Saturday, May 4, 2013

மறுபிறவி என்பது உண்டா? வள்ளலாரின் விளக்கம்


அருட்பெருஞ்ஜோதி      அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை           அருட்பெருஞ்ஜோதி
                                              04-05-2013

மறுபிறவி என்பது உண்டா? வள்ளலாரின் விளக்கம்

எமது கேள்வி:

பேரன்பரன்புடை ஐயா அவர்களுக்கு வணக்கம்! மறுபிறவி உண்டா? இல்லையா? என்பதைப் பற்றிய உண்மையினை அறிய விரும்புகிறேன்...

வள்ளல் பதில்:

அன்புடையீர் வணக்கம்!

இவ்வுலகில் ஏதோ ஒரு தேகத்திலுள்ள உயிர்கள், இறுதியில் அத்தேகத்தை விட்டு நீங்கினால், அவ்வுயிர்க்கு / ஆன்மாவிற்கு கண்டிப்பாக மறுபிறவி உண்டு. அந்த தேகத்திற்கு "பொய்" என்று பெயர்.

எந்த ஒரு உயிருள்ள தேகம், சுத்த சன்மார்க்கத்தின்படி மரணமிலா பெருவாழ்வை பெறுகிறதோ அதாவது இத்தேகம் கீழே விழாமல் என்றென்றும் உடலும் உயிரும் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாமல் இருந்தால் அந்த ஆன்மாவிற்கு மறுபிறவி இல்லை. அந்த தேகத்திற்கு "மெய்" என்று பெயர்.

எமது கேள்வி:

இன்றைய சில மதங்கள் "மறுபிறவி கிடையாது" என்றும் "எடுத்த தேகம் அழிந்தால் ஆன்மாவும் அழிந்திவிடும்" என்றும் "முத்தி யடைவர்" என்றும், "பாவ புண்ணியங்களை எக்காலத்தும் அனுபவிப்பர்" என்றும் இன்னும் பலவாறு கூறுகின்றார்களே?

வள்ளல் பதில்:

சாதி, மதங்கள் அனைத்தும் பொய்...பொய்யே... அவற்றில் புகவேண்டாம். எனினும் இதற்கு யாம் பதில் கூறுகிறோம்...

முதல் சிருஷ்டித் தொடங்கி இது வரையில் அழிந்த தேகங்களுக்கு அளவில்லை. அப்படியே ஆன்மாக்களுக்கும் அளவில்லை. ஆகவே இனி ஆன்மாக்கள் தேகங்களை எடுக்காமல் இருக்க வேண்டும். அப்படியில்லையே தேகங்களை எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். (பக்கம் 147)

அவரவர்களும் தேகமே ஆன்மா என்றும், போகமே முத்தி என்றும், கொள்ளப்பட்ட லோகாதாய மதத்தாரது கொள்கைக்குச் சம்பந்தப் பட்டவர்களாதலால், மூடமாகிய தேகத்தில் அறிவாகிய ஆன்மா ஒருவன் உண்டென்றும் அவனுக்குப் பந்த முத்தி உண்டென்றும், முத்தியடைகின்ற பரியந்தம் பந்த விகற்பத்தால் வேறு வேறு தேகம் எடுப்பானென்றும், பிரத்தியட்ச அனுபவமான பிரமாணங்கள் உண்மையை அறிந்துகொள்ளப் படாதவர்களென்றும், அவர்கள் கொள்கைக்குப் பிரமாணமும் யுக்தியும் அனுபவமும் இல்லையென்றும் அறியவேண்டும். (பக்கம் 146)

ஒருதாய் தந்தையருக்கு ஒருபிரசவத்தில் இரட்டை குழந்தை பிறக்கின்றன. அந்த இரண்டுக்குமே குணங்களால் வேறுபாடு உடையவைகளாக உள்ளன. ஒன்று படிக்கிறது ஒன்று படிக்க மறுக்கின்றது, ஒன்று தயை அன்புடன் பழகுகிறது, மற்றது அடி உதை என்று வளருகிறது. இதற்கான காரணம், முன்பிறப்பில் எடுத்த தேகத்திலிருந்த வாசனை இந்தப் பிறப்பில் இந்தத் தேகத்தில் கற்பியாமல் வந்த தென்றும் அனுபவத்தால் கருதியறியவேண்டும். இப்படி அறிந்தால் ஜீவர்களுக்கு முன்னும் பின்னும் தேகமுண்டென்பது நன்றாகத் தெரியும். இப்படி அறியமாட்டாமையால் மறு பிறப்பில்லை என்கிறார்கள் என்று அறியவேண்டும். (பக்கம் 148)

அதாவது, முதல் சிருஷ்டியில், எத்தனைக்கோடி ஆன்மாக்கள் உள்ளனவோ அத்தனைக்கோடி தேகம் எடுத்தப்பின்பு, அதனதன் வாழ்க்கையிருதியில் தேகத்தை விட்டுவிட்ட பிறகு இனி மீண்டும் அவை பிறக்காமல் இருந்திருந்தால் இப்பூமியில் உயிரினங்களே, இன்றல்ல என்றோ இல்லாமிலிருந்துக்கும் அல்லவா? ஆனால் அப்படி இல்லையே.

எமது கேள்வி:

ஐயா, அப்படியானால் முற்பிறவி உண்டா? அதன் உண்மைகள் அறிய விரும்புகிறேன்...

வள்ளல் பதில்:

அன்பரே, முற்பிறவி என்பதும் உண்டு, எப்படியெனில், ஒரு வீட்டில் வாடகை கொடுத்துக் குடியிருக்க வந்தவன் அதற்கு முன் வேறொரு வீட்டில் வாடகை கொடுத்துக் குடியிருந்தவனாகவே இருந்திருப்பான். வீடு இல்லாமல் குடியிருக்கமுடியாது என்றும் இப்போது வந்த வீட்டிலும் கலகம் ஏற்பட்டால் பின்னும் வேறொரு வீட்டில் குடிபுகுவான் என்பதைப் போல, இந்தத் தேகத்தில் உணவு என்னும் வாடகைக் கொடுத்து குடியிருக்க வந்த ஜீவன், இதற்கு முன்னும் வேறொரு தேகத்தில் அந்தக் கூலியை கொடுத்து ஜீவித்தது என்றும் தேகமில்லாமல் ஜீவித்திருக்க முடியாது என்றும் இந்த தேகத்தில் கலகம் ஏற்பட்டால் இதை விடுத்து பின்னும் வேறொரு தேகத்தில் குடிபோவானென்றும் அறியவேண்டும். அதனால் முன்னும் பின்னும் தேகங்கள் நேரிடும் என்று அறிய வேண்டும். (பக்கம் 102)

தனக்கென்று சுதந்தரமாக நித்தியமாகிய அருள் தேகத்தை பெற்றுக்கொண்டால் பின்பு வேறொரு தேகத்தில் குடிபோகமாட்டா என்றும் அறிய வேண்டும். (பக்கம் 145)

எமது கேள்வி:

ஐயா, முற்பிறவி உண்டென்றால், முற்பிறவியில் நாம் யார்? என்று சொல்லவேண்டியதுதானே நியாயம், ஆனால் அது முடியவில்லையே!

