Saturday, July 18, 2015

இராமலிங்க அந்தாதி

அருட்பெருஞ்ஜோதி                அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை               அருட்பெருஞ்ஜோதி
 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க  
 https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWLXhzNVMyRGlnNHM/view?usp=sharing
                          இராமலிங்க அந்தாதி          (05-07-2015)
(தி.ம.இராமலிங்கம்)

நேரிசை வெண்பா

பார்க்க சகிக்காது பாதையில் எச்சிலை
தூரகாறித் துப்புவான் தறுதலை - வாரம்
முழுதும் சாலை மேய்வான் ராமலிங்கமே
ஒழுக்கம் புகல் இவர்க்கு.

இவர் அவ்வப்போது இயல்பாய் மூக்கை
சிவக்க நோண்டி சலைப்பர் - கவத்தால்
காதை குடைந்து களிப்பர் ராமலிங்கமே
பாதை மாற்றப் பறை.

பறையடித் தாடி பிணத்தை தூக்குவாரின்
மறையை மாற்றி மீட்பாய் - குறையில்லா
சமுதாயம் சடுதியில் சால ராமலிங்கமே
அமுதா யளித்தான் அருட்பா.

அருட்பாப் படித்தும் அருளில்லாது பலர்
பொருளை சூதாய் பெறுவர் - குருவே
நானென மக்களை நாடுவர் ராமலிங்கமே
ஏனெனக் கேட்க எழுவாய்.

எழுந்த மறையெலாம் இருப்பது அன்பேஎன
முழுக்க உண்பார்ஊணை மடையர் - இழுக்கு
செய்து பிணத்தை சமைப்பார் ராமலிங்கமே
உய்வகை செய்வாய் உவந்து.

உவந்து வளர்த்த உயிரைக் கொன்றுஉடல்
சிவந்த சதையை சுவைப்பர் - சிவனாம்
அல்லா இயேசுவாம் அய்யோ ராமலிங்கமே
நல்லா இருக்குதாஇந்த நாடகம்.

நாடகக் கலைஞரும் நாட்டிய அம்மாவும்
கூடாத மதுவினை கூட்டினரே - நாடாத
சிறுவனும் குடித்து சீரழிய ராமலிங்கமே
மறுமலர்ச்சி உண்டா மாநிலத்தே.

நிலத்தில் விளையும் நெற்கதிரும் ரசாயன
பலத்தில் நச்சாய் பயிராகுதே - நலஞ்சார்
அரசுகளா இவை யாவும் ராமலிங்கமே
நரகச்சூழல் வாராது நாட்டே.


நாட்டுக்கோர் ராணுவம் நாட்டி யதனால்
வீட்டுக் கொருவன் செத்தான் - பூட்டிய
எல்லை களாவும் அகற்றி ராமலிங்கமே
உலகம் ஒன்றென உணர்த்து.

உணர்ச்சியும் காமமும் உண் டெனினும்
பணத்தால் கூடுமோ படுக்கை - மணந்த
மனைக் கோர் மாசுசெய்ய ராமலிங்கமே
வினை என வருவான்.                             110

வருகின்ற காலத்தில் வயல்வெளி காணாது
கருயிருக்கு மிடமும் கல்லாகும் - உருபிறந்து
குடிப்பதற்கு பாலுங் காணாதே ராமலிங்கமே
பிடித்துன் உலகைப் புரட்டு.

புரட்டும் தொழிலே புண்ணியமாச்சு வட்டித்
திரட்டும் பாவமே தீஞ்சுவையாச்சு - திருடன்
எல்லாம் வெள்ளாடை உடுக்க ராமலிங்கமே
சொல்நீ எவ்வாடை உடுப்பாய்.

பாயிட்டுப் படுக்கவும் பல்லோர்க்கு வழியில்லை
நாய்படும் பாட்டை நாய்களறியுமோ - வியாபம்
ஊழலால் கொழுத் தவர்களை ராமலிங்கமே
வீழடிப்பாய் விரைந்து வந்து.

