வந்ததே கொரோனா
(தி.ம.இராமலிங்கம்)விழி பார்த்து வழி நடந்தும்
விளக்க மின்றி மதமான பெருங்
குழி விழுந்தி ளைத்து இன்னும்
கருணை யின்றி புலால் நுகரும்
இழிச் செயல் செய்து நெஞ்சில்
இரக்கம் சிறிது மின்றி செய்யும்
பழி பாவச் செயலால் உன்னை
பண் படுத்த வந்ததே கொரோனா. (1)
துடிப்பு சிறிது மின்றி பிறஉயிர்
துடிப்பை மகிழ்ந் தூட்டும் மதப்
படிப்பை மிகப் படித்து பல்லிளித்து
பாவம் செய்யவே பக்தி செய்து
நடிக்கும் உலகில் இருக்கும் கூட்டம்
நொடிந்து போகவே சிற் றுயிரை
தடித்து படைத்து இறைவன் செய்த
தயவால் பரவி வந்ததே கொரோனா. (2)
மண்ணின் மூத்த உயிரிகளை நேற்றய
மனிதன் காட்டு விலங்கென அடித்து
எண்ணிறைந்த பலிகளை சாமி கேட்குது
என்று தன் பசிக்கு உணவாக்குவான்
கண்ணிருந்தும் காணாமல் போவார் போல
கருத்துரைத்த வள்ளல் சொல் கேளாது
உண்மைக்கு மாறாக செயல் படும்
உன்னை மிரட்ட வந்ததே கொரோனா. (3)
சுய ஊரடங்கும் மூவெண் தடைகளும்
சுழன்று வரும் பாவம் போக்குமோ
சுய அடக்கம் கூறும் சுத்தசன்மார்க்கம்
சூழும் வல்வினை போக்கும் உன்
பய மதைபூஜ்ஜிய மாக்கும் மாறாய்
பாடை மேல் செல்லும் வரை
தய வறியா மாந்தருக்கு அவர்காண
தலை வீழவைக்க வந்ததே கொரோனா. (4)
கத்தும் போதும் பிறஉயிர் இரத்தம்
சிந்தும் போதும் களித்து நின்றாய்
பத்து ரூபாய்க்கு இன்று கோழி
பத்து கொடுத்தாலும் வேண்டா மென்று
பித்தனாய் செல்லக் காரண முன்னுயிர்
பற்று என் றில்லாது அனைத்துயிரும்
நித்தமும் இன்புற்று வாழ நினைத்து
நிறைவு காண வந்ததே கொரோனா. (5)
எல்லாம் வல்லஅருட் பெருஞ் ஜோதி
அற்புதக் கடவுளை நினைந் துருகி
நல்லார் எல்லோரும் வணங்கித் தொழுதிட
நாடுக ளெல்லாம் நலம் பெற்று
பொல்லா புலாலும் வழக்கற்று பொய்
புகலா மார்க்கம் நிலைபெற்று மெய்
நில்லாத நிலை விடைபெற்று என்றும்
நன்னெறி காண சென்றதே கொரோனா. (6)
உலகெலாம் உணர்ந்து ஓதுகின்ற நிலையும்
உளமெலாம் நிறைந்து பாடுகின்ற கலையும்
மலமெலாம் ஒழிந்து மதிக்கின்ற மொழியும்
மதமெலாம் தளர்ந்து வருகின்ற இறையும்
நலமெலாம் வளர்ந்து தருகின்ற தயவும்
நினைந்து நினைந்து உருகுகின்ற நெஞ்சமும்
நிலமெலாம் பரந்து இருக்கக் கண்டுவிட்டு
நடுக்குற்று பறந்து சென்றதே கொரோனா. (7)
இருபத் தொருநாளில் இருக்குமோ உயிரும்
என்றே அஞ்சி அடங்கினோம் வீட்டில்
உருமெலிந்து அன்றாட பிழைப்பு மின்றி
உருண்டை சோற்றுக்கு அல்லல் பட்டு
வரும் நாளில் பசித்துன்பம் மேலோங்கி
வறுமையால் மரணமுறும் நிலை பெருகி
இருளான இந்தியாவில் இனி இருக்கவும்
இடமின்றி சபித்துச் சென்றதே கொரோனா. (8)
மனிதன் இல்லா உலகம் இனிமையாம்
மரணம் எனும் அச்சம் இனிமையாம்
தனித்து இருக்கும் சுகம் இனிமையாம்
துணிந்து மீள்வோ மென்றமடம் இனிமையாம்
இனியும் திருந்தோ மெனும்குணம் இனிமையாம்
இரக்க மில்லாது புலாலுண்பது இனிமையாம்
கனித்து எதிர்காலம் கூறும்பொய் இனிமையாம்
குறித்த இனிமையால் செல்லுமோ கொரோனா? (9)
சுற்றும் உருண்டை பந்திலே நோயிலே
சிக்கிமாளும் மானிடரைக் கண்டு இனி
சற்றும் நான்சகித்திட மாட்டேன் மனித
சக்தி கொடுக்கும் சன்மார்க்க சங்கப்
பற்றும் திருவருட்பாத் தமிழ் அளிக்கும்
பலசித்தி வகைகளை எனக்க ளிப்பாய்
முற்றும் மரணாதிகளை தடுத்து உனது
மன்றி லாடஎனக் கிச்சைகாண் எந்தாய். (10)
கொரோனா அழகியே -
உனை
முகர்ந்தாலும் முக்தி
உட்கலந்தாலும் சித்தி!
