Sunday, November 19, 2017

சத்திய ஞான சபை விளம்பரம்

வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அருள் நிலையம் வழங்கும் வள்ளற்பெருமானின் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மின்னிதழில் “நவம்பர் – 2017” வெளியானவை.

சத்திய ஞான சபை விளம்பரம்

          உலகத்தினிடத்தே பெறுவதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்களே!

          அறிவு வந்த கால முதல் அறிந்து அறியாத அற்புத அறிவுகளையும், அடைந்து அறியாத அற்புத குணங்களையும், கேட்டு அறியாத அற்புதக் கேள்விகளையும், செய்து அறியாத அற்புதச் செயல்களையும், கண்டு அறியாத அற்புதக் காட்சிகளையும், அனுபவித் தறியாத அற்புத அனுபவங்களையும், இது தருணந் தொடங்கிக் கிடைக்கப்பெறுகின்றேன் என்றுணருகின்ற ஓர் சத்திய வுணர்ச்சியாற் பெருங்களிப்புடையேனாகி இருக்கின்றேன்.

          நீவிர்களும் அவ்வாறு பெற்றுப் பெருங்களிப்பு அடைதல் வேண்டும் என்று எனக்குள்ளே நின்று நிறைந்து எழுந்து வெளிப்பட்ட எனது சுத்த சன்மார்க்க லக்ஷியமாகிய ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமைப் பேராசை பற்றியே இதனைத் தெரிவிக்கின்றேன்.

          இயற்கையிற்றானே விளங்குகின்றவரா யுள்ளவரென்றும், இயற்கையிற்றானே யுள்ளவராய் விளங்குகின்றவரென்றும், இரண்டு படாத பூரண இன்பமானவ ரென்றும், எல்லா அண்டங்களையும், எல்லா உலகங்களையும், எல்லாப் பதங்களையும், எல்லாச் சித்திகளையும், எல்லாச் சத்தர்களையும், எல்லாக் கலைகளையும், எல்லாப் பொருள்களையும், எல்லாத் தத்துவங்களையும், எல்லாத் தத்துவி களையும், எல்லா உயிர்களையும், எல்லாச் செயல்களையும், எல்லா இச்சைகளையும், எல்லா ஞானங்களையும், எல்லாப் பயன்களையும், எல்லா அனுபவங்களையும் மற்றெல்லாவற்றையும் தமது திருவருட் சத்தியால் தோற்றுவித்தல், வாழ்வித்தல், குற்றம் நீக்குவித்தல், பக்குவம் வருவித்தல், விளக்கஞ் செய்வித்தல் முதலிய பெருங்கருணைப் பெருந்தொழில்களை இயற்றுவிக்கின்றவரென்றும், எல்லாம் ஆனவ ரென்றும், ஒன்றும் அல்லாதவரென்றும், சர்வகாருணிய ரென்றும், சர்வ வல்லபரென்றும், எல்லாம் உடையராய்த்தமக்கு ஒருவற்றானும் ஒப்புயர் வில்லாத தனிப்பெருந்தலைமை அருட்பெருஞ் ஜோதியர் என்றும் சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ஒருவரே அகம்புற முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய்யறிவென்னும் பூரணப் பொதுவெளியில் அறிவார் அறியும் வண்ணங்க ளெல்லாமாகி விளங்குகின்றார்.

          அவ்வாறு விளங்குகின்ற ஒருவரேயாகிய கடவுளை இவ்வுலகினிடத்தே ஜீவர்கள் அறிந்து அன்புசெய்து அருளையடைந்து அழிவில்லாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல், பல வேறு கற்பனைகளாற் பலவேறு சமயங்களிலும் பலவேறு மதங்களிலும் பலவேறு மார்க்கங்களிலும் பலவேறு லக்ஷியங்களைக் கொண்டு, நெடுங்காலமும் பிறந்து பிறந்து அவத்தை வசத்தர்களாகிச் சிற்றறிவு மின்றி விரைந்து விரைந்து பல வேறு ஆபத்துகளினால் துன்பத்தில் அழுந்தி இறந்திறந்து வீண் போகின்றார்கள்.

          இனி இச்சீவர்கள் விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண்போகாமல், உண்மையறிவு, உண்மையன்பு, உண்மையிரக்க முதலிய சுபகுணங்களைப் பெற்று நற்செய்கையுடையராய், எல்லாச் சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொது நெறியாகி விளங்குஞ் சுத்த சன்மார்க்கத்தைப் பெற்று, பெருஞ் சுகத்தையும் பெருங் களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு, மேற்குறித்த உண்மைக் கடவுள் தாமே திருவுள்ளங் கொண்டு சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லக்ஷியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற ஓர் ஞானசபையை இங்கே தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து “இக்காலந் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம் அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகளெல்லாம் விளங்க யாமே அமர்ந்து விளையாடுகின்றாம்” என்னுந் திருக்குறிப்பை வெளிப்படுத்தி, அருட்பெருஞ் ஜோதியராய் வீற்றிருக்கின்றார்.

