அன்பர்களே,
நாம் நமது நன்றியினை இயற்கையின்பால் தெரிவிப்பதற்காகவும், சில நேரங்களின் அவற்றின்பால் உள்ள பயத்தினாலும், நமது சமூக ஒற்றுமைக்காகவும், இன்னும் சில பல காரணங்களுக்காகவும் வழிபாடு நடத்தி மனநிம்மதியடைகிறோம். இந்த வழிபாட்டு முறைகளை பொதுவாக இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று அருவ வழிபாடு, மற்றது உருவ வழிபாடு.
இதுவன்றி அருவுருவ வழிபாடும் இருக்கின்றது, அது தான் ஜோதி வழிபாடு. ஜோதியினைப் பார்க்கலாம் ஆனால் பிடிக்கமுடியாது, எனவே இது அருவுருவ வழிபடாயிற்று. மனிதர்கள் இம்மூன்றில் ஏதோ ஒன்றை பற்றி வழிபடுவதால், இவற்றில் எந்த வழிபாடு சிறந்தது? என்ற கேள்வி நம்மில் சிலருக்கு ஏற்படுவதுண்டு. என்னைக்கேட்டால், நான் சொல்வேன் - 'அருவ வழிபாடு' தான் மிகச்சிறந்தது.
ஆனால் இந்த அருவ வழிபாடு என்பது நமக்கு சாத்தியமாகாது. ஏனெனில் நமது மனம் வழிபடும் போது எதையாவது ஒன்றை சாராது வெறும் சூனியத்தை வழிபடவேமுடியாது, ஏனெனில் மனதின் இயல்பானது, அது ஏதெனும் ஒரு பொருளையோ அல்லது பல பொருளையோ சார்ந்தே இருப்பதுதான். மனிதர்கள் வெளிஉலகில் / புறத்தே செய்யும் அருவ வழிபாட்டில், அவர்கள் மனம் எப்படியோ, எதையோ ஒன்றை கற்பனை செய்துக்கொண்டுதான் அந்த வழிபாட்டை நிறைவேற்றுவார்கள், நிறைவேற்றமுடியும். யாரேனும் இதனை மறுக்கமுடியுமா? எனவே புற வழிபாடு அனைத்துமே ஒருவகை சடங்குதான்.
அப்படியெனில் அருவ வழிபாடு என்பதுதான் யாது?
வழிபாடு என்று சொன்னாலே, நாம் ஏதேனும் ஓர் இடத்தில் தனித்தோ அல்லது ஒன்று கூடியோ அல்லது ஏதேனும் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து சில சட்ட திட்டங்கள் மூலம் நிறைவேற்றுவதே வழிபாடு என்பதாகும். இம்முறையில் நாம் வழிபட்டால் அது அருவ வழிபாடு ஆகாது. இந்த வழிபாட்டை நாம் வெளியில் எங்கும் செய்ய இயலாது, முடியாது. நாம் நமது உள்ளே சென்று மிக ஆழ்ந்த சிந்தனையில், நம்மையும் மறந்து, நமது ஆழ்ந்த சிந்தனையையும் மறந்து இருபுருவ மத்தியில் ஒன்றுமில்லாத சூனியத்தை, எல்லாமுடையவனாக (இங்கு தயவுசெய்து மீண்டும் உருவத்திற்கு வந்துவிடாதீர்கள்) பார்க்க முயலுவது தான் அருவ வழிபாடு. அது எப்படிப்பட்ட காட்சியாக இருக்கும் என்பதனை நாம் நமது சொந்த அனுபவம் மூலமாகவே அறியவேண்டும். இந்த வழிபாட்டை நேரடியாக மேற்கொள்ளும் மனிதர் ஒரு யுகத்திற்கு ஒரு நபர் பிறப்பதே அரிது.
சரி, ஜோதி வழிபாடு என்பது யாதெனில், மேற்கண்ட அருவ வழிபாட்டிற்கு செல்லும் வழிகாட்டி பலகை என்று இதனை சொல்லலாம். இங்கே நாம் ஜோதி வழிபாட்டினை ஏதேனும் ஒரு இடத்தில் பலர் கூடியோ, தனித்தோ செய்கிறோம். இந்த அருவுருவ வழிபாடு ஏன் செய்யவேண்டும் என்றால், இது நமது மனதின் இயற்கையான, சார்பு நிலைக்கு உகந்ததாகவும் (இறைவன் ஜோதியாக இருக்கிறான் என்று சொல்லி நம் மனதை அதில் ஈடுபட செய்யும் ஒரு உபாயம் / தந்திரம்) மேலும் அந்த ஜோதியினை நம்மால் நமது விருப்பத்திற்கு வடிவமைக்கமுடியாது, அது இந்த உலகில் எங்கெங்கு செல்லினும், யவர் வழிபட்டாலும் அதன் வடிவம் ஒன்றே, அதனை யாரும் பிடித்து வளைத்து, ஒடித்துவிடமுடியாது (அனைத்துவிடலாம், அது வேறு), மேலும் புற இருளை நீக்கக் கூடிய ஒன்று தான் நமது அக இருளையும் நீக்கமுடியும் என்பதாலும், அண்டங்களிலெல்லாம் ஜோதியின் சுடரே எங்கும் வியாபித்திருப்பதாலும், யாருக்கும், எங்கும், எதற்கும் இது பொதுவாக விளங்குகிறப்படியாலும், ஜோதியின் சுடர் தொன்றும் போது அது எங்கிருந்து வந்தது என்றோ அது அனையும் போது அது எங்குச் சென்றது என்றோ எவராலும் கூறமுடியாது என்பதெ அதன் தனிச்சிறப்பு என்பதாலும் இதனை நாம் வழிபடலாம்.
