Thursday, March 14, 2013

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

(14.03.2013)
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

"எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க" என்பது வள்ளலார் இறைவனிடம் வேண்டும் முக்கியமான வேண்டுகோளாகும். இந்த வேண்டுகோளை இறைவன் மதித்ததாகவே தெரியவில்லை, இல்லையா? 

நானும் இந்த வேண்டுகோளையே தினமும் இறைவனிடம் வைக்கிறேன். ஆனால் வீட்டை விட்டு வெளியில் வந்தவுடன் நமது கண் பார்வைக்கு வருவது தெருவோரத்தில் நாகரிகமின்றி வெட்டப்படும் ஆடு, கோழி இவைகளின் துடிதுடிப்பும், காது கேட்பது இவைகளின் அலறல் சத்தமும்தான்.

கடல்வாழ் உயிரினங்கள் பிணமாக கூடையில் வைத்து விற்பணைக்கு வருகின்றன, அந்த சுற்று வட்டாரமே நாறுகிறது, சில நரிக்குரவர்கள் தினமும் எந்தப் பறவைகளையாவது சுட்டு பிணமாக அவைகளை எடுத்து வந்து விற்பணை செய்கிறான். இப்படி மனிதனால் எந்த உயிரும் இன்புற்று வாழ்வதை விட, எல்லா உயிரும் துன்புற்று ஒழிகின்றன என்பதனை நாம் நாளும் பார்க்கிறோம்.

நாட்டில் மனிதன் இப்படி என்றால், காட்டிலும் இப்படியே... வலிமையான மிருகங்கள் வலிமையிழந்த மிருகங்களை உணவிற்காக கொல்கின்றன. இப்படி இவ்வுலகில் எங்கு நோக்கிலும் உயிர் கொலைகளாகவே இருக்கின்றன. 

மனிதனாவது நிம்மதியாக இன்புற்று வாழ்கின்றானா? என்று கேட்டால் இல்லை. அவன் இனத்தை அவனே அழிக்கிறான். வாழும் காலத்திலும் மற்ற உயிருக்கு துன்பத்தைக் கொடுத்துக்கொண்டு, அவனும் துன்பமுடனே வாழ்கிறான். 

இப்படி 'எங்கெங்கு காணிணும் துன்பமடா' என்பது போல இவ்வுலகு சுற்றிக்கொண்டிருக்கிறது. அப்படியென்றால் வள்ளலார் வேண்டும் இந்த வேண்டுதலுக்கு என்னதான் பொருள்? என்று சற்று ஆழ்ந்து சிந்தித்தால் இதன் பொருள் வேறாக அமைந்திருப்பதைக் காணலாம்.

அது வேறு ஒன்றுமில்லை, சிற்றின்பம் தான் அது. இந்த சிற்றின்பம் ஒன்றே இந்த உலக உயிர்களுக்கு எல்லாம் பொதுவாக இருப்பதை பார்க்கலாம். நீர் வாழ்வன, பறப்பன, ஊர்வன, தாவரங்கள், மனிதர்கள், தேவர்கள் ஆகிய யாவரும் இந்த சிற்றின்பத்தை அனிச்சை செயலாகவே செய்யும்படி இறைவன் தன்னுடைய படைப்பை படைத்திருக்கின்றான்.

இந்த இன்பத்தை மட்டும் எந்த உயிரினம் வேண்டாம் என்று மறுக்கிறதோ, அந்த உயிரினம் நாளடைவில் இந்த பூமியில் இருக்காது. ஆனால் அந்த மறுப்பு அதிகாரத்தை மனிதனுக்குத் தவிற மற்ற எந்த உயிரினத்திற்கும் இறைவன் வழங்கவில்லை, என்பது தான் மனிதப் பிறவியின் மேன்மையாகும். பயம் வேண்டாம், மனித இனம் இதனால் அழிந்துவிடாது. பத்து இலட்சத்துக்கு ஒருவர் மட்டுமே இந்த மறுப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இறைநிலைக்குச் செல்ல முடியும், எனவே இந்த அதிகாரத்தை சாதாரன மனிதர்கள் பயன்படுத்திவிட முடியாது.

