பயோலாஜிக்கல்:
நான் பயோலாஜிக்கலாக பிறக்க வாய்ப்பில்லை, என நமது பிரதமர்
நரேந்திர மோதிஜி கூறுகின்றார். இதன் உண்மை என்னவாக இருக்கும்??? ம்ம்ம்ம்….
ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து, அதனால் கருவுற்று மற்ற மனிதர்கள்போல அல்லது மற்ற உயிரினங்கள் போல நான் இந்த பூமியில் பிறக்கவில்லை என்பதே பயோலாஜிக்கலாக பிறக்கவில்லை என்பதன் பொருளாகின்றது.
என்ன ஈது அதிசயம்!!! அற்புதம்!!!
”மேலும் என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான். ஏதோவொரு விடயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கின்றார்,” என்றும் கூறுகின்றார்.
என்ன ஈது அதிசயம்!!! அற்புதம்!!!
தமிழகத்தில் உள்ள அருளாளர்களில் சிலர், இறைவனால் நான் இந்த பூமியில் பிறந்தேன். நான் பிறந்தது இந்த நோக்கத்திற்காகத்தான் என்று கூறியிருக்கின்றார்கள். ஆனாலும் அவர்களில் யாரும் நான் தாய் தந்தையன்றி அப்படியே இறைவனால் உருவாக்கப்பட்டு இப்பூமியில் குதித்துவிட்டதாக கூறவில்லை.
பின்னைநின் றென்னே பிறவி பெறுவது
முன்னைநன் றாக முயல்தவம் செய்திலர்
என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே. (திருமந்திரம்-81)
மக்களே! நீங்கள் எல்லாம் முற்பிறவியில் நல்ல தவம் செய்திருந்தால், இப்பிறவியில் இப்படிப் பிறந்து உழல மாட்டீர்கள். ஆனால் முற்பிறவியில் நல்தவம் நான் செய்ததனால், என்னை இப்பிறவியில் தமிழ் மொழியில் உண்மைகளை உரைக்கச் சொல்லி, என்னை நன்றாக இறைவன் படைத்தான், என்கின்றார் திருமூலர்.
அகத்தே கறுத்து புறத்துவெளுத்
திருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க
சங்கத் தடைவித் திடஅவரும்
இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந்
திடுதற் கென்றே எனைஇந்த
உகத்தே இறைவன் வருவிக்க
உற்றேன் அருளைப் பெற்றேனே.
(திருஅருட்பா-உற்ற துரைத்தல்-9)
என்று நமது வள்ளற்பெருமானும், அகத்தே தீயவராய் கறுமை வண்ணமாய் இருந்துக்கொண்டு, புறத்தே நல்லவர்களாய் வெண்மை உடை அணிந்துக்கொண்டு திரியும் உலகியல் மனிதர்களை திருத்தி சன்மார்க்க வழியில் அவர்களை நடைபயின்றிட செய்விக்கும் விதமாக, நான் இந்த உலகிற்கு இறைவனால் வருவிக்க உற்றேன், என்கின்றார்.
ஆனால் திருமூலரும், வள்ளலாரும் தங்களது பிறப்பு தாய் தந்தையரால் வந்தது அல்ல என மறுக்கவில்லை.
ஆனால், நமது பிரதமர் கூறிய அந்த வாக்கியம் (பயோலாஜிக்கல்) லாஜிக்கே இல்லாமல் உள்ளது. பரமாத்மாவால்தான் எவ்வுலகிலும் எவ்வுயிரும் பிறப்பெடுக்கின்றன என்பதில் இறை நம்பிக்கையாளர்கள் மறுப்பதில்லை. எனவே நமது பிரதமர் பிறப்பில் என்ன விசேடம் உள்ளது எனத் தெரியவில்லை. பயோலாஜிக்கல் இல்லாமல் பிரதமர் மோதிஜி பிறந்திருக்க வாய்ப்பே இல்லை. அவரது தாய், தந்தை யார் யார் என வரலாறு இருக்கும்போது எவ்வாறு இந்த வார்த்தையினை அவர் வெளியிட்டார் என்பது ஆச்சர்யம். எனக்குத் தெரிந்து ஏதோ ஒரு அதீத மன ஓட்டமாக இருக்க வேண்டும், அவ்வளவே. இதனை ”ஆணவம்” என்றும் சொல்லலாம். பிச்சை எடுத்து பிழைப்போருக்கும் இந்த ஆணவம் இருக்கும். நாடாளும் அரசியல் வாதிகளுக்கு ஆணவம் அதீதமாக இருப்பது இயல்புதான். ஆணவம் என்பது தவறான வார்த்தை அல்ல. அது இயற்கை. மோதிஜியின் ஆணவம் இவ்வுலகையும் இந்நாட்டையும் நல்வழிப் படுத்தட்டும்.
பயோலாஜிக்கல் இல்லாமல் உயிர்கள் அல்லது மனிதர்கள் பிறப்பெடுக்கும் முறைகளும் உள்ளன. அதைப்பற்றியும் வள்ளற்பெருமான் கூறியுள்ளார். இந்த இணைப்பை சுட்டி அதனை அறியலாம். நன்றி.
--TMR
https://vallalarr.blogspot.com/2017/04/blog-post.html
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.