Sunday, December 28, 2025

வடலூர்

 வடலூர்


சந்து பொந்தெல்லாம் அரசு
       சாராயக் கடைகள் நடுவில்
சிந்து பாடுதே இரத்தம்
      சிந்தும் புலால் கடைகள்
இந்துநலத் துறைதருமச் சாலையில்
      அடிவாங்கும் சன்மார்க்கச் சாதுக்கள்
வந்துதான் பாருங்கள் மக்களே        
      வடலூர் வந்தால் நரகமாமே.

சன்மார்க்கச் சாதுக்கள் அன்னம்

              சமைத்து வறியோர்கள் என்றும்

இன்பமாய் உண்டு மகிழவும்

              ஐக்கிய சன்மார்க்கச் சபை

நின்று நிர்வாகம் பார்க்கும்

              நாள் தருமச் சாலையில்

என்று வருமோ சன்மார்க்கம்

            அன்றே தழைத்து ஓங்குமே.   

TMR

VALLALAR



Friday, December 19, 2025

பாதுகை

                                                                   பாதுகை

இரக்கமே உருவான பாதம்
உகத்திலே வருவித்த பாதம்

கரங்கூப்பி தொழுகின்ற பாதம்
காண்பதற்கு அரிதான பாதம்

நரகர்கள் அறியாத பாதம்
நாடியமூவருக்கும் எட்டாத பாதம்

வரங்கள் கோடிதரும் பாதம்
வள்ளல்நின் பொற் பாதமே

 

இளமை எனுமோர் சுகமும்

            இறைவன் எனுமோர் அருளும்

வளமை எனுமோர் பொருளும்
வினைக ளற்றமதி முகமும்

களவு கொள்ளும் அழகும்
குடி கொள்ளும் சன்மார்க்கம் 

வளரும் காரணப்பட்டி லோங்கும்
வள்ளல்நின் பொற் பாதமே.
 

நரை திரைமூப் பகற்றி
நாளை இல்லை என்ற

உரை அகற்றி என்றும்
இளமை யோடு இருக்கும்

கரை அடைந்து சன்மார்க்கக்
 காலத்தை நமக் கினி

விரைந் தருளும் பாதம்
வள்ளல்நின் பொற் பாதமே.
 

கந்தசாமி தொண்டனுக்கு செய்தக்
கருணையால் கிடைத்தப் பாதம்

சிந்தனை செய்வோர்க்கு என்றும்
சங்கடம் தீர்க்கும் பாதம்

தந்திரம் சொல்லி இன்பமுற
தன்னை அறிவிக்கும் பாதம்

வந்தனை செய்வோரைக் காக்கும்
வள்ளல்நின் பொற் பாதமே.
 

கல்லார்கள் கற்கவே சாகாக்
கல்வி அளிக்கும் பாதம்

எல்லா உயிர்களும் இன்புறவே
இரக்கம் நல்கும் பாதம்

கொல்லான் புலால் மறுத்தானை
கைகூப்பி தொழும் பாதம்

வல்வினை போக்கும் எங்கள்
வள்ளல்நின் பொற் பாதமே.


நன்மை ஈன்றுநம்மை யென்றும்

            நீங்காத ஒளிதேகப் பாதம்

ஒன்பது ஓட்டைக் குள்ளே

            ஒளிந் திருக்கும் பாதம்

 சின்மயம் சச்சிதா னந்த

            சிவ மாக்கும் சன்மார்க்க

வன்மை விரைந்து கொடுக்கும்

            வள்ளல்நின் பொற் பாதமே.

  

வெளிக்குள் வெளி கடக்கும்

            வித்தை தெரிவிக்கும் பாதம்

எளியோருக் கெல்லாம் தனது

            அடிமுடி காட்டும் பாதம்

 தெளிந்தோ ருக்கெல்லாம் நின்

            தரிசனம் தந்து அருள்

வெளிச்ச மளித்து இருள்நீக்கும்

            வள்ளல்நின் பொற் பாதமே.