          ஆகலின், அடியிற் குறித்த தருணந்தொடங்கி வந்து வந்து தரிசிக்கப் பெறுவீர்களாகிற் கருதிய வண்ணம் பெற்றுக் களிப்படைவதும் அன்றி, இறந்தவர் உயிர்பெற்றெழுதல் மூப்பினர் இளமையைப்பெற்று நிற்றல் முதலிய பலவகை அற்புதங்களைக் கண்டு பெருங்களிப்பும் அடைவீர்.

                                      இங்ஙனம்
                   சிதம்பரம் இராமலிங்கபிள்ளை

உலக மக்களிடையே ஒரு செய்தி சென்றடைய வேண்டுமெனில் அதற்கு விளம்பரம் செய்வது மிக அவசியமாகின்றது. இன்றைய தொழில் நுட்பத்தில் விளம்பரம் செய்வது மிக எளிதான ஒன்றாக இருக்கின்றது. முகநூல் (Facebook) போன்ற சமூக வலைதளங்களில் நாம் ஒரு செய்தியை பதிவிட்டால் அச்செய்தியானது உலகம் முழுதும் ஒரு நொடிக்கும் மிகக்குறைவான நேரத்தில் சென்றடைந்துவிடுகின்றது. ஆனால் வள்ளற்பெருமான் வெளிப்பட வாழ்ந்த காலத்தில் அவ்வாறில்லை. எனினும் வள்ளற்பெருமான் இறை செய்தியை தமது திருவருட்பா பாடல்கள் மூலமும் உரைநடை மூலமும் விளம்பரப்படுத்தினார். அது சென்றடைய வேண்டியவர்களுக்கு சென்றடைந்தது.

தாம் வாழுகின்ற வடலூரில் சத்திய ஞான சபையை வள்ளற்பெருமான் தோற்றுவித்தார். அதனை உலக மக்களிடையே தெரிவிக்க வேண்டும் என விரும்பினார். உடனே தம் கைப்பட அச்சபையின் நோக்கம் என்ன? பயன் என்ன? என்பதைப் பற்றி உரைநடையாக எழுதி அடியில் “சிதம்பரம் இராமலிங்கபிள்ளை” என தம் கையொப்பம் இட்டு இவ்வுலகிற்கு வெளியிட்டார். அவர் வெளியிட்ட மாதம் நவம்பர் 25-ஆம் தேதி 1972-ஆம் வருடமாகும். நாமும் இப்போது நவம்பர் மாதத்தில் இச்செய்தியினை படித்துக்கொண்டிருக்கின்றோம் என்பதை நினைவில் கொள்க.

இவ்வுலகிலே பலதரப்பட்ட எண்ணிலடங்காத தேக வகைகள் உள்ளன. அவ்வகைகளிலே மனித தேகம் கிடைப்பது மிக அரிது என்பது நமக்கு எல்லாம் தெரியும். ஆனால் தெரிந்ததை புரிந்துக்கொள்வார் மிகச்சிலரே. அவ்வாறு புரிந்துக்கொள்வார்களை தமது நண்பர்களாக வள்ளற்பெருமான் அவ்விளம்பரத்தில் தொடக்கத்தில் எழுதுகின்றார்.

‘உலகத்தினிடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்களே!’ என்று தம் தேகத்தை ஒத்த நண்பர்களுக்கு ஞான சபை செய்தியை வெளிப்படுத்துகின்றார். இந்நிகழ்ச்சியை வெளிப்படுத்த என்ன காரணம்?

காரணம்: வள்ளற்பெருமானின் பேராசையே இதற்கு காரணமாக அமைந்துள்ளது. அப்பேராசை என்பது “ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை” என்பதாகும். இவ்வுரிமை சுத்த சன்மார்க்க லக்ஷியமாகும்.

அற்புத அறிவுகள், அற்புத குணங்கள், அற்புத கேள்விகள், அற்புத செயல்கள், அற்புத காட்சிகள், அற்புத அனுபவங்கள் போன்ற அற்புதங்களால் நான் மிகவும் களிப்புற்று இருக்கின்றேன். அக்களிப்பினை என்னைப்போன்று மனித தேகம் எடுத்த நீங்கள் எல்லோரும் பெறுதல் வேன்டும் என்ற பேராசையால் எழுதப்பட்ட விளம்பரம் இது என்று வள்ளற்பெருமானே உரைக்கின்றார். இவ்விளம்பரத்தின் நோக்கம் என்ன?

நோக்கம்: உண்மைக் கடவுள் ஒருவரே. அவர் தனிப்பெருந்தலைமாயான அருட்பெருஞ்ஜோதியர் ஆவார், என்ற உண்மையை தம் தேகத்தை ஒத்த நண்பர்களுக்கு தெரிவிப்பதுவே இவ்விளம்பரத்தின் நோக்கமாக இருக்கின்றது. இது பொது நோக்கம் எனலாம். இதன் உள் நோக்கம் என்னவாக இருக்கும்?

உள்நோக்கம்: உண்மையான ஒரே கடவுளை, தம்மை ஒத்த இவ்வுலகர்களும் அறிந்து அன்பு செய்து அருளை அடைந்து அழிவில்லாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வை மரணமிலா பெருவாழ்வை பெற்று வாழவேண்டும் என்பதும்,

அவ்வாறு வாழாமல் பலவேறு கற்பனைகளால், பலவேறு சமயங்களிலும், பலவேறு மதங்களிலும், பலவேறு மார்க்கங்களிலும், பலவேறு லக்ஷியங்களிலும் ஈடுபட்டு பிறந்து பிறந்து அவத்தை வசத்தர்களாகிச் சிற்றறிவும் இல்லாது விரைந்து விரைந்து பலவேறு ஆபத்துகளால் துன்பத்தில் அழுந்தி இறந்திறந்து வீண் போகின்றவர்களை, இனியும் வீண் போகாமல் இந்த ஞான சபையையும் அதில் வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதியரையும் வந்து வந்து வணங்கிச் செல்லுதல் வேண்டும்.

எல்லா சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொது நெறியாகிய சுத்த சன்மார்க்கத்தை கடைபிடித்து பெருஞ் சுகத்தையும், பெருங் களிப்பையும் இம்மக்கள் அடைதல் வேண்டும். நினைத்த வண்ணம் நிறைவேறும் அதிசயத்தையும், இறந்தவர் உயிர்பெற்றெழுதல், வயதானவர்கள் இளமையைப் பெற்று களிப்படைதல் போன்ற அற்புதங்களும் இந்த ஞான சபை வளாகத்தில் நடைபெறுவதை காண்பீர்கள் என்ற தமது உள்நோக்கத்தையும் வள்ளலார் இவ்விளம்பரத்தில் வெளிப்படுத்துகின்றார்.

இச்சத்திய ஞான சபையை நான் எனது உடல் உள்ளே அனுபவத்தில் பார்த்துக்கொள்கிறேன் என்பவர்கள் சுத்த சன்மார்க்கிகள் ஆவர். ஆனாலும் அவர்களும் புறத்திலே வடலூரில் அமைந்துள்ள அருட்பெருஞ்ஜோதியரை வந்து வணங்காமல் அகம்பாவம் கொண்டிருந்தால் அவர்களது உள்முகப் பயணம் தடைபடும். அகத்திலே பார்ப்பவர்கள் புறத்திலும் பார்க்க வேண்டும். புறத்தே பார்ப்பவர்கள் அகத்திலும் பார்க்க வேண்டும். அகமும் புறமும் நிறைந்தால்தான் மேற்சொன்ன அற்புதங்கள் நிகழும்.


வள்ளற்பெருமான் வடலூரில் அமைத்த சபை மட்டுமே சத்திய ஞான சபையாகும். உலகியர்களால் ஆங்காங்கு கட்டப்பட்டு இதே பெயரிலோ அல்லது சற்று மாறுபட்ட பெயரிலோ வழங்கிவரும் சபைகளில் இவ்வற்புதம் நிகழாது. வள்ளற்பெருமான் மீது பற்று வைத்துள்ளவர்கள் ஞான சபைகளை கட்டுவித்தல் கூடாது. சன்மார்க்க சங்கங்கள் மட்டுமே தோற்றுவித்தல் வேண்டும் என்பதனையும் நாம் இவ்விளம்பரம் மூலம் தெரிந்துக்கொள்ள வேன்டும் என்பது எனது பேராசை.

–தி.ம.இராமலிங்கம்.


93-ஆம் ஆண்டு குருபூஜை அழைப்பு

=====93-ஆம் ஆண்டு குருபூஜை அழைப்பு=====

அன்புடையீர்!

நிகழும் வள்ளலார் வருடம் 195 / தமிழ் பொற்றடை வருடம் கார்த்திகை 09-ஆம் நாள் சனிக்கிழமை அவிட்ட நட்சத்திரம் (25-11-2017) காலை 10.00 மணியளவில் வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் சமரச பஜனை காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயாவின் 93-ஆம் ஆண்டு குரு பூஜை அருள் நிலையத்தில் நடைபெறவுள்ளது. அவ்வமயம் வள்ளற்பெருமானின் அருள் அவரது அணுக்கத்தொண்டருக்கும் சன்மார்க்க அன்பர்களுக்கும் அவரவர்கள் அனுபவத்திற்கு ஏற்ப கிடைப்பது உறுதி. 

காரணப்பட்டில் வசிக்கும் புற இனத்தார்கள் எல்லாம் விரைவில் அக இனமாக மாற வேண்டும் என வள்ளற்பெருமான் காரணப்பட்டு மக்களையும் உலக மக்களையும் அவ்வாறே இங்கு அழைக்கின்றார். எனவே சன்மார்க்க அன்பர்களும் பொது மக்களும் நவம்பர் 25-ஆம் தேதி காலை 10-மணியளவில் சமரஜ பஜனையாம் ஜோதி வழிபாட்டில் கலந்துக்கொண்டு அருள் நிலையத்தின் அருளை பெற வேண்டுகின்றோம்.

கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து காரணப்பட்டிற்கு, நகர பேருந்து எண்:20 கீழ்கண்ட நேரங்களில் புறப்படும். அப்பேருந்தை பயன்படுத்தி அன்பர்கள் இங்கு வந்து தரிசித்து செல்லலாம்.

