திருப்புகழ் கிடைத்த கதை
- அறிஞர் வ.த.சுப்பிரமணிய பிள்ளை.
திருப்புகழ் நெருப்பென்று அறிவோம்..
இன்று நாம் போற்றிப்புகழும் திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த 24 நான்கு வருட உழைப்பை நாம் அறிவோமா? அதற்கு யார் காரணம் என்பதை வரலாறு அறியுமா?
அருணகிரிநாதர் கி.பி.15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர். அவர் முருகக் கடவுள் மீது இயற்றிய ஒரு பக்தி நூல்
திருப்புகழ் ஆகும். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. அதாவது கிடைத்துள்ளன. இன்னமும் கிடைக்காதது பல நூறு ஆகும். இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். திருப்புகழிலுள்ள இசைத்தாளங்கள் இசை நூல்களில் அடங்காத தனித்தன்மை பெற்றவை.
கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன்...... அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம் எனவினை.... என்றுதான் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் தனது அனைத்து சொற்பொழிவுகளைத் தொடங்குவார். அவர் மூலமே அடியேனுக்கும் திருப்புகழ் அறிமுகம் ஆனது.
அத்தகைய திருப்புகழ் நமக்கு கிடைக்க தனிப்பட்ட ஒரு அரசு அலுவலரின் தன்னலமற்றது தொண்டினாலும், ஆர்வத்தாலுமே காரணமாக அமைந்தது
அந்த போற்றுதலுக்குரிய அறிஞர் வ.த.சுப்பிரமணிய பிள்ளை ஆவார்.
திருப்புகழ் நமக்கு கிடைக்கவும் சுவையான ஒரு காரணமும் உள்ளது.
அவர் குறித்து ஒரு கட்டுரையை தமிழ் இந்து 9/8/14 அன்று வெளியிட்டிருந்தது.
அதை இப்போது சித்தர்களின் குரல் வாயிலாக பார்ப்போம்.....
பிரிட்டிஷ்காரர்கள் என்ற மாபாவிகள் இந்தியாவை ஆண்டபோது இந்தியர்களுக்கு அரிதாகவே அரசுப் பணி தருவார்கள். ஒருவர் மாவட்ட ஆட்சியர் ஆகும் தகுதி இருந்தால், அவர் இந்தியராக இருந்தால், அவருக்கு எழுத்தர் வேலை கொடுப்பார்கள்.
வ.த.சுப்பிரமணிய பிள்ளை 1871-ம் ஆண்டு மஞ்சக்குப்பம் வழக்காடு மன்றத்தில் மாவட்ட முன்சீப்பாகப் பணிபுரிந்த காலம் அது. சிதம்பரம் நடராஜர் கோயில் சம்பந்தமான வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்த வழக்கில் சாட்சிக் கூண்டில் நின்ற தீட்சிதர்கள் தங்களுடைய வாதத்தில் கோவில் உரிமை தீட்சிதர் களாகிய எங்களுக்கே என்று பொருள் தரக் கூடிய திருப்புகழ் பாடலை மேற்கோள் காட்டி வாதாடினர்.
அப்பாடலின் வரி;
வேத நூன் முறை வழுவாமே தினம் வேள்வியால் எழில் புனை
மூவாயிர(ம்) மேன்மை வேதியர் மிகவே பூசனை புரிகோவே...
பொருள்:
வேத நூலில் கூறப்பட்ட முறைப்படியே, தவறாமல் நாள் தோறும் யாகங்கள் செய்யும் அழகைக் கொண்ட சிறப்பான தில்லை மூவாயிரம் வேதியர்கள் மிக நன்றாகப் பூஜை செய்யும் தலைவனே....
வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் அந்தப் பாடலை கேட்ட மாத்திரத்தில் சொக்கிப் போனார். என்ன பாடல் அது எனக் கேட்டார். அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ் பாடல்கள் 16000 இல் ஒன்று என்று சொன்னார்கள். எங்கே அந்நூலைக் காட்டுங்கள் என்றார். ஓலைச்சுவடி ஒன்றை நீட்டினார்கள். மீதம் பாடல்கள் எங்கே.. என்று பதறினார்... எங்களிடம் இல்லை என்று கை விரித்தார்கள்.
தீட்சிதர்கள் கூறிய வாசகத்தைக் கேட்டவுடன் வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்களுக்கு அக்கணமே பொறி தட்டியது. அருணகிரி நாதர் பாடிய பதினாறாயிரம் பாடல்களில் ஒரு ஆயிரம் பாடல்களையாவது சேகரித்து அச்சிட்டு வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டார்.