வந்த வஞ்சவர்களை வாழவைக்கும் சட்டசபை
அந்தநிலை மாறமக்களே எழுங்கள் - சொந்தமென
இனசாதிக்கும் கட்சிக்கும் ஓட்டோ  ராமலிங்கமே
மனமாற்றம் வேண்டும் மண்ணில்.

மண்ணை ஆளவே மக்களிடம் பணத்தை
எண்ணிக் கொடுத்து ஓட்டுகேட்பான் - கண்
இல்லாது மக்களும் அழிவர் ராமலிங்கமே
நல்லதோர் வழி நவிலாய்.

ஆய்ந்தால் அரசியலின் அரங்கமே ஊழலில்
தோய்ந்து தலைமீது தொங்குதே - பாய்ந்ததனை
அறுக்க வல்லமை அளிப்பாய் ராமலிங்கமே
குறுக்குத் தொழிலைக் குலைவாயே.

வாய்த்திறந்துப் புளுகி வாழ்வெல்லாம் நடித்து
ஓய்வில்லா மக்கள் பணியாம் - பேய்யெல்லாம்
கூடியே அரசியல் கட்சிநடத்துதே ராமலிங்கமே
வாடினால் போதுமா வாஇங்கே.

இங்கினி சன்மார்க்கரே உலகை ஆள்வாரென்ற
கிங்கினி மணியோசை கேட்குதே - மங்குனிப்
பயல்களே புறம் போங்கள் ராமலிங்கமே
தயவால் ஏற்றான் தலைமையே.
தலைக்கு கோடிகடன் தலைவன் வாங்கி
விலைக்கு மக்களை விற்றே - நிலைக்க
ஆட்சி புரியும் அசிங்கமதை ராமலிங்கமே
ஓட்டி ஒட்ட வாலறுப்பாயே.

பாய்ந்த நதிகளிலே பார்க்க நீரில்லை
காய்ந்த மணலுக்குக் காரணமோ - ஓய்ந்த
பாடில்லை இதைப் பாராயோ ராமலிங்கமே
நாடில்லா மன்னன் நீதானே.                         120

நீதானே ஐந்தொழில் நாடகம் புரிகின்றாய்
பூதானே பூத்து புன்னகைக்குமோ - ஈதானே
சென்று மலஞ் சாருமோ ராமலிங்கமே
உன்செய லல்லால் அசைவதேது.

ஏதுபுரி கின்றாயிங்கே இவ்வீதி முழுதும்
காதுகிழிய ஒலிஎழுப்பி கோவிலில் - சூதுசூழ
திருவிழாவாம் அட திரு ராமலிங்கமே
கருணை இல்லாது திருவோ.

திருவெது தலமெது திகழ்கின்ற ஒளியெது
அருளெது அன்பெது அறியாது - குருட்டுப்
புராணக் கதைப் புகன்றே ராமலிங்கமே
ஊராண்டு வருதே ஊமைமதம்.

மதஞ்சார் மனிதனும் மலஞ்சார் மிருகமும்
குதஞ்சார் காமனும் காணஒன்றே - உதவிக்
கரம் நீட்டாய் கருணை ராமலிங்கமே
இரக்கம் தானே இறைவனே.

இறைவனாய் வந்தே இறவா வரந்தரும்
மறையை எழுதி மறைந்தாய் - குறைகள்
கோடி இருப்பினும் கோனேன் ராமலிங்கமே
கூடிப்பாடி இருப்பேன் காண்.

கண்கள் ஆயிரங் கோடியிருந்தும் உனது
உண்மையைக் கண்டார் உளரோ - தண்ணீரில்
விளக் கேற்றிய வள்ளல் ராமலிங்கமே
உளத்தே யிருந்தெனை உயர்த்து.

உயரங்க ளடைந்தும் அதன்மேல் என்னவென
தயங்கியே நிற்க தாங்கியத்துணையே - தயவன்றி
இருப்பது ஏது மில்லையென ராமலிங்கமே
குருவாய் வந்து கூறினானே.

கூறும் மார்க்கங்களில் காணக் கிடைக்காத
ஏறுமேணியைப் பார்த்து ஏங்காதே - வீறுகொண்டு
வாருமிங்கே நேர் வர ராமலிங்கமே
சாருவான் சன்மார்க்கம் சேர்த்தே.
சேர்ந்தே இருக்கும் சுத்தஉடலும் உயிரும்
பேர்கெடாதே எனக்குப் பேணுவாய் - ஆர்
அறிவர் நானு மடைவேன் ராமலிங்கமே
குறித்த பெருவாழ்வைக் கற்று.

கற்றேன் உன்னையே கசடற கற்றபின்
உற்றேன் உந்தன் அருளை - பற்றேன்
மற்ற யாவுமே மறந்து ராமலிங்கமே
போற்ற சாகாவரம் பெற்றேன்.                       130

பெற்ற சுதந்தரப் பொன்னாட்டை எந்தக்
குற்றமு மின்றி காப்பாய்நீயே - மற்ற
நாடு களையும் நன்றாக்கி ராமலிங்கமே
வீடுதோறும் நீ விதிசெய்யே.

விதியாய் போச்சே வீதியில் குப்பையை
மதியாது வீசுவதை மறப்பாய் - நதியெலாம்
சுத்தப் படுத்தி சீருற ராமலிங்கமே
முத்தேகம் எடுத்தான் முந்தி.

முந்திச்செல்ல முயன்று மந்தியாய்த் தாவி
சுந்தர வரிசையை சாராய்நீரே - வந்த
நோக்க மேதும் நினையீர் ராமலிங்கமே
ஊக்க மளிப்பாய் உணர்ந்தோர்க்கே.

உணர்வின்றி புகையிலை உண்டு போதைக்கு
பணத்தை இழந்து புன்படலாமோ - குணத்தில்
சிறந்து சாகாது சிறக்க ராமலிங்கமே
உறவெனக் கொள்வாய் உயிரே.

உயிரிருக்கும் உடல் அழிய புகைப்பிடித்து
அயிர்வாய் திரிவது அழகோ - மயிரும்
இறந்தாரை எழுப்புமே இங்கு ராமலிங்கமே
பெற்றிட்டான் அந்த புகழ்.

புகழுக்கே ஏங்கும் புல்லர்களே பொய்யே
புகன்று சிறக்கும் போகர்களே - திகழும்
திருவருள் முன் தாழாயோ ராமலிங்கமே
அருளி அவர்களை அடக்கே.

அடக்கமின்றி செத்தாரை எரிக்கின்றீர் அந்தோ
உடலை சுட்டு உழல்கின்றீர் - கடலும்
மண் கொண்டு மகிழுமே இராமலிங்கமே
எண்ணத்தை எரிப்பார் உண்டோ.

உண்டு கொழுத்து உறங்கி எழுந்து
மண்டு போல் மாள்வேனோ - குண்டு
உருண் டோடும் இலக்கை ராமலிங்கமே
தருவித்து துயர் துடைப்பாய்.
துடைத்த சாதிமத துருவெல்லாம் மீண்டும்
புடைக்க எழுந்து பழகுதே - உடைக்க
வல்லான் நீயே வாராய் ராமலிங்கமே
நல்ல சமுதாயம் நாடே.

நாடுபோகும் போக்கில் நல்லவ னெல்லாம்
காடுபோக வேண்டிய காலமே - பாடுபட்ட
தியாகி வீரர் துயரெலாம் ராமலிங்கமே
வியாபார மானதே விடாதே.                  140

விடாது லஞ்சம் வாங்கி பணிசெய்து
நாடாளும் மிக நல்லோரே - கூடாத
வரு மானம் வாங்கினால் ராமலிங்கமே
தருவான் பிறவிதோறும் தண்டனையே.

தண்டனைக் கருதாது துளிரினை துயிலுரித்து
கண்மூடிச் செய்த காமுகனே - விண்ணில்
சூரிய அனல் சூழ ராமலிங்கமே
பூரிப் போடுவான் புன்னுடலையே.  

புன்னுடலைப் புணர புறமேவி தகாத
வன் புணர்ச்சிசெய் வல்லீரே - நன்மனை
ஒன்றையே நாடிக் கூட ராமலிங்கமே
உன்னைக் கூட அழைபானே.

அழைக்கும் பெண்களின் அழகில் மறந்தும்
மழைக்கும் ஒதுங்காதீர் மூடர் - இழைக்கும்
இந்தச் செயலால் உன்னை ராமலிங்கமே
கந்தலாக்கி விடுவான் கவனம்.

கவனமுடன் எதிலும் கருணை நோக்குடன்
பவக்கடல் கடப்பாய் பாரில் - சவமாகிப்
போகாது உனை பரமாக்கி ராமலிங்கமே
சாகாச் சித்தி செய்வான்.

செய்வது அறியாது சிக்கலில் இருந்தால்
உய்வது உணர்த்தி ஆள்வான் - பெய்யென
மழையும் பெய்ததே மருதூர் ராமலிங்கமே
அழைக்க வருமே எல்லாம்.

எல்லா உலகும் எளிதில் காணும்
வல்ல மணியை வாங்கினேனே - கல்லாதே
கவி அருளும் கலையை ராமலிங்கமே
நவின்றான் நல்லோர் நாடவே.

நாடக மேடையில் நடிக்கத் தெரியேன்
நீடகம் கடக்க நீயருள்வாய் - தாடகத்
தாமரை மலரத் தூதாக ராமலிங்கமே
பாமறை என்னில் பாடினான்.
பாடிய பாடலெல்லாம் புகுந்து பார்க்கின்
கூடிய இன்பம் காணலாம் - தேடியக்
கடவுள் எனது கவியாகி ராமலிங்கமே
உடலுள் உள்ளான் உயிராய்.

உயிருமென் உணர்வும் உருக வாடியப்
பயிரும் பாடுதே பாராய் - தயிரும்
பாலாகி மடி புகவே ராமலிங்கமே
காலாகி ஓடி கலந்தான்.                             150

கலந்த முத்தேகம் காலங்கடந் தோங்கி
நலங் கொடுக்குமே நாளும் - பலப்
பிறவி இதைப் போலில்லை ராமலிங்கமே
உறவனாக நீ பற்று.

பற்று பறக்கும் பாடமிதை பாங்காய்க்
கற்றால் சாகாவரங் கூடுமே - சற்றே
தயங்க மாயை தடுக்குமே ராமலிங்கமே
இயக்கம் நிற்கா தருளே.

அருளும் ராமலிங்க அந்தாதியை எட்டாந்
திருமுறை எனவே தந்தாயே - ஒருமுறை
இதனை நினைக்க அந்த ராமலிங்கமே
சதகோடி கொடுப்பான் சங்கத்தே.

சங்கம் சிறந்தோங்க சன்மார்க்கிகளே வாரீர்
உங்கள் பொருளை உவந்துதாரீர் - தங்கத்
தகட்டால் ஞானசபை திகழ ராமலிங்கமே
பகன்றான் நடக்கும் பாரீர்.

பார்க்கும் இடமெலாம் பரவெளி சென்று
ஓர்நிலையே எங்கும் ஓங்குதே - போர்செய்யும்
மத நிலைகள் மாய ராமலிங்கமே
பதம் பதித்தானென் பாட்டிலே.

பாடப்பாட பாவங்கள் போகுதே பரமனோடு
ஆடஆட அண்டங்கள் ஆடுதே - நாடநாட
நாத்திக நாற்ற நோய்யெலாம் ராமலிங்கமே
ஆத்திக மாக்கி ஓட்டினானே.

ஓடினஓடின சாதிகள் ஆடினஆடின மதங்கள்
கூடினகூடின சன்மார்க்க சங்கங்கள் - சாடியே
மறை வேதங்களை மறித்து ராமலிங்கமே
அறைந்தான் திரு வருட்பா.

பாடலெலாம் உனையே புனைந்துப் பாடுமென்
ஆவியும் உனையே இணைந்துக்கூடும் - கூவி
அழைத்து எனை ஆளும்  ராமலிங்கமே
மழை பொழிந்தான் மன்றில்.
மன்றத்தில் மலரெடுத்து மங்கைஎன் மேனியில்
சன்மார்க்க மாலை சூட்டினாய் - என்தேகம்
சிவக்கத் தழுவி சேர்ந்த ராமலிங்கமே
தவம் பலிக்க தாயானேன்.

ஆனதொரு அருட்பெரு மானந்த வெளியில்
ஈனஉலகை படைத்ததும் ஏனோ - ஊணுடம்பை
எடுத் திங்கு அல்லலுறதானோ ராமலிங்கமே
விடுவிடு என்னை வெளியில்.                       160  

வெளியேது உள்ளேது வளியேது ஒளியேது
தெளிந்த வனுக்குத் தானேது - எளிமையாய்
சாகா நிலை சார்ந்த ராமலிங்கமே
போகாது என்னுளம் ஆரிடமும்.

ஆரியம் இல்லாத ஆலயத்தில் சாகா
வாரியம் அமைத்த வள்ளலே - பாரினில்
திராவிடம் தந்த தமிழொளி ராமலிங்கமே
ஆரா ஆற்றல் அளித்தானே.

தானுமோர் அனாதி தன்னால் உருவான
நானுமோர் அனாதி நாதம் - வானும்
மண்ணும் நன்று மலர ராமலிங்கமே
அண்டத் திற்கோர் ஆதியானான்.

ஆதிஎன்பான் அந்த மென்பான் ஐயோஇது
நாதியற்ற புரியாத நீதிஎன்பேன் - சாதிஎன்று
மதமென்று மாளும் மனிதனை ராமலிங்கமே
இதமாய்த் திருத்தி இயங்காய்.

இயங்கு மைந்தொழில் இயக்கம் நிறுத்தும்
சுயஆற்றல் இருந்தால் செய்யும் - இயற்கை
இங்கு இன்பமட்டு மல்ல ராமலிங்கமே
சங்கம் சார்ந்தாலும் சங்குதான்.

சங்கூதும் இயற்கை சங்கம் சார்ந்தார்க்கு
எங்குமில்லை என்பதை எண்ணு - அங்கம்
வீழாது நன்றாய் வளர்க்க ராமலிங்கமே
தாழாத எண்ணம் தந்தருள்.

அருளால் இயங்கும் ஐந்தொழிலை இறை
குருவாலும் நிறுத்தக் கூடாது - கருவுறும்
அழகை பெண்ணுக் களித்து ராமலிங்கமே
சுழன்று ஊதுகிறான் சங்கை.

சங்கொலி ஊதாத சாகாத சன்மார்கியை
எங்கினி காண்பது இறைவா - இங்கினி
இறவா தேகம் கொடுக்க ராமலிங்கமே
மறந்து போனான் முற்றும்.
முற்றும் மறக்கும் மூடனல்லன் அவன்
கற்றுத் தருகிறான் கல்வியை - பற்று
போக ஒழுகிப் பாராய் ராமலிங்கமே
மோகந் தீர்ப்பான் முற்றாய்.

முற்றும் துறந்தாலும் முக்தி யடைந்தாலும்
சற்றும் நிற்காதே சாவு - குற்றமுடைய
மனிதப் பிறவி மாள்வதை ராமலிங்கமே
இனி யதனை இகழாதே.                            170

இகழ்கின்ற மற்றைய இழிப்பிறவி போல
திகழ்வதோ மனித தருமம் - மகத்துவம்
அறிந்து குற்றம் அறவே ராமலிங்கமே
குறித்து ரைத்ததைக் கூட்டு.

கூட்டுவித்தால் நானும் கூடுவேன் அதற்கு
ஆட்டுவிக்க யாரும் ஆளில்லை - ஓட்டுக்கு
அலையும் அரசிய லார்போல் ராமலிங்கமே
விலைபேசி விற்றால் வாங்குவேன்.

வாங்குகின்ற பொருளாஇது வானமே ஒத்த
தாங்குகின்ற தலைவன் தானுண்டு - ஏங்குகின்ற
அகத்தாரை என்றும் ஆட்டுவிக்க ராமலிங்கமே
இகத்தே வந்துபரத்தை அடைந்தான்.

அடைந்தென்ன லாபம் ஆருயிரெலாம் இன்பம்
அடைந்தனவா இறவாமை உற்றனவா - விடை
என்ன என்று எல்லாஞ்செய்வல்ல ராமலிங்கமே
நன்றாக உரைத்தால் நல்லது.

நல்லன எல்லாம் நலம் ஓங்கின
அல்லன யாவும் இறந்தன - எல்லா
உயிரும் இன்ப முற ராமலிங்கமே
உயி லெழுதியதை உணர்.

உணர்ந்த சிலதில் உண்மை இல்லையே
கணக்கில் பிழையுறக் காணுகிறேன் - மணந்து
ஓரிரவில் மறைந் தோங்கும் ராமலிங்கமே
காரிருள் கனவெனஇதைக் கூறு.

கூறுகின்ற பிழையெலாம் கணக் கறியாது
நாறுகின்ற தென்று நாடஅறிவாய் - ஊறுகின்ற
ஊற்றில் உண்மை யன்றி ராமலிங்கமே
ஆற்றிலா மூழ்கிமுத் தெடுத்தான்.

எடுத்ததேகம் இன்பமுற இரவில் அல்லவோ
உடுத்ததைக் கலைத்து உறவுறுவான் - நடுஇரவே
இறையோடு கூடு மறமென ராமலிங்கமே
மறைந் தின்பமுறுவது மாண்பு.
மாண்புறவே கூறினேன் மறந்தும் இதனை
வீண்என எண்ணாதீர் வீணரே - காண்பது
கன வில்லை காணீரோ ராமலிங்கமே
இனங்கண்ட இறவா இடத்தை.

இடமறியாது எங்கோ அடம்பிடித் தலைகிறீர்
விடமெனத் தெரிந்தும் விழுகிறீர் - மடமனிதா
குட மொன்றை குலதெய்வமென ராமலிங்கமே
நடந்தப் பாதையறியாது நடுங்குகின்றீரே.              180

நடுங்கின வடலூர் நாளும் கொலைசெய்
படுபாதக செயலைக் கண்டே - கொடுமையாம்
ஆடிமாதம் ஆடு அடிப்பானை ராமலிங்கமே
தேடியடி அவன் திருந்தவே.

திருந்தாத தெய்வங்களை தெருவெல்லாம் வைத்து
ஒருநலம் உண்டோ உயிர்க்கு - திருவிழாஎன
ஒட்டக மடிக்கும் ஒருவிழாவை ராமலிங்கமே
கட்டுக்குள் கொண்டுவா கடிந்து.

கடிய மதங்கள் காணும் விழாக்களில்
மடிகிறதே ஒப்பற்ற மண்ணுயிர் - தடி
எடுத்து அடித்தா லொழிய ராமலிங்கமே
கடுந் தொழில் குலையாது.

குலை குலையாய் கொலைசெய்துப் பிணத்தை
மலையெனக் குவித்து மண்டியிடுவார் - தலை
வெட்டிப் பயல்களின் விழாவினை ராமலிங்கமே
எட்டிப் பார்க்கத்தெரியும் எமலோகம்

எமலோகம் தெரியுதடி அம்மன் கோவிலிலே
தமதுயிர் போகுதடிஅம்மன் துள்ளலிலே - நமது
அம்மா என்ற அன்பெல்லாம் ராமலிங்கமே
சும்மா பேயாட்டம் சீறுதே.

சீறுகின்ற சிலைகளை சாலையிலே நட்டு
ஊறுகின்ற பக்தியை ஊதிடுவாய் - ஏறுகின்ற
சன்மார்க்க தருமச் சாலையை ராமலிங்கமே
தன்மார்க்கமாய் தந்தான் தானே.

தன்கூட்டம் உண்டுமகிழ தியாகத் திருநாளாம்
தன்னுயிரை பலியிட்டால்தானே தியாகம் - என்று
நினைப்பதும் மத நிந்தனையாம் ராமலிங்கமே
உனை இழுப்பதே என்வினை.

வினைவழி செயலெனில் வள்ளலே உலகுயிர்
தனைக் காப்பது எவ்வாறு - பனைமரம்
தாழ்ந்தா நொங்கு தரும் ராமலிங்கமே
வீழ்த்தும் வினையினை வெட்டு.
வெட்டும் பழக்கம் விட்டுப் போகுமோ
எட்டு மிரண்டும் எட்டியாகுமோ - வட்டி
வாங்கி பிறரெறியும் வாழ்வை ராமலிங்கமே
ஓங்கி அறைந்து ஓங்காய்.

ஓங்குகின்ற தலங்கள் உயிர் பலியை
வாங்கு மென்றால் வாங்கட்டும் - நாங்கள்
சாகின்ற வரை சாதுதானே ராமலிங்கமே
ஈகின்ற உயிர் ஊணாகட்டும்.                  190

கட்டுக் கட்டாய் காட்டுவித்த அண்டத்திற்கு
முட்டுக் கட்டை முத்தியுண்டோ - எட்டுத்
திக்கு வெளியைத் தடுத்து ராமலிங்கமே
சிக்கெனப் பிடித்து சுழற்று.

சுழலும் வெளியில் சுரணை ஏதுமின்றி
உழலு கின்றோம் உண்மை - இழவை
நோக்கியப் பயணம் நாடி ராமலிங்கமே
போக்கிரிப் பயலாய்ப் போகிறோம்.

போகின்ற வழியில் பார்ப்பேனா அவனை
நோகின்ற இதயம் நொடிக்குதே - ஊகித்த
இடத்தில் காண அருளாய் ராமலிங்கமே
நடமாடுவேன் உனை நம்பியே.

நம்பிக்கை ஒன்றால் நாளும் வாழ்ந்தேன்
தும்பிக்கையால் எனைத் தூக்கு - வம்பு
ஏதும் புரியாதெனை ஏற்று ராமலிங்கமே
சூது ஏதும் செய்யாதே.

செய்நன்றி மறவாது செய்த பூஜையில்
தெய்வம் கண்டு தொழுதேன் - பெய்த
மழையில் ஆடி மகிழ ராமலிங்கமே
நுழைந்து நனைந்தான் நன்று.

நன்றியிலா உலகில் நாயகன் நவின்ற
நன்மார்க்கம் யார் நம்புவார் - புன்மார்க்க
புராணப் புளுகில் பழகி ராமலிங்கமே
இராவணன் தீயவ னானான்.

ஆனந்தத் தேன்சிந்தி அற்புதன் வந்தான்
ஈனஇடர் நீங்கி இன்புற்றேனே - வான
தேவர் யாரும் தேடும் ராமலிங்கமே
மூவர்க்கும் நான் முதலே.

முதலிலா வியாபரம் முயல ஆன்மீகமே
கதவில்லா வங்கிக் காணோயோ - விதமாய்
தாடியுடன் சாமியார் துதிக்க ராமலிங்கமே
ஓடி விழுதே உலகம்.
உலகம் யாவுமோர் அணுக்குள் அடக்கி
பலவெளி அதனுள் படைத்தாய் - மலங்கள்
விலக அணுவை வாட்டி ராமலிங்கமே
இலகும் ஐந்தொழில் உற்றான்.

உற்றநாள் முதல் உறங்கிடேன் ஐயாவே
பற்ற ஒன்றில்லை பாரிலே - நற்றவம்
நீடுசெய்த நீயும் நானும் ராமலிங்கமே
வீடுபேறு பெற்றோம் வானில்.                       200

(இராமலிங்க அந்தாதி - தொடரும்)


No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.