Wednesday, December 17, 2014

வாடிய மழலைகள்!

                                                            வாடிய மழலைகள்!




                                          துளிரும் மொட்டுக்களை அழித்த
                                           துப்பாக்கி குண்டினை கேட்கிறேன்
                                           தவழ்ந்த கொடியில் புகுந்து
                                           துளைத்து சுகமென்ன கண்டாய்?
                                          உளிபட்ட கல்லும் அழகிய
                                           உருவமாகும், தலிபானின் கைப்பட்டு
                                          உயிரும் மண்ணாகும், இனிகருணை
                                          ஒன்றே உயிரெலாம் நிரையட்டும்!
                                          வளிமண்டல மெலாம் வாழ்த்தட்டும்
                                          விடைபெற்ற எங்கள் மழலைகளை!
                                          வலியில்லா சமுதாயம் பாகிஸ்தானில்
                                          வளரட்டும் எங்கும் அருள்
                                          ஒளியே நீக்கமற நிரைந்தோங்கி
                                          இவ்வுலகை நட்புடன் காக்கட்டும்!
                                        அருளே நம்பெயர் அருளேநம்
                                          உயிரென்ற ஆன்மநேயம் ஓங்கட்டுமே!


                                                         அருட்பெருஞ்ஜோதி அடிமை
                                                          தி.ம.இராமலிங்கம் - கடலூர்
                                                                               9445545475

Tuesday, December 16, 2014

"ஆடு" - வணங்கும் காட்சி

                                                  "ஆடு" - வணங்கும் காட்சி



அன்பர்களே!

சிறிது நாட்களுக்கு முன் சித்திவளாகத்தில் "ஆடு" ஒன்று நுழைந்து வள்ளல் பெருமானை வணங்கிவிட்டு சென்ற காட்சியை கண்டு களியுங்கள்!!

"ஆட்டு வித்தால் ஆடுகின்றேன்" என்று சொல்கின்றதா அல்லது
"ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை நாடாதீர்" என்று நமக்கு அறிவுரை புகல்கின்றதா.... தெரியவில்லை....

அருட்பெருஞ்ஜோதி அடிமை
தி.ம.இராமலிங்கம் - கடலூர்
9445545475

Monday, December 15, 2014

இறை சோதனை



றை சோதனை


வாழ்வு முடிந்தது வென்றவர் வாழ்க!
வீழ்ந்து விடாதவர் வீரமும் வாழ்க!
நன்றி நவின்றிட்ட நல்லவர் வாழ்க!
என்னை வளர்த்திட்ட என்னவர் வாழ்க!

சுவாசங்கள் நின்றது சுகமெலாம் சூழ்க!
நிவாரண மில்லை நீர்த்துளி சூழ்க!
ஆழ்துயில் கொண்டதால் அமைதியே சூழ்க!
தாழ்கொண்ட கண்களில் தயவொளி சூழ்க!

ஊழ்வினை விதியெனும் உறவுகள் வீழ்க!
ஏழ்பிறப் பெடுக்கும் ஏந்தலும் வீழ்க!
நாயகன் பயந்திடும் நரகமும் வீழ்க!
ஆயகலை களும் அவர்தாள் வீழ்க!

பிறப்புறும் நிகழ்வும் புண்ணிய மில்லை!
இறப்புறும் நிகழ்வும் இனியது மில்லை!
இடைப்பட்ட நாட்களில் இறைவனு மில்லை!
விடைபெற்றுக் கொண்டவர் விண்டது மில்லை!

பிறந்தவர் இறைவனை பார்க்கவு மில்லை!
இறந்தவர் இறைவனை அடையவு மில்லை!
புண்ணியன் கணக்குகள் புரியவு மில்லை!
மண்ணினில் மனிதர்கள் மறக்கவு மில்லை!

மதங்களும் பூமியில் மரணிக்க வில்லை!
அதனால் இறைவன் அருளுவ தில்லை!
தலைவனின் தருமம் தவறிய தில்லை!
வலையெனும் மாயையை விட்டவ ரில்லை!

இலையுதிர் மரங்களும் அழுதிட வில்லை!
கலையுறும் கற்களும் கலங்கிட வில்லை!
உறவுறும் நினைவுகள் உறங்கிட வில்லை!
மறதியைப் போலொரு மாமருந் தில்லை!

