Friday, April 24, 2020

நோயற்ற வாழ்வு


நோயற்ற வாழ்வு

(தி.ம.இராமலிங்கம்)


உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி
உடம்புஇடை நின்ற உயிரை அறியார்
உடம்பொடு உயிர்இடை நட்புஅறி யாதார்
மடம்புகு நாய்போல் மயங்குகின் றாரே. (திருமந்திரம்-2148)

முதல் வரியில் திருமூலர் அவர்கள் கூறுகின்ற மூன்று தேகங்கள் என்னென்ன? என வள்ளலார் வரும் முன் யாருக்கும் தெரியாமல் இருந்தது. வள்ளலார் வந்தப் பின்புதான் அந்த மூன்று உடம்பின் பெயர்களையும், தான் பெற்ற அந்த முத்தேக சித்தி அனுபவத்தையும் திருவருட்பாவின் மூலம் மக்கள் அறிய முடிந்தது.

சுவர்ணதேகம், பிரணவதேகம், ஞானதேகம் என்கின்ற மூன்று தேகத்தையே திருமூலர் தனது முதல் வரியில் குறிப்பிடுகின்றார். இந்த மூன்று தேகங்களும் ஒன்றை ஒன்று தழுவிக்கொண்டுள்ளது. இம்மூன்று தேகங்களுக்கு இடையேதான் நமது உயிர் உள்ளது. இம்மூன்று உடல்களை வளர்த்தால்தான் உயிரை வளர்க்க முடியும் என்று திருமூலர் வேறொரு பாடல் வழியாக போதித்துள்ளார். (உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.)

ஆனால் நாமெல்லாம், நமது உயிரான ஆன்மாவிற்கும் இம்மூன்று உடல்களுக்கும் உள்ள நட்பை அறியாமல் உள்ளோம். நமது பருஉடல் இருக்கும் வரை அதனுடன் உயிர் நட்பாக இருக்காது. எப்போது நமது பருஉடலானது சுவர்ணதேகம், பிரணவதேகம், ஞானதேகம் என மாற்றமடைகின்றதோ அந்நிலையில்தான் நமது பருஉடலுடன் நமது உயிரும் நட்புடன் என்றும் நிலைத்து நிற்கும். இதுதான் மரணமில்லா பெருவாழ்வு. இதனை அடைந்தவர் வள்ளலார்.

இம்மூன்று தேகத்தை நாம் எடுக்கும்வரை, நமது ஆன்மாவானது மடம்புகு நாய் போல மயங்கியிருக்கும் என்கின்றார் திருமூலர். நமது ஆன்மாவை நாய் எனவும், நமது பருஉடலை மடம் எனவும் உருவகப்படுத்துகின்றார். அக்காலத்தில் சைவ மடங்களில் சித்தாந்த பயிற்சி நடக்கும். அப்படிப்பட்ட சித்தாந்த பயிற்சி நடக்கும் இடத்தில் ஒரு நாய் புகுந்துவிடுகின்றது. அது சித்தாந்தத்தை நாடாமல் சோற்றுக்காக மடப்பள்ளியை நாடுமாம். அதாவது நமது மடம் என்கின்ற பருஉடலில் நாம் சித்தாந்த பயிற்சி கொடுக்கவில்லை எனில் நமது ஆன்மாவனது நாயைப்போல, இவ்வுடலில் ஏன் வந்தோம் எனப்புரியாமல் மயங்கி மடத்தனமான வேலைகளை செய்துக்கொண்டிருக்கும். அதனால் அன்பர்களே நாமெல்லாம் சுத்த சன்மார்க்க சித்தாந்த பயிற்சியினை நமது உடம்பிற்கு கொடுக்க வேண்டும். நமது ஆன்மாவை காப்பாற்ற வேண்டும்.

இங்கு ஒரு கேள்வி எழுகின்றது. கொரோனா என்கின்ற ”கோவிட் 19” என்பது ஒரு நுண்ணுயிரி. அது போல நமது ஆன்மாவும் ஒரு நுண்ணணுதான். நான் இருக்கும் உடம்பில் எனக்கு எதிராக ஒரு நுண்ணுயிரி வந்து, நான் இருக்கும் இந்த உடம்பை அழிக்க நினைக்கின்றதே என ஏன் நமது ஆன்மாவனது அந்த நுண்ணுயிரிடம் போரிடவில்லை? உடம்பு மட்டுந்தானே போராடுகின்றது! அது ஏன்?

நாம் நமது ஆன்மாவை நாயைப்போன்று வைத்திருந்தால் அது எப்படி போராடும்? அதுவே இந்த உடம்பில் நாம் ஏன்டா வந்தோம்? எனப்போராடும்போது, இந்த உடம்பிற்காக போராடும் நிலையில் அது இருக்காது.

கொரோனா போன்ற நோய்களுக்காக நமது ஆன்மா போராடு வேண்டுமானால், இரண்டு வழிகள் உள்ளன.

1. ஜீவகாருண்ய ஒழுக்கத்துடன் தர்மம் செய்ய வேண்டும். அப்போது அந்த தர்மம் நமது ஆன்மாவை போராடத்தூண்டும். “தர்மம் தலைகாக்கும், தக்க சமயத்தில் உயிர் காக்கும்” என்பது சினிமா பாடல் மட்டுமல்ல. உண்மை உரைக்கும் பாடலும் கூட. தர்மத்தோடு கூடியவன் தேகநஷ்டம் அடையமாட்டான் என வள்ளலார் கூறுவார்.

   2. அடுத்த வழி என்னவென்றால், நமது பருஉடலை மூன்று தேகத்தில் ஏதேனும் ஒரு தேகமாத்திரத்திலாவது மாற்ற முயற்சிக்க வேண்டும். முதலில் சுவர்ணதேகமாக்கிக்கொண்டால் ஆன்மா அத்தேகத்தில் அரசனாகி ஆளதொடங்கிவிடும். பிறகு உடல் நோய் என்ற பேச்சுக்கே இடமில்லை, மரணமும் இல்லை. இந்த மூன்று தேகத்தின் நிலை எப்படிப்பட்டது என தெரிந்துக்கொள்ள திருவருட்பா ஓதவும்.

for e-book                
https://drive.google.com/file/d/136yfLc-UUpyoOVx5OHb9ox-YfE0n0Dsa/view?usp=sharing

மலைகளும் நதிகளும் (Part - 3)


அருட்பெருஞ்ஜோதி               அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை            அருட்பெருஞ்ஜோதி

மலைகளும் நதிகளும்
(Part - 3)

தி.ம.இராமலிங்கம்
(யாத்திரை அனுபவங்கள்)

 உத்ராகண்ட் 08-09-2019 – ஞாயிற்று கிழமை:

நாம் மீண்டும் நமது பயணத்தின் ஞாயிற்றுக்கிழமையான (08-09-2019) எட்டாந்தேதி பயணக்குறிப்புக்கு வருவோம். இன்று முழுதும் ஹர்துவாரில் சுற்று பயணம் மேற்கொண்டோம்.
 


காலை 7 மணியளவில் நாங்கள் தங்கியிருந்த  டேராவால் பவனிலிருந்து (Derawal Bhawan) நடந்து கங்கை கரையை நோக்கிச் சென்றோம். எங்களுடன் வந்திருந்த சில பெரியோர்கள் அங்கிருந்த பேட்டரி ரிக்சாவில் கங்கை கரை வந்தடைந்தனர். நடந்துச் சென்றாலே 15 நிமிட நேரத்தில் கங்கை கரை சென்றுவிடலாம். அங்கு நாங்கள் எல்லோரும் குளித்தோம். மிக வேகமாக ஓடும் நீரில் படித்துறையிலிருந்தே ஓரமாக நீண்டு கட்டப்பட்டிருந்த சங்கிலியை பிடித்துக்கொண்டே குளித்தோம். நீர் சில்லென்று இருந்தது. ஆனால் ஒரே அழுக்காய் காப்பி  (Coffee) நிரக்கலரில் நீர் இருந்தது. இந்து மதத்தில் மிகவும் புனிதமாகக் கருதப்படுகின்ற கங்கை ஆற்றில் இன்றுதான் நான் முதலில் குளித்தேன்.



(23-04-2020 இன்றுதான், சென்ற வருடம் செப்டம்பர் மாதம் சென்ற இந்த பயணக் குறிப்பை எழுதுவதால், இன்றைய நிலையில் அதே ஹர்துவாரில் கங்கை நதி மிகத் தூய்மையாக வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்றால் ஊரடங்கு உள்ளதால், தொழிற்சாலைகள் ஒருமாத காலமாக இயங்காததால் கங்கை நதி தூய்மையுற்றதாக உள்ளது. அதாவது நான் கங்கை நதியில் குளித்ததால் அந்நதி ஆறு மாதத்தில் சுத்தமாகிவிட்டது எனச் சொல்லலாம்.)   

பிறகு எடுத்துச் சென்ற மாற்று உடைகளை அணிந்துக்கொண்டு டேராவால் பவன் வந்துச் சேர்ந்தோம். காலை சிற்றுண்டியை அங்கு முடித்துக்கொண்டு மேலும் சில இடங்களை ஹர்துவாரில் சுற்றி பார்க்க ஆட்டோவில் (இரண்டு ஆட்டோக்கள் – ஒரு வாகனத்தில் சுமார் 8 நபர்கள் அமரலாம்) கிளம்பினோம்.

சண்டி தேவி ஆலயம் (Chandi Devi Temple):  சிறிய மலைமீது அமைந்திருக்கின்ற ஆலயம் இது. மான்சா தேவி (Mansa Devi) என்றும் அழைக்கின்றனர். மலை மீது இருக்கும் இந்தக் கோயிலை தரிசிக்க ரோப் கார்
வசதி செய்யப்பட்டுள்ளது. அடிவாரத்திலிருந்து ஐந்து நிமிடத்தில் சென்றுவிடலாம். மலை மீது நடந்துச் செல்ல 45 நிமிடம் பிடிக்கும். இமாலய மலைத் தொடரில் சிவாலிக்
மலைகளில் நீல பர்வத (Neel Parvat) மலையில் அமைந்துள்ளது.  இக்கோயில் 8-ஆம் நூற்றாண்டில் ஆதி சங்கரர் அவர்களால் அமைக்கப்பட்டது. 1929-ஆம் ஆண்டு காஷ்மீர மன்னர் (Suchat Singh) சுச்சட் சிங் மன்னரால் கட்டப்பட்டது. நாங்கள் தங்கியிருக்கு டேராவால் பவனிலிருந்து இந்தக் கோயில் செல்ல 4 கிலோ மீட்டர் பயணம். நாங்கள் அந்த கோயில் இருக்கும் அடிவாரத்திற்கு செல்லும்போது எங்களுக்கு முன்னரே வந்திருந்த மக்கள் கூட்டம் ரோப் கார் பயணத்திற்காக டிக்கெட் வாங்கிக்கொண்டு
காத்திருந்தார்கள். நாங்களும் சுமார் ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது. ஒரு வழியாக எங்களது முறை வந்தவுடன் நாங்கள் அனைவரும் ரோப் காரில் மலை உச்சிக்குச் சென்றோம். சுவாமியை பார்த்தால் எனக்குப் பிடிக்கவில்லை. பக்திரசம் பொங்கவில்லை… அப்படியொரு தோற்றம்! இயற்கையை பார்த்தாலே இறைவனை தரிசதத்து போல் உள்ளது. அங்குள்ள இயற்கைக்கு முன்னால் இந்த கோயில்கள் எல்லாம் பெரிதாகத் தெரியவில்லை எனக்கு. கோயில் உள் பிரகாரத்தில் சுற்றிவிட்டு மீண்டும் அதே ரோப் கார் மூலம் கீழறங்கி வந்தோம். அங்கிருந்து வேறிடம் செல்ல உடனே ஆட்டோ கிடைக்கவில்லை. அரை மணி நேரம் மீண்டும் கீழே காத்திருந்தோம். பிறகு பயணிக்கத் தொடங்கினோம். நாங்கள் இப்போது ஒரு ஆசிரமம் நோக்கிப் பயணிக்கின்றோம். இமாயல மலைத்தொடரில் பயணம் செய்யினும் ஒரே வெய்யில் வாட்டி வதைத்தது. கொஞ்சம்கூட காற்றில் குளிர்ச்சி இல்லை. வேர்த்த உடம்புடன் ஆட்டோவில் பயணம் மேற்கொண்டோம்.



சண்டிதேவி கோயிலில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே:-
      



https://drive.google.com/file/d/1WHSMi_Lgl_CnBvbO7UHwTEolOzFSfux1/view?usp=sharing 
(சண்டி தேவி ரோப் கார் வீடியோ இணைப்பு)

ஸ்ரீ பூர்ணநந்தா ஆசிரமம்:-

श्री पूर्णानंद आश्रम, HARIDWAR4.3
SANYAS ROAD, KANKHAL, SANYAS ROAD, MAYAPUR, HARIDWAR, UTTARAKHAND 249401, INDIA

அடுத்ததாக நாங்கள் சென்றது ஸ்ரீ பூர்ணநந்தா ஆசிரமம் ஆகும். சண்டிதேவி கோயிலிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஆசிரமம் அமைந்துள்ளது.   ஹர்துவாரில் சுமார் 300 –க்கும் மேற்பட்ட ஆசிரமங்கள் உள்ளன. அதில் மிக முக்கியமானது5 ஆசிரமங்கள் என கருதப்படுவது, ஜெய்ராம் ஆசிரமம், சப்தரிஷி ஆசிரமம், சோகம் ஆசிரமம், மா ஆனந்தமயி ஆசிரமம், ப்ரேம் நகர் ஆசிரமம் என்ற ஐந்து ஆசிரமங்களும் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றது. எல்லா ஆசிரமங்களிலும் வெளி மாநில பக்தர்கள் தங்கிச்செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது சிறப்பு.   
நாங்கள் சென்ற இந்த ஸ்ரீ பூர்ணாநந்தா ஆசிரமத்தில் அங்கிருந்த அன்பர்கள் ஒரு ருத்ராட்ச மரத்தை சுற்றி காண்பித்தர்கள். பிறகு அங்குள்ள பல்வேறுபட்ட மணிமாலைகள் விற்கும் கடையினுள் சென்று பார்த்தோம். எல்லாம் மிகவும் அழகாகவும், கவர்ச்சியாகவும் இருந்தன. எங்களுடன் வந்திருந்த சிலர் சிலதை வாங்கினார்கள். நான் பார்த்து இரசித்துவிட்டு சிறிது நேரத்தில் வெளியே வந்து அங்குள்ள நாற்காலியில் அமர்ந்துவிட்டேன்.

யார் இந்த பூர்ணாநந்தா என்ற எனது கேள்விக்கு சரியான பதில் இதுவரை கிடைக்கவில்லை. அங்கு கேட்டதற்கு, இவர் இராமேஸ்வரத்திலிருந்து இங்கு வந்ததாக சொன்னார்கள். அதற்கு மேல் அவரைப் பற்றின வரலாறு கிடைக்கவில்லை. பிறகு அங்கிருந்து வேறொரு இடம் நோக்கி எங்களது பயணம் தொடங்கியது. இங்கேயே மதியம் ஒரு மணிக்கு மேல் ஆகிவிட்டது. பசி நேரத்தில் வெய்யிலில் எங்களது பயணம் தொடர்ந்தது. அடுத்ததாக ஒரு கோயில்..

 தக்சேஸ்வரா மகாதேவ் கோயில் (Daksheswara Mahadev Temple):-
பூர்ணாநந்தா ஆசிரமத்திலிருந்து தக்சேஸ்வரா மகாதேவ் கோயிலுக்குச் சென்றோம். ஆசிரமத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவுதான். இக்கோயிலின் பின்னணியில் தட்ச மகாராசாவின் கதை பின்னப்பட்டுள்ளது.
தாட்சாயிணி என்பவர் சிவபெருமானின் மனைவியாவார். இவர் சிவபெருமானிலிருந்து பிரிந்த ஆதி சக்தியின் வடிவமாக கருதப்படுகிறார். இவர் சதி தேவி என்றும் அறியப்படுகிறார். இவரை பவானியென சிவகமாபுராணம் கூறுகின்றது. பிரம்மாவினால் தோற்றுவிக்கப்பட்ட பிரஜாபதி தட்சனுக்கும், முதல் மனிதர்களான சுவாயம்பு மனு மற்றும் சதரூபை தம்பதிகளின் மகளான பிரசூதி ஆகியோருக்கு மகளாக பிறந்தார். அதனால் பிரம்மாவின் பேத்தியாக கருதப்படுகிறார்.           
சிவபெருமானிடம் இருந்த வன்மம் காரணமாக பிரஜாபதி தட்சன் சதி சிவபெருமான் திருமணத்திற்குப் பிறகு பெரும் யாகமொன்றினை நடத்துகிறார். அந்த யாகத்திற்கு சிவபெருமானுக்கு தாட்சாயிணிக்கும் அழைப்பு அனுப்பாமல் இருக்கிறார். தந்தையின் மீது கொண்ட பாசத்தின் காரணமாக தட்சனின் யாகத்திற்கு வந்த தாட்சாயிணி அவமானங்களை சந்திக்கின்றார். அத்துடன் தன்னுடைய கணவரான சிவபெருமானை தட்சன் அவமதித்தை தொடர்ந்து அந்த யாகத்தில் விழுந்து மறிக்கின்றார். அதனையறிந்த சிவபெருமான் வீரபத்திரனை தோற்றுவத்து தட்சனை கொல்லும் படி உத்தரவிடுகிறார். தாட்சாயிணியின் உடலை எடுத்துக் கொண்டு நிலையின்றி சிவபெருமான் அலைவதைக் கண்ட திருமால் தாட்சாயிணியின் உடலை சக்கராயுதத்தினால் தகர்க்கின்றார். அதனால் தாட்சாயிணியின் உடல்கள் பல பகுதிகளாக சிதருண்டு பூலோகத்தில் பல இடங்களில் விழுகின்றது. இவ்வாறு விழுந்த இடங்களை சிவபெருமான் சக்தி பீடங்களாக மாற்றி மக்களின் வழிபாட்டிற்கும், அந்த இடங்களுக்கு காவலாகவும் பைரவர்களை தோற்றுவிக்கின்றார்.
உலகம் பராசக்தியால் இயங்குகிறது என்பதை பிரம்மாவின் மூலம் அறிந்தார் தட்சன். அதனால் பெரும் புகழ் பெருவதற்காக பராசக்தியே தன் மகளாக பிறக்க வரம் வேண்டினார். மகள் தனக்கு கட்டுப்பட்டவளாக இருப்பாள் என்பதால் பெரும்சக்தி தனக்கு கிடைக்குமென நினைத்தார். அவருடைய வரத்தினால் பராசக்தியே சதி என்கிற தாட்சாயினியாக பிறந்தார்.

தட்சனின் மகளான சதி சிவபெருமான் மீது காதல் கொண்டார். சிவபெருமானா நினைத்து தவமிருந்தாள். அந்த தவத்தின் பலனாக சிவபெருமானுடன் திருமணம் நடந்தது. இறைவனான சிவபெருமான் தனக்கு மருமகனாக வந்தால் மேலும் புகழும், அதிகாரமும் என்று நம்பிய தட்சன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.
தட்சன் கைலாயம் சென்றபோது, சிவபெருமான் எழுந்துநின்ற வரவேற்காததை நினைத்து வருத்தம் கொண்டார். வருத்தம் சிவன்மீதான கோபமாக மாறியது. அவரை பழிவாங்க பெரும் யாகமொன்றை நடத்தி சிவபெருமானை அழையாமல், மற்ற அனைத்து தேவர்களையும், இறைவன்களையும் தட்சன் அழைத்தார்.
இதனை அறிந்த சதி தன்னுடைய தந்தையிடம் முறையிட செல்ல சிவபெருமானிடம் அனுமதி கேட்டார். சிவன் அதற்கு அனுமதி தரமறுத்துவிட்டார். இருந்தும் தன்தந்தையின் செயலுக்கு காரணம் அறிந்திட சதி சென்றாள். அங்கு அவமானம் அடைந்து, யாககுண்டத்தில் விழுந்து மாண்டாள்.
இதனால் சிவபெருமான் ருத்திரனாக அவதாரம் எடுத்து தட்சனை அழித்தார். அவருடன் பைரவர்,காளி,வீரபத்திரர் ஆகியோர் யாகத்தினை அழித்தாக கூறப்படுகிறது.

இதுவரை கதை படித்தீர்கள். இந்த கதையின் மூலம் தெரியவருவதுஎன்ன வென்றால்? நமது கடவுளைவிட மனிதனே பரவாயில்லை எனத் தோன்றுகின்றது. மருமகன் எழுந்து நின்று நம்மை வாருங்கள் மாமா… என அழைக்காததால் ஏற்பட்ட போர்தான் இது. எனவே மனிதர்களாகிய நாம் மருமகன் மாமனார் சண்டையில் இது போன்று நடந்துக்கொள்ளாமல் வாழ வேண்டும் என்று இந்த ஆண்டவன் கதை சொல்கின்றது.
இதன் காரணமாக எழுந்த அந்தக் கோயிலை நாங்கள் சுற்றி பார்த்தோம். மூல லிங்கம் மிகவும் சிறியதாக இருந்தது. இரண்டு அய்யர்கள் அதனை பூஜை செய்துக்கொண்டே இருந்தனர். அதனை கண்டுவிட்டு 3 மணியளவில் அங்கிருந்து கிளம்பி எங்களது இருப்பிடத்திற்கு சென்றுவிட்டோம். இந்த கோயிலிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவுதான். 15 நிமிடத்தில் டேராவால் பவனுக்குச் சென்றுவிட்டோம். மதிய
உணவு அருமையாக இருந்தது. சாப்பிட்டுவிட்டு எல்லோரும் அவரவ
ர்கள் அறைக்குச் சென்று ஓய்வெடுத்தோம். பிறகு மீண்டும் இரவு சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு உறங்கினோம். இது எங்களது மூன்றாம் நாள் இரவு ஆகும். நாளை எங்குச் செல்வது என இன்றிரவு எனக்குத் தெரியவில்லை. விடிந்தால் பார்ப்போம்…   






தொடரும்…

Monday, April 20, 2020

மலைகளும் நதிகளும் - 2


அருட்பெருஞ்ஜோதி               அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை              அருட்பெருஞ்ஜோதி

மலைகளும் நதிகளும்
 (Part - 2)
தி.ம.இராமலிங்கம்
(யாத்திரை அனுபவங்கள்)

உத்ராகண்ட்:


உத்ராகண்ட் 08-09-2019 – ஞாயிற்று கிழமை: இன்றைய நிகழ்ச்சிகளை நாம் தொடுக்கும் முன்பு, உத்தராகண்டம் அல்லது உத்ராகண்ட் மாநிலம் பற்றி சிறிது தெரிந்துக்கொள்வோம். ”உத்தர” என்றால் ”இன்றைய”, ”தற்போதய”, ”புதிய” என்று பொருள்படும். ”காண்ட்” என்பது ”கண்டம்” “பெரிய இடம்” எனப் பொருள் படும். ”இன்றைய புகழ்பெற்ற இடம்” என உத்தாகண்ட் என்ற சொல்லுக்கு பொருள் தரலாம். வடலூர் என்ற ஊருக்கு வள்ளற்பெருமான் வைத்த பெயர் “உத்தர ஞான சிதம்பரம்” ஆகும். அதாவது ”இன்றைய சிதம்பரமாக விளங்குவது வடலூர்” என்று பொருள்படும்படி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தராகண்ட் என்று பெயர் வரும் முன்பு இம்மாநிலம் உத்தராஞ்சல் என்று அழைக்கப்பட்டது. இம்மாநிலம் இந்தியாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இம்மாநிலம் 09-11-2000 அன்று உத்திரப் பிரதேச மாநிலத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு உத்தராஞ்சல் என்று 2006-ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்டது. பிறகு உத்தரகாண்ட் என பெயர் மாற்றம் பெற்றது. இம்மாநித்தின் நிலப்பரப்பு முழுவதும் இமயமலையில் அமைந்துள்ளது. தேஹ்ராதுன் (டேராடூன்) உத்தராகண்ட் மாநிலத்தின் தலைநகராகும். எனினும் இம்மாநிலத்தின் உயர்நீதி மன்றம் நைனிடால் நகரில் உள்ளது. முசோரி, அல்மோரா, ராணிக்கெட், ரூர்க்கி ஆகியவை பிற முக்கிய ஊர்களாகும். இந்து சமயத்தின் திருத்தலங்களான ரிஷிகேஷ், ஹரிதுவார், கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்திரி, யமுனோத்திரி ஆகியவைகள் உத்தராகண்ட் மாநிலத்திலேயே அமைந்துள்ளன.

