Friday, February 13, 2015

பிரபந்தத்திரட்டு


பிரபந்தத்திரட்டு

வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு சமரசபஜனை ச.மு.கந்தசாமி ஐயா அவர்கள் அருளிய சன்மார்க்க நூல் "பிரபந்தத்திரட்டு" 1923-ஆம் ஆண்டு ச.மு.க. அவர்களே வெளியிட்டார். இந்நூல் தற்போது சன்மார்க்க உலகில் கிடைக்கும் பொருட்டு மேலழிஞ்சிப்பட்டு திரு.அ.திருநாவுக்கரசு அவர்கள் பதிப்பில் ச.மு.க. அறக்கட்டளையானது 06-01-2015 அன்று வடலூரில் வெளியிட்டது. பல சன்மார்க்க அன்பர்களின் கைகளில் தற்போது இந்நூல் தவழ்ந்துக்கொண்டிருக்கும்.
வடலூர் வர இயலாத அன்பர்கள் இந்நூலை தங்கள் வீட்டிலிருந்த படியே கீழ்காணும் விவரப்படி பெறலாம். இந்நூல் 850 பக்கங்களைக்கொண்டு உயர்ந்த பைண்டிங் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது. நூலின் விலை ரூ.400/- ஆகும். எனினும் ச.மு.க. அறக்கட்டளையானது ரூ.300/- விலைக்கு அஞ்சல் செலவு உட்பட விரும்பும் அன்பர்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கின்றது. தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலம் தவிர மற்ற மாநிலங்களுக்கு ரூ.350/- க்கு அஞ்சலில் அனுப்பிவைக்கப்படும்.
இந்நூல் தேவைப்படும் அன்பர்கள் கீழ்காணும் வங்கிக்கணக்கில் ரூ.300/- செலுத்தி தங்களது முகவரியினை அடியில் காணும் கைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி SMS அனுப்பவும்.
Account Name: T.M.RAMALINGAM
Account No.: 057401502097
Account No.: ICICI BANK, CHENNAI ARMENIAN STREET BRANCH,
IFSC Code: ICIC0000574
கைப்பேசி எண்: 9445545475
நூல்பற்றின சிறு விளக்கம்:
பிரபந்தத்திரட்டு நூலின் உள்ளீடு: ச.மு.க. அருளியது
1. இராமலிங்க சுவாமிகள் சரித்திரக் குறிப்புகள்.
2.
இராமலிங்க சுவாமிகள் சரித்திரக் கீர்த்தனை.
3.
பாதார்ச்சனைக் கீர்த்தனைகள்.
4.
சிதம்பரம் இராமலிங்க சுவாமிகள் சற்குரு வெண்பா அந்தாதி.
5.
அருட்பிரகாசர் அற்புத அந்தாதி.
6.
சிதம்பரம் இராமலிங்க சுவாமிகள் கிளிக்கண்ணிகள்.
7.
சற்குரு புலம்பற் கண்ணி.
8.
இயற்கையுண்மை ஆனந்தக்கண்ணி.
9.
சன்மத சமரசாதீத சித்விலாச நாமாவளி.
10.
உத்தரஞான சிதம்பர நாமாவளி.
11.
திருவருட்பிரகாச வள்ளலார் நாமாவளி.
12.
வடற்சிற்சபை மாலை.
13.
அருட்பிரகாசர் அற்புதமாலை.
14.
குருநேச வெண்பா.
15.
திருவருட்பிரகாச வள்ளலார் வருகை - நன்னிமித்தம் பராவல்.
16.
கொலை மறுத்தல்.
17.
காரணப்பட்டு ஸ்ரீ சுந்தரவிநாயகர் பாமாலை.
18.
காரணப்பட்டு ஸ்ரீ சுந்தரவிநாயகர் கீர்த்தனை.
19.
காரணப்பட்டு விக்னேசுவரர் நாமாவளி.
20.
ஆளுடைய பிள்ளையார் நாமாவளி.
21.
சுப்பிரமணியக் கடவுள் சோடச வெண்பா.
22.
சாமிமலை சாமிநாதக் கடவுள் தோத்திரம்.
23.
சடகோபர் நாமாவளி.
24.
விபூதிப்பிரசாத மகிமை.
25.
வெறிவிலக்கு.
26.
கற்பிலாப் பெண்டிர்.
27.
கற்புடையப் பெண்டிர்.
பிரபந்தத்திரட்டு நூலின் உள்ளீடு: வள்ளலார் அருளியது
1. ஒழிவிலொடுக்கச் சிறப்புப்பாயிர விருத்தியுரை
2.
தொண்டமண்டல விலக்கணம்
3.
இலக்கணப் பத்திரிகை - (சரித்திரக் குறிப்பில்)
4.
தமிழ்
5.
ஜீவகாருண்ய வொழுக்கம் (2-ம் பிரிவு)
6.
அற்புதக் குறிப்புகள்
மேற்கண்ட 27 தலைப்புகளின் உள்ளீடாக இந்நூல் உள்ளது. இதில் மொத்தம் 3507 பாடல்கள் உள்ளன. அதற்கான பாட்டு முதற்குறிப்பு அகராதியும் புதியதாக பதிப்பாசிரியரால் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு தலைப்பிற்கும் பதிப்பாசிரியரின் சரியான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. எங்கும் கிடைக்காத நீங்கள் இதுவரை பார்த்திராத வள்ளலாரின் பாதரட்சை படம் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளது. இந்நூலில்தான் வள்ளலாரின் சரித்திரக் குறிப்புகள் முதன்முதலில் அவருடைய அணுக்கத்தொண்டரான ச.மு.க. அவர்கள் உரைநடையாகவும் கீர்த்தனையாகவும் எழுதி இவ்வுலகிற்கு வெளியிட்டார். அதன்பிறகே வள்ளலாரின் அற்புதங்கள் மக்களுக்குத் தெரிய வந்ததது என்பது இந்நூலில் சிறப்புகளில் ஒன்று. இவையன்றி வள்ளலார் அருளிய மேற்காணும் உரைநடை பகுதியும் இந்நூலில் உள்ளது. மேற்காணும் வள்ளலாரின் உரைநடைகள் 1923-ஆம் ஆண்டு ச.மு.க. அவர்கள் இந்நூலை வெளியிடும்போது முதன்முதலாக வெளிஉலகிற்கு வெளிவந்தவைகளாகும்.
மேலும் இந்நூலில் உள்ள சிறப்புகளை கீழ்காணும் முகநூல் முகவரியில் தொடர்ந்து நீங்கள் படிக்கலாம். நன்றி.
                 
