Sunday, April 28, 2013

மனு முறைகண்ட வாசகம்


                                            மனு முறைகண்ட வாசகம்                              28-04-2013
                                               ***************************

நண்பர்களே, நமது வள்ளலார் - குழந்தைகளுக்கும் நல்ல போதனை சொல்ல விழைந்தனர். அதன் விளைவாக அவரால் எழுதப்பட்டதே இந்த 'மனு முறைகண்ட வாசகம்' என்னும் நூல் ஆகும். இது 1854 ஆம் ஆண்டு அச்சு ஏட்டில் வெளிவந்தது. இந்நூல் வாயிலாக நமது குழந்தைகளுக்கு வள்ளலார் சொல்ல வந்த முக்கிய கருத்து யாதெனில் 'எவ்வுயிர்களிடத்தும் கொலைப் பாதகத்தை சமமாகக் கொள்ளவேண்டும்' என்ற நீதியை மிகவும் விரிவாக எடுத்தியம்பி இருக்கிறார்கள். இந்த நீதியை பொறுத்தமட்டில் வயதில் பெரியவர்களாக இருக்கும் நாமும் இன்னும் குழந்தைகளாகவே இருந்துக்கொண்டு தவறுகளை செய்வதால், நாம் அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது.

சோழ நாட்டிலே 'திருவாரூர்' என்னும் திருத்தலத்தில் 'மனுசக்கரவர்த்தி' என்ற மாமன்னர் மிகச்சிறப்பாக ஆட்சி செய்து வருகையிலே, ஒருநாள் அரசரின் மகன் தேரோடிக்கொண்டு வரும்போது எதிர்பாராவிதமாக ஒரு கன்றுக்குட்டி ஓடிவந்து தேரின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்து விடுகிறது. அதனைக் கண்ட தாய் பசு 'மனுசக்கரவர்த்தி' யிடம் நீதிக் கேட்க, 'மனுசக்கரவர்த்தி' தமது தீர்ப்பாக தமது ஒரே மகன் என்றும் பார்க்காமல் அவனையும் அந்த விபத்து நடந்தது போன்றே தேர் சக்கரத்தில் கிடத்தி கொன்று விடுகிறான். இது தான் கதையின் சுருக்கம்.

# இப்படிப்பட்ட கொலை பாதகத்தை தமது மகன் செய்ததற்கு யான் சென்றபிறவியில் என்ன பாவம் செய்தேனோ? என்று மன்னர் புலம்புவதாக கீழே உள்ள பாவப் பட்டியலை வள்ளலார் மிகவும் அருமையாக எழுதியிருக்கிறார். நாம் ஒவ்வொருவரும் இதனைப் படித்து இப்பாவங்களை செய்யாமல் புனிதர்களாகுவோம்...

நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!
மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!
குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ!
மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ!
உயிர்க்கொலை செய்வோர்க்க உபகாரஞ் செய்தேனோ!
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ!
ஆசைகாட்டி மோசஞ் செய்தேனோ!
வரவுபோக் கொழிய வழியடைத்தேனோ!
வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ!
பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ!
இரப்போர்க்குப் பிச்சை இல்லையென்றேனோ!
கோள் சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ!
நட்டாற்றிற் கையை நழுவவிட்டேனோ!
கலங்கி யொளித்தோரைக் காட்டிக்கொடுத்தேனோ!
கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ!
காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ!
கணவன்வழி நிற்போரைக் கற்பழித்தேனோ!
கருப்பமழித்துக் களித்திருந்தேனோ!
குருவை வணங்கக் கூசிநின்றேனோ!
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ!
கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ!
பெரியோர் பாட்டிற் பிழைசொன்னேனோ!
பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ!
கன்றுக்குப் பாலு‘ட்டாது கட்டிவைத்தேனோ!
ஊன்சுவை யுண்டு உடல் வளர்த்தேனோ!
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ!
அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்தேனோ!
குடிக்கின்ற நீருள்ள குளந் து‘ர்த்தேனோ!
வெய்யிலுக் கொதுங்கும் விருக்ஷ மழித்தேனோ!
பகைகொண்டு அயலோர் பயிரழித்தேனோ!
பொதுமண்டபத்தைப் போயிடித்தேனோ!
ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ!
சிவனடியாரைச் சீறி வைதேனோ!
தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ!
சுத்த ஞானிகளைத் தூஷணஞ் செய்தேனோ!
தந்தைதாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ!
தெய்வ மிகழ்ந்து செருக்கடைந்தேனோ!
என்ன பாவம் செய்தேனோ! இன்னதென்றறியேனே!

மேலும் இந்த நூலில் வள்ளலார் பலவையான உவமைள் மற்றும் பழமொழிகளை 108 எண்ணிக்கை வரும்படி அமைத்துக் கையாண்டுள்ளது மிகவும் சிறப்பாக உள்ளது, அதனையும் இங்கே காண்போம்...

1. பாலோடு பழஞ் சேர்ந்தாற் போல
2. கட்டிய வஸ்திரம் அவிழ்ந்தவன் கைபோல
3. கண்களில்லாத முகமும், சூரியனில்லாத பகலும் போல
4. வலம் புரிச் சங்கு விலையுயர்ந்த வெண் முத்தினைக் கருப்பங் கொண்டது போல
5. அதிதியாரானவர் ஆதித்தனைப் பெற்றது போல
6. மல்லிகைக் கொடி மணமுள்ள மலரைப் பூத்தது போல
7. தூரதேசத்திற் போயிருந்த கப்பல் துறைமுகத்தில் வந்ததென்று சொல்லக்கேட்ட       வர்த்தகனைப் போல
8. தாகங்கொண்டு தவிக்குங் காலத்தில் சமீபத்தே தண்ணீருண்டென்று சொல்லக்கேட்ட தேச சஞ்சாரியைப் போல
9. இளம் சூரியோதயம் போல
10. கற்புள்ளவள் கணவனை உபசரிப்பது போல
11. படிப்பில் ஆசைவைத்தவன் பாடத்தைப் பாராட்டுவது போல
12. தன்னை உயர்ந்தவனாக்க நினைத்தவன் தருமத்தை வளர்ப்பது போல
13. முன் சிறுமையடைந்து பின் செல்வத்தைப் பெற்றவன் அச்செல்வத்தைப் பாதுகாப்பது போல
14. வாழை யிளங்குருத்துப் போல
15. அறிவில் ஆதிசேடனைப் போல
16. கட்டழகில் காமனைப் போல
17. ஆண்மையில் ஆண் சிங்கம் போல
18. நடையில் மத யானை போல
19. வாய்மையில் மார்த்தாண்டன் போல
20. கொடையில் கற்ப விருக்ஷம் போல
21. நெடுநாள் பிரிந்திருந்த கன்றினைக் கண்ட பசுவைப் போல
22. இடந்தெரியாதிருந்த புதையலை எதிர்ப்படக் கண்டவன் போல
23. மனோ வேகமும் பின்னடையத்தக்க வேகமான நடையுள்ள நான்கு குதிரைகளைக் கட்டிய மகா மேருவைப் போல
24. தேவேந்திரன் தியாகராஜ தரிசனஞ் செய்யப் போவது போல
25. மணமுள்ள மலரை வண்டுகள் சூழ்ந்தது போல
26. இனிய சுவையுள்ள தேனை ஈக்கள் சுற்றியது போல
27. பளிங்குச் சிமிழ்க்குள்ளிருந்து தோன்றுகின்ற பருத்த நீலக்கல் போல
28. செந்தாமரை மலர் போல
29. சிறிதே இமைத்து மனோரம்மியமாய் மலர் போல
30. வலம்புரி சங்கு போல
31. மத்தளம் போல
32. மந்தர மலைப் போல
33. வீணைத் தண்டு போல
34. கண்ணாடி போல
35. இளங்கன்று பயமறியாதது போல
36. இடியோசைக் கேட்ட நாகம் போல
37. விரிந்த பாற்கடலில் விஷம் பிறந்தது போல
38. எண்ணம் பொய்யாகும், ஏளிதம் மெய்யாகும் என்பது போல
39. குலத்தைக் கெடுக்கவந்த கோடாரிகாம்பு போல
40. மரபழிக்க வந்த வச்சிராயுதம் போல
41. பொன்கத்தி யென்று கழுத்தரிந்து கொள்வது போல
42. எவ்வுயிர்களையும் தம்முயிர் போல
43. கும்பகோணத்துப் பள்ளன் கொள்ளை கொண்டு போகத் தஞ்சாவூர்ப் பார்ப்பான் தண்டங் கொடுத்ததைப் போல
44. முற்ற நனைந்தார்க்கு ஈரமில்லை என்பது போல
45. சூரைக்காற்றில் அகப்பட்ட துரும்பைப் போல
46. பிணம் போல
47. பாவிக்குப் பாக்கியந் தங்காதது போல
48. இளங்கன்றை இறக்கவிட்டு மலட்டு பசு போல
49. மாதர்கள் காலிலணிந்த சிலம்போசை கேட்ட மாதவர் போல
50. அழுகுரலோசை கேட்ட அந்தணர் போல
51. சண்டை இரைச் சலைக் கேட்ட சற்சனர் போல
52. புலி முழக்கம் கேட்ட புல்வாய் போல
53. அடியற விழுந்த பனை மரம் போல
54. சாவியாய்ப் போன தன் பயிரைக் கண்ட தரித்திரனைப் போல
55. வெந்தப் புண்ணில் வேலுருவியது போல
56. விஷம் தலைக் கேறியது போல
57. கடல் வெள்ளம் போல
58. நெருப்பில் விட்ட நெய்யைப் போல
59. குள்ளனைக் கொண்டு ஆழம் பார்க்க வந்தது போல
60. பேயைத் தெய்வமென்று பிள்ளைவரம் கேட்க வந்தது போல
61. கொல்லை ஆள்காட்டியைக் கூலி கேட்கவந்தது போல
62. விழலினிடத்து நிழலுக்கு வந்தது போல
63. வீட்டின் வாயிலில் வெள்ளெருக்குப் பூத்தது போல
64. பழைய தரித்திரனுக்குப் பணங்கிடைத்தது போல
65. இளங்கன்று எதிர் வரவுங் கண்கெட்டுக் கருத்தழிந் தவன் போல
66. பாலியப் பருவம் பயமறியாதது போல
67. மாதா பிதா செய்தது மக்களுக்கு போல
68. நுங்கு சூன்றெடுப்பது போல
69. காராட்டை வெள்ளாடு என்பது போல
70. அமங்கள வாரத்தை மங்கள வாரமென்பது போல
71. நாகப் பாம்பை நல்ல பாம்பு என்பது போல
72. எய்தவன் இருக்க அம்பை நோவது போல
73. அம்பு செய்துக் கொடுத்த கருமானை நோவது போல
74. தராசுக் கோல் போல
75. வாதியை மாத்திரம் வரவழைத்துக் கொண்டு நடுக்கொள்ளைக்காரன் நியாயந் தீர்தானென்பது போல
76. எழுத்தறியாதவன் ஏட்டை சுமந்தது போல
77. கண்ணில்லாதவன் கண்ணாடியைச் சுமந்து கொண்டது போல
78. தன் வீட்டு விளக்கென்று முத்தமிட்டால் சுடாது விடாது போல
79. ஆனை மதப்பட்டு அடவியழித்தது போல
80. காக்கை யேறி பனம்பழம் வீழ்ந்தது போல
81. அமுதமூட்டுகின்ற போது அதுவே விஷமாகிக் கொன்றது போல
82. பயனைத் தரும் விருசஷத்திலுள்ள பழத்தைப் பாராது பிஞ்சைப் பிடித்தது போல
83. வழிக்குத் துணையாக வருவான் போல் வந்து நடுகாட்டிற் பயங்காட்டிப் பணம் பறிக்கின்றவன் போல
84. கருத்தறியாதவன் சொன்னதே சொல்வான் போல
85. பறையடித்தாற் போல
86. பாய்மரச்சுற்றி அகப்பட்ட காக்கைப் போல
87. நீர்ச்சுழியிலகப்பட்ட வண்டு போல
88. அழுகின்ற குழந்தைக்குப் பழத்தை எதிர்வைத்துப் பராக்கு காட்டுவது போல
89. மனம் பேச வந்தது போல
90. மலையை எடுத்துண்டு வயிறு நோகின்றவனுக்குச் சுக்கிடித்துக் கொடுத்தது போல
91. கடுந்தவம் புரிந்து பெற்ற கவுத்துவ மணியைக் கடலிலெறிந்து விட்டுவா என்பதுபோல
92. பலநாள் வருந்தி வளர்த்த பஞ்ச வர்ணக்கிளியைப் பருந்துக்கிரையிட்டுவா என்பதுபோல
93. செய்தற்கரிய தவஞ்செய்து பெற்ற தேவாமுதத்தைச் சேற்றிற் கழித்துவா என்பதுபோல
94. இருதலைக் கொள்ளிக்குள் அகப்பட்ட எறும்பு போல
95. ஊசலாடுகின்றவனைப் போல
96. நடைத் தூக்கங் கொண்டவன் போல
97. பித்தம் பிடித்தவன் போல
98. எரியுங் கொள்ளியை யேறத்தள்ளுவது போல
99. நீண்டெரியும் நெருப்பில் நெய்விடுவது போல
100. கப்பல் உடைந்து கலங்கும் போது தெப்பமும் உடைந்தது போல
101. கொள்ளை கொண்டவனை விட்டு குறுக்கே வந்தவன்மேற் குற்றம் சாட்டியது போல
102. கொண்ட மனையாளிருக்க கூலி வாங்க வந்தவளைத் தாலிவாங்கச்   சொன்னதுபோல
103. நல்ல விதி நடுவே இருக்கக் கோணிய விதி குறுக்கே வந்ததது போல
104. சோறுண்ணும்போது தொண்டை விக்கிக் கொண்ட தென்பது போல
105. வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைந்த தென்பது போல
106. கிணறு வெட்டப் போனவிடத்தில் பூதம் புறப்பட்டது போல
107. கடைகொள்ளப் போகும்போது கள்ளனெதிர்ப் பட்டது போல
108. இழந்துவிட்ட பொருள் எதிர் வரபெற்றவர்கள் போல

