Friday, December 19, 2025

பாதுகை

                                                                   பாதுகை

இரக்கமே உருவான பாதம்
உகத்திலே வருவித்த பாதம்

கரங்கூப்பி தொழுகின்ற பாதம்
காண்பதற்கு அரிதான பாதம்

நரகர்கள் அறியாத பாதம்
நாடியமூவருக்கும் எட்டாத பாதம்

வரங்கள் கோடிதரும் பாதம்
வள்ளல்நின் பொற் பாதமே

 

இளமை எனுமோர் சுகமும்

            இறைவன் எனுமோர் அருளும்

வளமை எனுமோர் பொருளும்
வினைக ளற்றமதி முகமும்

களவு கொள்ளும் அழகும்
குடி கொள்ளும் சன்மார்க்கம் 

வளரும் காரணப்பட்டி லோங்கும்
வள்ளல்நின் பொற் பாதமே.
 

நரை திரைமூப் பகற்றி
நாளை இல்லை என்ற

உரை அகற்றி என்றும்
இளமை யோடு இருக்கும்

கரை அடைந்து சன்மார்க்கக்
 காலத்தை நமக் கினி

விரைந் தருளும் பாதம்
வள்ளல்நின் பொற் பாதமே.
 

கந்தசாமி தொண்டனுக்கு செய்தக்
கருணையால் கிடைத்தப் பாதம்

சிந்தனை செய்வோர்க்கு என்றும்
சங்கடம் தீர்க்கும் பாதம்

தந்திரம் சொல்லி இன்பமுற
தன்னை அறிவிக்கும் பாதம்

வந்தனை செய்வோரைக் காக்கும்
வள்ளல்நின் பொற் பாதமே.
 

கல்லார்கள் கற்கவே சாகாக்
கல்வி அளிக்கும் பாதம்

எல்லா உயிர்களும் இன்புறவே
இரக்கம் நல்கும் பாதம்

கொல்லான் புலால் மறுத்தானை
கைகூப்பி தொழும் பாதம்

வல்வினை போக்கும் எங்கள்
வள்ளல்நின் பொற் பாதமே.


நன்மை ஈன்றுநம்மை யென்றும்

            நீங்காத ஒளிதேகப் பாதம்

ஒன்பது ஓட்டைக் குள்ளே

            ஒளிந் திருக்கும் பாதம்

 சின்மயம் சச்சிதா னந்த

            சிவ மாக்கும் சன்மார்க்க

வன்மை விரைந்து கொடுக்கும்

            வள்ளல்நின் பொற் பாதமே.

  

வெளிக்குள் வெளி கடக்கும்

            வித்தை தெரிவிக்கும் பாதம்

எளியோருக் கெல்லாம் தனது

            அடிமுடி காட்டும் பாதம்

 தெளிந்தோ ருக்கெல்லாம் நின்

            தரிசனம் தந்து அருள்

வெளிச்ச மளித்து இருள்நீக்கும்

            வள்ளல்நின் பொற் பாதமே.

  

சதிசெய்த வலையில் சிக்கி

            சாதி மதம் சமயமெனும்  

பொதி சுமந்து பாரினில்

            பாழாய் இளைத் திளைத்து

மதிகெட்டு மதுவும் குடித்து

மயங்கிப் பாடையில் மாளும்

விதி என்பதில்லை எனும்

            வள்ளல்நின் பொற் பாதமே.

 

 உண்டு உண்டு மகிழவே

            உண வளித்து நின்னைக்

கண்டு களிப்பு மடைந்து

            கதிரும் மதியுமாக நின்று

எண் ணிரண்டு அறியவே

             ஏங்கி நிற்கும் சன்மார்க்க

வண்டுகள் தேடும் தேனன்றோ

            வள்ளல்நின் பொற் பாதமே.

 

விலை மதிப்பறியா பொன்னே

            வினை சூழ்ந்தறியா கண்ணே

மலை மேலாடிடும் காற்றே

            மரண மில்லா பெருவாழ்வே

அலை கடலில் வீழ்ந்தாடும்

            எம்போல் வாரை சன்மார்க்க 

வலையில் பிடித்துச் சமைக்கும்

            வள்ளல்நின் பொற் பாதமே.


--TMR




T.M.RAMALINGAM

VALLALAR


No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.