Saturday, August 5, 2017

திரு அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை

காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மின்னிதழில் ஆகஸ்ட்-2017 மாதம் வெளியான 
திரு அகவல் உரையின் தொடர்ச்சி…

சமயங் கடந்த தனிப்பொருள் வெளியாய்
அமையுந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி – 62

உலகில் பிறப்பிக்கப்பட்ட எல்லா உயிர்களுக்கும் பசி என்கின்ற பிணியினை இறைவன் நிரந்தரமாகக் கொடுத்துள்ளான். மனிதனைத் தவிர மற்ற உயிரினங்கள் தங்களது பசி என்னும் பிணியினை எவ்வாறு தீர்த்துக்கொள்கின்றன? உணவின் மூலமாக தீர்த்துக்கொள்கின்றன. அந்த உணவு எது? அந்தந்த உயிரினங்களுக்கு பழக்கப்பட்ட உணவினை அந்தந்த உயிரினங்கள் உண்டு தங்களது பசியினை தீர்த்துக்கொள்கின்றன. பழக்கப்பட்ட உணவுகள் என்று சொல்லும்போது, அவைகள் எல்லாம் தனித்தனி உணவுகளையே உட்கொள்கின்றன. ஒரு உணவுடன் மற்றொரு உணவை கலந்து உண்ணும் பழக்கம் இதுவரை மனித உயிரினங்களைத் தவிர மற்ற உயிரினங்களுக்கு வரவில்லை. அதாவது உணவுப்பண்டங்கள் எவ்வாறு உள்ளதோ அதனை அப்படியே உண்டு வாழ்கின்றன. ஆனால் மனிதன் மட்டுமே நெருப்பினைக் கொண்டு தனக்கான உணவினை சமைத்து உண்கின்றான்.

          பலவகைப்பட்ட உணவுப் பண்டங்களை ஒன்றாகக் கூட்டி நாவிற்கு ருசியாக பலதரப்பட்ட சுவையுடன் உண்டு மகிழ்கின்றான். இப்படி நாவிற்கு ருசியாக சமைப்பவர்களுக்கு “சமையல் காரர்” என்று பெயர் வைத்துள்ளோம். இவரின் முக்கிய வேலை என்னவென்றால்? இயற்கையான சுவையை மாற்றி செயற்கையான சுவையினை கொண்டுவருவதுதான். அதில்தான் அவரது வெற்றி அமைந்துள்ளது. நாம் இதுவரை பெரும்பாலான காய்கறிகள், தானியங்கள் போன்ற உணவுப் பண்டங்களின் இயற்கை சுவையினை சுவைத்திருக்க மாட்டோம். இவைகளை எல்லாம் சமைத்து உண்டே பழக்கப்படுத்திக்கொண்டோம்.

          மேற்காணும் வயிற்றுப் பசியை நீக்க நமக்கு எவ்வாறு சமையல் காரர் தேவைப்பட்டனரோ அவ்வாறே நமது அறிவுப் பசியை நீக்கவும் பல்வேறு கால கட்டத்தில் உலகெங்கும் பல சமையல் காரர்கள் தோன்றினார்கள். சமையல் என்றாலே பல தரப்பட்ட உணவுப் பண்டங்களை ஒன்றாக்கி ஒரு புதிய சுவையான உணவினை தயாரிப்பதுதானே. அவ்வாறு பலதரப்பட்ட கருத்துக்களை ஒன்றாக்கி, இக்கருத்துக்களுக்கு உட்பட்டவன்தான் “இறைவன்”, என இறைவன் என்ற பொருளை சமைத்தார்கள். ஒவ்வொரு சமையல் காரனும் தனக்கான சில கருத்துக்களை ஒன்றாக்கி தத்தமது இறைவனை சமைத்தார்கள். அவ்வாறு சமைத்தவையே “சமயம்” என்று உலகினில் வழங்கப்பட்டு வருகின்றது.

          ஒவ்வொரு சமையல் காரனுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததால், அவர்கள் சமைத்த இறைவனும் வேறுபட்டு நின்று, பல்வேறு பட்ட சமயங்களும் இறைவன்களும் கருத்தளவில் தோன்றிவிட்டார்கள். எனது பசிக்கு இதுதான் உணவு என்பதுபோல, எனது அறிவுக்கு இவன்தான் இறைவன் என்று பழக்கப்படுத்திக்கொண்டார்கள்.

          சமையல் என்றாலே செயற்கைதானே! அங்கே இயற்கை உணவின் சுவை எவ்வாறு அறியப்படும்? அதுபோல சமைக்கப்பட்ட சமயங்களும் செயற்கைதானே! அங்கே இயற்கை இறைவனின் சுவையினை எவ்வாறு அறியப்படும்? முடியாது… முடியவே முடியாது.  எனவே சயங்களின் பலவகைப்பட்ட கருத்துக்களுக்கு அப்பாற்பட்டவன் இறைவன். அவன் விளங்கக் கூடிய திருச்சபையும் சமயக் கருத்துக்களுக்கு அப்பாற்பட்டதுதான்.

          “செப்புங் கலைகளெலாந் தேர்ந்துரைக்கிற் கற்பனையா
           யொப்பும் படியாகு முண்மையிதே… (பிரபந்தத்திரட்டு-828)

என்று வள்ளலாரின் அணுக்கத் தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளையும் தமது பிரபந்தத்திரட்டில் பாடியிருப்பதை பார்க்கிறோம். சொல்லுகின்ற கலைகள் என்கின்ற சமயக் கருத்துகளெல்லாம் ஆழ நோக்கில் அவையெல்லாம் கற்பனையால் ஆனதே, இதுதான் உண்மை. என்று ச.மு.க. உரைக்கின்றார்.

          மனிதனைத் தவிர மற்ற உயிரினங்கள் எவ்வாறு சமைக்காது ஒரு பொருளின் இயற்கை சுவையினை அப்படியே உண்டு பசியாறுகின்றதோ அவ்வாறு நாமும் சமயங்களில் புகாது இறைவனை நமது கருத்துக்களுக்கு உட்படுத்தாது / சமைக்காது உள்ளதை உள்ளபடியே அனுபவிக்க வேண்டும். இறைவன் எவ்வாறு உள்ளான்? என்று சொல்லும்போது கருத்துக்கள் எழுகின்றன. கருத்துக்களால் சொல்லப்படும் இறைவன் இறைவனே அல்ல. அருட்பெருஞ்ஜோதியே இறைவன் என்றாலும் அது ஒரு கருத்துக்குள் புகுந்துவிடுகின்றது. எனவேதான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தம்முள் காணும் “அனுபவம்” என்பார் வள்ளலார். இனிப்பு எவ்வாறு உள்ளது? என்பதை கருத்தால் சொல்ல முடியுமா? அதனை ஒவ்வொருவரும் அனுபவித்தே தெரிந்துக்கொள்ள வேண்டும். நாம் எல்லோரும் இனிப்பை வழிபட்டு வருகிறோம். இனிப்பு இவ்வாறுதான் இருக்கும் என சில கருத்துக்களை பின்தொடர்ந்து பஞ்சபூத வழிபாடு, நவகிரக வழிபாடு, அருவ வழிபாடு, உருவ வழிபாடு என்று சமைக்கப்பட்டு வழிபடுகின்றோம். வழிபடும்வரை அதன் சுவை நமக்குத் தெரியப்போவதில்லை. அதனை வழிபடுவதை விடுத்து அதனை உண்ணும்போதுதான் அதன் சுவை நமக்குத் தெரியவரும்.  

