Saturday, August 5, 2017

திரு அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை

காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மின்னிதழில் ஆகஸ்ட்-2017 மாதம் வெளியான 
திரு அகவல் உரையின் தொடர்ச்சி…

சமயங் கடந்த தனிப்பொருள் வெளியாய்
அமையுந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி – 62

உலகில் பிறப்பிக்கப்பட்ட எல்லா உயிர்களுக்கும் பசி என்கின்ற பிணியினை இறைவன் நிரந்தரமாகக் கொடுத்துள்ளான். மனிதனைத் தவிர மற்ற உயிரினங்கள் தங்களது பசி என்னும் பிணியினை எவ்வாறு தீர்த்துக்கொள்கின்றன? உணவின் மூலமாக தீர்த்துக்கொள்கின்றன. அந்த உணவு எது? அந்தந்த உயிரினங்களுக்கு பழக்கப்பட்ட உணவினை அந்தந்த உயிரினங்கள் உண்டு தங்களது பசியினை தீர்த்துக்கொள்கின்றன. பழக்கப்பட்ட உணவுகள் என்று சொல்லும்போது, அவைகள் எல்லாம் தனித்தனி உணவுகளையே உட்கொள்கின்றன. ஒரு உணவுடன் மற்றொரு உணவை கலந்து உண்ணும் பழக்கம் இதுவரை மனித உயிரினங்களைத் தவிர மற்ற உயிரினங்களுக்கு வரவில்லை. அதாவது உணவுப்பண்டங்கள் எவ்வாறு உள்ளதோ அதனை அப்படியே உண்டு வாழ்கின்றன. ஆனால் மனிதன் மட்டுமே நெருப்பினைக் கொண்டு தனக்கான உணவினை சமைத்து உண்கின்றான்.

          பலவகைப்பட்ட உணவுப் பண்டங்களை ஒன்றாகக் கூட்டி நாவிற்கு ருசியாக பலதரப்பட்ட சுவையுடன் உண்டு மகிழ்கின்றான். இப்படி நாவிற்கு ருசியாக சமைப்பவர்களுக்கு “சமையல் காரர்” என்று பெயர் வைத்துள்ளோம். இவரின் முக்கிய வேலை என்னவென்றால்? இயற்கையான சுவையை மாற்றி செயற்கையான சுவையினை கொண்டுவருவதுதான். அதில்தான் அவரது வெற்றி அமைந்துள்ளது. நாம் இதுவரை பெரும்பாலான காய்கறிகள், தானியங்கள் போன்ற உணவுப் பண்டங்களின் இயற்கை சுவையினை சுவைத்திருக்க மாட்டோம். இவைகளை எல்லாம் சமைத்து உண்டே பழக்கப்படுத்திக்கொண்டோம்.

          மேற்காணும் வயிற்றுப் பசியை நீக்க நமக்கு எவ்வாறு சமையல் காரர் தேவைப்பட்டனரோ அவ்வாறே நமது அறிவுப் பசியை நீக்கவும் பல்வேறு கால கட்டத்தில் உலகெங்கும் பல சமையல் காரர்கள் தோன்றினார்கள். சமையல் என்றாலே பல தரப்பட்ட உணவுப் பண்டங்களை ஒன்றாக்கி ஒரு புதிய சுவையான உணவினை தயாரிப்பதுதானே. அவ்வாறு பலதரப்பட்ட கருத்துக்களை ஒன்றாக்கி, இக்கருத்துக்களுக்கு உட்பட்டவன்தான் “இறைவன்”, என இறைவன் என்ற பொருளை சமைத்தார்கள். ஒவ்வொரு சமையல் காரனும் தனக்கான சில கருத்துக்களை ஒன்றாக்கி தத்தமது இறைவனை சமைத்தார்கள். அவ்வாறு சமைத்தவையே “சமயம்” என்று உலகினில் வழங்கப்பட்டு வருகின்றது.

