ற சூரிய குடும்பங்கள் கொண்டது ஒரு விண்மீன் பேரடை எனலாம். நமது சூரியனுக்கு மிக அருகில் உள்ள சூரியன் 4.3 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது. நமது பேரடையின் மையமானது, நமது சூரியனிடமிருந்து 27,700 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது. நமது பேரடையின் பரப்பளவு எவ்வளவு பெரியது என கற்பனை செய்து கொள்ளுங்கள். 

நமக்கு அடுத்து அருகில் உள்ள விண்மீன் பேரடை 29 லட்சம் ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. நம்மால் பார்க்க முடிந்த அளவிற்கு நமக்கு மிகத் தொலைவில் உள்ள விண்மீன் பேரடை 15 கோடி ஒளியாண்டு தூரத்தில் உள்ளது. அதற்கு அப்பால் எத்தனை விண்மீன் பேரடைகள் உள்ளனவோ? தெரியாது. நமது சூரிய ஒளி நமது விண்மீன் பேரடையின் மையத்தை அடைவதற்குள் (27,700 ஒளியாண்டு) சூரிய குடும்பமே அழிந்துவிடும். அப்படியென்றால் அண்டத்தின் பரப்பளவை நாம் கணக்கிடத்தான் முடியுமோ? 

இதில் என்ன வேடிக்கை என்றால், அண்டம் என்பது ஒன்றுதான் என கொள்ளக்கூடாது. இவ்வாறு பல அண்டங்கள் உள்ளன. ‘அண்ட கோடிகள்’ எனச் சொல்வார் வள்ளலார். இவ்வாறு பல கோடி அண்டங்களின் பரப்பளவை நாம் வரையறுக்க முடியாது. ஆனால் வள்ளற்பெருமான் அண்ட கோடிகளையெல்லாம் அரை நொடியில் பார்த்து வரையறுத்துக்கொண்டே இருக்கின்றார். ஆனால் வரையறை முடிவதாகத் தெரியவில்லை. எனவேதான் ‘அண்ட பரப்பு’ எனப்பாடுகின்றார். பரப்புதல் என்றால் விரித்தல் எனப் பொருள்படும். கொள்கையை பரப்புதல், கடை பரப்புதல் (கடை விரித்தல்) எனச் சொல்கின்றோம் அல்லவா. இவ்வாறு எண்ணற்ற கோடி அண்டங்களும் தன்னை பரப்பிக்கொண்டே சென்றுக்கொண்டிருக்கின்றன. விரிவடையும் அண்டங்களுக்கு தேவையான இடங்களையும் (வெளி) இறைவன் அளித்துக்கொண்டே இருக்கின்றான். வெளிக்குள் வெளி, வெளிக்குள் வெளி என பரப்பிக்கொண்டே செல்கின்றது. 

மனிதனின் பரப்பளவோடு நாம், ஒரு மிகச்சிறிய கோள்களின் அல்லது சூரியனின் பரப்பளவோடு ஒப்பிட்டுக்கொண்டே சென்றால் எவ்வாறு மனித பரப்பளவு ஒன்றுமில்லாத்தன்மையை அடைகின்றது என்று பார்த்தோம். நாம் இப்போது மனிதன் இருக்கும் இடத்தில் இறைவனை வைத்து ஒப்பிடும்போது, எவ்வாறு இந்த அண்டம் பரவுகின்றதோ (விரிகின்றதோ) அது போல் இறைவனின் பரப்பளவும் பரந்துக்கொண்டே விரிந்துக்கொண்டே எல்லாமாகி விளங்கி நிற்பதைக் காணலாம். இவ்வாறு இங்கே மனிதனின் சிறுமையும் இறைவனின் பெருமையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

எதற்கும் அடங்காமல் இருக்கும் ’பரப்பும்’ செயலை வள்ளற்பெருமான் ஆண் தன்மையுடன் (அவன்) ஒப்பிடுகின்றார். எங்குமாய் விளங்கும் அண்ட பரப்புகள் அனைத்தும் தனது அகண்ட பவனத்தில் (வீட்டில்) அடக்கி, அவனுக்கு அவனே நிகராக விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.

தி.ம.இராமலிங்கம்
9445545475
vallalarmail@gmail.com

https://www.blogger.com/blog/post/edit/6869766267563420144/1390809461187316825

Thursday, October 19, 2023

ஐந்து “தி”கரம் - பாடல்

 ஐந்து “தி”கரம் - பாடல்

வள்ளற்பெருமானைப் போற்றி ஐந்து “தி”கரம் வரும்படியாகப் பாடியது.

ஆசாவீஓசோ திதிதிதிதி முறையாய்
பேசாமல் பேசும் வள்ளல்கை - வீசாமல்
முதலாகி அழித்து நடந்து மொழிந்து
இதயத்துள் அமரும் இறைவர்.

தன்னிரு கைகளை வீசி நடவாமல் கட்டியே நடக்கும் அதிசய மனிதர், அற்புத இறைவர் சித்தி வளாகத்தில் இறையருள் சூழ உலகாளும் வள்ளற்பெருமான், “ஆ, சா, வீ, ஓ, சோ” என்னும் இவ்வைந்தெழுத்துடன் “தி, தி, தி, தி, தி” என்னும்
இவ்வைந்தெழுத்தைத் தனித்தனி பொருந்த, அவை “ஆதி, சாதி, வீதி, ஓதி, சோதி” என்று ஆதலால், அவற்றுள் முறையாய், தீங்கு யாவைக்கும் முதலான 
(ஆதி), “சாதி”யை அழித்து, அருள் “வீதி”யில் நடந்து மஹா மந்திரம் மொழிந்து (ஓதி) நமது இதயத்துள் அமரும் அருட்பெருஞ்”சோதி”யெனும் இறைவர்.


T.M.RAMALINGAM

CUDDALORE - 9445545475

Tuesday, October 17, 2023

பத்து கோடி பாடல்

பத்து கோடி பாடல்


மன்னன் வாழும் மண்ணகத்தில் சுத்த 
சன்மார்க்கம் கோடி பெறும்.                        (1)

ஈன உலகில் பசியாற்றும் அன்ன
தானம் கோடி பெறும்.                                        (2)

பெருவாழ் வளிக்கும் வள்ளல் திரு
அருட்பா கோடி பெறும்.                                (3)

உயிரும் உடலும் கூடும் கலை
பயிற்றல் கோடி பெறும்.                                (4)

பொறி ஐந்துள் கடவுள் நிலை
அறிதல் கோடி பெறும்.                                    (5)

தயவே வாழ்வாய்க் கொண்டு கடவுள்
மயமாதல் கோடி பெறும்.                                (6)

போரும் புலையும் ஒழிக்கும் ஜீவ
காருண்யம் கோடி பெறும்.                            (7)

மண்ணும் நெருப்பும் தீண்டா உடல்
உண்மை கோடி பெறும்.                                (8)

ஊமை எனைபெச வைத்த இராமலிங்க
நாமம் கோடி பெறும்.                                    (9)

மத்தியில் புத்தியை நிலைக்க வைக்கும்
சித்திவளாகம் கோடி பெறும்.                        (10)

தி.ம.இராமலிங்கம்
கடலூர்.
9445545475

(அன்று ஒளவையார் நான்காயிரம் பாடல் பாடினார். இன்று பத்து நிமிடத்தில் பத்து கோடி பாடலை வள்ளலார் பாடவைத்துவிட்டார்.)  