          அருட்பெருஞ்ஜோதி என்கின்ற இனிப்பு எங்கே உள்ளது? நமது உடம்பில் உள்ள ஆகாயமான திருச்சபையில் உள்ளது. அந்தத் திருச்சபை யாராலும் சமைக்கப்படாமல் சமயக்கருத்துக்களை எல்லாம் பொய் என்று சொல்லும்படியாக ஆதி அனாதியாக உள்ளது. அந்தத் திருச்சபையை அப்படியே சுவைத்து விழுங்குங்கள். அப்போது உங்களுக்கு இனிப்பென்னும் அருட்பெருஞ்ஜோதி அனுபவம் கிட்டும். அதனை விழுங்க ஆசார சங்கற்ப விகற்பங்களிலும் மற்ற சாதனங்களிலும் சென்று சமைக்கின்ற சமய வேலையினை செய்தல் கூடாது. உள்ளதை உள்ளபடியே அனுபவியுங்கள். ஒரு பனித்துளியை எவ்வாறு சூரியன் விழுங்குகிறதோ அவ்வாறு விழுங்குகள்.

          சமயக் கருத்துக்களை / தத்துவங்களை எல்லாம் பொய் என்று நிறுத்தி அதனை கடந்து தனித்த பொருளாய் திருச்சபையில் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.       


முச்சுடர் களுமொளி முயங்குற வளித்தருள்
அச்சுட ராஞ்சபை யருட்பெருஞ்ஜோதி - 64

முச்சுடர் என்பது சூரியன், சந்திரன், அக்கினி எனபன. சூரியன் உருவமுடையவன், காரியன் ஆவான். சந்திரன் உருவமுடன் அருவமுடையவன், காரிய காரணன் ஆவான். அக்கினி அருவன், காரணன் ஆவான். சூரிய சந்திர ஒளிகளுக்கு காரணமாக உள்ளது அக்கினியாகும். இந்த அக்கினிக்கு காரணமாக உள்ளது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகும்.


முயங்குதல் என்றால் தழுவுதல்/புணர்தல்/பொருந்துதல் என்று பொருள். முச்சுடர்களாகிய சூரிய சந்திர அக்கினி என்பவைகளில் தமது அருள் ஒளியினை ஒன்றோடு ஒன்றாக பொருத்திக்கொண்டு அவை மூன்றிலும் ஒளியாகி இருப்பது அருட்பெருஞ்ஜோதியாகும்.

நமது உடலில் புருவ நடுவான திருச்சபையில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரானவர் இம்முச்சுடருடனும் ஒன்றோடு ஒன்று புணர்ந்து ஒளிவீசிக்கொண்டிருக்கிறார். அனுபவத்தில் வலது கண் சந்திர ஒளியாகவும், இடது கண் சூரிய ஒளியாகவும், அக்கினி புருவ நடுவில் அரூபமாகவும் இருக்கின்றது.

முச்சுடர்களையும் பிரகாசிக்க வைக்கும் சுடராக, முச்சுடர்களையும் ஒன்றோடு ஒன்றாக தழுவிக்கொண்டிருக்கும் சுடராக திருச்சபையில் விளங்கிக்கொண்டிருக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.

துரியமுங் கடந்த சுகபூ ரணந்தரும்
அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி – 66

துரியம் என்பது யோக நிலையில் அனுபவிக்கும் அதீத இன்பத்தைக் குறிக்கும். ஆயிரம் தாமரை இதழ்கள் அமைப்பைக் கொண்டது துரிய சக்கரம். ஊதா நிறத்துடன் அடர் பொன்னிறம் கொண்டது. நமது மூளையே இருப்பிடம். ஆயிரம் யோக நாடிகள் இந்த சக்கரத்திலிருந்து கிளம்புகின்றன. தன்னிலை கடந்து ஆன்ம விடுதலையைக் கொடுத்து பேரானந்தத்தை அள்ளித்தருவது இந்த துரிய நிலையாகும்.

துரிய தவம் செய்கையில் ஆன்மா பழி செயல் பதிவுகளில் இருந்து தூய்மை பெறும். நடு மனத்தை வெற்றி கொள்ளும். நாம் என்னும் உயரிய எண்ணம் பல பேர் உள்ளத்தில் பிரதிபலிக்கும். நாம் கொடுக்கும் சங்கல்பம் மற்றும் வாழ்த்துக்கள் நன்கு செயல்படும். மனதிற்கு வேகமும் நுட்பமும் எளிதில் உணர்ச்சி வயப்படாத நிலையும் கிடைக்கும். எண்ணத்தை ஆராயவும், அகத்தாய்வு செய்யவும் கவலைகளை ஆராய்ந்து ஒழிக்கவும் துணை புரியும். தன் வினையிலிருந்து விடுவிக்கப்படுவோம். உள்ள கலங்கமும், உடல் கலங்கமும் துடைக்கப்பட்டு தூய்மை உண்டாகும்.

யோக நிலையில் துரியத்தின் அனுபவத்தையும் அதன் இருப்பிடத்தையும், அதன் நிறங்கள், குணங்கள் ஆகியவைகளையும் மேற்கண்டவாறு பலவாக விளக்கியுள்ளனர் நமது முன்னோர்கள். ஆனால், வள்ளற்பெருமான் இவைகளை ஒருவாறு மறுக்கின்றார்.

“… இவ்வள வனுபவமும் பூர்வத்திலுள்ள அனுபவிகளால் குறிக்கப்பட்ட நிலைகளில் இல்லை. ஒருவாறு குருதுரிய பரியந்தம் வேதாகமங்களாலும் தத்துவராயர் முதலிய மகான்களின் அனுபவத்தாலும் குறிக்கப்படும். அதற்கு மேற்பட்ட அனுபவம் சுத்த சன்மார்க்கத்தில் சாத்தியம்” என்று குறிப்பிடுகின்றார். (திருவருட்பா-உரைநடை நூல்-பக்கம்-369)

துரியம், துரியாதீதம் என்று சமய வழக்கில் சொல்லப்பட்டதெல்லாம் ஒரு முழுமையான விளக்கமாக இல்லை. ஒருவாறு (முழுமை இல்லாமல்) குருதுரிய பரியந்தம் (குருதுரிய எல்லைகள்) இந்து மத வேதங்களிலும் தத்துவராயர் முதலான மகான்களின் அனுபவத்திலும் குறிக்கப்பட்டுள்ளது. இந்த துரியாதீதத்திற்கும் அதீதம் சுத்த சன்மார்க்கத்தில் மட்டுமே சாத்தியம் என வள்ளற்பெருமான் குறிப்பிடுகின்றார்.

“சமரசம்” என்கிற அனுபவத்தையே “குருதுரிய” அனுபவமாக வள்ளலார் குறிப்பிடுகின்றார்.

“எல்லா அந்தங்களினது அந்தமும் தனக்குப் பூர்வமாக்கித் தான் உத்திரத்தி னின்று மருவியது சமரசம். இதற்கு அனுபவம் “குருதுரிய ஸ்தானம்”. (திருவருட்பா-உரைநடை நூல்-பக்கம்-402)

வேதாந்தம், சித்தாந்தம், போதாந்தம், நாதாந்தம், யோகாந்தம், கலாந்தம் என்கின்ற ஆறு அந்தங்களின் முடிபுகளும் தமக்கு முதன்மையாக்கி தானே மேலோங்கி நிற்கும் அனுபவமே “சமரம்” ஆகும். இதுவே குருதுரிய (குரு-மாசற்றது) இடமாகும். வேதங்களில் / சைவ சித்தாந்தங்களில் சொல்லப்பட்டுள்ள மேற்காணும் ஆறு அனுபவங்களின் முடிபுகளின் முடிபுகளே இங்கே (சமரசம்) ஆரம்பநிலையாகி உள்ளதென்றால், சன்மார்க்கம் உரைக்கும் குருதுரிய நிலையின் முடிபு எப்படிப்பட்டது  என்று உணர முடிந்தால் உணருங்கள்.

