Tuesday, December 8, 2015

91-ஆம் ஆண்டு குருபூஜை விழா



91-ஆம் ஆண்டு குருபூஜை விழா
 
வள்ளலாரின் அணுக்கத்தொண்டர்-சமரச பஜனை-காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அவர்களின் 91-ஆம் ஆண்டு குருபூஜை விழா வருகின்ற 16-12-2015 அன்று காரணப்பட்டு ச.மு.க.அருள் நிலையத்தில், வள்ளற்பிரானின் பேரருளால் சிறப்பாக நடைபெற உள்ளது. ஆன்ம லாபம் அடைய விரும்பும் புண்ணியர்களை அழைக்கிறோம்.

கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து காரணப்பட்டிற்கு, நகர பேருந்து எண்:20 கீழ்கண்ட நேரங்களில் புறப்படும். அப்பேருந்தை பயன்படுத்தி அன்பர்கள் இங்கு வந்து தரிசித்து செல்லலாம்.

காலை 07.00 மணி
மதியம் 02.00 மணி
இரவு 07.00 மணி

மேலும் விவரங்களுக்கு 9443090017 / 9943111045 / 0413-2660974 / 9445545475 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். நன்றி. 


Tuesday, December 1, 2015

"சன்மார்க்க விவேக விருத்தி" - டிசம்பர் 2015





அன்பர்களே!

வள்ளலாரின் அணுக்கத் தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அறக்கட்டளை மூலம் ஒவ்வொரு மாதமும் "சன்மார்க்க விவேக விருத்தி" என்கிற மின்னிதழ் வெளியிடப்படுகின்றது.

டிசம்பர் மாத மின்னிதழில் நீங்கள் படிக்க இருப்பது....

1. கெளரவ ஆசிரியர் திருவருட்பிரகாச வள்ளற்பிரானின் உபதேச குறிப்பும் அதற்கு ஆசிரியரின் சிறு விளக்கமும்.
2. தங்க முதலீட்டுத் திட்டம் மற்றும் மழையின் பாதிப்பை பற்றின ஆசிரியரின் கட்டுரைகள்.
3. சுத்த சன்மார்க்கர் திரு.மு.பாலசுப்பிரமணியன் அவர்கள் எழுதிய "வள்ளலாரைப் புரிந்துக்கொள்ளுங்கள்" தொடர்...
4. அருள்திரு.சீனிசட்டையப்பர் எழுதிய சன்மார்க்க குரவர் நால்வரில் கல்பட்டு ஐயாவின் வரலாற்றுத் தொடர்...
5. திரு.இராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய "இந்து மதம் எங்கே போகிறது?" தொடர்
6. காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா எழுதிய "சிதம்பரம் இராமலிங்க சுவாமிகள் சரித்திரக் குறிப்புகள்" தொடர்
7. ஆசிரியர் தி.ம.இராமலிங்கம் எழுதிய "கால் மாற்றும் கலை" தொடர்
8. ஆசிரியர் தி.ம.இராமலிங்கம் எழுதிய "இராமலிங்க அகவல்" தொடர்
9. ஆசிரியர் தி.ம.இராமலிங்கம் எழுதிய "திருஉந்தியார்" தொடர்
10. வள்ளலாரின் அன்றைய காலக்கட்டத்தின் நிகழ்வு "டிசம்பர் மாதத்தில் அன்று"
11. கண்மூடிப் பழக்கம் என்ற தலைப்பில் இம்மாதம் "விதவை" பற்றிய விளக்கம்.
12. வாசகர் வட்டம், சன்மார்க்க மணமகள் தேவை சேவை விளம்பரங்கள்
13. ஆசிரியர் தி.ம.இராமலிங்கம் எழுதிய "கிறிஸ்து", "இஸ்லாம்", "புத்தம்" மற்றும் "சமணம்" போன்ற மதங்களின் கருத்துக்கள்.
14. மாதம் ஒரு மகான் என்ற தலைப்பில் இம்மாதம் "பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள்" பற்றின வரலாறு.
15. சுத்த சன்மார்க்க நீதி என்ற தலைப்பில் இம்மாதம் "இறைவனின் தேகம்" பற்றின விளக்கம்.
16. பச்சைத்திரையை நீக்க வல்ல "சத்விசாரம்" பகுதி
17. காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலைய கட்டட நிதிக்கு நன்கொடை அளித்த புண்ணியர்களின் பெயர் பட்டியல்
18. ஆசிரியரின் ஆங்கில மொழிபெயர்ப்பில் தொடராக வருகிறது, வள்ளலார் போதித்த பேருபதேசம்.
19. சன்மார்க்க குறுக்கெழுத்துப் போட்டி
மற்றும் சில விளம்பரங்களுடன்.... டிசம்பர் மாத மின்னிதழ் உங்களின் சிந்தனையை சன்மார்க்கத்தின்பால் ஈர்க்கும். படிக்கத் தவறாதீர்கள்...