  

சதிசெய்த வலையில் சிக்கி

            சாதி மதம் சமயமெனும்  

பொதி சுமந்து பாரினில்

            பாழாய் இளைத் திளைத்து

மதிகெட்டு மதுவும் குடித்து

மயங்கிப் பாடையில் மாளும்

விதி என்பதில்லை எனும்

            வள்ளல்நின் பொற் பாதமே.

 

 உண்டு உண்டு மகிழவே

            உண வளித்து நின்னைக்

கண்டு களிப்பு மடைந்து

            கதிரும் மதியுமாக நின்று

எண் ணிரண்டு அறியவே

             ஏங்கி நிற்கும் சன்மார்க்க

வண்டுகள் தேடும் தேனன்றோ

            வள்ளல்நின் பொற் பாதமே.

 

விலை மதிப்பறியாப் பொன்னே

            வினை சூழ்ந்தறியாக் கண்ணே

மலை மேலாடிடும் காற்றே

            மரண மில்லா பெருவாழ்வே

அலை கடலில் வீழ்ந்தாடும்

            எம்போல் வாரை சன்மார்க்க 

வலையில் பிடித்துச் சமைக்கும்

            வள்ளல்நின் பொற் பாதமே.


--TMR




T.M.RAMALINGAM

VALLALAR



VALLALAR


TMR

Wednesday, December 17, 2025

எடுத்துச்செல்வோம்

 எடுத்துச்செல்வோம்

இராமலிங்கம்


திக்கெட்டும் சுத்த சன்மார்க்கத்தை எடுத்துச்செல்வோம்!

1.அனைத்து சுத்த சன்மார்க்கச் சங்கங்களும் இணைந்து ஒரு சேட்டிலைட் ”வள்ளலார் டி.வி.’ சேனல் உருவாக்க வேண்டும்.

2. அனைத்து சுத்த சன்மார்க்கச் சங்கங்களும் இணைந்து ஒரு ‘வள்ளலார் எஃப்.எம்.’ உருவாக்க வேண்டும்.

ஒவ்வொரு சன்மார்க்கச் சங்கமும், தங்களுக்கென ஒரு வெப் சைட், முகநூல் பக்கம், யூட்யூப் சேனல் உருவாக்கிக் கொள்ளுதல் வேண்டும்.

மேற்காணும் யாவும் பொது வெளியில் மக்களுக்குச் சென்று சேரும் ஊடகங்களாகும். அனைத்து மார்க்கங்களும் கோடிகளை செலவு செய்து சேட்டிலைட் டி.வி. சேனல் வைத்து தங்கள் கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்லுவது பாராட்டத்தக்கது. சுத்த சன்மார்க்கமும் அவ்வரிசையில் இணைய வேண்டும்.

டெலகிராம், வாட்சாப் போன்றவைகள் அவரவர்கள் சங்க உறுப்பினர்களை இணைக்க பயன்படுத்திக்கொள்ளலாம்.

இவை எல்லாம் நமக்கு தெரிந்த விடயங்கள்தான். எனினும் முயற்சி வேண்டும் என்பதற்கே இப்பதிவு. ’நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன்’ ஆனால், ‘என்னால் ஆவது ஒன்றுமில்லை”,

Monday, December 15, 2025

வேண்டுதல்

                                       அருட்பெருஞ்ஜோதி                          அருட்பெருஞ்ஜோதி
                                          தனிப்பெருங்கருணை                     அருட்பெருஞ்ஜோதி
 
                                                           எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

 
வேண்டுதல்
 
குற்றம் நினையாத மனமும்
            குறை வில்லாத அறிவும்
பற்று இல்லாத உலகும்
            பய மில்லாத நடையும்
சற்றும் கூடாத வயதும்
            சக்கை இல்லாத உணவும்
சுற்றம் சூழாத உடம்பும்
            சுத்த சித்தனாக வேண்டுவனே.
 