இப்படிப்பட்ட துரிய நிலையினையும் கடந்தது சிற்றம்பல அனுபவமாகும். சிற்றம்பல அனுபவமானது நமக்கு சுகபூரணத்தை தருவதாக உள்ளது. துரிய நிலையே சுகம்தரும் நிலையாகும். எனினும் அச்சுகமானது முழுமையான சுகம் அன்று. சிற்றம்பல சுகமே முழுமையான சுகமாகும். ஒரு அறையில் உள்ள ஒருவன் மின் விசிறியைக் கொண்டு (Fan) காற்றின் சுகத்தை அனுபவிப்பது துரிய சுகமாகும். அதே அறையில் குளிர் சாதனத்தைக் கொண்டு (Air Condition) காற்றின் சுகத்தை அனுபவிப்பது சிற்றம்பல சுகமான முழுமையான சுகமாகும். இச்சிற்றம்பல அனுபவம் ஒரு சிலருக்கே கிடைக்கூடிய மிக அரிய சுகமாக உள்ளது.

“இதுவன்றோ முத்திநெறி யீதன்றோ சித்தி
 யிதுவன்றோ சன்மார்க்க மென்றே…” (பிரபந்தத்திரட்டு – 728)

இதுதானே முத்தி, இதுதானே சித்தி, இதுதானே சன்மார்க்கம் என்று இந்த  சிற்றம்பல சுகபூரண அனுபவத்தையே சமரச பஜனை காரணப்பட்டு ச.மு.க. அவர்களும் பாடி மகிழ்கின்றார்.

                      
எல்லவருக்கும் கிடைப்பதற்கு அரிதாக இருக்ககூடிய துரிய அனுபவத்தையும் கடந்த சிற்றம்பல அனுபவமான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.

          எவ்வகைச் சுகங்களு மினிதுற வளித்தருள்
          அவ்வகைச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி – 68

சிற்சபை என்றாலே அது இன்பத்தை / சுகத்தை அளிக்கக்கூடியதாகும். சுகம் என்பது என்ன? சுகம் என்பது  இதுதான் என்று குறிப்பிட்டு ஒன்றை மட்டும் உரைக்க முடியாதவாறு அது பல்வேறு வகையானதாக உள்ளது. இதனை இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். ஒன்று உலகியல் சுகங்கள் மற்றொன்று அருளியல் சுகங்கள். உலகியல் சுகங்கள் என்னென்ன? இதற்கு வரையறையே இல்லை. உலகியல் வாழ்க்கையில் நிகழும் யாவும் சுகமே. காமம், மோகம், ஆசை, பற்று, கல்வி, வேலை, ஊதியம், உணவு, உடை, வீடு, குழந்தைகள், அதிகாரம், புகழ், ஆடம்பர பொருட்கள், வாகனங்கள், பொன், பூமி, பதவி போன்ற எண்ணற்ற சுகங்கள் உண்டு.  பிறருக்கு கெடுதல் செய்யும் செயல்களான கோபம், பொறாமை, வஞ்சகம், கொலை, ஏமாற்றுதல், பொய் சொல்லல் போன்ற வன் செயல்களாலும் சிலர் சுகமடைவர். இச்சுகங்கள் எல்லாம் ஒரு முழுமையான சுகங்களாக இருக்க முடியாது. ஏனெனில் இச்சுகத்துடன் துக்கங்களும் சேர்ந்தே இருக்கின்றன. எனினும் மக்களில் பலர் இப்படிப்பட்ட உலக சுகங்களையே நாடி ஓடுகின்றனர்.


ஒரு தாயானவள் பெரும் துக்கத்திற்கு ஆட்பட்டு குழந்தையை ஈனும்போது சுகப்படுகின்றாள். இதைவிட இவ்வுலகில் வேறு என்ன சுகம் வேண்டும்?! என்று அகம் மகிழ்ந்து தமது குழந்தையை கொஞ்சுகிறாள். உணவிற்காக ஒரு ஆட்டினை கொலை செய்யும்போது அவ்வாட்டிற்கு ஏற்படும் வலியும் துக்கமும் துடிப்பும் இவனுக்கு சுகமாகத் தெரிகின்றது. வலைகளில் துள்ளும் மீனின் வலியும் துக்கமும் துடிப்பும் இவனுக்கு சுகமாகத் தெரிகின்றது. ஒரு உயிரை இவ்வுலகில் ஈனும்போதும் துக்கமே முன்நிற்கின்றது. ஒரு உயிரை இவ்வுலகைவிட்டு பிரிக்கும்போதும் துக்கமே முன்நிற்கின்றது. எனினும் இவ்விரு துக்கங்களும் மனிதர்களுக்கு ஏதோ ஒரு வகையான சுகத்தையும் அளிக்கின்றது.

மனிதர்களுக்கு மட்டுமே சிற்சபை அனுபவம் உண்டு. எனவே மனிதர்கள் அடையும் சுகங்கள் யாவும் அவரவர்களுடைய சிற்சபையே அளிக்கின்றன. எனவே ஒரு மனிதன் தமது சிற்சபை வழியாகவே சுகம் காண்கின்றான். அச்சுகத்திற்கான காரணங்கள் எல்லாம் சிற்சபையில் பதிவாகின்றன.  நாம் ஏதேனும் சுகத்தை அனுபவிக்கும்போது, இப்போதுதான் என் மனம் குளிர்ந்தது என்கிறோம். ஆனால் உண்மையில் சுகத்தை அனுபவிப்பது நமது மனம் அல்ல. நமது ஆன்மாவே ஆகும். ஆன்மா அமர்ந்திருக்கும் சிற்சபைதான் சுகங்களை அளிக்கின்றன. சுகத்திற்குண்டான காரணங்கள் நல்வழி பட்டதா? தீயவழி பட்டதா? என்பதை எல்லாம் சிற்சபையானது தம்முள் பதித்துவிடுகின்றது. அப்பதிவுக்கேற்ப நமக்கு மரணமும், மறு பிறவியும் கிடைக்கின்றது.

இதுவரை நாம் கண்டது உலகியல் சுகங்களில் சுருக்கமாகும். தற்போது அருளியல் சுகத்தை பார்த்தோமானால்… சிற்சுகம் அடைவதே பூரண சுகமாக உள்ளது. சிற்சபை அளிக்கக்கூடிய சுகங்களிலே முழுமையான சுகம் இந்த சிற்சுகம் ஒன்றே ஆகும். சிற்சுகம் என்பது நமக்கு மரணமில்லா பெருவாழ்வை அளிக்கக்கூடியது. அருள் சுகம், பரசுகம், ஞானசுகம், மெய்ச்சுகம் என்று பல்வாறு இதனை அழைக்கலாம். உலகியல் சுகங்களிலே சுகத்துடன் துக்கமும் உண்டு. அருளியல் சுகத்தில் முழுவதும் சுகம் மட்டுமே அனுபவிக்கப்படும். அருளியல் சுகங்களிலும் சிற்சபை சுகத்திற்கு கீழ்ப்பட்ட சுகங்கள் எண்ணற்றவை உண்டு. சரியை, கிரியை, யோகம் போன்ற படிநிலைகளில் காணும் சுகங்களில் துக்கமும் கலந்திருக்கும். சிற்சபையில் இந்த அருளியல் துக்கங்கள் ஏற்படுத்தும் பதிவுகள் நமக்கு அருளியல் தடைகளை உண்டுபண்ணும். ஆகவே அருளியல் சுகத்தை விரும்புபவர்கள் ஞானத்தில் ஞானம் என்ற முடிபான படிகளையே கடைபிடித்து சுத்த சன்மார்க்கத்தை கடைபிடித்தால் சிற்சபை சுகம் நமக்கு வாய்க்கும்.

“எந்நிலை விரும்பினும் அன்பர்க்கு விரைந்து
 அந்நிலை அருளும் அருட்பெருஞ் ஜோதி” -  (திருச்சபை)

இவ்வாறு நாம் தேர்ந்தெடுக்கும் எவ்வகை சுகங்களையும் நமக்கு தங்கு தடையின்றி அளிக்கக்கூடியதாக நமது சிற்சபை அமைந்துள்ளது. காமத்தால் சுகம் காணும்போது நமது சிற்சபையும் காமத்தால் நிறைந்துவிடும். பிறரை கொலை செய்து சுகம் காணும்போது நமது சிற்சபையும் கொலைகாரனாக மாறிவிடுகின்றது. இப்படி எவ்வகையில் நமக்கு சுகம் கிடைக்கின்றதோ அவ்வகையில் நமது சிற்சபை மாறிவிடுகின்ற தன்மையினை கொண்டுள்ளது.

அருளியல் சுகங்களோ உலகியல் சுகங்களோ இவை இரண்டில் எவ்வகை சுகங்களை மக்கள் கேட்பினும் அவ்வகை சுகமாக இருந்து தடைகளின்றி இனிமை சூழும்படியாக அச்சுகத்தினை அளித்து இன்பமுற செய்யும் சிற்சபையினை அளித்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.

இயற்கையுண் மையதா யியற்கையின் பமுமாம்
அயர்ப்பிலாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி     - 70

இயற்கை உண்மை என்பது என்ன?

          வள்ளலார் பல இடங்களில் இயற்கை விளக்கம், இயற்கை உண்மை, இயற்க்கை இன்பம் என்ற பதங்களை பயன்படுத்துகிறார்கள் .

சத்திய ஞான சபை விளம்பரத்தில்:-

           இறைவனுடைய இயல்பை எடுத்தியம்பும்போது, இயற்கையில் தானே விளங்குகின்றவராக உள்ளவர் என்றும், இயற்கையில் தானே உள்ளவராய் விளங்குகின்றவர் என்று வள்ளலார் எடுத்துரைப்பர்.

சுத்த சன்மார்க்க சத்திய சிறு விண்ணப்பத்தில்:-

          இறைவனுடைய இயல்பை எடுத்தியம்போது, இயற்கை உண்மையர் என்றும், இயற்கை அறிவினர் என்றும், இயற்கை இன்பினர் என்றும் எடுத்துரைப்பர்.

சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான விண்ணப்பத்தில்:-

          இயற்கை விளக்கம் என்கின்ற சத்திய ஞானசபைக் கண்ணே, இயற்கை உண்மை என்கின்ற சத்தியத் திருவுருவினராய், இயற்கை இன்பம் என்கின்ற சத்தியத் திருநடஞ் செய்தருள்கின்ற இயற்கைத் தனிப்பெருங் கருணைத் தனிப் பெரும்பதியாய தனித் தலைமைக் கடவுளே!........ ............ .............  திருவருட்சமூகப் பெருங்கருணைப் பெரும் பதியாய தேவரீர் இயற்கைத் திருவண்ணம் அறிந்துகொள்ளுதல் எங்ஙனமோ! எங்ஙனமோ!! என்று வள்ளலார் வியப்பர்.

ஜீவகாருண்ய ஒழுக்கம் - முதற் பிரிவில்:-

          ஆன்மலாபம் எதுவென்று அறியவேண்டில்:- எல்லா அண்டங்களையும், எல்லாப் புவனங்களையும், எல்லாப் பொருள்களையும், எல்லாச் சீவர்களையும், எல்லா ஒழுக்கங்களையும், எல்லாப் பயன்களையுந் தமது பூரண இயற்கை விளக்கமாகிய அருட்சத்தியால் தோன்றி விளங்க விளக்கஞ் செய்விக்கின்ற இயற்கை உண்மை வடிவினராகிய கடவுளின் பூரண இயற்கை இன்பத்தைப் பெற்று எக்காலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும், எவ்வளவும் தடைபடாமல் வாழ்கின்ற ஒப்பற்ற பெரியவாழ்வே இந்த மனிதப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்மலாபமென்று உண்மையாக அறியவேண்டும்.

          இயற்கை இன்பத்தைப் பெற்றுத் தடைபடாமல் வாழ்கின்ற அந்தப் பெரியவாழ்வை எதனால் அடையக்கூடுமென்று அறியவேண்டில்:- கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருளைக் கொண்டே அடையக்கூடும் என்றறிய வேண்டும்.

          கடவுளின் இயற்கைவிளக்கமாகிய அருளை எதனாற் பெறக்கூடுமென்று அறியவேண்டில்:- சீவகாருணிய ஒழுக்கத்தினால் கடவுள் அருளைப் பெறக்கூடுமல்லது வேறெந்த வழியாலும் சிறிதும் பெறக்கூடாது என்று உறுதியாக அறிதல் வேண்டும்.

இயற்கை விளக்கம் என்பதுஅருள்        - சத்திய ஞான சபை  - ஜோதியுள்
இயற்கை உண்மை என்பதுவடிவம்       - சத்திய திரு உரு    - ஜோதியுள்
இயற்கை இன்பம் என்பது - பூரண இன்பம்  - சத்திய திரு நடம்    - ஜோதி

எல்லா அண்டங்களும், எல்லா உலகங்களும், எல்லாப் பொருள்களும், எல்லாச் சீவர்களும், எல்லா ஒழுக்கங்களும், எல்லாப் பயன்களுமே இயற்கையாகும். எனவே, அந்த இயற்கையே இறைவனின் அருளாகவும், அந்த இயற்கையே இறைவனின் வடிவமாகவும், அந்த இயற்கையே இறைவனின் இன்பமாகவும் உள்ளது. நாம் அந்த இயற்கை இன்பத்தை அடைவதுதான் நமக்கு இறைவன் இப்பிறப்பில் கொடுத்த முதல் வேலையாகும்.

இயல்பாக இருப்பது, என்றும் இருப்பது, இது அது என்று உரைப்பதற்கு அரிதாய் இருப்பது இயற்கையாகும். இவ்வாறான இயற்கைக்கு விளக்கமாகவும், இயற்கைக்கு உண்மையாகவும், இயற்கைக்கு இன்பமாகவும் நாமும் இருக்கவேண்டியது அவசியம். கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் அவசியம். எனவே இயற்கையாம் கடவுள் தனது விளக்கம் என்னும் அருளையும், தனது உண்மை என்னும் வடிவத்தையும், தனது இன்பம் என்னும் பூரண பெருஞ்சுகத்தையும் நமது ஒவ்வொருவரின் மனித உடலிலும் சிற்சபை என்னும் மாடத்தில் பொதித்து வைத்துள்ளார். எனவே நமது மனித உடலே இயற்கையாம் கடவுளின் நிலை எனக்கொள்ள வேண்டும். நாம் நமது உடம்பின் மயமாய் முற்றும் நிறைவதுதான் கடவுள் மயமாதல் ஆகும். அதுதான் மரணமில்லா பெருவாழ்வாகும். சன்மார்க்கனின் சிற்சபையானது மேற்காணும் பெருஞ்சுகத்தை அடையவும் அடைந்தும் அயர்ப்பில்லாது / சோர்வடையாது / மரணமில்லாது இயங்கிக்கொண்டே இருக்கும். வள்ளற்பெருமானின் சிற்சபை இயங்கிக்கொண்டே இருக்கின்றது. இயற்கைக்கு மரணந்தான் உண்டோ? நாமும் சாகாத சன்மார்க்கியாய், நமது ஊன் உடம்பே ஒளியுடம்பாக்கி வாழ வேண்டுமாகில் நமது சிற்சபையின் இயக்கத்தை சோர்வில்லாது வைத்துக்கொள்ள வேண்டும். சிற்சபை சோர்வில்லாமல் இயங்குவதை அறிவதே அருளாகும்.

“பெருவாழ்வு பெறுவதே பேருலகப்
          பேச்சாய் ஆனதே பெருஞ்ஜோதி
 ஒருதெய்வம் என்பதே உண்மை
          என்றானதே புலை கொலையும்
 இருந்தத் தடமின்றி போனதே
          அறிவுத் திருச்சபையே உடல்
  உருவாய் இருந்து ஓங்குதே
          உத்தமநிலை வந்து தாங்குதே.” – (திருச்சபை)

அறிவுத் திருச்சபையாம் சிற்சபையே உடல் உருவாய் இருந்து ஓங்கும் பொழுது உத்தம நிலையாம் மரணமில்லா பெருவாழ்வு வந்து எய்தும் என்று “திருச்சபை”யும் பாடுகின்றது.      


இயற்கை உண்மையான என்றும் உள்ள உருவுடன், இயற்கை இன்பமான பூரண சுகத்துடன், மரணம் என்கின்ற தடைகள் ஏதுமில்லாமல் என்றுமுள்ளதுவாக இருக்கின்ற சிற்சபையில் நிறைந்து விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.

                                       --- தி.ம.இராமலிங்கம்.

பொட்டி சுவாமிகள்

காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மின்னிதழில் ஆகஸ்ட்-2017 மாதம் வெளியானது…

பொட்டி சுவாமிகள்



காஞ்சி மாவட்டத்தில் உள்ள முத்தியால்பேட்டை என்ற ஊரில் கன்னட சைனிகர் சமூகத்தில் முத்து செட்டியார், போடி அம்மையாருக்கும், அவர்கள் செய்த தவ பலனாக 1824 ஆண்டு வியாழக்கிழமை மகனாக அவதரித்தார். பெற்றோர் சூட்டிய நாமம் பொட்டி செட்டியார் என்பதாகும். துறவறம் பூண்டு பிரும்மானந்த நிலையை அடைந்த காலத்தில் `பிரும்மானந்த சுவாமிகள் என அழைக்கப்பட்டார். உரிய காலத்தில் பெற்றோர் பள்ளியில் சேர்த்தனர். ஆசிரியர் உரைக்காமலே எல்லாம் கற்று உணர்த்தார். பள்ளியை விட்டு தம் குல தொழிலான நெசவு தொழிலில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்தார். நெசவு செய்யும் போதும், நடக்கும் போதும் எந்த நேரத்திலும் `ஒழுவில் ஒடுக்கம் ` எனும் சாத்திரத்தை சிந்தனை செய்து கொண்டு அமைதியாக இருப்பது வழக்கம். மணப்பருவம் வந்தபின், பெற்றோர்கள் இவருக்கு நற்குணங்களில் சிறந்த பருவம் அடையாத கன்னிகையை மணமுடித்து வைத்தனர். திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கழிந்தபின் பருவம் அடைந்த மனைவிக்கு உரிய சடங்குகள் செய்தனர். சாந்தி முகூர்த்தம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. குல வழக்கப்படி    மணமகளை      அலங்கரித்து அறைக்குள் அனுப்பி வைத்தனர். சுவாமிகள் முன்னமே பழகிய சாந்தி, தாந்தி ஆகிய சமாதி நிலையில் உடன்பாடாகி உடனே அறையை விட்டு வெளியேறினார். சுவாமிகள் வெளியே சென்று விட்டதை கண்டு மருண்டு மணமகள் வெளிவர, பெற்றோர்கள் நடந்ததை அறிந்து இரவு முழுவதும் தேடி கிடைக்காததால் வருத்தமுற்றனர். சாந்தி முகூர்த்த அறையை விட்டு வெளியேறிய சுவாமிகள் சேணியர் வீதிக்கு மேல் கோடியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலயத்தின் தென்புறம் உள்ள ஒரு இலுப்ப மரத்தின் அடியில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்து விட்டார்கள். தியான நிலையில் இரண்டு நாட்கள் இருந்து மூன்றாம் நாள் பிற்பகலில் தியானம் கலைந்து கோவணத்துடன் உன்மத்தம் கொண்டவர்போல் உலவ ஆரம்பித்தார். பெற்றோரும் உறவினரும் ,வீடு திரும்ப எடுத்த முயற்சிகள் எல்லாம் வீணாயிற்று. இந்நிலையில் ஸ்ரீ நித்யானந்த சுவாமிகளின் உபதேசம் பெற்று சாதனை கைவரப்பெற்றவராய் பிரும்ம நிலையில் அருள்பெற்று ஸ்ரீ பிரும்மானந்த சுவாமிகள் என்று திருப்பெயர் கொண்டு துறவு வாழ்க்கை மேற்கொண்டார்.

          சுவாமிகள் தான் பிறந்த ஊரிலே யாசித்து   உண்ண    ஆரம்பித்தார். வீட்டின் முன்புறம் நின்று சோறு, சோறு என்று கேட்பார். வீட்டில் உள்ள பெண்கள் சுட சுட சமைத்த உணவை தட்டில் வைத்துகொண்டு கொடுத்தால் அதில் இரண்டு அல்லது முன்று பிடி சோற்றினை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு சென்று விடுவார். யாராவது வலிய அழைத்து சென்று அறுசுவை உணவு படைப்பதாக இருந்தாலும் அதற்கு உடன்படமாட்டார். எந்த வீட்டில் சோறு கேட்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அங்கு தான் செல்வார். தன மனைவியிடம் கூட பல தடவை சோறு கேட்டு அந்த அம்மையாரும் இறைவன்போல் எண்ணி
பக்தியுடன் அன்னம் படைப்பதும் உண்டு.

          அந்நாளில் ஆங்கிலேய சப் கலக்டர் ஒருவர் குதிரை மேல் போய் கொண்டிருக்கும் போது கோவணத்துடன் உலாவிக்கொண்டிருந்த நம் சுவாமியை பார்த்து தன பிரம்பால் அடைக்க கையை ஓங்கியபோது கை அப்படியே நின்று விட்டது. பிறகு அந்த ஆங்கிலேயர் பயந்து `தங்கள் மகிமை அறியாது தவறு செய்துவிட்டேன். மன்னித்து அருளவேண்டும் ` என்று மனமுருகி வேண்ட, கையானது பழைய நிலையை அடைந்தது.

          சுவாமிகள் உறங்கியே யாரும் பார்த்ததில்லை.முத்தியால்பேட்டை, அய்யம்பேட்டை ஆகிய கிராமத்தில்தான் உலவி கொண்டு இருப்பார். பொடி போடும் பழக்கம் நம் சுவாமிக்கு உண்டு. யாராவது பொடி போடும் ஆசாமிகள் போனால் பொடி, பொடி என்று கேட்பார். பொடி மட்டையை கொடுத்தால் அதில் ஒரு சிட்டிகை பொடியை எடுத்துக்கொண்டு போகும் போக்கில் போட்டுக்கொண்டே போய் விடுவார்.     மட்டையை     நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் சுவாமி என்று கையில் கொடுத்தால் அதை தூக்கி வீசி விட்டு போய் விடுவார்.

          சுவாமிகள் தினம்தோறும் தான் அனுபவிக்கும் பேரானந்த சுகத்தில் தன கையால் சுடக்கு போட்டுக்கொண்டும் தொடையை தட்டிக்கொண்டும் ஆனந்தமாக கொஞ்ச தூரம் ஓடுவார்கள். பின்பு தனக்குள்ளே சிரித்து கொள்வார்கள்.

          சுவாமிக்கு வெல்லதினால் செய்த அதிரசம் விருப்பம். சிறுமதி படைத்தவர் சிலர் உளுந்து வடையை கொடுத்து, `சுவாமி இது அதிரசம் சாபிடுங்கள்` என்று கொடுக்க அது அதிரசமாகவே மாறி சுவாமி சாப்பிடுவதை கண்டு செய்த பிழைக்கு மன்னிப்பு கேட்டு வணங்கி சென்றனர்.

          சில நாட்கள், ஸ்வாமிகள் வீதியில் உள்ள பலசரக்கு கடைகளுக்குள் தாமே சென்று ஒரு பிடி வெல்லமும் ஒரு பிடி உடைத்த கடலையும் இரண்டையும் கலந்து சாப்பிட்டுக் கொண்டே செல்வார். வீதியில் உள்ள குழந்தைகள் அவர் பின்னால் சுவாமி, சுவாமி என்று கேட்டுக் கொண்டே போனால் கையில் உள்ளதை அப்படியே கொடுத்துவிட்டு சென்று விடுவார். இப்படி இவர் கடைக்கு வந்து எடுத்துப் போகும் நாளில் வியாபாரம் மிகவும் நன்றாக நடக்கும். கடைக்காரர்கள் இன்று நம் கடைக்கு வர மாட்டாரா என்று எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.

