Sunday, October 4, 2026

வள்ளலார் வருவிக்கவுற்ற நாள் - 203 ஆம் ஆண்டு கொண்டாட்டம்

 


என்ன புண்ணியம் செய்தேனோ – அய்யா
நான் என்ன புண்ணியம் செய்தேனோ…

சரியை கிரியை யோகமெல்லாம்
சிரித்து வெட்கித் தோல்வியுற்று
எரிந்து நாசமாகி ஞானம்
ஒன்றே நிலைத்து ஓங்கநான்

என்ன புண்ணியம் செய்தேனோ – அய்யா
நான் என்ன புண்ணியம் செய்தேனோ…

அருட் பெருஞ்ஜோதி எழுந்து
என்னில் முச்சந்தி முழுதும்
இருள் கடந்து ஒளிர்கிறதே
இம்மையில் மறுமை பெறநான்

என்ன புண்ணியம் செய்தேனோ – அய்யா
நான் என்ன புண்ணியம் செய்தேனோ…

கல்லை கடவுளெனும் பக்தியை
கடந்து நானும் சன்மார்க்க
எல்லை தொட்டு இராமலிங்க
அபயம் என்று வாழ்ந்திடநான்

என்ன புண்ணியம் செய்தேனோ – அய்யா
நான் என்ன புண்ணியம் செய்தேனோ…

மூட வழக்கமெல்லாம் மண்
மூடிப் போனதென்ன என்
மாட விளக்கெரிந்து மாயை
மாளும் நாளைக் காணநான்

என்ன புண்ணியம் செய்தேனோ – அய்யா
நான் என்ன புண்ணியம் செய்தேனோ…

ஜீவ காருண்ய தயவெல்லாம்
ஜெயம் ஜெயமென்றே என்
பாவ செயலெல்லாம் தெறித்து
பாய்ந்து ஓடுகிறதே நான்

என்ன புண்ணியம் செய்தேனோ – அய்யா
நான் என்ன புண்ணியம் செய்தேனோ…

வள்ளலார் யார்யாரென்றே உலகர்
வரமறுக்க வள்ளல் உன்
உள்ளமதை அறிந்து நான்நடக்க
உண்மை அதைஅறிய நான்

என்ன புண்ணியம் செய்தேனோ – அய்யா
நான் என்ன புண்ணியம் செய்தேனோ…

மூன்று தேகமதை மூழ்கி
முத்தெடுத் தேன் நாளும்
தோன்றி தோன்றாமலும் தேகம்
தான்விளங்க அய்யா நான்

என்ன புண்ணியம் செய்தேனோ – அய்யா
நான் என்ன புண்ணியம் செய்தேனோ…

அணையா தீபம் என்றும்
எனையாளும் ஜோதி இன்றும்
துணையாகும்  வண்ண மிங்கு
தலையாகும் தேகம் பெறநான்

என்ன புண்ணியம் செய்தேனோ – அய்யா
நான் என்ன புண்ணியம் செய்தேனோ…

நானிருக்கும் இடத்தில் வந்து
நானாக நீஅமர்ந் தருளி
வானிருக்கும் தேவ ரெல்லாம் 
வாயடைத்து மெய்சிலிர்க்க நான்

என்ன புண்ணியம் செய்தேனோ – அய்யா
நான் என்ன புண்ணியம் செய்தேனோ…

கரணமெல்லாம் கைகூடி செத்தாரை
கண் விழிக்க எழுப்பிடவே
மரணமில்லா பெரு வாழ்வு
மனிதன் எனபெற்றிடவே நான்

என்ன புண்ணியம் செய்தேனோ – அய்யா
நான் என்ன புண்ணியம் செய்தேனோ…

-TMR
04-10-2026


No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.