காலை 07.00 மணி
மதியம் 02.00 மணி
இரவு 07.00 மணி

மேலும் விவரங்களுக்கு 9445545475 என்கின்ற எண்ணினை தொடர்பு கொள்ளவும். நன்றி.

இங்ஙனம்
திருவருட்பிரகாச வள்ளலார்
ச.மு.க. ஐயாவின் வழித்தோன்றல்கள்
சுத்த சன்மார்க்க அன்பர்கள்
காரணப்பட்டு கிராம மக்கள்   


Friday, November 3, 2017

நான் ஏன் கவிதை எழுத விரும்புகின்றேன்?



நான் ஏன் கவிதை எழுத விரும்புகின்றேன்?
  

“என் குரல் கவிதையென்றால் என் மௌனமும் கவிதையே..”

* ஒரு நல்ல "பெண்"ணாக வாழ வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுவதை வெறுக்கிறேன். தீயவைகள் என்று சொல்லப்படுபவை மேல் பெரும் ஈர்ப்பு நீடிக்கிறது. பொய்கள் பிடித்திருக்கிறது. பொறாமை வரும்போது ரத்தம் துள்ளி அடங்குவதில் தினவு ஏற்படுகிறது. விசுவாசமாக இருக்கவேண்டும் என்று போதிப்பவர்களை ஏளனம் செய்ய விருப்பமாக இருக்கிறது. வரலாறு என்று சொல்லப்படுவதின் முகத்தில் சீற்றத்தை உமிழ நாக்கில் எச்சில் ஊறுகிறது. முன்னாக, பின்னாக, குறுக்காக நடந்து செல்பவர்களின் கால்களை மிதித்துக் கடந்து செல்ல உந்துதலாக இருக்கிறது. பாவங்களை செய்துப் பார்க்கும்போது வாழ்வு சுவைக்கிறது. குற்றவாளி பட்டம் பிடிக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக என்னை இழக்க ஆர்வமாக இருக்கிறது. புண்களைக் காற்றுக்கும், மழைக்கும், வெயிலுக்கும் திறந்துவிட்டு பறவைகளை கொத்தவிட தோன்றுகிறது. காலத்தை உயிரோடு பிடித்து தின்னும் ஆர்வம் ஆட்டுவிக்கிறது. சொற்கள் மட்டுமே எனக்கு இவற்றையெல்லாம் சாத்தியப்படுத்துகின்றன.

* ஒரு சொல்லால் வாழ்க்கையை தீண்ட விரும்புகிறேன். அந்த ஒரு சொல்லிற்காக காத்திருக்கிறேன். இறைஞ்சுகிறேன். காமமுறுகிறேன். அவமானப்படுகிறேன். தண்டிக்கப்படுகிறேன். அதன் நீள அகலத்தில் வெறி பிடித்து அலைகிறேன். கனவுகளின் தடங்களில் தாவி மோப்ப நாயாய் இரைகிறேன். ஒளியின் நூல்கண்டுகளில் என்னைத் தைத்துக்கொண்டு ஆழ்கடல்களிலும், வனாந்திரங்களிலும், குகைகளிலும் அதன் தடயங்களை துழாவுகிறேன். விடியும் ஒவ்வொரு நாளும் சூரியன் என் மீது கொட்டும் தூசில் எரியும் துகளாகிறேன். சொல், ஒரு பார வண்டியைப் போல மூவாயிரம் ஆண்டுகளை, அர்த்தங்களை, புனிதங்களை, போர்களை, பலிகளை, இழுத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருப்பது மரணத்தின் வாயிலிலும் மூட மறுக்கும் என் கண்களுக்கு புலப்படுகிறது.

* மரணம் என்னை அவமதிக்கிறது. வாழ்விற்கும் சாவிற்கும் இடையே ஒரு அற்ப மின்னற்பொழுதாய் இருப்பை இமைக்கிறது. அன்புக்குரியவர்களை வழிப்பறி செய்யும் அதன் ரகசியக் கைகளில் கருணையின் விரல்களை எண்ணித் தோற்கும் போது அந்த கணத்தின் இடிபாடுகளிடையே உறைந்து விடாமல், மேலெழும்ப வேண்டியிருக்கிறது. என் தந்தையின் மரணத்தை எழுதிப் பார்த்த போது, மூழ்கிக் கொண்டிருந்த என்னை யாரோ கரைக்கு இழுத்துவந்து போட்டது போல உணர்ந்தேன். என்னை மீட்டது எது? இழந்ததை இழந்தவாறு மீட்க முடியாது, ஆனால் கவிதையாக மீட்டுக்கொள்ள முடியும் என்று நம்ப தொடங்கினேன். தற்காலிகங்களின் நெருக்கடிகளில் நசிந்துக்கொண்டே அமரத்துவத்தை கற்பனை செய்து பார்க்க கவிதை உதவியது. கடந்துக் கொண்டே இருப்பதை உறைய வைக்க முடியுமா? உறைந்து நிற்பதைக் கடந்து செல்ல முடியுமா? கவிதை விடையல்ல! கவிதை ஒரு நித்தியக் கேள்வி!

