வடலூர்
வழக்கும் வரலாற்றுத் தீர்ப்பும்
பேரன்புடையீர்! 19-ம் நூற்றாண்டின்
பிற்பகுதியில் தோன்றிய வள்ளலார், தமது திருஅருட்பா கவிதைகள் மூலம் செய்தவற்றைப் புரட்சிகரமான
பிரகடனங்கள் என்றே கூறலாம்.
மந்திரசக்தி வாய்ந்த அவருடைய வார்த்தைகளும்
செயல்களும் தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று சேர்ந்தன. சாதி, மத பேதங்களை
நமது முன்னேற்றத்திற்குத் தடைகள் என்று அவற்றின் மீது 150 ஆண்டுகளுக்கு முன்பே கடுமையான
தாக்குதலைத் தொடுத்தவர் வள்ளலார்.
அவருடைய 50 ஆண்டு வாழ்வில் கடைசிப்
பத்தாண்டுகள் மிகவும் முக்கியமானவை. அக்காலத்தில்தான் உருவமற்ற வழிபாடு முறையை அவர்
நமக்கு அளித்தார். இது ஒரு திருப்புமுனையை உண்டாக்கிய சீர்திருத்தச் சிந்தனையாகும்.
அருவுருவ வழிபாட்டை அறிமுகப்படுத்திய வள்ளலார், சக மனிதர்களின் மீது அளவற்ற நேசம் காட்டி
அருளுரைகளை திருஅருட்பாவாக வழங்கியுள்ளார்.
1866-ல் ஒரிசா மாநிலத்தில் உண்டான கொடிய
பஞ்சம் நாடு முழுவதும் பேசப்பட்டது. ஆயிரங்கணக்கில் மக்கள் பட்டினியால் மடிந்தார்கள்.
இச்செய்திகளை அறிந்த வள்ளலாரின் மனம் பதைபதைத்தது. மழையில்லாமல் வாடுகிற பயிர்களை நினைத்து
மனம் நொந்தார்.
அதனால்தான் பசித்தவர்களுக்கு உடனடியாக
உதவ வேண்டுமென்று துடித்தார். பசியுள்ளவர்களைப் பார்த்துப் பரிதாபப்பட்டதோடு நிறுத்திக்
கொள்ளாமல், பசித்துயத்தைப் போக்க 1867-ல் தருமசாலையை வடலூரில் நிறுவி அன்னம் பாலிப்பை
மேற்கொண்டார். இதுதான் மருதூர் இராமலிங்கரை மகான் வள்ளலாராக உயர்த்தியது.
சத்திய ஞானசபை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின்
விதிகளின்படியும் வள்ளலார் தயாரித்த வரைபடத்தின் அடிப்படையிலும் வடலூரில் எண்கோண வடிவில்
தெற்கு நோக்கிய வாயிலோடு புதுமையாகக் கட்டப்பட்டது. திருச்சபை நடுவே மேடை அமைந்திருக்கும்.
அம்மேடை நடுவே ஜோதி பீடம் அமைந்திருக்கும். அதன் முன்னர் ஜோதியைத் தன் பரப்பு முழுவதும்
உள்வாங்கிப் பிரதிபலிக்கும் அகன்ற உயர்ந்த கண்ணாடி அமைந்திருக்கும். கண்ணாடி முன்பு
ஏழு நிறங்களில் திரைகள் அமைந்திருக்கும்.
அவரவர் ஆன்மாவே சபை. ஆன்மாவின் உள்
ஒளியே ஆண்டவரின் அருட்சக்தியாகிய ஜோதி. ஆன்ம விளக்கத்தை மறைக்கும் திரைகள்தான் அந்த
ஏழு திரைகள். அத்திரைகள் நீங்கினால்தான் ஜோதியாகிய ஞானம் புலப்படும். ஞானசபையில் உருவமில்லை.
உருவமில்லாததால் நீராட்டும் சடங்குகளும் இல்லை. சடங்குகள் இல்லாததால் அலங்கரிக்கும்
பணிகள் இல்லை. ஆரவாரப் பூசைகள் இல்லை. கடவுளும் தரிசிப்போருக்கும் நடுவில் எவருக்கும்
இடமுமில்லை. எவ்விதப் பணியுமில்லை.