          ஒவ்வொரு சமையல் காரனுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததால், அவர்கள் சமைத்த இறைவனும் வேறுபட்டு நின்று, பல்வேறு பட்ட சமயங்களும் இறைவன்களும் கருத்தளவில் தோன்றிவிட்டார்கள். எனது பசிக்கு இதுதான் உணவு என்பதுபோல, எனது அறிவுக்கு இவன்தான் இறைவன் என்று பழக்கப்படுத்திக்கொண்டார்கள்.

          சமையல் என்றாலே செயற்கைதானே! அங்கே இயற்கை உணவின் சுவை எவ்வாறு அறியப்படும்? அதுபோல சமைக்கப்பட்ட சமயங்களும் செயற்கைதானே! அங்கே இயற்கை இறைவனின் சுவையினை எவ்வாறு அறியப்படும்? முடியாது… முடியவே முடியாது.  எனவே சயங்களின் பலவகைப்பட்ட கருத்துக்களுக்கு அப்பாற்பட்டவன் இறைவன். அவன் விளங்கக் கூடிய திருச்சபையும் சமயக் கருத்துக்களுக்கு அப்பாற்பட்டதுதான்.

          “செப்புங் கலைகளெலாந் தேர்ந்துரைக்கிற் கற்பனையா
           யொப்பும் படியாகு முண்மையிதே… (பிரபந்தத்திரட்டு-828)

என்று வள்ளலாரின் அணுக்கத் தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளையும் தமது பிரபந்தத்திரட்டில் பாடியிருப்பதை பார்க்கிறோம். சொல்லுகின்ற கலைகள் என்கின்ற சமயக் கருத்துகளெல்லாம் ஆழ நோக்கில் அவையெல்லாம் கற்பனையால் ஆனதே, இதுதான் உண்மை. என்று ச.மு.க. உரைக்கின்றார்.

          மனிதனைத் தவிர மற்ற உயிரினங்கள் எவ்வாறு சமைக்காது ஒரு பொருளின் இயற்கை சுவையினை அப்படியே உண்டு பசியாறுகின்றதோ அவ்வாறு நாமும் சமயங்களில் புகாது இறைவனை நமது கருத்துக்களுக்கு உட்படுத்தாது / சமைக்காது உள்ளதை உள்ளபடியே அனுபவிக்க வேண்டும். இறைவன் எவ்வாறு உள்ளான்? என்று சொல்லும்போது கருத்துக்கள் எழுகின்றன. கருத்துக்களால் சொல்லப்படும் இறைவன் இறைவனே அல்ல. அருட்பெருஞ்ஜோதியே இறைவன் என்றாலும் அது ஒரு கருத்துக்குள் புகுந்துவிடுகின்றது. எனவேதான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தம்முள் காணும் “அனுபவம்” என்பார் வள்ளலார். இனிப்பு எவ்வாறு உள்ளது? என்பதை கருத்தால் சொல்ல முடியுமா? அதனை ஒவ்வொருவரும் அனுபவித்தே தெரிந்துக்கொள்ள வேண்டும். நாம் எல்லோரும் இனிப்பை வழிபட்டு வருகிறோம். இனிப்பு இவ்வாறுதான் இருக்கும் என சில கருத்துக்களை பின்தொடர்ந்து பஞ்சபூத வழிபாடு, நவகிரக வழிபாடு, அருவ வழிபாடு, உருவ வழிபாடு என்று சமைக்கப்பட்டு வழிபடுகின்றோம். வழிபடும்வரை அதன் சுவை நமக்குத் தெரியப்போவதில்லை. அதனை வழிபடுவதை விடுத்து அதனை உண்ணும்போதுதான் அதன் சுவை நமக்குத் தெரியவரும்.  

          அருட்பெருஞ்ஜோதி என்கின்ற இனிப்பு எங்கே உள்ளது? நமது உடம்பில் உள்ள ஆகாயமான திருச்சபையில் உள்ளது. அந்தத் திருச்சபை யாராலும் சமைக்கப்படாமல் சமயக்கருத்துக்களை எல்லாம் பொய் என்று சொல்லும்படியாக ஆதி அனாதியாக உள்ளது. அந்தத் திருச்சபையை அப்படியே சுவைத்து விழுங்குங்கள். அப்போது உங்களுக்கு இனிப்பென்னும் அருட்பெருஞ்ஜோதி அனுபவம் கிட்டும். அதனை விழுங்க ஆசார சங்கற்ப விகற்பங்களிலும் மற்ற சாதனங்களிலும் சென்று சமைக்கின்ற சமய வேலையினை செய்தல் கூடாது. உள்ளதை உள்ளபடியே அனுபவியுங்கள். ஒரு பனித்துளியை எவ்வாறு சூரியன் விழுங்குகிறதோ அவ்வாறு விழுங்குகள்.