* விடை தேடுவது சித்தாந்தத்தின் வேலை. ஆனால் கேள்வியின் பள்ளத்தாக்குகளில் சறுக்கி விளையாடுவது கலை. இதையும் கூட "அறுதி"யிட்டு சொல்லிவிட முடியாதபடி என்னைத் தடுக்கிறது கவிதை. அரத்தங்களின் முட்டுச்சந்தில் எப்போதும் கோடை. உணர்வுகளின் புதர்களில் மட்டுமே கூதலும், மழையும், பனியும், வெயிலும், வசந்தமுமாய் பருவங்கள் மாறுகின்றன. உடல், கவிதையின் வரிகளுக்கிடையே பட்டு பூத்து காய்த்து கனிந்து உதிர்ந்து தழைக்கும். ஆனால் 'உடல்' என்ற அர்த்தப்பூர்த்தியாக வெளிப்படாது. கவிதைக்கு எதுவும் புதிதல்ல. ஆனால் ஒவ்வொன்றும் தனித்துவமானது. அன்றாடங்களின், உடனடிகளின், வழமைகளின் சதுரத்தில் நின்றுக்கொண்டு அதன் முனைகளை உடைத்து திறப்புகளை உருவாக்க கவிதையை தவிர வேறு கொழு கொம்பு எனக்கு கிடைக்கவில்லை.

* கவிதை கைமரமாய் படர்ந்து பிரிந்து கிளைத்து கூடும் ஒரு பிரத்யேக கூரை. அதன் நிழலில் நின்று சிகிச்சை பெற்றுக்கொள்வதை தான் மாயம் என்று கருதுகிறேன். மொழியற்ற குரல் எனது காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அதைப் பார்த்து தொட்டு உணரத் தூண்டப்படும் போது எழுதிப் பார்க்கிறேன். இந்த ரசவாதம் நிகழும்போதெல்லாம் அதிசயமாய் தோன்றுகிறது. எங்கும் ஒளி நிரம்புகிறது. திளைப்பு ஒரு போதை. அதில் மிதக்கும்போது வாழ்வு கொண்டாட்டமாக விரிகிறது. தெளியும் போது ஒரு அனாதைத் தனம் வழ்ந்துக் கொண்டு வாட்டுகிறது. கவிதை என்னைத் தேர்ந்தெடுக்கும் பொழுது மீள்கிறேன். கைவிடும் பொழுது மாய்கிறேன். முழுமையாக ஒப்புக்கொடுக்கும் வரை ரகசியங்கள் புலப்படுவதில்லை. 

* ரகசியங்களை என்ன செய்வது? ஆற்றில், அந்தியில், மூங்கில் காடுகளில், நெல்லிக்கனியில், சம்பங்கியில், தானியங்களில், குருவிக்கூட்டில், பரிசலில், ரயில் தண்டவாளங்களில், அஞ்சறைப் பெட்டியில் என எதன் மடிப்பிலாவது ஒளித்து வைக்கலாம் தான். ஆனால் ஒரு ரகசியம் தன்னை விடுவிக்கச் சொல்லி கோரிக்கை வைத்தால் கவிதையைத் தான் நாடுவேன். கவிதை தனக்கென்று சிறுதும் பெரிதுமாக குகைகளை வைத்திருக்கிறது. அதிலொன்றின் தண்ணென்ற கல்படுக்கையில் கையளிக்கப்பட்ட ரகசியத்தை உலர்த்தப் போடும். முழுமையாக அம்பலப்படுத்திவிட முடியாத செய்தியை ஒரு அழகிய மர்மமாக்கி வெளிப்படுத்தும். ரகசியத்தைக் கட்டுடைத்து ஒரு நாடோடிப் பாடலாக்கி வரையறையின்றி இசைக்க வைக்க கவிதையால் மட்டுமே முடியும். கவிதையின் சாரம் சாகசம். எண்ணற்ற சாத்தியப்பாடுகளை தனக்குள் வைத்துக்கொண்டு ஒரு தேர்ந்த வித்தைக்காரிக்காக மந்தகாசத்துடன் காத்துக்கொண்டிருக்கிறது கவிதை. 

* கவிதை ஆபத்தானது. அவசியமானது. ஏனெனில் கவிதை என்னை ஆழ அகல திறக்கிறது. பாகம் பாகமாகப் பிரித்து என் கைகாலாலேயே மீண்டும் என்னைப் புதிதாக மாற்றிப் பூட்டுகிறது. நுண்கரங்களால் என்னை ஆட்டுவிக்கும் அதிகாரத்தின் அலகுகளையும் எனக்கு காட்டிக்கொடுக்கிறது. மொழியின் கொடுங்கோன்மையை விமர்சிக்கவும், எதிர்க்கவும், சவால் விடவும் கூட கவிதையே எனக்கு சரியான ஆயுதமாக இருக்கிறது. பிறப்பு தரும் அடையாளங்களை ஏற்கவும், மறுக்கவும், விலகவும் அடையாளமற்ற அடையாளமாக தரித்துக்கொள்ளும் வெளியை கவிதை உருவாக்கித் தருகிறது. மனித இனம் தாண்டி, கடலும், மழையும், பறவைகளும், விலங்குகளும், பூச்சிகளும், தாவரங்களும், முகடுகளும், மேகங்களும், காற்றும், மண்ணும் தங்களுக்குள் பேசிக்கொள்வதை விளங்கிக்கொள்ளவும், அவற்றோடு உரையாடவும் கவிதை கற்றுத் தருகிறது. லௌகீக உலகிற்கு வெளியே அழகையும், இன்பத்தையும் பார்க்க வைப்பதும், நுகர்வுக்கு வெளியே இயங்க வைப்பதுமாய் கவிதை மீண்டும் மீண்டும் மானுடத்தின் பக்கமே உந்தி தள்ளுகிறது. 