ஞான சபையைக்கட்ட வள்ளலார் மேட்டுக்குப்பத்தில்
தங்கியிருந்தார். 18.07.1872-ஆம் ஆண்டில் அவர் வகுத்த விதிகளின்படி ஞானசபையில் வழிபாடு
தொடங்கப்பட்டது. வள்ளலார் மேட்டுக்குப்பத்தில் ஒளிதேகம் பெற்ற 1874-க்குப் பிறகு சில
ஆண்டுகள் சபை திறக்கப்படாமல் இருந்தது. அன்பர் சிலர் முயற்சியால் பின்னர் திறக்கப்பட்டு
வழிபாடு தொடர்ந்தது.
வள்ளலாரால் நியமிக்கப்பட்டவர் எனத்
தானே விளம்பரப்படுத்திக் கொண்ட "சபாநாத ஒளி சிவாச்சாரியார்" என்பவர், ஞான
சபையைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கினார். ஞானசபையில் சிவலிங்கப் பூசையைப் புகுத்தினார்.
சன்மார்க்க மெய்யன்பர்கள் மனம் வருந்தினர். சமாதான முறையில் சபாநாத ஒளியாரிடம் பேசினார்கள்.
பயனில்லை.
ஆதீனங்களில் இளைய பட்டங்கள் இருப்பதை
போலவோ, நிறுவனங்களுக்கு வாரிசுதாரரை நியமிப்பது போலவொ யாரையும் வள்ளலார் நியமிக்கவில்லை.
பல்வேறு விதமான தகராறுகளுக்கு இது இடம் தந்தது.
வள்ளலாரைப் பின்பற்றுவதாகச் சொல்லி
வந்த அந்த சபாநாத ஒளி சிவாச்சாரியார் வள்ளலாருக்கு எதிராகச் செயல்படத் தொடங்கினார்.
வடலூரில் உள்ள சத்திய ஞானசபையின் பாரம்பரிய அர்ச்சகர் "அரூர் சபாபதி சிவாச்சாரியாரின்"
வாரிசுதாரராகக் கூறிக்கொண்ட சபாநாத ஒளி சிவாச்சாரியார் அர்ச்சகர் பணியை வாரிசு உரிமையாகவே
கோரத் தொடங்கினார்.
அவர் கோரிய அந்த வாரிசு உரிமையை மறுத்து
இந்து சமய இணை ஆணையர் 18.09.2006-ஆம் ஆண்டு இந்து அறநிலையத்துறை சார்பாக ஓர் உத்தரவைப்
பிறப்பித்தார். அதை எதிர்த்து 03.04.2007-ஆம் ஆண்டு சென்னையில் உள்ள இந்து சமய ஆணையரிடம்
சிவாச்சாரியார் மேல் முறையீடு செய்தார்.
அவரும் மறுத்து அனுப்பிய உத்தரவை எதிர்த்து
விழுப்புரம் செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். அந்த வழக்கு
06.07.2007 ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்தது. இந்து அறநிலையத்துறை இணை ஆணையரும் சென்னை
ஆணையரும் சிவாச்சாரியாருக்கு எதிராக உத்தரவிட்டது செல்லும் என்று விழுப்புரம் நீதிமன்றம்
உத்தரவிட்டது. அதை எதிர்த்துச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். வழக்கு
மாண்புமிகு நீதிபதி "திரு.கே.சந்துரு" அவர்களின் விசாரணைக்குச் சென்றது.
நீதிபதி தமது தீர்ப்பில் வள்ளலார் வகுத்த
கொள்கையின் மையக்கருத்தை, அவருடைய பாடல்களை மேற்கோளாகக் காட்டி நிறுவி வழங்கிய தீர்ப்பின்
விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன,
1. எல்லாச் சமயங்களும் பொய்ச் சமயங்கள்
என்று ஆண்டவர் தமக்குத் தெரிவித்ததாக வள்ளலார் பாடுகிறார்.
2. சமயங்களின் நூல்களான வேதாகமங்களைப்
படிப்பது சந்தைப் படிப்பாகும். அது சொந்த அனுபவமாகாது என்கிறார் வள்ளலார்.
3. சாதி, சமயம், மதம், சாத்திரம், கோத்திரம்
எனத் தொடர்ந்து சண்டையிட்டுப் பயனில்லாமல் மடிந்து போவது மனிதர்களுக்கு அழகல்ல என்றும்
அவர்களைச் சுத்த சன்மார்க்க நிலைக்கு உயர்த்தி உத்தமனாக்க வேண்டுமெனக் கூவி அழைக்கிறார்.
