Friday, November 3, 2017

நான் ஏன் கவிதை எழுத விரும்புகின்றேன்?



நான் ஏன் கவிதை எழுத விரும்புகின்றேன்?
  

“என் குரல் கவிதையென்றால் என் மௌனமும் கவிதையே..”

* ஒரு நல்ல "பெண்"ணாக வாழ வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுவதை வெறுக்கிறேன். தீயவைகள் என்று சொல்லப்படுபவை மேல் பெரும் ஈர்ப்பு நீடிக்கிறது. பொய்கள் பிடித்திருக்கிறது. பொறாமை வரும்போது ரத்தம் துள்ளி அடங்குவதில் தினவு ஏற்படுகிறது. விசுவாசமாக இருக்கவேண்டும் என்று போதிப்பவர்களை ஏளனம் செய்ய விருப்பமாக இருக்கிறது. வரலாறு என்று சொல்லப்படுவதின் முகத்தில் சீற்றத்தை உமிழ நாக்கில் எச்சில் ஊறுகிறது. முன்னாக, பின்னாக, குறுக்காக நடந்து செல்பவர்களின் கால்களை மிதித்துக் கடந்து செல்ல உந்துதலாக இருக்கிறது. பாவங்களை செய்துப் பார்க்கும்போது வாழ்வு சுவைக்கிறது. குற்றவாளி பட்டம் பிடிக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக என்னை இழக்க ஆர்வமாக இருக்கிறது. புண்களைக் காற்றுக்கும், மழைக்கும், வெயிலுக்கும் திறந்துவிட்டு பறவைகளை கொத்தவிட தோன்றுகிறது. காலத்தை உயிரோடு பிடித்து தின்னும் ஆர்வம் ஆட்டுவிக்கிறது. சொற்கள் மட்டுமே எனக்கு இவற்றையெல்லாம் சாத்தியப்படுத்துகின்றன.

* ஒரு சொல்லால் வாழ்க்கையை தீண்ட விரும்புகிறேன். அந்த ஒரு சொல்லிற்காக காத்திருக்கிறேன். இறைஞ்சுகிறேன். காமமுறுகிறேன். அவமானப்படுகிறேன். தண்டிக்கப்படுகிறேன். அதன் நீள அகலத்தில் வெறி பிடித்து அலைகிறேன். கனவுகளின் தடங்களில் தாவி மோப்ப நாயாய் இரைகிறேன். ஒளியின் நூல்கண்டுகளில் என்னைத் தைத்துக்கொண்டு ஆழ்கடல்களிலும், வனாந்திரங்களிலும், குகைகளிலும் அதன் தடயங்களை துழாவுகிறேன். விடியும் ஒவ்வொரு நாளும் சூரியன் என் மீது கொட்டும் தூசில் எரியும் துகளாகிறேன். சொல், ஒரு பார வண்டியைப் போல மூவாயிரம் ஆண்டுகளை, அர்த்தங்களை, புனிதங்களை, போர்களை, பலிகளை, இழுத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருப்பது மரணத்தின் வாயிலிலும் மூட மறுக்கும் என் கண்களுக்கு புலப்படுகிறது.

* மரணம் என்னை அவமதிக்கிறது. வாழ்விற்கும் சாவிற்கும் இடையே ஒரு அற்ப மின்னற்பொழுதாய் இருப்பை இமைக்கிறது. அன்புக்குரியவர்களை வழிப்பறி செய்யும் அதன் ரகசியக் கைகளில் கருணையின் விரல்களை எண்ணித் தோற்கும் போது அந்த கணத்தின் இடிபாடுகளிடையே உறைந்து விடாமல், மேலெழும்ப வேண்டியிருக்கிறது. என் தந்தையின் மரணத்தை எழுதிப் பார்த்த போது, மூழ்கிக் கொண்டிருந்த என்னை யாரோ கரைக்கு இழுத்துவந்து போட்டது போல உணர்ந்தேன். என்னை மீட்டது எது? இழந்ததை இழந்தவாறு மீட்க முடியாது, ஆனால் கவிதையாக மீட்டுக்கொள்ள முடியும் என்று நம்ப தொடங்கினேன். தற்காலிகங்களின் நெருக்கடிகளில் நசிந்துக்கொண்டே அமரத்துவத்தை கற்பனை செய்து பார்க்க கவிதை உதவியது. கடந்துக் கொண்டே இருப்பதை உறைய வைக்க முடியுமா? உறைந்து நிற்பதைக் கடந்து செல்ல முடியுமா? கவிதை விடையல்ல! கவிதை ஒரு நித்தியக் கேள்வி!

