Thursday, May 14, 2026

அறிவுத்திருக்கோயில் - ஆழியாறு

 அறிவுத்திருக்கோயில் - ஆழியாறு:

==========================







எமது தனித்த பயணமாக வால்பாறை மற்றும் அதிரப்பள்ளி சுற்றுலா செல்லுகையில் வழியில் அறிவுத்திருக்கோயில் தரிசனம் - (12-05-2026)

வள்ளற்பெருமான் உருவாக்கிய ”ஞானசபை” என்னும் வடமொழி சொல்லை “அறிவுத்திருக்கோயில்” என்று தமிழில் பெயர் சூட்டி தமது யாகச்சாலை மற்றும் பயிற்சி நிலையங்களை ஆழியாறில் உருவாக்கியுள்ளார் வேதாத்திரி மகரிஷி. அவரது சமாதி நிலையமும் (மணி மண்டபம்) அங்கே உள்ளது. அறிவுத்திருக்கோயிலை தரிசனம் செய்ய நுழைவுக் கட்டணமாக ஒருவருக்கு ஐம்பது ரூபாய் வசூலிப்பதுதான் நமது அறிவுக்கு பொருந்தாததாக உள்ளது. நூறு ரூபாய் கொடுத்து நுழைவு டிக்கெட் வாங்கினால், சில்லறை இல்லை என 40 ரூபாய் கொடுத்துவிட்டு மீதி பத்து ரூபாய்க்கு மேலும் ஒரு வேதாத்திரியின் புகைப்படத்தை கொடுத்துவிட்டார்கள். பெட்டிக்கடையில் மீதித் தொகைக்கு மிட்டாய் கொடுப்பதுபோன்று செயல்பட்டது வியப்பாய் உள்ளது.

இயற்கை விளையாடும் மலையடிவாரத்தில் ஆழியாறு அணைக்கு அருகில், பொள்ளாச்சி நா.மகாலிங்கம் ஐயாவின் உதவியுடன் அமைக்கப்பட்டதுதான் இந்த “அறிவுத்திருக்கோயில்” ஆகும்.

“வாழ்க வையகம் - வாழ்க வளமுடன்” என்பது மகரிஷியின் தத்துவக் கோட்பாடாக உள்ளதை அறிய முடிந்தது.

மேலும் நான் சென்றிருந்தபோது பயிற்சி வகுப்புகளும் நடைபெற்றுக்கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.

அடிப்படை பயிற்சி, சித்தர்களின் காயகல்ப யோகா, அகத்தாய்வு பயிற்சி, பிரம்மஞான பயிற்சி, மெளன நோன்பு, அருள்நிதியர் பயிற்சி, மனவளக்கலை யோகா போன்ற பயிற்சிகளை போதிய நன்கொடை அளித்து அங்கேயே தங்கி கற்கும் வகையில் அறிவுத்திருக்கோயில் இயங்குவது பாராட்டத்தக்கது.

நெசவுத் தொழைலை குலத்தொழிலாகக் கொண்ட முதலியார் குலத்தில், சென்னை கூடுவாஞ்சேரியில் வரதப்ப முதலியார் - முருகம்மாள் தம்பதியர்களுக்கு எட்டாவது குழந்தையாக 14-08-1911 ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு வேதாத்திரி என பெயரிட்டனர். மூன்றாம் வகுப்பு வரைதான் படித்தார். தனது 95-ஆம் வயதில் உடல் நலக்குறைவால் 28-03-2006 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

“வாழ்க வையகம் - வாழ்க வளமுடன்”

-TMR

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.