4. வள்ளலார் தமது அனுபவங்களை அவர்தம்
பாடல்களில் அருளுரைகளாக வெளியிட்டுள்ளார்.
5. உருவமற்ற ஒரு மெய்ப்பொருள் எல்லாமாகி,
உருவ அருவ நிலைகளைக் கடந்து சிற்குணமாகி, குணமும் கடந்து எங்கும் நிறைந்து நுண் உணர்வாய்
விளங்குகின்றதை வியந்து பாடி அவர் வழிபடுகிறார்.
மேற்கூறிய ஐந்து கருத்துகளின் அடிப்படையில்
பரிசீலித்தால், வள்ளலார் உருவ வழிபாட்டைத் தவிர்த்ததும் ஜோதி வழிபாட்டை ஏற்றதும் தெளிவாகிறது.
இந்த ஐந்து கருத்துகள் பற்றியும் கூற மற்ற மதங்களுக்கு உரிமை ஏதுமில்லை. ஆனால்,
மனிதநேயத்திற்கு மட்டும் அந்த உரிமை உண்டு.
சாதி அல்லது பிறப்பின் அடிப்படையில்
மக்களை எவ்விதத்திலும் வேறுபடுத்துதல் கூடாது. மனிதர்களை நேசிக்கும் குணமாகிய சீவகாருண்யத்திற்கு
மட்டுமே இதில் தலையிட உரிமை உண்டு. வன்முறைக்கு இதில் இடமில்லை. வள்ளலார் தாம் உண்டாக்கிய
வழிபாட்டு முறைக்கான விதிகளைத் தெளிவாகவே எழுதியிருக்கின்றார். இந்நிலையில், அவருடைய
வழிபாட்டு விதிகளை எதிர்த்து வாதிட எவருக்குமே உரிமையில்லை.
இந்து மத அறநிலையத்துறை அதிகாரிகள்
வள்ளலார் கொள்கைகளைச் சரியாகப் புரிந்து கொண்டு, அவர் வகுத்த விதிகளினின்றும் விலகாமல்
அறநிலையத் துறை இணை ஆணையரும் தலைமை ஆணையரும் வழிபாடு நடத்துமாறுதான் உரிய உத்தரவிட்டுள்ளனர்.
இதற்கு ஆதாரமாகவும் வழிகாட்டுதலாகவும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்
பல உள்ளன.
இந்திய அரசியல் சாசனச் சட்டத்தில் உள்ள
25, 26-ஆம் விதிகள் ஒரு மதத்தில் உள்ள சடங்குகளை அம்மதத்தின் இன்றியமையாத ஒரு பிரிவாக
அந்த இரு விதிகளும் ஒப்புகொள்கின்றன.
அதேசமயம், மதம் சாராத சடங்குகளைக்கூட
மதப்போர்வையால் மறைத்து வைத்துக்கொள்ளவும் 26-ம் விதியை வியாக்கியானம் செய்ய அது இடம்
தருகிறது. அவ்வாறு வியாக்கியானம் செய்தால், புறச்சடங்குகளைக் கூடச் சமயச் சடங்குகளாகச்
சித்தரித்துக் காட்டிவிட முடியும். எனவே, ஒவ்வொரு சமயச் சடங்கிற்கும் அரசியல் சாசனச்
சட்டம் பாதுகாப்பளிக்கிறது என்பதை ஏற்க இயலாது.
அதற்கு மாறாக, ஒரு மதத்தில் இணைந்துள்ள
இன்றியமையாத மதச் சடங்குகளுக்கு மட்டுமே சட்டம் பாதுகாப்பளிக்கிறது என்பதை 1962-இல்
தாக்கலான துர்கா (எதிர்) சையத் உசேன் அலி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1972-இல் தாக்கலான சேஷம்மாள் (எதிர்)
தமிழ்நாடு மாநிலம் வழக்கிலும் ஒரு மதத்தின் அல்லது மதச் சடங்கின் இன்றியமையாத ஒருங்கிணைந்த
பகுதி எது என்பதை அம்மதத் தத்துவங்களைக் கொண்டோ அல்லது அம்மதத்தினைப் பின்பற்றுபவர்களின்
கருத்துகளைக் கொண்டோதான் நீதிமன்றங்கள் உறுதி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1994-இல் தாக்கலான இஸ்மாயில் ஃபரூக்
(எதிர்) இந்திய ஒன்றியம் வழக்கிலும் உச்சநீதிமன்றம் இவ்வாறே தீர்ப்பளித்துள்ளது.
ஒரு மதம் மற்றும் அறக்கட்டளை எனும்
நிறுவனம் ஏற்படுத்துகிற உரிமையானது, மத நம்பிக்கையின் ஒரு பகுதி என்றாலும் அதைச் செயல்படுத்துகிற
உரிமையைச் சட்டம் மூலம் கட்டுபடுத்தலாம். அவ்வாறு சட்டத்தால் கட்டுப்படுத்த முடியுமானால்,
மதத்தில் உள்ள அப்பிரிவு இன்றியமையாத பகுதி அல்ல.
அரசு அதிகாரிகளோ, சட்டப்படி நியமிக்கப்பட்ட
அதிகாரிகளோ அத்தகைய மத நிறுவனங்களைத் திறமையாக நிர்வகிக்க மட்டுமே சட்டம் வகை செய்கிறது
என 1996-இல் தாக்கலான பான்சிலால் பிட்டி (எதிர்) ஆந்திரப்பிரதேச மாநில வழக்கில் உச்சநீதிமன்றம்
தீர்ப்பளித்துள்ளது.
மனிதன் உணவு உண்ணும் முறையும் ஆடை உடுத்தும்
விதமும் குளிக்கும் பழக்கமும் கூட மதச்சடங்குகளாகக் கருதப்படலாம். மனிதனின் இத்தகைய
செயல்களை எல்லாம் மதச் சடங்குகளாகக் கருதி அரசியல் சாசனம் பாதுகாப்பு அளிப்பதில்லை.
மதச் சடங்குகள் அல்லது நம்பிக்கைகள்
இன்னது என வரையறுப்பது மிகவும் கடினமாதலால், அரசியல் சாசன விதி 25, 26-ன் படி பாதுகாப்பளிக்க,
ஒரு அணுகு முறையை உருவாக்க வேண்டியது அவசியமாகிறது.
இந்தியாவில் வெவ்வேறு வழிபாடுகள், சடங்குகளைப்
பின்பற்றும் பலப்பல மதங்கள் உள்ளன. இந்துக்களிலும் பல பிரிவினரும், குழுவினரும் வேறு
வேறு நம்பிக்கையுடன் சடங்குகளைச் செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
ஒரு மதக் குழுவினர்க்குத் தத்துவம்
முக்கியமாகலாம். இன்னொரு மதத்தாருக்கு கொள்கையே முக்கியமானதாகப் படலாம். மற்றொரு மதக்
குழுவினருக்குச் சடங்குகளும் பிறிதொரு மதக் குழுவினருக்கு நன்நடத்தைகளே மதமாகப் படலாம்.
ஒரே மத நம்பிக்கை உடையவர்களின் மத்தியில்
கூட, அம்மதத்தின் சில பகுதிகள் மட்டுமே அம்மதத்தின் அடையாளம் எனக் காண்பவர்கள் உண்டு.
ஆதலால், விதி 25 அல்லது 26 பாதுகாப்பளித்துள்ள
மத உரிமை என்பது, முழு உரிமையோ அல்லது கட்டுப்படுத்தப்படாத உரிமையோ ஆகாது. பொருளாதாரச்
சேவைகளை அரசு முறைபடுத்துவது போன்றவையே அவை. சமுதாய நலன் கருதி மாநில அரசால் சட்டத்தின்
மூலம் அமல்படுத்தப் படுபவையாகவே அவை உள்ளன.
மதத்தின் இன்றியமையாத பகுதி அல்லது
சடங்கு இன்னதெனக் கருத, ஒவ்வொரு வழக்கிலும் உள்ள உண்மையான, சட்டப்படியான, வரலாற்றுச்
சான்றுகளைக் கொண்டே தீர்மானிக்க வேண்டுமென 1996-இல் தாக்கலான நாராயணத் தீட்சிடுலு
(எதிர்) ஆந்திரப்பிரதேச அரசு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்திய அரசியல் சாசனத்தின் மதச்சார்பின்மை
அம்சம், மதச் சடங்குகளையும் மதச் சார்புடையவற்றையும் ஒருங்கிணைக்கக் கூடிய நோக்கமுடையது.