மேலும் சில முக்கியமான பகுதிகளை இந்நூலிலிருந்து எடுத்துக்காட்ட விரும்புகிறேன்...

# மனுநீதி சோழனின் மாண்பு பற்றி வள்ளலார் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறார்...

கலிங்கர், குலிங்கர், வங்கர், கொங்கர், அச்சியர், கொச்சியர், தெங்கணர், கொங்கணர், தெலுங்கர் முதலான தேசத்து அரசர்களெல்லாம் திறகட்டி வணங்கினர்...

இவரது செங்கோல் ஆட்சியில் உலகமெங்கும் புலியும் பசுவும் கூடிப்போய் ஒரு துறையில் நீர்குடித் துலாவியும்,
சிங்கமும் யானையும் சேர்ந்து திரிந்தும்,
பருந்தும் கிளியும் பழகி மகிழ்ந்தும்,
கூகையும் காகமும் கூடிப்பறந்தும்,
பூனையும் எலியும் பொருந்தியிருந்தும் இந்தப்படி மற்றுமுள்ள விரோதமாகிய உயிர்களும் ஒன்றுக்கொன்று விரோதமில்லாமல் சினேகஞ்செய்து வாழ்ந்தன...

அவரது ஒப்புயர்வில்லா அரசாட்சியிலே,
பூவே பறிபடுவது,
புனலே சிறைபடுவது,
காற்றே அலைபடுவது,
கல்லே கடினமுடையது,
மாவே வடுபடுவது,
வாழையே குலைபடுவது,
வண்டே மதுவுண்பது,
பந்தே அடிபடுவது,
பரியே கட்டுண்பது,
நெல்லே குத்துண்பது,
நெற்கதிரே போர்படுவது,
வயலே வளைபடுவது,
மாதர் இடையே குறைபடுவது,
தரித்திரமே தரித்திரப்படுவது,
துக்கமே துக்கப்படுவது,
பொய்யே பொய்படுவது என்பதாக எந்தக் குற்றமும் இன்றி மேன்மையான ஆட்சி இருந்தது.

எமது விளக்கம்: மேன்மையான ஆட்சி எப்படி எனில் மேற்கண்டவாறு குற்றங்களையெல்லாம் குணமாக்கி அந்தக் குற்றங்களையெல்லாம் இயற்கையே செய்யும்படி விதித்து அந்தக் குற்றங்களினால் மக்களுக்கு நன்மையே உண்டாகும்படியான ஆட்சி இருந்த்து.
குற்றமேல்லாம் குணமாகக் கொண்ட ஓர் சிறப்பான ஆட்சியை நாம் இங்குக் காண்கிறோம்.

# மனுநீதி சோழனின் பரம்பரை அரசர்களின் பெயர்களை வள்ளலார்   கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்...
சூரிய குலத்திற்கு ஆதியாகிய மனுவென்பவரும் அவர் வழிக்குப் பின் வழியாகத் தோன்றிய குலோத்துங்க சோழர்,
திருநீற்றுச் சோழர்,
காவிரி கரைகண்ட சோழர்,
மனுநீதிச் சோழர்,
இராஜேந்திர சோழர்,
இராஜசூடாமணிச் சோழர்,
உறையூர்ச் சோழர்,
மண்ணளந்த சோழர்,
கங்கை கொண்ட சோழர்,
தேவர் சிறைமீட்ட சோழர்,
மரபுநிலை கண்ட சோழர்,
எமனை வென்ற சோழர்,
சுந்தரச் சோழர்,
மெய்ந்நெறிச் சோழர்.

# மதியுடைய மந்திரிகள், தங்களுடைய மன்னருக்காக உண்மையை / நீதியை நிலைநாட்ட தயங்கி (ஜால்ரா அடிப்பது - தற்போது சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்தில் எதற்கெடுத்தாலும் மேசையைத் தட்டி பாராட்டுவதைக் இங்கே குறிப்பிடலாம்) தங்களது வாதத்தால் குற்றத்தை மறைக்க முயன்றபோது, அதற்கு மனுநீதி சோழன் தங்களது மதியுடைய மந்திரிகளை கடிந்துரைப்பதாய், வள்ளலார் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்...

சந்திர சூரியர் திசை மாறினாலும், சமுத்திரந் தடை மீறினாலும், மகா மேரு நிலை குலைந்தாலும் மனங்கலங்காது, விவகாரங்களிற் பழுது வாராது பாதுகாக்கின்ற குணத்தையுடைய நீங்கள் இன்று, நீதி இல்லாத சில குறும்பரசரைக் கூடி, இவ்வரசர்,

1. தூளி என்றால், நிர்தூளி என்றும்,
2. கரும்பு கசப்பு என்றால், எட்டிக்காய் போன்று கசப்பு என்றும்,
3. தாயைக் கொலை செய்வது தக்க தென்றால், வேதத்தின் முதற்காண்டதில் விதித்திருக்கின்ற தென்றும்,
4. வெள்ளத்தில் கல் மிதக்குமா என்றால், ஆற்றில் அம்மி மிதக்கக் கண்டோமென்றும்,
5. காக்கை வெளுப்பென்றால், நேற்றைப் பொழுதில் நிற்கக் கண்டோமென்றும்,
6. கல்லின் மேல் நெல் முளைக்குமென்றால், கொத்தால் ஆயிரம், குலையால் ஆயிரம் என்றும்,
7. கள்ளனைப் பிடிக்கலாமோ என்றால், பிடித்தால் பெரும் பாவமல்லவோ என்றும்,
8. பொய் ஆயிரமட்டுஞ் சொல்லலாமோ என்றால், ஐயா, ஐயாயிரமட்டுஞ் சொல்லாமென்றும் விதியிருக்கின்றதென்றும்,
9. பெண்சாதியுள்ளவனுக்குப் பிள்ளை கொடுப்பது யார் என்றால், ஐயா, பெண் கொடுத்தவனே பிள்ளை கொடுக்க வேண்டுமென்றும்,
10. ஒருவன் மனையாள் மற்றொருவனைக் கூடலாமோ என்றால், அடக்கத்தில் ஆயிரம்பேரோடு கூடினாலும் குற்றமில்லை என்றும்,
11. இந்தக் கழுவில் இவனை ஏற்றலாமோ என்றால், கழுவுக்குத் தக்க கனமில்லை என்றும்,
12. என்பிள்ளையும் எச்சரிக்கைக் காரன் பிள்ளையும் ஒருவனை ஒருவன் உதாசினமாகத் திட்டினாராம் - இதற்கு என்ன செய்யலாமென்றால், உமது சற்புத்திரன் வாய்க்குகச் சர்க்கரையிட வேண்டும் - மற்றவன் வாய்க்கு மண்ணிட வேண்டும் என்றும்
சொல்லுகின்ற துர்மந்திரிகளைப் போல நியாயம் பாராது நயிச்சிய வார்த்தைகளைச் சொன்னீர்கள்...

# மதியுடைய அரசர்களின் நீதி எவ்வாறு இருக்கவேண்டும் என்று வள்ளலார் கீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றார்...

1. தன்னைக் கொடுத்தாவது தருமத்தைத் தேடவேண்டும்,
2. தாய் தந்தை யிடத்திலாயினுந் தராசுக்கோல் போலச் செப்பமாக நின்று தீர்ப்புக் கொடுக்க வேண்டும்,
3. ஒருவரிடத்துச் தண்டனை விதிக்கும்போது, எவ்வுயிர்களுந் தன்னுயிர்போன்று எண்ணுவதும்,
4. எந்தப் பொருள் எந்தப் பிரகாரமா யிருந்தாலும் அந்தப் பொருளின் உண்மையை அறிந்து கொள்வதும்,
5. உருவு நோக்காது அறிவை நோக்குவதும்,
6. ஊழ்வினை நோக்காது செய்வினை நோக்குவதுமாக இருக்கவேண்டும்.

