வள்ளலார் விழாவில் ஊழலா?
சன்மார்க்க அன்பர்கள் அனைவருக்கும் எமது அன்பு கலந்த வணக்கங்கங்கள்.
03-10-2023 அன்று இரவு 12.58 மணியளவில் திரு.தமிழ் வேங்கை அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் கீழ் காணும் ஊழல் புகாரை பதிவேற்றியதைப் படித்து வேதனை அடைந்தேன். வள்ளலார் விழாவில் ஊழலா? என மனம் பதைத்தது. திரு.தமிழ் வேங்கையின் புகர்களை முழுமையாக படிக்கவும். இப்புகாருக்குக் கீழே சில கருத்துகளை பதிந்துள்ளேன். நன்றி.
=====================================
வள்ளலார்-200 முப்பெரும் விழாவில் நடைபெற்ற ஊழல்கள்.
===============================
வள்ளல் பெருமானாரின் 200-வது வருவிக்க உற்ற திருநாளை முன்னிட்டு 52 வாரங்களுக்கு இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் முப்பெரும் விழா என்ற பெயரில் இதுவரை 51 ஊர்களில் விழா நடைபெற்றுள்ளது.
51 வது விழா கடந்த
24/09/2023 அன்று சென்னை, தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவில் கா.தமிழ் வேங்கை ஆகிய அடியேன் "வள்ளலார் வரலாற்றில் புனைவுகள்" என்ற தலைப்பில் நிறைவுப் பேச்சாளராகப் பேசினேன்.
இதுவரை நடைபெற்ற முப்பெரும் விழா நிகழ்வில் கொடைக்கானல், அருப்புக்கோட்டை, பட்டுக்கோட்டை, திருப்பத்தூர், கும்பகோணம், திருவள்ளூர், செஞ்சி, மற்றும் தண்டையார்பேட்டை என 8 நிகழ்வுகளில் பங்கேற்று வெவ்வேறு தலைப்புகளில் பேசியுள்ளேன். இந்தத் தலைப்புகள் அனைத்தும் என்னால் தேர்ந்தெடுக்கப்பட்டவை ஆகும்.
செஞ்சியில் நடைபெற்ற நிகழ்வில் சன்மானமாக ரூபாய் 5000/- இதர நிகழ்வுகளில் ரூபாய் 10,000/- என தண்டையார்பேட்டை நிகழ்வு தவிர்த்து இதுவரை 65 ஆயிரம் ரூபாய் சன்மானமாகப் பெற்றுள்ளேன்.
51 வது நிகழ்வான தண்டையார்பேட்டையில் பேசிய நிகழ்ச்சிக்கான சன்மானம் ரூபாய் 10,000/- ஒருவாரம் ஆகியும் எனக்கு வரவில்லை. இது தொடர்பாக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட உயர்நிலைக் குழு உறுப்பினரான மெய். அருள் நந்தி சிவம் அவர்களிடம் கேட்டதற்கு, "இந்த முறை லேட்டாகத்தான் வந்து சேரும்" என்றார். அதே நேரத்தில் நிகழ்வில் பங்கேற்ற மற்றவர்களுக்கு சன்மானம் சென்றுள்ளதும் எமக்குத் தெரிய வந்தது. இது தொடர்பாக மற்றொரு உயர்நிலைக் குழு உறுப்பினரான வள்ளலாரின் பேரன் கி.உமாபதி அவர்களிடம் கேட்டபோது, "இந்த முறை உங்களுக்கு பணம் கிடையாது, செங்கல்பட்டு கூட்டத்தில் பங்கேற்றதற்காக டாக்டர் ஜெய.ராஜமூர்த்தி அவர்களுக்கு ரூபாய் 10,000/- நிலுவைத் தொகை கொடுக்க வேண்டியது, சில காரணங்களால் கொடுக்க முடியாமல் போய்விட்டது. அதனால் உங்களுக்கு கொடுக்க வேண்டிய பத்தாயிரத்தையும் சேர்த்து ரூபாய் இருபதாயிரமாக டாக்டர் ஜெய.இராஜமூர்த்தியிடம் கொடுத்து விட்டோம்" என்றார்.
சன்மார்க்க சங்கத்தின் சென்னை மாவட்டத் தலைவர் செந்நெறி பா.தண்டபாணி ஐயா அவர்களிடம் இது தொடர்பாக விசாரித்த போது, "உங்கள் பெயரில் ரூபாய் 10,000/- ரசீது எழுதப்பட்டிருந்தது. உங்களுக்கு வந்திருக்குமே" என்றார். கி.உமாபதி ஐயா சொன்ன விளக்கத்தை பா.தண்டபாணி ஐயாவிடம் கூறினேன். "இல்லையே ராஜமூர்த்தி அவர்களுக்கு தனியாக ரூபாய் 20,000/- ரசீது எழுதப்பட்டிருந்ததே" என்றார்.
இதன் மூலம் என்ன தெரிய வருகிறது என்றால்? தமிழ்வேங்கையாகிய என் பெயரைப் பயன்படுத்தி ரூபாய் 10,000/- ஊழல் செய்துள்ளார் மெய்.அருள் நந்தி சிவம்.
இது தொடர்பாக அருள் நந்தி சிவத்திடம் நேற்று (02/10/2023) இரவு 9:00 மணிக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியபோது "உங்களுக்குப் பத்தாயிரம் இல்லை ஐந்தாயிரம் நாளைக்கு பேசிவிட்டு சொல்கிறேன்" என்றார்.
ஒவ்வொறு நிகழ்விற்காகவும் தனித்தனியாக ஒதுக்கப்பட்ட ரூபாய் 3,80,000/- த்தில், கடந்த 51 வாரங்களாக பயணச் செலவு, விடுதி வாடகை, பேச்சாளர்களுக்கான சன்மானம், வீடியோ பதிவாளர்களுக்கு வழங்கப்பட்ட பணம், கலைக் குழுவினருக்கும் இசைக் கலைஞர்களுக்கும் வழங்கப்பட்ட தொகை, என பல வழிகளிலும் பல இலட்சம் ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது. இந்த ஊழல் குறித்து வெற்று புலம்பலாகவே பலராலும் பேசப்பட்டதே தவிர அவ்வளவாக பொதுவெளியில் வெளிப்படுத்தவில்லை.
ஈரோடு கதிர்வேலு ஐயா போன்ற மூத்த சன்மார்க்கிகளிடமும் இவர்கள் கைவரிசையைக் காட்ட தவறவில்லை.
உயர்நிலைக் குழுவில் 14 பேர் இடம் பெற்றிருந்தாலும் கி.உமாபதி, மெய்.அருள் நந்தி சிவம், ஏ.பி.ஜே அருள் ஆகிய மூவர் மட்டுமே ஒரு சில நிகழ்வுகள் தவிர பெரும்பாலான நிகழ்வுகளில் பங்கேற்றவர்கள். இதில் ஏ.பி.ஜே அருள், அவரது சொற்பொழிவு முடிந்ததும் கிளம்பி விடுவார். அவரது சன்மானத்தில் மட்டும் கை வைக்கவில்லை.
51 நிகழ்வுகளிலும் வள்ளலார் பேரன் கி.உமாபதி கலந்து கொண்டுள்ளார். நிகழ்ச்சியை நெறிப்படுத்துவது மற்றும் பணப்பட்டுவாடா என மெய்.அருள்நந்திசிவம் பொறுப்பேற்று செயல்பட்டுள்ளார்.
சைவ நெறியாளரான அருள்நந்திசிவம் அவர்கள், வள்ளலாரின் கொள்கையில் துளியும் ஈடுபாடு கொண்டவர் கிடையாது. வள்ளலாரின் கொள்கை சாத்தியமில்லாத ஒன்று என என்னிடம் பலமுறை வாதம் செய்துள்ளவர். சன்மார்க்க அன்பர்களை பலமுறை இழிவுபடுத்தி உள்ளதை நேரில் கண்டு கண்டித்துள்ளேன். "வெளிநாட்டுக்குச் சென்று அங்குள்ள சன்மார்க்க சங்கத்தவர்களையெல்லாம் சந்தித்த நிழற்படங்களை காட்டினால்தான் வெளிநாடுகளிலும் எங்களுக்கு செல்வாக்கு இருப்பதாக நினைத்து அமைச்சர் சேகர்பாபு எங்களுக்கு சர்வதேசமையத்தில் இயக்குனர் பொறுப்பு வழங்குவார்" என்று அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற சன்மார்க்க மாநாட்டில் ஜீவ.சீனுவாசன் அவர்களின் முயற்சியால் கடைசி நேரத்தில் வந்து இணைந்து கொண்டவர் தான் இந்த மெய்.அருள் நந்தி சிவம் அவர்களும் கி.உமாபதி அவர்களும்.
தற்போது இந்த ஊழல் பெருச்சாளியான மெய். அருள்நந்திசிவம் அவர்கள் வடலூரில் அமையப்போகும் சர்வதேச மையத்திற்கு இயக்குனர் பொறுப்புக்கு வர திட்டமிட்டு அமைச்சர் சேகர்பாபு அவர்களிடம் கி.உமாபதி மூலமாக முயற்சித்து வருகிறார்.
"என்னைப் போன்றவர்கள் இந்தப் பொருப்பில் இருந்தால் தான் அமைச்சருக்கு 30 விழுக்காடு கமிஷன் கொடுக்க முடியும் என்று வெளிப்படையாகவே கூறி வருபவர் தான் இந்த ஊழல் பேர்வழி.
நீங்க (தமிழ்வேங்கை), நான் (மெய்.அருள்நந்திசிவம்) கி.உமாபதி மூன்று கணக்கண்களும் (கருணீகர் சாதியைச் சார்ந்த) சர்வதேச மையத்தில் பொறுப்பு பெற்று விட்டால் முதல் வேலை சன்மார்க்க சங்கத்தவனுங்களை ஒழித்துக்கட்டுவது, உள்ளூர்க்காரர்களின் ஆதிக்கத்தை அடக்குவது என்று என்னிடம் அருள்நந்தி சிவம் ஆசை வார்த்தை கூறிய போதெல்லாம் எனக்கு எந்த பொறுப்பும் வேண்டாம் என்று கூறியுள்ளேன்.
மூவாசைகளையும் துறந்த வள்ளல் பெருமானார் எதற்காக மக்கள் கொடுத்த 80 காணி நிலத்தைப் பெற வேண்டும்? எதற்காக தருமச் சாலையையும் சத்திய ஞான சபையையும் தென்கோடியில் அமைக்க வேண்டும்? "எள்ளு போட்டால் எள்ளு கீழே விழாது அப்படிப்பட்ட கும்பல் சேருவதற்கு ஒரு காலம் வரப்போகிறது" என்று அறிவித்தவர் வள்ளலார்.
அவரது நோக்கத்தை அறிந்துகொள்ளாத தமிழக அரசு, வடலூர் பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்க உள்ளதை அறிந்து கடந்த 13/09/2022 அன்று அதாவது ஒரு ஆண்டுக்கு முன்பே தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக புகார் தெரிவித்தேன். பிறகு 01/09/2023 அன்று தொடர்புடைய உயர் அதிகாரிகளுக்கும் வடலூர் பெருவெள்ளியில் சர்வதேச மையம் கூடாது என்று பதிவு அஞ்சல் மூலமாக மனு அளித்துள்ளேன்.
வள்ளலாரின் நோக்கத்திற்கு மாறாகச் செயல்படும் தமிழக அரசின் போக்கை சுட்டிக்காட்டவோ அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லவோ கொஞ்சமும் முயற்சிக்கவில்லை.
எப்படியாவது அமையப்போகும் சர்வதேச மையத்தில் உள்ளே சென்று ஆதிக்கம் செலுத்தலாம் என்று கி.உமாபதியை துணைக்கு வைத்துக்கொண்டு மெய்.அருள்நந்திசிவம் அவர்கள் செயல்பட்டு வருகிறார்.
அருள்நந்திசிவம் செய்யும் அனைத்து நூதன ஊழல்களையும் நன்கு அறிந்தவர்தான் கி.உமாபதி. "யார் பணத்தில் கை வைத்தாலும் வை. தமிழ்வேங்கை பணத்தில் மட்டும் கை வைக்காதே" என்று அருள்நந்திசிவத்திடம் சொல்லியுள்ளேன் என்று என்னிடம் உமாபதியே ஒருசில முறை சொல்லியுள்ளார்.
இவர்களின் ஊழல் இதுவரை ஆதாரப்பூர்வமாக எமக்குத் தெரியவில்லை. இப்போது என் பெயரை பயன்படுத்தியே ஊழல் நடைபெற்றிருப்பதால் இதை அம்பலப்படுத்தாமல் என்னால் இருக்க முடியவில்லை.
"சர்வதேச மையத்தில் நவீன கட்டமைப்புடன் முதியோர் இல்லம் அமைக்கப்பட உள்ளார்கள். அதற்கான பொறுப்பை தன்னிடம் வழங்கினால் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பல தொழில் அதிபர்களிடம் நன்கொடை பெற்று எப்படியோ என் காலத்தை ஓட்டி விடுவேன் என்று ஏ.பி.ஜே அருள் சொல்கிறான். அவன் விஷயத்தில் நான் தலையிடாவிட்டால் எனது இயக்குனர் பொறுப்புக்கு அவனும் ஆதரவு தெரிவிப்பான்" என்று மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளார் இந்த ஊழல் நாயகன்.
51 வார நிகழ்வுகளிலும் வடலூர் தலைமைச் சங்கத்தின் தலைவர் மருத்துவர் அருள்நாகலிங்கம் மற்றும் செயலாளர் மருத்துவர் வெற்றிவேல் உள்ளிட்ட நிர்வாகிகளையும் அவர்கள் வழங்கிய கொடி, புத்தகம் மற்றும் பரிசுப் பொருள்களை பெற்றுக்கொண்டு நிறைவு விழாவில் அவர்களைப் புறக்கனித்திருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்.
சன்மார்க்கக் கொள்கையைக் குழி தோண்டிப் புதைக்கும் இது போன்ற நூதன திருடர்களை சர்வதேச மையத்திற்கு பொறுப்பாளராக நியமித்தால் சன்மார்க்க அன்பர்கள் கைகட்டி, வாய் பொத்திக்கொண்டு இருப்பார்கள் என்று எவரும் தப்புக் கணக்கு போட வேண்டாம்.
தயவுடன்
கா.தமிழ்வேங்கை,
நிர்வாக அறங்காவலர்,
திருஅருட்பா ஆ.பாலகிருஷ்ண பிள்ளை நினைவு அறக்கட்டளை,
விழுப்புரம்.
9486176734.
(ஊழல் புகார் முற்றிற்று)
ஊழல் பற்றின எமது சில கருத்துகள்:
தமிழ்நாட்டில் எந்த கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், அவ்வாட்சியில் எந்தவிதமான திட்டங்களை நிறைவேற்றினாலும் ஊழல் இல்லாது சுத்தமான நிறைவேற்றலாக எந்தத் திட்டமும் இருப்பதில்லை. அரசியலில் ஊழல் என்பது வழக்கமான ஒன்றாகவும், பெரும்பான்மையான மக்களும் தங்களின் அன்றாட பொருளாதார நடைமுறைகளில் தங்களால் இயன்ற ஊழல்களை செய்துக்கொண்டும், மற்றவர்களை ஏமாற்றிக்கொண்டும் நேர்மையற்றவர்களாக இருப்பதாலும், இங்கே ஊழல் குற்றசாட்டுகள் புறம் தள்ளப்படுகின்றன. வாய்ப்பு கிடைத்தவர்கள் ஊழல் செய்து சம்பாதிக்கின்றனர். வாய்ப்பு கிடைக்காதவர்கள் வாய்ப்புக்காக அலைகின்றார்கள்.... அவ்வளவுதான்.
சரி... நாம் விடயத்திற்கு வருவோம். வள்ளலார் 200 முப்பெரும் விழா என்பதனை தமிழக அரசு கடந்த 51 வாரங்களாக அதாவது 1 வருடம் முழுதும் (வள்ளற்பெருமான் இவ்வுலகில் புற உடலுடன் வாழ்ந்ததும் 51 வருடங்கள்தான்) வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. அதற்காக தமிழக அரசிற்கு முதற்கண் நன்றியினை இதன்மூலம் தெரிவித்துக் கொள்கின்றேன். அரசு நடத்தும் வள்ளலார் விழாவில் ஊழல் நடைபெற்றுள்ளதாக நாம் மேலே உள்ள புகாரில் படித்தோம். அரசுத் திட்டம் என்றாலே அங்கே ஊழல் இல்லாமல் இராது என்பதை முன்னமே கண்டோம். ஆனால் இந்த ஊழலை நாம் பலமாக எதிர்க்கவே வேண்டியுள்ளது. ஏனெனில்,
இங்கே ஊழலை செய்தது சன்மார்க்கத்தைப் பின்பற்றுகின்றோம் என்று கூறுபவர்கள்தான், என்றால் இவர்களுக்கும் சாதாரான மனிதர்களுக்கும் என்னதான் விக்தியாசம் உள்ளது?
பண்ணாத தீமைகள் பண்ணுகின் றீரே
பகராத வன்மொழி பகருகின் றீரே
நண்ணாத தீயினம் நண்ணுகின் றீரே
நடவாத நடத்தைகள் நடக்கவந் தீரே
கண்ணாகக் காக்கின்ற கருத்தனை நினைந்தே
கண்ணார நீர்விட்டுக் கருதறி யீரே
எண்ணாத தெண்ணவும் நேருமோர் காலம்
எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே!
என்று வள்ளற்பெருமான் இவ்வுலகில் வாழும் மக்களின் நடத்தைகளை எண்ணி ”பைத்தியக்காரர்களே” என்று பாடுகின்றார். இந்த பாடலுக்கு எதிர்மறையாக வாழ்கின்றோம் என்று தங்களை வகைபடுத்திக்கொண்ட “சன்மார்க்க மக்களில்” யாரெல்லாம் கடந்த 51 வாரங்களில், வள்ளலார் 200 விழாவில் அரசின் பணத்தை, தான் பேசிய சன்மார்க்க சொற்பொழிவிற்காக வாங்கினார்களோ அவர்கள் சன்மார்க்கிகள் என்றோ அல்லது வள்ளற்பெருமானை பின்பற்றுபவன் என்றோ சொல்லத் தகுந்தவர்கள் அல்ல.
இதில் விதிவிலக்காக, திருவருட்பா இசைக் கச்சேரி மற்றும் திருவருட்பா இசை நடனம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு பணம் பெறுவது தவறில்லை.
சொற்பொழிவிற்காக பணம் பெற்றவர்களில் மருத்துவர் திரு.ஜெய.இராஜமூர்த்தி அவர்களின் பெயரையும் திரு.தமிழ்வேங்கை அவர்கள் புகாரில் தெரிவித்துள்ளதை காணும்போது, சன்மார்க்கத்தை இவர்கள் எங்கே எடுத்துச் செல்கின்றனர்? என்கின்ற கேள்வி எழுகின்றது. அதுவும் திரு.ஜெய.இராஜமூர்த்தி அவர்கள் ஒரு சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ரூ.20000 வாங்கியதும் தெரிய வருகின்றது. சன்மார்க்க விழாவில் சேவை நோக்குடனும், பொது மக்களுக்கு வள்ளாரியத்தை கொண்டு சென்று சேர்க்கும் பொறுப்பில் இருக்கும் சொற்பொழிவாளர்கள், வள்ளலாரியத்தை சேவை நோக்குடன்பாராது, பணம் பண்ணும் தொழிலாக பாவிப்பது வருந்தத்தக்கது.
மேலும் இந்த புகாரின் அடைப்படையில், திரு.தமிழ் வேங்கை, திரு.பா.தண்டபாணி, திரு.கதிர்வேலு, திரு.ஏ.பி.ஜே.அருள் ஆகியோர்கள் சொற்பொழிவிற்காக பணம் பெற்றதாக அறிய முடிகின்றது. வள்ளலாரின் சன்மார்க்கத்தை குழி தோண்டி புதைப்பதாக கூறும் திரு.தமிழ்வேங்கை, தானும் அத்திருடர்களுடன் சேர்ந்தே குழித்தோண்டி புதைத்தோம் என்பதை அறிந்திருக்கவில்லை என்பது அதிசயம். “யார் பணத்தில் கை வைத்தாலும் வை. தமிழ்வேங்கை பணத்தில் பணத்தில் மட்டும் கை வைக்காதே” என திரு.உமாபதி அவர்கள் கூறியும் திரு.அருள்நந்திசிவம் அதனைக் கேளாது என் பணத்தில் கைவைத்துவிட்டார்! என்ன தைரியம் அவருக்கு!. ... என பொங்கியதால்தான், திரு.தமிழ்வேங்கை இப்படிப்பட்ட புகாரை அவர்களுக்கு எதிராக வெளிபடுத்தியுள்ளார் என தெள்ளத்தெளிவாக தெரிகின்றது.
இவ்வாறு இந்தப் புகார், இனி செயல்பாட்டுக்கு வரப்போகும் வள்ளலார் சர்வதேச மையத்தை நோக்கிச் செல்கின்றது. சர்வதேச மையத்தில் அமைய இருக்கும் முதியோர் இல்லம் தனது கட்டுப்பாட்டில் வந்துவிட்டால், நான் பிழைத்துக்கொள்வேன் என்கின்ற நோக்கில் திரு.ஏ.பி.ஜே.அருள் அவர்களின் நோக்கமும் ஊழலாகவே இருப்பதைக் காண்கின்றோம்.
கி.உமாபதி மற்றும் மெய்.அருள் நந்தி சிவம் ஆகிய இருவரும் தமிழக அரசு அமைத்த உயர்மட்டக் குழுவினர்களில் இருவர் ஆவர். வள்ளலார் 200 விழாவில் இவர்களின் பங்களிப்பே முக்கியமாக இருந்துவந்துள்ளது. இவ்விருவரும் சன்மார்க்கத்தில் தொடர்புடையவர்கள் அல்லர். தீவிர சைவ சித்தாந்திகள் எனலாம். அப்படி இருக்க இவர்கள் எப்படி வள்ளலார் 200 விழாவிற்கு தலைமை ஏற்கின்றார்கள் என்றால்?, இருவரும் வள்ளலார் பிறந்த கருணீகர் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்கின்ற அடிப்படையிலும், வள்ளலார் கருணீகர் என்பதால் கருணீகர் குலத்தார்கள் தலைமையில் வள்ளலார் விழா நடக்கட்டும் என்று, அரசு இவர்களை நம்பி இந்த விழா பொறுப்புகளை கொடுத்துள்ளதாக நம்பலாம்.
இவ்விருவரில் திரு.கி.உமாபதி அவர்கள், தான் வள்ளலாரின் அண்ணன் திரு.இரா.சபாபதிப்பிள்ளை அவர்களின் மகன் திரு.ச.வடிவேல்பிள்ளை அவர்கள் வழிவழியான பெயரன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு உயர்மட்டக் குழுவில் இருப்பவர். (வள்ளற்பெருமானின் மூத்த அண்ணனான திரு.இரா.சாபாபதிப்பிள்ளைக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளதாக தெரியவருகின்றது. மூத்த மகள் பெயர் தெரியவில்லை. அவரது இளைய மகள் பெயர் திருமதி.வடிவுடைமாணிக்கம் ஆவார். இவரைத்தான் பொன்னேரி சுந்தரம் பிள்ளை மணந்தார். எனவே இரா.சபாபதிப்பிள்ளைக்கு மகன் திரு.ச.வடிவேல்பிள்ளை, மருமகன் திரு.பொன்னேரி சுந்தரம் பிள்ளை ஆவார்கள். இராமலிங்க சுவாமிகள் பிள்ளைத் தமிழ் இயற்றியவர் இந்த சுந்தரம் பிள்ளையே.
திரு.கி.உமாபதி அவர்கள், கடலூரில் வள்ளலார் 200 விழா நடைபெற்றபோது இரண்டு இரவுகள் எங்கள் வீட்டில்தான் தங்கிச் சென்றார். அவரை காரணப்பட்டுக்கு அழைத்துச்சென்று ச.மு.க. அருள் நிலையத்தை தரிசனம் செய்யவைத்து அழைத்து வந்தேன். வள்ளற்பெருமானின் குடும்பத்தில் நிகழ்ந்த சில நிகழ்ச்சிகளை எல்லாம் எனக்கு எடுத்துரைத்தார். வள்ளலார் எழுதிய புத்தகத்தில் வெளிவராத பல ஓலை சுவடிகளை எனது வீட்டிலிருந்ததை காலஞ்சென்ற ஊரன் அடிகளார் அவர்கள் எடுத்துச் சென்றுவிட்டதாக கூறினார். தற்போதும் ஊரன் அடிகளாரின் வீட்டில்தான் அவைகள் எல்லாம் உள்ளதாக கூறி என்னை வியப்பில் ஆழ்த்தினார். அவை எல்லாம் எப்போது வெளிவருமோ தெரியவில்லை.
திரு.மெய்.அருள் நந்தி சிவம் அவர்கள் ஊழல் செய்வதற்காகவே வள்ளலார் சர்வதேச மையத்தின் இயக்குனர் பதவியை கேட்பதாக திரு.தமிழ்வேங்கை புகாரில் இருந்து தெரியவருகின்றது. இந்து சமய அறநிலைய அமைச்சருக்கு 30% கமிஷன் தரவேண்டும் என்று இப்போதே கணக்கு போடுகின்றார்கள்.
திரு.மெய்.அருள் நந்தி சிவமும், திரு.கி.உமாபதி அவர்களும் சன்மார்க்கிகள் அல்ல. வள்ளற்பெருமானின் குடும்ப வாரிசுகளும் அல்ல. அவ்வகையில் அவர்கள் செய்யப்போகும் ஊழலை நாம் நியாயப்படுத்த நியாயம் உண்டு. ஏனெனில் இவர்களை நீக்கிவிட்டு வேறு யார் இந்த இயக்குனர் பொறுப்பிற்கு வந்தாலும் இதே ஊழல் நடைபெற்றே ஆக வேண்டும் என்பது எழுதப்படாத விதி. ஆனால் இதில் சன்மார்க்கிகள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் இந்த ஊழலில் ஈடுபடுவது ஏற்கத்தக்கதல்ல.
திரு.தமிழ்வேங்கை நம்மைப்போல் கருணீகர் இனத்தார் என்கின்ற அடிப்படையிலும் சன்மார்க்க சொற்பொழிவாளர் என்ற முறையிலும் அவருக்கு பல வாரங்களாக சொற்பொழிவு ஆற்ற வாய்ப்பு வழங்கியுள்ளார் திரு.மெய்.அருள் நந்தி சிவம் அவர்கள். அதன் மூலம் ரூ.65 ஆயிரம் வரை சம்பாதித்துள்ளார் திரு.தமிழ்வேங்கை. மேலும் திரு.தமிழ்வேங்கை கருணீகர் இனத்தார் என்கின்ற இன கவர்ச்சியில் தனது ஊழல் திட்டத்தை திரு.தமிழ்வேங்கையிடம் பேசியுள்ளார் திரு.மெய்.அருள் நந்தி சிவம் அவர்கள். அதனை தனிப்பட்ட முறையில் அவரிடம் கண்டித்திருக்கலாம். அதன் பிறகு அவர் அழைப்பை ஏற்று சொற்பொழிவிற்கு போகாமல் இருந்திருக்கலாம். அதைவிடுத்து அவருக்கு நம்பிக்கை துரோகம் செய்வது போன்று, ரூ.10000 தன் பெயரில் ஊழல் செய்துவிட்டதை தாங்கிக்கொள்ள முடியாமல் எல்லோரும் அறியும்படி தனது முகநூலில் ”ஊழல் பெருச்சாளி” என்று எழுதியிருப்பது எவ்வகையில் நியாயம்? திரு.மெய்.அருள் நந்தி சிவம் அவர்கள் ஒரு சன்மார்க்கி அல்ல. எனவே அவர் ஊழல் செய்வது இயற்கை என அவரை நான் பொருட்படுத்த வில்லை. மேலும் அவர் ஊழல் செய்தால்தான் அவர் அந்தப்பதவியில் தொடர முடியும் (அது அரசியல்). ஆனால் சன்மார்க்கி போர்வையில் உள்ள திரு.தமிழ்வேங்கை அவர்கள் ரூ.65 ஆயிரம் வரை தனது சன்மார்க்க சொற்பொழிவிற்காக பணம் ஈட்டியது சன்மார்க்க மரபுப்படி தவறு. சன்மார்க்க சொற்பொழிவாளர்கள் அனைவரும் சன்மார்க்க சேவையாகத்தான் தங்களது சொற்பொழிவை ஆற்றவேண்டும்.
திரு.தமிழ்வேங்கை அவர்களின் ஊழல் புகார் அவரையும் உள்ளடக்கியது என்பதே எனது கருத்து. எனது தம்பி திரு.தி.ம.சதீஷ் கண்ணன் அவர்களும் பட்டுக்கோட்டை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றியதற்கு ரூ.5000/- பெற்றிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவ்வமயம், காரணப்பட்டு சமரச பஜனை ச.மு.கந்தசாமிப்பிள்ளை அவர்கள் அருளிய “பிரபந்தத்திரட்டு” நூலில் 18 நூலினை (மதிப்பு ரூ.7200) இலவசமாக முக்கிய சன்மார்க்கர்களுக்கு வழங்கும்படி முனைவர்.தி.ம.சதீஷ் கண்ணன் அவர்கள் பட்டுக்கோட்டை விழாவில் திரு.மெய்.அருள் நந்தி சிவம் அவர்களிடம் வழங்கிவிட்டு வந்தார். ரூ.5000 பெற்றதைப் பற்றி முனைவர்.தி.ம.சதீஷ் கண்ணன் அவர்களிடம் விசாரிக்கையில், சொற்பொழிவாளர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று அரசு விதி இருக்கின்றது. அதன்படி யாவரும் பெற்றிருக்கின்றார்கள் எனக் கூறினார். என்ன விதியோ? அப்படிப்பார்த்தால் யாரையும் நாம் குற்றம் சொல்ல முடியாது.
வள்ளலாரின் சர்வதேச மையம் வடலூரில் அமைத்தால், அது ஊழலுக்கே வழிவகுக்கும். ஊழல் இல்லாமல் எந்த அரசும் எந்தத் திட்டமும் செய்யாது என்பது விதி. வேறு யாரோ வந்து ஊழல் செய்வதை விட நானே செய்துவிட்டுப் போகின்றேன் என்ற நோக்கில் திரு.மெய்.அருள் நந்தி சிவம் இருப்பார் போலும். அது அவரது பார்வையில் சரியே. இந்த சர்வதேச மையம் அமைக்கையில் சன்மார்க்கிகள் ஏதேனும் பொறுப்பில் ஈடுபட நேர்ந்தால் பொருளுக்கு ஆசைபடாமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். முடிந்த அளவிற்கு சன்மார்க்கிகள் யாரும் பொறுப்பேற்க வேண்டாம். பொறுப்பேற்றால் அவர்கள் யாரும் சன்மார்க்க போலிகளாகவே கருதப்படுவர்.
வள்ளற்பெருமானிடம் ஒரு விண்ணப்பம்: அரசு தலையீடு இல்லாமல், சர்வதேச மையம் என்பதை சன்மார்க்கிகள் மட்டுமே உருவாக்க அருள் தர வேண்டும்.
நன்றி.
தி.ம.இராமலிங்கம்
9445545475
vallalarmail@gmail.com
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.