          சுவாமிகள் அய்யன்பேட்டை அஷ்டலிங்க சுவாமி மடத்தில்தான் இரவு நேரங்களில் பனை ஓலை தடுக்கின் மேல் பெரும்பாலும் உறங்குவது வழக்கம். சுவாமிகள் நிலையானது கை வேறு கால் வேறாக பிரிந்த நிலையில் இருக்க உறக்கம் களையும்போது        ஒன்றாக            சேரும் அற்புதத்தை பலர் கண்டு உள்ளனர்.

          சுவாமிகளின் பிரும்மானந்த நிலையை அறிந்த பல துறவிகளும், சாதுக்களும் இவரை வலம் வந்து வணங்கி ஆசி பெற்று சென்றுள்ளனர். சாதாரண மக்களுக்கும் நோய் நீக்கியும், இடர் தீர்த்தும் அருள் செய்துள்ளார்கள். 

விதேக...முக்தி 

          இப்படியாக 91 வருட காலம் இப்புவியில் ஜீவன் முக்தராக வாழ்ந்து அருளாட்சி செய்து கொண்டிருந்த சுவாமிகளின் விதேக முக்தி அடைய வேண்டிய நேரம் வந்தது. ஆங்கில ஆண்டு 1915, சித்திரை மாதம் 29 ஆம் நாள் மங்கள வாரம் திரியோதிசி திதி, ரேவதி நட்சத்திரம் அன்று சின்ன காஞ்சிபுரம் பட்டாளத் தெருவில் உள்ள ஒரு வீட்டில் சுவாமிகள் சென்று சோறு கேட்டார்கள். அந்த நேரத்தில் சோறு சமைக்கப் படாததால் கேழ்வரகு கூழை சுவாமிகளுக்கு அன்புடன் படைத்தார்கள். அதை உண்டு அவ்வீதிக்கு வடக்கே உள்ள தேவ ராஜ சுவாமி குளத்தில் மூழ்கி எழுந்து ஒரு மரத்தடியில் கிழக்கு முகமாக தர்பாசனம் 
இட்டு சரீரத்தை விட்டு விதேக முக்தி அடைந்தார்கள். 

         இதை அறிந்த சைனிக சமூக மக்கள் சுவாமிகள் உடலை புஷ்ப பல்லகில் வைத்து தேவார திருவாசக கோஷ்டி பாராயணத்துடன் எடுத்து வந்து முத்தயால்பேட்டை கிராமத்தில் ஆதியில் சுவாமிகள் வீட்டை துறந்து தியானம் செய்த இலுப்ப மரத்தடியில் வைத்து சமாதி எழுப்பினார்கள். பின்னர் சிறிய ஆலயமாக கட்டப்பட்டு சித்திரை மாதம் ரேவதி நட்சத்திரம்     அன்று    குரு   பூஜை நடந்து வருகிறது. அன்று அபிஷேக ஆரதனைகள் நடைபெற்று அன்ன தானமும் சிறப்பாக நடைபெற்று...வருகிறது.

         சுவாமிகள் சமாதியில் பொரிகடலை வெல்லம் வைத்து படைத்து பேசாத குழந்தைகள் மாறி பேசும் நிலை அடைந்ததை..பலர்..அறிவர். 

         தன துயரங்களை கூறி சமாதி முன்பு சூடம் ஏற்றி வலம் வந்தவர்கள் மன அமைதி பெற்றுள்ளனர். 


         சமாதியில் உள்ள லிங்கத்தை நோக்கி தியானம் செய்தவர்கள் உடல் நலம் பெற்றுள்ளனர். 

Friday, August 4, 2017

வள்ளற்பெருமானின் நடத்தைகள்

வள்ளற்பெருமானின் நடத்தைகள்



"வள்ளலார் எழுத்தறியும் பெருமானைப் (திருவொற்றியூர் – சென்னை) பாடிக்கொண்டிருக்கு நாளில், உலகபோகங்களில் மனம்படியாமல் திருவருளைவழுத்தும் இன்பவுரையே தமது திருவிளையாடலாகக் கொண்டார். சிறு போதுமுதல் இச்சையாதி விஷயங்களைத் துச்சமாகக் கொண்ட பெரியோர் என்றும், தீவிரமாகவும் செம்பாகமாகவும் பாடும்செந்நாப்புலவர் என்றும், அடக்கமே பொருளெனத்தேர்ந்த அருளாளரென்றும் பலர் பிள்ளையவர்கள்பால் அதிசயித்த உணர்வினராய்ப் பழகி வந்தனர்.

          வெள்ளாடை முழங்காலுக்கு மேல் தரித்து ஞானதீபமொத்திலகும் தேகம் தெரிய வொட்டாது மூடிக்கொண்டு பிறர்க்குத் தன்பால் இச்சைசெல்ல வொட்டாதபடி முக்காடிட்டு மறைத்த மேனியுடையராய் வீதிகளில் ஓரமாய்ச் செல்வர். திண்ணையிலாவது உயர்ந்த ஆசனத்திலாவது காலின்மேல் கால் போட்டாவது உட்கார்ந்து வீண்வழக்குப் பேச ஒருவருடனும் ஒருப்படார். உயிரிரக்கமும் ஆன்ம வுருக்கமும் கொண்டொழுகுவர்."

          வள்ளற்பெருமானைப் பற்றி அவரது அணுக்கத் தொண்டர் காரணப்பட்டு ச.மு.க. அவர்கள் தாம் எழுதிய பிரபந்தத்திரட்டு என்னும் நூலில் குறிப்பிட்டிருக்கும் வாசகம் இது. (பக்கம் – 63)

         வள்ளற்பெருமானின் குணமும் அவரது நடத்தையும் பற்றி சிறு குறிப்பினை படம்பிடித்து காட்டியிருக்கின்றார் ச.மு.க. அவர்கள். அதன் விளக்கத்தை சற்றே பார்ப்போம்.

1.   உலக போகங்களில் மனம் படியாதிருத்தல்:

உலக போகங்கள் யாவும் துன்பம் தரக்கூடியது என்ற உண்மை அறிந்து ஆன்ம போகத்தையே விரும்பினார்.  “சுடுகாட்டுப் பிணங்காள் இச்சுகமனைத்தும் கணச் சுகமே சொல்லக் கேண்மின்” என்று சுடுகாட்டுக்குச் செல்லக்கூடிய பிணங்களே என்று உலகில் வாழுகின்ற நம்மை பார்த்து உண்மையை உரைத்துவிட்டார். உலக சுகங்களை  வேண்டுகின்ற நாம் சுடுகாட்டுப் பிணமாவோம். நமது உடல் புதைக்கக்கூட அருகதையற்றதாம். நாம் துய்க்கின்ற சுகங்களோ கண நேரத்தில் மறையக்கூடியதாம். கனம் நிறைந்த துன்பத்தை அளிக்கக்கூடியது கண நேர சுகமாம் (சிற்றின்பமாம்). இப்படிப்பட்ட மோசமான உலக போகத்தை வள்ளற்பெருமானின் மனமானது விரும்பாமல் இருந்தது. 

2.   திருவருளை போற்றும் இன்ப உரையே தமது திருவிளையாடலாகக்  கொண்டார்:

இறைவனுடைய பேரருளை போற்றிப் பாடக்கூடிய தொழிலையே தமது பொழுதுபோக்காகக் கொண்டார்.  “எப்பாரும் எப்பதமும் எங்கனும் நான் சென்றே எந்தை நினது அருள் புகழை இயம்பியிடல் வேண்டும்” என்ற தமது (ஆன்ம) விருப்பத்தையே தலைமேல் கொண்டொழுகினார். மற்றவர்களுடைய விருப்பத்திற்காக ஆடுவது உலகியல். தமது ஆன்ம விருப்பத்திற்காக ஆடுவது அருளியல். இப்படி திருவருட்பா முழுதும் வள்ளற்பெருமானின் ஆன்ம திருவிளையாட்டினை நாம் காணலாம்.   