மேற்கண்ட சிறப்புகளையுடையதாய் வள்ளலார் இயற்றிய 'மனுமுறைகண்ட வாசகம்' என்னும் நூல் விளங்கி வருகிறது. நீங்களும் படித்து பயன் பெறவும்.

--தி.ம.இராமலிங்கம்.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி


 
                                             


















Friday, April 26, 2013

குடும்ப மகிழ்ச்சி


                                  குடும்ப மகிழ்ச்சி                                26-04-2013

மணவாழ்க்கையில் அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசைதான். அது சிலருக்கு எளிதாகவும் அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது.

குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை?
கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன?
குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி?
குடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு என்ன?
வரவு, செலவை வரையறுப்பது எப்படி?


குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை?
1. வருமானம்
2. ஒத்துழைப்பு
3. மனித நேயம்
4. பொழுதுபோக்கு
5. ரசனை
6. ஆரோக்கியம்
7. மனப்பக்குவம்
8. சேமிப்பு
9. கூட்டு முயற்சி
10.குழந்தைகள்


கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?
1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
2. மனது புண்படும்படி பேசக் கூடாது.
3. கோபப்படக்கூடாது.
4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
5. பலர் முன் திட்டக்கூடாது.
6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய   முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. மனைவியின் தாய் வீடு மற்றும் அவளது உறவினர் இல்லங்களுக்கு அவ்வப்போது அழைத்துச் செல்ல வேண்டும்.
29. மனைவியின் உறவினர் இல்லங்களில் நடக்கும் விஷேஷங்களில் இருவரும் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும்.
30. மனைவியின் ஆடை அலங்காரங்களில் அவளது சுதந்திரத்தை பறிக்கக்கூடாது.
31. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
32. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
33. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
34. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
35. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
36. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
37. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
38. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
39. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.
40. மனைவியின் சம்மதம் இன்றி தொடக்கூடாது.


மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?
1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.
2. காலையில் முன் எழுந்திருத்தல்.
3. எப்போதும் சிரித்த முகம்.
4. நேரம் பாராது உபசரித்தல்.
5. மாமனார், மாமியாரை மதிக்க வேண்டும்.
6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.
8. அதிகாரம் பணணக் கூடாது.
9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.
10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
11. கணவனை சந்தேகப்படக் கூடாது.
12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.
13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.
15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.
20. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.
21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.
23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.
25. அடக்கம், பணிவு தேவை. சில நேரங்களில் கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்
26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.
28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
30. உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.
31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.
32. உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.
33. சாப்பிடும்போது டி.வி. சீரியல் பார்க்காமல் இருப்பது.
34. மொத்தத்தில் மனைவியை தனக்கு அடிமையாக வைத்திருக்க நினைப்பது. (இந்த   நினைப்புதான் ஒரு குடும்பத்தில் பிரச்சனை உருவாக ஏதுவாக இருக்கும்)



பிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது எப்படி?
தன்னம்பிக்கை என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு நெம்புகோல் போன்றது. அது இல்லையேல் வாழ்க்கை இல்லை. இதனைப் பெற்றோர் தம் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். சுயமாகச் சிந்திக்க, சுயமாகச் செயல்பட குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். படிப்பில் , அதோடு கூட வீட்டு வேலைகளில் குழந்தைகளுக்குப் பெற்றோர் போதிய பயிற்சி அளிக்க வேண்டும்.
குழந்தைகளை அச்சுறுத்தி அடித்துக் கண்டிக்கக் கூடாது. ஆனாலும் அதன் போக்கில் எதேச்சையாக விட்டுவிடக் கூடாது. குழந்தைகளுக்கு அனபுப்பால் ஊட்டி, அரவணைத்துப் பெருமைப் படுத்த வேண்டும் . நீ ராசா அல்லவா? ராசாத்தி அல்லவா? என்கிற வாசகங்கள் பெற்றோர் வாயிலிருந்து வர வேண்டும். ‘மக்கு, மண்டு, மண்டூகம் - போன்ற வாசகங்கள் மலையேற வேண்டும்.பயம், கூச்சமின்றி, உறுதியான நெஞ்சம், உண்மையான பேச்சு, உயர்வான பண்பு இவை குழந்தைகளுக்கு அமைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.



மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?
பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.


1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.
2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.
3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.
4. விரும்பியதைப் பெற இயலாமை.
5. ஒருவரின் நியாயமான சுதந்திரமான செயல்களில் இன்னொருவர் மூக்கை நுழைத்து   இப்படித்தான் இருக்கவேண்டும் என கட்டளை இடுவது.  
6. ஒருவரையொருவர் நம்பாமை.
7. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.
8. இருவரின் மகிழ்ச்சிக்கும் தாய்,தந்தையர், உறவினர்கள் தடையாய் இருப்பது.
9. உலலாசப் பயணம் போக இயாலாமை.
10. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.
11. விருந்தினர் குறைவு.
12. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.
13. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.
14. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.
15. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.
16. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.
17. வேறு எவையேனும் இருப்பின்...


உங்கள் பங்கு என்ன?
உங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க அல்லது அதில் மகிழ்ச்சியைக் குறைக்க, தான் எந்த அளவு காரணம் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து இல்லாததைக் கொண்டு வர வேண்டும்.


1. அன்பாகப் பேசுவது
2. பிறர் மீது அக்கறை காட்டுவது.
3.வீட்டை அழகாக வைத்துக் கொள்வது.
4. குறை கூறாமல் இருப்பது.
5.சொன்னதைச் செய்து கொடுப்பது.
6. இன்முகத்துடன் இருப்பது.
7.முன் மாதிரியாக நடந்து கொள்வது.
8. பிறரை நம்புவது.
9.ஒன்றாக பயணம் போக விரும்புவது.
10. பணிவு
11. எதையும் எடுத்த, உரிய இடத்தில் வைப்பது.
12. பிறர் வேலைகளில் உதவுவது.
13. பிறருக்கு விட்டுக் கொடுப்பது.
14. பிறர் வருந்தும் போது ஆறுதல் கூறுவது.
15. சுறுசுறுப்பு
16. சிறிய விசயங்களைக் கூடப் பாராட்டுவது.
17. புதிய முயற்சிகளை ஊக்குவிப்பது.
18. நகைச்சுவையாகப் பேசுவது.
19. அதிகமாக வேலை செய்ய விரும்புவது.
20. செலவுகளைக் குறைக்க ஆலோசனை கூறுவது.
21. நேரம் தவறாமை.
22. தற்பெருமை பேசாமல் இருப்பது.
23. தெளிவாகப் பேசுவது.
24. நேர்மையாய் இருப்பது.
25. பிறர் மனதைப் புண்படுத்தாமல் இருப்பது.


எதற்கும் யார் பொறுப்பு?
நமது அனைத்து நன்மை தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அன்றாடம் அனேகம் பேரைச் சந்திக்கிறோம் உதவி கேட்கின்றோம். ஆணையிடுகிறோம். அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெற்றி பெறுகிறோமா? பல நேரங்களில் பகையும், பிரச்சனைகளுமே மிஞ்சுகின்றன. விளைவாக - விரக்தியும், இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, தீராத கவலை, அமைதியின்மை, மது, சிகரெட் பழக்கம், தூக்க மின்மை, ஒத்துப்போக இயலாமை , உணர்ச்சி வசப்படுதல் அஜீரணம் ஏன் இந்த நிலை? நாம் மகிழ்வாக இருக்க, நம்மால் பிறரும் மகிழச்சி பெற , பிறர் நம்மை விரும்ப, பிறர் மத்தியில் நம் மதிப்பு உயர, பிறரிடம் நம் காரியங்களைச் சாதித்துக் கொள்ள பத்து கட்டளைகள்


பத்து கட்டளைகள்
1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.
2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.
3.இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.
4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.
5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.
6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.
7. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள்.
8.ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.
9. ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்
10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.

குடும்பம் ஒரு பல்கலை கழகமாகும். பல்வேறுபட்ட பாடத்தினை அங்கு கற்றேஆக வேண்டும். குடும்பம் என்கிற தேர்வில் அனைவரும் குறைந்தபட்சம் தேர்ச்சி மதிப்பெண்ணையாவது எடுக்க எனது வாழ்த்துகள். வள்ளலாரின் இல்லற உபதேசங்களை நாம் இன்னொரு பதிவில் விரைவில் காண்போம்.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி



பிணம் என்னும் புதையல்


        பிணம் என்னும் புதையல்           26-04-2013

இறைவன் மீது அன்பானவர்களே,

எல்லா உயிர்கள் மீதும் கருணைகொண்டவர்களே,

உங்கள் மீதான இறைவன் அருள் மிக அருகில் உள்ளது என்பதை உணரவும்.

இறவாத கல்வியை தமிழ் மொழியில் படித்து அதில் 'சாகாஅருளர்' பட்டத்தை 'இறைவன் அருள்' என்னும் பல்கலைக்கழகத்தில் 'அருட்பெருஞ்ஜோதி' ஆண்டவர் திருக்கரங்களால் பெற்ற ஒரே மாணவர் தான் நமது திரு அருட்பிரகாச வள்ளலார் ஆவார்கள். அவரது இறவா கல்வியின் ஆராய்ச்சி நூல் தான் 'திருஅருட்பா' என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் நாம் அறியாதது யாதெனில் இவ்வுலகில், கல்விக்கும் உயிர் உண்டு என்று சொன்னவர் நமது வள்ளலார் மட்டுமே. அதுவும் அந்த உயிருள்ள கல்வியே என்றும் இறவாத கல்வி என்று உலகியலோருக்கு பாடம் போதித்தார். மற்ற உலகியல் கல்வியெல்லாம் உயிர் அற்றக்கல்வி, உயிர் இருப்பது போல் தெரிந்தாலும் அவை, தாம் கற்றவர் இறக்கும் போது அக்கல்வியும் இறந்துவிடும் இயல்புக் கொண்டவை. திரு.கந்தசாமி, I.A.S., பட்டம் பெற்று தன்னைச் சார்ந்த மக்களை நிர்வாகம் செய்தவர், அப்படிப்பட்டவர் ஒரு நாள் இறந்துவிட்டார், அதன் பிறகு இடுகாட்டில் உள்ள வெட்டியான் கூட பிணத்தை எடுத்தாச்சா? என்று தான் கூறுவான், அந்தப் பிணத்திற்கு I.A.S., பட்டமெல்லாம் கிடைக்காது. ஏனென்றால் திரு.கந்தசாமி இறந்தவுடன் அவர் படித்த I.A.S., பட்டமும் இறந்துவிடுவதை நாம் காண்கிறோம்.