வந்தனம் புகன்ற வாய்மொழி எங்கே?
சந்தனம் தடவிய சொந்தங்கள் எங்கே?
கருணைக் கொண்ட கண்ணொளி எங்கே?
நருமணம் பூசிய நாயகன் எங்கே?

திருமணம் புரிந்த தருமனும் எங்கே?
குருவென வணங்கிய குணங்களும் எங்கே?
என்னுடல் தழுவிய என்னவன் எங்கே?
தன்னையே எனக்குத் தந்தவன் எங்கே?

கன்னங்கள் வருடிடும் கைகளும் எங்கே?
என்மடி சுவைத்திடும் உதடுகள் எங்கே?
உச்சியை முகர்ந்திட்ட உத்தமன் எங்கே?
எச்சிலை உண்டிட்ட அச்சிலை எங்கே?

கண்ணென வணங்கிய கால்களும் எங்கே?
உண்டு உறங்கிய உறவோன் எங்கே?
மோகம் கொண்டிட்ட மன்னவன் எங்கே?
தேகம் புதையுண்ட தடங்களும் எங்கே?

மரணமிலா தொரு மார்க்கமும் எங்கே?
சரணம டைந்தேன் சற்குரு எங்கே?
ஜீவ காருண்ய ஜீவனும் எங்கே?
பாவ புண்ணியம் பகர்ந்தவர் எங்கே?

செத்தாரை எழுப்பிடும் சித்தனும் வருக!
நித்திரை யாளரை நிறுத்திட வருக!
மாண்டவர் எழுந்திட மருந்தோடு வருக!
ஆண்டவர் கட்டளை ஆமென்று வருக!

மரணம் தவிர்த்த மன்னவன் வருக!
பரமா காச பரவொளி வருக!
அருட்பெருஞ் ஜோதி அளித்திட வருக!
பருஉடம்பி னுள்உயிர் புகுத்திட வருக!

தனிப்பெருங் கருணை தலைவன் வருக!
பனித்துளிபோல் துயர் போக்கவே வருக!
சித்தெல்லாம் செய்யும் சித்தன் வருக!
சுத்த சன்மார்க்க சுகந்தர வருக!

அருட்பெருஞ்ஜோதி அடிமை
தி..இராமலிங்கம் - கடலூர்.

9445545475

Friday, November 7, 2014

சுத்த சன்மார்க்கம் - ஹைக்கூ கவிதை



சுத்த சன்மார்க்கம்

சத்துவ நெறியில்
சத்திய பாதையில் நடக்கும்
சுத்த சன்மார்க்கம்.

ஓர் இறைவன்
ஓர் இலட்சியம் கொண்டது
சுத்த சன்மார்க்கம்.

அனைத்திற்கும் அதீத
அன்பு மார்க்கம் உடையது
சுத்த சன்மார்க்கம்.

இறை உண்மை
அறிந்து அம்மய மாதல்
சுத்த சன்மார்க்கம்.

சாதி சமயச்
சடங் கெல்லாம் ஒழிக்கும்
சுத்த சன்மார்க்கம்.

ஆசாரக் கட்டுப்பாடு
ஆகாதென சுதந்தர மளிக்கும்
சுத்த சன்மார்க்கம்.

கருணை ஒன்றே
கடவுளை அடையும் சாதனமென்ற
சுத்த சன்மார்க்கம்.

மதங்களும் காணாத
மதாதீத இறைவனைக் காணும்
சுத்த சன்மார்க்கம்.

சாகாக் கல்வியால்
சாகா தேகம் அளிக்கும்
சுத்த சன்மார்க்கம்.

ஆன்ம நேய
ஆன்மாவை தயவால் தருகின்ற

சுத்த சன்மார்க்கம்.


ஞானதேகம்

ற்பூர மணம்
கற்பங் கடந்தும் வரும்
ஞான தேகமதுவே.

தோன்றியும் தோன்றா
தோற்றம் பெற்று ஓங்கும்
ஞான தேகமதுவே.

சர்வ சுதந்தர
சர்வாதிகார ஆட்சி பெறும்
ஞான தேகமதுவே.

மகாசக்தி யடைந்து
மரணமிலா மாண்பைப் பெறும்
ஞான தேகமதுவே.

