மரம் பாடும் பாடல்
பாலை மணலில் நடக்கையில்
பாவி மனம் பதைக்குதே
சாலை ஓர மரங்களும்
சாதி பார்த்து உதவுதே
காலை நேர சூரியன்
குலம் பார்த்து உதிக்குதே
மாலை வந்த பொழுதும்
மதம் மறைய மறுக்குதே
இதமாய் வீசும் காற்றும்
இனம் பார்த்து வீசுதே
விதவிதமாய் சாமிகளும் கல்
விகார சிலை களானதே
சதகோடி ஒளியின் வழியும்
சடங்காய் விளை யாடுதே
முதலிட்டு இலாபமே பார்க்கும்
மனிதன் கட்டிய கோயிலே
தங்கள் குலத்திற்கு ஒருசாமி
தவறாமல் கும்பிடும் மடசாமி
சங்கம் சரணம் கச்சாமி
சாகும் மனிதனுக்கு ஏன்சாமி
தங்கம் வைரம் என்சாமி
தவிக்கும் ஏழைக்கு எதுசாமி
எங்கும் மலிவாய் மதுசாமி
அங்கம் வீழ குடிசாமி
தாயின் வாயில் சேவல்கொண்டை
தயவு இன்றி மயானக்கொள்ளை
பேயின் ஆட்டமுடன் அகோரமாய்
பாய்ந்து செல்லுதல் அழகலவே
பாயில் படுக்கின்றோமென்று தினம்
பாடையிலே படுக்கின்றீர் பித்துலகீரே
வாயில்திறக்குதே நரகத்தில் அங்கே
வாழ்த்து தெரிவிப்பான் எமனுமே
உருமிலா வழிபாடு அறியாயோ
ஆயிரம் சடங்குகள் அழியாதோ
அருட்பெருஞ் ஜோதி வழிபாடு
அருட்பா ஓதி துதிபாடு
மருள்நெறி புலூலை மறந்திடு
மனித நெறியிலே நிலைத்திடு
இருள் நெறியிலேநீ நடக்கையில்
அருள் மனம் மிகவலிக்குதே
புவனம் ஆளும் மனிதா
புண்ணியம் செய்வது எளிதா
ஜீவகாருண்ய வழியென்ன புதிதா
ஜோதியை நாடும் புனிதா
தவறால்நான் மரமாய் பிறந்தாலும்
தனித்து நிற்பேனோ உனது
ஏவல்செய்ய நானும் நடந்தேனே
தனிப்பெருங்கருணை இது தானே!
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.