* எனக்கும் என் சக ஜீவராசிக்கும் இடையில் இருக்கும் தூரம் என்ன? நான் என்னை அழைப்பது எல்லா சமயங்களிலும் எனக்கு கேட்கிறதா? சில சமயங்களில் என் ஒரு உள்ளங்கையால் இன்னொரு உள்ளங்கையை கூட தொட முடியாத அளவு தொலைவு நிகழ்ந்துவிடும். கவிதை மட்டுமே என்னுடனான என் நெருக்கத்தை தூண்டும். என்னை நோக்கியப் பாதையில் திடமாக என்னை நடக்க வைக்கும். என்னால் எல்லாவற்றையும் பேச முடியாதபோது, பாடுகிறேன் என்றொரு ஆப்ரிக்கப் பழங்குடி சொல்லாடல் உண்டு. அன்பில் ஒரு உயிருக்கும் மற்றொரு உயிருக்கும் நடுவிலிருக்கும் இடைவெளியை கடப்பது தான் சிறந்தப் பயணம் என்றால் அதை கவிதை கொண்டு என்னால் மேற்கொள்ள முடிகிறது. கவிதை ஒன்றை எழுதி முடிக்கும் போது ஏதொ ஒன்று நிரம்பி வழிகிறது. அது விவரிக்க இயலாதது. 

* என் குரல் கவிதையென்றால் என் மௌனமும் கவிதையே!

* தொடர்ந்து வாழ்வதற்கான வேட்கையை தரும் கவிதையை தவிர வேறு வாக்குறுதி இப்போதைக்கு என்னிடம் இல்லை.
----லீனா மணிமேகலை.

அநகாரிக தர்மபாலா, ஆறுமுக நாவலர்



அநகாரிக தர்மபாலா, ஆறுமுக நாவலர் : இனவாத நாணயத்தின் இரு முகங்கள் 



சிங்கள இனவாதிகளின் பிதாமகனாக கருதப்படும் அநகாரிக தர்மபாலா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்கள் :

1. இங்கேயுள்ள படத்தில், விவேகானந்தருக்கு இடது பக்கம் அமர்ந்திருப்பவர் தான் அநகாரிக தர்மபால. 1893 ம் ஆண்டு, சான் பிரான்சிஸ்கோ நகரில் நடந்த சர்வதேச மதங்களின் பாராளுமன்றத்தில் கலந்து கொண்ட பொழுது எடுக்கப் பட்ட படம் அது.

2. அநகாரிக தர்மபாலாவின் இயற்பெயர் "Don David Hewavitharana". அவர் பிறப்பால் கத்தோலிக்க கிறிஸ்தவர். ஆங்கிலம் மட்டுமே பேசத் தெரிந்த சிங்கள மேட்டுக்குடிப் பிரஜை. கத்தோலிக்க பாடசாலையில் கல்வி கற்று, விவிலிய படிப்பில் பாண்டித்தியம் பெற்றவர். (சுருக்கமாக: ஒரு சிங்கள ஆறுமுக நாவலர்.)

3. 1886 ம் ஆண்டு, மேலைத்தேய நாட்டவரின் ஆன்மீக சபையான "Buddhist Theosophical Society" இல் இணைந்து கொண்டார். அந்த சபையானது, பௌத்த மதத்தை தழுவிக் கொண்ட ஆங்கிலேயரான Henry Steel Olcott இனால் உருவாக்கப் பட்டது. அவர் பிரிட்டிஷ் இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற கேர்னல் ஆவார். இன்றைக்கும், அநகாரிக தர்மபாலாவுக்கு அடுத்த படியாக, கேர்னல் ஒல்கொட் சிங்கள பௌத்த பேரினவாதிகளின் நாயகனாக போற்றப் படுகின்றார்.

4. பௌத்த சமயத்தை தழுவிய அநகாரிக தர்மபாலாவும், ஒல்கொட்டும், இலங்கை முழுவதும் பௌத்த மதத்தை மீள் உயிர்ப்பிக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களின் முயற்சியால் தான் மகாவம்சம் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப் பட்டது. துட்டகைமுனு சிங்களவர்களின் நாயகன் ஆனான்.