காலாதீத மடைந்து
காணாததை காணச் செய்யும்
ஞான தேகமதுவே.

எங்கும் பூரணமாய்
எவ்வுயிரும் தானாய் நிற்கும்
ஞான தேகமதுவே.

பராபர அறிவாய்
பரமாய் நம்மை ஆக்கும்
ஞான தேகமதுவே.

தயவு ஒன்றே
தருமிந்த பராபர தத்துவ
ஞான தேகமதுவே.

காரண ரூபமாய்
காட்சி யளித் தருளும்
ஞான தேகமதுவே.

அளவு கடந்த
அற்புத மாற்றுத் தங்கமாகும்
ஞான தேகமதுவே.


தருமச்சாலை


சி என்னும்
பேராபத்தை விலக்க வந்த
தருமச் சாலையே.

ஜீவ காருண்ய
ஜோதி விளங்கி ஒளிரும்
தருமச் சாலையே.

யற்கை விளக்க
அருளைப் பெற உதவும்
தருமச் சாலையே.

தரும வழிநின்று
தனிப் பெருங் கருணையான
தருமச் சாலையே.

ஈந்து உண்ணும்
இயற்கை பழக்கம் அருளும்
தருமச் சாலையே.

ஆன்ம இலாபம்
அருளி பொருளை அருளாக்கும்
தருமச் சாலையே.

சாலைக்கு உரியோர்
சவத்தை புதைக்கச் சொல்லும்
தருமச் சாலையே.

அரக்கப் பசியை
அணையா அடுப்பால் அணைக்கும்
தருமச் சாலையே.

உடலை பிரியாது
உயிரைக் காக்கும் சத்திய
தருமச் சாலையே.

பசித் துன்பம்
போக்கிய புண்ணியரை இறைவனாக்கும்
தருமச் சாலையே.


ஞானசபை

ட்டம் பலமுடைய
அருட்பெருஞ் ஜோதியா ராடும்
திருஞான சபையே.

கடவுள் எனக்
கருதுவோர் பலரும் தண்டனிடும்
திருஞான சபையே.

இறந் தோரெலாம்
உயிர்ப்பித்து எழுப்பி யருளும்
திருஞான சபையே.

மூப்பினர் யார்க்கும்
மீண்டும் இளமை யளிக்கும்
திருஞான சபையே.

உண்மைக் கடவுளை
உண்மை விளக்கஞ் செய்கின்ற
திருஞான சபையே.

கருதிய வண்ணம்
களித்து இன்புறச் செய்யும்
திருஞான சபையே.

பெரு வாழ்வை
பெற்று வாழஅற்புத சித்தளிக்கும்
திருஞான சபையே.

திருவே திருவுள்ளம்
தாமே கொண்டு இயற்றிய
திருஞான சபையே.

அளவுபடா காலம்
அருள் ஓங்கும் வடலூர்
திருஞான சபையே.

அருட்பெருஞ் ஜோதியார்
அமர்ந்து விளையாடும் சத்திய
திருஞான சபையே.


சித்தி வளாகம்

நினைந்து நெகிழ
நித்திய தீப மொளிவீசும்
சித்தி வளாகமே.

எவரும் கண்டிடா
எல்லையை காட்டு விக்கும்
சித்தி வளாகமே.

முத்தேக சித்தரில்
முதல்வர் இராம லிங்கரின்
சித்தி வளாகமே.

உலகர் செய்யும்
உதவிபோல் கோடி செய்யும்
சித்தி வளாகமே.

வள்ளல் மீண்டும்
வருகின்ற வரந் தரும்
சித்தி வளாகமே.

கொடி கட்டிக்
கொண்டு உண்மை உரைத்த
சித்தி வளாகமே.

பேருபதேச பெரும்
பேச்சால் இறைநெறி புகன்ற
சித்தி வளாகமே.

மயங்கிய உலகில்
மகாமந்திரம் வெளிப்பட ஓதிய
சித்தி வளாகமே.

பெருங்கருணை யாலருட்
பெருஞ்ஜோதி அகவல் எழுதிய
சித்தி வளாகமே.

அரூப ரூபமாய்
இராம லிங்கர் வாழ்ந்துவரும்
சித்தி வளாகமே.