மேலும் இதனை ஒருகுறியீட்டின்மூலம் காணலாம், இந்த ஜோதி என்பது அருவுருவமாக இருப்பதால் - அதன் உருவத்திற்கு ஒன்று (1) என்ற இலக்கத்தையும், அதன் அருவத்திற்கு ஜீரோ (0) என்ற இலக்கத்தையும், இவையிரண்டும் சேர்ந்து நம்மை ஒரு சூனியத்திற்கு (சூனியம் என்றால் ஒன்றுமில்லாத ஜீரோ எனலாம்) நம்மை அழைத்துச்செல்வதால் (அதாவது அருவ வழிபாட்டிற்கு - அக வழிபாடு) அதற்கு ஒரு குறியீடாக ஜீரோ (0) என்ற இலக்கத்தையும் கொடுத்துப்பார்த்தல், இந்த ஜோதி வழிபாடு 100 என்ற இலக்கத்தினைப்பெற்று முழு மதிப்பெண்ணுடன் இருப்பதைக் காணலாம்.
'இறைவன் தீபத்திற்கு முன்னிலையில் விளங்குகிறான்' (திருஅருட்பா) எனவே இந்த தீபமே / ஜோதியே இறைவன் அல்ல. இந்த வழிபாட்டின் மூலம் நாம் புறத்தில் ஜோதியை பார்த்து பார்த்து அதனையே அகத்தில் அனுபவமாக பார்க்கவேண்டும். பிறகு அந்த ஜோதி அருவுருவமும் நமது மனதின் கண் தானாக இயற்கையாக மறைந்துவிடும். இந்நிலையில்தான் அருவ வழிபாடான மேற்கண்ட ஒன்றுமில்லாத சூனியத்தை, எல்லாமுடையவனாக (இங்கும் தயவுசெய்து மீண்டும் உருவத்திற்கு வந்துவிடாதீர்கள்) பார்க்க முயலுவதுதான் ஜோதி வழிபாடு.
'தன்னையறிந்து இன்பமுற வெண்ணிலாவே
ஒரு தந்திரம் நீ சொல்லவேண்டும் வெண்ணிலாவே! (திருஅருட்பா)
இப்படியாக நமது மனதை தந்திரமாக ஏமாற்றி அருவ வழிபாட்டிற்கு செல்லும் வழிகாட்டியாகத் திகழ்வதுதான் இந்த ஜோதி வழிபாடு. இந்த வழிபாட்டினையே செய்துகொண்டிருந்தால் அவன் இன்னும் அந்த வழிகாட்டி பலகையை பார்ப்பதை தவிற வழிகாட்டி சொல்லும் பாதையில் பயனிக்கவில்லை என்று பொருள். எனவே இதனையும் மனதை பக்குவப்படுத்தியப் பின்பு இந்த புற வழிபாட்டினையும் விட்டு விட்டு அக வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டும், அதாவது பயணப்படவேண்டும. இந்த பயணம் ஒன்றுமில்லாத ஆதி அனாதியான சூனியத்தில் சென்று முடியும். வழிகாட்டி இல்லாமல் இப்பயணத்தை மேற்கொள்வது என்பது முடியவே முடியாது. எனவே புற வழிபாட்டிலிருந்து அக வழிபாட்டிற்கு செல்லும் பயணம்தான் ஜோதி வழிபாடு, பயணத்தின் முடிவுதான் (அக வழிபாட்டின் முடிவு) அருவ வழிபாடு.
'நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
நிறைந்துநிறைந்து ஊற்றெழுங்கண் ணீரதனால்
உடம்பு நனைந்துநனைந் தருளமுதே...' (திருஅருட்பா)
இவ்வாறு தமக்குத்தாமே வழிபடுவதே அருவவழிபாடு. இதற்கு இவ்வுலகிலுள்ள எந்த ஒரு மொழியும், மதமும், சமயமும், வேதமும், சடங்குகளும், வழிபாடுகளும், மார்க்கங்களும், ஆச்சாரங்களும் தேவையில்லை. நமக்குத்தேவையானது இரண்டுதான். ஒன்று மனித உடல், மற்றது அவ்வுடலில் அமைந்த உயிர், அதாவது உயிருடன் கூடிய உடல் அவ்வளவே. (கோமா நிலையில் இருந்தால் போதுமா? என்றெல்லாம் கேள்வி கேட்கக்கூடாது) அது (உடல் + உயிர்) தற்போது தற்காலிகமாக உள்ளது. அருவவழிபாட்டின் இறுதியில் அவ்வுயிர் நமது உடலிலே நிரந்தரமாகும். அருவ வழிபாட்டின் முடிவு சாகநிலை, மரணமிலா பெருவாழ்வு.! இந்த அருவ வழிபாட்டால் நாமும் அருவமாவோம். நமது உருவம் மறையும்.
இதனை வள்ளலார் முத்தேக சித்தி என்று கூறுகிறார். முத்தேகசித்தியடைந்த வள்ளலார், மேலும் அந்த தேகங்களின் இயல்பை கீழ்கண்டவாறு தமது திருஅருட்பாவில் விளக்குகிறார்,
முத்தேகமாவது யாதெனில், 1.சுவர்ணதேகம் (பொன் வண்ணமாக இருக்கும், நரை,திரை,பிணி,மூப்பு,மலம்,ஜலம்,வியர்வை,ஆகாரம்,நித்திரை,தாகம்,நிழல் முதலியவை இருக்காது, இத்தேகம் 12வது வயது வரை) 2. பிரணவதேகம் (சுவர்ணதேகத்தின் சிறப்பு + தேகம் தோன்றும் ஆனால் பிடிபடாது, இத்தேகம் 16 முதல் 108 வயது வரை) 3. ஞானதேகம் (சுவர்ணதேகம் + பிரணவதேகத்தின் சிறப்புகள் + உருவம் தொன்றியும் தோன்றாமலும் இருக்கும், அளவுகடந்த காலம் - வரையறையில்லை).
உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே
உறவனன்றிப் பகைவன்என என்னாதீர் உலகீர்
கற்றவரும் கல்லாரும் அழிந்திடக்காண் கின்றீர்
கரணம்எலாம் கலங்கவரும் மரணமும்சம் மதமோ
சற்றும்இதைச் சம்மதியா தென்மனந்தான் உமது
தன்மனந்தான் கல்மனமோ வன்மனமோ அறியேன்
இற்றிதனைத் தடுத்திடலாம் என்னொடும்சேர்ந் திடுமின்
என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே. (திருஅருட்பா)
இவை நிற்க. நாம் இனி உருவ வழிபாட்டிற்குள் செல்வோம். இந்த உருவ வழிபாட்டை நினைத்தாலே எனக்கு ஒருவித பயமும், மயக்கமும் வருவதாக உள்ளது. ஏனெனில் அது அவ்வளவு விகாரமாக உள்ளது. இதனால் யாதொரு பயனும் வருவதில்லை, வீணுக்கு அழுதல் என்பார்களே அது போன்றதுதான் இந்த உருவ வழிபாடு. வள்ளலார் வழியில் கூறினால் இது ஒரு 'சிறி பிள்ளை விளையாட்டு' என்றும் கடவுளுக்கு கை, கால்கள் போன்ற அங்க அவயங்கள் உண்டா? என்று வள்ளலார் அறைந்தபோது, யாராலும் பதில் கூறமுடியவில்லை. "உண்மையான இறைஇயல்பை மண்ணைப்போட்டு மறைத்துவிட்டார்கள், மறைத்தவன் ஒரு வல்லவன், அவன் போட்ட பூட்டை இது வரை யாராலும் திறக்கமுடியவில்லை" என்று உண்மையை வெளிபடுத்த விழைந்தவர் வள்ளலார்.
ஆனால் நாம் இன்னும் கடவுளை ஒரு பொருளாகவே பார்க்கிறோம். எது தடை செய்கிறதோ (OBJECTS) அதற்கு பொருள் (OBJECT) எனப் பெயர். ஒரு சுவரை நாம் ஊடுறுவிச் செல்ல முயன்றால், நாம் சுவரால் இடிக்கப்படுவோம். சுவர் ஒரு பொருள், அதன் வழியாகச் செல்வதை அது தடுக்கிறது. நாம் பாறையின் ஊடே கடந்துச் செல்லமுடியாது. அது ஆட்சேபிக்கிறது, அது தடுக்கிறது, அது தடங்கல் செய்கிறது.
கடவுள் ஒரு பொருள் அல்ல - நாம் கடவுளின் ஊடே கடந்துச் செல்ல முடியும், அதனால் தான் தமிழில் அவனது பெயர் கடவுள் (கட - உள்). கடவுள் ஒரு பொருளாக இருந்தால் நமது புலன்களால் அவரை அறிய முடியும். முடிகிறதா? ஆனால் நாம் கடவுளை ஒரு பொருளாக்கி விட்டோம், பல சிலைகள் உருவாகிவிட்டன, அந்த சிலைகள்தான் பொருட்கள். அவைகள் கல்லாலோ, மரத்தாலோ, மற்றவற்றாலோ செய்யப்பட்டுள்ளன. கடவுளை ஒரு பொருளாக ஆக்குதல் மிகப்பெரிய தெய்வ நிந்தனையாகுகம். ஏனெனில் கடவுள் உள் உணர்வைச் சார்ந்தவர். கடவுளைப்பற்றிய முழுக் கொள்கைகளையும் நாம் மாற்றிக்கொண்டிருக்கிறோம். அவரை ஒரு பொருள் நிலைக்குத் தாழ்த்திவிட்டோம். மீண்டும் கூறுகிறேன் - கடவுள் ஒரு பொருள் அல்ல.
கெளதம புத்தர் கூட கடவுளை சூன்யம் (NOTHINGNESS) என்றழைத்தார். சூன்யம் என்று சொல்லும்போது (no - thingness) பொருள் அற்ற நிலை என்ற அர்த்தத்தில் தான் அந்தச் சொல்லை பயன்படுத்துகிறார். புத்தர் கடவுளை மறுக்கவில்லை, கடவுளை இல்லை என்று சொல்லவில்லை. ஒன்றுமில்லை என்பதற்கு 'அது ஒரு பொருள் அல்ல' என்று அர்த்தமாகின்றது.
கோவில்களும், சர்ச்சுகளும் கடவுளை ஒரு பொருளாக்கிவிட்டன, பள்ளிவாசல்களில் சிலைகள் இல்லை, ஆனால் கடவுள் அவ்விடங்களில் இருப்பதைப் போல நினைத்துக்கொண்டு, ஆழ்ந்த உள் உணர்வு இல்லாமல் வழிபாடு செய்கின்றனர். சிலைகளுக்கு முன் மண்டியிட்டாலும், மேகங்களுக்கு மேல் கடவுள் எங்கேயோ இருப்பதாக நினைத்துக்கொண்டு வழிபட்டாலும் அதேதான் - கடவுள் ஒரு பொருள் ஆகிறார். புறத்தில் செய்யும் வழிபாடு அனைத்தும் பொருள் வழிபாடே. அக வழிபாடே மிகச்சிறந்தது. நாம் ஒரு பெண்ணுடன் / மனைவிடம் அல்லது ஆணுடன் / கணவருடன் கூடும்போது புறத்தில் கூடுவோமா? மாட்டோம், அது எவ்வளவு அந்தரங்கமானதோ அதைவிட இரகசியமானது கடவுளின் ஊடே கூடுதல். ஆனால் நாய்கள் அனைவரும் காண தெருவில் கூடும். நாம் யார் என்ற தெளிவு வேண்டும், தெளிவு வந்துவிட்டால் 'எல்லாம் செயல் கூடும்'.
கடவுளை ஒரு பொருளாகப் பார்க்கும்போது தான் நமக்குள் சண்டையிட்டுக்கொண்டே இருக்கிறோம். ஏனெனில் நாம் சண்டையிட விரும்புகிறோம், சண்டையிடுவது நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நமது 'பொருள்' என்னும் கடவுள் சண்டையிடுவதற்கு ஒரு காரணமாய் இருக்கிறார். நாம் ஒருபோதும் இது பற்றி ஒரு இறுதி முடிவுக்கு வர இயலாது.
ஒரு கடையின் முன்பு இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். அந்தச் சண்டையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்களில் ஒரு பத்து வயது சிறுவனும் இருந்தான். ஒரு வழிபோக்கன் அங்கே வந்து என்ன நடைபெற்றுக்கொண்டிருக்கிறது? என்று அங்கிருந்த அந்த சிறுவனிடம் கேட்டான்.
'என்னுடைய தந்தையும், இன்னொருத்தரும் சண்டையிட்டுக்கொண்டிருக்கின்றனர்' என்றான் அவன்.
அந்த இருவரில் உன்னுடைய தந்தை யார்? என்றான் வழிபோக்கன்.
அதைப்பற்றிதானே அவர்களிருவரும் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்றான் அந்தச் சிறுவன். இம்மாதிரி இவ்வுலகிலுள்ள மதவாதிகள் பல நூற்றாண்டுகாலமாக சண்டையிட்டுக்கொண்டிருக்கின்றனர்.
தத்துவ பேராசிரியர்களும், மத பேராசிரியர்களுக்கும் அவர்களைப்பற்றியே அவர்களுக்கு ஏதும் தெரியாது. ஆனால் கடவுளைப்பற்றிய அவர்களது கருத்து உண்மையானதென்று நிரூபிக்க அவர்கள் முயர்ச்சி செய்கின்றனர்.
நாம் பெரும்பாலும் நமது தந்தை அல்லது பரம்பரை என்ன தெய்வங்களை எப்படி வணங்கினரோ அதனை அப்படியே நாமும் பின்பற்றுகிறோம், பின்பற்றும்படி கட்டாயப்படுத்தப்பட்டோம். அது பரம்பரை பழக்கமாகிவிட்டது. இந்த தொடர்நிகழ்வு சரிதானா? என்று நாம் சிந்திக்க மறுக்கிறோம். சிந்தித்தாலும் அந்த வழிபாட்டை விட்டு செல்ல நமது சமுதாயம் தடைவிதிக்கிறது அல்லது நம்மால் உண்மையான வழிபாட்டிற்குச் செல்லும் அளவிற்கு ஞானமுதிர்ச்சி இல்லை.
இந்த உருவ வழிபாட்டினை இவ்வுலகில் ஒரு வரையறையின்றி மனம் போன போக்கில் பின்பற்றுபவர் இந்து மத மக்களே. கல், மரக்கட்டை, செம்பு, தங்கம், பித்தளை, அலுமினியம், வெள்ளி, ஸ்படிகம், வைரம், முத்து, பவழம், நவமணிகள், மாட்டு சாணம், களிமண், வண்ணப்படங்கள்... போன்றவற்றில் பலவிதமான் மனித ரூபங்கள் மட்டுமல்லாது மற்ற அஃறினை ரூபங்களையும் செதுக்கி அதன் அருகில் மண்டியிடுவது / வழிபடுவது என்பது நமது அறிவிற்கு அழகா? என்று சிந்திக்கவும்.
சிற்பி ஒருவனால் செதுக்கப்பட்ட ஒரு கல் உருவம் எப்படி கடவுளாகும்? கடவுள் காட்சியை செதுக்கப்பட்டக் கல்லில் பார்க்கும் அளவிற்கு அவர் 'காட்சிக்கு எளியவரா'? அல்லது அவரது தரம் தாழ்ந்துவிட்டதா? அல்லது அவர் என்ன முட்டாளா? அல்லது நாம் அந்தக்கடவுளை கோயிலில் நேரடியாகப் பார்க்கும் அளவிற்கு சக்தி பெற்றுவிட்டோமா?
இங்கு வள்ளலார் வாழ்க்கையில் நடந்த ஒன்றை நினைவுப்படுத்த விரும்புகின்றேன். ஒரு சமயம், பண்ணுருட்டியில் உள்ள ஒரு சிற்பி வள்ளலாரின் மேனியினை கல்லில் செதுக்கி அதனை மிகவும் பெருமையுடனும், பயபக்தியுடனும் வள்ளலாரிடம் எடுத்துவந்து காண்பிக்க, வள்ளலார் அதனை பார்த்தவுடன் மிகவும் கோபப்பட்டு 'பிச்... பொன்னான மேனி கல்லானதே' என்று கூறியபடியே அதனை வாங்கி உடைத்துவிட்டார். வள்ளலாரின் உண்மையான உருவத்தையே கல்சிலையாக பார்க்கும்போது அவருக்கு கோபம் வந்தது என்றால், இறைவனின் உண்மை என்னவென்றே தெரியாமல் அவரை மனம் போன போக்கில் மேற்கண்டவாறு செதுக்கி வழிபட்டால், அவர் எந்த அளவிற்கு பொறுமை காக்கிறார் என்று உணரவேண்டும்.
அதாவது நீங்கள்தான் இறைவன் என்று வைத்துக்கொள்வோம். உங்களைப் பார்க்காமலேயே காட்டில் உள்ள சிங்கங்கள் மனித இறைவனான உங்களை வணங்குவதாக நினைத்து ஒரு பன்றியாக உங்களை உருவகப்படுத்தி வணங்கி, அதற்கு அது சாப்பிடும் உணவை படைத்து, அது குளிக்கும் நீரினால் அபிஷேகம் செய்து வழிபட்டால் உங்களுக்கு அந்த சிங்கங்கள் மேல் கோபம் வருமா? வராதா? அப்படித்தான் நாம் கடவுள் நிலை தெரியாமல் அவரை எந்த அளவிற்கு இழிவு செய்யமுடியுமோ அந்த அளவிற்குச் செய்துக்கொண்டிருக்கிறோம். இது உண்மை.
நாம் செய்வது என்ன, சாதாரண வழிபாடா? புண்ணியம் செய்வதுபோல் தினம் பாவங்களையே செய்கிறோம் என்பது நமக்குத் தெரிவதில்லை. அந்த கல்லால் ஆன, பேசமுடியாத, பார்க்கமுடியாத, கேட்கமுடியாத, நடக்கமுடியாத, நுகரமுடியாத, தொட்டாலும் - உடைத்தாலும் சுரனை இல்லாத பொம்மைக்கு அபிஷேகம் என்ற பெயரில் நாம் செய்யும் விரயங்கள் மட்டும் கணக்கிட்டால், தமிழகத்தில் மட்டும் ஒரு நாளைக்கு சராசரியாக 5 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வீணாக (கீழே) கல்லின் மேலே கொட்டப்பட்டு வீணாக்கப்படுகின்றது. இதனால் நமது வாழ்வாதாரம் நேரடியாகப் பாதிக்கப்படுவதை யாரும் கவனிப்பாரில்லை. இதனால் பாவத்தைத் தவிற, புண்ணியம் கிடைக்கும் என்று கனவில் கூட யாரும் இனி நினைக்கவேண்டாம். நாம் நினைப்பது போல் அந்தக் கல் இறைவனே என்று வைத்துக்கொண்டாலும், அவனது தலையில் எண்ணைய், பால், தயிர், நெய், பன்னீர், விபூதி, அன்னம், கூழாக்கிய பழங்கள் இன்னும் சொல்ல முடியாத பொருள்களை கொட்டினால் அவனுக்கு என்ன சந்தோசமா கிடைக்கும், துடைப்பக்கட்டையாலே நம்மை அடிக்கத்தான் வருவான்.
நாம் உண்ணும்போது உணவை கீழே சிந்தினாலே அதற்கான பாவத்திற்காக பல பிறவிகள் பிறக்கவேண்டும் என்று பெரியவர்கள் கூறுவார்கள், ஆனால் அப்படிப்பட்ட பெரியவர்களே எப்படி தான் இவ்வாறு செய்கின்றனரோ? கடவுளை கல்லினுள் அகப்பட்டதாகப் பாவித்து ஆவாகனம் பண்ணுதல், புதைப்பதற்கு அகப்படா நிழலைப் புதைக்கத் தொடங்கியது போலவும், தனது நிழலை காலால் அளந்தறிய அது கடந்துக்கொண்டே செல்வது போலவும் ஆயிற்று. அதன் மூலம் பாலோடு பன்னீர் அபிசேக நெய் ஊற்றலால் அந்தகல்லுக்கோ உண்மை இறைவனுக்கோ யாதொரு சுகமும் இல்லை என்பதனை அறியவேண்டும்.
காடுவெட்டி நிலந்திருத்திக் காட்டெருவும் போட்டுக்
கரும்பைவிட்டுக் கடுவிரைத்துக் களிக்கின்ற உலகீர்
கூடுவிட்டுப் போயினபின் எதுபுரிவீர் எங்கே
குடியிருப்பீர் ஐயோநீர் குறித்தறியீர் இங்கே
பாடுபட்டீர் பயன்அறியீர் பாழ்க்கிறைத்துக் கழித்தீர்
பட்டதெலாம் போதும்இது பரமர்வரு தருணம்
ஈடுகட்டி வருவீரேல் இன்பம்மிகப் பெறுவீர்
எண்மைஉரைத் தேன்அலன்நான் உண்மையுரைத் தேனே. (திருஅருட்பா)
நாம் செய்வது என்ன, சாதாரண வழிபாடா? பார்ப்பதற்கே கோரமான, கொலை ஆயுதங்களுடன் செதுக்கப்பட்ட கல் உருவத்திற்கு பலி கொடுக்கின்றோம் என்று கோயில்களில் ஆடுகள், மாடுகள், கோழிகள், சேவல்களை யெல்லாம் கருணை ஒரு சிறிதும் இன்றி துடிக்க துடிக்க வெட்டி, கோயில்கள் புனிதமான இடம் என்று நாமே சொல்லிவிட்டு, அதனை உண்மையில் புலால் / மாமிசக் கடையாக்குகிறோம். ஆசாமியைத்தவிற வேறு எந்த சாமியும் பலி கேட்காது. ஏன் சாதாரண படையல் கூட (அன்னம் படைத்தல்) அந்தக்கல்லிற்கு உதவாது, என்பது நமக்குத் நன்றாகவே தெரியும் இருந்தும் இன்னும் நம்மாலே அது போன்ற மூடபழக்கத்தினை விட மன தைரியம் இல்லை. சில கூட்டங்கள் பிழைக்கவே, பலியிடுதல் இறைவனை மகிழ்விக்கும் என்று நமது வேதங்களில் கூறப்பட்டுள்ளன.
மனித பிறப்பை எடுத்த நாம் புலால் உண்ணுவதே, இறை சட்டப்படி குற்றம், அப்படி இருக்க பலி என்ற பெயரில் கோயிலை இரத்த களரி ஆக்குவது எந்த வகையில் நியாயம்? இந்தியாவில் சில இடங்களில் மனித பலி நடப்பதையும் நாம் அறிகிறோம். இவையெல்லாம் நினைக்கும் போது, நம் மனித இனம் எந்த அளவிற்கு தாழ்நிலையில் இருக்கிறது என்பதனை சொல்லி தெரியவேண்டாம். அப்படிபட்ட மனித இனமான நாம் நமது இறைவனையும் அவ்வாறே வைத்துள்ளோம் என்பதில் வருத்தப்பட ஏதுமில்லை. நாம் எப்படியோ அப்படியே நமது வழிபடும் இறைவனும் இருப்பான் என்று ஏமாறுகிறோம்.
பண்ணாத தீமைகள் பண்ணுகின் றீரே
பகராத வன்மொழி பகருகின் றீரே
நண்ணாத தீயினம் நண்ணுகின் றீரே
நடவாத நடத்தைகள் நடக்கின் றீரே
கண்ணாகக் காக்கின்ற கருத்தணை நினைந்தே
கண்ணார நீர்விட்டுக் கருதறி யீரே
எண்ணாத தெண்ணெவும் நேரும்ஓர் காலம்
எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே. (திருஅருட்பா)
நாம் செய்வது என்ன, சாதாரண வழிபாடா? கோயில்களில் யாகங்கள் செய்வதாகக் கூறி நெருப்பை மூட்டி, அதில் நெய்யை ஊற்றி, ஆல் அரசங்குச்சிகளையும், இன்னும் மனதில் பட்ட பல பொருள்களையும் தீயில் இட்டு புகை மூட்டி, காகம் கறைவது போன்ற சத்தத்தில் வேத மந்திரங்களை ஓதுவதால், அங்கே உள்ள நாம் வெளியிடும் கரியமில வாயுவை வெளியேற்ற ஒருவாறு துணை செய்யுமே அன்றி இறையறுளை அது எவ்வகையில் பெற்றுத்தரும் என்று சிந்திக்கவேண்டும். இந்த யாகங்கள் ஒரு சில கூட்டம் பிழைக்க ஏற்படுத்தப்பட்டது, வேதகாலத்தில் வேதத்தில் கூறியபடி, யாக நெருப்பில் கால்நடைகளை பலிகொடுத்து அதில் இடுவார்கள். (நமது வேதம் எப்படிபட்டது என்பதை சிந்திக்கவும்) அது தற்போது மாற்றமடைந்து விட்டது, ஆனால் அதன் அடிப்படை, வேதத்தின் கொடூர சொற்கள் இன்றும் இந்த யாகங்களில் ஓதப்படுகின்றன. அதைப்பற்றி நமக்கென்ன என்று இருந்துவருகின்றோம், இது தாழ்நிலை வழிபாடு என்பதனை அறியவேண்டும். கணபதி யாகம், அசுவமேத யாகம் (அசுவமேத யாகம் ஒரு மகா மட்டமான யாகம்) மகாசண்டி யாகம் இவை போன்ற யாகங்கள் எல்லாம் 'சிறு பிள்ளை விளையாட்டு' என்பதனை அறியவேண்டும்.
இவைகளினால் ஒரு பயனும் இல்லை என்பதனை திருவள்ளுவர்,
சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று (திருக்குறள்)
என்றும் இந்த ஞானசூன்ய செயலை செய்யத்தூண்டும் வேதத்தை கண்டித்து வள்ளலாரும் கூறுவதைக்காண்போம்,
வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர்
வேதாக மத்தின் விளைவறியீர் - சூதாகச்
சொன்னதலால் உண்மைவெளித் தோன்ற உரைக்கவிலை
என்ன பயனோ இவை? (திருஅருட்பா)
நாம் செய்வது என்ன, சாதாரண வழிபாடா? இந்த உருவ வழிபாட்டை ஞானசூன்ய வழிபாடு என்று ஒரே வரியில் கூறிவிடலாம். இதனை பற்றி விரித்து சொல்ல முற்பட்டால் அது நமது பிறவிகளைப்போல் தொடர்ந்துக்கொண்டே செல்லுவதாய் உள்ளது. எனினும் இன்னும் ஒருசிலதை மட்டும் சுருக்கமாக கூறி முடிப்போம்.
கோயில்களில் உள்ள பொம்மைகளுக்கு திருமணம் செய்து வைப்பது என்பது ஒரு வேடிக்கையான விளையாட்டு. அந்த பொம்மைகளை பள்ளியறை வரை கொண்டுவிடுவார்கள், விட்டால் இவர்களே... அதையும் முடித்துவிடுவார்கள் போலும்.
கோயில்களில் உள்ள பொம்மைகளுக்கு அலங்காரம் செய்து அதனை வாகனத்தில் ஏற்றி வீதி உலா வரச்செய்வது என்பது ஒரு சூப்பர் விளையாட்டு, அதிலும் பலர் கூடி தேர் இழுப்பது என்பது இன்னும் கேலிக்குறியதாக உள்ளது.
திருவிழா என்று சொல்லி பொதுமக்களிடம் வசூல் செய்து அப்பணத்தை விரயம் செய்வது என்பது தான் இன்றைய ஆன்மீகம். வீதி ஓரங்களில் பெரிய பெரிய கட் அவுட்கள் வைப்பது, பேனர்கள் வைப்பது, வெடி வெடிப்பது, தெருஓரங்களில் தேவையில்லாமல் டியூப் லைட் அமைப்பது, மின்சாரத்தை திருடி பயன்படுத்துவது, திருவிழா முடியும்வரை ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு அல்லது கோயில்களில் மட்டும் ஒலிப்பெருக்கி மூலம் சாமி பாட்டு என்று கண்டவன் கண்டபடி பாடிய பாடலை மிகவும் சத்தமாகப் போட்டு மக்கள் உயிரை வாங்குவது, தீ மிதிப்பது, தனது உடலை தானே இரத்தக்களரி ஆக்கிக்கொள்வது, மயான சூரை என்ற கொடூரம் அரங்கேற்றுவது, மொட்டை யடிப்பது, செடல் போடுவது, சாமியாட்டம், பேயாட்டம் ஆடுவது, மாலை போட்டு சுற்றுலா செல்லுதல், காது குத்துதல், மேள தாளங்கள் வாசிப்பது, இராமாயணம் மகாபாரதம் போன்ற ஒன்றுக்கும் உதவாத கதைகளை பேசுவது, சூர சம்ஹாரம் என்ற கொலை செய்யும் சடங்குகளை செய்வது, புனித ஆறு என்று அதில் குளிப்பது, பல்வேறு கடவுள்கள் இருப்பதாக உருவகப்படுத்துவது, ஒவ்வொரு கடவுளுக்கும் பல மனைவிமார்கள், வப்பாட்டிகள் இருப்பதாக கூறுவது, அந்தக் கடவுளுக்கு பிள்ளைகள் இருப்பதாகக் கூறுவது, ஒவ்வொருகடவுளும் தங்களுக்குள் பெண்ணுக்காகவும், பழத்திற்க்காகவும், மற்றவற்றிற்காகவும் சண்டையிட்டுக்கொள்வது, அர்ச்சனை என்ற ஏமாற்றும் வேலை செய்வது, கற்பூரம் காட்டுவது, பணம் கொடுத்தால் முதலில் சாமி தரிசனம், கும்பபாபிஷேகம் செய்வது, தீர்த்தம் கொடுப்பது, விபூதி, நாமம் இடுவது, காவி உடையணிந்து சுகபோகத்தை அனுபவிப்பது, நால்வகை வருணபேதம் பேசுவது, ஆசாரங்கள், சடங்குகள், விரதங்களை பின்பற்றுவது, ஜோதிடம் பார்ப்பது, குறி சொல்வது, பாம்புக்கு முட்டை, பால் வைத்து வழிபடுவது, மரக்கிளையில் கயிறு, தொட்டில் கட்டுவது, அவதாரம் என்று புளுகுவது, நடுரோட்டில் கோயில்கட்டி வழிபடுவது, தெருவிற்கு ஒரு கோயிலைக் கட்டுவது, நவ கிரகங்களை கல்லாக்கி அதனை ஒன்பது முறை சுற்றுவது இன்னும் பல வழிபாட்டு முறைகள் இந்த உருவ வழிபாட்டில் உள்ளன. ஒவ்வொன்றைப் பற்றியும் விளக்கவேண்டாம், இதனை செய்யும்போது மக்கள் ஏன், எதற்கு என்ற கேள்விகளை தங்களுக்கு தாங்களாகவே கேட்டுக்கொண்டால் இத்தனை சடங்குகளையும் நாறிய பிண்ணாக்கு என்று விட்டுவிடுவார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை.
மேற்கண்ட முறைகளில்தான் தற்போதய இந்து மத உருவ வழிபாடு என்ற ஆண்மீகம் தழைத்து ஓங்கிக்கொண்டிருக்கிறது. இதற்குள் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு தனிச்சிறப்பு இருப்பதாகக் கூறி பிழைப்பை ஓட்டுவதும் இருக்கிறது. புதிய புதிய சாமியார்கள் மக்களுக்கு உபதேசம் செய்ய கிளம்பிக்கொண்டே இருக்கின்றனர். இதற்காக பல ஆண்மீக மாத இதழ்கள் சந்தையில் விற்றுக்கொண்டிருக்கிறது. இது தவிர ஒவ்வொரு சாமியைப்பற்றி ஆராய்ச்சி புத்தகங்களும் வருக்கின்றன. அதனை வாங்கிப் படித்து நமது மக்கள் பக்தியில் முத்திவிட்டார்கள் என்றே சொல்லலாம்.
கோயில் யானைக்குத் தெரியாது தாம் பிச்சை எடுக்கிறோம் என்று! ஆனால் அதனை பழக்கப்படுத்தியவன் ஒரு வல்லவன். அவன் நேரடியாக அதனைச் செய்யாமல், தனக்காக தன்னைவிட வலிமையான ஒன்றை பிச்சை எடுக்க வைத்துவிட்டான். இங்கு நாம் அணைவரும் கோயில் யானையாக உள்ளோம் என்பதை அறியவேண்டும். அப்படி நம்மை பழக்கியவர்கள் வேதாந்திகள்.