53,483 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட உத்தராகண்ட் மாநிலம் கார்வால் கோட்டம் மற்றும் குமாவுன் கோட்டம் என இரண்டு கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் கார்வால் கோட்டம் ஏழு மாவட்டங்களும், குமாவுன் கோட்டம் ஆறு மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. 1.ஹரிதுவார், 2.உத்திரகாசி, 3.சமோலி, 4.ருத்ரபிரயாக், 5.டெக்ரி கர்வால், 6.டேராடூன், 7.பெளரி கர்வால், 8.பித்தோரகர், 9.பாகேஸ்வர், 10.அல்மோரா, 11.சம்பாவத், 12.நைனிட்டால், 13.உதம்சிங் நகர். இம்மாநிலத்தில் மொத்தமாக 78 வட்டங்களும், 95 மண்டலங்களும், 7541 ஊராட்சிகளும் உள்ளன. மேலும் இம்மாநிலத்தில் மொத்தமாக 16,826 கிராமங்களும், 86 நகரங்களும் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவை 5 நகரங்கள் மட்டுமே. இம்மாநிலத்தில் 5 மக்களவைத் தொகுதிகளும், 70 சட்டமன்ற தொகுதிகளும் உள்ளன.

2011 – ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி இம்மாநிலத்தில் மொத்த மக்கள் தொகை 100,86,292 ஆகும். 1000 ஆண்களுக்கு 963 பெண்கள் வீதம் உள்ளனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 78.82% ஆகும். இதில் ஆண்களின் படிப்பறிவு 87.40%, பெண்களின் படிப்பறிவு 70.01% ஆகும். இம்மாநிலத்தில் இந்து சமயத்தினர் 83,68,636, இஸ்லாமியர்கள் 14,06,825, கிறுத்துவர்கள் 37,781, சீக்கியர்கள் 2,36,340, பெளத்தர்கள் 14,926, சமணர்கள் 9,183, சமயம் குறிப்பிடாதவர்கள் 11,608, பிற சமயத்தவர்கள் 993 ஆகவும் உள்ளனர்.
இம்மாநிலத்தில் காட்டுயிர் காப்பகம் மற்றும் தேசியப்பூங்கா அமைந்துள்ள இடங்கள் கங்கோத்ரி தேசியப்பூங்கா, கோவிந்த் பாசு விகார் காட்டுயிர் காப்பகம் ஆகும். டேராடூன், நைனிட்டால், முசோரி, அல்மோரா ஆகியவைகள் மலைவாழிடங்கள் ஆகும். (இம்மாநிலம் முழுதுமே மலைவாழிடங்கள்தான். நாம் குறிப்பிட்டது சுற்றுலாவிற்கான மலைவாழிடங்களாகும்.)

நாம் இதுவரை உத்ரகாண்ட் மாநிலம் பற்றி பொதுவில் அறிந்தோம். இன்று நாம் இருப்பது அம்மாநிலத்தில் உள்ள ஹரிதுவார் ஆகும். எனவே தற்போது ஹரிதுவார் பற்றி சிறிது பார்த்துவிடுவோம். 

ஹரிதுவார்:

அழகிய மலைகள் நிறைந்த மாநிலமான உத்தரகாண்டில் அமைந்திருக்கும் ”ஹரித்துவார்” கடவுளின் நுழைவாயில் என்றழைக்கப்படுகின்றது. இந்து வேதங்களில் கபிலாஸ்தானம், கங்காத்வார் மற்றும் மாயாபுரி என்று பலவாறாகக் குறிப்பிடப்படுகின்றது. உத்ராகாண்ட் மாநிலத்தில் உள்ள நான்கு புனித தலங்களுக்கும் நுழைவாயிலாக ஹரிதுவார் இருக்கின்றது. எனவே இதனைச் சைவர்கள் ஹர்த்வார் என்றும் வைணவர்கள் ஹரித்வார் என்றும் அழைக்கின்றனர். ஹர் என்பது சிவனையும், ஹரி என்பது விஷ்ணுவையும் குறிக்கின்றன. 