or
 
  http://www.vallalarspace.com/user/c/V000019587B

Tuesday, November 24, 2015

விடு நீறே

திருவருட்பிரகாச வள்ளலாரின் வழியை நாடுபவர்கள் முதலில் சமயமத சடங்குகளை விடுத்தல் வேண்டும். விபூதி பூசுதல் சைவ சமயத்திற்கு உகந்தது. சன்மார்க்கம் அதனைக் கடந்தது. தயவு செய்து சன்மார்க்கிகள் அதனைக் கடந்து வரவேண்டும். பழக்கம் நம்மை அதிலே இழுக்கும். பல ஆயிரங்கணக்காண கற்பங்களின் ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும். ஜீவ காருண்ய தயவு வந்தால் எல்லாவற்றையும் விட்டு அக்கணமே விடுபடலாம். 

                                                                    விடு நீறே
                                                         (தி.ம.இராமலிங்கம்)

                                                              கலி விருத்தம்

அருட் பெருஞ்ஜோதி அருள் செய்கையில்
குருவருள் எல்லாம் கூடி வருகையில்
மருள்நெறி எல்லாம் மருண் டோடுகையில்
திருநெறி மார்க்கத்தில் தீதாம் விடுநீறே.        1

சுத்த சன்மார்க்கம் சுகந் தருகையில்
நித்தம் நினைக்கும் நெஞ்சம் வருகையில்
சித்த மார்க்கமெலாம் சுருண்டோ டுகையில்
பித்த னெனப்படும் பதரை விடுநீறே.            2

ஞான சபையுள் ஞானம் வருகையில்
வானத்தின் மீதுமயில் வந்தா டுகையில்
கான மதமெல்லாம் குதித்தோ டுகையில்
ஈன சாம்பலை இகழ்ந்து விடுநீறே.            3

வடலூர் பூசம் வந்து பார்க்கையில்
மட மாதர் மயக்கம் தீர்கையில்
இடர் உலக இச்சை விடுகையில்
சுடலை மறக்க சினந்து விடுநீறே.            4

எமபயம் கடந்து எல்லாந் தானாகையில்
நமசிவாய மந்திர நிலை கடக்கையில்
சமயமத வழக்கெலாம் சட மாகையில்
கமலம் மலர்ந்து கூடவே விடுநீறே.            5

ஜீவ காருண்யம் ஜீவனில் இருக்கையில்
ஈவதெனும் மூன்றும் அவனுக்கு அளிக்கையில்
பாவமெனும் மரணம் படுகுழி வீழ்கையில்
சாவதெனும் பழி சாராது விடுநீறே.            6

சாகாக் கல்வியைசுத்த சன்மார்க்கம் அளிக்கையில்
வேகாக்காலை சன்மார்க்க விவேகம் தருகையில்
போகாப்புனலை சன்மார்க்க போகம் விழைகையில்
ஏகாதிபதி அப்பனை இசைந்து விடுநீறே.        7

எல்லா உயிரும் இன்புற்று இருக்கையில்
நல்லான் நடுவில் நெற்றிக்கண் திறக்கையில்
வல்லான் பூட்டை வள்ளல் திறக்கையில்
பொல்லான் பூசும் பூதியாம் விடுநீறே.            8

மாட விளக்கு மாண்புற எரிகையில்
நாட அதனையே நடனம் காணுகையில்
வேடம் போடும் வித்தை மறைகையில்
கூட வருவாரவர் கூடவே விடுநீறே.            9

பொது மார்க்கம் பாரினில் பரவுகையில்
இதுஅது எனஉரைப்பது அரிதா கையில்
மது மயக்கமாம் மதம் ஒழிகையில்
சது மறைகளும் சாய்ந்திட விடுநீறே.            10

For e-book....



https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWdU1seXlWQm9LYjg/view?usp=sharing


விடு நீறே






 

Friday, November 20, 2015

தேனெனும் மழையில்...!!!