3.   சிறுபொழுது முதல் இச்சை முதற்கொண்ட விஷயங்களைத் துச்சமாகக் கொண்ட பெரியார்:

வள்ளற்பெருமான் தமது சிறுவயது முதலே ஆசைகளை தூண்டக்கூடிய செயல்களை எல்லாம் இழிவாகக் கொண்டொழுகிய பெரியவர் ஆவார்.
“பான் மறுத்து விளையாடும் சிறு பருவத்திடையே பகரும் உலக இச்சை ஒன்றும் பதியாது என் உள்ளத்தே…” என்று தமது குணத்தின் மூலம் பெரியோரின் இயல்பினை நன்கு எடுத்துரைக்கின்றார். நாம் இவ்வுலகில் பெரியோர் என்று யாரை எல்லாம் அழைக்கின்றோம் என்று எண்ணிப்பார்க்க வேண்டும். ஒரு குறிப்பிட்டத் துறைகளில் சிறந்தோங்கி இருப்பவரை பெரியார் என்று நாம் அழைப்பதும் பொருத்தமாக இருக்காது. “பெரியார்” என்றாலே அது ஆசைகளை துச்சமென விட்டவர்களையே குறிக்கும். அப்படிப்பட்ட பெரியாராக இருப்பவர் வள்ளற்பெருமான்.

4.   தீவிரமாகவும் செம்பாகமாகவும் பாடும் செந்நாப்புலவர்:

ஒரு செயலை செய்வதில் விரைவு இருக்க வேண்டும். வள்ளற்பெருமான் தாம் பாடுகின்ற பாடல்களை விரைவாகப் பாடிமுடிக்கும் திறமை அவருக்கு இருந்தது. இதற்கு உதாரணமாக  திரு அருட்பெருஞ்ஜோதி அகவலில் உள்ள 1596 அடிகளையும் ஒரே இரவில் எழுதி முடித்ததாக செவிவழிச் செய்தி கூறுகின்றது. ஒரு பாடலையோ அல்லது பதிகத்தையோ பாடுவதில் தீவிரம் காட்டினார். விரைவாகப் பாடுவதிலும் உண்மையை உரைப்பதிலும் தீவிரம் காண்பித்தார். அதே நேரம் செம்மையானப் பாடலாகவும் (அருள் நிறைந்த பாடல்கள்) அவையாவும் திகழ்கின்றன. உலகியலில் விரைவாக செய்யக்கூடியதில் நிச்சயம் பிழைகள் இருக்கும். அருளியலில் விரைவாக செய்யும் காரியந்தான் வெற்றியடையும் என்பதற்கு வள்ளற்பெருமான் எடுத்துக்காட்டாக திகழ்கின்றார். மேலும் நடுநிலமையோடு பாடக்கூடிய நாவினைப் பெற்ற செந்நாப்புலவராகவும் திகழ்வதை நாம் அறிகின்றோம்.

          “நான்முகர்கள், நல் உருத்திரர்கள், நாரணர்கள், இந்திரர்கள், அருகர்கள், புத்தர் முதல் மதத்தலைவர்கள் எல்லாம் வான் முகத்தில் தோன்றி அருள் ஒரு சிறிதே அடைந்து வானகத்தும் வையகத்தும் மனம் போனபடியே தேன் முகந்துண்டவர்கள், எனவே விளையாடாது நின்ற “சிறு பிள்ளை கூட்டம்” என இவர்களை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் நான் மிகக்கண்டு கொண்டேன்” (4178) என்ற உண்மையை வள்ளற்பெருமான் உரைப்பதில் தீவிரத்தையும், உண்மையையும், நடுநிலமையையும் காணலாம். விளையாடக்கூடத் தெரியாத சிறு பிள்ளைகள் கூட்டமாக இருப்பவர்களைத்தான் நாம் கடவுள் என மதித்து வணங்கிக்கொண்டுள்ளோம் என்பதை அறியவேண்டும்.

5.   அடக்கமே பொருளெனத்தேர்ந்த அருளாளர்:

அடக்கமே மெய்ப்பொருளாக விளங்குகின்றது என்பதை அறிந்த அருளாளராக விளங்குபவர் வள்ளற்பெருமான். வெளியில் உள்ள ஐம்பொறிகளை ஆமை எவ்வாறு தமக்குள் அடக்கிக்கொள்கிறதோ, அவ்வாறு ஐம்பொறிகளை அடக்குபவனுக்கே அவனுள் அடக்கமான இறைவன் தெரிவான். “படிப்பு அடக்கி, கேள்வி எல்லாம் பற்று அற விட்டடக்கி, பார்ப்பது அடக்கி, உறும் பரிசம் எல்லாம் அடக்கி, தடிப்புறும் ஊண் சுவை அடக்கி, கந்தம் (நுகரும் வாசனை) எல்லாம் அடக்கி, சாதி மதம் சமயம் என்னும் சழக்கை எல்லாம் விட்டு அடக்கி, மடிகின்ற மரணத்தை அடக்கி, மனக்குரங்கு குதித்த துடிப்பை அடக்கி ஆட்கொண்ட துரையே…” (4764) என்று இத்தனையும் தம்முள் அடக்கி, அடக்கமே மெய்ப்பொருளாய் திகழ்கின்ற அருளாளாராக திகழ்கின்றார் வள்ளற்பெருமான்.

6.   வெள்ளாடை முழங்காலுக்கு மேல் தரித்து ஞானதீபமொத்திலகும் தேகம் தெரிய வொட்டாது மூடிக்கொண்டு பிறர்க்குத் தன்பால் இச்சைசெல்ல வொட்டாதபடி முக்காடிட்டு மறைத்த மேனியுடையராய் வீதிகளில் ஓரமாய்ச் செல்வர்:

ஞானதீபத்தை ஒத்திருக்கும்படியான தமது தேகத்தை மறைக்க ஒரே ஒரு வெள்ளாடையை தமது முகம் மற்றும் முழங்கால் மட்டும் தெரியும்படி சுற்றிக்கொண்டு, பிறர் தன்னைப் பார்த்தால் தம்மீது அவர் ஆசை கொண்டிடாத வண்ணம் தலைக்கு முக்காடிட்டுக்கொண்டு இருப்பார். நாமெல்லாம் பிறர் நம்மைப் பார்த்து, நம் தேகத்தின் மீது ஆசை கொள்ள வேண்டும் என்றே உடை உடுத்துகின்றோம். பிறர் நம்மைப் பார்த்து ஆசை படும்படி தோன்றுவது பாவமாகும். இப்பாவத்தை செய்யாமலிருப்பவர்கள் இன்றைய இஸ்லாமிய பெண்களாகும். இவ்விடயத்தில் வள்ளற்பெருமான் இஸ்லாமியப் பெண்களின் நடைமுறைகளை ஏற்றுக்கொண்டார் என்றே சொல்லலாம். இவ்வாறு முக்காடிட்டு பிறரின் தேக ஆசையை தூண்டிவிடாமல் அடக்க ஒடுக்கமாக சாலைகளின் ஓரமாய் நடந்து செல்லும் ஒழுக்கத்தை உடையவராக வள்ளற்பெருமான் இருக்கின்றார்.

7.   திண்ணையிலாவது உயர்ந்த ஆசனத்திலாவது காலின்மேல் கால் போட்டாவது உட்கார்ந்து வீண்வழக்குப் பேச ஒருவருடனும் ஒருப்படார். உயிரிரக்கமும் ஆன்ம வுருக்கமும் கொண்டொழுகுவர்.