* விடை தேடுவது சித்தாந்தத்தின் வேலை. ஆனால் கேள்வியின் பள்ளத்தாக்குகளில் சறுக்கி விளையாடுவது கலை. இதையும் கூட "அறுதி"யிட்டு சொல்லிவிட முடியாதபடி என்னைத் தடுக்கிறது கவிதை. அரத்தங்களின் முட்டுச்சந்தில் எப்போதும் கோடை. உணர்வுகளின் புதர்களில் மட்டுமே கூதலும், மழையும், பனியும், வெயிலும், வசந்தமுமாய் பருவங்கள் மாறுகின்றன. உடல், கவிதையின் வரிகளுக்கிடையே பட்டு பூத்து காய்த்து கனிந்து உதிர்ந்து தழைக்கும். ஆனால் 'உடல்' என்ற அர்த்தப்பூர்த்தியாக வெளிப்படாது. கவிதைக்கு எதுவும் புதிதல்ல. ஆனால் ஒவ்வொன்றும் தனித்துவமானது. அன்றாடங்களின், உடனடிகளின், வழமைகளின் சதுரத்தில் நின்றுக்கொண்டு அதன் முனைகளை உடைத்து திறப்புகளை உருவாக்க கவிதையை தவிர வேறு கொழு கொம்பு எனக்கு கிடைக்கவில்லை.

* கவிதை கைமரமாய் படர்ந்து பிரிந்து கிளைத்து கூடும் ஒரு பிரத்யேக கூரை. அதன் நிழலில் நின்று சிகிச்சை பெற்றுக்கொள்வதை தான் மாயம் என்று கருதுகிறேன். மொழியற்ற குரல் எனது காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அதைப் பார்த்து தொட்டு உணரத் தூண்டப்படும் போது எழுதிப் பார்க்கிறேன். இந்த ரசவாதம் நிகழும்போதெல்லாம் அதிசயமாய் தோன்றுகிறது. எங்கும் ஒளி நிரம்புகிறது. திளைப்பு ஒரு போதை. அதில் மிதக்கும்போது வாழ்வு கொண்டாட்டமாக விரிகிறது. தெளியும் போது ஒரு அனாதைத் தனம் வழ்ந்துக் கொண்டு வாட்டுகிறது. கவிதை என்னைத் தேர்ந்தெடுக்கும் பொழுது மீள்கிறேன். கைவிடும் பொழுது மாய்கிறேன். முழுமையாக ஒப்புக்கொடுக்கும் வரை ரகசியங்கள் புலப்படுவதில்லை. 

* ரகசியங்களை என்ன செய்வது? ஆற்றில், அந்தியில், மூங்கில் காடுகளில், நெல்லிக்கனியில், சம்பங்கியில், தானியங்களில், குருவிக்கூட்டில், பரிசலில், ரயில் தண்டவாளங்களில், அஞ்சறைப் பெட்டியில் என எதன் மடிப்பிலாவது ஒளித்து வைக்கலாம் தான். ஆனால் ஒரு ரகசியம் தன்னை விடுவிக்கச் சொல்லி கோரிக்கை வைத்தால் கவிதையைத் தான் நாடுவேன். கவிதை தனக்கென்று சிறுதும் பெரிதுமாக குகைகளை வைத்திருக்கிறது. அதிலொன்றின் தண்ணென்ற கல்படுக்கையில் கையளிக்கப்பட்ட ரகசியத்தை உலர்த்தப் போடும். முழுமையாக அம்பலப்படுத்திவிட முடியாத செய்தியை ஒரு அழகிய மர்மமாக்கி வெளிப்படுத்தும். ரகசியத்தைக் கட்டுடைத்து ஒரு நாடோடிப் பாடலாக்கி வரையறையின்றி இசைக்க வைக்க கவிதையால் மட்டுமே முடியும். கவிதையின் சாரம் சாகசம். எண்ணற்ற சாத்தியப்பாடுகளை தனக்குள் வைத்துக்கொண்டு ஒரு தேர்ந்த வித்தைக்காரிக்காக மந்தகாசத்துடன் காத்துக்கொண்டிருக்கிறது கவிதை. 

* கவிதை ஆபத்தானது. அவசியமானது. ஏனெனில் கவிதை என்னை ஆழ அகல திறக்கிறது. பாகம் பாகமாகப் பிரித்து என் கைகாலாலேயே மீண்டும் என்னைப் புதிதாக மாற்றிப் பூட்டுகிறது. நுண்கரங்களால் என்னை ஆட்டுவிக்கும் அதிகாரத்தின் அலகுகளையும் எனக்கு காட்டிக்கொடுக்கிறது. மொழியின் கொடுங்கோன்மையை விமர்சிக்கவும், எதிர்க்கவும், சவால் விடவும் கூட கவிதையே எனக்கு சரியான ஆயுதமாக இருக்கிறது. பிறப்பு தரும் அடையாளங்களை ஏற்கவும், மறுக்கவும், விலகவும் அடையாளமற்ற அடையாளமாக தரித்துக்கொள்ளும் வெளியை கவிதை உருவாக்கித் தருகிறது. மனித இனம் தாண்டி, கடலும், மழையும், பறவைகளும், விலங்குகளும், பூச்சிகளும், தாவரங்களும், முகடுகளும், மேகங்களும், காற்றும், மண்ணும் தங்களுக்குள் பேசிக்கொள்வதை விளங்கிக்கொள்ளவும், அவற்றோடு உரையாடவும் கவிதை கற்றுத் தருகிறது. லௌகீக உலகிற்கு வெளியே அழகையும், இன்பத்தையும் பார்க்க வைப்பதும், நுகர்வுக்கு வெளியே இயங்க வைப்பதுமாய் கவிதை மீண்டும் மீண்டும் மானுடத்தின் பக்கமே உந்தி தள்ளுகிறது. 

* எனக்கும் என் சக ஜீவராசிக்கும் இடையில் இருக்கும் தூரம் என்ன? நான் என்னை அழைப்பது எல்லா சமயங்களிலும் எனக்கு கேட்கிறதா? சில சமயங்களில் என் ஒரு உள்ளங்கையால் இன்னொரு உள்ளங்கையை கூட தொட முடியாத அளவு தொலைவு நிகழ்ந்துவிடும். கவிதை மட்டுமே என்னுடனான என் நெருக்கத்தை தூண்டும். என்னை நோக்கியப் பாதையில் திடமாக என்னை நடக்க வைக்கும். என்னால் எல்லாவற்றையும் பேச முடியாதபோது, பாடுகிறேன் என்றொரு ஆப்ரிக்கப் பழங்குடி சொல்லாடல் உண்டு. அன்பில் ஒரு உயிருக்கும் மற்றொரு உயிருக்கும் நடுவிலிருக்கும் இடைவெளியை கடப்பது தான் சிறந்தப் பயணம் என்றால் அதை கவிதை கொண்டு என்னால் மேற்கொள்ள முடிகிறது. கவிதை ஒன்றை எழுதி முடிக்கும் போது ஏதொ ஒன்று நிரம்பி வழிகிறது. அது விவரிக்க இயலாதது. 

* என் குரல் கவிதையென்றால் என் மௌனமும் கவிதையே!

* தொடர்ந்து வாழ்வதற்கான வேட்கையை தரும் கவிதையை தவிர வேறு வாக்குறுதி இப்போதைக்கு என்னிடம் இல்லை.
----லீனா மணிமேகலை.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.