வருவிக்க உற்ற நாள்
அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். மக்களே எப்படி இருக்கிறீர்கள். மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.
இன்று வள்ளலாரின் 203 ஆம் ஆண்டு வருவிக்க உற்ற நாள். எல்லா உலகிலும் உள்ள, எல்லா உயிர்களும் இன்புற்று வாழ, இவ்வுலகில் வருவிக்க உற்றவர் வள்ளலார். அகத்தே கருத்து, புறத்தே வெளுத்திருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்தை அடைவித்திட, இவ்வுலகில் வருவிக்க உற்றவர் வள்ளலார்.
இப்பிரபஞ்சத்தில் எண்ணற்ற உலகம் உள்ளது. அதையெல்லாம் விடுத்து, நாம் வசிக்கும் நமது உலகை தேர்ந்தெடுத்து இறைவன் நமது வள்ளற்பெருமானை இங்கே வருவிக்க உற்றார்.
இந்த உலகில் மொத்தம் 195 நாடுகள் உள்ளன. அவைகளில் நமது இந்தியத் திருநாட்டை தேர்ந்தெடுத்து இறைவன், வள்ளற்பெருமானை வருவிக்க உற்றார் .
இந்தியாவில் 28 மாநிலங்கள் உள்ளன. அவற்றில் நமது தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்து, இறைவன், வள்ளற்பெருமானை வருவிக்க உற்றார்.
தமிழ்நாட்டில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ளன. அதில் கடலூர் மாவட்டத்தை தேர்ந்தெடுத்து, இறைவன், வள்ளலாரை வருவிக்க உற்றார்.
எனவே, வள்ளலாரின் அருளானது, கடலூர் மாவட்டத்திலிருந்து புறப்பட்டு, தமிழ்நாடு, இந்தியா, உலகம், பிரபஞ்சம் என விரிவடைகிறது மக்களே.
அதுபோல், இவ்வுலகில் சுமார் 7170 மொழிகளில் மக்கள் பேசுகின்றனர். அதில் சுமார் 121 மொழிகள் இந்தியாவில் பேசப்படுகின்றன. 121 மொழிகளில் தமிழ் மொழியை தேர்ந்தெடுத்து, இறைவன், வள்ளற்பெருமானை வருவிக்க உற்றார்.
தமிழ் மொழியை வள்ளலார் மிகவும் போற்றி எழுதியுள்ளார். தமிழ் என்னும் சொல்லுக்கு ஒரு தனி விரிவுரையே எழுதியுள்ளார் வள்ளலார்.
ஒரு முறை, வள்ளலார் சென்னையில் வசித்த காலத்தில், அப்போது இருந்த காஞ்சி சங்கராச்சாரியார் அவர்கள், சமஸ்கிருத மொழியில் சில சந்தேகங்களை கேட்டு தெளிவடைய, வள்ளற்பெருமானை சந்திக்கின்றார்.
வள்ளலாருக்கு படிப்பறிவு அறவே கிடையாது மக்களே. படிக்கத் தெரியும், எழுதத் தெரியும் அவர் பள்ளியில் கற்றது அவ்வளவுதான். எல்லாம் இறைவன் கொடுத்த அறிவுதான். வள்ளலாருக்கு தமிழ், சமஸ்கிருதம் இவை இரண்டிலும் புலமை உண்டு மக்களே. அதனால் அன்றைய சங்கராச்சாரியார் வள்ளலாரை சந்திக்கின்றார்.
சங்கராச்சாரியார் தனக்கு சமஸ்கிருதத்தில் ஏற்பட்ட சந்தேகத்தை வள்ளலாரிடம் கூற, வள்ளலாரும் தனது சமஸ்கிருத புலமையால் அதனை தீர்த்துவைக்கிறார்.
பிறகு, சங்கராச்சாரியார், வள்ளலாரைப் பார்த்து, “சமஸ்கிருதமே உலக மொழிக்கெல்லாம் மாத்ரு பாஷா” என சொல்கிறார். அதாவது, உலக மொழிக்கெல்லாம் சமஸ்கிருதமே தாய் மொழியாகும் என சொல்கிறார். சங்கராச்சாரியாருக்கு இது தேவையில்லாத பேச்சு, சந்தேகம் தீர்ந்ததா…. நன்றி சொல்லிவிட்டு கிளம்பியிருக்க வேண்டும். நம் வள்ளலார் சும்மா விடுவாரா மக்களே.
வள்ளலார், சற்றும் தயங்காமல், சங்கராச்சாரியின் கருத்துக்கு மறுப்பும் கூறாமல், ”அப்படியானால், உலக மொழிக்கெல்லாம் தமிழ் மொழியே பித்ரு பாஷா” என சங்கராச்சாரியாரிடம் ஆணித்தரமாக எடுத்துரைத்தார் வள்ளலார். அதாவது உலக மொழிக்கெல்லாம் தமிழ் மொழியே தந்தை மொழியாகும் என வள்ளலார் எடுத்துரைத்தது நம்மை எல்லாம் பரவசப் படுத்தும் கருத்து அல்லவா மக்களே.
ஆடம்பரத்தையும்,
ஆராவாரத்தையும், கஷ்டத்தையும், பெரு மறைப்பையும், பொழுது போக்கையும் உண்டு பண்ணுகின்ற
சமஸ்கிருதம் முதலான மொழிகளில் எனக்கு ஆசை செல்லவொட்டாது, படிப்பதற்கும், அறிவதற்கும்
மிகவும் சுலபமானதும், பாடுவதற்கும், துதிப்பதற்கும் மிகவும் இனிமை உடையதாகவும், சாகாக்
கல்வியை மிகவும் சுலபமாய் அறிவிப்பதற்கும், திருவருள் வலத்தால் கிடைத்த தமிழ் மொழியிலே
என் மனதை பற்றச் செய்து, அந்த தமிழ் மொழியால் பல்வகை தோத்திரப் பாடல்களை பாட்டுவித்து
அருளினீர். தமிழ் பாஷையே அதி சுலபமாகச் சுத்த சிவானுபூதியை கொடுக்கும். என்று வள்ளலார்
கூறுவதை அறியுங்கள் மக்களே.
7170 மொழிகளில் திருவருட்பாவை எந்த மொழியில் இறைவன் கொடுத்தான்? தமிழ் மொழியில் இறைவன் கொடுத்துள்ளான். தமிழ் தெரிந்த நம்மில் எத்தனை பேர் திருவருட்பாவை தொட்டு படித்திருப்பீர்கள்? மற்ற மொழிக்காரர்களுக்கு கிடைக்காத பாக்கியம் தமிழர்களுக்கு கிடைத்ததை நம்மில் எத்தனை பேர் உணர்கிறோம்?
இந்த 203 ஆம் ஆண்டு வள்ளலார் வருவிக்க உற்ற நாளிலிருந்து, நாம் அனைவரும் திருவருட்பா படிப்போம், பாடுவோம், உண்மை அறிவோம். வள்ளற்பெருமான் வருவிக்க உற்ற தினமான தனிப்பெருங் கருணை நாள் அன்று தமிழ்நாடு அரசு, விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்பதை நமது முதல்வர் ஜோசப் விஜய் சார் அவர்களை, மக்கள் சார்பாக கேட்டுக்கொண்டு விடை பெறுகிறேன், நன்றி மக்களே.
--TMRCUDDALORE
9445545475

No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.