https://www.facebook.com/profile.php?id=100009115988326
https://www.facebook.com/ramalingamweb  

Monday, February 9, 2015

ஏழாந்திருமுறை ஏன்?


ஏழாந்திருமுறை ஏன்?

ருட்பெருஞ்ஜோதி அடிமை
தி..இராமலிங்கம் - கடலூர்

அன்பர்களுக்கு வந்தனம்!

சைவச்சமயம் தழைக்க, பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்ததாகக் கூறும் சைவ அடியார்கள் பாடி அருளிய பாடல்களையெல்லாம் ஒன்று திரட்டி அவைகளை திருமுறைகளாக கட்டிவைத்தார்கள் சைவப் பெரியோர்கள். இத்திருமுறைகளை தொகுத்தவர்களில் நம்பியாண்டார் நம்பிக்கு பெரும்பங்கு உண்டு. அவர்கள் செய்த அந்த திருமுறை கட்டுகள் மிகவும் வலிமை வாய்ந்ததாக உள்ளதை நாம் இன்றும் பார்க்கின்றோம். சைவ நெறி பரப்ப சைவசமயத்தாருக்கு இந்த சைவத்திருமுறைகள் மிகவும் உதவியாக இருப்பதையும் நாம் காண்கின்றோம். 

சைவத்திருமுறைகள் மொத்தம் பன்னிரண்டு என்பதை அறிவோம். இந்த பன்னிரண்டு திருமுறைகளிலும் மொத்தம் 45 நூல்களும் அதில் 18,280 பாடல்களும் உள்ளன. இத்தனைப் பாடல்களையும் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்ததாகக் கூறப்படும் 27 ஆசிரியர்களால் இயற்றப்பட்டன. இதில் மிக அதிகமாக 4,286 பாடல்களை இயற்றிய பெருமை சேக்கிழாரைச் சேரும். இவரது பாடல்களை பன்னிரண்டாவது திருமுறையாக வகுத்துள்ளனர். அதுபோல் மிகக் குறைந்த பாடலாக ஒரே ஒரு பாடலை இயற்றியவர்கள் இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர். திருவாலவாயுடையார், கல்லாடதேவர் ஆகிய இருவரும் ஒரு பாடல்களை மட்டுமே இயற்றியுள்ளனர். இவர்களது பாடல்கள் பதினோராம் திருமுறைகளில் காணப்படுகின்றது.

இவ்வாறு சைவத்தை போற்றி எழுந்த பாடல்கள் ஒரே ஒரு பாடலானாலும், ஆயிரங்கணக்கான பாடலானாலும் அவைகளை சைவசமயம் புறந்தள்ளாமல் அவைகளை தனது திருமுறைகளுக்குள் அடக்கிக்கொண்டது. காலப்போக்கில் திருமுறை என்றாலே அது சைவத்திருமுறைகளே என்று பேசப்படும் அளவிற்கு மக்களிடம் சென்றடைந்துவிட்டது.

எனவேதான் 19 ஆம் நூற்றாண்டில் சிதம்பரம் இராமலிங்கம் அவர்களால் இயற்றப்பட்ட பாடல்களை திருமுறை என வகுக்கப்பட்டபோது சைவசமயத்தார்களால் எதிர்ப்பு எழுந்து, அது வழக்காடுமன்றம் வரை சென்று திரும்பியது. தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்கள், வள்ளலார் இயற்றிய பாடல்களுக்கு "திருவருட்பா" எனவும் அதனை ஆறு பகுதிகளாகப் பிரித்து அப்பிரிவிற்கு "திருமுறை" எனவும் பெயரிட்டார். எனவே 19 ஆம் நூற்றாண்டிலிருந்து இருவேறுபட்ட திருமுறைகள் மக்களின் பயன்பாட்டிற்கு வந்தன.

வள்ளலார் ஏற்படுத்திய சுத்த சன்மார்க்கத்திற்கு ஆறுதிருமுறைகள் கொண்ட திருவருட்பா ஒன்றே போதுமானது. திருவருட்பாவை மிஞ்சிய சுத்த சன்மார்க்க நூல் தனியே இதுவரை இவ்வுலகில் ஏதுமில்லை. இருப்பினும் சைவ திருமுறைகள் போன்று "சுத்த சன்மார்க்கத் திருமுறைகள்" என்ற ஒன்றை ஏற்படுத்தி, அத்திருமுறைகளுக்குக்கீழ் வள்ளலார் இயற்றிய ஆறுதிருமுறைகள் கொண்ட திருவருட்பாவை முதலில் அமைத்து பார்க்க ச.மு.க. அறக்கட்டளை முனைந்தது. 

சைவ திருமுறைகளுக்கு என 45 நூல்கள் உள்ளன. ஆனால் சுத்த சன்மார்க்கத் திருமுறையாக இதுவரை ஒரே ஒரு நூல்தான் உள்ளது. அது திருவருட்பா என்பதை நாம் அறிவோம். சைவ திருமுறைகள் போன்று சுத்த சன்மார்க்க நூல்கள் இனி இவ்வுலகில் பெருக வேண்டும் என்ற நோக்கத்தில், ஏன் ஏழாம் திருமுறை, எட்டாம் திருமுறை என வகுத்து அதனை சுத்த சன்மார்க்கத் திருமுறைகளில் கட்டக்கூடாது? என திருவருள் உணர்த்த உணர்ந்தோம். சைவத் திருமுறைகளைவிட சுத்த சன்மார்க்கத் திருமுறைகள் எண்ணிக்கையில் அதிகமாகிக்கொண்டே வருமாகில் அதுவே சுத்த சன்மார்க்கம் இவ்வுலகில் வேரூன்றி வளர்வதை இவ்வுலகிற்கு எடுத்துரைப்பதாய் இருக்கும். மேலும் சுத்த சன்மார்க்கம் எளிதில் மக்களிடம் சென்று சேரும் என்ற நோக்கில் ச.மு.. அறக்கட்டளையானது தற்போது காரணப்பட்டு ச.மு.க. அவர்கள் பாடிய 3507 பாடல்கள் கொண்ட "பிரபந்தத்திரட்டு" என்ற 1923-ஆம் ஆண்டு வெளியான நூலை சுத்த சன்மார்க்கத் திருமுறைகளில் ஏழாம் திருமுறை என வகுத்து அதனை சுத்த சன்மார்க்கத் திருமுறைகளில் கட்டியுள்ளது. இந்நூலை இயற்றும்படி ச.மு.க. அவர்களுக்கு வள்ளற்பிரானே கட்டளையிட்டு அதனை அவருக்கு ஒரு உத்தியோகமாக கொடுத்து அருளினார். எனவே இந்நூலை "ஏழாம் திருமுறை" என வகுத்துள்ளோம்.

எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதியின் பேரருளால்,  சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் தோன்றி 150-ம் ஆண்டான 2015-ஆம் ஆண்டில் ஏழாம் திருமுறையாகப் "பிரபந்தத்திரட்டு" என்னும் நூல் இவ்வுலகில் வெளிப்பட்டுள்ளது. 2015- - ஆம் ஆண்டிலிருந்து சுத்த சன்மார்க்கத் திருமுறைகளில் பிரபந்தத்திரட்டு இரண்டாவது நூலாகவும் ஏழாவது திருமுறையாகவும் இணைந்துள்ளது. திருவருட்பாவில் உள்ள மொத்தப் பாடல்கள் (.மு..பதிப்பு) 6725 மற்றும் பிரபந்தத்திரட்டில் உள்ள மொத்தப் பாடல்கள் 3507 ஆக மொத்தம் 10232 பாடல்கள் சுத்த சன்மார்க்க திருமுறைகளில் தற்போது உள்ளது. திருவருட்பாவில் ஏழாம் திருமுறை என்று ஒருசிலர் பிரபந்தத்திரட்டைக் கண்ணுற்று குழம்பியுள்ளனர். திருவருட்பா ஆறு திருமுறைகளுடன் முடிவுற்றது. திருவருட்பாவும் பிரபந்தத்திரட்டும் வெவ்வேறு நூல், வெவ்வேறு ஆசிரியர்களால் இயற்றப்பட்டது. இரண்டும் ஒன்றல்ல என்பதனை தெளியப்படுத்திக்கொள்ள வேண்டும்.   

அடுத்து வள்ளற்பிரானின் முதல் மாணவர் இயற்றிய சிலநூறு பாடல்களை கண்டெடுத்து அதனை எட்டாம் திருமுறை என வகுக்க ச.மு.க. அறக்கட்டளை முனைந்துள்ளது. அதற்குமேல் இன்னும் சில சன்மார்க்க அருளாளர்கள் சன்மார்க்கப் பாக்களை பாடியுள்ளார்கள். அதனையும் அவர்களோ அல்லது அவர்களுக்கு உரியவர்கள் கேட்டுக்கொண்டாலோ அல்லது நாங்களாகவே சென்று அந்நூல்களையெல்லாம் திருமுறைகளாக தொகுக்க உள்ளோம். அல்லது அவர்களாகவே தொகுத்து வெளியிட்டாலும் நல்லது. இதனால் சுத்த சன்மார்க்கத் திருமுறைகள் பெருகுவது மட்டுமின்றி, தொகுக்கப்படும் நூல்கள் சன்மார்க்க உலகில் பாதுகாப்பாகவும் இருக்கும். சுத்த சன்மார்க்கத் திருமுறைகளை வளர்ப்பதின்மூலம் தமிழ் மொழி வளர்ச்சிக்கும், சுத்த சன்மார்க்கம் எந்த அளவிற்கு உதவியுள்ளது என்பதனையும் நாம் இவ்வுலகிற்கு தெரியப்படுத்திவிட இதுஒரு மிகச்சிறந்த வழியாகும்.

சாகாதவனே சன்மார்க்கி என்று வள்ளற்பெருமான் கூறுவார். எனவே இராமலிங்கரைப் போன்று சாகாத ஒருவரால் அருளப்பட்ட திருவருட்பா ஒன்றே திருமுறை என வழங்கப்பட வேண்டும். எனவே திருவருட்பா ஆறு திருமுறைகளே சன்மார்க்கத்தை வளர்க்க மிகப்போதுமானது. இதற்கு இணையாக இறந்தவர்களால் இயற்றப்பட்ட வேறு நூல்கள் சுத்த சன்மார்க்கத் திருமுறைகளாக வரக்கூடாது. திருவருட்பாவுடன் ஒப்பிடும்போது மற்ற சன்மார்க்கிகளால் இயற்றப்பட்ட நூல்கள் எல்லாம் தூசுக்குச் சமானம். எனினும் அத்தூசுகள் கூட அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையும், வள்ளலாரையும், திருவருட்பாவையும், வடலூரையும், தருமச்சாலையையும், சித்திவளாகத்தையும், மருதூரையும், தீஞ்சுவை நீரோடையையும், கருங்குழியையும், சன்மார்க்கச் சங்கத்தையும், சன்மார்க்கச் சாதுக்களையும் போற்றியும் புகழ்ந்தும் பாடுமானால் அப்பாடல்களில் உண்மை இருக்கத்தானே செய்யும். அப்பாடலை இயற்றியவர் இறந்தாலும் இயற்றிய பாடலில் உண்மை இருக்கின்றதல்லவா? மற்ற சமய மத பாடல்களுடன் இந்த சுத்த சன்மார்க்கப் பாடல்களை ஒப்பிட்டால், நாம் சுத்த சன்மார்க்கப் பாடல்கள் வான்போன்றது என்பதை உணர்ந்து கொண்டாட வேண்டாமா? எனவேதான் திருவருட்பாவின் தகுதியினை மற்ற சன்மார்க்க நூல்கள் பெறாவிட்டாலும் அதன் உண்மை கருத்திற்கு முக்கியம் கொடுத்து அப்பாடல்கள் கொண்ட நூல்களை திருமுறைகளாக தொகுக்க வேண்டும் என ச.மு.. அறக்கட்டளை முடிவு செய்தது. 


சுத்த சன்மார்க்கம் தோன்றி இன்னும் இரண்டு நூற்றாண்டுகள் கூட இன்னும் முடியவில்லை. ஆனால் சுத்த சன்மார்க்கத்தை போற்றி எழுந்த தொழுவூர் வேலாயுதம் முதலியார் பாடல்கள் எத்தனை? திண்டுக்கல் சரவணாநந்த சுவாமிகள் எழுதிய பாடல்கள் எத்தனை? இன்னும் நமக்குத் தெரியாத பல அன்பர்கள் எழுதிய பாடல்கள் எத்தனை? போன்ற விபரங்கள் சன்மார்க்கிளுக்கு தெரியவில்லை. எனவே இவைகளையெல்லாம் சுத்த சன்மார்க்கத் திருமுறைகள் என வகுத்து, நூல் வெளியீடு செய்துவிட்டால் இவைகள் என்றென்றும் அழியாது நிலைத்து நின்று சுத்த சன்மார்க்கத்தை வளர்க்க உதவும் என்பதே ச.மு.க.அறக்கட்டளையின் அவாவாக உள்ளது.

எனவே, சன்மார்க்க அன்பர்கள் தங்களுக்கு ஏற்பட்ட இறை அனுபவத்தையும், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையும், வள்ளலாரையும் போற்றி (சமய மதக் கடவுள்களை தவிர்த்திருக்க வேண்டும்) யார் ஒருவர் ஆயிரம் பாக்களுக்கு மேலாக (தமிழ் இலக்கண மரபு மாறாத பாக்கள்) பாடியுள்ளார்களோ அவர்களது பாடல்களை சுத்த சன்மார்க்க திருமுறைகளில் சேர்த்து திருமுறைகளின் எண்ணிக்கையினை உயர்த்த வேண்டும் என்பது ச.மு.க. அறக்கட்டளையின் நோக்கமாக உள்ளது.      

சுத்த சன்மார்க்கப் பாடல்களை இயற்றிய அன்பர்கள் யாரேனும் இருந்தால் அவர்களை சன்மார்க்கிகள் இனங்கண்டு எங்களுக்கு தெரியப்படுத்தினால் அப்பாடல்களையும் திருமுறைகளின் தொகுக்க நாங்கள் தயாராக உள்ளோம்.

இதுபற்றி தங்களது மேலான கருத்துகள் எதுவாக இருப்பினும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். நன்றி.

          அருட்பெருஞ்ஜோதி              அருட்பெருஞ்ஜோதி

          தனிப்பெருங்கருணை             அருட்பெருஞ்ஜோதி

https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqODhWWGhTaE9RalE/view?usp=sharing

பெருவாழ்வு



அருட்பெருஞ்ஜோதி அடிமை
தி.ம.இராமலிங்கம் இயற்றிய

பெருவாழ்வு

(எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

அண்டமெலாம் தேடினும் அரிதான உலகில்
  அரிதரிதான மானிடப் பிறவி பெற்றீரே
எண்ணி லடங்கா நச்சத்திரத்தில் காட்சிக்கு
  ஒளி கொடுக்கும் சூரியனை பெற்றீரே
கண்ணி ரண்டும் குளிரவே இரவில்
  காணும் சந்திரனை இன்புறப் பெற்றீரே
தண்ணீர் சூழும் உலகிடை மனிதம்வாழ
 தளங்களுடன் காற்றையும் பெறும்பேறு பெற்றீரே.    1 

பெற்றதெலாம் இயற்கை இன்பமே உயிர்
  பிறப்பெடுத்து கண்ட தெல்லாம் இயற்கை
சுற்றமே என்று மகிழ்ந்து மகிழ்ந்து
  சிரித்து சிரித்து உடன் கண்ணீர்
உற்று மெய்சிலிர்த்து சிலிர்த்து இயற்கை
  உண்மையை வியந்து வியந் தோர்
குற்றமு மின்றி வாழலாம் வாரீர்
  கருணை பெரும்பதியை கண்டு நீரே.              2

நீரே என்னுறவன் நானுன் அடியனென்றே
  நவில் கின்றேன் உலகீர் வாரும்
சீரே பெற்று பெருவாழ்வு வாழலாம்
  சுத்த சன்மார்க்க சுகநிலை யடை
வீரே நரைதிரை மூப்பும் காணா
  வாழ்வை எய்திடலாம் ஞான சபைக்கு
நேரே நின்று கேளாய் சகத்தீரே
  நினைத்தது நடக்கும் நிமிட நேரத்திலே.       3

நேரமிது காலமிது அருட்ஜோதி ஆட்சியிது
  நாடி வருவீரேல் நாயக னாகலாம்
தூரமென்று நினையாதீர் தட்டி எழுப்புகின்றேன்
  தூங்காதீர் தொலையாதீர் காலமுள்ள போதே
சாரலாம் சன்மார்க்க சங்கத்தை சார்ந்தே
  சாதனைப் புரிந்து இறை சோதனையெனும்
பாரமெலாம் தவிர்த்தே பரமனா கலாம்
  பாரிது பாரென அடிமுடி ஆகலாமே.       4

ஆகட்டும் எல்லாம் செயல் கூடட்டும்
  அருட்பெருஞ் ஜோதி நின் றோங்கட்டும்
போகட்டும் கொலை புலை கூட்டமெலாம்
  புறமேவட்டும் சாதிமத இன நேசமெலாம்
சாகட்டும் சகத்தீரே இங்கு ஆன்மநேயமே
  சனித்து வாழட்டும் அருட்பா ஆவியிலே
வேகட்டும் மனம் வெந்துவெந்து தயவை
  வாங்கட்டும் வந்து வந்து தரிசிக்கலாமே.    5

தரிசனம் அறிவாயோ சத்திய ஞானசபைத்
  தலைவனின் வருகையை உணர்வாயோ அவன்
புரிகின்ற சித்துக்களைப் பெறுவாயோ உலகீர்
  பிறந்த நாள்முதல் ஏது செய்தீர்ஐயோ
நரிபோல் வாழ்ந்தீர் நாய்போல் திரிந்தீர்
  நயவஞ்சக மதங்களை நாடி ஒழிந்தீர்
பரிணாமம் ஒன்றும் காணீர் வாருமிங்கே
  பெறுதற் கரிய பெருவாழ்வைப் பெறலாமே.   6