அன்றைய கால கட்டத்தில் ஒவ்வொரு வீட்டிலும் வெளிப்புறத்தில் திண்ணைகள் இருக்கும். அத்திண்ணைகளில் அமர்ந்துக்கொண்டு வெட்டிக்கதை பேசுவதும் அல்லது உருப்படியான காரியங்களை ஏதேனும் செய்வதும் உண்டு. வள்ளற்பெருமான் அத்திண்ணைகளில் எப்போதும் அமரமாட்டார். அதுபோல உயர்ந்த ஆசனங்களிலும் அமரமாட்டார். அமர வேண்டுமாகில் தரையில் சம்மணமிட்டு அமருவதே வழக்கமாகக் கொண்டிருந்தார். தரையில் அமர்ந்தாலும் காலின் மேல் கால் போட்டு உட்காருவதை தவிர்த்தார். அவ்வாறு அமர்தல் பிறரை அவமதிக்கும் செயலாகக் கண்டார். அடக்கமே மெய்ப்பொருளாகக் கொண்டவர்கள் உயர்ந்த ஆசனத்தில் அமரமாட்டார்கள், காலின் மீது கால்போட்டு அமரமாட்டார்கள். அது அகங்காரத்தை நம் மீது திணித்துவிடும். உலகில் உள்ள உயிரினங்கள் எல்லாம் தரைமீதுதான் அமர்ந்து ஓய்வெடுக்கின்றன. அவ்வுயிரனங்களை எல்லாம் மதிக்கும் வகையில், அதற்கு சமமாக நாமும் இருக்க வேண்டும் என்ற வகையிலும், நம்மைவிட எவ்வுயிரும் தாழ்ந்தது அல்ல என்ற தாழ்மை குணத்தாலும், ஆன்ம நேய ஒருமைபாட்டுடனும், உயிரிரக்கத்துடனும் வள்ளற்பெருமான் நடந்துக்கொண்டது ஆச்சரியம் அளிக்கக்கூடியதாகும். உயர்ந்த ஆசனத்தில் அமர்வதும் ஒழுக்கக்கேடுகளில் ஒன்றாகும்.


          “காட்டுயர் அணைமேல் இருக்கவும் பயந்தேன், காலின்மேல் கால்வைக்கவும் பயந்தேன், அயலான பாடல்களை கேட்கவும் பாடவும் பயந்தேன், பஞ்சணை படுக்கவும் பயந்தேன், நாட்டிய உயர்ந்த திண்ணைமேல் இருந்து நன்றாக மகிழ்ந்து கால் கீழே நீட்டவும் பயந்தேன், நீட்டிப் பேசுதலை நினைக்கவும் பயந்தேன்” (3476) என்ற வள்ளற்பெருமானின் பாடல் அடக்கத்தின், ஆன்ம நேயத்தின், ஒழுக்கத்தின் உயர்வினை தெரிவிக்கின்றது.  

                                     --- தி.ம.இராமலிங்கம்

Wednesday, August 2, 2017

வெண்ணிலாவே…

வெண்ணிலாவே…




ஞானசபைக் குள்ளிருக்கும் வெண்ணிலாவே – அந்த
ஞானம்வர வேண்டுகின்றேன் வெண்ணிலாவே.

பச்சைத்திரை விலகிடவே வெண்ணிலாவே – அங்கே
முச்சுடராய் ஆனதென்ன வெண்ணிலாவே.

கள்ளமில்லா உள்ளத்திலே வெண்ணிலாவே – எங்கள்
வள்ளல் வருவாரோசொல்லாய் வெண்ணிலாவே.

காத்திருந்தேன் பொழுதெல்லாம் வெண்ணிலாவே – நீயோ
ராத்திரியில் பூத்தென்ன வெண்ணிலாவே.

கண்நிறைந்த காதலியே வெண்ணிலாவே – எந்தன்
எண்ணம் அறிவாயோசொல்லாய் வெண்ணிலாவே.

மூன்றாம்பிறை அழகினைப்போல் வெண்ணிலாவே – எனக்கு
மூன்றுதேகம் கொடுப்பதெப்போ வெண்ணிலாவே.

வான்கொடுக்கும் ஒளியானாய் வெண்ணிலாவே –என்னை
நான் கொடுக்கபெறுவாயோ வெண்ணிலாவே.

இடங்கலை மூச்சினிலே வெண்ணிலாவே – உந்தன்
நடமதைக் காணுகின்றேன் வெண்ணிலாவே.

மேகத்திற்கும் மேலிருக்கும் வெண்ணிலாவே – எந்தன்
தேகந்தழுவ வாராய்நீயே வெண்ணிலாவே.

தருமச்சாலை பணிசெய்ய வெண்ணிலாவே – எனது
கருமம் பணிந்தோடக்கண்டேன் வெண்ணிலாவே.

வடலூர் ஞானவெளியிடையே வெண்ணிலாவே – அருட்

கடல் பொங்கக்கண்டேன் வெண்ணிலாவே.

ஜாதிமதம் ஒழிந்திடவே வெண்ணிலாவே – அருட்
ஜோதிவசம் ஆக்கிடுவாய் வெண்ணிலாவே.

தேய்பிறை காலமெல்லாம் வெண்ணிலாவே – நானும்
நேயமுடன் வாடிநின்றேன் வெண்ணிலாவே.

ஆனமட்டும் அழைத்துவிட்டேன் வெண்ணிலாவே – நீயும்
நாணமுடன் செல்வதெங்கே வெண்ணிலாவே.

ராமலிங்கம் பாட்டினிலே வெண்ணிலாவே – நானும்
ராகமிசைக்கின்றேன் இங்கே வெண்ணிலாவே.

திருவருட்பாப் புகழ் வெண்ணிலாவே – எந்தன்
திருமறை யாகநின்றாய் வெண்ணிலாவே.

குருவருள் கூட்டிடவே வெண்ணிலாவே – இங்கே
அருள்நிலைய மானாதென்ன வெண்ணிலாவே.

ஞானஅலை கடலினிலே வெண்ணிலாவே – அங்கே
கானஒலி எழுப்புகின்றாய் வெண்ணிலாவே.

உன்னை நினைந்துருகுகின்றேன் வெண்ணிலாவே – நீயோ
என்னை மறந்துசெல்வதெங்கே வெண்ணிலாவே.

கண்ணிரண்டில் ஒன்றானாய் வெண்ணிலாவே – எங்கள்
கண்மூன்றை திறப்பாயோ வெண்ணிலாவே.

புருவ நடுவாயிருக்கும் வெண்ணிலாவே –அங்கே
அருவ மயமாவதென்ன வெண்ணிலாவே.

சாகாக்கலை பொழிந்ததென்ன வெண்ணிலாவே – உடல்
போகாம லிருப்பதென்ன வெண்ணிலாவே.

சித்தி வளாகந்தனிலே வெண்ணிலாவே – நானும்
அத்து விதமாகின்றேன் வெண்ணிலாவே.

செத்தவர் எழுகின்றார் வெண்ணிலாவே – அதை
நித்தமும் காணுகின்றேன் வெண்ணிலாவே.

உயிரெல்லாம் இன்பமுற வெண்ணிலாவே – எந்தன்
உயிருக்குள் ஆடுகின்றாய் வெண்ணிலாவே.

-      திருச்சபை.

-      தி.ம.இராமலிங்கம்.

Tuesday, August 1, 2017

சன்மார்க்க விவேக விருத்தி – ஆகஸ்ட்-2017

சன்மார்க்க விவேக விருத்தி – ஆகஸ்ட்-2017

அன்பர்களுக்கு வணக்கம்!

வள்ளலாரின் அணுக்கத் தொண்டர் காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும், வள்ளற்பெருமான் அருளிய "சன்மார்க்க விவே கவிருத்தி" என்கிற மாதாந்திர மின்னிதழ் – ஆகஸ்ட் - 2017 இதழினை கீழ்காணும் இணைப்பிணைச் சுட்டி பதிவிறக்கம் செய்து படித்து பயனுறலாம். நன்றி.
  
உங்கள் கைப்பேசியில் வாட்ஸ்ஆப்பில் இந்நூலை படிக்க உங்கள் வாட்ஸ் ஆப் எண்ணினை இங்கே அளிக்கவும். நன்றி.

http://www.vallalarspace.org/user/c/V000024873B
(Or)

https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWYjdNbzI4VnVjUlk/view?usp=sharing