          சமயக் கருத்துக்களை / தத்துவங்களை எல்லாம் பொய் என்று நிறுத்தி அதனை கடந்து தனித்த பொருளாய் திருச்சபையில் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.       


முச்சுடர் களுமொளி முயங்குற வளித்தருள்
அச்சுட ராஞ்சபை யருட்பெருஞ்ஜோதி - 64

முச்சுடர் என்பது சூரியன், சந்திரன், அக்கினி எனபன. சூரியன் உருவமுடையவன், காரியன் ஆவான். சந்திரன் உருவமுடன் அருவமுடையவன், காரிய காரணன் ஆவான். அக்கினி அருவன், காரணன் ஆவான். சூரிய சந்திர ஒளிகளுக்கு காரணமாக உள்ளது அக்கினியாகும். இந்த அக்கினிக்கு காரணமாக உள்ளது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகும்.


முயங்குதல் என்றால் தழுவுதல்/புணர்தல்/பொருந்துதல் என்று பொருள். முச்சுடர்களாகிய சூரிய சந்திர அக்கினி என்பவைகளில் தமது அருள் ஒளியினை ஒன்றோடு ஒன்றாக பொருத்திக்கொண்டு அவை மூன்றிலும் ஒளியாகி இருப்பது அருட்பெருஞ்ஜோதியாகும்.

நமது உடலில் புருவ நடுவான திருச்சபையில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரானவர் இம்முச்சுடருடனும் ஒன்றோடு ஒன்று புணர்ந்து ஒளிவீசிக்கொண்டிருக்கிறார். அனுபவத்தில் வலது கண் சந்திர ஒளியாகவும், இடது கண் சூரிய ஒளியாகவும், அக்கினி புருவ நடுவில் அரூபமாகவும் இருக்கின்றது.

முச்சுடர்களையும் பிரகாசிக்க வைக்கும் சுடராக, முச்சுடர்களையும் ஒன்றோடு ஒன்றாக தழுவிக்கொண்டிருக்கும் சுடராக திருச்சபையில் விளங்கிக்கொண்டிருக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.

துரியமுங் கடந்த சுகபூ ரணந்தரும்
அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி – 66

துரியம் என்பது யோக நிலையில் அனுபவிக்கும் அதீத இன்பத்தைக் குறிக்கும். ஆயிரம் தாமரை இதழ்கள் அமைப்பைக் கொண்டது துரிய சக்கரம். ஊதா நிறத்துடன் அடர் பொன்னிறம் கொண்டது. நமது மூளையே இருப்பிடம். ஆயிரம் யோக நாடிகள் இந்த சக்கரத்திலிருந்து கிளம்புகின்றன. தன்னிலை கடந்து ஆன்ம விடுதலையைக் கொடுத்து பேரானந்தத்தை அள்ளித்தருவது இந்த துரிய நிலையாகும்.

துரிய தவம் செய்கையில் ஆன்மா பழி செயல் பதிவுகளில் இருந்து தூய்மை பெறும். நடு மனத்தை வெற்றி கொள்ளும். நாம் என்னும் உயரிய எண்ணம் பல பேர் உள்ளத்தில் பிரதிபலிக்கும். நாம் கொடுக்கும் சங்கல்பம் மற்றும் வாழ்த்துக்கள் நன்கு செயல்படும். மனதிற்கு வேகமும் நுட்பமும் எளிதில் உணர்ச்சி வயப்படாத நிலையும் கிடைக்கும். எண்ணத்தை ஆராயவும், அகத்தாய்வு செய்யவும் கவலைகளை ஆராய்ந்து ஒழிக்கவும் துணை புரியும். தன் வினையிலிருந்து விடுவிக்கப்படுவோம். உள்ள கலங்கமும், உடல் கலங்கமும் துடைக்கப்பட்டு தூய்மை உண்டாகும்.

யோக நிலையில் துரியத்தின் அனுபவத்தையும் அதன் இருப்பிடத்தையும், அதன் நிறங்கள், குணங்கள் ஆகியவைகளையும் மேற்கண்டவாறு பலவாக விளக்கியுள்ளனர் நமது முன்னோர்கள். ஆனால், வள்ளற்பெருமான் இவைகளை ஒருவாறு மறுக்கின்றார்.

“… இவ்வள வனுபவமும் பூர்வத்திலுள்ள அனுபவிகளால் குறிக்கப்பட்ட நிலைகளில் இல்லை. ஒருவாறு குருதுரிய பரியந்தம் வேதாகமங்களாலும் தத்துவராயர் முதலிய மகான்களின் அனுபவத்தாலும் குறிக்கப்படும். அதற்கு மேற்பட்ட அனுபவம் சுத்த சன்மார்க்கத்தில் சாத்தியம்” என்று குறிப்பிடுகின்றார். (திருவருட்பா-உரைநடை நூல்-பக்கம்-369)

துரியம், துரியாதீதம் என்று சமய வழக்கில் சொல்லப்பட்டதெல்லாம் ஒரு முழுமையான விளக்கமாக இல்லை. ஒருவாறு (முழுமை இல்லாமல்) குருதுரிய பரியந்தம் (குருதுரிய எல்லைகள்) இந்து மத வேதங்களிலும் தத்துவராயர் முதலான மகான்களின் அனுபவத்திலும் குறிக்கப்பட்டுள்ளது. இந்த துரியாதீதத்திற்கும் அதீதம் சுத்த சன்மார்க்கத்தில் மட்டுமே சாத்தியம் என வள்ளற்பெருமான் குறிப்பிடுகின்றார்.

“சமரசம்” என்கிற அனுபவத்தையே “குருதுரிய” அனுபவமாக வள்ளலார் குறிப்பிடுகின்றார்.

“எல்லா அந்தங்களினது அந்தமும் தனக்குப் பூர்வமாக்கித் தான் உத்திரத்தி னின்று மருவியது சமரசம். இதற்கு அனுபவம் “குருதுரிய ஸ்தானம்”. (திருவருட்பா-உரைநடை நூல்-பக்கம்-402)

வேதாந்தம், சித்தாந்தம், போதாந்தம், நாதாந்தம், யோகாந்தம், கலாந்தம் என்கின்ற ஆறு அந்தங்களின் முடிபுகளும் தமக்கு முதன்மையாக்கி தானே மேலோங்கி நிற்கும் அனுபவமே “சமரம்” ஆகும். இதுவே குருதுரிய (குரு-மாசற்றது) இடமாகும். வேதங்களில் / சைவ சித்தாந்தங்களில் சொல்லப்பட்டுள்ள மேற்காணும் ஆறு அனுபவங்களின் முடிபுகளின் முடிபுகளே இங்கே (சமரசம்) ஆரம்பநிலையாகி உள்ளதென்றால், சன்மார்க்கம் உரைக்கும் குருதுரிய நிலையின் முடிபு எப்படிப்பட்டது  என்று உணர முடிந்தால் உணருங்கள்.

இப்படிப்பட்ட துரிய நிலையினையும் கடந்தது சிற்றம்பல அனுபவமாகும். சிற்றம்பல அனுபவமானது நமக்கு சுகபூரணத்தை தருவதாக உள்ளது. துரிய நிலையே சுகம்தரும் நிலையாகும். எனினும் அச்சுகமானது முழுமையான சுகம் அன்று. சிற்றம்பல சுகமே முழுமையான சுகமாகும். ஒரு அறையில் உள்ள ஒருவன் மின் விசிறியைக் கொண்டு (Fan) காற்றின் சுகத்தை அனுபவிப்பது துரிய சுகமாகும். அதே அறையில் குளிர் சாதனத்தைக் கொண்டு (Air Condition) காற்றின் சுகத்தை அனுபவிப்பது சிற்றம்பல சுகமான முழுமையான சுகமாகும். இச்சிற்றம்பல அனுபவம் ஒரு சிலருக்கே கிடைக்கூடிய மிக அரிய சுகமாக உள்ளது.

“இதுவன்றோ முத்திநெறி யீதன்றோ சித்தி
 யிதுவன்றோ சன்மார்க்க மென்றே…” (பிரபந்தத்திரட்டு – 728)

இதுதானே முத்தி, இதுதானே சித்தி, இதுதானே சன்மார்க்கம் என்று இந்த  சிற்றம்பல சுகபூரண அனுபவத்தையே சமரச பஜனை காரணப்பட்டு ச.மு.க. அவர்களும் பாடி மகிழ்கின்றார்.

                      
எல்லவருக்கும் கிடைப்பதற்கு அரிதாக இருக்ககூடிய துரிய அனுபவத்தையும் கடந்த சிற்றம்பல அனுபவமான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.

          எவ்வகைச் சுகங்களு மினிதுற வளித்தருள்
          அவ்வகைச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி – 68

சிற்சபை என்றாலே அது இன்பத்தை / சுகத்தை அளிக்கக்கூடியதாகும். சுகம் என்பது என்ன? சுகம் என்பது  இதுதான் என்று குறிப்பிட்டு ஒன்றை மட்டும் உரைக்க முடியாதவாறு அது பல்வேறு வகையானதாக உள்ளது. இதனை இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். ஒன்று உலகியல் சுகங்கள் மற்றொன்று அருளியல் சுகங்கள். உலகியல் சுகங்கள் என்னென்ன? இதற்கு வரையறையே இல்லை. உலகியல் வாழ்க்கையில் நிகழும் யாவும் சுகமே. காமம், மோகம், ஆசை, பற்று, கல்வி, வேலை, ஊதியம், உணவு, உடை, வீடு, குழந்தைகள், அதிகாரம், புகழ், ஆடம்பர பொருட்கள், வாகனங்கள், பொன், பூமி, பதவி போன்ற எண்ணற்ற சுகங்கள் உண்டு.  பிறருக்கு கெடுதல் செய்யும் செயல்களான கோபம், பொறாமை, வஞ்சகம், கொலை, ஏமாற்றுதல், பொய் சொல்லல் போன்ற வன் செயல்களாலும் சிலர் சுகமடைவர். இச்சுகங்கள் எல்லாம் ஒரு முழுமையான சுகங்களாக இருக்க முடியாது. ஏனெனில் இச்சுகத்துடன் துக்கங்களும் சேர்ந்தே இருக்கின்றன. எனினும் மக்களில் பலர் இப்படிப்பட்ட உலக சுகங்களையே நாடி ஓடுகின்றனர்.


ஒரு தாயானவள் பெரும் துக்கத்திற்கு ஆட்பட்டு குழந்தையை ஈனும்போது சுகப்படுகின்றாள். இதைவிட இவ்வுலகில் வேறு என்ன சுகம் வேண்டும்?! என்று அகம் மகிழ்ந்து தமது குழந்தையை கொஞ்சுகிறாள். உணவிற்காக ஒரு ஆட்டினை கொலை செய்யும்போது அவ்வாட்டிற்கு ஏற்படும் வலியும் துக்கமும் துடிப்பும் இவனுக்கு சுகமாகத் தெரிகின்றது. வலைகளில் துள்ளும் மீனின் வலியும் துக்கமும் துடிப்பும் இவனுக்கு சுகமாகத் தெரிகின்றது. ஒரு உயிரை இவ்வுலகில் ஈனும்போதும் துக்கமே முன்நிற்கின்றது. ஒரு உயிரை இவ்வுலகைவிட்டு பிரிக்கும்போதும் துக்கமே முன்நிற்கின்றது. எனினும் இவ்விரு துக்கங்களும் மனிதர்களுக்கு ஏதோ ஒரு வகையான சுகத்தையும் அளிக்கின்றது.

