Monday, February 9, 2015

ஏழாந்திருமுறை ஏன்?


ஏழாந்திருமுறை ஏன்?

ருட்பெருஞ்ஜோதி அடிமை
தி..இராமலிங்கம் - கடலூர்

அன்பர்களுக்கு வந்தனம்!

சைவச்சமயம் தழைக்க, பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்ததாகக் கூறும் சைவ அடியார்கள் பாடி அருளிய பாடல்களையெல்லாம் ஒன்று திரட்டி அவைகளை திருமுறைகளாக கட்டிவைத்தார்கள் சைவப் பெரியோர்கள். இத்திருமுறைகளை தொகுத்தவர்களில் நம்பியாண்டார் நம்பிக்கு பெரும்பங்கு உண்டு. அவர்கள் செய்த அந்த திருமுறை கட்டுகள் மிகவும் வலிமை வாய்ந்ததாக உள்ளதை நாம் இன்றும் பார்க்கின்றோம். சைவ நெறி பரப்ப சைவசமயத்தாருக்கு இந்த சைவத்திருமுறைகள் மிகவும் உதவியாக இருப்பதையும் நாம் காண்கின்றோம். 

சைவத்திருமுறைகள் மொத்தம் பன்னிரண்டு என்பதை அறிவோம். இந்த பன்னிரண்டு திருமுறைகளிலும் மொத்தம் 45 நூல்களும் அதில் 18,280 பாடல்களும் உள்ளன. இத்தனைப் பாடல்களையும் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்ததாகக் கூறப்படும் 27 ஆசிரியர்களால் இயற்றப்பட்டன. இதில் மிக அதிகமாக 4,286 பாடல்களை இயற்றிய பெருமை சேக்கிழாரைச் சேரும். இவரது பாடல்களை பன்னிரண்டாவது திருமுறையாக வகுத்துள்ளனர். அதுபோல் மிகக் குறைந்த பாடலாக ஒரே ஒரு பாடலை இயற்றியவர்கள் இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர். திருவாலவாயுடையார், கல்லாடதேவர் ஆகிய இருவரும் ஒரு பாடல்களை மட்டுமே இயற்றியுள்ளனர். இவர்களது பாடல்கள் பதினோராம் திருமுறைகளில் காணப்படுகின்றது.

இவ்வாறு சைவத்தை போற்றி எழுந்த பாடல்கள் ஒரே ஒரு பாடலானாலும், ஆயிரங்கணக்கான பாடலானாலும் அவைகளை சைவசமயம் புறந்தள்ளாமல் அவைகளை தனது திருமுறைகளுக்குள் அடக்கிக்கொண்டது. காலப்போக்கில் திருமுறை என்றாலே அது சைவத்திருமுறைகளே என்று பேசப்படும் அளவிற்கு மக்களிடம் சென்றடைந்துவிட்டது.

எனவேதான் 19 ஆம் நூற்றாண்டில் சிதம்பரம் இராமலிங்கம் அவர்களால் இயற்றப்பட்ட பாடல்களை திருமுறை என வகுக்கப்பட்டபோது சைவசமயத்தார்களால் எதிர்ப்பு எழுந்து, அது வழக்காடுமன்றம் வரை சென்று திரும்பியது. தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்கள், வள்ளலார் இயற்றிய பாடல்களுக்கு "திருவருட்பா" எனவும் அதனை ஆறு பகுதிகளாகப் பிரித்து அப்பிரிவிற்கு "திருமுறை" எனவும் பெயரிட்டார். எனவே 19 ஆம் நூற்றாண்டிலிருந்து இருவேறுபட்ட திருமுறைகள் மக்களின் பயன்பாட்டிற்கு வந்தன.

வள்ளலார் ஏற்படுத்திய சுத்த சன்மார்க்கத்திற்கு ஆறுதிருமுறைகள் கொண்ட திருவருட்பா ஒன்றே போதுமானது. திருவருட்பாவை மிஞ்சிய சுத்த சன்மார்க்க நூல் தனியே இதுவரை இவ்வுலகில் ஏதுமில்லை. இருப்பினும் சைவ திருமுறைகள் போன்று "சுத்த சன்மார்க்கத் திருமுறைகள்" என்ற ஒன்றை ஏற்படுத்தி, அத்திருமுறைகளுக்குக்கீழ் வள்ளலார் இயற்றிய ஆறுதிருமுறைகள் கொண்ட திருவருட்பாவை முதலில் அமைத்து பார்க்க ச.மு.க. அறக்கட்டளை முனைந்தது. 

சைவ திருமுறைகளுக்கு என 45 நூல்கள் உள்ளன. ஆனால் சுத்த சன்மார்க்கத் திருமுறையாக இதுவரை ஒரே ஒரு நூல்தான் உள்ளது. அது திருவருட்பா என்பதை நாம் அறிவோம். சைவ திருமுறைகள் போன்று சுத்த சன்மார்க்க நூல்கள் இனி இவ்வுலகில் பெருக வேண்டும் என்ற நோக்கத்தில், ஏன் ஏழாம் திருமுறை, எட்டாம் திருமுறை என வகுத்து அதனை சுத்த சன்மார்க்கத் திருமுறைகளில் கட்டக்கூடாது? என திருவருள் உணர்த்த உணர்ந்தோம். சைவத் திருமுறைகளைவிட சுத்த சன்மார்க்கத் திருமுறைகள் எண்ணிக்கையில் அதிகமாகிக்கொண்டே வருமாகில் அதுவே சுத்த சன்மார்க்கம் இவ்வுலகில் வேரூன்றி வளர்வதை இவ்வுலகிற்கு எடுத்துரைப்பதாய் இருக்கும். மேலும் சுத்த சன்மார்க்கம் எளிதில் மக்களிடம் சென்று சேரும் என்ற நோக்கில் ச.மு.. அறக்கட்டளையானது தற்போது காரணப்பட்டு ச.மு.க. அவர்கள் பாடிய 3507 பாடல்கள் கொண்ட "பிரபந்தத்திரட்டு" என்ற 1923-ஆம் ஆண்டு வெளியான நூலை சுத்த சன்மார்க்கத் திருமுறைகளில் ஏழாம் திருமுறை என வகுத்து அதனை சுத்த சன்மார்க்கத் திருமுறைகளில் கட்டியுள்ளது. இந்நூலை இயற்றும்படி ச.மு.க. அவர்களுக்கு வள்ளற்பிரானே கட்டளையிட்டு அதனை அவருக்கு ஒரு உத்தியோகமாக கொடுத்து அருளினார். எனவே இந்நூலை "ஏழாம் திருமுறை" என வகுத்துள்ளோம்.

எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதியின் பேரருளால்,  சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் தோன்றி 150-ம் ஆண்டான 2015-ஆம் ஆண்டில் ஏழாம் திருமுறையாகப் "பிரபந்தத்திரட்டு" என்னும் நூல் இவ்வுலகில் வெளிப்பட்டுள்ளது. 2015- - ஆம் ஆண்டிலிருந்து சுத்த சன்மார்க்கத் திருமுறைகளில் பிரபந்தத்திரட்டு இரண்டாவது நூலாகவும் ஏழாவது திருமுறையாகவும் இணைந்துள்ளது. திருவருட்பாவில் உள்ள மொத்தப் பாடல்கள் (.மு..பதிப்பு) 6725 மற்றும் பிரபந்தத்திரட்டில் உள்ள மொத்தப் பாடல்கள் 3507 ஆக மொத்தம் 10232 பாடல்கள் சுத்த சன்மார்க்க திருமுறைகளில் தற்போது உள்ளது. திருவருட்பாவில் ஏழாம் திருமுறை என்று ஒருசிலர் பிரபந்தத்திரட்டைக் கண்ணுற்று குழம்பியுள்ளனர். திருவருட்பா ஆறு திருமுறைகளுடன் முடிவுற்றது. திருவருட்பாவும் பிரபந்தத்திரட்டும் வெவ்வேறு நூல், வெவ்வேறு ஆசிரியர்களால் இயற்றப்பட்டது. இரண்டும் ஒன்றல்ல என்பதனை தெளியப்படுத்திக்கொள்ள வேண்டும்.   

அடுத்து வள்ளற்பிரானின் முதல் மாணவர் இயற்றிய சிலநூறு பாடல்களை கண்டெடுத்து அதனை எட்டாம் திருமுறை என வகுக்க ச.மு.க. அறக்கட்டளை முனைந்துள்ளது. அதற்குமேல் இன்னும் சில சன்மார்க்க அருளாளர்கள் சன்மார்க்கப் பாக்களை பாடியுள்ளார்கள். அதனையும் அவர்களோ அல்லது அவர்களுக்கு உரியவர்கள் கேட்டுக்கொண்டாலோ அல்லது நாங்களாகவே சென்று அந்நூல்களையெல்லாம் திருமுறைகளாக தொகுக்க உள்ளோம். அல்லது அவர்களாகவே தொகுத்து வெளியிட்டாலும் நல்லது. இதனால் சுத்த சன்மார்க்கத் திருமுறைகள் பெருகுவது மட்டுமின்றி, தொகுக்கப்படும் நூல்கள் சன்மார்க்க உலகில் பாதுகாப்பாகவும் இருக்கும். சுத்த சன்மார்க்கத் திருமுறைகளை வளர்ப்பதின்மூலம் தமிழ் மொழி வளர்ச்சிக்கும், சுத்த சன்மார்க்கம் எந்த அளவிற்கு உதவியுள்ளது என்பதனையும் நாம் இவ்வுலகிற்கு தெரியப்படுத்திவிட இதுஒரு மிகச்சிறந்த வழியாகும்.

சாகாதவனே சன்மார்க்கி என்று வள்ளற்பெருமான் கூறுவார். எனவே இராமலிங்கரைப் போன்று சாகாத ஒருவரால் அருளப்பட்ட திருவருட்பா ஒன்றே திருமுறை என வழங்கப்பட வேண்டும். எனவே திருவருட்பா ஆறு திருமுறைகளே சன்மார்க்கத்தை வளர்க்க மிகப்போதுமானது. இதற்கு இணையாக இறந்தவர்களால் இயற்றப்பட்ட வேறு நூல்கள் சுத்த சன்மார்க்கத் திருமுறைகளாக வரக்கூடாது. திருவருட்பாவுடன் ஒப்பிடும்போது மற்ற சன்மார்க்கிகளால் இயற்றப்பட்ட நூல்கள் எல்லாம் தூசுக்குச் சமானம். எனினும் அத்தூசுகள் கூட அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையும், வள்ளலாரையும், திருவருட்பாவையும், வடலூரையும், தருமச்சாலையையும், சித்திவளாகத்தையும், மருதூரையும், தீஞ்சுவை நீரோடையையும், கருங்குழியையும், சன்மார்க்கச் சங்கத்தையும், சன்மார்க்கச் சாதுக்களையும் போற்றியும் புகழ்ந்தும் பாடுமானால் அப்பாடல்களில் உண்மை இருக்கத்தானே செய்யும். அப்பாடலை இயற்றியவர் இறந்தாலும் இயற்றிய பாடலில் உண்மை இருக்கின்றதல்லவா? மற்ற சமய மத பாடல்களுடன் இந்த சுத்த சன்மார்க்கப் பாடல்களை ஒப்பிட்டால், நாம் சுத்த சன்மார்க்கப் பாடல்கள் வான்போன்றது என்பதை உணர்ந்து கொண்டாட வேண்டாமா? எனவேதான் திருவருட்பாவின் தகுதியினை மற்ற சன்மார்க்க நூல்கள் பெறாவிட்டாலும் அதன் உண்மை கருத்திற்கு முக்கியம் கொடுத்து அப்பாடல்கள் கொண்ட நூல்களை திருமுறைகளாக தொகுக்க வேண்டும் என ச.மு.. அறக்கட்டளை முடிவு செய்தது. 


