Thursday, January 8, 2026

பௌத்தக் கொடி நாள்

                                                           பௌத்தக் கொடி நாள்

TMR


ஐந்து நிறங்களைக் கொண்ட பௌத்தக் கொடி சுமார் 60 நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இக்கொடியை ‘பறையர் வரலாறு’ நூலை எழுதியவரும், பௌத்த சிந்தனையாளருமான கர்னல் ஹென்றி.ஸ்டீல் ஆல்காட் அவர்கள் வடிவமைத்தார். ஆல்காட் இலங்கைக்குச் சென்று பௌத்தம் குறித்த உரையாடலை நிகழ்த்தியகாலத்தில் இக்கொடி அங்கு அறிமுகமானது. ஆல்காட்டும் அனகாரிக தர்மபாலாவும் இக்கொடியை ஜப்பான் பேரரசருக்கும் பர்மா அரசுக்கும் 1889 இல் வழங்கினார்கள்.
பல திருத்தங்களுடன் உருவாக்கப்பட்ட இக்கொடி,1885 இல் கொழும்பு பௌத்தக் குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து, முதன்முதலாக இலங்கை பத்திரிக்கையான ‘சரசவி சந்தரேச(sarasavi sandaresa)’யில் பிரசுரிக்கப்பட்டது. 1886 ஆண்டின் வைசாக தினத்தில் கொழும்புவில் ஏற்றப்பட்டது.
1950 மே 25 ஆம் நாள் கொழும்புவில் ‘உலக பௌத்தர்கள் அமைப்பு(World Fellowship of Buddhist)’ இலங்கையைச் சார்ந்த பௌத்த அறிஞரும், கல்வியாளருமான பேராசிரியர் குணபால பியாசேன மாலசேகரா தலைமையில் கூடியது. 27 நாடுகளிலிருந்து பௌத்தர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களும் பங்கேற்றார். குணபால பியாசேன மாலசேகரா அவர்கள், பௌத்தக்கொடியை சர்வதேச பௌத்தக்கொடியாக ஆக்க வேண்டுமென்று அந்த மாநாட்டில் பரிந்துரைத்தார். அதன்படி இக்கொடி சர்வதேச பௌத்தக்கொடியாக அங்கீகரிக்கப்பட்டது.
கொடி ஐந்து நிறப் பட்டைகளைக் கொண்டது. ஒவ்வொரு நிறமும் பௌத்த வழிமுறைகளைக் குறிப்பிடுகிறது.
1.நீல நிறம்- அன்பு, கருணை மற்றும் உலக அமைதி ஆகியவற்றைக் குறிக்கிறது.
2.மஞ்சள் நிறம்- நடுவுநிலை (மத்திம) வாழ்க்கையைக் குறிக்கிறது.
3.சிவப்பு நிறம்- ஒழுக்கம், விழிப்புணர்வு, சாதனை ஆகிவற்றுக்கான நன்முயற்சிகளைக் குறிக்கிறது.
4.வெண்மை நிறம்- மாசற்ற தம்மத்தைக் குறிக்கிறது.
5.காவி நிறம்- புத்தரின் போதனைகளையும் ஞானத்தையும் குறிக்கிறது.
ஆறாவதாகவும் ஒரு வண்ணம் இக்கொடியில் துவக்கத்தில் இருந்தது. அது, இந்த ஐந்து நிறங்களையும் கலந்த கலைவை நிறமாக இருந்தது. பிறகு திருத்தப்பட்டக் கொடியில் ஐந்து நிறங்களே ஏற்கப்பட்டன. மேலும், ஐந்து நிறப் பட்டைகள், பஞ்ச சீலங்களையும் நினைவுபடுத்துகின்றன.
கொடியில் உள்ள ஐந்து நிறப்பட்டைகள் செங்குத்தாகவும், கிடைமட்டமாகவும் இருப்பது பௌத்தம் எங்கும், எத்திசையிலும், சமமாகப் பரவவேண்டும் என்பதைக் குறிக்கிறது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.