அந்த அம்சம், மதத்தின் ஒரு பகுதியாக
இல்லாதவற்றையும் அவசியமில்லாத எல்லா விதமான கண்மூடித்தனமான நம்பிக்கைகளையும் செயல்களையும்
கண்டிப்பதில் கவனம் செலுத்துகிறது.
எடுத்துக்காட்டாக - இந்து சமய நம்பிக்கையின்
ஒரு பகுதியாகத் தீண்டாமை நம்பப்பட்டது. ஆனால் மனித உரிமை அதனை மறுக்கிறது.
இந்திய அரசியல் சாசனச் சட்டம் இயற்றப்படுவதற்கு
முன்பே எது வழக்கத்தில் இருந்தது என்பதற்கான சான்று ஏதும் இல்லாத போது, அத்தகைய வழக்குகளை
அல்லது பழக்கங்களை வற்புறுத்துவதை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.
கோயிலை நிறுவியவர் அல்லது கோயில் தர்மக்காரியங்களில்
ஈடுபட முழு உரிமை உடையவர் ஏற்படுத்திய வழக்கத்திற்கோ அல்லது பழக்கத்திற்கோ போதிய ஆதாரம்
இருந்தால் ஒழிய, நீதிமன்றம் அவற்றை அனுமதிக்காது.
திருவிதாங்கூர் தேவஸ்தானம் (எதிர்)
ஆதித்யன் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை இங்கு காண்பது அவசியம்.
ஆகம விதிப்படி, கோயிலில் தெய்வங்களுக்குரிய
வழிபாட்டை நடத்த வேண்டுமானால், அதில் தேர்ச்சியும் பயிற்சியும் பெற்ற தகுதி உடையவர்
மட்டுமே அவ்வழிபாட்டை நடத்தலாம்.
எடுத்துகாட்டாக - சைவ, வைணவக் கோயில்களில்
அங்கு எழுந்தருளச் செய்யப்பட்டிருக்கும் தெய்வ உருவங்களுக்குப் பொருத்தமான சடங்குகளைச்
செய்வதற்கும் மந்திரங்களை ஓதுவதற்கும் தகுதியுடையவரை மட்டுமே அர்ச்சகராக நியமிக்கலாம்.
மரபு அல்லது வழக்கத்தின் காரணமாக பிராமணர்கள்
பூசை செய்து வருகிறார்கள் என்பதால், பிராமணரால்லாதவர் பூசை செய்யத்தடை விதிக்கலாம்
என்பதல்ல இதன் பொருள்.
பிராமணரல்லாதவர் வேதங்களை அறியவும்,
ஓதவும், அவற்றில் புலமை பெறவும், சடங்குகளைச் செய்யவும், பூணூல் அணியவும், வீட்டிலும்
பொது இடங்களிலும் சடங்குகளாலான பூசைகளைச் செய்யவும் தடுக்கப்பட்டதால், கோயில்களில்
பூசை செய்யும் நிலையில் பிராமணர் அல்லாதவர் இல்லை.
அதனால், பிராமணர் அல்லது மலையாளப் பிராமணருக்கு
மட்டுமே சடங்குகளைச் செய்ய இந்திய அரசியல் சாசன விதி - 25-ன் படி உரிமையும் சுதந்தரமும்
தரப்பட்டிருக்கின்றன என்று வற்புறுத்துவதை நியாயப்படுத்த இயலாது.
குறிப்பிட்ட தெய்வங்களுக்குரிய பூசைகளைச்
செய்வதில் நல்ல தேர்ச்சியும் உரிய பயிற்சியும் தகுதியும் உடையவர் எவரேனும் நியமிக்கப்பட்டால்,
அவருடைய சாதியைக்காட்டி அவருடைய நியமனம் செல்லாதென நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்க முடியாது.
மனித உரிமை செல்வாக்கு, சமூக சமத்துவம்
ஆகியவற்றை மீறுவதாக உள்ள எந்த மரபும் செயல் முறையும் இந்திய அரசியல் சாசனச் சட்டம்
இயற்றப்படுவதற்கு முன்னரே உள்ளது என ஆதாரத்துடன் காட்டப்பட்டாலும், அது இந்திய நீதி
மன்றங்களால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
உருவங்களை மட்டுமே வழிபட்டு, அவற்றின்
மெய்ப் பொருளை மக்கள் கைவிடுகிறார்கள் என்றும் தமக்குள்ளே அவர்கள் சண்டையிடுகிறார்கள்
என்றும் வள்ளலாரே அறிந்திருந்தார். அவருடைய வழிகாட்டுதலின் உண்டான உருவமற்ற பூசை முறையும்
மத ஆசார எதிர்ப்பும் அவர் காலத்திலும் அதற்கு பின்பும் பல எதிர்ப்புகளை உருவாக்கின.