மனிதர்களுக்கு மட்டுமே சிற்சபை அனுபவம் உண்டு. எனவே மனிதர்கள் அடையும் சுகங்கள் யாவும் அவரவர்களுடைய சிற்சபையே அளிக்கின்றன. எனவே ஒரு மனிதன் தமது சிற்சபை வழியாகவே சுகம் காண்கின்றான். அச்சுகத்திற்கான காரணங்கள் எல்லாம் சிற்சபையில் பதிவாகின்றன.  நாம் ஏதேனும் சுகத்தை அனுபவிக்கும்போது, இப்போதுதான் என் மனம் குளிர்ந்தது என்கிறோம். ஆனால் உண்மையில் சுகத்தை அனுபவிப்பது நமது மனம் அல்ல. நமது ஆன்மாவே ஆகும். ஆன்மா அமர்ந்திருக்கும் சிற்சபைதான் சுகங்களை அளிக்கின்றன. சுகத்திற்குண்டான காரணங்கள் நல்வழி பட்டதா? தீயவழி பட்டதா? என்பதை எல்லாம் சிற்சபையானது தம்முள் பதித்துவிடுகின்றது. அப்பதிவுக்கேற்ப நமக்கு மரணமும், மறு பிறவியும் கிடைக்கின்றது.

இதுவரை நாம் கண்டது உலகியல் சுகங்களில் சுருக்கமாகும். தற்போது அருளியல் சுகத்தை பார்த்தோமானால்… சிற்சுகம் அடைவதே பூரண சுகமாக உள்ளது. சிற்சபை அளிக்கக்கூடிய சுகங்களிலே முழுமையான சுகம் இந்த சிற்சுகம் ஒன்றே ஆகும். சிற்சுகம் என்பது நமக்கு மரணமில்லா பெருவாழ்வை அளிக்கக்கூடியது. அருள் சுகம், பரசுகம், ஞானசுகம், மெய்ச்சுகம் என்று பல்வாறு இதனை அழைக்கலாம். உலகியல் சுகங்களிலே சுகத்துடன் துக்கமும் உண்டு. அருளியல் சுகத்தில் முழுவதும் சுகம் மட்டுமே அனுபவிக்கப்படும். அருளியல் சுகங்களிலும் சிற்சபை சுகத்திற்கு கீழ்ப்பட்ட சுகங்கள் எண்ணற்றவை உண்டு. சரியை, கிரியை, யோகம் போன்ற படிநிலைகளில் காணும் சுகங்களில் துக்கமும் கலந்திருக்கும். சிற்சபையில் இந்த அருளியல் துக்கங்கள் ஏற்படுத்தும் பதிவுகள் நமக்கு அருளியல் தடைகளை உண்டுபண்ணும். ஆகவே அருளியல் சுகத்தை விரும்புபவர்கள் ஞானத்தில் ஞானம் என்ற முடிபான படிகளையே கடைபிடித்து சுத்த சன்மார்க்கத்தை கடைபிடித்தால் சிற்சபை சுகம் நமக்கு வாய்க்கும்.

“எந்நிலை விரும்பினும் அன்பர்க்கு விரைந்து
 அந்நிலை அருளும் அருட்பெருஞ் ஜோதி” -  (திருச்சபை)

இவ்வாறு நாம் தேர்ந்தெடுக்கும் எவ்வகை சுகங்களையும் நமக்கு தங்கு தடையின்றி அளிக்கக்கூடியதாக நமது சிற்சபை அமைந்துள்ளது. காமத்தால் சுகம் காணும்போது நமது சிற்சபையும் காமத்தால் நிறைந்துவிடும். பிறரை கொலை செய்து சுகம் காணும்போது நமது சிற்சபையும் கொலைகாரனாக மாறிவிடுகின்றது. இப்படி எவ்வகையில் நமக்கு சுகம் கிடைக்கின்றதோ அவ்வகையில் நமது சிற்சபை மாறிவிடுகின்ற தன்மையினை கொண்டுள்ளது.