5. இலங்கையில் பௌத்த மத புத்துயிர்ப்பில் ரஷ்யப் பெண்மணியான Blavatsky யின் பங்களிப்பும் அளப்பெரியது. Blavatsky யின் தொடர்பினால் தான் அநகாரிக தர்மபாலா பாளி மொழி பயின்றார். Blavatsky யின் ஆரிய இனப்பெருமை பேசும் கருத்துக்கள் ஹிட்லரையும் ஈர்த்தன. Theosophical Society இப்போதும் சென்னை, அடையாறில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

6. இலங்கையை காலனிப் படுத்திய போர்த்துக்கேயர்களும், டச்சுக்காரர்களும் பௌத்த மதத்தை ஒடுக்கி, ஏறக்குறைய அழித்து விட்டார்கள். நாட்டில் எந்தப் பாகத்திலும் பௌத்த மதக் கல்வி போதிக்கப் படவில்லை. அநகாரிக தர்மபாலா பெருமுயற்சி எடுத்து, பௌத்த மதப் பாடசாலைகளை உருவாக்கினார். விகாரைகள் புதுப்பிக்கப் பட்டன.

7. அநகாரிக தர்மபால முன்மொழிந்த தத்துவங்கள், பிற்காலத்தில் சிங்கள-பௌத்த பேரினவாத சக்திகள் தோன்றுவதற்கு பெரிதும் உதவியது. அதனால், இன்றைக்கும் சிங்கள தேசியவாதிகள்/மதவாதிகள் அவரை மிகுந்த மரியாதையுடன் நினைவுகூருகின்றனர்.

8. மறுபக்கத்தில், தமிழ் தேசியவாதிகள்/இனவாதிகள் அநகாரிக தர்மபாலாவை வெறும் இனவாத குருவாக மட்டும் பார்க்கின்றனர். ஆனால், அதே நபர்கள் ஆறுமுக நாவலரை மரியாதையுடன் நினைவுகூரும் முரண்நகையையும் அவதானிக்கலாம்.

9. பௌத்தமும், சிங்களமும் வளர்த்த, அநகாரிக தர்மபாலா "ஒரு சிங்கள ஆறுமுகநாவலர்". சைவமும், தமிழும் வளர்த்த ஆறுமுக நாவலர், "ஒரு தமிழ் அநகாரிக தர்மபாலா". ஆனால், சிங்கள இனவாதிகளும், தமிழ் இனவாதிகளும் அதனை ஏற்றுக் கொள்ள முன்வர மாட்டார்கள்.

10. தெற்கில் பௌத்த மதத்தையும், வடக்கில் சைவ மதத்தையும் வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் உள்நோக்கம் குறித்து யாரும் அக்கறைப்படுவதில்லை. ஆனால், இன்றைய சிங்கள-தமிழ் இன முரண்பாட்டின் விதைகள் அப்போதே தூவப் பட்டிருக்கலாம். "மக்களை பிரித்தாள்வதன்" மூலமே, பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் பல நூறாண்டுகள் நிலைத்து நின்றது என்பது வரலாறு.

---Kalaiyarasan – The Netherland

சைவ- வேளாள அடிப்படைவாதி



சைவ- வேளாள அடிப்படைவாதி நாவலரை கௌரவிக்கும் சிங்களப் பேரினவாதம்

 

யாழ் நகரில், சைவ- வெள்ளாள அடிப்படைவாதி ஆறுமுக நாவலருக்கு சிலை வைப்பதற்கு, 3 மில்லியன் ரூபாய்களை ஒதுக்குவதற்கு, யாழ்ப்பாண ஆளுநர் சந்திரசிறி முன்வந்துள்ளார். யாழ் சிவில் சமூகம் என்ற பெயரில், அரசு சார்பான தமிழர்களின் குழு ஒன்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க, சிலை கட்டுவதற்கு ஆளுநர் சம்மதித்துள்ளார்.
 
யாழ்ப்பாணத்தை புலிகள் ஆண்ட காலத்தில் கட்டிய சிலைகளை எல்லாம் உடைத்து நொறுக்கிய, மாவீரர் துயிலும் இல்லங்களை கூட தரைமட்டமாக்கிய, சிங்கள இராணுவத்தின் ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர், ஆறுமுக நாவலருக்கு சிலை வைக்க முன் வந்துள்ளமை சந்தேகத்திற்குரியது. தென்னிலங்கையில் சிங்கள-பௌத்த அடிப்படைவாத சக்திகளை தூண்டி விடுவது போன்று, வட இலங்கையில் சைவ-வேளாள மேலாதிக்க சக்திகளை வளர்த்து விடும் நோக்கம், இதில் அடங்கி இருக்கலாம். சிங்கள-தமிழ் வெள்ளாள சாதி ஒற்றுமை நீண்ட கால நோக்கில், பேரினவாத அரசுக்கு நன்மை பயக்கும்.

