Showing posts with label யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி T.M.Ramalingam Vallalar. Show all posts
Showing posts with label யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி T.M.Ramalingam Vallalar. Show all posts

Saturday, March 4, 2017

யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி

காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மின்னூலில் மார்ச்-2017 ஆம் மாதம் வெளிவந்தவை:

யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி



யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி என்று அழைக்கப்படும் உப்பலுரி கோபல கிருஷ்ணமூர்த்தி 1918-ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் உள்ள மசூலிப்பட்டணத்தில் பிறந்தவர். ஞானமடைவது என்ற நிலையைக் கேள்வி கேட்டவர். எண்ணம் என்பதின் அடிப்படையையே மறுத்தவர் அவர். அறிவு மற்றும் சிந்தனை சார்ந்த அத்தனை கருத்தியல்களையும் புறக்கணித்தவர் அவர். இந்த உலகத்தில் புரிந்துக்கொள்ள ஒன்றுமில்லை என்றார். அவரை நிறைய பேர் ஞானமடைந்தவர் என்று கருதினாலும், அவர் தனது நிலையை இயற்கையான விலங்கு இயல்பில் உள்ள நிலை என்று சொன்னவர்.

ஒரு கொசுவைவிட, ஒரு வயல் எலியைவிட எந்த விதத்திலும் தான் மேலான ஒன்றல்ல என்ற அப்பட்டமான உண்மையை இந்த மனித குலம் ஒப்புக்கொள்ளாவிட்டால் அது அழிந்துபோய்விடும் என்று சொன்னவர்.

புனிதம், பவித்ரம், தர்மம், ஆன்மீகம், ஆத்மா, கலை, கடவுள், குரு, ஜானிகள், பண்பாடு, மதம் என்று வாழ்க்கையில் எதைப்பற்றியெல்லாம் நீங்கள் இதுவரை உயர்வான அல்லது தாழ்வான கருத்துக்களை வைத்திருக்கிறீர்களோ அவற்றையெல்லாம் தவிடு பொடியாக்கி, உங்களை நீங்களாகவே தரிசிக்க உதவுவதற்குத் தோன்றிய அபூர்வமான மனிதர் இவர்.

தன்னை ரிஷி என்று அறவே ஒத்துக்கொள்ள மறுத்த இன்றைய ரிஷி.

உண்மையைத் தேடத் தொடங்கினாலே தவறான திசையில் பயணமாக ஆரம்பிக்கிறீர்கள் என்று அர்த்தம் என்று சொல்லிய இந்த நூற்றாண்டின் இணையற்ற மாற்றுச் சிந்தனையாளர்.

ஒரு முறை, ‘இந்த ஆசிரியர் தினத்தில் மனித குலத்திற்கு உங்களுடைய செய்தி என்ன யு.ஜி.? என்று வெளிநாட்டிலிருந்த யு.ஜி.யிடம் அவருடன் நெருங்கிப் பழகிய பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட் என்பவர் தொலைப்பேசியில் உரத்தக் குரலில் கேட்கிறார்.

‘எல்லா ஆசிரியர்களும் அழிக்கப்பட்டாக வேண்டும்’ என்று முழங்கினார். ‘உங்களுக்குள் நீங்கள் காணும் எல்லா விதமான குழப்பங்களுக்கும் அவர்கள்தான் காரணம். நான் ஒரு போதகன் அல்ல. நான் என்றுமே ஒரு போதகனாக இருந்ததில்லை. இந்த உலகத்தை அவர்கள் எப்படிப்பட்ட மோசமான நிலையில் விட்டிருக்கின்றார்கள் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?’

என்று ஆசிரியர் தின வாழ்த்துக்களை உரைத்தார் யு.ஜி. அவர்கள்.

இனி அவரது வார்த்தைகளிலேயே …




‘உண்மையைத் தேடிச் செல்லும் எந்த முயற்சியுமே நீங்கள் ஏற்கனவே இருந்து கொண்டிருக்கும் உங்களது இயற்கையான நிலையிலிருந்து உங்களை விலக்கி விடுகின்றது.