தலங்கள் தோறும் சென்று செல்லேறிப் போன பல வழுக்கள் பொதிந்திருந்த திருப்புகழ் ஓலைச்சுவடிகள் பலவற்றைச் சேகரித்து ஒத்துப்பார்த்து, பாட பேதங்களைக் கண்ணுற்று வெவ்வேறு சுவடிகளில் காணும் வித்தியாசங்களைப் பண்டிதர்களைக் கொண்டு திருத்தி அச்சிட்டுப் புத்தக வடிவில் யாவரும் எளிதில் பெறுமாறு செய்த ஏந்தல் வ.த.சுப்பிரமணிய பிள்ளை.
அரசாங்கப் பணிகளுக் கிடையில் தமக்குத் தெரிந்த பல நண்பர்களிடம் தொடர்பு கொண்டுத் திருப்புகழ் ஏட்டுச் சுவடிகளைத் தேடத் தொடங்கினார். ஆங்காங்கு அவை கிடைக்கத் தொடங்கின.....
(1) 1876-ம் ஆண்டு ஆறுமுக நாவலர் எழுதிய சைவ வினா-விடையில் திருப்புகழின் ஆறு பாடல்கள் இருந்தன.
(2) 1878-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி அன்று காஞ்சிபுரம் புத்தேரி தெரு அண்ணாமலை பிள்ளை என்பவரிடமிருந்து 750 பாடல்கள் கொண்ட ஏட்டுச்சுவடிகள் கிடைத்தன.
(3) அதே வருடம் பின்னத்தூர் சீனிவாச பிள்ளையிடம் 450 பாடல்களும், பின்னர் அவரிடமே 150 பாடல்களும் கிடைத்தன.
(4) 20.03.1881-ல் கருங்குழி ஆறுமுக ஐயர் என்ற வீர சைவரிடமிருந்து 900 பாடல்கள் திருப்புகழ்ச் சுவடிகள் கிடைத்தன.
(5) 1903-ம் ஆண்டு திருமாகறல் என்ற ஊரில் 780 பாடல்கள் கிடைத்தன.
உ.வே.சாமிநாதையர் தமிழகமெங்கும் தமிழ் இலக்கிய ஏட்டுச் சுவடிகளைத் தேடிக்கொண்டிருந்த காலம் அது. வ.த.சுப்பிரமணிய பிள்ளையவர்கள், உ.வே.சாவிடம் தொடர்பு கொண்டு திருப்புகழ் சுவடிகளைக் கண்டால் தெரிவிக்குமாறு வேண்டிக் கொண்டார். இதை உ.வே.சா, தனது "என் சரித்திரம்" நூலில் பதிவுசெய்துள்ளார்.
அருணகிரிநாதர் இயற்றி அருளியுள்ள திருப்புகழ் பாடல்களின் எண்ணிக்கை 16000 என வரகவி மார்க்க சகாய தேவர் தனது பாடலில்,
"எம் அருணகிரி நாதர் ஓது பதினாயிரத் திருப்புகழழ் அமுதுமே" என்ற வாக்கால் கூறியுள்ளார்.
ஆனால் வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்களின் விடா முயற்சியால் 1324 பாடல்கள் மட்டுமே சேகரிக்க முடிந்தது.
ஓலைச்சுவடிகளின் குறை களைக் களைந்து சீர் செய்வ தற்கு மஞ்சக்குப்பம் பள்ளி ஆசிரியர் சிவசிதம்பர முதலியார், சேலம் சரவணப்பிள்ளை, ஆனந்த ராம ஐயர் போன்றவர்கள் ஆற்றிய பங்கு பெரிது.
திருப்புகழ் முதல் பதிப்பை 05.06.1891 அன்று சிவசிதம்பர முதலியார் செப்பம் செய்து சீர்திருத்தி வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்களிடம் ஒப்படைத்து விட்டார். 9.04.1895-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட திருப்புகழ் பாடல்களை அச்சிற்குப் பதிப்பிக்கக் கொடுத்தார்.
திருப்புகழ் கட்டம் செய்யப்பட்டு அழகிய வடிவில் அச்சில் பதிப்பித்து முதன்முதலாக புத்தக வடிவில் பிள்ளையவர்கள் அப்போது பணிசெய்து கொண்டிருந்த திருத்துறைப்பூண்டிக்கு அனுப்பப்பட்டது. புத்தக வடிவில் திருப்புகழைக் கண்ட பிள்ளையவர்கள் பேரானந்தம் அடைந்தார். அதே சமயம் ஓலைச்சுவடியிலிருந்து பெயர்த்து எழுதிச் செப்பம் செய்து தந்த சிவ சிதம்பர முதலியார் அச்சு வடிவத் திருப்புகழ் புத்தகத்தைக் காணாமலேயே இறந்துபோய் விட்டார்.
வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் திருப்புகழைப் புத்தக வடிவில் கண்ட அன்று தனது டைரிக்குறிப்பில் 09.04.1895-ம் ஆண்டு இவ்வாறாகக் குறிப்பிடுகிறார். கடந்த 24 வருடங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட திருப்புகழ் பதிப்பு வேலை முடிய இவ்வளவு காலம் சென்றுள்ளது. இப்போதும் பாதி அளவே முடிந்துள்ளது என்று கவலையுடன் தமது டைரியில் குறிப்பிட்டுள்ளார்.
1909-ம் ஆண்டு சில திருத்தங்களுடன் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது. அதே ஆண்டு ஏப்ரல்-16-ம் தேதி இரவில் படுக்கைக்குச் சென்றவர் நள்ளிரவில் உயிர்துறந்துவிட்டார். வ.த.சுப்பிரமணிய பிள்ளையின் புதல்வர்கள் வ.சு.செங்கல்வராய பிள்ளை மற்றும் வ.சு.சண்முகம் பிள்ளையும்புதிய பாடல்களை இணைத்து திருப்புகழினைத் தொடர்ந்து வெளியிடலாயினர்.
வ.த.சுப்பிரமணிய பிள்ளையின் விருப்பப்படி அவருடைய சமாதி, திருத்தணி கோவிலை நோக்கியபடி அமைக்கப்பட்டுள்ளது.
நாம் இன்று முருகனை நினைந்து உருகிப் பாடும் திருப்புகழ் ஒரு தனி நபர் விடா முயற்சியால் தான் என நாம் நினைக்கும்போது அய்யா வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்களின் பெருந்தொண்டு எத்தகையது என நன்றியுடன் வணங்குவோம்.
சந்த முனி யின் 1324 திருப்புகழ் பாடல்களில் மொத்தமாக 857 சந்தங்களும் அவற்றிலிருந்து 178 தாள அமைப்புகளும் கிடைத்துள்ளன. என ஓர் ஆய்வுக் குறிப்பு சொல்கிறது.
நமக்குக் கிடைத்துள்ள 1324 பாடல்களில் 857 சந்த பேதம்; 16000 பாடல்களும் கிடைத்திருந்தால்….!!
உதாரணமாக ஒரு மிக எளிய பாடல் பழனி திருப்புகழில் இருந்து பார்ப்போம்.
சந்தம்:
தனதான தந்தனத் ...... தனதான
தனதான தந்தனத் ...... தனதான
பாடல் :
அபகார நிந்தைபட் ...... டுழலாதே
அறியாத வஞ்சரைக் ...... குறியாதே
உபதேச மந்திரப் ...... பொருளாலே
உனைநானி னைந்தருட் ...... பெறுவேனோ
இபமாமு கன்தனக் ...... கிளையோனே
இமவான்ம டந்தையுத் ...... தமிபாலா
ஜெபமாலை தந்தசற் ...... குருநாதா
திருவாவி னன்குடிப் ...... பெருமாளே..
இப்பாடலில் அருணகிரிநாதர் சாமிகள் முருகனின் அருள் பெறுவதற்கான எளிய வழிகள் சொல்கிறார்.
பிறர்க்குச் செய்த தீமைகளினால் நிந்தனைக்கு ஆளாகி அதனால் வினைகளை ஈட்டி விடாமல், அவ்வாறு தீய குணங்கள் கொண்ட மனிதர்களுடன் பழகாமலும், உரிய கிரியைகளுடன் கூடிய பூசையை தினம் செய்தால் முருகனின் அருள் பெறலாம் என்கிறார். ஒவ்வொரு சைவரும் ஜெபமாலை வைத்து இருக்க வேண்டும்.
திருமுருகன் ஆறுபடைகளில் மூன்றாவது படைவீடு திருஆவினன்குடி என நக்கீரதேவ நாயனார் அவர்களால் திருமுருகாற்றுப்படை நூலில் பாடப்பட்டு இருக்கிறது. இத்திருக்கோயிலில் மயிலில் ஆரோகணித்து திருமுருகன் வீற்றிருப்பார். பழனி மலைமேல் இருக்கும் தண்டபாணி கோயில் படை வீடு அல்ல என்பர் பெரியோர்.
திருத்தணி திருப்புகழில் அருணகிரிநாதர் சுவாமிகள் திருப்புகழ் சிறப்பு சொல்கிறார்.
சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்
செகுத்தவர் ருயிர்க்குஞ் ...... சினமாகச்
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பென் ...... றறிவோம்யாம்
நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
நிசிக்கரு வறுக்கும் ...... பிறவாமல்
நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
நிறைப்புக ழுரைக்குஞ் ...... செயல்தாராய்.
அய்யா வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்களின் விடா முயற்சியால் 1324 பாடல்கள் நம் கையில் உள்ளது. நெருப்பையும் எரிக்கும் நெருப்பான திருப்புகழில் இருந்து எளிய பாடல் ஒன்றாவது தினம் ஒன்று விடாமல் சொல்வோம்... முருகனின் திருவருள் பெறுவோம்.