Saturday, October 7, 2023

எங்கும் அமைதி நிலவட்டும்

 எங்கும் அமைதி நிலவட்டும்



உலக நாட்டுத் தலைவர்கள் கொல்லாமையை கடைபிடிக்கவேண்டும். ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமையை உலகம் அடைதல் வேண்டும்.

ஹமாஸ் குழுவினருக்கும் இஸ்ரேல் நாட்டிற்கும் பலத்த போர் துவங்கியுள்ளது வருந்ததக்கது. நமது இந்தியா இஸ்ரேலுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளது. அதுபோல் ஈரான் ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. மற்ற உலக நாடுகளும் இரு பிரிவாகப் பிரிந்து தங்களுக்குள் மோதிக்கொண்டு அப்பாவி மக்களை அழிக்க யுத்தம் வரப்போகின்றது உறுதியாவதுபோல் உள்ளது.
எருசலேம் 5000 வருடங்கள் பழமையான நகராகும். பழைய எருசலேம் உலகப் பாரம்பரியச் சொத்தாகும். (Jerusalem - World Heritage). இங்கு அர்மீனியக் குடியிருப்புகள், கிறித்துவக் குடியிருப்புகள், யூதக் குடியிருப்புகள் மற்றும் இஸ்லாமியக் குடியிருப்புகள் என நான்கு குடியிருப்புகள் உள்ளன. மத்திய ஆசியாவில் உள்ள இசுரேல் நாட்டில் உள்ள நகரந்தான் இந்த எருசலேம் ஆகும். உலகின் சர்ச்சை நிறைந்த இடமாக எருசலேம் உள்ளது. காரணம் பாலத்தீன நாடும் எருசலேம் தங்களுடையது என தனது இறையான்மையை அங்குச் செலுத்துகின்றது.
விவிலியம் பழைய ஏற்பாட்டின்படி எருசலேம் நகரை கி.மு.1000 ஆம் ஆண்டளவில் யூதர்கள் தங்களது தலைநகராக ஆக்கினார்கள். தாவீது மன்னரின் மகன் சாலமோன் எருசலேமில் புகழ்வாய்ந்த கோவிலைக் கட்டினார். அதனால் யூதர்களுக்கு இன்றும் எருசலேம் புனித நகரமாக உள்ளது.
விவிலியம் புதிய ஏற்பாட்டின்படி இயேசு சுமார் கி.பி.30-ஆம் ஆண்டு எருசலேமுக்கு வெளியே சிலுவையில் அறையுண்டு இறந்தார். அவர் உயிர்நீத்த சிலுவையை கான்ஸ்டண்டைன் மன்னனின் தாய் புனித ஹெலென் என்பவர் கி.பி.300 ஆம் ஆண்டளவில் எருசலேமில் கண்டெடுத்தார். எருசலேம் தேவாலயத்தில்தான் இயேசு இறந்தார், மீண்டும் உயிர் பெற்றார் என்று கிறுஸ்துவர்கள் நம்புவதால், இன்றும் எருசலேம் கிறுத்துவர்களுக்கு புனித இடமாக உள்ளது.
கி.பி.610-இல் இஸ்லாமியர்கள் எருசலேமை நோக்கித் தொழுகை நடத்தினார்கள். கி.பி.620-இல் முகமது நபி எருசலேமிலிருந்து விண்ணகப் பயணம் மேற்கொண்டு திரும்பினார் என்று இஸ்லாமியர்கள் நம்புகின்றனர். எனவே மெக்கா, மதீனா ஆகிய நகரங்களுக்கு அடுத்த நிலையில் இசுலாமியர் எருசலேமைத் தங்கள் புனித நகரமாக கருதுகின்றனர்.
இவ்வாறு இஸ்லாம், கிறுத்துவம், யூதம் ஆகிய மூன்று மதங்களுக்கும் புனிதத்தலமாக ஜெருசலேம் விளங்கி வருகின்றது.எனவே இவர்களில் யார் ஜெருசலேத்தை கைப்பற்றுவது என்பதில், இன்றைக்கும் போர் மேகம் சூழ்ந்த இடமாக இது இருக்கின்றது.
படத்தில் உள்ள கட்டடம் தற்போது இஸ்லாமியர்களுக்கு சொந்தமாக, மசூதி என்கின்ற பெயரில் உள்ளது. ஆனால் இவர்கள் ஆளுகைக்கு முன்னர் இக்கட்டடம் கிறுத்துவர்களின் தேவாலயமாக இருந்தது.
எண்கோண கட்டட அமைப்பில் அமைந்த இந்த கட்டடம் ஏறக்குறைய நமது வள்ளற்பெருமான் கட்டிய ஞான சபையை ஒத்து இருப்பதாக உள்ளது. வள்ளற்பெருமானின் வருவிக்கவுற்ற நாள், அதாவது 200-ம் ஆண்டு முடிந்து இரண்டாம் நாளில் இஸ்ரேலில் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளதைப் பார்க்கையில், வள்ளலார் ஏதோ ஒரு விடயத்தை உலக மக்களுக்கு சொல்லிக்கொண்டிருக்கின்றார் எனத் தோன்றுகின்றது.
மக்கள் - மதம், நிலம், இனம் போன்ற அடைப்படையில் தங்களுக்குள் குழுக்களாக பிரிந்திருந்தாலும், தங்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகள் எதுவாகினும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளுதல் அறிவுடைய மக்களுக்கு ஏதுவாகும். அதற்கு ஐ.நா. சபை குறுக்கிட்டு உடனே அங்கு அமைதி நிலவ வழிவகை செய்ய வேண்டும். எங்கும் அமைதி நிலவட்டும்.

T.M.RAMALINGAM
9445545475
vallalarmail@gmail.com

மாதப்பூசம் - 08-10-2023

 மாதப்பூசம் - 08-10-2023




வள்ளற்பெருமானின் 200-ஆம் ஆண்டு வருவிக்கவுற்ற திருநாள்

 200-ஆம் ஆண்டு வருவிக்கவுற்ற திருநாள்

வள்ளற்பெருமானின் 200-ஆம் ஆண்டு வருவிக்கவுற்ற திருநாள், சமரச பஜனை காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையத்தில் 15-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது. அவ்வமயம் உலகர்கள் அனைவரும் அருள் நிலைய தரிசனம் பெற அன்போடு அழைக்கின்றோம். தொடர்புக்கு: 9445545475




Friday, October 6, 2023

சிங்கபுரி கந்தர் பதிகம் - ரோக நிவாரணம் (நோய் தீர்க்க) வேண்டி வள்ளலார் பாடிய பதிகம்

சிங்கபுரி கந்தர் பதிகம்

          - ரோக நிவாரணம் (நோய் தீர்க்க) வேண்டி வள்ளலார் பாடிய பதிகம்

சிங்கபுரி முருகன் (சுப்புராய சுவாமி) திருக்கோயில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் சிங்கபுரி என்னுமிடத்தில் அமைந்துள்ளது. தனது மூத்த அண்ணன் திரு.இரா.சபாபதிப்பிள்ளை அவர்களின் நோய் தீர்வதற்காக, அன்றைக்கு கருங்குழியில் வசித்த வள்ளற்பெருமான் இக்கோயிலுக்கு வந்து சிங்கபுரி முருகனை வேண்டி பதிகம் பாடியருளி தனது அண்ணனின் நோயை முருகன் அருளால் தீர்த்தார்.

வடலூருக்கு அண்மையில், கடலூர் செல்லும் வழியில் அமைந்த குறிஞ்சிப்பாடியின் ஒரு பகுதியாகிய விழப்பள்ளம் என்பதே சிங்கபுரி. இங்கு எழுந்தருளியுள்ள திருமுருகன் மீது பாடப்பட்டதே சிங்கபுரிக் கந்தர் திருப்பதிகம். இக்கோவிலைச் சுப்புராயர் கோயில் என்பர். சுப்புராயர் வீரசைவ மரபு. பழனி முருகன் பக்தர். பழனியில் சென்று தங்கியிருந்தபோது, திருமுருகன் அவர் கனவில் தோன்றி இங்குக் கோயில் எழுப்புமாறு சொல்லியருளினார். அப்படி ஏற்படுத்தப்பட்டதே இக்கோயில். சுப்புராயரின் தந்தை முத்தய்யர் இளம்வயதில் இறந்துபோய் புதைக்கப்பட்டு, சிலநாள் கழித்து இறைவனால் உயிரோடு எழுப்பித்தரப்பட்டார். அந்த முத்தய்யரின் சமாதியின் மீதே மூலத்தானம் அமைந்துள்ளது.

சுப்புராயர் வள்ளலார் வெளிப்பட வாழ்ந்தக்காலம். பல முறை இருவரும் சந்தித்துள்ளனர். வள்ளலார் ஒருமுறை வந்து இப்பதிகம் பாடியுள்ளார். “இஃது ரக்தாஷி வருடம் சித்திரை மாதம் 26-ஆம் தேதி, சுக்கிரவாரம், கார்த்திகை நட்சத்திரம் சகோதரர் சபாபதி பிள்ளையின் ரோக நிவாரண நிமித்தம் சி.இராமலிங்கபிள்ளை அவர்களால் இயற்றியது” என நோட்டுப் பிரதியில் குறிப்பு இருப்பதாக திருவருட்பா பதிப்பாசிரியர் திரு.ஆ.பாலகிருஷ்ணப்பிள்ளை குறிப்பிடுகின்றார். இதில் குறிப்பிட்டுள்ள நாள் ஆங்கிலக் கணக்குப்படி 06-05-1864 என்றும் அவர் குறித்துள்ளார்.

இது பற்றி வேறு ஒரு வரலாற்று செய்தியும் உண்டு. வடலூரிலிருது விருத்தாச்சலம் செல்லும் வழியில் வடலூருக்குப் பக்கம் அமைந்தது கெங்கை கொண்டான் குப்பம். இங்குத் தண்டபாணிசாமிக் கோயில், அதைச்சார்ந்து வீரசைவ மடம் இருக்கும். அங்கு விருப்பாக்க அய்யர் சும்பு அம்மையார் ஆகியவர்களுக்கு இறையருளால் தோன்றியவர் அப்பாவு அய்யர். இவருடைய 25 வயதில் குறிஞ்சிப்பாடி, விழப்பள்ளத்தில், வீரசைவ மடத்தைச் சார்ந்த சோதிடம் குழந்தை என்பவரின் மகள் விரூபாக்கம் அம்மாளை அப்பாவு அய்யருக்கு திருமணம் முடித்தனர். (அப்பாவு அய்யருக்கு மூத்த தமக்கையார் மகள் விரூப்பாக்கம் அம்மை ஆவார்). சில காலத்தில் மாமனார் காலமானபடியால், அப்பாவு அய்யரை விழப்பள்ளத்திலேயே தங்க வைத்தனர். அவ்வமயம் ஒரு நாள் அப்பாவு அய்யர் வள்ளற்பெருமானின் தமையனார் சபாபதிப்பிள்ளையின் மருமகன் பொன்னேரி சுந்தரம்பிள்ளையை வரவழைத்து மடத்தில் தங்கவைத்துத் தம் மைத்துனருக்கும் மற்றும் சிலருக்கும் பாடம் சொல்லச் செய்தார். இரவில் பிரசங்கம் நடந்தது. சபாபதிப்பிள்ளை மகன் வடிவேல்பிள்ளையும் தனது மாமாவான சுந்தரம் பிள்ளையுடன் வந்திருந்து அங்கேத் தங்கி பாடம் படித்தார். சபாபதிப்பிள்ளை தம் மருமகனையும் மகனையும் பார்க்க விழைந்து விழப்பள்ளம் வருவது வழக்கம். அப்படி ஒரு நாள் வந்தபொழுது மடத்துச் சாமிகள் அவரைக் கந்தபுராணம் பிரசங்கம் செய்ய வைத்தார். தொடர்ந்து உரையாற்றுகையில் இடையில் அவருக்குக் கடுஞ்சுரம் ஏற்பட்டது. இது தெரிந்த வள்ளற்பெருமான் கருங்குழியிலிருந்து சென்று தனது அண்ணன் விட்ட இடத்திலிருந்து தொடங்கிப் பிரசங்கம் செய்தார். அந்த நாட்களிலேயே கார்த்திகை நாளில் சிங்கபுரி கந்தன் கோயில் சென்று வழிபட்டு அண்ணார் உடல் நலம் பெற வேண்டி இப்பதிகம் பாடியருளினார்.

மடத்துச் சுவாமிகள் அப்பாவு அய்யர் தம் மைத்துனர் (இவர் பெயரும் அப்பாவு அய்யர்தான்) கல்வித் தேர்ச்சி பெற்ற பிறகு அவரை நிர்வாகம் செய்ய விட்டுத் தம் சொந்த ஊருக்கே (கெங்கை கொண்டான் குப்பம்) சென்றார். பல மாதங்கள் தவம் செய்தார். வள்ளற்பெருமான் விருத்தாசலம் செல்லும்போது இவரை நேரில் கண்டு உரையாடிச் செல்வார். அப்பாவு அய்யரின் வரலாறு மு.அப்பாதுரை அய்யரால் எழுதப்பட்டுள்ளது.அதில் அப்பாவு அய்யர் அருள் வாக்காக, வள்ளற்பெருமான் மீது 18 பாடல்கள் இயற்றியதைக் காணலாம். 

ஸ்ரீமத் வீரசைவ சிவயோக சுவாமிகள் என்று அறியப்படும் இவர் (அப்பாவு அய்யர்) 28-12-1885 ஆம் ஆண்டு திருவடிப்பேறு பெற்று, குறிஞ்சிப்பாடிக்கும் குள்ளஞ்சாவடிக்கும் இடையில் தம்பிப்பேட்டை பாளையம் பகுதியில் சோலை என்ற இடத்தில் சமாதியடைந்தார். 

பொன்னேரி - இன்றைய திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது. வள்ளலாரின் தாயார் சின்னம்மையார் பிறந்த சின்னகாவணம் என்னும் ஊரும் பொன்னேரிக்கு அருகில் உள்ளது. பொன்னேரி சுந்தரம் பிள்ளை என்பவர் சென்னையில் வள்ளலாரிடம் பாடம் கேட்க வந்தவர்களில் ஒருவராவார். அப்பழக்கத்தில் சபாபதிப்பிள்ளையின் இளைய மகள் வடிவுடைமாணிக்கத்தை மணந்தார். சிந்தாதிரிப்பேட்டையில் ஆசிரியராகப் பணியாறினார். புராணச் சொற்பொழிவாளர். இவரை வைத்து வள்ளலார் 2 பாடல்கள் பாடியுள்ளார். 1892 - 96 - ல் இருமுறை திருவருட்பாவைப் பதிப்பித்துள்ளார். வள்ளலார் மீது பிள்ளைத் தமிழும், ஞானசிங்காதன பீடத் திருவருட் செங்கோலாட்சியும் பாடியுள்ளார். (நன்றி- “நற்கருஞ்குழியில் வள்ளற்பெருமான்” நூல் - புலவர். வ.ஞானப்பிரகாசம்)        


   

              ஸ்ரீமத் வீரசைவ சிவயோக சுவாமிகள் சமாதி - தம்பிப்பேட்டை





சிங்கபுரி கந்தர் பதிகம்
    காப்பு
    நேரிசை வெண்பா
    திருச்சிற்றம்பலம்
  • 1. பொன்மகள்வாழ் சிங்கபுரி போதன்அறு மாமுகன்மேல்
    நன்மைமிகு செந்தமிழ்ப்பா நாம்உரைக்கச் - சின்மயத்தின்
    மெய்வடிவாம் நங்குருதாள் வேழமுகன் தன்னிருதாள்
    பொய்யகலப் போற்றுவம்இப் போது.
  • அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • 2. சீராரு மறையொழுக்கந் தவிராது நான்மரபு சிறக்க வாழும்
    ஏராரு நிதிபதிஇந் திரன்புரமும் மிகநாணும் எழிலின் மிக்க
    வாராருங் கொங்கையர்கள் மணவாளர் உடன்கூடி வாழ்த்த நாளும்
    தேராரு நெடுவீதிச் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
  • 3. உம்பர்துயர் கயிலைஅரற் கோதிடவே அப்பொழுதே உவந்து நாதன்
    தம்பொருவில் முகமாறு கொண்டுநுதல் ஈன்றபொறி சரவ ணத்தில்
    நம்புமவர் உயவிடுத்து வந்தருளும் நம்குகனே நலிவு தீர்ப்பாய்
    திங்கள்தவழ் மதில்சூழும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
  • 4. பொல்லாத சூர்க்கிளையைத் தடிந்தமரர் படுந்துயரப் புன்மை நீக்கும்
    வல்லானே எனதுபிணி நீநினைந்தால் ஒருகணத்தில் மாறி டாதோ
    கல்லாதேன் எனினும்எனை இகழாதே நினதடியார் கழகங் கூட்டாய்
    செல்லாதார் வலிஅடக்கும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
  • 5. பண்டுறுசங் கப்புலவர் அருஞ்சிறையைத் தவிர்த்தருளும் பகவ னேஎன்
    புண்தருஇந் நோய்தணிக்கப் புரையிலியோய் யான்செய்யும் புன்மை தானோ
    தண்டைஎழில் கிண்கிணிசேர் சரணமலர்க் கனுதினமும் தமியேன் அன்பாய்த்
    தெண்டனிடச் செய்தருள்வாய் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
  • 6. தாவாத வசியர்குலப் பெண்ணினுக்கோர் கரமளித்த சதுரன் அன்றே
    மூவாத மறைபுகலும் மொழிகேட்டுன் முண்டகத்தாள் முறையில் தாழ்ந்து
    தேவாதி தேவன்எனப் பலராலும் துதிபுரிந்து சிறப்பின் மிக்க
    தீவாய்இப் பிணிதொலைப்பாய் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
  • 7. வானவர்கோன் மேனாளில் தரமறியா திகழ்ந்துவிட விரைவில் சென்று
    மானமதில் வீற்றிருந்தே அவன்புரிந்த கொடுமைதனை மாற்றும் எங்கள்
    தானவர்தம் குலம்அடர்த்த சண்முகனே இப்பிணியைத் தணிப்பாய் வாசத்
    தேனவிழும் பொழில்சூழும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
  • 8. மட்டாரும் பொழில்சேரும் பரங்கிரிசெந் தூர்பழனி மருவு சாமி
    நட்டாரும் பணிபுரியும் ஆறுதலை மலைமுதலாய் நணுகி எங்கள்
    ஒட்டாதார் வலிஅடக்கி அன்பர்துதி ஏற்றருளும் ஒருவ காவாய்
    தெட்டாதார்க் கருள்புரியும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
  • 9. முன்செய்த மாதவத்தால் அருணகிரி நாதர்முன்னே முறையிட் டேத்தும்
    புன்செயல்தீர் திருப்புகழை ஏற்றருளும் மெய்ஞ்ஞான புனிதன் என்றே
    என்செயலில் இரவுபகல் ஒழியாமல் போற்றியிட இரங்கா தென்னே
    தென்திசைசேர்ந் தருள்புரியும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
  • 10. விண்ணவர்கோன் அருந்துயர நீங்கிடவும் மாதுதவ விளைவு நல்கும்
    கண்ணகன்ற பேரருளின் கருணையினால் குஞ்சரியைக் காத லோடு
    மண்ணுலகோர் முதல்உயிர்கள் மகிழ்ந்திடவும் மணம்புரிந்த வள்ள லேஎன்
    திண்ணியதீ வினைஒழிப்பாய் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
  • 11. மாசகன்ற சிவமுனிவர் அருளாலே மானிடமாய் வந்த மாதின்
    ஆசில்தவப் பேறளிக்க வள்ளிமலை தனைச்சார்ந்தே அங்குக் கூடி
    நேசமிகு மணம்புரிந்த நின்மலனே சிறியேனை நீயே காப்பாய்
    தேசுலவு பொழில்சூழும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.

Thanks to -  https://www.thiruarutpa.org/thirumurai/v/T176/tm/singkapurik_kanthar_pathikam

T.M.RAMALINGAM

9445545475

vallalarmail@gmail.com







Thursday, October 5, 2023

தனிப்பெருங்கருணை நாள் வாழ்த்துகள்

 அனைத்து உலக உயிர்களுக்கு எமது தனிப்பெருங்கருணை நாள் வாழ்த்துகள்




Wednesday, October 4, 2023

வள்ளலார்-200 முப்பெரும் விழாவில் நடைபெற்ற ஊழல்கள்

வள்ளலார் விழாவில் ஊழலா? 

சன்மார்க்க அன்பர்கள் அனைவருக்கும் எமது அன்பு கலந்த வணக்கங்கங்கள்.

03-10-2023 அன்று இரவு 12.58 மணியளவில் திரு.தமிழ் வேங்கை அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் கீழ் காணும் ஊழல் புகாரை பதிவேற்றியதைப் படித்து வேதனை அடைந்தேன். வள்ளலார் விழாவில் ஊழலா? என மனம் பதைத்தது. திரு.தமிழ் வேங்கையின் புகர்களை முழுமையாக படிக்கவும். இப்புகாருக்குக் கீழே சில கருத்துகளை பதிந்துள்ளேன். நன்றி.

=====================================

வள்ளலார்-200 முப்பெரும் விழாவில் நடைபெற்ற ஊழல்கள்.

===============================
வள்ளல் பெருமானாரின் 200-வது வருவிக்க உற்ற திருநாளை முன்னிட்டு 52 வாரங்களுக்கு இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் முப்பெரும் விழா என்ற பெயரில் இதுவரை 51 ஊர்களில் விழா நடைபெற்றுள்ளது.
நிறைவு விழா வரும்
05/10/2023 அன்று சென்னையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தலைமையில் நடைபெற உள்ளது.
51 வது விழா கடந்த
24/09/2023 அன்று சென்னை, தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவில் கா.தமிழ் வேங்கை ஆகிய அடியேன் "வள்ளலார் வரலாற்றில் புனைவுகள்" என்ற தலைப்பில் நிறைவுப் பேச்சாளராகப் பேசினேன்.
இதுவரை நடைபெற்ற முப்பெரும் விழா நிகழ்வில் கொடைக்கானல், அருப்புக்கோட்டை, பட்டுக்கோட்டை, திருப்பத்தூர், கும்பகோணம், திருவள்ளூர், செஞ்சி, மற்றும் தண்டையார்பேட்டை என 8 நிகழ்வுகளில் பங்கேற்று வெவ்வேறு தலைப்புகளில் பேசியுள்ளேன். இந்தத் தலைப்புகள் அனைத்தும் என்னால் தேர்ந்தெடுக்கப்பட்டவை ஆகும்.
செஞ்சியில் நடைபெற்ற நிகழ்வில் சன்மானமாக ரூபாய் 5000/- இதர நிகழ்வுகளில் ரூபாய் 10,000/- என தண்டையார்பேட்டை நிகழ்வு தவிர்த்து இதுவரை 65 ஆயிரம் ரூபாய் சன்மானமாகப் பெற்றுள்ளேன்.
51 வது நிகழ்வான தண்டையார்பேட்டையில் பேசிய நிகழ்ச்சிக்கான சன்மானம் ரூபாய் 10,000/- ஒருவாரம் ஆகியும் எனக்கு வரவில்லை. இது தொடர்பாக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட உயர்நிலைக் குழு உறுப்பினரான மெய். அருள் நந்தி சிவம் அவர்களிடம் கேட்டதற்கு, "இந்த முறை லேட்டாகத்தான் வந்து சேரும்" என்றார். அதே நேரத்தில் நிகழ்வில் பங்கேற்ற மற்றவர்களுக்கு சன்மானம் சென்றுள்ளதும் எமக்குத் தெரிய வந்தது. இது தொடர்பாக மற்றொரு உயர்நிலைக் குழு உறுப்பினரான வள்ளலாரின் பேரன் கி.உமாபதி அவர்களிடம் கேட்டபோது, "இந்த முறை உங்களுக்கு பணம் கிடையாது, செங்கல்பட்டு கூட்டத்தில் பங்கேற்றதற்காக டாக்டர் ஜெய.ராஜமூர்த்தி அவர்களுக்கு ரூபாய் 10,000/- நிலுவைத் தொகை கொடுக்க வேண்டியது, சில காரணங்களால் கொடுக்க முடியாமல் போய்விட்டது. அதனால் உங்களுக்கு கொடுக்க வேண்டிய பத்தாயிரத்தையும் சேர்த்து ரூபாய் இருபதாயிரமாக டாக்டர் ஜெய.இராஜமூர்த்தியிடம் கொடுத்து விட்டோம்" என்றார்.
சன்மார்க்க சங்கத்தின் சென்னை மாவட்டத் தலைவர் செந்நெறி பா.தண்டபாணி ஐயா அவர்களிடம் இது தொடர்பாக விசாரித்த போது, "உங்கள் பெயரில் ரூபாய் 10,000/- ரசீது எழுதப்பட்டிருந்தது. உங்களுக்கு வந்திருக்குமே" என்றார். கி.உமாபதி ஐயா சொன்ன விளக்கத்தை பா.தண்டபாணி ஐயாவிடம் கூறினேன். "இல்லையே ராஜமூர்த்தி அவர்களுக்கு தனியாக ரூபாய் 20,000/- ரசீது எழுதப்பட்டிருந்ததே" என்றார்.
இதன் மூலம் என்ன தெரிய வருகிறது என்றால்? தமிழ்வேங்கையாகிய என் பெயரைப் பயன்படுத்தி ரூபாய் 10,000/- ஊழல் செய்துள்ளார் மெய்.அருள் நந்தி சிவம்.
இது தொடர்பாக அருள் நந்தி சிவத்திடம் நேற்று (02/10/2023) இரவு 9:00 மணிக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியபோது "உங்களுக்குப் பத்தாயிரம் இல்லை ஐந்தாயிரம் நாளைக்கு பேசிவிட்டு சொல்கிறேன்" என்றார்.
ஒவ்வொறு நிகழ்விற்காகவும் தனித்தனியாக ஒதுக்கப்பட்ட ரூபாய் 3,80,000/- த்தில், கடந்த 51 வாரங்களாக பயணச் செலவு, விடுதி வாடகை, பேச்சாளர்களுக்கான சன்மானம், வீடியோ பதிவாளர்களுக்கு வழங்கப்பட்ட பணம், கலைக் குழுவினருக்கும் இசைக் கலைஞர்களுக்கும் வழங்கப்பட்ட தொகை, என பல வழிகளிலும் பல இலட்சம் ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது. இந்த ஊழல் குறித்து வெற்று புலம்பலாகவே பலராலும் பேசப்பட்டதே தவிர அவ்வளவாக பொதுவெளியில் வெளிப்படுத்தவில்லை.
ஈரோடு கதிர்வேலு ஐயா போன்ற மூத்த சன்மார்க்கிகளிடமும் இவர்கள் கைவரிசையைக் காட்ட தவறவில்லை.
உயர்நிலைக் குழுவில் 14 பேர் இடம் பெற்றிருந்தாலும் கி.உமாபதி, மெய்.அருள் நந்தி சிவம், ஏ.பி.ஜே அருள் ஆகிய மூவர் மட்டுமே ஒரு சில நிகழ்வுகள் தவிர பெரும்பாலான நிகழ்வுகளில் பங்கேற்றவர்கள். இதில் ஏ.பி.ஜே அருள், அவரது சொற்பொழிவு முடிந்ததும் கிளம்பி விடுவார். அவரது சன்மானத்தில் மட்டும் கை வைக்கவில்லை.
51 நிகழ்வுகளிலும் வள்ளலார் பேரன் கி.உமாபதி கலந்து கொண்டுள்ளார். நிகழ்ச்சியை நெறிப்படுத்துவது மற்றும் பணப்பட்டுவாடா என மெய்.அருள்நந்திசிவம் பொறுப்பேற்று செயல்பட்டுள்ளார்.
சைவ நெறியாளரான அருள்நந்திசிவம் அவர்கள், வள்ளலாரின் கொள்கையில் துளியும் ஈடுபாடு கொண்டவர் கிடையாது. வள்ளலாரின் கொள்கை சாத்தியமில்லாத ஒன்று என என்னிடம் பலமுறை வாதம் செய்துள்ளவர். சன்மார்க்க அன்பர்களை பலமுறை இழிவுபடுத்தி உள்ளதை நேரில் கண்டு கண்டித்துள்ளேன். "வெளிநாட்டுக்குச் சென்று அங்குள்ள சன்மார்க்க சங்கத்தவர்களையெல்லாம் சந்தித்த நிழற்படங்களை காட்டினால்தான் வெளிநாடுகளிலும் எங்களுக்கு செல்வாக்கு இருப்பதாக நினைத்து அமைச்சர் சேகர்பாபு எங்களுக்கு சர்வதேசமையத்தில் இயக்குனர் பொறுப்பு வழங்குவார்" என்று அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற சன்மார்க்க மாநாட்டில் ஜீவ.சீனுவாசன் அவர்களின் முயற்சியால் கடைசி நேரத்தில் வந்து இணைந்து கொண்டவர் தான் இந்த மெய்.அருள் நந்தி சிவம் அவர்களும் கி.உமாபதி அவர்களும்.
தற்போது இந்த ஊழல் பெருச்சாளியான மெய். அருள்நந்திசிவம் அவர்கள் வடலூரில் அமையப்போகும் சர்வதேச மையத்திற்கு இயக்குனர் பொறுப்புக்கு வர திட்டமிட்டு அமைச்சர் சேகர்பாபு அவர்களிடம் கி.உமாபதி மூலமாக முயற்சித்து வருகிறார்.
"என்னைப் போன்றவர்கள் இந்தப் பொருப்பில் இருந்தால் தான் அமைச்சருக்கு 30 விழுக்காடு கமிஷன் கொடுக்க முடியும் என்று வெளிப்படையாகவே கூறி வருபவர் தான் இந்த ஊழல் பேர்வழி.
நீங்க (தமிழ்வேங்கை), நான் (மெய்.அருள்நந்திசிவம்) கி.உமாபதி மூன்று கணக்கண்களும் (கருணீகர் சாதியைச் சார்ந்த) சர்வதேச மையத்தில் பொறுப்பு பெற்று விட்டால் முதல் வேலை சன்மார்க்க சங்கத்தவனுங்களை ஒழித்துக்கட்டுவது, உள்ளூர்க்காரர்களின் ஆதிக்கத்தை அடக்குவது என்று என்னிடம் அருள்நந்தி சிவம் ஆசை வார்த்தை கூறிய போதெல்லாம் எனக்கு எந்த பொறுப்பும் வேண்டாம் என்று கூறியுள்ளேன்.
மூவாசைகளையும் துறந்த வள்ளல் பெருமானார் எதற்காக மக்கள் கொடுத்த 80 காணி நிலத்தைப் பெற வேண்டும்? எதற்காக தருமச் சாலையையும் சத்திய ஞான சபையையும் தென்கோடியில் அமைக்க வேண்டும்? "எள்ளு போட்டால் எள்ளு கீழே விழாது அப்படிப்பட்ட கும்பல் சேருவதற்கு ஒரு காலம் வரப்போகிறது" என்று அறிவித்தவர் வள்ளலார்.
அவரது நோக்கத்தை அறிந்துகொள்ளாத தமிழக அரசு, வடலூர் பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்க உள்ளதை அறிந்து கடந்த 13/09/2022 அன்று அதாவது ஒரு ஆண்டுக்கு முன்பே தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக புகார் தெரிவித்தேன். பிறகு 01/09/2023 அன்று தொடர்புடைய உயர் அதிகாரிகளுக்கும் வடலூர் பெருவெள்ளியில் சர்வதேச மையம் கூடாது என்று பதிவு அஞ்சல் மூலமாக மனு அளித்துள்ளேன்.
வள்ளலாரின் நோக்கத்திற்கு மாறாகச் செயல்படும் தமிழக அரசின் போக்கை சுட்டிக்காட்டவோ அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லவோ கொஞ்சமும் முயற்சிக்கவில்லை.
எப்படியாவது அமையப்போகும் சர்வதேச மையத்தில் உள்ளே சென்று ஆதிக்கம் செலுத்தலாம் என்று கி.உமாபதியை துணைக்கு வைத்துக்கொண்டு மெய்.அருள்நந்திசிவம் அவர்கள் செயல்பட்டு வருகிறார்.
அருள்நந்திசிவம் செய்யும் அனைத்து நூதன ஊழல்களையும் நன்கு அறிந்தவர்தான் கி.உமாபதி. "யார் பணத்தில் கை வைத்தாலும் வை. தமிழ்வேங்கை பணத்தில் மட்டும் கை வைக்காதே" என்று அருள்நந்திசிவத்திடம் சொல்லியுள்ளேன் என்று என்னிடம் உமாபதியே ஒருசில முறை சொல்லியுள்ளார்.
இவர்களின் ஊழல் இதுவரை ஆதாரப்பூர்வமாக எமக்குத் தெரியவில்லை. இப்போது என் பெயரை பயன்படுத்தியே ஊழல் நடைபெற்றிருப்பதால் இதை அம்பலப்படுத்தாமல் என்னால் இருக்க முடியவில்லை.
"சர்வதேச மையத்தில் நவீன கட்டமைப்புடன் முதியோர் இல்லம் அமைக்கப்பட உள்ளார்கள். அதற்கான பொறுப்பை தன்னிடம் வழங்கினால் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பல தொழில் அதிபர்களிடம் நன்கொடை பெற்று எப்படியோ என் காலத்தை ஓட்டி விடுவேன் என்று ஏ.பி.ஜே அருள் சொல்கிறான். அவன் விஷயத்தில் நான் தலையிடாவிட்டால் எனது இயக்குனர் பொறுப்புக்கு அவனும் ஆதரவு தெரிவிப்பான்" என்று மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளார் இந்த ஊழல் நாயகன்.
51 வார நிகழ்வுகளிலும் வடலூர் தலைமைச் சங்கத்தின் தலைவர் மருத்துவர் அருள்நாகலிங்கம் மற்றும் செயலாளர் மருத்துவர் வெற்றிவேல் உள்ளிட்ட நிர்வாகிகளையும் அவர்கள் வழங்கிய கொடி, புத்தகம் மற்றும் பரிசுப் பொருள்களை பெற்றுக்கொண்டு நிறைவு விழாவில் அவர்களைப் புறக்கனித்திருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்.
சன்மார்க்கக் கொள்கையைக் குழி தோண்டிப் புதைக்கும் இது போன்ற நூதன திருடர்களை சர்வதேச மையத்திற்கு பொறுப்பாளராக நியமித்தால் சன்மார்க்க அன்பர்கள் கைகட்டி, வாய் பொத்திக்கொண்டு இருப்பார்கள் என்று எவரும் தப்புக் கணக்கு போட வேண்டாம்.
தயவுடன்
கா.தமிழ்வேங்கை,
நிர்வாக அறங்காவலர்,
திருஅருட்பா ஆ.பாலகிருஷ்ண பிள்ளை நினைவு அறக்கட்டளை,
விழுப்புரம்.
9486176734.

(ஊழல் புகார் முற்றிற்று)

ஊழல் பற்றின எமது சில கருத்துகள்:

தமிழ்நாட்டில் எந்த கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், அவ்வாட்சியில் எந்தவிதமான திட்டங்களை நிறைவேற்றினாலும் ஊழல் இல்லாது சுத்தமான நிறைவேற்றலாக எந்தத் திட்டமும் இருப்பதில்லை. அரசியலில் ஊழல் என்பது வழக்கமான ஒன்றாகவும், பெரும்பான்மையான மக்களும் தங்களின் அன்றாட பொருளாதார நடைமுறைகளில் தங்களால் இயன்ற ஊழல்களை செய்துக்கொண்டும், மற்றவர்களை ஏமாற்றிக்கொண்டும் நேர்மையற்றவர்களாக இருப்பதாலும், இங்கே ஊழல் குற்றசாட்டுகள் புறம் தள்ளப்படுகின்றன. வாய்ப்பு கிடைத்தவர்கள் ஊழல் செய்து சம்பாதிக்கின்றனர். வாய்ப்பு கிடைக்காதவர்கள் வாய்ப்புக்காக அலைகின்றார்கள்.... அவ்வளவுதான்.

சரி... நாம் விடயத்திற்கு வருவோம். வள்ளலார் 200 முப்பெரும் விழா என்பதனை தமிழக அரசு கடந்த 51 வாரங்களாக அதாவது 1 வருடம் முழுதும் (வள்ளற்பெருமான் இவ்வுலகில் புற உடலுடன் வாழ்ந்ததும் 51 வருடங்கள்தான்) வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. அதற்காக தமிழக அரசிற்கு முதற்கண் நன்றியினை இதன்மூலம் தெரிவித்துக் கொள்கின்றேன். அரசு நடத்தும் வள்ளலார் விழாவில் ஊழல் நடைபெற்றுள்ளதாக நாம் மேலே உள்ள புகாரில் படித்தோம். அரசுத் திட்டம் என்றாலே அங்கே ஊழல் இல்லாமல் இராது என்பதை முன்னமே கண்டோம். ஆனால் இந்த ஊழலை நாம் பலமாக எதிர்க்கவே வேண்டியுள்ளது. ஏனெனில்,

இங்கே ஊழலை செய்தது சன்மார்க்கத்தைப் பின்பற்றுகின்றோம் என்று கூறுபவர்கள்தான், என்றால் இவர்களுக்கும் சாதாரான மனிதர்களுக்கும் என்னதான் விக்தியாசம் உள்ளது?

பண்ணாத தீமைகள் பண்ணுகின் றீரே
        பகராத வன்மொழி பகருகின் றீரே
நண்ணாத தீயினம் நண்ணுகின் றீரே
        நடவாத நடத்தைகள் நடக்கவந் தீரே
கண்ணாகக் காக்கின்ற கருத்தனை நினைந்தே
        கண்ணார நீர்விட்டுக் கருதறி யீரே
எண்ணாத தெண்ணவும் நேருமோர் காலம்
        எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே!

என்று வள்ளற்பெருமான் இவ்வுலகில் வாழும் மக்களின் நடத்தைகளை எண்ணி ”பைத்தியக்காரர்களே” என்று பாடுகின்றார். இந்த பாடலுக்கு எதிர்மறையாக வாழ்கின்றோம் என்று தங்களை வகைபடுத்திக்கொண்ட “சன்மார்க்க மக்களில்” யாரெல்லாம் கடந்த 51 வாரங்களில், வள்ளலார் 200 விழாவில் அரசின் பணத்தை, தான் பேசிய சன்மார்க்க சொற்பொழிவிற்காக வாங்கினார்களோ அவர்கள் சன்மார்க்கிகள் என்றோ அல்லது வள்ளற்பெருமானை பின்பற்றுபவன் என்றோ சொல்லத் தகுந்தவர்கள் அல்ல.

இதில் விதிவிலக்காக, திருவருட்பா இசைக் கச்சேரி மற்றும் திருவருட்பா இசை நடனம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு பணம் பெறுவது தவறில்லை.

சொற்பொழிவிற்காக பணம் பெற்றவர்களில் மருத்துவர் திரு.ஜெய.இராஜமூர்த்தி அவர்களின் பெயரையும் திரு.தமிழ்வேங்கை அவர்கள் புகாரில் தெரிவித்துள்ளதை காணும்போது, சன்மார்க்கத்தை இவர்கள் எங்கே எடுத்துச் செல்கின்றனர்? என்கின்ற கேள்வி எழுகின்றது. அதுவும் திரு.ஜெய.இராஜமூர்த்தி அவர்கள் ஒரு சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ரூ.20000 வாங்கியதும் தெரிய வருகின்றது. சன்மார்க்க விழாவில் சேவை நோக்குடனும், பொது மக்களுக்கு வள்ளாரியத்தை கொண்டு சென்று சேர்க்கும் பொறுப்பில் இருக்கும் சொற்பொழிவாளர்கள், வள்ளலாரியத்தை சேவை நோக்குடன்பாராது, பணம் பண்ணும் தொழிலாக பாவிப்பது வருந்தத்தக்கது.

மேலும் இந்த புகாரின் அடைப்படையில், திரு.தமிழ் வேங்கை, திரு.பா.தண்டபாணி, திரு.கதிர்வேலு, திரு.ஏ.பி.ஜே.அருள் ஆகியோர்கள் சொற்பொழிவிற்காக பணம் பெற்றதாக அறிய முடிகின்றது. வள்ளலாரின் சன்மார்க்கத்தை குழி தோண்டி புதைப்பதாக கூறும் திரு.தமிழ்வேங்கை, தானும் அத்திருடர்களுடன் சேர்ந்தே குழித்தோண்டி புதைத்தோம் என்பதை அறிந்திருக்கவில்லை என்பது அதிசயம். “யார் பணத்தில் கை வைத்தாலும் வை. தமிழ்வேங்கை பணத்தில் பணத்தில் மட்டும் கை வைக்காதே” என திரு.உமாபதி அவர்கள் கூறியும் திரு.அருள்நந்திசிவம் அதனைக் கேளாது என் பணத்தில் கைவைத்துவிட்டார்! என்ன தைரியம் அவருக்கு!. ... என பொங்கியதால்தான், திரு.தமிழ்வேங்கை இப்படிப்பட்ட புகாரை அவர்களுக்கு எதிராக வெளிபடுத்தியுள்ளார் என தெள்ளத்தெளிவாக தெரிகின்றது.

இவ்வாறு இந்தப் புகார், இனி செயல்பாட்டுக்கு வரப்போகும் வள்ளலார் சர்வதேச மையத்தை நோக்கிச் செல்கின்றது. சர்வதேச மையத்தில் அமைய இருக்கும் முதியோர் இல்லம் தனது கட்டுப்பாட்டில் வந்துவிட்டால், நான் பிழைத்துக்கொள்வேன் என்கின்ற நோக்கில் திரு.ஏ.பி.ஜே.அருள் அவர்களின் நோக்கமும் ஊழலாகவே இருப்பதைக் காண்கின்றோம்.

கி.உமாபதி மற்றும் மெய்.அருள் நந்தி சிவம் ஆகிய இருவரும் தமிழக அரசு அமைத்த உயர்மட்டக் குழுவினர்களில் இருவர் ஆவர். வள்ளலார் 200 விழாவில் இவர்களின் பங்களிப்பே முக்கியமாக இருந்துவந்துள்ளது. இவ்விருவரும் சன்மார்க்கத்தில் தொடர்புடையவர்கள் அல்லர். தீவிர சைவ சித்தாந்திகள் எனலாம். அப்படி இருக்க இவர்கள் எப்படி வள்ளலார் 200 விழாவிற்கு தலைமை ஏற்கின்றார்கள் என்றால்?, இருவரும் வள்ளலார் பிறந்த கருணீகர் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்கின்ற அடிப்படையிலும், வள்ளலார் கருணீகர் என்பதால் கருணீகர் குலத்தார்கள் தலைமையில் வள்ளலார் விழா நடக்கட்டும் என்று, அரசு இவர்களை நம்பி இந்த விழா பொறுப்புகளை கொடுத்துள்ளதாக நம்பலாம்.

இவ்விருவரில் திரு.கி.உமாபதி அவர்கள், தான் வள்ளலாரின் அண்ணன் திரு.இரா.சபாபதிப்பிள்ளை அவர்களின் மகன் திரு.ச.வடிவேல்பிள்ளை அவர்கள் வழிவழியான பெயரன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு உயர்மட்டக் குழுவில் இருப்பவர். (வள்ளற்பெருமானின் மூத்த அண்ணனான திரு.இரா.சாபாபதிப்பிள்ளைக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளதாக தெரியவருகின்றது. மூத்த மகள் பெயர் தெரியவில்லை. அவரது இளைய மகள் பெயர் திருமதி.வடிவுடைமாணிக்கம் ஆவார். இவரைத்தான் பொன்னேரி சுந்தரம் பிள்ளை மணந்தார். எனவே இரா.சபாபதிப்பிள்ளைக்கு மகன் திரு.ச.வடிவேல்பிள்ளை, மருமகன் திரு.பொன்னேரி சுந்தரம் பிள்ளை ஆவார்கள். இராமலிங்க சுவாமிகள் பிள்ளைத் தமிழ் இயற்றியவர் இந்த சுந்தரம் பிள்ளையே.

திரு.கி.உமாபதி அவர்கள், கடலூரில் வள்ளலார் 200 விழா நடைபெற்றபோது இரண்டு இரவுகள் எங்கள் வீட்டில்தான் தங்கிச் சென்றார். அவரை காரணப்பட்டுக்கு அழைத்துச்சென்று ச.மு.க. அருள் நிலையத்தை தரிசனம் செய்யவைத்து அழைத்து வந்தேன். வள்ளற்பெருமானின் குடும்பத்தில் நிகழ்ந்த சில நிகழ்ச்சிகளை எல்லாம் எனக்கு எடுத்துரைத்தார். வள்ளலார் எழுதிய புத்தகத்தில் வெளிவராத பல ஓலை சுவடிகளை எனது வீட்டிலிருந்ததை காலஞ்சென்ற ஊரன் அடிகளார் அவர்கள் எடுத்துச் சென்றுவிட்டதாக கூறினார். தற்போதும் ஊரன் அடிகளாரின் வீட்டில்தான் அவைகள் எல்லாம் உள்ளதாக கூறி என்னை வியப்பில் ஆழ்த்தினார். அவை எல்லாம் எப்போது வெளிவருமோ தெரியவில்லை.

திரு.மெய்.அருள் நந்தி சிவம் அவர்கள் ஊழல் செய்வதற்காகவே வள்ளலார் சர்வதேச மையத்தின் இயக்குனர் பதவியை கேட்பதாக திரு.தமிழ்வேங்கை புகாரில் இருந்து தெரியவருகின்றது. இந்து சமய அறநிலைய அமைச்சருக்கு 30% கமிஷன் தரவேண்டும் என்று இப்போதே கணக்கு போடுகின்றார்கள்.

திரு.மெய்.அருள் நந்தி சிவமும், திரு.கி.உமாபதி அவர்களும் சன்மார்க்கிகள் அல்ல. வள்ளற்பெருமானின் குடும்ப வாரிசுகளும் அல்ல. அவ்வகையில் அவர்கள் செய்யப்போகும் ஊழலை நாம் நியாயப்படுத்த நியாயம் உண்டு. ஏனெனில் இவர்களை நீக்கிவிட்டு வேறு யார் இந்த இயக்குனர் பொறுப்பிற்கு வந்தாலும் இதே ஊழல் நடைபெற்றே ஆக வேண்டும் என்பது எழுதப்படாத விதி. ஆனால் இதில் சன்மார்க்கிகள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் இந்த ஊழலில் ஈடுபடுவது ஏற்கத்தக்கதல்ல.

திரு.தமிழ்வேங்கை நம்மைப்போல் கருணீகர் இனத்தார் என்கின்ற அடிப்படையிலும் சன்மார்க்க சொற்பொழிவாளர் என்ற முறையிலும் அவருக்கு பல வாரங்களாக சொற்பொழிவு ஆற்ற வாய்ப்பு வழங்கியுள்ளார் திரு.மெய்.அருள் நந்தி சிவம் அவர்கள். அதன் மூலம் ரூ.65 ஆயிரம் வரை சம்பாதித்துள்ளார் திரு.தமிழ்வேங்கை. மேலும் திரு.தமிழ்வேங்கை கருணீகர் இனத்தார் என்கின்ற இன கவர்ச்சியில் தனது ஊழல் திட்டத்தை திரு.தமிழ்வேங்கையிடம் பேசியுள்ளார் திரு.மெய்.அருள் நந்தி சிவம் அவர்கள். அதனை தனிப்பட்ட முறையில் அவரிடம் கண்டித்திருக்கலாம். அதன் பிறகு அவர் அழைப்பை ஏற்று சொற்பொழிவிற்கு போகாமல் இருந்திருக்கலாம். அதைவிடுத்து அவருக்கு நம்பிக்கை துரோகம் செய்வது போன்று, ரூ.10000 தன் பெயரில் ஊழல் செய்துவிட்டதை தாங்கிக்கொள்ள முடியாமல் எல்லோரும் அறியும்படி தனது முகநூலில் ”ஊழல் பெருச்சாளி” என்று எழுதியிருப்பது எவ்வகையில் நியாயம்? திரு.மெய்.அருள் நந்தி சிவம் அவர்கள் ஒரு சன்மார்க்கி அல்ல. எனவே அவர் ஊழல் செய்வது இயற்கை என அவரை நான் பொருட்படுத்த வில்லை. மேலும் அவர் ஊழல் செய்தால்தான் அவர் அந்தப்பதவியில் தொடர முடியும் (அது அரசியல்). ஆனால் சன்மார்க்கி போர்வையில் உள்ள திரு.தமிழ்வேங்கை அவர்கள் ரூ.65 ஆயிரம் வரை தனது சன்மார்க்க சொற்பொழிவிற்காக பணம் ஈட்டியது சன்மார்க்க மரபுப்படி தவறு. சன்மார்க்க சொற்பொழிவாளர்கள் அனைவரும் சன்மார்க்க சேவையாகத்தான் தங்களது சொற்பொழிவை ஆற்றவேண்டும்.

திரு.தமிழ்வேங்கை அவர்களின் ஊழல் புகார் அவரையும் உள்ளடக்கியது என்பதே எனது கருத்து. எனது தம்பி திரு.தி.ம.சதீஷ் கண்ணன் அவர்களும் பட்டுக்கோட்டை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றியதற்கு ரூ.5000/- பெற்றிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவ்வமயம், காரணப்பட்டு சமரச பஜனை ச.மு.கந்தசாமிப்பிள்ளை அவர்கள் அருளிய “பிரபந்தத்திரட்டு” நூலில் 18 நூலினை (மதிப்பு ரூ.7200) இலவசமாக முக்கிய சன்மார்க்கர்களுக்கு வழங்கும்படி முனைவர்.தி.ம.சதீஷ் கண்ணன் அவர்கள் பட்டுக்கோட்டை விழாவில் திரு.மெய்.அருள் நந்தி சிவம் அவர்களிடம் வழங்கிவிட்டு வந்தார். ரூ.5000 பெற்றதைப் பற்றி முனைவர்.தி.ம.சதீஷ் கண்ணன் அவர்களிடம் விசாரிக்கையில், சொற்பொழிவாளர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று அரசு விதி இருக்கின்றது. அதன்படி யாவரும் பெற்றிருக்கின்றார்கள் எனக் கூறினார். என்ன விதியோ? அப்படிப்பார்த்தால் யாரையும் நாம் குற்றம் சொல்ல முடியாது.

வள்ளலாரின் சர்வதேச மையம் வடலூரில் அமைத்தால், அது ஊழலுக்கே வழிவகுக்கும். ஊழல் இல்லாமல் எந்த அரசும் எந்தத் திட்டமும் செய்யாது என்பது விதி. வேறு யாரோ வந்து ஊழல் செய்வதை விட நானே செய்துவிட்டுப் போகின்றேன் என்ற நோக்கில் திரு.மெய்.அருள் நந்தி சிவம் இருப்பார் போலும். அது அவரது பார்வையில் சரியே. இந்த சர்வதேச மையம் அமைக்கையில் சன்மார்க்கிகள் ஏதேனும் பொறுப்பில் ஈடுபட நேர்ந்தால் பொருளுக்கு ஆசைபடாமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். முடிந்த அளவிற்கு சன்மார்க்கிகள் யாரும் பொறுப்பேற்க வேண்டாம். பொறுப்பேற்றால் அவர்கள் யாரும் சன்மார்க்க போலிகளாகவே கருதப்படுவர்.

வள்ளற்பெருமானிடம் ஒரு விண்ணப்பம்: அரசு தலையீடு இல்லாமல், சர்வதேச மையம் என்பதை சன்மார்க்கிகள் மட்டுமே உருவாக்க அருள் தர வேண்டும்.

நன்றி.

தி.ம.இராமலிங்கம்
9445545475
vallalarmail@gmail.com