உண்மை என்பது உங்களது முயற்சியினால் அடைவதோ பெறுவதோ அல்லது நிறைவேறுவதோ கூடிய பொருள் அல்ல. அது தன்னைத்தானே வெளிப்படுத்த முடியாத படிக்குச் செய்கின்ற தடைகளே நீங்கள் செய்கின்ற முயற்சிகள் எல்லாம். எப்போதும் நீங்கள் உங்கள் இயற்கையான நிலையில்தான் இருக்கின்றீர்கள். உண்மை தனக்கே உரித்தான வழியில் தன்னிச்சையாக வெளிப்படத் தடையாக இருப்பதே உங்களது தேடல்கள்தான். அதனால்தான் தேடுதல் என்பதே தவறான திசையில்தான் இருக்க முடியும்!

நீங்கள் புனிதம், பவித்ரம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் அனைத்துமே உங்கள் உணர்வில் படிந்திருக்கும் அசுத்தங்கள்.

அசுத்தம் என்ற வார்த்தை உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். இருந்தாலும் சொல்கிறேன் அவை அசுத்தங்களே.

உங்களால் எதுவுமே செய்ய முடியாது. உங்கள் கைகளில் எதுவுமே இல்லை. இதை நான் உங்களுக்கு தர முடியாது. ஏனெனில் அது ஏற்கனவே உங்களிடம் இருக்கின்றது. உங்களிடம் உள்ள பொருளையே நீங்கள் தானம் கேட்பது தமாஷாக இருக்கின்றது.

எவரிடமும் கேட்டுப் பெறுவதற்கு எந்தப் பொருளும் இல்லை. என்னிடம் இருப்பதுதான் உங்களிடமும் இருக்கின்றது. நான் இருக்கும் இடத்தில்தான் நீங்களும் இருக்கின்றீர்கள். என்னைப்பற்றி சொல்வதானால்,

மத சம்பிரதாயங்கள் அனுஷ்டானங்களுடன் நிரம்பிய ஒரு சூழ்நிலையிலேயே நான் வளர்க்கப்பட்டேன். எனது தாத்தா நல்ல பண்பாடுடைய மனிதர். நிறையப் படித்த பண்டிதர்களை அவர் சம்பளம் கொடுத்து ஊழியத்துக்கு வைத்திருந்தார். நான் தரமான கல்வியும் அதற்கான ஆழ்ந்த சூழ்நிலையும் பெறவேண்டும் என்பதில் அவர் கண்ணும் கருத்துமாய் இருந்தார்.

தினமும் காலை நாலு மணியிலிருந்து ஆறு மணி வரைக்கும் அந்தப் படித்த பேர்வழிகள் வந்து புனித நூல்களையும் அதன் விளக்க உரைகளையும் இன்னும் எல்லா சாஸ்திரங்களையும் படிப்பார்கள். ஐந்து வயதோ ஆறு வயதோ, ஏழு வயதோ சிறு பிள்ளையான நான் அந்தக் கருமத்தையெல்லாம் கேட்டுத் தொலைய வேண்டும்!

நிறையப் புனித மஹான்கள் எங்கள் இல்லத்துக்கு வருகை புரிந்திருக்கின்றார்கள். எந்தப் புண்ணிய ஆத்மாவுக்கும் எங்கள் வீட்டுக் கதவு திறந்தே இருக்கும்.. ஆனால் அந்தச் சிறிய வயதிலேயே ஒன்றை மட்டும் நான் கண்டுபிடித்து வைத்திருந்தேன்.