சப்த புரி என்றழைக்கப்படும் இந்தியாவின் 7 புனிதமான நகரங்களில் ஹரித்வாரும் ஒன்றாகும். (அந்த ஏழு நகரங்கள்: காஞ்சிபுரம், துவாரகை, உஜ்ஜைனி, வாரணாசி, அயோத்தி, மதுரா, ஹரித்வார்) புகழ்பெற்ற மன்னரான விக்ரமாதித்யரின் காலத்திலிருந்து ஹரித்வாரின் வரலாறு துவங்குகின்றது. ஹரித்துவாரின் பெரும்பாலான புண்ணிய தலங்கள் கங்கைக் கரையில் அமைந்துள்ளன. கங்கோத்ரியில் உற்பத்தியாகும் கங்கையானது பல பள்ளத்தாக்குகளைக் கடந்து முதன் முதலில் சமவெளியில் பாயக்கூடிய இடமாக விளங்குவது இந்த ஹரிதுவாராகும்.

நமது இராஜேந்திர சோழன்1019-ஆம் ஆண்டில் கங்கைவரை படையெடுத்துச் சென்று அப்பகுதிகளை வென்றதால் கங்கைகொண்டான் என்றும் கடாரம் கொண்டான் என்ற பெயரும் ஏற்பட்டது. கங்கையை வென்றதால் கங்கைகொண்ட சோழபுரம் என்ற புதிய தலைநகரை1023-ஆம் ஆண்டு தமிழகத்தில் உருவாக்கி அங்கு சிவன் கோயிலையையும் எழுப்பியதை இங்கே நாம் நினைவு கொள்வோம். பண்டைய தமிழ்ப் புலவர்கள் இந்நகரை கங்காபுரி, கங்கைமாநகர், கங்காபுரம் என்று குறிப்பிட்டுள்ளனர். கங்கை வரை பெற்ற வெற்றியின் நினைவாக ”கங்கை கொண்ட சோழப் பேரேரி” அமைக்கப்பட்டது. இதற்கு சோழகங்கம் என்ற பெயரும் உண்டு.

ஹரித்துவாரில் கும்பமேளா கொண்டாடுகின்றார்கள். கிண்ணத்திருவிழா எனத் தமிழில் கூறலாம். கிண்ணமா…? அது என்ன கிண்ணம்? என பார்க்கலாம். அமுதம் நிறைந்த கிண்ணத்தை (பாத்திரம்) அடைய முயற்சித்த கதைதான் இந்த திருவிழாவிற்கு மூலமாகும்.

முன்னொரு காலத்தில் வேதங்கள் தழைத்தோங்கி இருந்தன. அச்சமயம் ஒற்றுமையுடன் இருந்த தேவர்களும் அசுரர்களும் அமிர்த பானத்தினை க்ஷீர சாகர பாற்கடலில் இருந்து எடுக்க முயற்சிக்கும் பொழுது அமிர்த பானமிருந்த கிண்ணத்தினை அசுரர்கள் களவாடிச் செல்கின்றனர். இவர்களை துரத்திச் செல்லும் தேவர்களும் 12 நாட்களும், 12 இரவுகளும் (12 ஆண்டுகளுக்கு சமம்) போர் புரிந்தனர். அச்சமயம் வானுலகிலிருந்து அமிர்த பானம் அதன் கிண்ணத்திலிருந்து சிந்தியது. சிந்திய அமிர்த பானம் பூலோகத்தில் நான்கு இடங்களில் விழுந்தது. ஹரித்துவார், அலகாபாத், உஜ்ஜயினி, நாசிக் ஆகிய நான்கு ஊர்களில் விழுந்தன. ஹரிதுவாரில் அமிர்தம் விழுந்த இடம் மிகப் புனிதமான மலைவழியான ஹர் கி பாவ்ரியில் (இறைவனின் காலடிகள்) பிரம்ம குந்த் எனக் கருதப்படுகின்றது. 12 ஆண்டுகள் போர் நடைபெற்றதால் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா நடைபெறுகின்றது. 

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை அலகாபாத்தில் திரிவேணி சங்கமத்தில் (கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் கூடுமிடம் – பிரயாகை) கும்பமேளா நடைபெறும். 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகா கும்பமேளாவும் இங்குதான் நடக்கும். நிர்வாண நாகா சாதுக்கள் கூட்டம் கடுங்குளிரிலும் இங்கு வந்து நீராடுவர். ராம்குட் என்னுமிடத்தில் சாதுக்கள் முதலில் நீராட அனுமதிக்கப்படுவர். பின்னர் சாதுக்கள் ஆற்றில் வெங்கல நாணயங்களை எறிவார்கள். அந்நாணயங்களைப் பெற மக்கள் முட்டி மோதுவார்கள். அந்நாயணயங்கள் அரிய சக்தி கொண்டதாக மக்கள் நம்புகின்றனர்.

ஹரிதுவாரில்தான் முதலில் கும்பமேளா துவங்கும். அதனைத் தொடர்ந்து மற்ற மூன்று இடங்களான பிரயாகை, நாசிக், உஜ்ஜயனி ஆகிய ஆற்றுப்படுகைகளில் இவ்விழா நடைபெறும். இவ்வனைத்து இடங்களிலும் மூன்றாடுகளுக்கு ஒரு முறை கும்பமேளா நடைபெறுகின்றது.