பெற்ற தெல்லாம் பேயே நீதினம்
  பேசிய தெல்லாம் பாழே உறவு
உற்ற தெல்லாம் ஊழே இறைபக்தி
  எல்லாம் கதையே அந்தோ நீர்
சற்றும் அறிந்திலையே எந்தை அருட்
  சோதி அனுபவமும் இறை யருள்
சுற்றமும் கலந்தருளும் மிடத்திற்கு வாரீர்
  சும்மா இருக்கும் சுகமதை அடைவீரே.        7

அடையும் நிலை தெரியீர் அடைந்தவரையும்
  அறியீர் உலகில் சமயக் குழிஒன்றையே
உடையீர் தயவு என்னும் சொல்லையும்
  எண்ணீர் பகட்டுக்கு பால்ஊற்றி பூவைத்து
உடையுடுத்தி தேரிழிப்பீர் இன்னும் சிறுபிள்ளை
  ஆட்ட மெல்லாம் ஆடி பக்தர்
படையெனத் திரண்டு என்கண்டீர் வாருமிங்கே
  பெருவாழ்வு ஒன்றுண்டு எனக் காணீரோ.   8

காணுமினோ தைப்பூச ஜோதியினை நீயும்
  கண்டால் கசிந்துருகி எனைப்போல் சுகம்
பேணுமினோ சன்மார்க்க சித்தெல்லாம் நீயும்
  பெற்று பெருவாழ்வு வாழ்ந்திடலாம் நான்
வீணுக்கு சொல்லிடேன் சகத்தீரே சத்திய
  வான்கலந்த இராமலிங் கரேவந்திங்கு எண்
சாணுடலி லிருந்து மீண்டும் சாற்றுகின்றார்
  சாகாமலி ருக்கலாம் வம்மின் உலகீரே.   9 

உலகெலாம் தேடினும் சுத்த சன்மார்க்கரை
  அறிதல் அரிதே தமிழனே கண்டான்
நலமெலாம் உரைக்கும் நாயக னவன்
  நன்மார்க்கம் தமிழனே கண்டான் நற்
குலமெலாம் ஓங்கும் பெருவாழ்வு தமிழனே
  கண்டான் ஆன்மநேயம் தமிழனே மும்
மலமறுக்கும் மருந்தினைக் கண்டு தமிழால்
  மறைபாடி இறைகண்டு இறை யானானே. 10

ஆனதும் ஆவதும் அவன் அருளாலே
  ஆண்டதும் ஆள்வதும் அவன் அடியாலே
தானமும் தவமும் அவன் வடலூராலே
  தேகமும் போகமும் அவன் செயலாலே
மானமும் ஈனமும் அவன் தயவாலே
  மாள்வதும் வாழ்வதும் அவன் நினைவாலே
ஊனம் நீங்கியுரைக் கின்றேன் உலகீர்
  உண்மை இங்கிருக்க எங்கெங்கோ செல்கின்றீரே. 11

செல்லும் இடமறியாது செல்கின்றீர் இன்னும்
  செத்துப் பிறக்கவே திரிகின்றீர் நான்
சொல்லும் பொருளை அறிந்திலீர் பித்துலகர்
  செய்யும் மாயமத சடங்கைப் பிடித்திட்டீர்
வெல்லும் மார்க்கம் அறிவித்தும் எனை
  வெட்டிப் பயல் என நினைத்திட்டீர்
கல்லும் கரைய உரைத்ததெல்லாம் நின்
  கருத்திற்கு புகநான் என் செய்வேனே.      12

செய்யும் குற்றங்கள் தெரிந்தே செய்கின்றீர்
  சகத்தீர் மதிக்க வாழ்கின்றேன் என்கின்றீர்
பெய்யும் மழையும் என்னால் என்கின்றீர்
  பொய்த்த வாழ்வை புகழாய் பேசுகின்றீர்
நெய்யும் ஊனும் சுவைக்க உண்கின்றீர்
  நலிந்தோரைப் பார்த்து எட்டி நடக்கின்றீர்
பொய்யும் புரட்டுமேவ வெள்ளாடை உடுக்கின்றீர்
  பாரிலே சிறக்க வாழ்கின்றீர் பித்துலகீரே.   13 

பித்தம் தெளிய பிறப்பெடுத்தேன் நின்
  பக்கம்பேச பேச்செடுத் தேனிறைவா உன்
சித்தம் எதுவோ அறிந்திலேன் உலகில்
  சிறக்கும் மனிதனும் புலையன் என்றால்
நித்தம் அழுகின்றேன் ஏதும் செய்தலறியேன்
  நீடுலகில் நீடுவாழ நீஎன்னையும் நீட்டினாய்
சத்த மில்லாமல் சாகவோ சகத்தில்
 சீறும் மனிதரைக் கண்டுளம் நடுங்கினேனே.   14

நடுங்கும் வயது வாராது என்றும்
  நிலைக்கும் இளமை துடிப்பு போகாது
எடுத்த உடம்பு வீழாது எந்நோயும்
  எனக்கு வாராது உலகீர் எனைப்போல்
அடுத்து நீங்கள் வாழவே வாரும்வாரும்
  ஆசை யுண்டேல் வடலூர் வாரும்
கொடுத்தக் கரங்கள் கொடுக்கும் எந்தாய்
  கருணைக் கண்கள் தரும் தரிசனமே.       15
 
தரிசனம் தருவாயோ தலைவா தரிசனம்
  தருவாயோ உலகிடை குற்றம் புரிந்த
அரிசனமான எனக்கு தரிசனம் தருவாயோ
  அன்பென் பதையறியா அற்பனுக்கு நீ
கரிசனம் காட்டாயோ என்னுடல் பொருளாவி
  கனிந்தே கொடுத்தும் என்னுள் நீ
சரிபாதி யாகி முழுமை யாகோயோஅப்பா
  சோதிக்கா மலெனை ஜோதியாய் ஏற்றருளே.  16

ஏற்றமாகி இறைக் கின்றேன் என்னுளத்தே
  இரக்கத்தால் இறங்கி ஏறிவந்த மன
மாற்றத்தால் கண்ணீராய் ஊற்றுகின்றேன் அந்தோ
  மடப்பயலை இன்னும் மன்னிக்காது உன்
சீற்றத்தால் சிதைப்பா யெனில் ஏதுபுரிவேன்
  சிதம்பரம் இராமலிங்க அபய மென்றே
கூற்றதை தடுக்கின்றேன் காலத்தைக் கடக்கின்றேன்
  கூடுசிதைக்கா தென்னுள் கூடி விளையாடே.   17   

ஆடுகின்ற உலகில் ஆடுகின்ற உலகீர்
  ஆட்டம் முடிந்தால் ஓட்ட மெங்கே
வீடுதாண்டி வீதியில் வைத்து சுற்றி
  வந்து மாலையிட்டு தூக்குவாரே உம்மை
காடுசென்று குழிதோண்டி புதைப்பாரே இந்தக்
  கருமம் தேவையோ வம்மின் உலகீர்
கூடுவிட்டு போகும்முன் சன்மார்க்கச் சங்கம்
  காக்கும் உன்னை நித்தியமாய் வாழலாமே.      18

வாழும்நிலை யறிந்தேன் வாடும்நிலை போக்கி
  வடலூர் வந்து வானவனைக் கண்டுதிரை
ஏழும் விலக அருட்பெருஞ் ஜோதிகண்டேன்
  இதைவிட இவ்வுலகில் இறைகாட்சி இல்லை
தாழும் குணமும் தன்னைக் காட்டாநெறியும்
  தானே அமையும் இடமன்றோ வாரும்
வீழும் உலகீரே பணிந்து பணிந்தழைக்கின்றேன்
  வாடிய பயிரும் தழைக்கக் காண்பீரே.        19

கண்டதும் கேட்டதும் சொன்னதும் முகர்ந்ததும்
  கல்வியெனக் கற்றது யாவும் நன்றோ
விண்டதால் கூறுகின்றேன் உலகீர் நீர்இது
  வரைஏதும் அறிந்திலீர் ஒருமை அறிகிலீர்
பண்டையப் புராண இதிகாசங்களைப் பேசியே
  புண்பட வாழ்ந்தீர் புண்படா உடம்பைஇவ்
வண்டம் கண்டதோ காணவாரீர் உலகீரே
  அகஇனமாகி வாரீர் வடலூர் பெருவெளிக்கே.    20

வெளிகள் எல்லாம் வெட்ட வெளிச்சமாகியே
  வடலூர் பெருவெளியில் காணலாம் வாரீர்
தெளிந்த நீரோடையில் நிலவின் பிம்பம்போல்
  தனித் தலைமை பதியைப் பாரீர்
ஒளிஒன்றே ஏகமாகி இயங்கும் அற்புத
  அருளை உணர்ந்து அதனுடன் சேரீர்
களித்து இன்புற இதைவிட பெருவெளி
  கண்டால் சற்றே சொல்லும் செகத்தீரே.     21 

செகத்தில் உனையன்றி யாரையும் அறியேன்
  சத்தியன் உனையன்றி யாரையும் பாடேன்
அகத்தில் உனைசுற்றிய சுற்று இப்பூமியும்
  அறியாதே இறைவா இறைவா என்றுன்
முகத்தைப் பார்த்து அழைக்கின்றேன் எந்தாய்
  முத்தியும் சித்தியும் வேண்டேன் உந்தன்
நகத்தின் கடையுறு துகளாயிருக்க வேண்டுவனே.    22

ேண்டு மென்கின்ற ஆசை வேண்டுமுனை
  வேண்டா தவர்க்கும் தருதல் வேண்டும்
காண்பவர்க்குன் திருமேனிக் காட்சி வேண்டுமுனை
  காணாதவர்க்கும் உன்னரு ளாட்சி வேண்டும்
தீண்டுகின்றார்க்கு தீங்கில்லா வாழ்வு வேண்டுமுனை
  தீண்டாதவர்க் குமுன் நலம் வேண்டும்
ஆணுடன் பெண்ணும் சன்மார்க்கியாக வேண்டுமுனை
  அலி வேண்டினும் சாகாதிருக்க அருளகவே.   23

அருள்மழை எங்கும் பொழிய என்ஊனின்
  உள்ளத் திருந்து உலாவரும் வான்மேகமே
நருமணம் எங்கும் பரவ என்அறிவில்
  நின்று விளங்கும் வள்ளலே உயரறிவே
திருமணம் புரிந்து என்னைப் புணர்ந்த
  திருவாளா மணவாளா உன்னை எனக்கு
குருவாய் கொடுத்த அருட்பெருஞ் ஜோதியை
  கண்என்பேன் கதிரென்பேன் ஏகன் என்பேனே.    24

என்னென்பேன் ஏதென்பேன் உலகீர் நீர்
  இதுவரை அறியாத அருட் ஜோதியை
உன்னோடு இருப்பான் உயிரோடு உறைவான்
  உள்ளம் அறியாது மறைவான் உணர்ந்தால்
புன்படும் உடம்பில் புண்ணியன் இரண்டற
  புணர்வான் அத்துவித மாகலாம் வம்மின்
இன்பம் மிகப்பெறுவீர் காணாததைக் காண்பீர்
  இறந்தவர் எழுவீர் எழுந்தவர் இறவீரே.     25 

இறந்து இறந்து பிறந்தும் இன்னும்
  இரக்கம் இல்லை வன்மன உலகீர்
திறந்துக் காட்டியும் மதப்பேயை விட்டு
  துறக்க மறுக்கின்றீர் கற்பனை மேவி
சிறக்கும் சமயச் சடங்குகளில் சிக்கினீர்
  சாதீய பழக்கங்களில் கண்மூடி உண்மை
மறக்கின்றீர் உயிர் இரக்கமதை விட்டு
  மண்ணில் ஏதுபுரிய பிறந்தீர் உலகீரே.      26

உலகில் தூங்கிஎழ மறந்தவரை ஐயோ
  ஆவிப்போக துடிக்கச் சுடுகின்றீர் தேகமதை
பலவந்தம் செய்தே சாம்பலாக் குகின்றீர்
  பிறந்துவர பத்து மாதம் இறந்து
கலக்க ஒருமணித் துளியோ சிந்திப்பீர்நீரே
  கொலை செய்யாமல் தேகமதை குழியில்
மலமற புதைப்பீர் செத்தவர் சிரித்தெழுந்து
  முன்வரும் காலமும் வரும் நண்பரே.    27

ண்பர்களே நலம்சார் அன்பர்களே உண்மை
  நவில் கின்றேன் நானே என்
எண்ண மெல்லாம் நிறைந்தவர் அருளாலே
  ஆண்டவர் வரும் தருணம் இதுவே
கண்ணாறக் காணலாம் சித்தெல்லாம் பெறலாம்
  களிப்புறலாம் நித்திய னாகலாம் நற்
பண்புகளுடன் வடலூரை நினைந்து வணங்கி
  பாருங்கள் பாருக்குள்ளே சத்தியன் ஆவீரே.            28

ஆவதும் அழிவதும் நீங்கி இறைமேனி
  ஆகலாம் எந்தை ஞானசபை நாதனை
ஈவதும் பணிவதுமாய் இருக்கக் கூடுமே
  இறையொளி இறங்கி வாருமே வடலூர்
போவதும் வருவதுமாய் தானிருக்க வந்தால்
  போகாமல் என்றும் பற்றுவான் அவன்
சேவடியை தொழுது ஏற்றுவீரே என்றும்
  சாகாநிலை பெற்று நீடு வாழ்வீரே.     29

வாழும் வகைசொன்ன வள்ளல் வாழ்க
  வடலூர் அரசன் விண்ணோன் வாழ்க
ஏழுதிரை நீக்கிய என்னவன் வாழ்க
  எழும்பிறப்பைத் தடுத்த ஏந்தல் வாழ்க
விழுமுடலை நிறுத்திய விமலன் வாழ்க
  விட்டதினால் வந்த பயனே வாழ்க
அழுதழுது பெற்ற அருளே வாழ்க
  ஆவியில் கலந்தொளியே வாழ்க வாழ்கவே.   30

வாழ்க எனைசிறை வைத்த சிற்றம்பலம்
  வாழ்க எனைச்சுற்றி வரும் கதிரவன்
வாழ்க எனைத் தாங்குகின்ற தருமச்சாலை
  வாழ்க எனை வாழ்விக்கும் சித்திவளாகம்
வாழ்க எனைப் போலிருக்கும் ஞானசபை
  வாழ்க எனைப் பெற்றெடுத்த பெருவெளி
வாழ்க எனைக்கலந்த அருட்பெருஞ் ஜோதி
  வாழ்க எனைப்போல விரியும் அண்டமே.    31


https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqNjhxRWdGeFp6RjQ/view?usp=sharing

                        09-02-2015