தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
தெய்வத்துக்குக்
கை கால் முதலியன இருக்குமா?
அன்பர்களுக்கு வந்தனம்.
உங்களில் யாராவது கடவுளை பார்த்திருக்கின்றீர்களா?
நமக்கு முன்னோர்களில் யாராவது கடவுளை பார்த்திருக்கின்றார்களா?
நான் கடவுளை பார்த்திருக்கின்றேனா?
இந்த மூன்று கேள்விகளுக்கும் “இல்லை” என்பதே நூறு சதவிகிதம் பதிலாக இருக்கின்றது.
இதற்கு வள்ளலார் பதில் என்னவாக இருக்கும்?
”கைலாசபதி
என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகபதி என்றும் பெயரிட்டு, இடம் வாகனம் ஆயுதம் வடிவம்
ரூபம் முதலியவையும் ஒரு மனிதனுக்கு அமைப்பதுபோல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள்.
“தெய்வத்துக்குக் கை கால் முதலியன இருக்குமா?” என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத்
தெரியாது விழிக்கின்றார்கள். இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்களென்று
பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது, அப்படியே கண்ணை மூடிக்கொண்ட்டு உளறியிருக்கிறார்கள்.”
இதுதான் வள்ளலாரின் பதிலாக இருக்கின்றது.
இது மட்டுந்தானா? வள்ளலாரின் பதில் இன்னும் பல வகைகளில் திருவருட்பாவில் காணலாம். நாம்
கேட்கும் இப்படிப்பட்ட கேள்விகளுக்கு வள்ளலார் முதற்கொண்டு யாராலும் மிகச்சரியான பதிலை
சொல்லிவிட முடியாது. ஆனால், வள்ளலார் கடவுளின் உண்மையை அறிந்திருக்கின்றார், தாம் அறிந்ததை
எடுத்துச் சொல்ல முடியாமல் தவிப்பதை பார்க்கின்றோம்.
“மன
உணர்வு செல்லாத் தலத்தாடும் பெருமான் வடிவுரைக்க வல்லார் யார்?”
என தன்னாலும் இறை வடிவம் இன்னதுதான்
என சொல்ல முடியவில்லை, என தன் தோல்வியை ஒப்புக்கொள்கின்றார். மனித மனங்களுக்கு அகப்படாதவராக
இருப்பவரே இறைவன். மனம் கடந்து, சுத்த அறிவால் இறைவனைக் காணமுடியுமா? ஆம்… காணமுடியும்
என்கின்றார் வள்ளலார்.
“நற்பூதி
அணிந்த திருவடிவம் முற்றும் தோழி, நான் கண்டேன் நான் புணர்ந்தேன் நான் அது ஆனேனே”
எனப் பாடுகின்றார். இங்கே தான்
கண்ட இறை வடிவம் ”நற்பூதி அணிந்த திருவடிவம்”
எனவும் சொல்லிவிடுகின்றார். இந்த நற்பூதி அணிந்த திருவடிவம் எப்படி இருந்திருக்கும்?
என நமது மனம் இத்திருவடிவிற்கு மேலும் வடிவம் கொடுக்க முயல்கின்றது! ”நற்பூதி” என்பது
விபூதியாக இருக்குமோ? விபூதி அணிந்த சிவபெருமானாக இருந்திருக்குமோ? என்றெல்லாம் நமது
மனம் வினவ ஆரம்பிக்கும். ஒரு கட்டத்தில் சிவபெருமான்தான் அந்த ’நற்பூதி அணிந்த திருவடிவம்’
என ஒரு முடிவிற்கே வந்திருப்போம்.
ஆனால், “தெய்வத்துக்குக் கை கால் முதலியன இருக்குமா?” என்ற வள்ளலாரின் கேள்வியினை
இங்கே நாம் மீண்டும் கேட்கத் தொடங்கினால், நற்பூதி அணிந்த திருவடிவத்திற்கு நிச்சயமாக
கை கால்கள் இருந்திருக்காது! ஆக, இத்திருவடிவம் மனித வடிவம் அல்ல என்பதால், சிவபெருமானும்
அல்ல என்பது நிச்சயம். ‘நற்பூதி’ என்பதற்கு செல்வம், தங்கம் என மேலும் பல பொருள்கள்
தமிழில் உள்ளன. இதில் எதனைக் கொண்டு நற்பூதி என வள்ளலார் பாடினார்? என்பது அவருக்கே
தெரியும்.
நற்பூதி அணிந்த திருவடிவு எப்படிப்பட்டதாக
இருக்கின்றது என்பது, வள்ளலாருக்கும் இறைவனுக்கும் மட்டுமே தெரிந்த இரகசியமாகும். அதனை நம் போன்றவர்களால் அறிய முடியாது. “அந்தோ அவன் அறிவான் நான் அறிவேன் அயலறிவார் உளரோ?”
என்பார் வள்ளலார்.
கை கால்களை கொண்ட கற்பனைக் கடவுளர்கள்
இல்லை என்றால், தமிழில், சமஸ்கிருதத்தில் புராணங்கள் இதிகாசங்கள், வேதங்கள், பன்னிரு
திருமுறைகள், வைணவ பிரபந்தங்கள் போன்ற நூல்கள் எழுதிருக்க வாய்ப்பே இல்லை, ஏன்? திருவருட்பாவும்
கற்பனைக் கடவுள்களை பாடியதுதான், மறுப்பதற்கு இல்லை. கற்பனைக் கடவுளர்களால்தான் தமிழ்
வளர்ந்தது. “பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமான்”களால் தமிழ் பக்தி
இலக்கியம் சிறப்புற்றது. வள்ளாலாரும் அப்புலவர்களில் ஒருவராக இருந்து, இறுதியில் அக்கூட்டத்தைவிட்டு
வெளியில் வந்துவிடுவதை நாம் பார்க்கின்றோம்.