குற்றம் நினையாத மனம்:
 
‘மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற” மனதினில் மாசு படியாது இருத்தலே முதல் அறம். மற்றய அறங்களெல்லாம் அதற்குப் பிறகுதான் என்பார் திருவள்ளுவர். ”மனத்தால் செய்யும் பாவங்களுக்கு சண்டாளாதி சரீரம் (இழிவான பிறவிகள்) உண்டாகும் என்பார் வள்ளலார். ஆதலால் நாம் மனத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள முயற்சி செய்துக்கொண்டே இறைவனிடமும் வேண்டுவோம்.
 
குறைவில்லாத அறிவு:
 
அறிவு கடலுக்கு முன்னால் ஒரு மனிதன் என்னவாக நிற்கிறான்? “கல்வி கரையில கற்பவர் நாள் சில” என்பது நாலடியார். குறைவில்லாத சதம் நிறைந்த அறிவுடைய மனிதர் வள்ளலாரைத் தவிர வேறு யாருமில்லை. அதனால்தான் அவர் பூரண அறிவை வணங்க வேண்டுமென வடலூரில் ஞான சபை எழுப்பி அருளினார். அறிவு தேகமும் (ஞான தேகம்) ஆனார். வள்ளாருக்கு முன்பிருந்த எவரும் அறிவுக்கு என ஒரு அமைப்பை இவ்வுலகில் ஏற்படுத்தவில்லை. அறிவு விளங்கியவர்களுக்கு ’உயிர் இரக்கமே” கடவுள் வழிபாடு என்பார் வள்ளலார்.
 
எனவே வள்ளலாரைப் போன்று குறைவற்ற அறிவை நாம் இறைவனிடம் வேண்டுவோம்.
 
பற்று இல்லாத உலகம்:
 
உலகியல் என்பது ஒரு மாமாயை. நாடு, மொழி, கலாச்சாரம், அரசியல், சட்டம், மதம், இனம், ஜாதி, பசி, தாகம், செல்வம், காமம், கோபம், தயவு, கருணை, இரக்கம், அறிவு, கணவன், மனைவி, சடங்குகள், ஜாதகம், அம்மா, அப்பா, பிள்ளைகள், நண்பர்கள், எதிரிகள், சகோதர சகோதரிகள், பொது மக்கள், நம்முடன் உலகில் வாழும் உயிரிகள்  இவை போன்ற பல மாயைகளுடன் நாம் இவ்வுலகில் வாழ வேண்டியிருக்கின்றது. அதுதான் இயற்கை. இந்த இயற்கை உண்மையை அறிந்து, நாம் மேல் சொன்னவற்றில் சிலதுடன் இணைந்தும், சிலவற்றை நீக்கியும் அவரவர்களின் அறிவுக்கேற்ப வாழ்கிறோம். இப்படிப்பட்ட உலகில் எதிலும் பற்றுதல் இன்றி “இச்சை அற்று நுகர்தல் வேண்டும்”.    
 
   
பயமில்லாத நடை:
 
இரக்கம், தயவு வரக்காரணமே பயம்தான். பயம் இல்லை எனில் தயவு வராது. எனவேதான் வள்ளலார் தனது திருவருட்பாவில் பயந்தேன்… பயந்தேன்… என பாடல்கள் பாடியிருப்பார். ஐயாவை பின்பற்றி நானும் “பயந்தேன்” என சில பாடல்களை பாடியிருக்கின்றேன். அப்படிப்பட்ட பயம் ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை. “பயம் பூஜ்ஜியமாக வேண்டும்” என வள்ளலார் வேறொரு இடத்தில் குறிபிடுவார். மேலும் சுத்த சன்மார்க்கத்திற்கு முக்கியத் தடையாக இருப்பதில் ’பயம்’ என்பதும் அடங்கும். இங்கே பயம் என்பது ’தெளிவின்மை அல்லது அறிவின்மை’ என்ற பொருளில் நோக்கலாம். எனவே தெளிந்த அறிவு கொண்ட நடத்தைகள் நமக்கு அருள வேண்டும் என வேண்டுவோம்.
 