வந்த மஹான்கள் எல்லோருமே போலியான மனிதர்கள். அவர்கள் எல்லோருமே பொய்யர்கள் என்றுதான் சொல்வேன். எப்படியோ எதுவெல்லாம் புனிதம் என்று கூறப்பட்டதோ, தெய்வீகம் என்று சொல்லப்பட்டதோ அவற்றின் மீதெல்லாம் எனது சிஸ்டத்துக்குள்ளேயே ஒரு வெறுப்பு ஊர்ந்து வந்து, அவற்றையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டது. அதற்கு பிறகுதான் எனது தேடல் தொடங்கியது. சொல்லப்பட்ட அனைத்து அனுஷ்டானங்களையும் முறைப்படி செய்தேன். எனக்கு இளைய வயதுதான். ஆனால் வீடுபேறு, மோட்சம், விடுதலை, நிர்வாணம் என்று சொல்லப்பட்டதை எல்லாம் அடைந்தே தீருவது என்ற உறுதியுடன் செயல்பட்டேன். அது எனக்கு அவ்வளவு தேவைப்பட்டது. இல்லையெனில் இப்படி ஒரு முழு வாழ்க்கையையே அதற்காக அர்ப்பணித்திருக்க மாட்டேன். தேடல் ஆரம்பித்தது. எனக்கு ஆழமான மதப் பின்னணி இருந்தது. எனது வழியிலேயே நான் அனைத்தையும் ஆராய ஆரம்பித்தேன். உளவியல் தத்துவ இயல், மேற்கத்திய, கிழக்கத்திய தந்திர சாஸ்திரங்கள், இன்றைய அறிவியல் கோட்பாடுகள் அனைத்தையும் பல வருடங்கள் கற்றேன். பரந்து பட்ட மனித அறிவினை நானே ஆராயத் துவங்கினேன். எனக்குப் பல சக்திகள் கிடைத்தன. பல அனுபவங்கள் நிகழ்ந்தன. ஆனால் அவை எதனிடமும் எனது கவனம் போகவில்லை.

ஒருவரைப் பார்த்தவுடன் அவரது இறந்த காலம், நிகழ்காலம், எதிர் காலம் எல்லாவற்றையும் என்னால் பார்க்க முடிந்தது. ஆனால் எனக்கு மட்டும் எப்படி ஏன் இந்த ஆற்றல் என்று வியந்தும் குழம்பியும் இருந்திருக்கின்றேனே தவிர அந்த ஆற்றலை நான் ஒரு போதும் பயன்படுத்த வில்லை. பல சமயங்களில் நான் ஏதோ சொல்லுவேன். அது அப்படியே நடக்கும். அதனுடைய சூட்சுமம் என்னவென்று நான் எவ்வளவு முயன்றும் எனக்குத் தெரியவே இல்லை. இது பல முறை நடந்த போதும் அந்த எனது ஆற்றலுடன் நான் விளையாடவில்லை. அதற்கான ஆர்வமும் அவசியமும் எனக்கு ஏற்படவில்லை. அது மட்டுமல்ல எனக்குள் அனைத்துத் தேடலுமே நின்று போனது. அதற்குப் பிறகுதான் எனக்குப் பல விந்தையான நிகழ்ச்சிகள் நடந்தன. இப்போது எனது உடலைத் தேய்த்தால் ஒளிப் பொறிகள், பாஸ்பரஸைப் போல சிதறின.  


அன்பர்களே இவரைப் பற்றி தெரிந்துக்கொள்ள இன்னும் நிறைய உள்ளன. மாதம் ஒரு மஹான் என்கின்ற தலைப்பில் இவரைப் பற்றி எழுதியதை, இன்று அவர் இருந்திருந்தால் என்னை கண்டித்திருக்கக்கூடும் என்றே நான் நினைக்கின்றேன். இவரைப் பற்றிய ஒரு சிறு புள்ளியினை இங்கு வைத்துவிட்டேன். உங்களுக்கு ஆர்வம் இருந்தால் அவரைப்பற்றி நிறைய தெரிந்துக்கொள்ளுங்கள். அதன் மூலம் உங்களை நீங்களே அறிவீர்கள். நன்றி.