திரு.கந்தசாமி,I.A.S.,  போல் இவ்வுலகிலுள்ள படித்தவர்களும், படிக்காதவர்களும் இறக்கவே காண்கிறோம். நாம் கற்றக் கல்வியெல்லாம் நம்மோடு சாகக் காண்கிறோம். அடுத்த 'சாகாஅருளர்' பட்டத்தை வாங்குபவர் யாரோ? அது நானாகவும் இருக்கலாம், நீங்களாகவும் இருக்கலாம், நம்மை அடுத்தவர்களாகவும் இருக்கலாம்! சரி விஷயத்திற்கு வருவோம், இறந்துவிட்டால் என்ன செய்வது? கவலைப்படாதீர்கள் நீங்கள் உயிரோடு இருக்கும் வரை A.C. அறையில் இருந்து ஜில்லென்றக் காற்றை அனுபவித்திருக்க மாட்டீர்கள், ஆனால் நீங்கள் இறந்தப் பின்பு உங்கள் பிணம் A.C. பெட்டியில் அதனை சில மணிநேரங்கள் அனுபவிக்கும். தற்போதய பிணங்களெல்லாம் கொடுத்துவைத்தவைதான். அதன்பிறகு கலை உரைத்த கற்பணைக் கல்வியினால் தொன்று தொட்டு வந்த தேவையற்ற பல சடங்குகள் செய்து அழுது புலம்பி தூக்கிச் சென்று உங்களை எரித்துவிடுவார்கள் அல்லது புதைத்து விடுவார்கள். புதைத்துவிட்டால் நீங்கள் விதைக்கப்பட்டீர்கள் என்று பொருள், உங்கள் பிணத்திற்கும் ஒரு மரியாதைக் கொடுத்தீர்கள் என்று பொருள்.

ஆனால் மாறாக எரித்துவிட்டால், இத்தனை வயது வரை இப்பூமியில் நீங்கள் ஒரு மனிதனாக வாழவில்லை என்று பொருள், நீங்கள் உங்கள் பிணத்தையும் தற்கொலை செய்ய வைத்துவிட்டீர் என்று பொருள். ஏனென்றால் இந்த மனித தேகத்தை இறைவன் அவ்வளவு சுலபமாக நமக்கு கொடுத்துவிடவில்லை. தாய் கருப்பையினுள் இந்த தேகத்தை இறைவன் ஒவ்வொரு நொடியும் எப்படியெல்லாம் காத்து மனித உருவத்தை உயிரோடு இப்பூமியில் கொண்டுவந்தான் என்பதை நமது 'சாகாஅருளர் வள்ளலார்' தமது திருஅருட்பாவில் மிக விளக்கமாக சொல்லியிருக்கின்றார். அப்படி இறைவனால் கொடுக்கப் பட்ட இந்த தேகத்தை, நாம் நமது அறியாமையால் அதனை மதியாது பிணமாக்கினோம், அந்தப் பிணத்தையும் மதியாது அதனை எரித்து சாம்பலாக்கும் வன்செயலை செய்யத் தூண்டியது எது? உங்கள் சமயமும், மதமும் தானே? வேறு எதுவாக இருக்கவும் வாய்ப்பில்லை.

சாதியும் மதமும் சமயமும் பொய் பொய்யே! அவற்றில் தயவுசெய்து புகவேண்டாம் என்று 'சாகாஅருளர் வள்ளலார்' கூறிக்கொண்டிருப்பது உங்கள் காதில் விழுந்தும் கலை உரைத்தக் கற்பணைக் கல்வியை கற்றதினாலும், ஆசார சங்கர்ப்ப விகற்பங்களாலும் உங்கள் தந்தையையும் தாயையும் எரிக்க முயலுகின்றீர், இது இறை சட்டத்தின்படி கொலைக் குற்றத்திற்குச் சமம் என்பதை அறியவேண்டும். சரி, பிணத்தை எரிக்காமல் புதைத்து விட்டால் அப்படி என்ன நன்மை கிடைத்துவிடப் போகிறது? என்கிறீர்களா...

அதற்கு நமக்கு அண்ட பிண்ட விசாரனை தேவை. இந்த அண்டம் எப்படிப்பட்டது? பிண்டம் எப்படிப்பட்டது? என்று நமது 'சாகாஅருளர் வள்ளலார்' என்ன கூறுகிறார் என்பதனை முதலில் பார்போம்...

அண்டம் என்றால் இந்த பிரபஞ்சத்தைக்குறிக்கும், பிண்டம் என்றால் இவ்வுடலைக்குறிக்கும். அண்டத்தில் அண்டம், அண்டத்தில் பிண்டம் - பிண்டத்தில் அண்டம், பிண்டத்தில் பிண்டம் உள்ளன. நமது உடலில் பிண்டத்தில் பிண்டம் நமது கழுத்துக்கு கீழ் உள்ளப் பகுதிகளாகும். பிண்டத்தில் அண்டம் கழுத்துக்கு மேல் உள்ள தலைப் பகுதிகளாகும். அண்டத்திற்கும் பிண்டத்திற்கும் இடையே கண்டம் உள்ளது. பிண்டத்தில் அண்டம் இல்லையேல் பிண்டத்தில் பிண்டம் முண்டமாகிவிடும்.

அதே போல் அண்டத்தில் அண்டம் ஆகாயம் ஆகும். அண்டத்தில் பிண்டம் நமது பூமி, மற்ற சூரிய சந்திர நட்சத்திரங்களாகும். இந்த ஆகாயத்தில் நமது சூரியன் போல் பல்லாயிரங்கணக்கான சூரியன்கள் (நமது சூரியனைவிட ஆயிரம் மடங்கு பெரிய சூரியன்கள் உள்ளன) உள்ளன. இருப்பினும் வானம் என்றும் உஷ்ணத்தினாலோ குளிர்ச்சியினாலோ பாதிக்கப்படுவதில்லை.

அதே போல் நமது பிண்டத்தில் உள்ள அண்டத்தில் ஆயிரம் சூரியன்களின் உஷ்ணத்தை தாங்கக்கூடிய சக்தி உள்ளது. மேலும் நமது ஆன்மா ஆயிரம் கோடி சூரியபிரகாசமுடையது, இதனை ஏழுதிரைகள் மரைத்துக்கொண்டிருப்பதாக நமது 'சாகாஅருளர் வள்ளலார்' கூறுகிறார். இத்திரைகளை விலக்குவதற்கு நமது உடலை அதி உஷ்ணமாக மாற்ற வேண்டியது மிக முக்கியம் என்றும் 'சாகாஅருளர் வள்ளலார்' கூறுகிறார். இவ்வுடல் உஷ்ணத்தை பாதுகாக்கவே ஆடைகளால் தலைமுதல் கால் வரை இடைவிடாது மூடவேண்டும் என்றும் 'சாகாஅருளர் வள்ளலார்' கூறுகிறார். மேலும் அதி உஷ்ணத்தை உண்டுபண்ண இறைவனை ஒருமையில் நினைந்து உருகி அழுகையில் அந்த அதி உஷ்ணம் ஏற்படும் என்கிறார். ஒரு உயிருள்ள உடல் உஷ்ணத்தை இழக்கும்போது தான் அது தன் உயிரை இழக்கும். சூரியன் கூட நம்மைப்போல் ஒவ்வொரு நொடியும் உஷ்ணத்தை வெளியிட்டுக்கொண்டே உள்ளது, அது எப்போது தனது முழு உஷ்ணத்தையும் இழக்கிறதோ அப்போது அதுவும் இறந்துவிடும். அதையும் போட்டு புதைக்கவேண்டியதுதான், ஆனால் அப்போது இந்த பூமி மட்டுமில்லை சூரிய குடும்பமே இருக்காது! ஆனால் அதற்குள் நமக்காக பக்கத்துத் தெருவில் ஓரு புதிய வீட்டை இறைவன் பார்த்து குடியமர்த்திவிடுவான்.

இப்படி உஷ்ணத்தை இழந்த பிணங்கள் மண்ணில் புதைக்கப்பட்டு எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சடமாகிய ஒரு துரும்பு இம்மண்ணில் இருந்தே தீரும். அந்தத் துரும்பிற்கு திரும்பவும் உஷ்ணத்தை ஏற்றினால் என்ன ஆகும்...! மாண்டவர் மீண்டும் அதே தேகத்துடன் சிரித்துக்கொண்டே எழுவார்! செத்தாரை எழுப்புதல் என்பது இப்படித்தான். 'தமது உடலில் அதி உஷ்ணத்தைக் கொண்டிருப்பவர் ஒருவர் பிணத்திற்கு அருகில் சென்றால் பிணம் உயிர் பெற்றுவிடும்' என்றும் 'சடமாகி ஒரு துரும்பும், அவரது திருநோக்கத்தால் உயிர் பெற்றுப் பஞ்ச கிருத்தியங்களும் செய்யும்' என்றும் தமது திருஅருட்ப்பவில் 'சாகாஅருளர் வள்ளலார்' கூறுகிறார்.

அடுத்து நமது பிண்டத்தில் தச வாயுக்கள் ஒன்றினைந்து மிகச் சிறப்பாக ஆட்சி செய்து வருகின்றன. அவைகளைப்பற்றி சுருக்கமாக பார்ப்போம்,

1. உயிர் காற்று (பிராணன்) - மூக்கின் வழியே நடைபெறும் சுவாசம்.
2. மலக் காற்று  (அபானன்) - கழிவுகளை கீழ்நோக்கி தள்ளும்.
3. தொழிற் காற்று (வியானன்) - நரம்புகளுக்குத் தேவையான சத்துக்களை                                      கொண்டுசெல்லும்
4. ஒலிக் காற்று (உதானன்) - இரைப்பையிலிருந்து உணவின் சாரத்தை                                     வெளிப்படுத்தும்
5. நிரவுக் காற்று (சமானன்) - சத்துக்களை உடல்முழுதும் சமஅளவில்                                                கொண்டுச்சேர்ப்பது.
6. விழிக் காற்று (நாகன்) - பார்வைத்திறன் அளிப்பது, உணர்ச்சிகளை                                         தூண்டக்கூடியது
7. இமைக் காற்று (கூர்மன்) - கண்ணீரை வரவழைத்த்ல், சிரித்தல் போன்றவைகளுக்கு                           காரணமாக உள்ளது.
8. தும்மல் காற்று (கிருகன்) - நாவில் சுரப்பையும், பசி, தும்மலுக்கு காரணம்
9. கொட்டாவிக் காற்று (தேவதத்தன்) - கொட்டாவி விடுதல், விக்கலுக்குக் காரணம்
10.வீங்கக் காற்று (தனஞ்செயன்) - கோமா (நினைவற்றநிலை), உடலை                                          வீங்கச்செய்தல் போன்றவைகளுக்குக் காரணம்

இந்த பத்து வாயுக்கள் (தச வாயுக்கள்) தவிர வேறு சில வாயுக்களும் உடலில் செயலாற்றுகின்றன. அவற்றுள் முக்கியமாவை என கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடலாம்.
  முக்கியன் - உள் உறுப்புகளுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கும்.
  வைரவன் - கபத்தை உருவாக்கும்.
  அந்திரியாமி - பிராணனை உருவாக்குதல்.
  பிரவஞ்சனை - பிராணவாயுவின் நண்பன், இக்காற்றின் துணையுடன்தான் சுவாசம்                   நடக்கிறது.