அருளியல் சுகங்களோ உலகியல் சுகங்களோ இவை இரண்டில் எவ்வகை சுகங்களை மக்கள் கேட்பினும் அவ்வகை சுகமாக இருந்து தடைகளின்றி இனிமை சூழும்படியாக அச்சுகத்தினை அளித்து இன்பமுற செய்யும் சிற்சபையினை அளித்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.

இயற்கையுண் மையதா யியற்கையின் பமுமாம்
அயர்ப்பிலாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி     - 70

இயற்கை உண்மை என்பது என்ன?

          வள்ளலார் பல இடங்களில் இயற்கை விளக்கம், இயற்கை உண்மை, இயற்க்கை இன்பம் என்ற பதங்களை பயன்படுத்துகிறார்கள் .

சத்திய ஞான சபை விளம்பரத்தில்:-

           இறைவனுடைய இயல்பை எடுத்தியம்பும்போது, இயற்கையில் தானே விளங்குகின்றவராக உள்ளவர் என்றும், இயற்கையில் தானே உள்ளவராய் விளங்குகின்றவர் என்று வள்ளலார் எடுத்துரைப்பர்.

சுத்த சன்மார்க்க சத்திய சிறு விண்ணப்பத்தில்:-

          இறைவனுடைய இயல்பை எடுத்தியம்போது, இயற்கை உண்மையர் என்றும், இயற்கை அறிவினர் என்றும், இயற்கை இன்பினர் என்றும் எடுத்துரைப்பர்.

சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான விண்ணப்பத்தில்:-

          இயற்கை விளக்கம் என்கின்ற சத்திய ஞானசபைக் கண்ணே, இயற்கை உண்மை என்கின்ற சத்தியத் திருவுருவினராய், இயற்கை இன்பம் என்கின்ற சத்தியத் திருநடஞ் செய்தருள்கின்ற இயற்கைத் தனிப்பெருங் கருணைத் தனிப் பெரும்பதியாய தனித் தலைமைக் கடவுளே!........ ............ .............  திருவருட்சமூகப் பெருங்கருணைப் பெரும் பதியாய தேவரீர் இயற்கைத் திருவண்ணம் அறிந்துகொள்ளுதல் எங்ஙனமோ! எங்ஙனமோ!! என்று வள்ளலார் வியப்பர்.

ஜீவகாருண்ய ஒழுக்கம் - முதற் பிரிவில்:-

          ஆன்மலாபம் எதுவென்று அறியவேண்டில்:- எல்லா அண்டங்களையும், எல்லாப் புவனங்களையும், எல்லாப் பொருள்களையும், எல்லாச் சீவர்களையும், எல்லா ஒழுக்கங்களையும், எல்லாப் பயன்களையுந் தமது பூரண இயற்கை விளக்கமாகிய அருட்சத்தியால் தோன்றி விளங்க விளக்கஞ் செய்விக்கின்ற இயற்கை உண்மை வடிவினராகிய கடவுளின் பூரண இயற்கை இன்பத்தைப் பெற்று எக்காலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும், எவ்வளவும் தடைபடாமல் வாழ்கின்ற ஒப்பற்ற பெரியவாழ்வே இந்த மனிதப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்மலாபமென்று உண்மையாக அறியவேண்டும்.

          இயற்கை இன்பத்தைப் பெற்றுத் தடைபடாமல் வாழ்கின்ற அந்தப் பெரியவாழ்வை எதனால் அடையக்கூடுமென்று அறியவேண்டில்:- கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருளைக் கொண்டே அடையக்கூடும் என்றறிய வேண்டும்.

          கடவுளின் இயற்கைவிளக்கமாகிய அருளை எதனாற் பெறக்கூடுமென்று அறியவேண்டில்:- சீவகாருணிய ஒழுக்கத்தினால் கடவுள் அருளைப் பெறக்கூடுமல்லது வேறெந்த வழியாலும் சிறிதும் பெறக்கூடாது என்று உறுதியாக அறிதல் வேண்டும்.

