Showing posts with label மரணமே வா. Show all posts
Showing posts with label மரணமே வா. Show all posts

Saturday, July 12, 2014

மரணமே வா



********** மரணமே வா ************



சில்லென்ற காற்று
மெல்லென வீச,
மேகத்தூறல் மெதுவாய்
மேனியைத் தொட,
நீல வானில் நிலவு
தனது முகத்தை
பூமிக்கு காட்டித்துவங்கியது,

கடல் அலைகள்
பூரிப்புடன் அதனை வரவேற்றன,
எங்கிருந்தோ ஒரு
முனகும் ஓசை என்
காதைத் தொட்டது,
காதல் ஜோடிகளின்
வேத மந்திரம் அது,

குழந்தைகளின் சிரிப்பும்
ஆட்டமும் அவ்விடத்தை
சொர்க்க மாக்கின,
கடல் அலையும்
மக்கள் அலையும்
ஒன்றாக சங்கமித்தன,
மகிழ்ச்சியின் ஓசை

அலை ஓசையினை
வெட்கப்படச் செய்தன,
எனக்கும் சந்தோஷம்
தாங்க முடியவில்லை,
இந்நேரத்தில் என்காதலன்
இன்னும் வரவில்லை
என்னைவிட என்னவேலையோ

தெரியவில்லை, வரட்டும்
பேசிக்கொள்கிறேன், என்றமன
ஊடல் ஆரம்பமாகிவிட்டது,
மரணமே வா,
நிலவு மறையும்முன் வா,
உன்னிடம் கொஞ்சிப்பேச
ஆசையாய் உள்ளது வா,

எல்லோரும் மகிழ்ந்திருக்க
நானும் உனது மடியில்
தலைவைத்து முனக ஆசை வா,
பிறவி தோறும் எனைத்
தொடரும் என்னருமைக்
காதலனே சீக்கிரம் வா,
என்னழகை ரசிக்க வா,

ஒருவேளை நீவந்தவுடன்
என்னால் பேசமுடியாமல்
போகலாம், இருந்தும்
காதலால் கேட்கிறேன்
பேசலாம் வா,
எத்தனைப் பிறவிகளில்
என் அனுமதியின்றி

என்னைத் தொட்டிருப்பாய்,
மரணமே வா,
மன்னித்தேன் உன்னை,
இன்று என் சம்மதத்துடன்
என்னைத் தழுவ வா,
உன்கைப்படவே என்
தனங்கள் விம்முகின்றதை

பார்த்தாயா, ம்... வா...
மக்கள் கூட்டத்திலே
மறைந்திருப்பது ஏனோ,
என்னருகில் மறைந்திருந்து
நீ எனை ரசிப்பது
எனக்குத் தெரியும்,
வா உன்னோடு பேசவேண்டும்,

உனை மிஞ்சிய
வாழ்வை எனக்குத்
தருவாயா, எனகேட்க ஆசை,
அன்பே வா, உனக்காக
எனது கூந்தலை
விரித்தே வைத்துள்ளேன்,
கோதிவிட்டு பூச்சூட வா,

உன் மூச்சுக் காற்று
என் முகத்தில் வீசுவதை
உணர்கிறேன், வா...
உன் தோளில்
சாய்ந்துக் கொண்டு
அழ வேண்டும்போல்
உள்ளது, வா உடனே வா...

என் கண்கள்
கலங்குகின்றன, என்
கண்ணீர்த் துளிகள்
உன் மார்பில்தான்
விழவேண்டும் வா...
மரணமே வா...
உன்னுடன் நான் பேசுவதை

இவ்வுலகமே பார்க்க
வேண்டும், என்று
ஆசைப்படுகிறேன் வா...
என்னவன் மிக நல்லவன்
என்று இவ்வுலகிற்கு
சொல்ல ஆசைப்படுகிறேன் வா...
அன்று சின்ன வயதில்

இதே கடலில் நான்
குளிக்கும்போது என்னிடம்
ஆசை வைத்தாய்
நினைவு இருக்கிறதா,
இன்று இதேஇடத்தில்
பூத்து காத்திருக்கிறேன்,
கூடி இன்புறலாம் வா...

உனையன்றி பெருவாழ்வு
எனக்குத் தேவையில்லை,
... மரணமே...
எங்கிருக்கிறாய் நீ...
வந்து என்னோடு கூடிவிடு,
உன்னோடு பெறும்
சிற்றின்பத்தை விட

பேரின்பம் பெரிதல்ல எனக்கு,
வா... நாமிருவரும்
பிரியாமல் கற்பு
நிலையில் வாழ்வோம்,
இனி எனைவிட்டு
மீண்டும் உலக உயிர்களிடம்
சென்றால் சபிப்பேன் நான்.