அவருடைய திருஅருட்பாவினை எதிர்த்தும் வாதிட்டுள்ளனர். அவை தோற்றும் போயின.
வேதங்களை விலக்கி சமரச வேதம் கண்டவர்
வள்ளலார் என அவரைப் பலர் சாடினர். எனினும் அவர்கள் எவரும் வெற்றிப் பெறவில்லை.
வள்ளலார் ஒரு படி மேலே சென்று, மக்கள்
அருவுருவ வழிபாட்டையும் கடந்து மேலேறுவர் என்பதைத் தாம் சித்தி அடையும் முன்பே தெளிவாக்கியுள்ளார்.
அதனால், அவர் வகுத்த விதிமுறைகளுக்கு
எதிராகச் சிவாச்சாரியார் தொடுத்த வழக்கை இந்த உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது.
தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற
மாண்பமை நீதியரசர் கே.சந்துரு அவர்களின் இந்தத் தீர்ப்பை சுத்த சன்மார்க்க சங்கத்திற்கான
சாசனம் என்றே கருதலாம்.
அரசியல் சாசனச் சட்ட விதிகளின்படி மட்டுமல்லாமல்,
சன்மார்க்கத்தின் வேதப் புத்தகமாக உள்ள 5818 அருட்பாக்களையும் காலம் செலவழித்துப் படித்துப்
புரிந்து கொண்டு வள்ளலார் கட்டியெழுப்பிய ஞானசபையின் வழிபாட்டு விதிகள் எவ்வாறு அவரால்
வரையறுக்கப்பட்டுள்ளன என்பதையும் கவனத்தில் கொண்டு 1 முதல் 15 பிரிவுகளில் தனது தீர்ப்பை
வழங்கியுள்ளார்.
இந்தத் தீர்ப்பு சபாநாத ஒளி சிவாச்சாரியார்
தாக்கல் செய்த வழக்குக்கு எதிரானது மட்டுமல்ல. இந்த ஞானசபையைப் பராமரிக்கப் பொறுப்பேற்றுள்ள
இந்து அறநிலையத் துறையையும் வள்ளலார் வகுத்த விதிமுறைகளை மீறக்கூடாது எனக் கட்டுப்படுத்துகிற
தீர்ப்பாகும்.
ஒருவேளை, நீதியரசர் இந்துக் கோயில்களில்
உள்ளதைப் போன்ற பூசைமுறைகள் இங்கு இல்லை என்பதனையும் இந்துக் கோயில்களில் ஒன்றாக் ஞானசபை
இல்லாமல் வித்தியாசமாக இருப்பதையும் புரிந்து கொண்டிருக்கலாம்.
ஏனெனில் வடலூர் தெய்வ நிலையங்களை இந்து
அறநிலையத் துறையிடமிருந்து விடுவிக்கத் தமிழக
முதலமைச்சரின் பொது நிர்வாகத் துறையின் கீழ் வைக்கப்பட்டால், உத்திரப்பிரதேசத்தில்
உள்ள சாரநாத் போல இது விளங்கும் என்ற கோரிக்கை சுத்த சன்மார்க்கிகளிடையே வலுப்பெற்று
வருவதையும் நீதியரசர் ஒருவேளை புரிந்துக்கொண்டிருக்கக்கூடும்.
அவ்வாறு நோக்கினால், ஞான சபை என்பது
சமயம் கடந்த சமயக் கோயிலாக உள்ளது என்பதையும் அதில் இந்து சமயச் சடங்குகள் புகுந்து
விடக்கூடாது என்பதையும் நீதியரசர் கவனத்தில் கொண்டுள்ளது இத்தீர்ப்பில் இழையொடுவதை
உணர முடியும்.
உண்மை இவ்வாறு இருக்கும்போது, ஞானசபையின்
பிராகாரத்தில் சிவலிங்கப் பூசை செய்வதும் அருள்வாக்குச் சொல்வதுமான காரியத்தைச் செய்வதற்கு
சிவாச்சாரியார் வாரிசு உரிமை கோரியது வள்ளலாரின் சுத்த சன்மார்க்க இயக்கத்திற்குச்
செய்த தீங்காகும்.
அதனால்தான், சென்னை உயர்நீதிமன்றம்
வழங்கிய தீர்ப்பை பெற்றுக்கொண்ட இந்து அறநிலையத்துறை இணை ஆணையர், காவல் இணை ஆணையர்,
காவல் துறை உதவியுடன் ஞானசபைப் பிரகாரத்தில் அத்துமீறிப் புகுந்துவிட்ட விக்கிரக வழிபாட்டை
உடனடியாக அப்புறப்படுத்தினார்.
2007-ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்ட
இந்த வழக்குக்கான தீர்ப்பை 24.03.2010 அன்று வழங்கிய பொழுது, ஆதாயத்திற்காகக் கடவுளைக்
கையாண்டவர்களைத் தாட்சண்யமில்லாமல் கண்டித்ததொனியின் ஓசையை அதில் கேட்க முடிந்தது.
வள்ளலாரால் நம்பிக்கையோடு நியமிக்கப்பட்ட
சிவாச்சாரியார் என்று தம்மை கூறிக்கொள்ளும் ஒருவர், அந்த வம்சத்தில் வந்த வசதியானவர்,
வள்ளலாரின் அருட்பாவையோ, அவருடைய உள்ளத்தில் நிரம்பி வழிந்த ஆருயிர்கட்கெல்லாம் அன்பு
செய்யும் கருணையையோ கடுகளவேனும் புரிந்து கொள்ளாமல், பொருள் சம்பாதிப்பதற்காக அருள்வாக்கை
ஞானசபைப் பிரகாரத்திலேயே சொல்ல தொடங்கியது, சிறைத் தண்டனைக்குரிய குற்றமாக இருந்தாலும்
இது சிவில் வழக்காக இருந்ததால் அவர் தப்பித்துச் செல்ல நேர்ந்து விட்டதாகவே கருதலாம்.
ஞானசபைக்குள் பிரவேசித்த வாதியின் வழக்கு
உண்மையில் வன்முறை சார்ந்த வழக்குத்தான். புலால் உண்ணுகிற புற இனத்தாரைக்கூட, பசியுடன்
வரும்போது அவருக்கும் உணவளிக்கும் வள்ளலாரின் கொள்கை, சிவாச்சாரியாருக்கு எப்படிச்
சிறைதண்டனை பெற்றுத் தரும்?
நீதியரசர் கே. சந்துரு அவர்கள் பதவி
ஓய்வு பெற்று நீதிமன்றங்களிலிருந்து வெளியே வந்த போது, அவருக்காக ஏற்பாடு செய்ய இருந்த
பிரிவு உபச்சார விழாவை ஏற்க அன்போடு மறுத்துவிட்டார். உபச்சாரமில்லாமல் உயர்நீதிமன்றத்திலிருந்து
வீட்டுக்குப் போன முதல் நீதிபதி அவர்தான்!
அதுமட்டுமல்ல, ஓய்வுபெற்ற நீதிபதிகளைக்கொண்டு
அரசு அமைக்கும் விசாரணைக் குழுவில் இடம்பெறமாட்டேன் என்று அறிவித்தவரும் அவர்தான்.
ஆழ்ந்த சட்டப்புலமை அவர் பெற்றிருப்பது
ஆச்சரியமில்லை. ஆனால், அவருடைய எளிமைத் தோற்றம் அவருக்கு எதுவும் தெரியாது என்பது போலக்
காட்டக்கூடியது.
அத்தகைய நீதிபதி ஒருவர் வடலூர் வழக்கிற்கு
வழங்கிய தீர்ப்பைப் படித்தபோது இந்தத் தீர்ப்பு நீதிபதி சந்துரு வழங்கிய தீர்ப்பு அல்ல.
அவருடைய உள்ளத்தில் புகுந்து வள்ளலாரே வழங்கிய தீர்ப்பு என்று வடலூர் இந்து அறநிலையத்துறை
நிர்வாக அதிகாரி திரு.கிருஷ்ணகுமார் கூறியதைக்கேட்டு நெகிழ்ந்தவர்கள் பலர்.
(நன்றி: சித்ரகுப்தன் மாத இதழ்)
அற்புதம் அற்புதமே அருள் அற்புதம் அற்புதமே!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி