கிராமிய சிறுவர்களின் விளையாட்டுகளில் "உந்தி பறத்தல்" என்பதும் ஒன்று. வயிற்றுக் கொப்புளை உந்தி என்பர். உந்தி பறக்கும்படி இரண்டு சிறுவர்கள் ஒருவர் கையை மற்றொருவர் பிடித்துக்கொண்டு, பாட்டு பாடிக்கொண்டே சுழன்று சுழன்று சுற்றுவதே உந்தி பறத்தல்
விளையாட்டு. தற்காலத்தில் இவ்விளையாட்டு
எங்கும் விளையாடப்படவில்லை.
"உந்தி பறத்தல்" என்ற பாடல் கலித்தாழிசை என்னும் பாவகையால் அமைக்கப்பட்டிருக்கும். இதில் முதல் இரண்டு வரியை ஒரு சிறுமியும், மூன்றாம் வரியினை மற்றொரு சிறுமியும் பாடுவதாக அமைக்கப்பட்டிருக்கும். "உந்தி பறத்தல்" என்ற பாவகையினை மாணிக்கவாசகரும், திருவியலூர் உய்யவந்ததேவ நாயனாரும், வள்ளலாரும் பாடியுள்ளனர்.
அருட்பெருஞ்ஜோதி அடிமை
தி.ம.இராமலிங்கம் இயற்றிய
திரு உந்தியார்
(கலித்தாழிசை)
அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் வந்தென்
மருள் போக்கினாரென்று உந்தீபற
287 அபய மளித்தானென்று உந்தீபற. 1
சித்தெல்லாம் வல்லான் சிற்சபை வந்தெனை
பித்தனாக் கினானென்று உந்தீபற
288 வினை யொழித்தானென்று உந்தீபற. 2
வானவரும் கடவுளென வந்தவ ராவரும்
ஞானசபைக் கடிமைஎன்று உந்தீபற
289 தனித்தலைமை இடமென்று உந்தீபற. 3
நேயனாகி நீஎன்றும் நானென்று மில்லாதாகி
காயமும் மாயமாகுமென்று உந்தீபற
290 காலனும் கனிவானென்று உந்தீபற. 4
ஜோதியாய் சூழ்ந்து ஜோதியாய் வந்தென்
ஜாதியைக் கெடுத்தானென்று உந்தீபற
291 மதமும் ஒழிந்ததென்று உந்தீபற. 5
ஞானசபைத் தலைவன் ஞாயிறாய் வந்தென்
கானமாகி ஒளிர்வானென்று உந்தீபற
292 காதலாகி வருவானென்று உந்தீபற. 6
எட்டம்பலம் முடையான் எனைத் தொட்டு
கட்டியணைத் தானென்று உந்தீபற
293 கருணை பொழிந்தானென்று உந்தீபற. 7
வடலூர் ஞானம் வந்தெனைப் பேணும்
மடமும் மாய்ந்ததென்று உந்தீபற
294 நடுக்கண் திறந்ததென்று உந்தீபற. 8
சத்தியச் சபையைச் சுற்றிய சங்கிலிபோல்
நித்தியம் ஆனேனென்று உந்தீபற
295 காற்றைக் கடந்தேனென்று உந்தீபற. 9
கள்மாது கொலைபுலைக் கழன்று ஞானசபைக்
குள்ளே சென்றேனென்று உந்தீபற
296 உண்மையைக் கண்டேனென்று உந்தீபற. 10
சிற்சபைச் செயலெலாம் சிறியேனின் செயலாக்கி
அற்புதம் புரிந்தானென்று உந்தீபற
297 சுதந்தரம் அளித்தானென்று உந்தீபற. 11
பொற்சபை போகமெலாம் புரிந்திடச் செய்தே
கொற்றவ னாக்கினானென்று உந்தீபற
298 அடிமை யாக்கினானென்று உந்தீபற. 12
ஞான முழுதாகி ஞானயொளியாகி எனக்கு
வானநிலை யளித்தானென்று உந்தீபற
299 காலநிலை கடந்தேனென்று உந்தீபற. 13
அன்பெனும் தயவால் ஆடுஞ்சபை யொளியை
என்னுள் கண்டேனென்று உந்தீபற
300 உத்தம னானேனென்று உந்தீபற. 14
தராத பொருளெலாம் தயவால் எடுத்தேன்
இராமலிங்க மானேனென்று உந்தீபற
301 ஓங்கினேன் என்று உந்தீபற. 15
திரை யெல்லாம் திறந்தே அகத்திலோங்கும்
அரைசனைக் கண்டேனென்று உந்தீபற
302 அமைச்ச ரானேன்று உந்தீபற. 16
பாருயி ரெல்லாம் பரமாகாசம் விளங்கும்
ஆருயிராய்க் கண்டேனென்று உந்தீபற
303 ஆன்மப் பிரகாசமானேனென்று உந்தீபற. 17
இரவென்றும் பகலென்று மில்லா தொரு
பரவெளியைக் கண்டேனென்று உந்தீபற
304 சாகாநிலை பெற்றேனென்று உந்தீபற. 18
சித்தனும் கண்டிடா சுகபோக இடமாம்
சித்துறுவெளியைக் கண்டேனென்று உந்தீபற
305 மெளனராஜ னானேன்று உந்தீபற. 19
ஒருவன் என்றில்லா ஒருவனைக் காண
பொருளுறு வெளியானேனென்று உந்தீபற
306 கருநிலை கடந்தேனென்று உந்தீபற. 20
தெளிய அழுதழுதே தெரிந்த மெய்ப்பதி
வெளியை அடைந்தேனென்று உந்தீபற
307 வெளியெலாம் கடந்தேனென்று உந்தீபற. 21
தவமெலாம் நிறைந்தே தித்திக்கும் கருதனு
பவங்களை பெற்றேனென்று உந்தீபற
308 முத்தேக மடைந்தேனென்று உந்தீபற. 22
விடய நிலையெலாம் விட்டே அருளடைய
இடமொன்று கண்டேடென்று உந்தீபற
309 அதுபுருவ நடுவென்று உந்தீபற. 23
தத்துவ நிலைகளை தமதாக்கிக் கொண்டு
அத்துவ மானேனென்று உந்தீபற
310 சத்திய மானேனென்று உந்தீபற. 24
மறைப் பெல்லாந் மறையப் புரிந்தெனை
இறைவ னாக்கினானென்று உந்தீபற
311 அருட்பெருஞ் ஜோதியானேனென்று உந்தீபற. 25
அருட்பெருஞ் ஜோதி அப்பனைக் காட்டி
குருவென வந்தானென்று
உந்தீபற
312 இராமலிங்க பிள்ளையென்று உந்தீபற. 26
கருஉறும் உயிரிலும்
கருணை ஈகின்ற
கருணீக குலத்தானென்று
உந்தீபற
313 இராமலிங்க சாமிஎன்று உந்தீபற. 27
வாடிய பயிரையும்
வளர்ந் தோங்கப்
பாடிய திருவருட்பாவென்று
உந்தீபற
314 சிதம்பரம் இராமலிங்கமென்று உந்தீபற. 28
வடலூர் அருள்திசைக்கு
வருவோரை வாழ்த்தி
உடலிலே உயிராவாரென்று
உந்தீபற
315 வள்ளலா ரென்று உந்தீபற. 29
தருமமிகு வடலூரில்
தருமச்சாலை யமைத்த
திருவருட் பிரகாசனென்று
உந்தீபற
316 அருட்பெருஞ் ஜோதியென்று உந்தீபற. 30
அழுது விழுந்தாலும்
அசையாத செத்தாரை
எழுப்பும் சித்தனென்று
உந்தீபற
317 சாகாதவன் என்று உந்தீபற. 31
சமரச சுத்தசன்மார்க்க
சத்திய சங்கத்தில்
அமர்ந்த அமலனென்று
உந்தீபற
318 சுத்த சன்மார்க்கிஎன்று உந்தீபற. 32
உலகெலாம் உணர்ந்து
ஓதிய உத்தமத்
திலக மானானென்று
உந்தீபற
319 முத்தேக சித்தனென்று உந்தீபற. 33
ஐந்தொழில் செய்யும்
ஆற்றல் பெற்று
எந்தை தாயுமானானென்று
உந்தீபற
320 இரக்க உருவானென்று உந்தீபற. 34
கண்ணாறக் கண்டதை
களிப்புற சகத்தே
விண்டு சொன்னானென்று
உந்தீபற
321 இறவாம லிருக்கலாமென்று உந்தீபற. 35
தாய்எனில் தந்தைமொழி
தமிழ் என்று
சேய்க்கு அறைந்தானென்று
உந்தீபற
322 தமிழே தெய்வமென்று உந்தீபற. 36
ஆதியும் அந்தமும்
அறியாத் தமிழே
ஜோதியைப் பாடுமென்று
உந்தீபற
323 இறைமொழி என்று உந்தீபற. 37
யார்க்கும் எளியன்
யார்க்கும் வலியன்
யார்க்கும் நண்பனென்று
உந்தீபற
324 அகஇனத்தா னென்று உந்தீபற. 38
சாதியும் மதமும்
சமயமும் பொய்யென்றே
வீதியில் நடந்தானென்று
உந்தீபற
325 விதியை வென்றானென்று உந்தீபற. 39
செத்தா ரெல்லாம்
சிரித்தாங்கு எழும்வரை
நித்திரை செய்வாரென்று
உந்தீபற
326 புதைக்க வேண்டுமென்று உந்தீபற. 40
மகா மந்திரம் மாண்புடன்
நவின்றதை
அகார உகாரமென்று
உந்தீபற
327 ஆடாத மனமென்று உந்தீபற. 41
எத்தனைக் கோடி எண்ணிறைந்த
சித்தர்களும்
சித்திவளாகம் வருகின்றாறென்று
உந்தீபற
328 வந்தும் காணாரென்று உந்தீபற. 42
இரக்கமே உருவாகி
இல்லரத்தார்க்கு குழந்தை
வரம் அருள்வானென்று
உந்தீபற
329 சித்திவளாகம் தருமென்று உந்தீபற. 43
ஈடில்லா செல்வமும்
உலகியல் புகழும்
கோடிபங்கு கொடுப்பானென்று
உந்தீபற
330 சித்திவளாகம் தருமென்று உந்தீபற. 44
கோதில்லா மனமும்
குறையில்லா வாழ்வும்
ஜோதியன் தருவானென்று
உந்தீபற
331 சித்திவளாகம் தருமென்று உந்தீபற. 45
புண்படா உடம்பும்
புலைபடா உணவும்
அன்பன் தருவானென்று
உந்தீபற
332 சித்திவளாகம் தருமென்று உந்தீபற. 46
இன்பமே எந்நாளும்
அகஇனத்தார் காண
தன்னையே தருவானென்று
உந்தீபற
333 சித்திவளாகம் தருமென்று உந்தீபற. 47
எல்லாம் விட்டார்க்கு
ஏதும் வேண்டாதார்க்கு
எல்லாம் வழங்குவானென்று
உந்தீபற
334 எல்லாம் செயல்கூடுமென்று உந்தீபற. 48
மதங் கடந்தார்க்கு
மாயை கடந்தார்க்கு
பதம்பரம் வருமென்று
உந்தீபற
335 படந் தெரியுமென்று உந்தீபற. 49
தனிப்பெருங் கருணை
தைப்பூச நாளில்
இனிதாய் அருளுமென்று
உந்தீபற
336 தைப்பூசம் காண்கவென்று உந்தீபற. 50
திருவறை தரிசனம்
தருமொரு பெருங்குணம்
அருவ தரிசனமென்று
உந்தீபற
337 உருவம் மறையுமென்று உந்தீபற. 51
திரு மருதூரில்
திருஞான ஒளியாய்
வருவிக்க உற்றானென்று உந்தீபற
338 உலகம் மகழ்ந்ததென்று உந்தீபற 52
தண்ணீர் விட்டு
தீபம் எரித்தானந்த
கண்ணிர் சொரிந்தானென்று
உந்தீபற
339 சந்நிதியின் முன்னேஎன்று உந்தீபற. 53
கவைஎடுத்து நிலத்தைக்
கிளர வந்ததுதீஞ்
சுவை நீரோடைஎன்று
உந்தீபற
340 தாகம் தீர்ந்ததென்று உந்தீபற. 54
வினை யோட விதியோட
தொழுக
அனையா தீபமென்று
உந்தீபற
341 எல்லாமுடையா னென்று உந்தீபற. 55
சாதலும் பிறத்தலும்
சடுதியில் நீங்கநின்
பாதக்குறடை ஏற்றுமென்று
உந்தீபற
342 ஞானதேக பாதமென்று உந்தீபற. 56
உனை மகிழ்விக்க
உணவு கொடுக்கும்
அனையா அடுப்பென்று
உந்தீபற
343 அன்ன தானமென்று உந்தீபற. 57
தூக்கம் தொலைந்து
துக்கம் கலைய
ஏக்கமாகி சுழன்றே
உந்தீபற
344 வெள்ளாடை வேந்தனுக் குந்தீபற. 58
காம மகற்றி காதல்
புரிய
சாம கீதம்பாடி உந்தீபற
345 முக்காடு மேனியனுக் குந்தீபற. 59
புலை யகற்றி புண்ணியன்
ஆக
அலைந் தலைந்து உந்தீபற
346 உத்தம புத்திரனுக் குந்தீபற. 60
சிறுநெறி செல்லா
சீர்பெற் றோங்க
மறுபடி எழுந்து
உந்தீபற
347 சுத்த தேகனுக் குந்தீபற. 61
சுத்த சன்மார்க்கம்
சுகநிலை பெறவே
வித்தை காட்டி உந்தீபற
348 பிரணவ தேகனுக் குந்தீபற. 62
தயை ஒன்றே தாயினும்
ஊட்டும்
கையை விடாது உந்தீபற
349 ஞான தேகனுக் குந்தீபற. 63
மற்று அறிவோமென
மயங்காது இன்றே
சற்று மாடாது உந்தீபற
350 அருட்பெருஞ் ஜோதிக் குந்தீபற. 64
பசிப்பிணிப் போக்கி
பரதேசியும் மகிழ
ருசியாய் அன்னமிட்டு
உந்தீபற
351 தருமச் சாலைக் குந்தீபற. 65
எல்லா உயிரும் இன்புற்று
வாழ
வல்லானைத் தொழுது
உந்தீபற
352 தனிப்பெருங் கருணைக் குந்தீபற. 66
திருக்குறள் சாகாக்
கலைஉள்ள நூலென
அருமைப் புகன்றானுக்கு
உந்தீபற
353 திருவள்ளு வனுக்கு உந்தீபற. 67
திருவருட்பா தொகுத்து
திருமுறை வகுத்த
திருவாளர் களுக்கு
உந்தீபற
354 தொழுவூர் வேலாயுதனுக்கு உந்தீபற. 68
இரக்கமே புலமான
ஏழாந்திரு முறை
பிரபந்தத் திரட்டுக்கு
உந்தீபற
355 காரணப்பட்டு கந்தாசாமிக்கு உந்தீபற. 69
தன்மனம் போல் தன்னை
நாடிவந்த
சன்மார்க்க குருவிற்கு
உந்தீபற
356 கல்பட்டு இராமலிங்கத்திற்கு உந்தீபற. 70
வந்து தித்த வள்ளலாரை
பெற்றெடுத்த
தந்தை இராமையாவிற்கு
உந்தீபற
357 தாய் சின்னம்மாளுக்கு உந்தீபற. 71
இராம லிங்கரின்
இல்லத் தரசி
சராசரப் பத்தினிக்கு
உந்தீபற
358 தனம் மாளுக்கு உந்தீபற. 72
ஜீவ காருண்ய சீலன்
பெருந்
தவப் புதல்வனுக்கு
உந்தீபற
359 ஆன்ம நேயனுக்கு உந்தீபற. 73
இறைவனுக்கு விண்ணப்பம்
எழுதிய என்னப்பன்
அறை காப்பிட்டானுக்கு
உந்தீபற
360 மீண்டும் வருவானென்று உந்தீபற. 74
அருட்பெருஞ் ஜோதி
உலகெலாம் சூழ்ந்து
இருளகற் றியதென்று
உந்தீபற
361 என்னை ஆளுமென்று உந்தீபற. 75
மனக் குரங்கை மிரட்டி
அதட்டஅது
இனக்குன்றி லேறியது
உந்தீபற
362 அது அகஇனமென்று உந்தீபற. 76
மனப்பேயை ஓட்ட மன்னவன்
வந்தால்
கணப்பொழுது போதுமென்று
உந்தீபற
363 மறவாம லிருப்பானென்று உந்தீபற. 77
அடங்கா மனதை அடக்கு
மிடமது
வடலூர் பெருவெளியென்று
உந்தீபற
364 அருட்ஜோதி தருவானென்று உந்தீபற. 78
நித்தம் நினைக்கும்
நரக மனதை
சித்த னாக்குமென்று
உந்தீபற
365 நினைப் பறுக்குமென்று உந்தீபற. 79
காமக் கயவன் கல்லுளி
மங்கன்
தீமிதித் தோடுவானென்று
உந்தீபற
366 தீபத்தை நினைஎன்று உந்தீபற. 80
காதலும் காமமும்
கானலும் நீரும்போல
சாதலும் பிறத்தலென்று
உந்திபற
367 சாகா திருக்கலாமென்று உந்தீபற. 81
புடைப்புறும் காமம்
புண்ணியனுக் குண்டோ
விடை பெற்றதென்று
உந்தீபற
368 கடை விரிப்பானென்று உந்தீபற. 82
கண்ணிலே காமக் கதிர்வீச்சு
பாயும்
எண்ணந் தொலைந்ததென்று
உந்தீபற
369 கண்ணிலே கலந்தானென்று உந்தீபற. 83
ஆணவம் எனுமொரு ஆண்அவன்
என்ற
சாணம் நாறுதென்று
உந்தீபற
370 என்னை மறந்தேனென்று உந்தீபற. 84
மடப்பயல் நானென்ற
மாப்பாவிப் பயல்
சடப் பொருளானதென்று
உந்தீபற
371 அடக்கம் கொண்டேனென்று உந்தீபற. 85
ஆசை எனும்பிசாசு
அருட் பிரகாசரின்
ஓசைகேட்டு ஓடுதென்று
உந்தீபற
372 தஞ்ச மடைந்தேனென்று உந்தீபற. 86
பொய் யென்னும் போக்கிரிப்
பயலை
அய்யன் விரட்டுவானென்று
உந்தீபற
373 மெய்ய னானேன்று உந்தீபற. 87
களவு என்னும் காட்டேறியை
விரட்ட
உளவு சொல்வானென்று
உந்தீபற
374 உண்மை யானேன்று உந்தீபற. 88
மதுவான சாத்தான்
மதிக்கெட் டோட
எதுகொண் டடிப்பேனென்று
உந்தீபற
375 அது விளக்குமாறென்று உந்தீபற. 89
கொடுங் கூற்றெனும்
கொலைப் பயலை
விடுங் குறிப்பறிந்து
உந்தீபற
376 கருணை பெற்றுய்ய உந்தீபற. 90
புலை உண்ணுமோர்
புன்செயலை விடும்
நிலை யுணர்ந்து
உந்தீபற
377 உயிரெலாம் தொழுமென்று உந்தீபற. 91
வன்புலால் உண்ணும்
வழக்கை விடுத்து
அன்பர்க ளாகுகவென்று
உந்தீபற
378 அன்பே உயிரென்று உந்தீபற. 92
பிணந் திண்ணுமோர்
பாவச்செயலை அன்பு
குணத்தால் விடுகவென்று
உந்தீபற
379 மனித னாகுகவென்று உந்தீபற. 93
ஆவிப்போக அடித்து
உண்டால் நரகில்
பாவியாய் போவானென்று
உந்தீபற
380 விலங்காய் பிறப்பானென்று உந்தீபற. 94
உடல்களை வெட்டி
உண்பாருக்கு அருள்தர
கடவுளும் வாராரென்று
உந்தீபற
381 இருகால் மிருகமென்று உந்தீபற. 95
திருக்குறல் குரலும்
திருவருட்பா அருளும்
ஒருநிலை கூறுமென்று
உந்தீபற
382 அது புலைவிடுத்தலென்று உந்தீபற. 96
தயவுறக் கூறும்
தமிழைத் தமிழன்
மயக்கற பற்றுகவென்று
உந்தீபற
383 தமிழென்றால் அன்பென்று உந்தீபற. 97
தாவர உணவே தயைபெறும்
உணவு
பாவங்கள் வேண்டாமென்று
உந்தீபற
384 இயற்கை இன்பமென்று உந்தீபற. 98
பழங்கள் கீரைகள்
பலவகை விதைகள்
உழவு உணவென்று உந்தீபற
385 உழைத்து உண்கவென்று உந்தீபற. 99
சுத்த சைவம் சுத்த சிவம்
சுத்த சன்மார்க்கமென்று உந்தீபற
386 வாழ்க வாழ்கவென்று உந்தீபற. 100
28-01-2015
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqdXVkUkd3SzB0UVU/view?usp=sharing
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.