இயற்கை விளக்கம் என்பதுஅருள்        - சத்திய ஞான சபை  - ஜோதியுள்
இயற்கை உண்மை என்பதுவடிவம்       - சத்திய திரு உரு    - ஜோதியுள்
இயற்கை இன்பம் என்பது - பூரண இன்பம்  - சத்திய திரு நடம்    - ஜோதி

எல்லா அண்டங்களும், எல்லா உலகங்களும், எல்லாப் பொருள்களும், எல்லாச் சீவர்களும், எல்லா ஒழுக்கங்களும், எல்லாப் பயன்களுமே இயற்கையாகும். எனவே, அந்த இயற்கையே இறைவனின் அருளாகவும், அந்த இயற்கையே இறைவனின் வடிவமாகவும், அந்த இயற்கையே இறைவனின் இன்பமாகவும் உள்ளது. நாம் அந்த இயற்கை இன்பத்தை அடைவதுதான் நமக்கு இறைவன் இப்பிறப்பில் கொடுத்த முதல் வேலையாகும்.

இயல்பாக இருப்பது, என்றும் இருப்பது, இது அது என்று உரைப்பதற்கு அரிதாய் இருப்பது இயற்கையாகும். இவ்வாறான இயற்கைக்கு விளக்கமாகவும், இயற்கைக்கு உண்மையாகவும், இயற்கைக்கு இன்பமாகவும் நாமும் இருக்கவேண்டியது அவசியம். கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் அவசியம். எனவே இயற்கையாம் கடவுள் தனது விளக்கம் என்னும் அருளையும், தனது உண்மை என்னும் வடிவத்தையும், தனது இன்பம் என்னும் பூரண பெருஞ்சுகத்தையும் நமது ஒவ்வொருவரின் மனித உடலிலும் சிற்சபை என்னும் மாடத்தில் பொதித்து வைத்துள்ளார். எனவே நமது மனித உடலே இயற்கையாம் கடவுளின் நிலை எனக்கொள்ள வேண்டும். நாம் நமது உடம்பின் மயமாய் முற்றும் நிறைவதுதான் கடவுள் மயமாதல் ஆகும். அதுதான் மரணமில்லா பெருவாழ்வாகும். சன்மார்க்கனின் சிற்சபையானது மேற்காணும் பெருஞ்சுகத்தை அடையவும் அடைந்தும் அயர்ப்பில்லாது / சோர்வடையாது / மரணமில்லாது இயங்கிக்கொண்டே இருக்கும். வள்ளற்பெருமானின் சிற்சபை இயங்கிக்கொண்டே இருக்கின்றது. இயற்கைக்கு மரணந்தான் உண்டோ? நாமும் சாகாத சன்மார்க்கியாய், நமது ஊன் உடம்பே ஒளியுடம்பாக்கி வாழ வேண்டுமாகில் நமது சிற்சபையின் இயக்கத்தை சோர்வில்லாது வைத்துக்கொள்ள வேண்டும். சிற்சபை சோர்வில்லாமல் இயங்குவதை அறிவதே அருளாகும்.

“பெருவாழ்வு பெறுவதே பேருலகப்
          பேச்சாய் ஆனதே பெருஞ்ஜோதி
 ஒருதெய்வம் என்பதே உண்மை
          என்றானதே புலை கொலையும்
 இருந்தத் தடமின்றி போனதே
          அறிவுத் திருச்சபையே உடல்
  உருவாய் இருந்து ஓங்குதே
          உத்தமநிலை வந்து தாங்குதே.” – (திருச்சபை)

அறிவுத் திருச்சபையாம் சிற்சபையே உடல் உருவாய் இருந்து ஓங்கும் பொழுது உத்தம நிலையாம் மரணமில்லா பெருவாழ்வு வந்து எய்தும் என்று “திருச்சபை”யும் பாடுகின்றது.      


இயற்கை உண்மையான என்றும் உள்ள உருவுடன், இயற்கை இன்பமான பூரண சுகத்துடன், மரணம் என்கின்ற தடைகள் ஏதுமில்லாமல் என்றுமுள்ளதுவாக இருக்கின்ற சிற்சபையில் நிறைந்து விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.

                                       --- தி.ம.இராமலிங்கம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.