கோயிலுள்ள சிலைகளை கலைக் கண்களோடு இரசியுங்கள், ஆனால் அவற்றை தெய்வம் என்று அவற்றின் முன் மண்டியிடாதீர்கள். மனிதத் தன்மையோடு இருக்க வேண்டுகிறேன். எந்த ஒரு விஷயத்திலும் சற்று ஆழமாகப் போய்ப் பார்க்கும்போது ஏற்படும் உணர்வுகளும் அனுபவங்களும் சற்று வேறு மாதிரியானவை. 'உண்மை கசக்கும்' என்பது நிஜமான வார்த்தை!
கிருத்துவத்தில் உருவ வழிபாட்டு மூட நம்பிக்கைகளும் உள்ளன, ஆனால் அவை இந்து மதத்தில் இருப்பவை போன்று அவ்வளவு மோசமாக இல்லை. எனினும் இவர்களும் மக்களை ஏமாற்றுவதை தவிர்க்கவேண்டும்.
'குருடர்கள் பார்க்கிறார்கள்
செவிடர்கள் கேட்கிறார்கள்
சப்பாணிகள் நடக்கிறார்கள்
அதிசய சுகமளிக்கும்
அற்புத ஆராதனைகள் -
ஆராதனைகள் மூலமே
அனைத்தும் முடியுமென்றால்
ஆஸ்பத்திரிகள் எதற்காக?
போப்பாண்டவர் அறுவை சிகிச்சை
செய்துகொள்வது எதற்காக?'
பிள்ளையார் பால் குடிக்கிறார், மேரியம்மா கண்ணில் இரத்தம் வடிகிறது, பிறந்தக் குழந்தை குரான் ஓதுகிறது, தர்க்காவில் பச்சை வளையல் போட்டால் கல்யாணம் நடக்கும் என்பன போன்ற கதைகள் அவ்வப்போது வெளிப்படுவதும் மக்கள் அதைக்காண அலைபாய்வதும், நம்புவதும் நடக்கின்றன. இவையெல்லாம் வெறும் பிரச்சார மோசடிகள் என்று அறியவேண்டும்.
இஸ்லாமில் உருவ வழிபாடு கிடையாது. (சமாதி வழிபாடு இடையில் முளைத்துக்கொண்டது) மிகவும் நல்ல வழிபாடு இது. ஆனால் இவர்கள் அதனை படிப்படியாக புற வழிபாட்டை அக வழிபாடாக மாற்றவேண்டும். எந்த ஒரு புற வழிபாடும் உருவ வழிபாட்டிற்குச் சமம். மேலும் இவர்கள் புலால் உண்பதனையும் நிறுத்திவிட்டால் இம்மார்க்கமும் ஒரு சன்மார்க்கமே.
சிவவாக்கியார் "தனது வாழ்நாளில் பல ஆண்டுகள் முட்டாளாக இருந்து மயக்கம் கலந்த வேதத்தைப் படித்துவிட்டு வழிபாடு, பூசனை என்று கழித்து, இப்போது முட்டாள் தனத்திலிருந்து வெளியேறி விட்டேன்" என்கிறார்.
அவர் மட்டுமா! திருமூலர் கூடப் பல ஆண்டுகள் முட்டாளாக வாழ்ந்தார்.
"இலைத் தொட்டுப் பூப்பறித்து
எந்தைக்கு என்றெண்ணி
மலர்தொட்டுக் கண்டேன்
வரும்பலன் காணேன்
தலைதொட்டுத் தாழ்ந்து
என் உள்ளம்
தலைதொட்டுக் கண்டேன்
தவம் கண்டவேறே"
எந்தப் பலனையும் காணாமல் பக்தி செய்து முட்டாளக இருந்தேன் என்கிறார்.
வள்ளல் பெருமான்கூட சைவ சித்தாந்த நெறியைப் பற்றிக் கொண்டு தொடர்ந்து நெடுநாள் முட்டாளக வாழ்ந்ததை அருட்பெருஞ்ஜோதி அனுபவம் வந்த பிறகு ஒப்புக் கொள்கிறார்.
எனவே நாம் முட்டாளக வாழ்ந்தது போதும். உருவ வழிபாட்டை விட்டொழித்து மேன்மை யடைவதே உண்மை இன்பமாகும்.
இதன் மூலம் நான் தெரிவிப்பது யாதெனில் 'நாமணைவரும் உருவ வழிபாட்டைத் தவிர்த்து, ஜோதி வழிபாட்டின் மூலம் அருவ வழிபாட்டிற்கு சென்று மரணமிலா பெருவாழ்வில் வாழவேண்டும்' என்பதே அன்றி வேறில்லை.
அண்டவகை எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
அமைந்த உயிர் எவ்வளவோ அவ்வளவும் அவைகள்
கண்டபொருள் எவ்வளவோ அவ்வளவும் அவற்றில்
கலந்தகலப் பெவ்வளவோ அவ்வளவும் நிறைந்தேன்
எல்லா உலகும் என் வசமாயின
எல்லா உயிர்களும் என் உயிர்களாயின
எல்லா செயல்களும் என் செயல்களாயின
என்னால் நீங்கள் நன்மை அடைவது சத்தியம்! (திருஅருட்பா)
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
தி.ம.இராமலிங்கம்
9445545475
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.