Saturday, May 4, 2013

மறுபிறவி என்பது உண்டா? வள்ளலாரின் விளக்கம்


அருட்பெருஞ்ஜோதி      அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை           அருட்பெருஞ்ஜோதி
                                              04-05-2013

மறுபிறவி என்பது உண்டா? வள்ளலாரின் விளக்கம்

எமது கேள்வி:

பேரன்பரன்புடை ஐயா அவர்களுக்கு வணக்கம்! மறுபிறவி உண்டா? இல்லையா? என்பதைப் பற்றிய உண்மையினை அறிய விரும்புகிறேன்...

வள்ளல் பதில்:

அன்புடையீர் வணக்கம்!

இவ்வுலகில் ஏதோ ஒரு தேகத்திலுள்ள உயிர்கள், இறுதியில் அத்தேகத்தை விட்டு நீங்கினால், அவ்வுயிர்க்கு / ஆன்மாவிற்கு கண்டிப்பாக மறுபிறவி உண்டு. அந்த தேகத்திற்கு "பொய்" என்று பெயர்.

எந்த ஒரு உயிருள்ள தேகம், சுத்த சன்மார்க்கத்தின்படி மரணமிலா பெருவாழ்வை பெறுகிறதோ அதாவது இத்தேகம் கீழே விழாமல் என்றென்றும் உடலும் உயிரும் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாமல் இருந்தால் அந்த ஆன்மாவிற்கு மறுபிறவி இல்லை. அந்த தேகத்திற்கு "மெய்" என்று பெயர்.

எமது கேள்வி:

இன்றைய சில மதங்கள் "மறுபிறவி கிடையாது" என்றும் "எடுத்த தேகம் அழிந்தால் ஆன்மாவும் அழிந்திவிடும்" என்றும் "முத்தி யடைவர்" என்றும், "பாவ புண்ணியங்களை எக்காலத்தும் அனுபவிப்பர்" என்றும் இன்னும் பலவாறு கூறுகின்றார்களே?

வள்ளல் பதில்:

சாதி, மதங்கள் அனைத்தும் பொய்...பொய்யே... அவற்றில் புகவேண்டாம். எனினும் இதற்கு யாம் பதில் கூறுகிறோம்...

முதல் சிருஷ்டித் தொடங்கி இது வரையில் அழிந்த தேகங்களுக்கு அளவில்லை. அப்படியே ஆன்மாக்களுக்கும் அளவில்லை. ஆகவே இனி ஆன்மாக்கள் தேகங்களை எடுக்காமல் இருக்க வேண்டும். அப்படியில்லையே தேகங்களை எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். (பக்கம் 147)

அவரவர்களும் தேகமே ஆன்மா என்றும், போகமே முத்தி என்றும், கொள்ளப்பட்ட லோகாதாய மதத்தாரது கொள்கைக்குச் சம்பந்தப் பட்டவர்களாதலால், மூடமாகிய தேகத்தில் அறிவாகிய ஆன்மா ஒருவன் உண்டென்றும் அவனுக்குப் பந்த முத்தி உண்டென்றும், முத்தியடைகின்ற பரியந்தம் பந்த விகற்பத்தால் வேறு வேறு தேகம் எடுப்பானென்றும், பிரத்தியட்ச அனுபவமான பிரமாணங்கள் உண்மையை அறிந்துகொள்ளப் படாதவர்களென்றும், அவர்கள் கொள்கைக்குப் பிரமாணமும் யுக்தியும் அனுபவமும் இல்லையென்றும் அறியவேண்டும். (பக்கம் 146)

ஒருதாய் தந்தையருக்கு ஒருபிரசவத்தில் இரட்டை குழந்தை பிறக்கின்றன. அந்த இரண்டுக்குமே குணங்களால் வேறுபாடு உடையவைகளாக உள்ளன. ஒன்று படிக்கிறது ஒன்று படிக்க மறுக்கின்றது, ஒன்று தயை அன்புடன் பழகுகிறது, மற்றது அடி உதை என்று வளருகிறது. இதற்கான காரணம், முன்பிறப்பில் எடுத்த தேகத்திலிருந்த வாசனை இந்தப் பிறப்பில் இந்தத் தேகத்தில் கற்பியாமல் வந்த தென்றும் அனுபவத்தால் கருதியறியவேண்டும். இப்படி அறிந்தால் ஜீவர்களுக்கு முன்னும் பின்னும் தேகமுண்டென்பது நன்றாகத் தெரியும். இப்படி அறியமாட்டாமையால் மறு பிறப்பில்லை என்கிறார்கள் என்று அறியவேண்டும். (பக்கம் 148)

அதாவது, முதல் சிருஷ்டியில், எத்தனைக்கோடி ஆன்மாக்கள் உள்ளனவோ அத்தனைக்கோடி தேகம் எடுத்தப்பின்பு, அதனதன் வாழ்க்கையிருதியில் தேகத்தை விட்டுவிட்ட பிறகு இனி மீண்டும் அவை பிறக்காமல் இருந்திருந்தால் இப்பூமியில் உயிரினங்களே, இன்றல்ல என்றோ இல்லாமிலிருந்துக்கும் அல்லவா? ஆனால் அப்படி இல்லையே.

எமது கேள்வி:

ஐயா, அப்படியானால் முற்பிறவி உண்டா? அதன் உண்மைகள் அறிய விரும்புகிறேன்...

வள்ளல் பதில்:

அன்பரே, முற்பிறவி என்பதும் உண்டு, எப்படியெனில், ஒரு வீட்டில் வாடகை கொடுத்துக் குடியிருக்க வந்தவன் அதற்கு முன் வேறொரு வீட்டில் வாடகை கொடுத்துக் குடியிருந்தவனாகவே இருந்திருப்பான். வீடு இல்லாமல் குடியிருக்கமுடியாது என்றும் இப்போது வந்த வீட்டிலும் கலகம் ஏற்பட்டால் பின்னும் வேறொரு வீட்டில் குடிபுகுவான் என்பதைப் போல, இந்தத் தேகத்தில் உணவு என்னும் வாடகைக் கொடுத்து குடியிருக்க வந்த ஜீவன், இதற்கு முன்னும் வேறொரு தேகத்தில் அந்தக் கூலியை கொடுத்து ஜீவித்தது என்றும் தேகமில்லாமல் ஜீவித்திருக்க முடியாது என்றும் இந்த தேகத்தில் கலகம் ஏற்பட்டால் இதை விடுத்து பின்னும் வேறொரு தேகத்தில் குடிபோவானென்றும் அறியவேண்டும். அதனால் முன்னும் பின்னும் தேகங்கள் நேரிடும் என்று அறிய வேண்டும். (பக்கம் 102)

தனக்கென்று சுதந்தரமாக நித்தியமாகிய அருள் தேகத்தை பெற்றுக்கொண்டால் பின்பு வேறொரு தேகத்தில் குடிபோகமாட்டா என்றும் அறிய வேண்டும். (பக்கம் 145)

எமது கேள்வி:

ஐயா, முற்பிறவி உண்டென்றால், முற்பிறவியில் நாம் யார்? என்று சொல்லவேண்டியதுதானே நியாயம், ஆனால் அது முடியவில்லையே!

வள்ளல் பதில்:

அன்பரே, எழுபது வயதுள்ள ஒருவனைப் பார்த்து உனக்கு ஐந்து வயதில் உன் சரித்திரம் என்னவென்று கேட்டபோது, 'நேற்றையப் பொழுதில் நடந்த என் சரித்திரம் இன்றைய பொழுதில் அவஸ்தையால் சொல்ல தெரியாது விழிப்போமென்றால், என் ஐந்து வயது சரித்திரத்தை எப்படி சொல்லமுடியும்? நீ எப்படி கேட்கக் கூடும் என்கின்றான். "ஒருபிறப்பில் நடந்த அவனது சரித்திரங்களையே அவஸ்தை தேகங்களால் அறிந்து சொல்ல மாட்டாமல் திகைப்புண்டாவ தென்றால், முன்தேகத்தில் நடந்த சரித்திரங்களை அநேக அவஸ்தையில் நாம் எப்படி அறிந்து சொல்லக் கூடும்.
(பக்கம் 150)

எமது கேள்வி:

ஐயா, மறுபிறவியில் நாம் எடுக்கும் தேகத்தை நம்விருப்படி தேர்ந்தெடுக்க முடியுமா?

வள்ளல் பதில்:

அன்பரே, ஜீவர்கள் தேக போகங்களைத் தங்கள் இச்சையால் அடைந்தவர்கள் அல்ல. (பக்கம் 146)

எப்படி நமது வரவு செலவிற்கு ஏற்ப நாம் நமது வாடகை வீட்டை வசதியாகவோ அல்லது வசதி குறைவாகவோ எடுத்து குடியிருக்கிறோமோ அதுபோல நமது பாவ புண்ணியத்திற்கு ஏற்ப நமது அடுத்த தேகமும் அமையும்.

இதுவரை ஜீவகாருண்ய ஒழுக்கம் மிகவும் இல்லாமையால், துன்மார்க்கப் பிறவியே பெருகி எங்கும் புல் ஒழுக்கங்களே வழங்குகின்றன.

ஜீவகாருண்யமில்லா கடின சித்தர்களெல்லாம் அவரவர் கடின செய்கைக்குத் தக்கபடி, சிலர் நரக வாசிகளாகவும், சிலர் சமுத்திர வாசிகளாகவும், சிலர் ஆரண்ய வாசிகளாகவும், சிலர் கரடி, சிங்கம், யாளி, யானை, கடமை, கடா, பன்றி, நாய், பூனை, முதலிய துஷ்ட மிருகங்களாகவும், சிலர் பாம்பு, தேள், முதலிய விஷ ஜெந்துக்களாகவும், சிலர் காக்கை, கழுகு முதலிய பட்சி சண்டாளங்காளவும், சிலர் எட்டி, கள்ளி முதலிய அசுத்த தாவரங்களாகவும் பிறந்திருக்கின்றார்கள். ஆதலால் புல்லொழுக்கங்களே மிகவும் இவ்வுலகில் இருப்பதை அறியவேண்டும். (பக்கம் 105)

எமது கேள்வி:

ஐயா, அப்படியெனில் நாங்கள் மீண்டும் மனித தேகம் எடுக்க செய்யவேண்டியவை என்ன?

வள்ளல் பதில்:

அன்பரே, மனித தேகம் மற்ற ஜீவதேகம் போல இலேசிலே எடுக்கக் கூடாது ஆகையால், மனித தேகத்தில் ஆன்ம விளக்கமும் அருள் விளக்கமும் மிகவும் விளங்குததாலும் இந்த மனித தேகம் போனால் மீளவும் இத்தேகம் வருமென்ற நிச்சயமில்லாததால், இந்த மனித தேகம் பேரின்பம் பெறுவதற்கே எடுத்த தேகமாததாலும், இந்த மனித தேகம் மாத்திரமே சிருஷ்டி தொடங்கிக் கடவுள் சம்மதத்தால் சிருஷ்டிக்கப்பட்ட உயர்ந்த அறிவையுடைய தேகமாததாலும் 'ஜீவகாருண்ய ஒழுக்கம்' கடைபிடித்து வரவேண்டும். (பக்கம் 112)

எமது கேள்வி:

ஐயா, எழுவகைப் பிறப்பு உண்டு என்கிறார்களே, அதைப்பற்றி கூறுங்களேன்...

வள்ளல் பதில்:

அன்பரே, இந்தத் தேகத்திற்கு பிறப்பு 7 உண்டு.

அதுபோல ஏழு வகைப் பிறப்பிலும் ஒவ்வொரு பிறப்பிற்கு எவ்வேழு பிறப்புண்டு.

அந்த எவ்வேழு பிறப்பும் ஒவ்வொன்றில் அனந்தமாய் விரிந்த யோனி பேதங்களின் விரிவெல்லாம் தோன்றி மேலேறி மறுபிறவி உண்டாம்.

ஒவ்வொரு பிறவியிலும் எந்தக் கற்பத்தில் நஷ்டமடைகின்றதோ அந்தக் கற்பகாலம் வரையில் தோற்ற மில்லாமல் மண்ணில் மறைந்திருந்து, மறுகற்பத்தில் தோன்றி,

இவ்விதமாகவே மற்றயோனிகளிடத்திலும் பிறந்து, முடிவில் இந்ததேகம் கிடைத்தது. (பக்கம்358)

வள்ளல்: இதுகாறும் நீர் என்னை "ஐயா" என அழைதீர், "பையா" என அழைக்கக்கூட யாம் தகுதியற்றவன், எனவே நீர் என்னை இனி என்பெயர் கொண்டே அழைக்கலாம்.

யாம் : மீண்டும், சரிங்க ஐயா...

நல்ல மருந்து இம் மருந்து
பிறப்பை யொழிக்கும் மருந்து - யார்க்கும்
பேசப் படாத பெரிய மருந்து
இறப்பைத் தவிர்க்கும் மருந்து - என்னுள்
என்று மதிரித் தினிக்கு மருந்து



















3 comments:

  1. arumai arumai. Ellam Seyal koodum yenanai ambalthey.

    ReplyDelete
  2. அருள் ஜோதி ஐயா அவர்களுக்கு எமது நன்றி

    ReplyDelete
  3. Melum therinthukola aarvamaai vullen

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.