மேற்கண்ட முக்கியமான் பத்து காற்றுகளும், ஒரு மனிதன் இறக்கும்போது என்ன செய்துக்கொண்டிருக்கும்?

முதலில் இவ்வுடலைவிட்டு பிரிவது உயிர்காற்றும், நிரவுக்காற்றும் மட்டுமே. இவைகள் பிரிந்தவுடன் மனிதன் இறந்துவிட்டதாக, பிணமாகிவிட்டதாக அறிவிக்கப்படுகிறது. கவனிக்கவும் மற்ற காற்றுகள் அந்த பிணமான உடலில் இருந்துக்கொண்டிருக்கும். ஒருவர் இறந்துவிட்டால் உயிர்சக்தி முழுவதும் உடனே உடலை விட்டுப் பிரிந்துவிடுவதில்லை. இறந்த உடலில் 11 நாட்களிலிருந்து 40 நாட்கள் வரை உடலைவிட்டுச் சென்றுவிட்ட அந்த இரண்டு வாயுக்களைத் தவிர மற்றவை அதன் அதன் வேலைகளை நமது பிண உடலில் செய்து விட்டு நிம்மதியாக தங்கள் வீட்டைவிட்டு செல்கின்றன.

அதுவரை நமது பிண உடலில் முடியும், நகமும் வளரும். ஒரு சிறிய அளவில் உயிர் சக்தி இன்னும் செயல்பட்டிருக்கின்றதை உணரலாம். உடலை விட்டு உயிர் பிரிவது மெதுவாகவே நடைபெறுகிறது. எப்படி இவ்வுடல் உருவாக பத்து மாதத்திற்கு நமக்கு கருப்பை தேவைப்பட்டதோ அதுபோல இவ்வுடல் அழிய மண்குழியில் பல வருடங்கள் இருக்க வேண்டியதுதான் இயற்கை.

இறுதியாக இந்த பிண உடலை விட்டு வெளியேறுவது தனஞ்செயன் வாயு ஆகும். இது இறந்த உடலை வீங்க வைப்பதும். அழுக வைப்பதும், நவதுவாரங்களில் நுரை, நீர் வரச்செய்தல், உடம்பைப் நாற்றம் எடுக்கச் செய்தல்  இதன் வேலைகளாகும். எப்போது இவ்வேலை முடிகிறதோ அது வரை நமது பிண உடலில் வருடக் கணக்கில் அது இருக்கும். பிறகு தலையின் உச்சிக் குழி வெடித்து இது வெளியேறும்.

இதற்காகத்தான் நமது பிணங்களை கண்டிப்பாக 'சாகாஅருளர் வள்ளலார்' அவர்கள் புதைக்க சொல்கிறார். மாறாக புதைக்காமல் எரித்துவிட்டால் முதலில் செல்லும் அந்த இரண்டு வாயுக்களைத் தவிற மற்ற வாயுக்களின் வேலையை செய்யவிடாமல் தடுப்பதுடன் அதனை நெருப்பின் வெப்பம் தாங்காமல் துன்பப்படுத்தி வலுக்கட்டாயமாக வெளியேற்றும் செயலும் ஒரு மனிதக் கொலைக்குச் சமமே. மின் தகனம், எரித்தல் போன்ற நிகழ்வின் போது இறுதியாகச் செல்லக்கூடிய தனஞ்செயன் வாயு, இடுக்காட்டில் கொண்டுபோய் தீ மூட்டியவுடன் பாதி உடம்பு வெந்தப் பின்பு வெப்பம் தாங்காமல் 'டப்' என்று சப்தத்துடன் வெடித்து (துன்பத்துடன், அப்பிணத்திற்கே சாபமிட்டு) வெளியேறும்.

இறந்த நபரை உயிருடன் மீண்டு வரச் செய்த யோகிகள் இந்த தனஜய வாயுயின் உதவி கொண்டுதான் அப்படிச் செய்துள்ளார்கள்.

சில யோகிகள் / கடின சித்தர்கள் தமது உடலில் உள்ள தனஞ்செயன் உட்பட அனைத்து வாயுக்களையும் தாம் இறக்கும்போது எடுத்துக்கொண்டு முழுமையாக உடலைவிட்டு விலகுவார்கள். தாம் இறந்தப் பிறகு தமது உடலில் எவ்வகையிலும் தாம் ஒட்டிக்கொண்டிருக்க விரும்பாமல் இப்படிச் செய்வார்கள். இவ்வித சமாதியும் தவறான செயல்களாகும்.

ஆனால், ஜீவசமாதி எய்திய யோகியின் உடலில் இருந்து இந்தப் பத்துவித
வாயுக்களுமே வெளிவருவது இல்லை, எனவே இவர்கள் விரும்பும்போதோ அல்லது இறைவன் விரும்பும் போதோ இவர்களால் மீண்டும் இவ்வுலகில் உலா வரயியலும். இவர்களுக்கும் மரணிப்பதற்கு கால நிர்ணயம் உண்டு. எனவே இவ்வகையான ஜீவசமாதி பழக்கத்தை 'சாகாஅருளர் வள்ளலார்' கைவிடச் சொல்கிறார்.

இதில் என்ன வேடிக்கை என்றால், நம்மால் கடின சித்தர்கள் யார்? ஜீவ சமாதி அடைந்தவர்கள் யார்? என்று கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும். ஏனென்றால் அவர்களது அனுபவம் அவர்களுக்குத்தான் தெரியும். பாம்பின் கால் பாம்பு மட்டுமே அறியும்!

எனவேதான் நண்பர்களே, நலம்சார் பண்பர்களே, இறைசார் அன்பர்களே நமது 'சாகாஅருளர் வள்ளலார்' இதனை உலகியலர்களுக்கு "சமாதிக் கட்டளை" என்றே நமக்கு கட்டளை (ORDER) இடுகின்றார். ஓர் அரசின் அதிகாரத்தை பெற்றவர்கள் மட்டுமே கட்டளை இடமுடியும் என்பது தெரிந்ததே. அதுபோல 'சாகாஅருளர் வள்ளலார்' அருட்பெருஞ்ஜோதி' ஆண்டவரின் 'செங்கோலை' பெற்று அண்ட சராசரங்களையும் தற்போதும், எப்போதும் ஆட்சி செய்து வருகின்றார், அப்படிப்பட்ட சாகாஅருளரின் அரசக் கட்டளைதான் இது. இதனை மீறுபவர்கள் தாங்களகவே சுடுகாட்டில் தண்டித்துக்கொண்டுவிடுகிறார்கள் என்பதனைக் கவனிக்க வேண்டும்.

அது என்ன 'சமாதிக் கட்டளை' என்பதனை பார்ப்போம்...

இக்கட்டளை நமது 'சாகாஅருளர் வள்ளலார்' 30-03-1871 ஆம் ஆண்டு தமது அரச ஆணையாக வெளியிட்டார், அதனை அப்படியே இங்கே மீண்டும் (26-04-2013) இவ்வுலக மக்களுக்காக சாகாஅருளரின் ஆணைப்படி வெளியிடுகிறேன்.

அன்புள்ள நீங்கள் சமரச வேதசன்மார்க்க சங்கத் தருமச் சாலைக்கு மிகவும் உரிமையுடையீர்க ளாகலின் உங்களுக்கு உண்மையுடன் அறிவிப்பது.

நீங்களும் உங்களை அடுத்தவர்களும் சிற்றம்பலத் தந்தையார் திருவருளாற் சுகமாக வாழ்வீர்களாக,

கர்மகால முதலிய பேதங்களால் யார்க்காயினுந் தேக ஆனி நேரிட்டால் தகனஞ் செய்யாமல் சமாதியில் வைக்கவேண்டும். இறந்தவர்கள் திரும்பவு மெழுந்து நம்முடன் இருக்கப் பார்ப்போம் என்கிற முழு நம்பிக்கையைக் கொண்டு எவ்வளவுந் துயரப்படாமலும் அழுகுரல் செய்யாமலும் சிற்றம்பலக் கடவுள் சிந்தையுடனிருக்க வேண்டும். புருடன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் வேண்டாம். மனைவி இறந்தால் புருடன் வேறு கல்யாணப் பிரயத்தனஞ் செய்யவேண்டாம். பிள்ளைகள் இறந்தால் சஞ்சலிக்க வேண்டாம். கர்ம காரியங்கள் ஒன்றுஞ் செய்யவேண்டாம். தெரிவிக்கத்தக்கவர்களுக்குத் தெரிவித்து ஒரு தினத்தில் நேரிட்டவர்களுக்கு நேரிட்டமட்டில் அன்ன விரயஞ் செய்ய வேண்டும். இவ்வாறு உண்மையாக நம்பிச் செய்யுங்கள். செய்திருந்தால், சமரசவேத சன்மார்க்க சங்கமும் மேற்படி தருமச்சாலையும் நிலைபெற விளக்கஞ் செய்யும் பொருட்டாகவும் சிதம்பரஞ் கோயில் திருச்சபைகளைப் புதுக்கி நிலைபெறவிளக்கஞ் செய்யும் பொருட்டாகவும் கருணை கூர்ந்துஎனது தந்தையாராகிய எல்லாம் வல்ல திருச்சிற்றம்பலக் கடவுள் பார்வதிபுரம் சமரச வேதசன்மார்க்க சங்கத் தருமச்சாலைக்கு எழுந்தருளிக் காட்சி கொடுக்குந் தருணம் மிகவும் அடுத்த சமீபமாக விருக்கின்றது அந்தத் தருணத்தில் சாலைக்கு உரியவர்களாகியிருந்து இறந்தவர்களையெல்லாம் எழுப்பிக் கொடுத்தருளுவார். இது சத்தியம். இது சத்தியம். இந்தக் கடிதம் வெளிப்பட்டறிந்து கொள்ளாமுன் இறந்து தகனமானவர்களையும் எழுப்பியருளுவார். இது வெளிப்பட்டறிந்த பின் தகனஞ் செய்தல் கூடாது அது சன்மார்க்கத்திற்கு தக்கதல்ல. ஆகலில் மேற்கண்டபடி உண்மையான நம்பிக்கையுடன் வாழ்வீர்களாக.