வள்ளல் பதில்:

அன்பரே, எழுபது வயதுள்ள ஒருவனைப் பார்த்து உனக்கு ஐந்து வயதில் உன் சரித்திரம் என்னவென்று கேட்டபோது, 'நேற்றையப் பொழுதில் நடந்த என் சரித்திரம் இன்றைய பொழுதில் அவஸ்தையால் சொல்ல தெரியாது விழிப்போமென்றால், என் ஐந்து வயது சரித்திரத்தை எப்படி சொல்லமுடியும்? நீ எப்படி கேட்கக் கூடும் என்கின்றான். "ஒருபிறப்பில் நடந்த அவனது சரித்திரங்களையே அவஸ்தை தேகங்களால் அறிந்து சொல்ல மாட்டாமல் திகைப்புண்டாவ தென்றால், முன்தேகத்தில் நடந்த சரித்திரங்களை அநேக அவஸ்தையில் நாம் எப்படி அறிந்து சொல்லக் கூடும்.
(பக்கம் 150)

எமது கேள்வி:

ஐயா, மறுபிறவியில் நாம் எடுக்கும் தேகத்தை நம்விருப்படி தேர்ந்தெடுக்க முடியுமா?

வள்ளல் பதில்:

அன்பரே, ஜீவர்கள் தேக போகங்களைத் தங்கள் இச்சையால் அடைந்தவர்கள் அல்ல. (பக்கம் 146)

எப்படி நமது வரவு செலவிற்கு ஏற்ப நாம் நமது வாடகை வீட்டை வசதியாகவோ அல்லது வசதி குறைவாகவோ எடுத்து குடியிருக்கிறோமோ அதுபோல நமது பாவ புண்ணியத்திற்கு ஏற்ப நமது அடுத்த தேகமும் அமையும்.

இதுவரை ஜீவகாருண்ய ஒழுக்கம் மிகவும் இல்லாமையால், துன்மார்க்கப் பிறவியே பெருகி எங்கும் புல் ஒழுக்கங்களே வழங்குகின்றன.

ஜீவகாருண்யமில்லா கடின சித்தர்களெல்லாம் அவரவர் கடின செய்கைக்குத் தக்கபடி, சிலர் நரக வாசிகளாகவும், சிலர் சமுத்திர வாசிகளாகவும், சிலர் ஆரண்ய வாசிகளாகவும், சிலர் கரடி, சிங்கம், யாளி, யானை, கடமை, கடா, பன்றி, நாய், பூனை, முதலிய துஷ்ட மிருகங்களாகவும், சிலர் பாம்பு, தேள், முதலிய விஷ ஜெந்துக்களாகவும், சிலர் காக்கை, கழுகு முதலிய பட்சி சண்டாளங்காளவும், சிலர் எட்டி, கள்ளி முதலிய அசுத்த தாவரங்களாகவும் பிறந்திருக்கின்றார்கள். ஆதலால் புல்லொழுக்கங்களே மிகவும் இவ்வுலகில் இருப்பதை அறியவேண்டும். (பக்கம் 105)

எமது கேள்வி:

ஐயா, அப்படியெனில் நாங்கள் மீண்டும் மனித தேகம் எடுக்க செய்யவேண்டியவை என்ன?

வள்ளல் பதில்:

அன்பரே, மனித தேகம் மற்ற ஜீவதேகம் போல இலேசிலே எடுக்கக் கூடாது ஆகையால், மனித தேகத்தில் ஆன்ம விளக்கமும் அருள் விளக்கமும் மிகவும் விளங்குததாலும் இந்த மனித தேகம் போனால் மீளவும் இத்தேகம் வருமென்ற நிச்சயமில்லாததால், இந்த மனித தேகம் பேரின்பம் பெறுவதற்கே எடுத்த தேகமாததாலும், இந்த மனித தேகம் மாத்திரமே சிருஷ்டி தொடங்கிக் கடவுள் சம்மதத்தால் சிருஷ்டிக்கப்பட்ட உயர்ந்த அறிவையுடைய தேகமாததாலும் 'ஜீவகாருண்ய ஒழுக்கம்' கடைபிடித்து வரவேண்டும். (பக்கம் 112)

எமது கேள்வி:

ஐயா, எழுவகைப் பிறப்பு உண்டு என்கிறார்களே, அதைப்பற்றி கூறுங்களேன்...

வள்ளல் பதில்:

அன்பரே, இந்தத் தேகத்திற்கு பிறப்பு 7 உண்டு.

அதுபோல ஏழு வகைப் பிறப்பிலும் ஒவ்வொரு பிறப்பிற்கு எவ்வேழு பிறப்புண்டு.

அந்த எவ்வேழு பிறப்பும் ஒவ்வொன்றில் அனந்தமாய் விரிந்த யோனி பேதங்களின் விரிவெல்லாம் தோன்றி மேலேறி மறுபிறவி உண்டாம்.

ஒவ்வொரு பிறவியிலும் எந்தக் கற்பத்தில் நஷ்டமடைகின்றதோ அந்தக் கற்பகாலம் வரையில் தோற்ற மில்லாமல் மண்ணில் மறைந்திருந்து, மறுகற்பத்தில் தோன்றி,

இவ்விதமாகவே மற்றயோனிகளிடத்திலும் பிறந்து, முடிவில் இந்ததேகம் கிடைத்தது. (பக்கம்358)

வள்ளல்: இதுகாறும் நீர் என்னை "ஐயா" என அழைதீர், "பையா" என அழைக்கக்கூட யாம் தகுதியற்றவன், எனவே நீர் என்னை இனி என்பெயர் கொண்டே அழைக்கலாம்.

யாம் : மீண்டும், சரிங்க ஐயா...

நல்ல மருந்து இம் மருந்து
பிறப்பை யொழிக்கும் மருந்து - யார்க்கும்
பேசப் படாத பெரிய மருந்து
இறப்பைத் தவிர்க்கும் மருந்து - என்னுள்
என்று மதிரித் தினிக்கு மருந்து



















Friday, May 3, 2013

விபூதி பூசுதல் பற்றிய வள்ளலாரின் விளக்கம்


அருட்பெருஞ்ஜோதி                        அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை                        அருட்பெருஞ்ஜோதி

விபூதி பூசுதல் பற்றிய வள்ளலாரின் விளக்கம்             03-05-2013

எமது கேள்வி:

பேரன்புடைய ஐயா அவர்களே! வணக்கம், தாங்கள் அருளிய சுத்த சன்மார்க்கத்தின்படி விபூதி (திருநீறு) வழங்கல், பூசுதல் சரியானதா?

வள்ளலாரின் பதில்:

வணக்கம் அன்பரே! எமது மார்க்கம் இறப்பொழிக்கும் சுத்த சன்மார்க்கம் ஆகும். இதற்கென தனி கொள்கைகளை இறைவன் வகுத்தவழி வகுத்துத் தந்துள்ளோம். சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சாதி, மத, ஆசாரங்களை ஒழித்துவிட்டு உலகியர் அனைவரும் ஒரு பொது நோக்கத்தை வருவித்துக்கொள்ளுதல் வேண்டும்.

சுத்த சன்மார்க்கத்தில் எந்த ஒரு சாதனத்தையோ (தியானம், விரதம், ஜபம், யோகா, சமாதி, உபாசித்தல் முதலின) சின்னத்தையோ (விபூதி, நாமம், திலகம், சந்தனம் முதலிய வெளிஅடையாளங்கள்) யாம் அறிவிக்கவில்லை. இவைகளெல்லாம், சுத்த சன்மார்க்கத்திற்கு யாம் எது பெருந்தடைகளாக உள்ளது என்று சொன்னேனோ, அதற்குரியவைகளாகும் என்பதை நான் சொல்லித் தான் உலகியலர்கள் அறிய வேண்டும் என்பதில்லை.