அனைத்து உயிரினமும் தங்களது உடலியக்கம் மூலம் இன்பத்தைக் கண்டு அதன் மூலம் தனது எதிர்கால சந்ததிகளை இந்த பூமியில் வாழையடி வாழையென விட்டுச் செல்கின்றன. இந்த இன்புறுதலால்தான் இவ்வுலகில் எல்லா உயிர்களும் தழைத்து வாழ்கின்றன. இறைவனின் தனிப்பெருங்கருணையால் இந்த உடல்சுகமும் சுவாசித்தலும் எவ்வித தடையுமின்றி அனைத்து உயிர்களிலும் நடந்தேரி வருகிறது. 

இவ்வாறு இறைவனின் தனிப்பெருங்கருணையினை வியந்து, அச்செயலை வாழ்த்துவதற்காகத்தான் வள்ளலார் 'எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க' என்று வாழ்த்துகிறார். ஆக, இந்த சிற்றின்பத்தில்தான் உயிர்கள் தங்களது வினைகளுக்கு ஏற்ப வெவ்வேறு தகுதியினை உடைய உடலை பெருகின்றன. 



சிற்றின்பம் எதை போன்றது என்பதை விளக்க பல்வேறு நீதி நூல்கள் நமக்கு சொல்லியிருக்கின்றன, அவற்றுள் விவேகசிந்தாமணி எனும் நூலில்

அடுகரி தொடர வீழ
ஐந்தலை நாகம் காண
இடிகிணற்று அறுகின் வேரைப்
பற்றிநான் றிடஅவ் வேரைக்
கடுகஒர் எலியும் வந்து
கறித்திட அதில்நின் றோனுக்கு
இடைதுளித் தேன்நக்கும் இன்பம்
போலும் இப்பிறவி இன்பம்

இந்த பாடலின் கருத்தை பார்ப்போம்

ஒருவன் காட்டு வழியே பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அப்போது அவனை மத யானை ஒன்று விரட்ட தொடங்க (அதனால் பயந்து ஒடிய அவன்) தடுமாறி ஒரு கிணற்றில் வீழ்ந்தான். அந்த பள்ளத்தில் ஐந்தலை நாகம் ஒன்று படமெடுத்து ஆடியது, அதிலிருந்து தன்னை காத்துக் கொள்ள அந்த கிணற்றில் இருக்கின்ற வேரைப் பற்றி ஏற முயன்றான், அந்த கிணற்றின் மேல் இருந்த எலி ஒன்று அவ்வேரை கறித்துக்கொண்டிருந்தது, இவ்வளவு துன்பத்துக்கு மத்தியில் நின்ற அவனுக்கு அந்த கிணற்றின் மேல் இருந்த தேன் கூட்டில் இருந்து சிதறிய சிறு துளி தேனை சுவைப்பதால் ஏற்படும் இன்பம் போலும் இப்பிறவி இன்பம்.

இந்த பாடலின் வழியே மானுடப்பிறவியில் சிற்றின்பம் என்பது ஒரு சிறு துளியே என்று உணர்ந்து கொண்டால் பேரின்பம் எனும் இறைவன் திருவடியை அடையும் வழியை நாம் அறியலாம். பிறப்பு - இறப்பு என்னும் வட்டத்தை உடைக்க தெரிந்தவன் சிற்றின்பத்தில் ஈடுபடான். அவன் மூலம் இந்த உலகில் எந்த உயிரும் உடல் எடுத்து, துன்பப்படவோ, இன்பப்படவோ மாட்டாது. அவன் தனது உடலியக்கத்தின் மூலம் கிடைக்கும் இன்பத்தை விட 'சும்மா இருக்கும் சுகம்' என்பதனை அறிந்து பேரின்பம் காண்பான்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.