எனைஈர்க்கும்
உன் கீழ்நோக்கு
பார்வையும்
உன் முகம் காட்டும்
வெறுமையும் நினைத்து
மகிழ்ந்தேன்!
உலக மாயையால் – என்னை
சுவைக்கத் தூண்டும்
உன் தேன்சுவை
வதனங்களுக்கு வந்தனம்
உலகையே அச்சுறுத்தும்
உன் எழில் உருவமும்
முத்தந்தர அழைக்கும்முன்
இரு கன்னங்களும்
தனித்தவன் முன்
என்ன செய்யும்?
வெற்றிவாகைச் சூடும்
உன்னிரு புருவங்களும்
அனைப்பிலே சூடேற்றும்
உன்னுயிர் சுவாசங்களும்
விழித்தவன் முன்
என்ன செய்யும்?
கொரோனா அழகியே –
சன்மார்க்க உலகிலே
துன்மார்க்கம் ஒழியவே
மானுடம் சிறக்கவே
உலகுயிர் வாழவே
சென்றுவிடு… சென்றுவிடு…
அரிது, பெரிது, இனிது, கொடிது.
உலகீரே! அரியது கேட்கின்…
அரிதரிது கொரோனா ஆதல் அரிது
கொரோனா ஆயினும் கோவிட் 19
ஆதல் அதனினும் அரிது
கோவிட்19 ஆயினும் உலகை சுற்றி
வலம் வருதல் அதனினும் அரிது
உலகை வலம் வரினும் ஒழுக்கமில்லா
மானுடரை கொல்லுதல் அரிது
கொல்லினும் தருமச் சாலையில் நடப்போரை
கடவுள் என்றே துதித்து சென்றிடுமே.
உலகீரே! பெரியது கேட்கின்…
பெரிது பெரிது கொரோனா பெரிது
கொரோனாவோ கடவுள் படைப்பு
கடவுளோ மனித மனத்தின் படைப்பு
மனமோ உலக மாயையின் படைப்பு
உலக மாயையோ வெட்டவெளியின் படைப்பு
வெட்ட வெளியோ அணுவின் படைப்பு
அணுவோ ஒளியின் அற்புதப் படைப்பு
ஒளியின் பெருமை சொல்லவும் பெரிதே.
உலகீரே! இனியது கேட்கின்…
இனிது இனிது கொரோனா இனிது
அதனினும் இனிது ஏகாந்தம்
அதனினும் இனிது ஒழுக்கம்
அதனினும் இனிது தாவரஉணவு
அதனினும் இனிது அக இனத்தாரைக்
கனவிலும் நனவிலும் காண்பது தானே.
உலகீரே! கொடியது கேட்கின்…
கொடிது கொடிது கொரோனா கொடிது
அதனினும் கொடிது ஊரடங்கால் வறுமை
அதனினும் கொடிது ஆற்றொணா அரசியல்
அதனினும் கொடிது அன்பிலா மதங்கள்
அதனினும் கொடிது மதப்பிடியுள்
மனிதர்கள்தானே!
இன்றைய உலகம்! (12-04-2020)
ஓடிய ஓட்டமென்ன?
துப்பிய எச்சில் என்ன?
வீசிய குப்பை என்ன?
கொன்று தின்னுமுணவு என்ன?
நாடுவிட்டு நாடுபோனால்
நோயோடு வருவதென்ன?
வீடுவரை
உலகம்
வீதிவரை
தனிமை
நாடுவரை
நடுக்கம்
நாளை
வரை யாரோ?
தேடும்
வரை செல்வம்
தேனிலவில்
நாட்டம்
தேடிவந்த
இன்பம்
தெய்வசுகம்
தருமா? (வீடு)
வட்டிகேட்கும் வங்கி
விட்டுவிலகும் அங்கி
பட்டனத்து வேலை
விட்ட பின்பு ஞானி! (வீடு)
சென்றவனைக் கேட்டால்
செய்த வினை என்பான்
செய்த வினை கேட்டால்
சுற்றி வந்தேன் என்பான்! (வீடு)
விட்டிழுக்கும்
மூச்சு
கட்டிலிலே
போச்சு
வெட்டிவச்ச
பூமி
படுத்துவிட்டா
சாமி! (வீடு)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.