எனக்கு உலக அறிவு தெரிந்தது தொட்டு எனது தந்தையார் திருவருளை நாம்அடையும் வரையில், என்னுடன் பழகியும் என்னை நம்பி யடுத்தும் என்னைக் கேள்வியால் விரும்பியும் எனக்கு உரிமைப்பட்டும் இருந்து இறந்தவர்களையெல்லாம் எழுப்பிக் கொடுத்து சமரச சன்மார்க்க சங்கத்தை விருத்தி செய்விக்கத் திருவுள்ளத்துக் கருதிய பெருங்கருணை வள்ளல் சாலைக்கு உரியவர்களாகி யிருந்தும் அவநம்பிக்கையுடன் இருக்கின்றவர்கள் விஷயத்திலும் இந்த உபகாரம் செய்தேயருளுவர். ஆனால் அவர்கள் சன்மார்க்க சங்கத்திற்கு மாத்திரம் அருகராகார்கள். ஆகலில் நம்பிக்கையுடன் இருங்கள். பெரிய களிப்பை யடைவீர்கள். இது சத்தியம். இது சத்தியம்.

பிரமோதூத வருடம் பங்குனி மாதம் 18. பார்வதிபுரம்.
                                   
இப்படிக்கு
சிதம்பரம் இராமலிங்கம்

அன்பு நண்பர்களே மேற்கண்ட கட்டளையில் 'சமாதி வற்புறுதல்' அல்லாது சில கர்ம காரியங்கள் மூட நம்பிக்கைகளையும் விடும்படி ஆணை பிறப்பித்துள்ளதை கவனித்து அதன்படி ஒழுக விழைவோம். நாம் இன்னும் சில எடுத்துக்காட்டுகளை 'திருஅருட்ப்பா'விலிருந்து எடுத்து கூற விழைகிறேன்...

இறந்தவர்கள் உயிர்பெற்று வருவது ஞானசிருஷ்டி ஆதலால், ஞானத்தோடு வருவார்களா முன்னிருந்த அறிவோடுதான் வருவார்களா என்றால்? இந்த மானிடதேகம் ஆண்டவரது சிருஷ்டி அன்று, மாயா சிருஷ்டி. முன்னிருந்த ஞான அஞ்ஞானனத்தோடுதான் வருவார்கள். ஆனால் கிஞ்சித்து ஞான விசேஷம் உண்டாயிருக்கும். ஆதலால், மீள தரிசன விசேஷத்தால் மந்தம் நீங்கி ஞானம் விளங்கும். - திருஅருட்பா

தாயுமானவர் முதலானவர்கள் சுத்த சன்மார்க்கிகள் அல்லர்; மத சன்மார்க்கிகள் என்று ஒருவாறு சொல்லலாம். இதில் நித்திய தேகம் கிடையாது. இது சாதக மார்க்கமே அன்றுச் சாத்தியமில்லை. நாளைச் சுத்த சன்மார்க்கம் வழங்கும் போது இவர்கள் யாவரும் உயிர்பெற்று மீள வருவார்கள். முன்னிருந்த அளவைக் காட்டிலும் விசேஷ ஞானத்தோடு சுத்த சன்மார்க்கத்துக் குரியவர்களாய் வருவார்கள்; சாத்தியர்களாய் இரண்டறக் கலப்பார்கள். - திருஅருட்பா


இஃது தூற்றாமல் வைக்க:

சமரச வேத சன்மார்க்க சங்கம் கூடி விளங்கும் காலம் எது? அது நமக்கு அறிவு வந்த நாள்தொட்டு அந்நாள் பரியந்தம் இறந்து போன நமது சிநேகர், உறவினர், அடுதோர், வார்த்திபர், வாலிபர், பாலியர், குமாரர், ஆண்மக்கள், பெண்மக்கள் என்பவர் எல்லாம் உயிர்பெற்று எழுந்து மேற்குறித்த சங்கத்தில் கூடி விளங்கும் காலமாகும். இது விஷயத்திற் றருக்கஞ் செய்யப்படாது. உண்மை. - திருஅருட்பா

மேலும் தமது திருஅருட்பாவில் 'சமாதி வற்புறுத்தல்' என்ற தலைப்பில் பத்து பாடல்களையும் பாடியருளியுள்ளார்கள். அதில் ஒரு பாடலை மட்டும் இங்கு காண்போம்.

பிறந்தவரை நீராட்டிப் பெருகவளர்த்

திடுகின்றீர் பேய ரேநீர்

இறந்தவரைச் சுடுகின்றீர் எவ்வணஞ்சம்

மதித்தீரோ இரவில் தூங்கி

மறந்தவரைத் தீமூட்ட வல்லீரால்

நும்மனத்தை வயிரம் ஆன

சிறந்தவரை எனப்புகழச் செய்துகொண்டீர்

ஏன்பிறந்து திரிகின் றீரே. (5608)
 

நண்பர்களே, சன்மார்க்க சங்கம் கூடி விளங்கும் காலம் எது? என்று நமது 'சாகாஅருளர் வள்ளலார்' கூறிய விளக்கத்தில் நமது புத்திக்கு எட்டாத ஒன்றைக் கூறியிருப்பதை அவரே அறிந்து, இவ்விஷயத்தை விவாதம் செய்யக்கூடாது என கட்டளையிடுவதை கவனித்து, அப்படிப் பட்ட காலம் இன்னும் வரவில்லை என்பதனையும் கவனித்து, ஆனால் அக்காலம் மிக சமீபத்தில் இருப்பதையும் கவனித்து நாம் மரணமிலா வாழ்வை பெறவில்லை யெனில் அடுத்தாக நாம் செய்யவேண்டியது நாம் நம்மை எரித்துக்கொள்ளாமல் புதையுறுவோம், காலம் கனியும்போது நாம் உயிர்பெற்று எழுவது உண்மை.

யாம் இந்த சமாதி வற்புறுத்தலை நமது 'சாகாஅருளர் வள்ளலார்' அவர்களுக்கு முன் வாழ்ந்த அருளாளர்களின் வாழ்க்கைநெறியினை எடுத்துக்காட்டி விளக்க முற்படலாம் என்று முனைந்தபோது திருக்குறள் முதல் திருமந்திரம் வரை முன்னுக்கு பின் முரணாகவே உள்ளதால் அதிலிருந்து எதனையும் எடுத்துக்காட்டாமல் தவிர்த்துள்ளேன். ஆனால் தெரிந்தோ தெரியாமலோ இவ்வுலகில் வாழ்ந்து மறைந்த நாகரிகங்களான 'மொகஞ்சதாரோ, ஹரப்பா, எகிப்த்து' போன்ற நாகரிங்களில் வாழ்ந்த நமது மூதாதையர்கள் தங்களது உடல்களை புதைத்தது மட்டுமின்றி அதனை அழியாமல்  பாதுகாக்கவும் செய்தனர் என்பது அனைவர்களுக்கும் தெரிந்த ஒன்றே.

மதங்களின் வழியினை பார்க்கும்போது கூட புதைக்கும் பழக்கமே பரவலாக இருப்பதை தற்போதும் நாம் பார்க்கலாம். கிறுத்து, இஸ்லாம், தற்போதய சமணர்கள், தற்போதய புத்தசமயத்தினர், போன்றோர்களை எடுத்துக்காட்டாக கூறலாம். ஆனால் இந்து மதத்தில் ஆரியர்களின் கலப்பு வந்தபிறகுதான் அவர்களின் ஒருபகுதியினர், ஆரியர்களின் வழக்கத்திற்கு உட்பட்டு தமது பிணங்களை எரிக்கத்தொடங்கினர். இந்து மக்களின் ஒருபகுதியினர் பிணங்களை புதைக்கவே செய்கின்றனர். ஆரிய சூழ்ச்சியால் இந்து மதம் மட்டும் இவ்வாறு பிளவுபட்டுள்ளது. ஆனால் ஆரியர்களும் தெய்வ நிலையடைந்தவர்கள் என்று கருதக்கூடியவர்களை எரிக்காமல் புதைத்து சமாதி வழிபாட்டிற்கு அடிகோள்வதை கவனிக்கவேண்டும்.

இறுதியாக தற்போத விஞ்ஞானம் இதைப்பற்றி என்ன கூறுகிறது என்பதனையும் பார்த்துவிடுவோம்...

இறந்தவர்களை பிழைக்க வைக்கும் காலம் விரைவில்

இறந்த பின் மனித உடலை பதப்படுத்தி வைப்பது, விஞ்ஞானமும் மருத்துவமும் வளரும்போது, அதாவது இன்னும் 25 ஆண்டுக்குள் மரணத்தை விஞ்ஞானிகள் வென்றுவிடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அப்படி ஒரு நிலை வரும்போது பதப்படுத்தப்பட்டுள்ள தங்கள் உடல்களும் உயிர் பெறும் என்று நம்புகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். செத்தவர்களை பிழைக்க வைக்கும் இந்த ஆராய்ச்சி மற்றும் அது தொடர்பான அதிசய தகவல்கள்;

இயற்கையாக மரணமடைந்த பிறகு ஒருவரது உடலை குளிர் நிலையில் பதப்படுத்தி வைப்பதுதான் கிரையோஜெனிக் முறையாகும்.

ஒருவருக்கு மரணம் என்பது பல வழிகளில் ஏற்படலாம். இருப்பினும் பொதுவாக ஒருவரது மரணம் என்பது இருதயத் துடிப்பு நின்றுபோவதுதான். இருதயம் நின்றுபோனப்பிறகு உடலின் மற்ற உறுப்புகளுக்கு இரத்தம் செல்வது நின்றுவிடுகிறது. இதன் காரணமாக முதலில் இதயமும் அதைத் தொடர்ந்து உடலின் மற்ற உறுப்புகளும் செயல் இழக்கின்றன. இருதயம் நின்றுப்போனப் பிறகும் சில மணிநேரங்களுக்கு மூளையின் முக்கிய திசுக்கள் உயிரோடு இருக்கும். அந்த மூளைத் திசுக்களை பாதுகாப்பதுதான் இந்த கிரையோஜெனிக் முறையின் முக்கிய அம்சமாகும்.

இந்த தொழில் நுட்பத்தின்படி ஒருவர் மரணம் அடைந்ததும் தனது உடலை பாதுகாக்க விரும்பினால் அதை செய்துக் கொடுக்க பல நிறுவனங்கள் அமெரிக்காவில் உள்ளன. இதில் தங்கள் பெயர்களை பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.

இந்த நிறுவனத்தினர் தங்களிடம் பதிவு செய்தவர்கள் இயற்கையாக மரணம் அடைந்த தகவலை அறிந்ததும் உடனே அவரது வீட்டிற்கு விரைந்து சென்று உடலை தங்களது அலுவலகத்திற்கு கொண்டுவருகிறார்கள். அங்கு அவ்வுடலின் திசுக்கள் மற்றும் பிறபாகங்களில் உள்ள தண்ணீரை அகற்றும் பணி முதலில் நடக்கிறது. திசுக்களில் தண்ணீர் இருந்தால் அதன் காரணமாக அந்த உடல் சீக்கிரம் அழுகிவிடும். எனவே முதலில் நீரை எடுத்துவிடுகின்றனர். பிறகு அந்த உடலுக்குள் கிளிசரால் மற்றும் சில இரசாயன கலவைகளைச் செலுத்துகிறார்கள். இதன் மூலம் உடல் குளிவிக்கப்படும் போது உறைநிலையில் உடல் பனிக்கட்டியாக மாறுவதில்லை. மேலும் சாதாரண நிலைக்கு உடலைக் கொண்டுவரும்போது அது எந்த மாற்றமும் இன்றி பழைய நிலைக்கு அடைய இந்த இராசயனக் கலவை உதவுகிறது.

உடலை பாடம் செய்தப் பின்னர் அதனை குளிர வைக்கும் பணி நடைபெறுகிறது, பின்னர் அவ்வுடலை ஒரு குளிர் பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கின்றனர். இந்த முறைப்படி மனித உடல் மைனஸ் 196 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கொண்டுசெல்லப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. உடலை பாதுகாக்கும் பணியில் திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது.

உடலை கிரையோஜெனிக் முறைப்படி பாதுகாக்க பலர் ஆர்வம் காட்டினாலும் இதுவரை யாரையும் உயிர்பிக்கும் சாதனை நடக்கவில்லை. நானோ டெக்னாலஜி எனப்படும் நுண்ணுயிர் தொழில்நுட்பம் மூலம் இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் காலம் விரைவில் வரும் என்பது விஞ்ஞானிகளின் கனவாக உள்ளது.

இந்த தொழில் நுட்பம் மூலம் சேதமடைந்த மனித திசுக்களை புதுபிக்க முடியும் என்ற அளவுக்கு இப்போதய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இது தொடருமானால் 2040 - ம் ஆண்டில் இறந்தவரைப் பிழைக்க வைக்கும் அதிசயம் நடக்கும் என்கிறார்கள்.

அருட்பெருஞ்ஜோதி         அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை         அருட்பெருஞ்ஜோதி



Wednesday, April 17, 2013

புரியாத விதிகள் - 2.

                   புரியாத விதிகள் - 2.                               17.04.2012

51. ஒரு வகுப்பில் 20 பேர்தான் இருக்க முடியும் என்றால் உங்கள் விண்ணப்பம் எண் 21 ஆக இருக்கும்!

52. நீங்கள் அம்மாவிடம் இரகசியத்தை மறைத்து விட்டதாக நினைக்கிறீர்களா? உங்கள் உள்ளாடையை யார் மாட்டி விட்டது - மறந்து விட்டீர்களா!

53. உங்கள் காதலி ஒரு தொலைப்பேசி எண்ணைக் கூறும்போது தான் அதை சேமிக்க ஒரு தாளும் உங்களிடம் இருக்காது!

54. நீங்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் உங்கள் முதலாளி நீங்கள் இணையத்தில் மேய்ந்துக் கொண்டிருக்கும் போது தான் உங்கள் பின்னால் கையை கட்டிக் கொண்டு நிற்பார்!

55. எந்த ஒரு பிரச்சனையும் அது எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் எளிய முறையில் மட்டுமே அதை தீர்க்கமுடியும்!

56. உங்கள் மனைவி உங்களை முழுவதும் புரிந்துக்கொண்ட நாள் முதல் உங்கள் சொல்லை காதில் வாங்குவதே இல்லை!

57. நீங்கள் சரியான நேரத்திற்கு போய் சேர்ந்தீர்களானால் உங்கள் காதலி 20  நிமிடம் முன்தாக வந்திருப்பாள். 20 நிமிடம் முன்னதாக நீங்கள் போய் சேர்ந்திருந்தால் 1 மணி நேரம் தாமதமாக வருவாள்!

58. உலகின் மிக அழகான பெண்மணி அழகில்லாத ஒரு ஆணைத் தான் மணப்பாள்!

59. நீங்கள் தொலைத்த் ஊசி உங்கள் மாமியார் வெறுங்காலுடன் நடக்கும் போது கண்டுபிடிக்கப்படும்! 


60. நீங்கள் தைக்கும் ஆடைகள் இரண்டு விதமாக இருக்கலாம், பெரியதாக அல்லது சிறியதாக - சரியாக மட்டும் இருக்கவே இருக்காது!

61. ஒரு நம்பிக்கை எந்த அளவு மூடநம்பிக்கையாக இருக்கிறதோ அந்த அளவு அது அதிக மக்களை சென்றடையும்!

62. நீங்கள் நல்லபடியாக இருப்பதாக உணருகிறீர்களா? கவலையே வேண்டாம் அந்த நிலை மாறிவிடும்!

63. எல்லாமே உங்களை நோக்கி வருவதாக நினைக்கிறீர்களா? நீங்கள் சாலையின் வலது பக்கமாக போய்கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்!

64. தகவல் யாருக்குத் தேவையில்லையோ அவருக்கு விரைவாகச் சென்று சேரும்!

65. ஒரு பெரிய வேலையின் முடிவுறாத பகுதி, அலுவலகத்தின் எந்த துறைக்கு அதிக சம்பளம் கொடுக்கிறோமோ அங்கே தான் நடைபெறாமல் இருக்கும்!

66. மிகத்தெளிவாக கூறப்பட்டிருக்கும் ஒரு வாக்கியத்திற்கு, அடிக்கடி மாற்று விளக்கங்கள் வந்துக்கொண்டே இருக்கும்!

67. வளர்ச்சி என்பது யாதெனில், ஒவ்வொருவரின் அடி மனதிலும் உள்ள வருமானத்துக்கு மேல் செலவுசெய்ய துடிக்கும் துடிப்புதான்!

68. எந்தக்கூட்டத்திற்கும் சரியான நேரத்திற்கு போகாதீர்கள். நீங்கள் தான் முதல் ஆளாக இருப்பீர்கள்!

69. அதிகாரம் என்பது யாரால் ஒரு வேலையை செய்ய முடியாதோ அவருக்கே அதை அளிப்பதாகும்!

70. அறிவியல் உண்மையானது! இது போன்ற வாக்கியங்களில் ஏமாந்து விடாதீர்கள்!

71. உலகில் மனித இனம் மட்டும்தான் முழுமையடையாது பிறப்பாகும்!

72. உங்களுக்கு அணிய சுகமாக இருக்கும் செருப்பு பார்க்க அசிங்கமாகவே இருக்கும்!

73. கொடுக்க மாட்டேன் என்று சொல்வதை விட தாமதப்படுத்துதல் பெரிய விஷயமாகும்!

74. நீங்கள் தரையில் இருக்கும்போது அதைவிட கீழே விழ இயலாது!

75. யாரிடமும் நீங்கள் எதை செய்யப்போவதில்லை என்பதனை மட்டும் சொல்லிவிடாதீர்கள்!

76. சர்வ உண்மை என்று எதுவுமே கிடையாது, இதுவே சர்வ உண்மை!

77. உங்களால் அவர்களை திருப்திப்படுத்த முடியவில்லையா? அவர்களுக்குள் குழப்பத்தை உண்டாக்கிவிடுங்கள்!

78. லாட்டரி சீட்டு வாங்காமலே அதிஷ்டம் வராது!

79. பொதுமக்கள் என்போர் யார் எனில் செய்தித் தாள்களில் பெயர் வராதவர்களாவர்!

80. உங்களால் அவர்களை அடிக்க முடியாவிட்டால் அவர்களுடன் சேர்ந்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்!

81. நீங்கள் செய்யாமல் விட்ட அந்த வேலை மட்டுமே மிக மிக முக்கியமானது!

82. ஒரு வேலையை நீங்கள் சரியாக செய்துக்கொண்டிருந்தால் அது யார் கண்களிலும் படாது!

83. ஒவ்வொருவரும் தனக்கு அழகான, அறிவான, பணக்கார, சிக்கனமறிந்த, குறிப்பறிந்து செயல்படும், நன்றாக சமைக்கக்கூடிய மனைவிதான் வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். ஆனால், அந்தோ பரிதாபம், சட்டம் ஒரு மனைவிக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது!

84. திருமணம் என்பது இருவர் ஒருவர் ஆவது. பிரச்சனை யார் அந்த ஒருவர் என்பது தான்!

85. கஷ்டப்படும் ஒருவனுக்கு உதவுங்கள், அப்போதுதான் அவன் மீண்டும் கஷ்டப்படும் போது உங்களைத் தேடி வருவான்!

86. போர்களத்தில் நீங்கள் செல்லுமிடமெல்லாம் எதிரி இல்லை என்றால், நீங்கள் ஏற்கனவே கண்ணி வெடியின் மீது நிற்கின்றீர்கள் என்று அர்த்தம்!

87. ஒரு நிர்வாகத்தில் உங்கள் இடத்திலேயே நீங்கள் இருக்க வேண்டுமானால் வேகமாக முன்னேறுபவர்களை வெளியேற்றுங்கள்!

88. விதி விலக்குகள் விதியை விட அதிமாக இருக்கும்!

89. உங்கள் தந்தை ஏழையாக இருந்தால் அது உங்கள் விதி. உங்கள் மாமனார் ஏழையாக இருந்தால் அது உங்கள் முட்டாள்தனம்!

90. நாம் இங்கிருப்பது அடுத்தவர்களுக்கு உதவி செய்யத்தான் என்றால், அடுத்தவர்கள் இங்கிருப்பது எதற்காக?!

91. குறட்டை விடுபவர்தான் முதலில் தூங்குவார்!

92. பந்தயத்தில் முன்னால் ஓடமுடியவில்லை யெனில் பாதியிலேயே நின்றுவிடுவது நல்லது!

93. எது நடந்தாலும் அதை நீங்கள் எதிர்பார்த்தது போல காட்டிக்கொள்ளுங்கள்!

94. நமது நண்பர்கள் ஏதேனும் மிக உயர்ந்த பதவியில் அமர்ந்த உடன், நமது நண்பர்கள் என்னும் பதவியிலிருந்து இறங்கி விடுவார்கள்!

95. மாட்டிக்கொள்ளாதவரை எதுவும் தவறில்லை!

96. பிரச்சனையைத் தீர்க்கும் வேலை அந்த பிரச்சனைக்கு யார் காரணம் என்பதைக் கண்டறிந்தவுடன் முடிவடைந்துவ்டும்!

97. நாம் அணைவரும் ஒரே சாலையில்தான் பயணம் செய்கிறோம், ஆனால் வெவ்வேறு திசையில்!

98. எந்த ஒரு மனிதனின் நேர்மை குறைவையும் திருட்டுத் தனம் ஆட்கொண்டுவிடும்! 

99. நீங்கள் விரும்பும் எதுவும் தடை செய்யப்பட்டதாக இருக்கும்!

