Friday, October 6, 2023

சிங்கபுரி கந்தர் பதிகம் - ரோக நிவாரணம் (நோய் தீர்க்க) வேண்டி வள்ளலார் பாடிய பதிகம்

சிங்கபுரி கந்தர் பதிகம்

          - ரோக நிவாரணம் (நோய் தீர்க்க) வேண்டி வள்ளலார் பாடிய பதிகம்

சிங்கபுரி முருகன் (சுப்புராய சுவாமி) திருக்கோயில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் சிங்கபுரி என்னுமிடத்தில் அமைந்துள்ளது. தனது மூத்த அண்ணன் திரு.இரா.சபாபதிப்பிள்ளை அவர்களின் நோய் தீர்வதற்காக, அன்றைக்கு கருங்குழியில் வசித்த வள்ளற்பெருமான் இக்கோயிலுக்கு வந்து சிங்கபுரி முருகனை வேண்டி பதிகம் பாடியருளி தனது அண்ணனின் நோயை முருகன் அருளால் தீர்த்தார்.

வடலூருக்கு அண்மையில், கடலூர் செல்லும் வழியில் அமைந்த குறிஞ்சிப்பாடியின் ஒரு பகுதியாகிய விழப்பள்ளம் என்பதே சிங்கபுரி. இங்கு எழுந்தருளியுள்ள திருமுருகன் மீது பாடப்பட்டதே சிங்கபுரிக் கந்தர் திருப்பதிகம். இக்கோவிலைச் சுப்புராயர் கோயில் என்பர். சுப்புராயர் வீரசைவ மரபு. பழனி முருகன் பக்தர். பழனியில் சென்று தங்கியிருந்தபோது, திருமுருகன் அவர் கனவில் தோன்றி இங்குக் கோயில் எழுப்புமாறு சொல்லியருளினார். அப்படி ஏற்படுத்தப்பட்டதே இக்கோயில். சுப்புராயரின் தந்தை முத்தய்யர் இளம்வயதில் இறந்துபோய் புதைக்கப்பட்டு, சிலநாள் கழித்து இறைவனால் உயிரோடு எழுப்பித்தரப்பட்டார். அந்த முத்தய்யரின் சமாதியின் மீதே மூலத்தானம் அமைந்துள்ளது.

சுப்புராயர் வள்ளலார் வெளிப்பட வாழ்ந்தக்காலம். பல முறை இருவரும் சந்தித்துள்ளனர். வள்ளலார் ஒருமுறை வந்து இப்பதிகம் பாடியுள்ளார். “இஃது ரக்தாஷி வருடம் சித்திரை மாதம் 26-ஆம் தேதி, சுக்கிரவாரம், கார்த்திகை நட்சத்திரம் சகோதரர் சபாபதி பிள்ளையின் ரோக நிவாரண நிமித்தம் சி.இராமலிங்கபிள்ளை அவர்களால் இயற்றியது” என நோட்டுப் பிரதியில் குறிப்பு இருப்பதாக திருவருட்பா பதிப்பாசிரியர் திரு.ஆ.பாலகிருஷ்ணப்பிள்ளை குறிப்பிடுகின்றார். இதில் குறிப்பிட்டுள்ள நாள் ஆங்கிலக் கணக்குப்படி 06-05-1864 என்றும் அவர் குறித்துள்ளார்.

இது பற்றி வேறு ஒரு வரலாற்று செய்தியும் உண்டு. வடலூரிலிருது விருத்தாச்சலம் செல்லும் வழியில் வடலூருக்குப் பக்கம் அமைந்தது கெங்கை கொண்டான் குப்பம். இங்குத் தண்டபாணிசாமிக் கோயில், அதைச்சார்ந்து வீரசைவ மடம் இருக்கும். அங்கு விருப்பாக்க அய்யர் சும்பு அம்மையார் ஆகியவர்களுக்கு இறையருளால் தோன்றியவர் அப்பாவு அய்யர். இவருடைய 25 வயதில் குறிஞ்சிப்பாடி, விழப்பள்ளத்தில், வீரசைவ மடத்தைச் சார்ந்த சோதிடம் குழந்தை என்பவரின் மகள் விரூபாக்கம் அம்மாளை அப்பாவு அய்யருக்கு திருமணம் முடித்தனர். (அப்பாவு அய்யருக்கு மூத்த தமக்கையார் மகள் விரூப்பாக்கம் அம்மை ஆவார்). சில காலத்தில் மாமனார் காலமானபடியால், அப்பாவு அய்யரை விழப்பள்ளத்திலேயே தங்க வைத்தனர். அவ்வமயம் ஒரு நாள் அப்பாவு அய்யர் வள்ளற்பெருமானின் தமையனார் சபாபதிப்பிள்ளையின் மருமகன் பொன்னேரி சுந்தரம்பிள்ளையை வரவழைத்து மடத்தில் தங்கவைத்துத் தம் மைத்துனருக்கும் மற்றும் சிலருக்கும் பாடம் சொல்லச் செய்தார். இரவில் பிரசங்கம் நடந்தது. சபாபதிப்பிள்ளை மகன் வடிவேல்பிள்ளையும் தனது மாமாவான சுந்தரம் பிள்ளையுடன் வந்திருந்து அங்கேத் தங்கி பாடம் படித்தார். சபாபதிப்பிள்ளை தம் மருமகனையும் மகனையும் பார்க்க விழைந்து விழப்பள்ளம் வருவது வழக்கம். அப்படி ஒரு நாள் வந்தபொழுது மடத்துச் சாமிகள் அவரைக் கந்தபுராணம் பிரசங்கம் செய்ய வைத்தார். தொடர்ந்து உரையாற்றுகையில் இடையில் அவருக்குக் கடுஞ்சுரம் ஏற்பட்டது. இது தெரிந்த வள்ளற்பெருமான் கருங்குழியிலிருந்து சென்று தனது அண்ணன் விட்ட இடத்திலிருந்து தொடங்கிப் பிரசங்கம் செய்தார். அந்த நாட்களிலேயே கார்த்திகை நாளில் சிங்கபுரி கந்தன் கோயில் சென்று வழிபட்டு அண்ணார் உடல் நலம் பெற வேண்டி இப்பதிகம் பாடியருளினார்.

மடத்துச் சுவாமிகள் அப்பாவு அய்யர் தம் மைத்துனர் (இவர் பெயரும் அப்பாவு அய்யர்தான்) கல்வித் தேர்ச்சி பெற்ற பிறகு அவரை நிர்வாகம் செய்ய விட்டுத் தம் சொந்த ஊருக்கே (கெங்கை கொண்டான் குப்பம்) சென்றார். பல மாதங்கள் தவம் செய்தார். வள்ளற்பெருமான் விருத்தாசலம் செல்லும்போது இவரை நேரில் கண்டு உரையாடிச் செல்வார். அப்பாவு அய்யரின் வரலாறு மு.அப்பாதுரை அய்யரால் எழுதப்பட்டுள்ளது.அதில் அப்பாவு அய்யர் அருள் வாக்காக, வள்ளற்பெருமான் மீது 18 பாடல்கள் இயற்றியதைக் காணலாம். 

ஸ்ரீமத் வீரசைவ சிவயோக சுவாமிகள் என்று அறியப்படும் இவர் (அப்பாவு அய்யர்) 28-12-1885 ஆம் ஆண்டு திருவடிப்பேறு பெற்று, குறிஞ்சிப்பாடிக்கும் குள்ளஞ்சாவடிக்கும் இடையில் தம்பிப்பேட்டை பாளையம் பகுதியில் சோலை என்ற இடத்தில் சமாதியடைந்தார். 

பொன்னேரி - இன்றைய திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது. வள்ளலாரின் தாயார் சின்னம்மையார் பிறந்த சின்னகாவணம் என்னும் ஊரும் பொன்னேரிக்கு அருகில் உள்ளது. பொன்னேரி சுந்தரம் பிள்ளை என்பவர் சென்னையில் வள்ளலாரிடம் பாடம் கேட்க வந்தவர்களில் ஒருவராவார். அப்பழக்கத்தில் சபாபதிப்பிள்ளையின் இளைய மகள் வடிவுடைமாணிக்கத்தை மணந்தார். சிந்தாதிரிப்பேட்டையில் ஆசிரியராகப் பணியாறினார். புராணச் சொற்பொழிவாளர். இவரை வைத்து வள்ளலார் 2 பாடல்கள் பாடியுள்ளார். 1892 - 96 - ல் இருமுறை திருவருட்பாவைப் பதிப்பித்துள்ளார். வள்ளலார் மீது பிள்ளைத் தமிழும், ஞானசிங்காதன பீடத் திருவருட் செங்கோலாட்சியும் பாடியுள்ளார். (நன்றி- “நற்கருஞ்குழியில் வள்ளற்பெருமான்” நூல் - புலவர். வ.ஞானப்பிரகாசம்)        


   

              ஸ்ரீமத் வீரசைவ சிவயோக சுவாமிகள் சமாதி - தம்பிப்பேட்டை





சிங்கபுரி கந்தர் பதிகம்
    காப்பு
    நேரிசை வெண்பா
    திருச்சிற்றம்பலம்
  • 1. பொன்மகள்வாழ் சிங்கபுரி போதன்அறு மாமுகன்மேல்
    நன்மைமிகு செந்தமிழ்ப்பா நாம்உரைக்கச் - சின்மயத்தின்
    மெய்வடிவாம் நங்குருதாள் வேழமுகன் தன்னிருதாள்
    பொய்யகலப் போற்றுவம்இப் போது.
  • அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
  • 2. சீராரு மறையொழுக்கந் தவிராது நான்மரபு சிறக்க வாழும்
    ஏராரு நிதிபதிஇந் திரன்புரமும் மிகநாணும் எழிலின் மிக்க
    வாராருங் கொங்கையர்கள் மணவாளர் உடன்கூடி வாழ்த்த நாளும்
    தேராரு நெடுவீதிச் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
  • 3. உம்பர்துயர் கயிலைஅரற் கோதிடவே அப்பொழுதே உவந்து நாதன்
    தம்பொருவில் முகமாறு கொண்டுநுதல் ஈன்றபொறி சரவ ணத்தில்
    நம்புமவர் உயவிடுத்து வந்தருளும் நம்குகனே நலிவு தீர்ப்பாய்
    திங்கள்தவழ் மதில்சூழும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
  • 4. பொல்லாத சூர்க்கிளையைத் தடிந்தமரர் படுந்துயரப் புன்மை நீக்கும்
    வல்லானே எனதுபிணி நீநினைந்தால் ஒருகணத்தில் மாறி டாதோ
    கல்லாதேன் எனினும்எனை இகழாதே நினதடியார் கழகங் கூட்டாய்
    செல்லாதார் வலிஅடக்கும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
  • 5. பண்டுறுசங் கப்புலவர் அருஞ்சிறையைத் தவிர்த்தருளும் பகவ னேஎன்
    புண்தருஇந் நோய்தணிக்கப் புரையிலியோய் யான்செய்யும் புன்மை தானோ
    தண்டைஎழில் கிண்கிணிசேர் சரணமலர்க் கனுதினமும் தமியேன் அன்பாய்த்
    தெண்டனிடச் செய்தருள்வாய் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
  • 6. தாவாத வசியர்குலப் பெண்ணினுக்கோர் கரமளித்த சதுரன் அன்றே
    மூவாத மறைபுகலும் மொழிகேட்டுன் முண்டகத்தாள் முறையில் தாழ்ந்து
    தேவாதி தேவன்எனப் பலராலும் துதிபுரிந்து சிறப்பின் மிக்க
    தீவாய்இப் பிணிதொலைப்பாய் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
  • 7. வானவர்கோன் மேனாளில் தரமறியா திகழ்ந்துவிட விரைவில் சென்று
    மானமதில் வீற்றிருந்தே அவன்புரிந்த கொடுமைதனை மாற்றும் எங்கள்
    தானவர்தம் குலம்அடர்த்த சண்முகனே இப்பிணியைத் தணிப்பாய் வாசத்
    தேனவிழும் பொழில்சூழும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
  • 8. மட்டாரும் பொழில்சேரும் பரங்கிரிசெந் தூர்பழனி மருவு சாமி
    நட்டாரும் பணிபுரியும் ஆறுதலை மலைமுதலாய் நணுகி எங்கள்
    ஒட்டாதார் வலிஅடக்கி அன்பர்துதி ஏற்றருளும் ஒருவ காவாய்
    தெட்டாதார்க் கருள்புரியும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
  • 9. முன்செய்த மாதவத்தால் அருணகிரி நாதர்முன்னே முறையிட் டேத்தும்
    புன்செயல்தீர் திருப்புகழை ஏற்றருளும் மெய்ஞ்ஞான புனிதன் என்றே
    என்செயலில் இரவுபகல் ஒழியாமல் போற்றியிட இரங்கா தென்னே
    தென்திசைசேர்ந் தருள்புரியும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
  • 10. விண்ணவர்கோன் அருந்துயர நீங்கிடவும் மாதுதவ விளைவு நல்கும்
    கண்ணகன்ற பேரருளின் கருணையினால் குஞ்சரியைக் காத லோடு
    மண்ணுலகோர் முதல்உயிர்கள் மகிழ்ந்திடவும் மணம்புரிந்த வள்ள லேஎன்
    திண்ணியதீ வினைஒழிப்பாய் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.
  • 11. மாசகன்ற சிவமுனிவர் அருளாலே மானிடமாய் வந்த மாதின்
    ஆசில்தவப் பேறளிக்க வள்ளிமலை தனைச்சார்ந்தே அங்குக் கூடி
    நேசமிகு மணம்புரிந்த நின்மலனே சிறியேனை நீயே காப்பாய்
    தேசுலவு பொழில்சூழும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே.

Thanks to -  https://www.thiruarutpa.org/thirumurai/v/T176/tm/singkapurik_kanthar_pathikam

T.M.RAMALINGAM

9445545475

vallalarmail@gmail.com







No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.