தேனெனும் மழையில்...!!!
            (தி.ம.இராமலிங்கம்)

 எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


மூன்றுநாள் தொடர் மழையிலே தமிழகம்
    மூழ்கிப் போச்சு அரசினை
ஏன் என்று கேட்கவும் ஆளில்லை
    எங்கள் கதியைப் பார்த்து
நான் இருக்கிறேன் என்றவர் அடியும்
    நீர் நிலத்தில் படவில்லை
வான் படைத்தக் கடவுள் இவரென
    வீண் போயினர் மக்களே.                1

மக்களின் வரிப் பணத்தால் இயங்கும்
    மக்க ளாட்சியில் மழைநீரில்
சிக்கியே மக்கள் மாள்வதோ அய்யகோ
    சவங்களுக்கு சில லட்சம்
முக்கிய அமைச் சர்களின் நிவாரணம்
    முழுங்கின சில லட்சம்
மக்கித் தவிக்கும் மக்களின் நிரந்தர
    மறதியால் பிழைக்கும் அரசே.            2

அரசின் நிர்வாக அலங்கோலம் எல்லாம்
    ஆட்டங் கண்டது அன்றோ
இரக்கம் இருப்பின் இணையும் நதிகள்
    இங்கு இருப்பதை சுருட்டும்
அரக்க அரசால் அடைந்தன கால்வாய்
    ஆழ் குளங்களும் ஏரியும்
நரக வாசிகளால் நகரமாயின நீள்
    நதியும் வழியில்லாது விழித்ததே.        3

விழித்திருக்க இயலாது வளர்ந்த சமூகம்
    விதிவழி செல்லுதே ஆண்டுகள்
கழிந்தும் இன்னும்நாம் வசிக்கும் இடம்
    குளங்குட்டை சாக்கடை என்றால்
அழிக்க எழுவாய் அரசினை மனிதா
    ஆள்வதும் நாம்தானே அசிங்கம்           
இழிவாய்ப் பாட எனக்கும் உண்டே
    இனிஇயங்காய் சன்மார்க்கர் ஆளவே.        4




ஆள்பவர் கோடிகோடியாய் அள்ளிச் செல்ல
    ஆட்சியை பிடித்து நடிப்பார்
நாளெல்லாம் நல்லன நாடிச் செய்வார்
    நயமாய் அதில் காசும்பார்ப்பார்
தாளிலே வீழ்ந்து கையிலே கொடுத்து
    தவறாது ஓட்டும் கேட்பார்
காளி பூசையில் ஆட்டின் கதியாய்நாம்
    கையூட்டு பெற்றால் இக்கதிதானே.        5

தானே புயலால் தலைகள் உருண்டினத்
    தடயங் கண்டும் நம்மரசு
மானே போல்ஆண்டு மென்ன கடலூர்
    மக்கள் மாண்டு போனரே
தேனே போல்வந்த மழையும் நம்மை
    தேள்என கொட்டிய தென்ன
வானே போல்அர செங்கும் ஊழலால் 
     வளர வாழ்கநம் ஆட்சியே.            6

ஆட்சியர் வந்தார் அமைச்சரும் வந்தார்
    ஆடிய வீட்டுக்குள் ஆமைபோல
கூட்டத்தில் இருப்போர் கூப்பாடு போட்டதும்
    கூசாமல் சாப்பாடும் போட்டனர்
நாட்டாமை சொன்னதால் நானிங்கு வந்தேன்
    நீட்டுதல் கூடாது என்னிடத்திலென
மாட்டாமல் கூறிமதி கெட்டு ஓடினர்
    மக்களும் மழையாய்க் கொட்டினரே.        7

கொட்டின மழைக்கு கூடாரம் எங்கேநம்
    கைகள்வெட்டின கால்வாய் எங்கே
மொட்டையாய் நின்ற ஏரிகள் எங்கே
    மலர்ந்தநீர்த் தேக்கங்கள் எங்கே
கொட்டையால் விளைந்த மரங்கள் எங்கே
    கட்டையில் போகிறவன் காசுக்கு
பொட்டைப் போல் விற்றானே இனிநாம்
    பட்டைக்கு போவதுதான் எங்கே.            8

எங்கேஅந்த வள்ளுவர் எங்கேஅந்த வள்ளலார்
    ஏனிந்த அவலம் தமிழனுக்கு
சங்கேமுழங்க ஆண்ட அரசெல்லாம் பார்த்த
    சீர்போற்றும் இனம் இன்று
சங்கேஊத தூக்கிச் செல்லும் சடமானதே
    சென்னை வாசிகளும் மாரியால்
மங்கியே போனரே இனிஇலவசம் கொடுத்து
    மிரட்டும் அரசை மதியீரே.                9

மதியிருக்கு நமக்குஅதை மறவாதே இனியும்
    மதுஉண்டு மாண்டுப் போகாதேநம்
விதிஎன்று சொல்லும் வல்லான் காலை
    வணங்காதே நதிகளை இணைக்க
நிதி கொடுப்பாரை ஆட்சியில் நிறுத்தினால்
    நலங் கொடுக்கும் நமக்குவேறு
கதியில்லை சொன்னேன் உனக்கு சன்மார்க்கக்
    கலை ஆளும்நாளே நன்னாள்.             10


https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWcnprelVSNDQ1OUU/view?usp=sharing