ஹரித்வார் மாவட்டம் மேற்கில் சஹரான்புர், வடக்கில் டேராடூன், கிழக்கில் பெளரி கர்வால், தெற்கில் ரூர்க்கி, முசாபர் நகர் மற்றும் பிஜ்னூர் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. மாவட்டத் தலைமை அலுவலகம், ஹரிதுவாரின் இரயில்வே நிலையத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ரோஷ்னாபாத்தில் உள்ளது. 

ஹரிதுவார் மாவட்டம் பெரும்பாலும் காடாக உள்ளது. மேலும் ராஜாஜி தேசியப்பூங்கா மாவட்டத்தின் வரையறைக்குள் உள்ள காட்டு விலங்குகள் மற்றும் சாகசப் பிரியர்களுக்கு பொருத்தமான செல்லிடமாக உள்ளது. ஹரிதுவார் மாவட்டம் இந்தியாவின் உத்ரகாண்ட் மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் சுமார் 2360 கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 820 அடி உயரத்தில் வடக்கு மற்றும் வட கிழக்கில் ஷிவாலிக் மலைகளுக்கும் தெற்கில் கங்கா நதிக்கும் இடையில் உள்ளது.

ஹரிதுவாரில் கங்கோத்ரி, குஷ்வர்த், கன்வால், மன்சா தேவி, சாண்டி தேவி ஆகிய பஞ்ச தீர்த்தங்கள் பார்க்க வேண்டியவையாகும். மேலும் மாயா தேவிக் கோயில், தக்ஷேஷ்வர மஹாதேவ் கோயில், நீல் தாரா பக்ஷி விஹார், சதி குந்த், பீம்கோடா ஏரி, ஜெய்ராம் ஆஷ்ரமம், சப்த ரிஷி ஆஷ்ரமம், சப்த சரோவர், இராமானந்த் ஆஷ்ரமம், ராம் மந்திர், தூதாதாரி பார்ஃபானி கோயில், சுரேஷ்வரி தேவி கோயில், பாவன் தாம், பாரத மாதா மந்திர், ஆனந்தமயீ மா ஆசிரமம், பிரான் காளியார் போன்ற இடங்களும் பார்க்கத்தக்கவை. நகரைச் சுற்றி பிற கோயில்களும் உள்ளன. ஹரிதுவாரில் மதுவோ இறைச்சி உணவோ அனுமதிக்கப்படுவதில்லை என்பது முக்கியமாக அறியவேண்டியதாகும். 

2013-ஜூன் மாதம் இம்மாநிலத்தில் பெய்த தொடர் மழையால் இம்மாநில ஆறுகளில் வரலாறு காணாத அளவில் வெள்ள நீர் கரை புரண்டு ஓடியது. ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்களும், ருத்ரபிரயாக், பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்திரி, மற்றும் யமுனோத்திரி போன்ற புனித இடங்களில் இருந்த பக்தர்களில் பலரும் இறந்தனர். மேலும் கேதார்நாத் கோயில் (முக்கிய கோயில் தவிர) அதன் சுற்றுபுறக் கட்டிடங்கள் மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. நான்கு புனித இடங்கள் என்று சொல்லக்கூடிய பத்ரிநாத் கோயில், கேதார்நாத் கோயில், கங்கோத்ரி மற்றும் யமுனோத்திரி ஆகிய இடங்களுக்கு செல்லும் தரைவழிச் சாலைகள் நிலச்சரிவுகளால் முற்றிலும் சேதம் அடைந்தன. கேதார்நாத் சிவபெருமான் கோயில் சீரமைக்கப்பட்டு பக்தர்கள் வழிபாட்டிற்கு 2014-மே மாதம் திறக்கப்பட்டது. இந்திய அரசின் பேரிடர் மேலாண்மைக் குழு கேட்டுக்கொண்டதின் பட்சத்தில், ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் பேலூர் மடமானது பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப்பணிகளை மேற்கொண்டது. தலைமை மடத்தின் வழிகாட்டுதலுடன் ராமகிருஷ்ண மிஷன் சேவாசிரமம், கங்கல் (ஹரிதுவார்) பரந்த நிவாரணப் பணிகளை 21- ஜூன் முதல் 4 – ஆகஸ்ட் வரை மேற்கொண்டது.  



ரிஷிகேஷ் – கங்கா நதி



















                                             கேதார் நாத்










https://youtu.be/LGgZOLBclYY   
கேதார்நாத் அழிவுகள் வீடியோ இணைப்பு.

நதிகளும் மலைகளும் முதல் பகுதியினை கீழ் காணும் இணைப்பில் படிக்கலாம்.
https://vallalarr.blogspot.com/2019/10/blog-post.html 

(தொடரும் - 2)