100. இறைவன் அருளால் எல்லாம் செயல் கூடும், உங்களுக்கு ஆசை இல்லை என்றால்!  

Monday, April 1, 2013

புரியாத விதிகள் - 1


புரியாத விதிகள் - 1

 01-04-2013

அன்பர்களே வணக்கம்! 

நாம் என்னதான் கடவுள் மேல் நம்பிக்கை வைத்து நமது அன்றாட செயல்களை தொடங்கினாலும், அச்செயல்கள் நாம் எதிர்பார்த்தப் படி முடிகிறதா? முடியும் என்றால் முடியாது, முடியாது என்றால் முடிந்துவிடும்! இப்படி நாம் எதிர்பாராதது தான் நமது வாழ்க்கையில் தினமும் சிறிய / பெரிய பிரச்சனையாகி விடுகிறது. இது தான் விதி - புரியாத விதி. இதனை மதியாலும் வெல்லமுடியாத இறைவன் விரித்த சதி என்று சொல்லலாம். இப்படிப் பட்ட புரியாத விதிகளில் சிலவற்றை இங்கே காணலாம், உங்களால் முடிந்தால் மதியால் இதனை வெல்ல முடிகிறதா என்று சோதித்து பாருங்களேன்...



1. நிறைய விஷயங்கள் தவறாக நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று வைத்துக்கொண்டால், நம்மை எது அதிகமாக பாதிக்க வாய்ப்பு இருக்கிறதோ அதுவே தவறாக நடக்கும்!

2. ஒரு விஷயம் தவறாக நடக்கவே வாய்ப்பில்லையென்றால் அது நிச்சயம் தவறாகவே நடக்கும்!

3. நாம் ஒரு விஷயத்தில் நான்கு விதமான தவறுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று கணித்தோமானால் அது எல்லாவற்றையும் மீறி நாம் எதிர்பாராத வகையில் எதிர்பாராத நேரத்தில் ஐந்தாவது தவறு வரும்!

4. எல்லாமே சரியாக நடப்பது போல் தோன்றினால் நீங்கள் எதையோ கவனிக்கத் தவறிவிட்டீர்கள் என்று அர்த்தம்!

5. புன்னகை புரியுங்கள், நாளை இதைவிட மோசமாகத்தான் இருக்கும்!

6. எல்லா விஷயங்களும் ஒரே நேரத்தில் தான் தவறாக நடக்கும்!

7. உடைபடும் பொருளும் அதன் மதிப்பும் எப்போதும் நேர் விகிதத்திலேயே இருக்கும்!

8. எந்த ஒரு விஷயத்தையும் முட்டாள்தனமே இல்லாமல் படைக்க இயலாது. ஏனென்றால் முட்டாள்கள் அவ்வளவு அறிவு ஜீவிகள்!

9. எந்த ஒரு விஷயமும் நீங்கள் உணர்வது போல் அவ்வளவு எளிதில்லை!

10. ஒவ்வொரு தீர்வுமே ஒரு பிரச்சனைக்கு வழிகாட்டி!

11. ஒரு தாளில் உள்ள தகவல் எவ்வளவு தூரம் உங்களால் படிக்க இயலாமல் இருக்கிறதோ அவ்வளவு தூரம் அது முக்கியதுவம் வாய்ந்தது!

12. வெண்ணெய் தடவிய பிறகு கீழே விழும் ரொட்டி எந்தப் பக்கம் தரையில் விழும் என்பது உங்கள் கார்பெட்டின் விலையைப் பொறுத்தது!

13. கீழே விழும் ஒரு பொருள் எந்த இடத்தில் விழுந்தால் அதிக நட்டத்தை கொடுக்குமோ அந்த இடத்தில் தான் அது விழும்!

14. எந்த ஒரு தொலைந்த பொருளும் அதற்கான மாற்றை வாங்கியவுடனேயே கிடைத்துவிடும்.

15. நீங்கள் எவ்வளவு அலைந்து கஷ்டப்பட்டு ஒரு பொருளை வாங்கினாலும் நீங்கள் வாங்கியவுடன் மலிவாக இன்னொரு இடத்தில் கிடைத்தே தீரும். (அது உங்கள் மனைவியின் கண்ணில் தான் முதலில் படும்!)

16. நீங்கள் ஒரு வரிசையில் நின்றுக் கொண்டிருந்தால் அடுத்த வரிசை தான் வேகமாக நகர ஆரம்பிக்கும்!

17. ஒரு பழுதான பொருளை பழுது பார்ப்பவரிடம் காட்டும் போது (மட்டும்) அழகாக வேலை செய்யும்!

18. எல்லோரிடமும் பணக்காரனாவதற்கான வழிமுறை இருக்கிறது. ஆனால் அது பயன் மட்டும் தராது!

19. முட்டாள்களுடன் விவாதம் வைத்துக்கொள்ளாதீர்கள், பார்ப்பவர்களுக்கு யார் முட்டாள் என்று விக்தியாசம் தெரியாமல் போய்விடும்!

20. நீங்கள் யாரை கவுக்க வேண்டும் என்று நினைத்து விளையாடிக் காட்டுகிறீர்களோ அப்போது தான் தப்பாக விளையாடுவீர்கள்!

21. நீங்கள் எவ்வளவு தாமதமாகச் செல்கிறீர்களோ அவ்வளவே தான் நெரிசலும் இருக்கும்!

22.  தபால் பெட்டி எப்போது சாலையின் மறுபுறத்தில் தான் இருக்கும்!

23. நீங்கள் பட்டங்களை வேண்டுமானால் வாங்கலாம், மூளையை வாங்கமுடியாது!

24. குழப்பங்கள் நேர்த்தியாக இருப்பதனால், அவை எப்போதும் வெற்றியடைகின்றன!

25. நீங்கள் புது செருப்பு அணியும்போது தான் எல்லோரும் அதை மிதித்து அழுக்காக்குவார்கள்!

26. நீங்கள் எந்த விதியினை முழுமையாக படித்து முடிக்கிறீர்களோ உடனே அது மாற்றப்பட்டிருக்கும்!

27. எந்த ஒரு வேலையையும் செய்து முடித்தவுடன் அதை எளிதாக முடிபதற்கான வழி தென்படும்!

28. காற்று எப்போதுமே உங்கள் விக்குக்கு எதிராகவே வீசும்!

29. ஒரு கண்ணாடி ஜன்னலில் அழுக்கு இருப்பதாக துடைத்தால் அது ஜன்னலில் மறுபுறத்தில் தான் இருக்கும்!

30. எந்த ஒரு சிறிய பிரச்சனைக்கு பின்னாலும் ஒரு பெரிய பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்!

31. உங்கள் நகத்தை வெட்டிய ஒரு மணி நேரத்தில் அதை வைத்து செய்யவேண்டிய வேலை உங்களுக்கு வந்து சேரும்!

32. அதிகாரம் என்பது எடுத்துக்கொள்ளப்படுவது, கொடுக்கப்படுவதே இல்லை!

33. உண்மை உங்கள் பக்கம் இருந்தால் யாருமே அதை நம்புவதில்லை!

34. உங்கள் செயலில் 50% சரியாக நடக்க வாய்ப்பிருக்கிறது என்றால் 75% தவறாகவே செய்வீர்கள்!

35. நீங்கள் ஒரு விஷயம் தவறாக நடக்கவேண்டுமென்று எதிர்பார்த்தும் அது சரியாக நடந்தது என்றால், அது தவறாக் நடந்திருக்குமேயானால் உங்களுக்கு இலாபத்தை ஈட்டி தந்திருக்கும்!

36. யார் ஒருவரால் முடிவு எடுக்க இயலாதோ அவரால் தவறுகளை செய்யவே முடியாது!

37. உங்களுக்கு முன்னால் வரிசையில் நிற்பவர் மட்டுமே இருப்பவர்களிலேயே அதிக நேரம் எடுத்துக்கொள்வார்!

38. கவலை படாதீர்கள், எந்த ஒரு பிரச்சனைக்கும் அதைவிட ஒரு பெரிய பிரச்சனை தான் தீர்வாக அமையும்!

39. ஒரு மேதாவி என்பவர் யாரென்றால், யார் ஒருவர் நுணுக்கமான விஷயங்களைப் பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்கிறாரோ அவர் தான். எவ்வளவு நுணுக்கம் என்றால் 'ஒன்றுமில்லை' என்பது வரை.

40. எந்த ஒரு வேலையும் மதிப்பீட்டுக்குள்ளும், நேரத்திற்குள்ளும் முடிக்கப்பட்டதே இல்லை!

41. ஒரு நிர்வாகத்தின் மூட நம்பிக்கையே, அப்படி ஒரு நிர்வாகம் இருப்பதாக அனைவரும் கருதுவது தான்!

42. ஒரு விஷயத்தில் மேதாவியைத் தேர்ந்தெடுக்கவேண்டியிருந்தால் யார் அந்த வேலைக்கு அதிக பணம் செலவும், நேரமும் ஆகக்கூடும் என்று கணிக்கிறாரோ அவரையே தேர்ந்தெடுங்கள்!

43. எந்த ஒரு எளிய விதியும் கஷ்டமான வார்த்தைகளாளேயே விளக்கப்பட்டிருக்கும்!

44. தண்டவாளத்தை மட்டும் பார்த்து ரயில் எந்தப்புறம் சென்றது என்று சொல்லமுடியாது!

45. நீங்கள் சரியாக குழம்பவில்லை என்றால் உங்களுக்கு அனைத்து தகவல்களும் சரியாக வந்து சேரவில்லை என்று அர்த்தம்!

46. நீங்கள், தவறு நடந்துக்கொண்டு இருக்கும் போதுதான் அந்த விஷயம் சரியாக நடந்துக் கொண்டுஇருப்பதாக உணருவீர்கள்!

47. உங்களை விட்டால் இந்த இடத்திற்கு தகுதியான ஆள் வேறில்லை என்று நிர்வாகம் நினைக்கும் அளவிற்கு நடந்துக்கொள்ளாதீர்கள். நடந்துக் கொண்டால் பின்னர் எப்படி உங்களுக்கு உத்தியோக உயர்வு அளிக்க இயலும்!

48. நீங்கள் நல்லவராக இருந்தால் அவ்வளவு வேலையும் உங்களிடம் தான் ஒப்படைக்கப்படும். ரொம்ப நல்லவராக இருந்தால் வேலையை விட்டு வெளியேறிவிட வேண்டியது தான்!

49. அனைத்து முக்கியமான வேலைகளும் வெள்ளிக்கிழமை மாலை உங்களுக்கு வந்து சேரும். அவை யாவும் திங்கள் கிழமை காலைக்குள் முடிக்கபட வேண்டியிருக்கும்!

50. முதலாளி எப்போது சிடு சிடு என்று இருக்கிறாரோ அது தான் சம்பள உயர்வு பற்றி பேச சரியான நேரமாகும்!