சற்றும் கூடாத வயது:
 
சுத்த சன்மார்க்கத்திற்கு “மூப்பு’ என்பதும் ஒரு தடையாக இருக்கின்றது. “நரைதிரை மூப்பவை நண்ணா வகைதரும் உரைதரு பெருஞ்சீ ருடையநன் மருந்தே”, “என்றே யென்னினு மிளமையோ டிருக்க நன்றே தருமொரு ஞானமா மருந்தே” என இளமை என்றும் வேண்டும் எனப் பாடுவார் வள்ளலார். இளமையை வலியுறுத்தேயே நாம் இங்கு ‘சற்றும் கூடாத வயது” வேண்டுமென இறைவனிடம் வேண்டுவோம்.
 
சக்கை இல்லாத உணவு:
 
’உண்பதெல்லாம் மலமே” என்பார் வள்ளலார். அதாவது மலம் என்பது சக்கை. நாம் அசைவம் உண்டாலும், சைவம் உண்டாலும் இவை இரண்டுமே மலம் தான். “மலம் காணா உடல் தாராய் வெண்ணிலாவே” என நானும் வெண்ணிலாக் கண்ணியில் பாடியிருப்பேன். மலம் இல்லாத உடம்பே சுத்த உடம்பாகும். இதற்கு நாம் சைவமும் உண்ணுதல் கூடாது, அசைவமும் உண்ணுதல் கூடாது. சைவமும் அசைவமும் இவை இரண்டுமற்ற உணவானது எது எனில்? இறையருளால் நம் உள் நாக்கிற்கு மேலே ஊறி வழியும் அமுது ஆகும். இந்த அமிழ்து உண்டுவிட்டால் பசி இருக்காது. சக்கை உணவு தேவைப்படாது. மலம் ஜலம் உடம்பில் இராது.
 
‘திருவருள் தேன் உண்டே யானும் நீயுமாய்க் கலந்துறவாடும் நாள் எந்தநாள் அறியேனே’
 
’தேனே எனும் அமுதம் தேக்க உண்டேன் ஊனே ஒளி விளங்கப் பெற்றேன்’
‘மதிமண்ட லத்தமுதம் வாயார உண்டே…”
 
என வள்ளலார் இந்த அமுதத்தை பற்றி பல பாடல்களில்  பாடியிருப்பார்.
எனவே நாமும் இந்த சக்கை இல்லாத உணவான அமுதை வேண்டி இறைவனிடம் இறைஞ்சுவோம்.
    
சுற்றம் சூழாத உடம்பு;
 
சுற்றம் என்றால் நமது உறவினத்தார்கள் மற்றும் நமது நலம் விரும்பிகள் எனலாம். இவர்கள் நம்மை சூழ்ந்து இருப்பது எப்போது? நாம் உயிரற்ற உடம்பாக இருக்கையில் இவர்கள் எல்லாம் நமது உடம்பை சூழ்ந்துக்கொண்டு துக்கத்தில் இருப்பார்கள். அல்லது உயிரோடு இருக்கையில் நோய் கொண்டு படுத்தால் சூழ்வார்கள். இவ்வாறு நாம் நோய் கொண்டு படுக்காமலும், உயிரற்று படுக்காமலும் இருக்கின்ற பொன்னுடம்பு, பிறரின் துக்கத்திற்கு ஆட்படாத சுத்த உடம்பு, என்றும் இளமையோடு இருக்கின்ற ஞான உடம்பு வேண்டும் என அதற்கான முயற்சியுடன் நாம் இறைவனிடம் வேண்டுவோம்.  
 
இவ்வாறு நாம் ’சுத்த சித்தன்’ என ஆவதற்கு பயிற்சியுடன் கூடிய வேண்டுதலை இறைவனிடம் வைப்போம். for PDF 
https://drive.google.com/file/d/1-Qh0eJtWv6IfnsN8r15XHtw47CsD227Z/view?usp=sharing

            குற்றம் நினையாத மனமும்
            குறை வில்லாத அறிவும்
பற்று இல்லாத உலகும்
            பய மில்லாத நடையும்
சற்றும் கூடாத வயதும்
            சக்கை இல்லாத உணவும்
சுற்றம் சூழாத உடம்பும்
            சுத்த சித்தனாக வேண்டுவனே.
 
சித்தம் ஒடுங்கும் தவமும்
            சத்தியம் சொல்லும் திறமும்
செத்தாரை எழுப்பும் திடமும்
            சிவத்தை பாடும் வரவும்
தத்துவா தீதமேல் நிலையும்
            தந்தருளி நான்நீயாக நின்று
சுத்த சன்மார்க்க உலகில்          
            சுற்றித் திரிய வேண்டுவனே.
 
அரியும் அரனும் அறியாஇடமாய்
              ஐந்தொழில் புரிகின்ற பணியாய்
சரியும் தவறும் இல்லாச்செயலாய்
             சன்மார்க்க சத்துவ குணமாய்
விரியும் அண்டத்து வீச்சாய்
            வலிமை பெறும் சாதுவாய்
எரியும் தீபஒளி யாயென்றும்
            இருக்க நான் வேண்டுவனே.

 

உயிரெல்லாம் எனக்கே உறவாக

            உயிர்நலம் பரவ வரம்வாங்க

பயிரெல்லாம் செழித்து வளமோங்க

            பாரினில் வறுமைகள் புறம்போக

வயிரெல்லாம் மகிழ்ந்து பசியாற

            வள்ளலாய் உலகினில் விளையாட

துயிலெழுந்து சாகாக்கல்வி பெறநான்

            தயவாய் இருக்க வேண்டுவனே.

 

கடவுள் நிலை யறிந்ததும்

            கண்ணீர் பெருகி ஓடுதே

கடலெனும் பிறவி அறுந்ததும்

            கருணை எங்கும் நிறைந்ததே

நடனம் என்னுள் கண்டதும்

            நல்லமுதம் எனக்குள் ஊறுதே

இடமும் வலமுமாகி நடுவாய்

            இறை மயமாக வேண்டுவனே.

             

நினைத்தவை எல்லாம் நடக்குதே

            நிலைத்தவை என்றும் வருகுதே

வினைகள் எல்லாம் பயந்தோடுதே

            விதைத்தவை என்னுள் மலருதே

எனைமறந் துள்ளம் உனைநாடுதே

            என்றும் உனக்கடிமை என்றானதே

மனையெல்லாம் தீபம் ஒளிரவே

            மங்களமாய் இருக்க வேண்டுவனே.

 

புலையும் கொலையும் விடாது

            புரியும் தெய்வீகம் நீடாது

இலையில் தானம் போடாது

            அறங்கள் செய்யக் கூடாது

மலைகள் சுற்றினால் போதாது

            மனங்கள் சுத்தம் ஆகாது

சிலைகள் என்றும் பேசாதுஎன்

            சிவத்தின் ஓசைகேட்க வேண்டுவனே.

.

  

ஆவது ஒன்றுமில்லை என்னால்

            உனக்கு கிஞ்சித்தும் புகழில்லை

ஈவது எனையன்றி வேறில்லை

            உனையன்றி எனக்கு பெயரில்லை

சாவதும் பிறப்பதும் வழக்கில்லை

            சுத்த சன்மார்க்கமிருக்க பயமில்லை

போவது பிணமென பிறர்இழியாத

பொன்னான மேனி வேண்டுவனே.

 

ஆயிரம் ஆயிரம் கோடி

            அணி விளக்கு ஏற்றுவித்து

பாயிரம் பலகோடிப் பாடி

            பாரினில் அற்புதம் செய்வித்து

தாயினும் தயவுடையத் தமிழ்

            தந்த ஒளியேஎன் வள்ளலே

ஆயினும் அருட்பெருஞ் ஜோதி

            அருளாலர் வர வேண்டுவனே.

 

தருகின்றேன் உனக்கே எனது

            தேக போகஜீவ சுதந்தரத்தை

பெருங் கருணையால் நீதான்

            பெற்றுக் கொண்டு உனது

அருட் பெருஞ்ஜோதி அருளால்

            என்னை நீதான் ஆளும்

திருவருள் சுதந்தரம் பெறும்

திருநாள் வர வேண்டுவனே.


T.M.RAMALINGAM

VALLALAR


இராமலிங்கம்

Vallalar

TMR