சுத்த சன்மார்க்கம் தோன்றி இன்னும் இரண்டு நூற்றாண்டுகள் கூட இன்னும் முடியவில்லை. ஆனால் சுத்த சன்மார்க்கத்தை போற்றி எழுந்த தொழுவூர் வேலாயுதம் முதலியார் பாடல்கள் எத்தனை? திண்டுக்கல் சரவணாநந்த சுவாமிகள் எழுதிய பாடல்கள் எத்தனை? இன்னும் நமக்குத் தெரியாத பல அன்பர்கள் எழுதிய பாடல்கள் எத்தனை? போன்ற விபரங்கள் சன்மார்க்கிளுக்கு தெரியவில்லை. எனவே இவைகளையெல்லாம் சுத்த சன்மார்க்கத் திருமுறைகள் என வகுத்து, நூல் வெளியீடு செய்துவிட்டால் இவைகள் என்றென்றும் அழியாது நிலைத்து நின்று சுத்த சன்மார்க்கத்தை வளர்க்க உதவும் என்பதே ச.மு.க.அறக்கட்டளையின் அவாவாக உள்ளது.

எனவே, சன்மார்க்க அன்பர்கள் தங்களுக்கு ஏற்பட்ட இறை அனுபவத்தையும், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையும், வள்ளலாரையும் போற்றி (சமய மதக் கடவுள்களை தவிர்த்திருக்க வேண்டும்) யார் ஒருவர் ஆயிரம் பாக்களுக்கு மேலாக (தமிழ் இலக்கண மரபு மாறாத பாக்கள்) பாடியுள்ளார்களோ அவர்களது பாடல்களை சுத்த சன்மார்க்க திருமுறைகளில் சேர்த்து திருமுறைகளின் எண்ணிக்கையினை உயர்த்த வேண்டும் என்பது ச.மு.க. அறக்கட்டளையின் நோக்கமாக உள்ளது.      

சுத்த சன்மார்க்கப் பாடல்களை இயற்றிய அன்பர்கள் யாரேனும் இருந்தால் அவர்களை சன்மார்க்கிகள் இனங்கண்டு எங்களுக்கு தெரியப்படுத்தினால் அப்பாடல்களையும் திருமுறைகளின் தொகுக்க நாங்கள் தயாராக உள்ளோம்.

இதுபற்றி தங்களது மேலான கருத்துகள் எதுவாக இருப்பினும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். நன்றி.

          அருட்பெருஞ்ஜோதி              அருட்பெருஞ்ஜோதி

          தனிப்பெருங்கருணை             அருட்பெருஞ்ஜோதி

https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqODhWWGhTaE9RalE/view?usp=sharing

2 comments:

  1. நல்ல முயற்சி.
    வள்ளல்பெருமானின் வளத்தக்க சிந்தனைகளை வனப்புற வடிவமைக்கும் எந்த ஒரு செய்யுளும் செயலும் வந்தனைக்கும் வரவேற்புக்கும் உரியதே.
    ஒரு செய்யுள் இயற்றிய இருவர் பன்னிரு திருமுறை வரிசையில் பங்கேற்றிருப்பது சைவச் சான்றோர்களின் சதுரப்பாட்டை வெளிப்படுத்துவது.
    அதையே அளவுகோலாய்க் கொண்டால் யான்- பெருமானைப் பற்றிப் பாடியிருக்கும் சில இலக்கண இலக்கியத் தகுதிகள் நிறைவுறப்பெற்ற
    செய்யுள்களையும் சேர்த்துக்கொள்ள ஆவன செய்க.
    முகநூலிலும் வள்ளலார் ஸ்பேசிலும் பதியப் பெற்று சன்மார்க்க அறிஞர்கள் பாராட்டுப் பெற்ற அக்கவிதைகளை எவ்வண்ணம் அனுப்புவது என்று அறிவிக்க அன்புடன் கோருகின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் கங்கைமணிமாறன் ஐயா அவர்களுக்கு எமது மேலான வணக்கங்கள். இறையருளால் விரைவில் பாடல்களை தொகுக்கும் நேரம் வரும். அவ்வமயம் தங்களை தொடர்பு கொள்கின்றேன். நன்றி ஐயா...

      Delete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.