“கடவுள் ஏன் கல்லானார்? மனம் கல்லாய்
போன மனிதர்களாலே…” என்ற கண்ணதாசனின் வரிகளில்தான் எவ்வளவு உண்மை பொதிந்திருக்கின்றது!
கல்லான மனங்களில் ஜீவகாருண்யம்
என்னும் இரசாயணத்தைக் கொண்டு சுத்தம் செய்ய, மனித மனங்கள் விசாலம் அடைந்து, இறைவனை
உயிர்களின் வடிவமாக பார்க்க வைக்கின்றது.
“உயிருள்
யாம் எம்முள் உயிர்” என்று வள்ளலாருக்கு இறைவன் தனது வடிவை உணர்த்தினார்.
இவ்வுலகில் பிறந்து, பிறப்பதின் மூலம் ஏதேனும் ஒரு உடம்பினை பெற்ற ஆன்மாக்களுக்கு உயிர்கள்
எனப் பெயர். அவ்வுயிர்களுக்கு கை கால்கள் முதலியன இருக்கின்றன.அந்த கை கால்கள் உடைய
உயிர் வடிங்களே இறை வடிவமாக இருப்பதாக. வள்ளலாருக்கு இறைவனே உணர்த்துகின்றார். எனவே
அவர் இவ்வாறு பாடுகின்றார்…
“எத்துணையும்
பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர்? அவர் உளம்தான் சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும் இடம் என நான் தெரிந்தேன்…”
”எல்லா
உயிர்களும் என்னுயிர் ஆயின” என்ற வள்ளலாரின் வார்த்தைகளையும் “உயிருள் யாம் எம்முள் உயிர்” என்ற இறைவனின்
வார்த்தைகளையும் நாம் உள்ளூர உணரும்பொழுது, நமது கண்களில் நீர் பெருகுகின்றன அல்லவா!!...
அந்த கண்ணீர்தான் இறைவனின் வடிவம். கல் மனம் கண்ணீர் சிந்தும்பொழுது, கல் உருவில் செய்யப்பட்ட
இறைவனும் காணாமல்போய் உயிர் உள் விளங்குவதைக் காணலாம். உயிர் வழிபாடே கடவுள் வழிபாடு
என்கின்றது வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம்.
இறுதியாக சொல்வதானால், இறைவனுக்கு
உருவம் கிடையாது. உருவம் இல்லாத ஒரு வஸ்து இருக்க முடியுமா? என்றால்,
ஏன், காற்று இல்லையா?, கனல் இல்லையா?
என்றால், அவைகள் ஓரிடத்தில் இருக்கும் ஓரிடத்தில் இருக்காது.
எங்குமாய் விளங்கும் அருவமான கடவுள்
எது? மனிதனால் சொல்லிவிட முடியாத அருவமான கடவுள் நிலை மனித மனதிற்க்கு அப்பாற்பட்டது.
உலகில் பிறந்த எந்த மதமும் அருவமாக இறைவனை வணங்கவே முடியாது. இஸ்லாம் மதம் இவ்விடயத்தில்
உண்மையை தங்களது வழிபாட்டில் கடைபிடித்தாலும், அல்லா என்ற சொல்லின் எழுத்துருவையும்,
காஃபா என்கின்ற கட்டிட உருவையும் தொழவே செய்கிறார்கள். உருவம் அல்லாது இறை வணக்கத்தை
மனிதர்கள் புறத்தே செய்யவே முடியாது. அதனால்தான் இந்து மதத்தில் கற்பனை தெய்வங்கள்
மனம் போன போக்கில் எழுந்தன. இதனை முடிவு கட்டவே ஒளி வழிபாட்டை வள்ளலார் கொண்டுவந்தார்.
இதுவும் கற்பனைதான், எனினும் ஒளி உருவமும் அல்ல, அருவமும் அல்ல. ஒளி வழிபாட்டில் புற
வழிபாடாகக் கொண்டால், நாம் அக வழிபாட்டிற்கு செல்வது எளிதாக இருப்பதுடன், பொய்ச் சடங்குகள்
ஏதும் செய்ய வேண்டியதில்லை.
சுத்த சன்மார்க்கம் அகத்தே இறைவனை
தொழும் மார்க்கமாகும். அகத்தே இறைவன் சுத்த சித்துருவாய் விளங்குகின்றான். எல்லா உயிருள்ளும்
அகம் இருப்பதனால், எல்லா உயிருள்ளும் இறைவன் அருவமாக இருக்கின்றான். இப்பொழுது நாம்
நமது தேகத்திலும், பிற உயிர்களின் தேகத்திலும் இறைவனின் சித்துருவை உணர்ந்து தொழுதலே
”ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை” ஆகும்.
எங்கே இப்பொழுது சொல்லுங்கள்… “தெய்வத்துக்குக் கை கால் முதலியன இருக்குமா?”
என்று உங்களிடம் கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்காதீர்கள்…”இல்லை” என நெற்றியில் அடித்தாற் போல் சொல்லிவிடுங்கள்.

No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.