ஒரு சைவ மத அடிப்படைவாதியான ஆறுமுக நாவலர், யாழ் சைவ-வெள்ளாள ஆதிக்க அரசியலை தோற்றுவித்த பிதாமகன் ஆக, சாதியவாதிகளால் போற்றப் படுகின்றார். சைவத்தையும், தமிழையும் வளர்த்ததோடு நில்லாது, சாதியத்தையும் உயர்த்திப் பிடித்த ஆறுமுக நாவலர்; சைவத் தமிழர்களின் கிறிஸ்தவ மத மாற்றத்திற்கு எதிராக, கடுமையாக போராடியவர் என்பது குறிப்பிடத் தக்கது. அவரது காலத்தில் வாழ்ந்த சிங்கள- பௌத்த அடிப்படைவாதியான அநகாரிக தர்மபால, இன்றைய பொதுபல சேனா வகையறாக்களும், இந்தப் புள்ளியில் ஒன்று சேர்கின்றனர்.

யாழ் நகரில், அரசு நிதியில் நாவலருக்கு சிலை அமைப்பதற்கு, "தமிழ் இன உணர்வாளர்", "தமிழ் தேசியவாதி" என்று அழைத்துக் கொள்ளும் யாரும், இன்று வரையில் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்களில், தமிழ் தேசிய ஆர்வலர்கள் கள்ள மௌனம் சாதிக்கின்றனர். இதிலிருந்தே, வலதுசாரி தமிழ்க் குறுந் தேசியவாதிகளின், உயர் சாதிப் பற்றை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

"சைவமும், தமிழும் வளர்த்தார்" என்று போற்றப்படும் ஆறுமுக நாவலர், தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் தமிழர்களாக ஏற்றுக் கொண்டவரா? அல்லது சைவ சமயத்தை பின்பற்றும் எல்லோரையும் சைவர்களாக ஏற்றுக் கொண்டிருந்தாரா? ஆறுமுக நாவலரைப் பொறுத்தவரையில், அவர் சைவத்தையும், தமிழையும், உயர் சாதியினரின் மேட்டுக்குடி கலாச்சாரமாக மட்டுமே கருதினார்.

நான் அப்போது, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். யாழ் சைவ சித்தாந்தக் கழகம், அரச பாடத் திட்டத்திற்குள் அடங்காமல், தனியாக ஒரு சைவ சமய பொதுப் பரீட்சை நடத்தி வந்தது. அந்தப் பரீட்சையில் போட்டியிட்டு தேறி, சான்றிதழ் பெற்றுக் கொண்டேன். பரீட்சைக்கு தயார் படுத்துவதற்காக, ஆறுமுக நாவலர் எழுதிய "சைவ சமயம் வினா- விடை" படிக்கத் தந்தார்கள். அந்த நூலில் ஓரிடத்தில் இருந்த நாவலரின் பதில் எனது கண்களுக்கு சாதிவெறி கொண்டதாக தென்பட்டது. அது இப்போதும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.

"திருநீறு பூசும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்" பற்றி நாவலர் எழுதி இருந்தார். அதில் ஒன்று, "திருநீறு பூசும் நேரம், எளிய சாதிகள் குறுக்கே வரக் கூடாது." என்றிருந்தது. தமிழ் தேசியமும், தமிழீழப் போராட்டமும் வீறு கொண்டெழுந்த காலகட்டம் அது. "நாம் தமிழர்கள்" என்ற கோணத்தில் இருந்து பார்க்கும் பொழுது, ஆறுமுக நாவலர் எனது கண்களுக்கு சாதிமானாக தென்பட்டார். அவரைப் பொறுத்தவரையில், "எளிய சாதிகள்" என்ற தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் தமிழர்களாகத் தெரியவில்லை. குறைந்த பட்சம், அவர்களை சைவர்களாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கூட, ஆறுமுக நாவலரிடம் இருக்கவில்லை. ஆனால், அவர் தான் "சைவத்தையும், தமிழையும் வளர்த்தார்" என்பது ஒரு வரலாற்று முரண் நகை.

ஆறுமுக நாவலர் எழுதிய சைவ வினா விடை நூலில் இருந்து ஒரு பகுதியை கீழே தருகிறேன். நாவலர் ஒரு தமிழ் தேசியவாதியா அல்லது சாதியவாதியா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்:

//சண்டாளருடைய நிழல் படினும், இழிந்த சாதியாரும் புறச்சமயிகளும், வியாதியாளரும், சனன மரணா செளசமுடையவரும், நாய், கழுதை, பன்றி, கழுகு, கோழி முதலியவைகளும் தீண்டினும், எலும்பு, சீலை முதலியவற்றை மிதிக்கினும், க்ஷெளரஞ் செய்து கொள்ளினும், சுற்றத்தார் இறக்கக் கேட்கினும், துச்சொப்பனங் காணினும், பிணப் புகை படினும், சுடுகாட்டிற் போகினும், சர்த்தி செய்யினும் உடுத்த வஸ்திரத்துடனே ஸ்நானஞ் செய்வது ஆவசியம்.//

//தீண்டலினாலே எவ்வெப்பொழுது குற்றமில்லை?

சிவதரிசனத்திலும், திருவிழாவிலும், யாகத்திலும், விவாகத்திலும், தீர்த்த யாத்திரையிலும், வீடு அக்கினி பற்றி எரியுங் காலத்திலும், தேச கலகத்திலும், சன நெருக்கத் தீண்டலினாலே குற்றமில்லை.// 
(ஆறுமுக நாவலரின் சைவ வினா விடை 2)

---- Kalaiyarasan – The Netherland