"எல்லா சமயங்களும், எல்லா மதங்களும், எல்லா மார்க்கங்களுக்கும் உண்மை பொதுநெறியாக விளங்குவது 'சுத்த சன்மார்க்கம்' ஆகும்." (பக்கம் 548)

விபூதி வழங்குதலும், பூசிக்கொள்ளுதலும் சைவச் சமயத்தின் சிறப்புச் சாதனம் மற்றும் அச்சமயத்தின் உயரிய அடையாளச் சின்னமாகும் என்பதில் யாவருக்கும் ஐயமில்லை. இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட சமயத்தின் சின்னம் எங்ஙனம் எமது சுத்த சன்மார்க்கத்தில் இருக்க முடியும் உலகியலரே?

யாம் எமது உரைநடைப் பகுதியில் பல இடங்களில் கூறியுள்ளேன்...

"சுத்த சன்மார்க்கத்திற்கு சமயங்கள் எக்காலத்தும் முக்கியத் தடைகளாகும்" (பக்கம் 56)
"சமய மத ஆசாரங்களை விட்டு ஒழிக்க வேண்டும்" (பக்கம் 418)
"சாதனகள் ஒன்றும் வேண்டாம்" (பக்கம் 416)
எனவே உலகியலரே... விபூதி வழங்கல், பூசுதல் சுத்தசன்மார்க்கத்தின்படி கூடவே கூடாது.... கூடாது.......கூடாது....

ஆனால், எமது உருவமிலா உருவப்படத்தில் விபூதிக் கோலத்தில் யாம் இருப்பது போல் வெளியிடுவது உலகியருக்கு அழகா? பிற்காலத்தில் இவ்வாறு முரண் ஏற்படும் என்றும், எமது மார்க்கத்தின் மீது பற்று வைக்காமல் எம்மீது பற்று வைத்துவிடுவார்கள் என ஊகித்ததால் தான் யாம் எமது உருவத்தை அன்றைக்கே மறைத்தோம். ஆனால் எமது உருவத்தை கையால் வரைந்து வெளிபடுத்திவிட்டார்கள். அப்போது யாம் சைவ சமயத்தின் மீது ஆழ்ந்த பற்றுதலுடன் இருந்தோம்.



அச்சமயதில் உள்ள உருவ வழிபாடு, அச்சமய சாதனம் மற்றும் மந்திரங்களையும் பாடி துதித்துள்ளேன்.

அதன்பின் அச்சமய மதங்களில் எந்த ஒரு உண்மையும் இல்லை என்பதனை உள்ளபடி அறிந்து, அவைகளை எம்மிலிருந்து ஒழித்தோம், எமது முடிபான முடிவாக "சுத்த சன்மார்க்கத்தை" உலகியலோருக்கு வழங்கினோம்.

யார் ஒருவர், எமது சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் இணைகின்றனரோ அவர்கள் தாம் இதுவரை கடைபிடித்துவந்த போலி ஆசாரங்களை, சாதனங்கள், சின்னங்கள், மதங்கள், சாதிகள், சமயங்கள், புலால் உண்ணுதல், கொலைத்தொழில் செய்தல் போன்ற தடைகளை தகர்த்தவரான வெற்றி வீரனாக திகழ்தல் வேண்டும். அவ்வீரர்களுக்கே எமது மார்க்கம், சாகாக் கல்வியினை இலவசமாக வழங்கும், அவர்களையே சாகா நிலைக்கு உயர்த்தும் என்பதனை அறியவேண்டும்.

"ஆசாரங்களை விட்டு ஒழித்தவர்கள் மட்டுமே சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் சேரமுடியும். இது எமது கட்டுப்பாட்டு விதியாகும்". (பக்கம் 411)

"இப்போது  ஆண்டவர் என்னை ஏறாதநிலைமேல் ஏற்றியிருக்கின்றார். எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது" (பக்கம் 469)
 
"யாம் 1873 ஆம் ஆண்டு எமது சீடர்களிடம் / ன்னை பின்பற்றுபவர்களிடமும் கீழ்கண்டவாறு கூறியுள்ளேன்.

சுத்த சன்மார்க்க சங்கத்தில் நீங்கள் எல்லாம் சிறந்த / உண்மையான உறுப்பினர்கள் அல்ல. உண்மையான சுத்த சன்மார்க்க சங்கத்தின் உறுப்பினர்கள் வடதிசையில் வெகுதொலைவில் வசிக்கின்றனர். எனது அடிப்படைக் கொள்கையினை நீங்கள் பின்பற்றவில்லை. நீங்கள் உறுதிஎடுத்துக்கொண்டதை அது காட்டுகிறது, உங்களை எம்மால் நம்பவைக்க / திருத்த முடியவில்லை. ரஷ்யா மற்றும் அமெரிக்காவிலிருந்து மிகவிரைவில் மக்கள் இங்கு வருவார்கள். நான் நெடுங்காலமாக கூறிவந்த ஆன்மநேய ஒருமைபாட்டினையும், சகோதரத்துவத்தையும் அவர்கள் போதிப்பார்கள். நான் உங்களுக்கு உபதேசம் செய்ய நினைத்த அந்த உண்மையினை அவர்கள் கூறுகையில்தான் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்."
(ள்ளலாரின் சீடர்கள் அனைவரும் நெற்றியில் பட்டையும், கழுத்தில் கொட்டையுமாகவே இறுதிவரை இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் வள்ளலாரின் உண்மை கருத்துகளை ஏற்றுக்கொள்ளவில்லை அல்லது புரிந்துக்கொள்ளவில்லை என்பது இதிலிருந்து தெரியவருகிறது.)

# விபூதி இரகசியம்:
சிவபக்தர்கள் சிலர், சாணத்தைச் சுட்ட சாம்பலை விபூதி என்று பூசிக்கொண்டு, நாம் இறைவனை வணங்கிவிட்டோம் என்று மனதிருப்தி யடைந்துக்கொள்வார்கள். இது புற வழிபாடு.
உண்மையான விபூதி என்பது 'கோ' என்றால் சப்த ரூபமான அகங்காரமான மனப்பசுவாகும். அதன் சாணம் என்பது காம, குரோதைகளான குணங்களாகும். அதைச் சுடுவது என்பது மனம் பற்றாமல் இருப்பது. ஜீவ சக்தியாயிருக்கின்ற வாயுவினால் நம்முடைய புருவமத்தியாகிய சுழிமுனையாயிருக்கின்ற அக்கினி நேத்திரத்தில் ஊதி, 'ராகத்துவேசாதிகளாகிய துர்விசாரங்களை அதாவது துர்குணங்களை எப்போது அங்கே எரிக்கின்றோமோ அப்போதுதான் நம்முள்ளில் பிரகாசித்து ஞானம் உண்டாகின்றது. ஆதலால் நமக்கு விபூதியின் பயன் கிடைக்க அகவழிபாடு தேவை.

 
மீண்டும் கூறுகிறேன், விபூதி பூசுதல், வழங்குதல் எம்மார்க்க சட்டப்படி குற்றம்... குற்றம்... குற்றமே...

அற்புதம் அற்புதமே அருள் அற்புதம் அற்புதமே!








   



Thursday, May 2, 2013

தியானம் பற்றிய வள்ளலாரின் விளக்கம்



    தியானம் பற்றிய வள்ளலாரின் விளக்கம்   02-05-2013

நமது கேள்வி:

பேரன்புடையீர்! வணக்கம், சுத்த சன்மார்க்கத்தில் தியானம் முதலியவை உண்டா?

வள்ளலார் பதில்:

வணக்கம், கொல்லா விரதம் குவலயமெலாம் ஓங்குக!
உலகில் காணும் எந்தவொரு சமயங்கள், மதங்கள் மார்க்கங்கள் அனைத்தும் இறைவனை பற்றி வியம்பி, அந்த இறைவனின் அருள் பெறுவதற்கான வழிமுறைகளைப் பற்றி விளக்குகிறது. ஒவ்வொரு வழியும் வெவ்வேறான அதற்குரிய அனுபங்களை நல்கின்றன. அங்ஙனம் பெற்ற, பெற்றுக்கொண்டிருக்கின்ற, பெறப்போகிற அனுபவங்களை அவரவர் பெற்றிருக்கின்ற அறிவு ஒழுக்கத்திற்கு ஏற்றாற்போல் வெளிப்பட்டு சிறப்பாக, உயர்வாக அல்லது போதுமானதாக அமைகிறது என்பதை சத்தியமாக அறிதல் வேண்டும்.

தியானித்தல், உபாசித்தல், ஜபித்தல், சமாதி, விரதம், யோகம் எனக்கு முன்பே அறிந்து சமய, மத மார்க்கங்களில் இன்றும் கடைபிடித்துவரும் சாதனங்களாகும். இந்த சாதனங்கள் ஒவ்வொன்றும் அனுபவங்களைத் தரக்கூடியது என்பதில் சந்தேகம் இல்லை. அவையின் 'அனுபவம்' என்பது அதனதன் 'உண்மை' மற்றும் அதற்குரிய பலனும் எனக் கொள்ளலாம். ஆக, மேற்படி சாதனங்கள் உலகில் காணும் சன்மார்க்கங்களில் அதாவது சமய, மத மார்க்கங்களில் காணப்படுகிறது. எனவே இவை சமய மத அனுபவங்கள் என அழைக்கலாம்.

"சுத்தசன்மார்க்கத்தில் சுத்தம் என்பது சன்மார்க்கம் என்னும் சொல்லுக்குப் பூர்வம் வந்ததால், மேற்குறித்த சமய மத அனுபவங்களை கடந்தது" என்று நான் ஏற்கனவே என்னுடைய உரைநடை பகுதியில் விளக்கியுள்ளதைக் காணவும் (பக்கம் 404). யாம் மிகத்தெளிவாகக் கூறுவது யாதெனில்,

எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகளாக விளங்குவது சமயங்கள் மதங்கள் மார்க்கங்கள் ஆகும். எனவே அச்சமயங்களில் உள்ள சாதனங்களும் தடைகளே.

யாம் உங்களுக்கு கட்டளையிடுகிறோம், 'சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும் வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் இலட்சியம் வைக்கவேண்டாம்' (பக்கம் 468)

விந்து, நாத முதலியனவும், சிவா, வசி, ஓம் உட்பட முதலியனவும், ஹரி, சச்சிதானந்தம், பரிபூரணம், ஜோதியுட்ஜோதி, சிவயவசி, சிவயநம, நமசிவய, நாராயணாயநம, சரவணபவாயநம முதலியவும் கொண்டு தத்துவங்களை உபாசித்தும், அர்ச்சித்தும் 'சமய மத சாதகர்கள்' செய்வார்கள். நமக்கு மேற்குறித்த வண்ணம் சாதனமொன்றும் வேண்டாம். (பக்கம் 405)

தியானம் - ஜபித்தல்

மேலும் சமய மதங்களில் தத்துவாதீதத்தைத் தியானித்தும் இடையில் ஜபித்தும் சமய சாதகர்கள் செய்வார்கள். அத்தகைய தியானம் ஜபித்தல் வேண்டுவதில்லை.

சமாதி

கரணலயமாகச் சமாதி செய்தல் சுத்த சன்மார்க்கத்தில் கூடாது. சமாதி பழக்கம் பழக்கமல்ல. சகஜ பழக்கமே சுத்த சன்மார்க்க பழக்கம்.

விரதம் - யோகம்

தத்துவச் சேட்டைகளை அடக்க விரதமிருந்தும், சாதாரண யோகபாகத்தில் மூச்சடக்கியும் செய்யும் சாதனமொன்றும் வேண்டுவதில்லை.

கொல்லா விரதம் குவலயமெலாம் ஓங்குக! கொல்லாமையும், புலால் உண்ணாமையுமே உண்மையான விரதம். இதனை உலகோர் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

இன்று உங்களில் பலர் / சிலர் செய்யும் உடற்பயிற்சி சிறந்த யோக பயிற்சி, மருத்துவர் ஆலோசனையில் ஓய்வு, மருந்துக்கள் இவைகள் தவிர்க்கமுடியாவைகளாக உள்ளன என்பதனை யாம் அறிவோம். ஆனால் இவை சாதாரண் யோகபாகத்தில் செய்யும் பயிற்சிகள், மற்ற உடற்பயிற்சிகள் இவை நமக்கு உடல் ஆரோக்கியத்திற்கு வழி செய்யக்கூடியதே ஒழிய 'கடவுளின் உண்மையறிதலுக்கான' சாதனமாக இல்லை என்பதை அறியவேண்டும்.

சுத்தசன்மார்க்கத்தில் இறையருள் பெறுவதற்கு எந்தஒரு சாதனமும் நமக்கு வேண்டுவதில்லை, மாறாக...

# கருணை ஒன்றையே சாதனமாக கொள்ளப்படவேண்டும்.

# கருணை என்பது எல்லா உயிர்களிடத்தும் தயவும், ஆண்டவரிடத்தில் அன்பும்     வைப்பது.

# ஆண்டவரிடத்தில் அன்பு என்பது ஆண்டவரின் உண்மை அறிதலே.

# ஆண்டவரின் உண்மையறிதலுக்கு உள்ள ஒரே வழி ஜீவகாருண்யம் ஆகும்.

# ஜீவகாருண்யம் உண்டாவதற்கு ஏது அல்லது துவாரம் யாதெனில் 'கடவுளுடைய    பெருமையையும் தரத்தையும் நம்முடைய சிறுமையையும் தரத்தையும் ஊன்றி விசாரித்தலே ஆகும். (பக்கம் 420)
சுத்த சன்மார்க்கத்தில் கற்கும் கல்வி யாதெனில்...

# ஒழுக்கம் நிரப்பிக் கொள்ளுதல்

# கருணையை மட்டுமே சாதனமாகக் கொள்ளுதல்

# ஆசாரங்களை விட்டொழித்து பொதுநோக்கம் வருவித்துக் கொள்ளுதல்

# நல்ல விசாரணை செய்தல்

ஜலத்தில் இருக்கின்ற பாசியை நீக்குவது போல், நமது ஆன்மாவைத் தெரியவொட்டாமல் மூடியிருக்கின்ற பச்சைத் திரையாகிய ராகாதிகளை விசார அதியுஷ்ணத்தாலல்லது, மற்ற உஷ்ணங்களால் நீக்கமுடியாது. அந்த உஷ்ணம் யோகியினுடைய அனுபவத்தில் தெரியும். அதை மனுஷ்ய தரத்தில் உண்டு பண்ணுவதற்குத் தெரியாது. அந்த வசாரத்தைவிட ஆண்டவரை ஸ்தோத்திரம் செய்கின்றாதிலும் தெய்வத்தை நினைகின்றதிலும் அதிக உஷ்ணம் உண்டாகும். யோகிகள் - வனம், மலை, முழை முதலியவற்றிற்குப் போய், நூறு, ஆயிரம் முதலிய வருச காலம் தவஞ்செய்து, இவ்உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்கிறார்கள். 

இப்படி தவம் செய்து உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறதைப் பார்க்கிலும், தெய்வத்தை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் நினைக்கின்றதிலும், இதை விடக் கோடிப்பங்கு, பத்துகோடிப் பங்கு அதிகமாக உஷ்ணம் உண்டு பண்ணிக்கொள்ளலாம்.

மேலும், இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரியவொட்டாது, அசுத்த மாயாகாரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள். சுத்தமாயாகாரியாகிய தெரிந்த பெரியோரும் இல்லை. சன்மார்க்கமும் இல்லை. சன்மார்க்கம் இருந்தால், அனுபவித்தறியாத அனுபவமும், கேட்டறியாத கேள்வியும் நாம் கேட்டிருப்போம். மேலும் இறந்தவர்கள் மீளவும் எழுந்து வந்திருப்பார்கள். ஆதலால், கேட்டறியாத கேள்விகளைக் கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்தருணமே. ஆதலால் இத்தருணம் இக்காலமே சன்மார்க்கக் காலம்.

சுத்தசன்மார்க்கம் மூலம் யாம், யோகிகள் முனிவர்கள் பல ஆண்டுகளாக யோகம், தியானம் முதலிய சாதனங்களால் பெற்ற அனுபவங்களை ஒரே நாழிகையில் யோக நிலையை உணரப்பெற்று அன்று மாலையே அதன் பயனையும் இறைவனிடம் யாம் பெற்றுக்கொண்டோம். இந்த அனுபத்தை எமது பாடலில்...

"ஒரு நாழிகையில் யோக நிலையை உணர்த்தி
மாலையே யாகப் பயனை முழுதும் அளித்தாய்!"

என்று குறித்துள்ளேன், நீங்களும் பெறலாம். சுத்த சன்மார்க்கத்தில் அனைத்து அனுபவமும் இறைவனால் மிகச்சுலபாக விரைவில் வெளிப்படுவதாகவும் உள்ளது.

நன்முயற்சியில் பயிலும் "கருணை" எல்லா உண்மையையும் அனுபத்தையும் நமக்கு வெளிப்படுத்தும்.

சுத்த சன்மார்க்கத்தில் மூன்று பயிற்சி உள்ளது, அதனை செய்து வாருங்கள், (பக்கம் 392)

1. உள்ளழுந்துதல்
2. சிந்தித்தல்
3. சிந்தித்தலை விசாரித்தல்

இதன் அடிப்படையிலேயே நாம் "நல்ல விசாரணை செய்தல் வேண்டும். மற்றபடி நமக்கு எந்த சாதனமும் தேவையில்லை, தேவையில்லை, தேவையில்லை....

அருட்பெருஞ்ஜோதி    அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை   அருட்பெருஞ்ஜோதி

 





Wednesday, May 1, 2013

கல்பட்டு ஐயா இராமலிங்கம் (2)


அருட்பெருஞ்ஜோதி                    அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை                    அருட்பெருஞ்ஜோதி

               கல்பட்டு ஐயா இராமலிங்கம்      01-05-2013
                (இரண்டாம் பாகம்)

ஆன்மநேயமுள்ள ஆன்மாக்களே... வணக்கம்...

நாம் இப்போது நமது அருள்குருவான வள்ளலாரின் சீடர் 'கல்பட்டு ஐயா' வைப்பற்றி முதல் பாகத்தைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தைக் தற்போது காண்போம்...

நம்பெருமான் திருவடிகளைப் போற்றி நின்றவர்கள் பலர், ஆட்பட்ட அடியவர்கள் பலர், மாணவர்கள் பலர்.

அவர்களுள் கல்பட்டு ஐயா, தொழுவூர் வேலாயுத முதலியார், இறுக்கம் இரத்தின சபாபதிப் பிள்ளை, காரணப்பட்டு ச.மு.கந்தசாமிப் பிள்ளை, கருங்குழி புருடோத்தமன் ரெட்டியார் போன்றவர்கள் முதன்மையானவர்கள் எனலாம்.

எப்படி 'அருட்பெருஞ்ஜோதி' இறைவன், நமது அருள்குருவான வள்ளலார் இருக்கும் குடிசைக்கே வந்து அவரை அடிமைக்கொண்டாரோ அதுபோல வள்ளலார், 'கல்பட்டு ஐயா'  இருக்கும் இடத்திற்கே சென்று அவரை அடிமைக்கொண்டார் என்பதுதான் வேறுயெந்த சீடர்களுக்கும் கிடைக்காத சிறப்பை அவர் பெற காரணமாக உள்ளது. மேலும் வள்ளலாரின் கட்டளைக்கிணங்க, மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்திவளாகத் திருமாளிகையில் வள்ளலார் திருவரையினுள் சென்றவுடன் அந்த அறை திருக்கதவுகளை வெளியிலிருந்து தாளிட்டவர் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது. எனவே இவரை வள்ளலாரின் 'முதன்மை சீடர்' என்பர்.

அடிமைச் சாசனம்

நமது பெருமான் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்திய விண்ணப்பத்தில் தெரிவித்தருள்கின்ற செய்திகள் இவை...

"அவத்தைகள் அனைத்தும் நீங்கிட நித்திய தேகம் பெறவேண்டும். அதுபெறத் திருவருட் சுதந்திரம் வேண்டும்.

பின்னர், திருவருள் சுதந்தரம் நமக்கு எந்த வழியால் கிடைக்கும் என்று அறியத் தொடங்கிய தருணத்து, எனது யான் என்னும் தேக சுதந்தரம், போக சுதந்தரம், ஜீவ சுதந்தரம் என்னும் மூவகை சுதந்தரங்களும் நீங்கியவிடத்தே கிடைக்கும் என்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன்".

இவ்வாறு இறைவர் முன்னிலையில் விண்ணப்பித்துப் பெருவாழ்வை உறுதிப் படுத்திக் கொண்டவர்கள் வள்ளல் அவர்களின் வழிவழி வந்த தொண்டர்கள் பலரும் அடிமைப்பத்திரம் எழுதி உடல் பொருள் ஆவியை நம்பெருமானுக்குப் படையல் செய்துள்ளனர். அதனையும் வள்ளல் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். அங்ஙனம் விரும்புகின்றவருடைய தற்சுதந்திரத்தை நீக்கித் திருவருள் சுதந்தரத்தை தந்திடும் உரிமையும் உயர்வும் வள்ளற்பெருமானுக்கு இருந்ததனால் அவ்வாறு அடிமைப் பத்திரம் எழுதிப் பெற்றுள்ளார்கள்.

ஒரு சான்று:-

திருப்பாதிரிப்புலியூரில் (கடலூர்) வாழ்ந்த 'இரத்தினம்' என்பவர் அடிமைப் பத்திரம்வழியே, உடல் பொருள் ஆவியைப் பெருமானுக்கு ஒப்படைதார். அவர்தம் விண்ணப்பத்தைப் பற்றி அவரே பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

"நான் பிறந்த காலத்தில் என் தாய் தந்தையர்களால் அண்ணாமலை என்று நாமகரணம் செய்யப்பட்டு இருந்தது. எனக்கு ஸ்ரீஇராமலிங்க சுவாமிகளால் இரத்தினம் என்ற பெயர் எனது 8 வது வயதில் இடப்பட்டது. எங்கள் குடும்பம், என் தகப்பனார் காலம் முதல் சுவாமிக்கு அடிமைப்பட்டு பத்திரம் மூலமாய் உடல் பொருள் ஆவி மூன்றும் தத்தம் செய்து அடிமைப்பத்திரம் என் தகப்பனார் எழுதிக் கொடுத்திருந்தார். நான் சுவாமியோடு கூடவே இருந்து அவருக்கு அடிமை செய்து வந்தேன்."

இவ்வாறு அன்பர்கள் பலர் ஆர்வத்தோடு வள்ளல் பெருமானிடம் அடிமைச் சாசனம் சமர்பித்துள்ளார்கள். வழிவழித் தொண்டர்தம் பெருமை எதனாலும் அளக்கும் தகுதி உடையதன்று. அன்பர்கள் கொள்ளும் ஆர்வத்தினைப் போல் கல்பட்டு அடிகளும் நம்பெருமானின் திருச்சமூகத்திற்கு அடிமைப் பத்திரம் செய்து தர முன்வந்தனர். ஆனால் ஒரு பெரிய வியப்பு! கல்பட்டு அடியவருக்கு நமது பெருமானே திருக்கைச் சார்த்தி அடிமைச்சாசனம் வரைந்தருளினார்கள். இந்நிகழ்ச்சி வள்ளல் மேட்டுக்குப்பத்தில் விளங்கிய போது 12-05-1872 ல் நடந்தது. அவ்விண்ணப்பம் பின்வருமாறு அமைந்துள்ளது.

போதநாச வந்தனம் செய்த விண்ணப்பம்

ஸ்ரீபார்வதிபுரம் என்னும் உத்தர ஞான சித்திபுரத் திருப்பதிக் கண்ணே அகிலாதாரமாய் விளங்கும் ஸ்ரீசமரச வேத சன்மார்க்க சங்கத்துப் பெருந்தலைப் பதியாக விற்றிருந்தருளும் அருட்பெருங்ஜோதியராகிய எமது ஆண்டவனார் திருச்சந்நிதிக்கு யான் எனும் போதநாச வந்தனஞ் செய்த விண்ணப்பம்:-

எம் இறைவரே!

இதுபரியந்தம் யானாகத் தேடியதோர் பொருளென்பது இல்லையாகவே;

தேவரீர், பெருங்கருணையால் என்னை உய்யக் கொள்ள உபகரித்தருளிய உடல் பொருள் ஆவி என்னும் மூன்றையும் அறியாமையால் யான் எனது என்று கொண்டதோர் சுதந்தரமானது துன்ப இன்ப விளைவுகளுக்கு ஆதாரமாய் இன்றைய வரையில் என்னைப் பற்றி இருந்தது ஒன்றை யான் பெரும்பொருளாக எண்ணி நின்றனன்.

ஆதலால் அச்சமரச சன்மார்க்க சங்கத்துச் சாதுக்கள் சமூகத்து நிற்கப் பெற்ற விசேடத்தால் அத்தற்சுதந்தரப் பொருளைத் தேவரீர் பெருங்கருணைச் சந்நிதி முன்னே அர்பித்தனன்.

இனி; தேவரீர் அதனை அருள்வசமாக்கி ஏழையாகிய என்னையும், என்னையடுத்த சுற்றம், என்னோடு பழகிய நட்பினர் ஆதியரையும் உய்யக்கொண்டருள்க.

இங்ஙனம்
அடிமை,
க. இராமலிங்கம்

"இந்த விண்ணப்பம் கல்பட்டு இராமலிங்க சுவாமிகளுக்காக சந்நிதானமே எழுதி வைத்தது" என்று ஓர் பிரதியில் இத்திருமுக வரலாறு காணப்படுகிறது என்று எழுதியுள்ளார் திருவருட்பா பதிப்பித்த பாலகிருட்டினர்.

சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பத்தில் வள்ளற் பெருமான் விண்ணப்பித்து அருளியது போலவே இவ்விண்ணப்பமும் அமைந்துள்ளது. சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பத்தோடு இந்த அடிமைப் பத்திரம் மிகவும் தொடர்பு உடையது. ஒவ்வொருவரும் உணர்ந்து உய்வதற்கான பல செய்திகளை முறையே கொண்டது. அதனை ஊன்றி நோக்கின் எத்தனையோ பேருண்மைகள் அதில் வெளிப்படுகின்றன.

1. உலகங்கட்குப் பற்றுக் கோடாய் விளங்குவது "சமரச சுத்த சன்மார்க்க சத்திய      சங்கம்" ஆகும்.
2. அதன் ஒப்பற்ற தலைவராக வீற்றிருப்பவர் "அருட்பெருஞ்ஜோதி" ஆண்டவரே.
3. ஆண்டவர் திருச்சந்நிதிக்குத் தற்போதம் நாசமடைய விண்ணப்பிக்க வேண்டும்.
4. நாமாகத் தேடியது உடலும் அன்று, உயிரும் அன்று, உடைமையும் அன்று.
5. இறைவர் பெருங்கருணையினாலே அம்மூன்றும் நமக்கு அருளப்பட்டன.
6. அவற்றில் நமக்கு எவ்வித உரிமையும் இல்லை. ஆண்டவர்க்கே அம்மூன்றும்      உரிமையுடையன.
7. அறியாமையால் அவற்றை நம்முடையவை என்று நம்புகிறோம்.
8. வள்ளற்பெருமானை ஒத்த சன்மார்க்க சங்கத்து சாதுக்கள் திருமுன்பு பழக நேரின் அல்லது ஞானசபை இறைவனிடம் நாமும் உரிமையில்லாத அப்பொருளை ஒப்படைக்க முன்வருவோம்.
9. தற்சுதந்தரம் நீங்கிய இடத்து தான் திருவருள் சுதந்தரம் கைகூடும்.
10. தன்னை ஏற்றுக் கொள்ள விண்ணப்பிக்கும் போது தன்னைச் சார்ந்தவர்களையும் ஆட்படுத்தி உய்விக்க வேண்டுதல் வேண்டும்.

மேற்கண்ட ஒப்பற்ற உயரிய செய்திகள் அவ்விண்ணப்பத்தில் காணப்படுகின்றதை திரும்ப ஒருமுறை படித்தேனும் உணர்க... நினைத்தற்கரிய கருத்துகள் அவை, கேட்டற்கரிய உயிர் உணர்வுகள் அவை, அவற்றை நெஞ்சகத்து வைத்துப் போற்றிப் பின்பற்றல் இவ்வுலக மக்களின்கடன்.

இவ்வளவு அருமை வாய்ந்த விண்ணப்பம் யாருக்காக வரையப்பட்டிருக்கிறது? யார் வரைந்தருளினார்கள்? பெரும்பொறுப்பும் பெரும்பேறும் பெற்று நின்ற தகுதி வாய்ந்த பக்குவர் கல்பட்டு ஐயா என்பதனால்தான் நமது பெருமானே அவ்விண்ணப்பத்தினை வரைந்தருளினார்கள், அவரிடம் கையொப்பமும் பெற்று வைத்துக்கொண்டார்கள்.

அவ்வாறு கல்பட்டு ஐயா உடல் பொருள் ஆவி மூன்றையும் தம் சற்குருநாதருக்கு ஒப்படைத்தார். அவர்கள் கட்டளை இட்ட வழியில் நின்று வாழ்ந்திட உறுதியோடு முற்பட்டார்.

அருள் நடம்

எவ்வுலகம் தன் அருள் ஆணையின்கீழ் விளங்கி உய்ய ஞான சிங்காதன பீடத்து அமர்ந்து, அருட்பெரும் தலத்து மேல்நிலையில் செங்கோல் செலுத்தி, அருள் ஆட்சி புரிந்து அருட்பெரும் போகம் சர்வ சுதந்தரத்துடன் துய்த்திருத்தல் பொருட்டாக எவ்வுலகும் அறிய அருள் சக்தியைத் திருமணம் புரிந்தருளி, எங்கும் எவ்விடத்தும் எவ்வுயிரின்பாலும் நம்பெருமான் அருள்நடம் செய்தருளும் காலம் வந்துற்றது.

சித்திவளாகத்தில் கல்பட்டு ஐயா

1874 ஆம் ஆண்டு ஸ்ரீமுக தைத்திங்களில் பூச நல்நாளில் நம்பெருமான் சித்திவளாகத் திருமாளிகையில் திருவறை புகுந்தார்கள்.

அவ்வமயம் உண்மை அன்பர்கள் பலர் சூழ்ந்திருந்தனர். அடிமைபூண்ட நேயர்கள் பலர் சூழ்ந்திருந்தனர். பெருமானின் கட்டளையின் வண்ணம் திருவறை திருக்காப்பிடப்பட்டது. அவ்வாறு திருக்காப்பிட்டவர்களுள் முதன்மையானவர் கல்பட்டு ஐயா. வள்ளலின் நிறைவின் போது, அவர்களின் கட்டளையை நிறைவேற்றும் பெரும்பேறு கல்பட்டு ஐயாவிற்குக் கிடைத்தது. திருவருள் ஆணையை நிறைவேற்றும் முதண்மையாளராகக் கல்பட்டு ஐயா விளங்கினார்.

சுவாமிகள் திருக்காப்பிட்டுக் கொண்டதும் கல்பட்டு இராமலிங்க சுவாமிகளும் தொழுதூர் வேலாயுத முதலியார் அவர்களும் வெளியில் பூட்டிட்டு சீல் வைத்தார்கள்.

என்று இதுபற்றிச் சத்திய ஞானசபை வழிபாட்டு விதிகளைக் குறித்து 23-02-1928 ல் வாக்குமூல அறிவிப்பு கொடுத்திட்ட திருப்பாதிரிப்புலியூர் இரத்தினம் என்பவர் குறிப்பிடுகின்றார்.

(மூன்று நாள் கழித்து அன்று இருந்த ஆங்கில அரசால் இந்த சீலை உடைத்து திருக்கதவை திறந்துபார்த்த போது அங்கு நம்பெருமான்.........நமது ஊணகண்களுக்கு காட்சியாகமலிருந்தார்........என்றும் எங்கும் இருக்கின்றார்........நமது ஊணக்கண்களுக்கு பழையபடி காட்சி கொடுக்கும் காலமும் மிக அருகில் கனிந்து வருகிறது.....)

இவ்வாறு நம்பெருமான் ஆணையிடும் இன்றியமையாக் கடமைகளைக் கல்பட்டு ஐயா நிறைவேற்றும் பொறுப்பினைப் பெற்று விளங்கினார்.

சாலைப்பணி

வள்ளல் அனைத்துயிரினும் நிறைந்து விளங்கும் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுத் திருக்காப்பிட்டுக் கொண்டபின் சத்திய தருமச்சாலையை நடத்துவிக்கும் பொறுப்பினை கல்பட்டு ஐயா ஏற்றுக்கொண்டார். அவ்வாறு மேற்கொண்டு நடத்துவிக்கும் பொறுப்பினை நமது பெருமான் கல்பட்டாருக்கே வழங்கியருளினார்கள்.

ஈரமும் அன்பும் கொண்டு இன்னுயிர்களை ஓம்பும் வேள்வியை அருமைக் கல்பட்டார் செய்துவந்தார். பெருமானின் கருத்துபடி பசிப்பிணி மருத்துவத்தை அல்லும் பகலும் ஓயாமல் தொடர்ந்து செய்தார். ஓரிரண்டு ஆண்டுகள் அல்ல, 25 ஆண்டுகளாக சாலைப் பணியை நயந்து நடத்தினார். அதனால் இம்மை மறுமை பேரின்பத்தால் நிறைகின்ற பெரும்பயனாம் விளைவையெல்லாம் தருமச்சாலையிலே பெற்றுக்கொண்டார். இவையெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளல்ல. அதற்கான விளக்கங்களை வடலூர் தெய்வ நிலையங்களின் அலுவலகப் பதிவேடுகள் காட்டுகின்றன!

வழிவழித் தொண்டர்கள்

சாலைப்பொறுப்பு 1901 வரையில் கல்பட்டு அடிகள் கண்காணிப்பில் இருந்து வந்தது. 06-02-1902ல் அப்பொறுப்பினைத் தமது மாணவராகிய "சுப்புராய பரதேசி" என்பவரிடம் ஒப்புவித்தார். சுப்புராயர் தெலுங்கு நாட்டுக்காரர். அவர் தொண்டு புரியவே விரும்பி வந்தவர், கல்பட்டு ஐயா வழி, வள்ளல்பெருமானை நன்கறிந்து எதிரற்ற அன்புகொண்டவர். அவருக்கு உதவியாக சாலைப் பணிகளில் தோய்ந்தவர் "கட்டமுத்துப்பாளையம் நாராயணர்" ஆவார். அவரே 1927ல் பிரபவ வைகாசி 11 ஆம் நாள் சாலைத்திருப்பணி முடித்தவர். இச்செய்தியினை பிறையாறு சிதம்பர சுவாமிகள் குறிக்கின்றார்.

"குறிப்பிட்ட நாராயணர் அவர்களே சாலையை நீண்டநாள் கல்பட்டு ஐயாவுக்குப் பின் அவர் மாணாக்கராயிருந்து அவர் ஆணைப்படி சத்திய தருமச்சாலையை நடத்தி வந்த தெலுங்கு தேசத்து சந்நியாசியாகிய சுப்புராய சுவாமிகளுக்கு உறுதுணையாக இருந்து சென்ற பிரபவ வருஷம் வைகாசி 11ம் தேதி சுமார் 37 (2013ல்-86) ஆண்டுகளுக்கு முன்பு சாலை கட்டிடத் திருப்பணி வேலையை முடித்துப் பிரவேச விழா நடத்தி நம்பெருமான் அருளை பெற்றார்கள்.                                             (இராமலிங்க சுவாமிகளின் திவ்ய சரித்திரம் பக்கம் - 99)

இதிலிருந்து தொண்டுள்ளம் கொண்டு நெறிநின்ற தொண்டர்களை கல்பட்டு ஐயா உருவாக்கினார். அவர்கள் தொடர்ந்து சாலையை நடத்திவந்ததை 1896 ஜனவரியில் வெளிவந்த டிரஸ்டு மறுப்புப் பத்திரிகை கீழ்கண்டவாறு தெரிவிக்கின்றது...

"வள்ளலார் திருக்காப்பிட்டுக்கொண்ட காலமுதல் வள்ளலார் குறிப்பின்படித் தருமச்சாலையின் தரும பரிபாலனம் சிலகாலம் சில சன்னியாசிகள் கூடிநடத்திக் கொண்டு வந்தார்கள்".இதனால் கல்பட்டு அடியவரும் வழிவழித் தொண்டர்களும் சாலையை நடத்தியது புலனாகிறது.

சமாதி அடைதல்

வள்ளல் வழியில் மாறாத அன்புகொண்டு பணிசெய்தும், பரஞ்சுடர் கண்டுநிற்கும் யோகம் செய்தும் ஏறக்குறைய 35 ஆண்டுகள் வடல்வெளியில் வாழ்ந்த கல்பட்டு ஐயா, சுபகிருதுஸ்ரீ, சித்திரைமீ, 14ஆம் நாள் (26-04-1902) சனிக்கிழமை, கேட்டை விண்மீன் சதுர்த்தசி கூடிய நாளில் சமாதி கொண்டிட்டார். அன்பர்கள் அவரைச் சாலையின் கீழ்புறத்தில் அடக்கம் செய்தனர். அங்கே கோவிலும் எடுத்துள்ளனர். நினைவு ஆலயமாக இன்று அனைவர்க்கும் அது வழிகாட்டி நிற்கிறது. அதன் முன்பு மேலும் மூன்று சமாதிகள் உள்ளன. கிழக்கு புறத்தில் உள்ளது கட்டமுத்துப்பாளையம் நாராயணர் சமாதி, மேற்குப்புறத்தில் உள்ளது சுப்புராய பரதேசியார் சமாதி, நடுவில் உள்ளது பிற்காலத்துக் கொண்டார் சமாதி. தொண்டு செய்து தம் வாழ்வை நற்பயன் உடையதாக்கி, அங்கே சமாதி கொண்டுள்ள தொண்டர்கள் அனைவரும் நல் வழிகாட்டிகளாவர்.

கல்பட்டு சுவாமிகள்

கல்பட்டு ஐயாவை, 'கல்பட்டு இராமலிங்க சுவாமிகள்' என்று மிகவும் மதிக்கப்பட்டு அன்பர்கள் குறிப்பிட்டு வந்தனர். சான்றாகக் கடிதப்பகுதியில், 'போதநாச வந்தன' அடிக்குறிப்பில், 'கல்பட்டு இராமலிங்க சுவாமிகளுக்காக' என்ற செய்தியினை அன்பர் ஒருவர் வரைந்திருப்பதாகப் பதிப்பாசிரியர் பாலகிருட்டினர் குறிப்பிடுகின்றார்.

மேலும் தொழுவூரார் திருமகனார் திருநாகேசுவரர் மார்க்கண்டேய புராண தொழுவூர் வேலாயுதனார் வரலாற்றில், 'கல்பட்டு இராமலிங்க சுவாமிகள்' என்று வரைந்துள்ளார்.

சத்திய ஞானசபை பற்றிய  வாக்குமூலக் குறிப்பில் திருப்பாதிரிப்புலியூர் இரத்தினம் என்பவர் 'கல்பட்டு இராமலிங்க சுவாமிகள்' என்றே குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக சுவாமிகள் என்று பலர்க்கும் வழங்குவது போல் கல்பட்டு ஐயாவிற்கும் வழங்கப்பட்டதல்ல. எல்லாம் உடையவரே ஆட்கொண்டதால் அப்பெயர் நிலவி வருகிறது. இவ்வாறு அன்பர்களால் மிகவும் மரியாதையுடன் அழைக்கப் படுகின்ற உயர்நிலையினை உற்றுக் கல்பட்டு ஐயா விளங்கினார்.

கல்பட்டு மூர்த்திகள்

நமது பெருமான் திருநறுங்குன்றத்திற்கு 1866 ல் வரைந்த கடித்ததில் கல்பட்டு ஐயாவைச் 'சிவஞான விரும்பினராகிய இராமலிங்க மூர்த்திகள்' என்று குறித்தார்கள்.

அத்துடன் கல்பட்டு ஐயாவை இராமலிங்க மூர்த்திகள் என்று சிறப்புக்கொடுத்து குறிப்பிடுகின்றார்கள் வள்ளல். மூர்த்திகள் என்னும் சொல்வள அமைப்பினைக் காணுங்கால் கல்பட்டு ஐயா மூர்த்திகள் பதம் பெற்றவராக விளங்கினார் என்று தெரிகிறது. சுந்தரமூர்த்தி, திரிமூர்த்தி, பஞ்சமூர்த்தி, தட்சணாமூர்த்தி, புண்ணியமூர்த்தி முதலான தொடர்களை ஆழ்ந்து எண்ணிடல் வேண்டும். பெருமான்பால் சூழ நின்ற அன்பர்களுள் கல்பட்டு ஐயாவே மேற்குறிப்பிட்ட மூர்த்திகளுக்கான் பதத்தகுதியினைப் பெற்று விளங்கினவர் என்று தெரிகிறது.

கல்பட்டு ஐயா தோற்றம்

சிவந்த மேனி, எடுப்பான தோற்றம், வாட்டசாட்டமான் உருவம், நீண்டு மார்பில் அலைபாயும் தாடி, இடையில் ஒரு முண்டு, கையில் ஏற்றதொரு தண்டு, தோளில் மடித்துப் போட்டிருக்கும் துப்பட்டி, நடையில் மிடுக்கு இந்தக் காட்சிக்கு உரிய தவவடிவமே கல்பட்டு ஐயா!

இனி வடலூர் சென்றால் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை, சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை மற்றும் கல்பட்டு ஐயாவின் சமாதியையும் வழிபட்டு வரவும்.

கல்பட்டு ஐயாவின் சமாதியை வணங்குவோம், அப்படியே வள்ளலின் நேரடி வழிகாட்டுதலில் இருந்து சுத்த சன்மார்க்கத்தை கற்ற அவருக்கே சமாதி நிலைதேனே கிட்டியது, அப்படியெனில் நாம் எந்த நிலையில் இருக்கிறோம், இன்னும் நாம் ஏறாநிலைமிசை ஏற நமக்கு என்னென்ன தடைகள் உள்ளன என்று நமக்குநாமே விசாரித்து அத்தடைகளையெல்லாம் துச்சமென விடுத்து அந்த மரணமிலா வாழ்க்கையில் - 'அருட்பெருஞ்ஜோதி' ஆண்டவருக்கு, இன்னும் பல வள்ளலார்கள் இருப்பதை நிரூபிப்போம்.

சபையெனது உளம்எனத் தான் அமர்ந்தெனக்கே
அபயம் அளித்ததோர் அருட்பெருஞ்ஜோதி

மருளெலாந் தவிர்த்து வரமெலாம் கொடுத்தே
அருளமும் அருத்திய அருட்பெருஞ்ஜோதி

வாழிநின் பேரருள் வாழிநின் பெருஞ்சீர்
ஆழிஒன்று அளித்த அருட்பெருஞ்ஜோதி

என்னையும் பொருளென எண்ணிஎன் உளத்தே
அன்னையும் அப்பனுஆகி வீற்றிருந்து

உலகியல் சிறிதும் உளம்பிடியா வகை
அலகில் பேரருளால் அறிவது விளக்கி

சிறுநெறி செல்லாத் திறன்அளித்து அழியா
உறுநெறு உணர்ச்சி தந்தொளி உறப்புரிந்து

சாகாக் கல்வியின் தரமெலாம் உணர்த்திச்
சாகா வரத்தையும் தந்து மேன்மேலும்

அன்பையும் விளைவித்து அருட் பேரொளியால்
இன்பையும் நிறைவித் என்னையும் நின்னையும்

ஓர்உரு ஆக்கியான் உன்னிய படியெலாம்
சீர்உறச் செய்து உயிர்த்திறம் பெறஅழியா

அருள்அமுதம் அளித்தனை அருள்நிலை ஏற்றினை
அருளறிவு அளித்தனை அருட்பெருஞ் ஜோதி

வெல்க நின் பேரருள் வெல்கநின் பெருஞ்சீர்
அல்கலின் ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி

உலகுயிர்த் திரளெலெல்லாம் ஒளிநெறி பெற்றிட
இலகுமைந் தொழிலையும் யான்செயத் தந்தனை

போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி

மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும்
யாவரும் பெற்றிடா இயல் எனக்களித்தனை

போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி

சித்திகள் அனைத்தையும் தெளிவித் தெனக்கே
சத்திய நிலைதனைத் தயவினில் தந்தனை

போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி

உலகினில் உயிர்களுக் உறும்இடையூறு எல்லாம்
விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க

சுத்த சன்மார்க்கச் சுகநிலை பெறுக
உத்தமன் ஆகுக ஓங்குக என்றனை

போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி