பிணம் என்னும் புதையல் 26-04-2013
இறைவன் மீது அன்பானவர்களே,
எல்லா உயிர்கள் மீதும்
கருணைகொண்டவர்களே,
உங்கள் மீதான இறைவன் அருள் மிக அருகில் உள்ளது என்பதை உணரவும்.
இறவாத கல்வியை தமிழ் மொழியில் படித்து அதில் 'சாகாஅருளர்' பட்டத்தை 'இறைவன்
அருள்' என்னும் பல்கலைக்கழகத்தில் 'அருட்பெருஞ்ஜோதி' ஆண்டவர் திருக்கரங்களால் பெற்ற
ஒரே மாணவர் தான் நமது திரு அருட்பிரகாச வள்ளலார் ஆவார்கள். அவரது இறவா கல்வியின் ஆராய்ச்சி
நூல் தான் 'திருஅருட்பா' என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் நாம் அறியாதது யாதெனில் இவ்வுலகில்,
கல்விக்கும் உயிர் உண்டு என்று சொன்னவர் நமது வள்ளலார் மட்டுமே. அதுவும் அந்த உயிருள்ள
கல்வியே என்றும் இறவாத கல்வி என்று உலகியலோருக்கு பாடம் போதித்தார். மற்ற உலகியல் கல்வியெல்லாம்
உயிர் அற்றக்கல்வி, உயிர் இருப்பது போல் தெரிந்தாலும் அவை, தாம் கற்றவர் இறக்கும் போது
அக்கல்வியும் இறந்துவிடும் இயல்புக் கொண்டவை. திரு.கந்தசாமி, I.A.S., பட்டம்
பெற்று தன்னைச் சார்ந்த மக்களை நிர்வாகம் செய்தவர், அப்படிப்பட்டவர் ஒரு நாள் இறந்துவிட்டார்,
அதன் பிறகு இடுகாட்டில் உள்ள வெட்டியான் கூட பிணத்தை எடுத்தாச்சா? என்று தான் கூறுவான்,
அந்தப் பிணத்திற்கு I.A.S., பட்டமெல்லாம் கிடைக்காது. ஏனென்றால் திரு.கந்தசாமி இறந்தவுடன்
அவர் படித்த I.A.S., பட்டமும் இறந்துவிடுவதை நாம் காண்கிறோம்.
திரு.கந்தசாமி,I.A.S., போல் இவ்வுலகிலுள்ள
படித்தவர்களும், படிக்காதவர்களும் இறக்கவே காண்கிறோம். நாம் கற்றக் கல்வியெல்லாம் நம்மோடு
சாகக் காண்கிறோம். அடுத்த 'சாகாஅருளர்' பட்டத்தை வாங்குபவர் யாரோ? அது நானாகவும் இருக்கலாம்,
நீங்களாகவும் இருக்கலாம், நம்மை அடுத்தவர்களாகவும் இருக்கலாம்! சரி விஷயத்திற்கு வருவோம்,
இறந்துவிட்டால் என்ன செய்வது? கவலைப்படாதீர்கள் நீங்கள் உயிரோடு இருக்கும் வரை A.C. அறையில்
இருந்து ஜில்லென்றக் காற்றை அனுபவித்திருக்க மாட்டீர்கள், ஆனால் நீங்கள் இறந்தப் பின்பு
உங்கள் பிணம் A.C. பெட்டியில் அதனை சில மணிநேரங்கள் அனுபவிக்கும். தற்போதய
பிணங்களெல்லாம் கொடுத்துவைத்தவைதான். அதன்பிறகு கலை உரைத்த கற்பணைக் கல்வியினால் தொன்று
தொட்டு வந்த தேவையற்ற பல சடங்குகள் செய்து அழுது புலம்பி தூக்கிச் சென்று உங்களை எரித்துவிடுவார்கள்
அல்லது புதைத்து விடுவார்கள். புதைத்துவிட்டால் நீங்கள் விதைக்கப்பட்டீர்கள் என்று
பொருள், உங்கள் பிணத்திற்கும் ஒரு மரியாதைக் கொடுத்தீர்கள் என்று பொருள்.
ஆனால் மாறாக எரித்துவிட்டால், இத்தனை வயது வரை இப்பூமியில் நீங்கள் ஒரு மனிதனாக
வாழவில்லை என்று பொருள், நீங்கள் உங்கள் பிணத்தையும் தற்கொலை செய்ய வைத்துவிட்டீர்
என்று பொருள். ஏனென்றால் இந்த மனித தேகத்தை இறைவன் அவ்வளவு சுலபமாக நமக்கு கொடுத்துவிடவில்லை.
தாய் கருப்பையினுள் இந்த தேகத்தை இறைவன் ஒவ்வொரு நொடியும் எப்படியெல்லாம் காத்து மனித
உருவத்தை உயிரோடு இப்பூமியில் கொண்டுவந்தான் என்பதை நமது 'சாகாஅருளர் வள்ளலார்' தமது
திருஅருட்பாவில் மிக விளக்கமாக சொல்லியிருக்கின்றார். அப்படி இறைவனால் கொடுக்கப் பட்ட
இந்த தேகத்தை, நாம் நமது அறியாமையால் அதனை மதியாது பிணமாக்கினோம், அந்தப் பிணத்தையும்
மதியாது அதனை எரித்து சாம்பலாக்கும் வன்செயலை செய்யத் தூண்டியது எது? உங்கள் சமயமும்,
மதமும் தானே? வேறு எதுவாக இருக்கவும் வாய்ப்பில்லை.
சாதியும் மதமும் சமயமும் பொய் பொய்யே! அவற்றில் தயவுசெய்து புகவேண்டாம் என்று
'சாகாஅருளர் வள்ளலார்' கூறிக்கொண்டிருப்பது உங்கள் காதில் விழுந்தும் கலை உரைத்தக்
கற்பணைக் கல்வியை கற்றதினாலும், ஆசார சங்கர்ப்ப விகற்பங்களாலும் உங்கள் தந்தையையும்
தாயையும் எரிக்க முயலுகின்றீர், இது இறை சட்டத்தின்படி கொலைக் குற்றத்திற்குச் சமம்
என்பதை அறியவேண்டும். சரி, பிணத்தை எரிக்காமல் புதைத்து விட்டால் அப்படி என்ன நன்மை
கிடைத்துவிடப் போகிறது? என்கிறீர்களா...
அதற்கு நமக்கு அண்ட பிண்ட விசாரனை தேவை. இந்த அண்டம் எப்படிப்பட்டது? பிண்டம்
எப்படிப்பட்டது? என்று நமது 'சாகாஅருளர் வள்ளலார்' என்ன கூறுகிறார் என்பதனை முதலில்
பார்போம்...
அண்டம் என்றால் இந்த பிரபஞ்சத்தைக்குறிக்கும், பிண்டம் என்றால் இவ்வுடலைக்குறிக்கும்.
அண்டத்தில் அண்டம், அண்டத்தில் பிண்டம் - பிண்டத்தில் அண்டம், பிண்டத்தில் பிண்டம்
உள்ளன. நமது உடலில் பிண்டத்தில் பிண்டம் நமது கழுத்துக்கு கீழ் உள்ளப் பகுதிகளாகும்.
பிண்டத்தில் அண்டம் கழுத்துக்கு மேல் உள்ள தலைப் பகுதிகளாகும். அண்டத்திற்கும் பிண்டத்திற்கும்
இடையே கண்டம் உள்ளது. பிண்டத்தில் அண்டம் இல்லையேல் பிண்டத்தில் பிண்டம் முண்டமாகிவிடும்.
அதே போல் அண்டத்தில் அண்டம் ஆகாயம் ஆகும். அண்டத்தில் பிண்டம் நமது பூமி,
மற்ற சூரிய சந்திர நட்சத்திரங்களாகும். இந்த ஆகாயத்தில் நமது சூரியன் போல் பல்லாயிரங்கணக்கான
சூரியன்கள் (நமது சூரியனைவிட ஆயிரம் மடங்கு பெரிய சூரியன்கள் உள்ளன) உள்ளன. இருப்பினும்
வானம் என்றும் உஷ்ணத்தினாலோ குளிர்ச்சியினாலோ பாதிக்கப்படுவதில்லை.
அதே போல் நமது பிண்டத்தில் உள்ள அண்டத்தில் ஆயிரம் சூரியன்களின் உஷ்ணத்தை
தாங்கக்கூடிய சக்தி உள்ளது. மேலும் நமது ஆன்மா ஆயிரம் கோடி சூரியபிரகாசமுடையது, இதனை
ஏழுதிரைகள் மரைத்துக்கொண்டிருப்பதாக நமது 'சாகாஅருளர் வள்ளலார்' கூறுகிறார். இத்திரைகளை
விலக்குவதற்கு நமது உடலை அதி உஷ்ணமாக மாற்ற வேண்டியது மிக முக்கியம் என்றும் 'சாகாஅருளர்
வள்ளலார்' கூறுகிறார். இவ்வுடல் உஷ்ணத்தை பாதுகாக்கவே ஆடைகளால் தலைமுதல் கால் வரை இடைவிடாது
மூடவேண்டும் என்றும் 'சாகாஅருளர் வள்ளலார்' கூறுகிறார். மேலும் அதி உஷ்ணத்தை உண்டுபண்ண
இறைவனை ஒருமையில் நினைந்து உருகி அழுகையில் அந்த அதி உஷ்ணம் ஏற்படும் என்கிறார். ஒரு
உயிருள்ள உடல் உஷ்ணத்தை இழக்கும்போது தான் அது தன் உயிரை இழக்கும். சூரியன் கூட நம்மைப்போல்
ஒவ்வொரு நொடியும் உஷ்ணத்தை வெளியிட்டுக்கொண்டே உள்ளது, அது எப்போது தனது முழு உஷ்ணத்தையும்
இழக்கிறதோ அப்போது அதுவும் இறந்துவிடும். அதையும் போட்டு புதைக்கவேண்டியதுதான், ஆனால்
அப்போது இந்த பூமி மட்டுமில்லை சூரிய குடும்பமே இருக்காது! ஆனால் அதற்குள் நமக்காக
பக்கத்துத் தெருவில் ஓரு புதிய வீட்டை இறைவன் பார்த்து குடியமர்த்திவிடுவான்.
இப்படி உஷ்ணத்தை இழந்த பிணங்கள் மண்ணில் புதைக்கப்பட்டு எத்தனை ஆயிரம் ஆண்டுகள்
ஆனாலும் சடமாகிய ஒரு துரும்பு இம்மண்ணில் இருந்தே தீரும். அந்தத் துரும்பிற்கு திரும்பவும்
உஷ்ணத்தை ஏற்றினால் என்ன ஆகும்...! மாண்டவர் மீண்டும் அதே தேகத்துடன் சிரித்துக்கொண்டே
எழுவார்! செத்தாரை எழுப்புதல் என்பது இப்படித்தான். 'தமது உடலில் அதி உஷ்ணத்தைக் கொண்டிருப்பவர்
ஒருவர் பிணத்திற்கு அருகில் சென்றால் பிணம் உயிர் பெற்றுவிடும்' என்றும் 'சடமாகி ஒரு
துரும்பும், அவரது திருநோக்கத்தால் உயிர் பெற்றுப் பஞ்ச கிருத்தியங்களும் செய்யும்'
என்றும் தமது திருஅருட்ப்பவில் 'சாகாஅருளர் வள்ளலார்' கூறுகிறார்.
அடுத்து நமது பிண்டத்தில் தச வாயுக்கள் ஒன்றினைந்து மிகச் சிறப்பாக ஆட்சி
செய்து வருகின்றன. அவைகளைப்பற்றி சுருக்கமாக பார்ப்போம்,
1. உயிர் காற்று (பிராணன்) - மூக்கின் வழியே நடைபெறும் சுவாசம்.
2. மலக் காற்று (அபானன்) - கழிவுகளை
கீழ்நோக்கி தள்ளும்.
3. தொழிற் காற்று (வியானன்) - நரம்புகளுக்குத் தேவையான சத்துக்களை கொண்டுசெல்லும்
4. ஒலிக் காற்று (உதானன்) - இரைப்பையிலிருந்து உணவின் சாரத்தை வெளிப்படுத்தும்
5. நிரவுக் காற்று (சமானன்) - சத்துக்களை உடல்முழுதும் சமஅளவில் கொண்டுச்சேர்ப்பது.
6. விழிக் காற்று (நாகன்) - பார்வைத்திறன் அளிப்பது, உணர்ச்சிகளை தூண்டக்கூடியது
7. இமைக் காற்று (கூர்மன்) - கண்ணீரை வரவழைத்த்ல், சிரித்தல் போன்றவைகளுக்கு
காரணமாக உள்ளது.
8. தும்மல் காற்று (கிருகன்) - நாவில் சுரப்பையும், பசி, தும்மலுக்கு காரணம்
9. கொட்டாவிக் காற்று (தேவதத்தன்) - கொட்டாவி விடுதல், விக்கலுக்குக் காரணம்
10.வீங்கக் காற்று (தனஞ்செயன்) - கோமா (நினைவற்றநிலை), உடலை வீங்கச்செய்தல் போன்றவைகளுக்குக்
காரணம்
இந்த பத்து வாயுக்கள் (தச வாயுக்கள்) தவிர வேறு சில வாயுக்களும்
உடலில் செயலாற்றுகின்றன. அவற்றுள் முக்கியமாவை என கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடலாம்.
●
முக்கியன் - உள் உறுப்புகளுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கும்.
●
வைரவன் - கபத்தை உருவாக்கும்.
●
அந்திரியாமி - பிராணனை உருவாக்குதல்.
●
பிரவஞ்சனை - பிராணவாயுவின் நண்பன், இக்காற்றின் துணையுடன்தான் சுவாசம் நடக்கிறது.
மேற்கண்ட முக்கியமான் பத்து காற்றுகளும், ஒரு மனிதன் இறக்கும்போது
என்ன செய்துக்கொண்டிருக்கும்?
முதலில் இவ்வுடலைவிட்டு பிரிவது உயிர்காற்றும், நிரவுக்காற்றும்
மட்டுமே. இவைகள் பிரிந்தவுடன் மனிதன் இறந்துவிட்டதாக, பிணமாகிவிட்டதாக அறிவிக்கப்படுகிறது.
கவனிக்கவும் மற்ற காற்றுகள் அந்த பிணமான உடலில் இருந்துக்கொண்டிருக்கும். ஒருவர் இறந்துவிட்டால்
உயிர்சக்தி முழுவதும் உடனே உடலை விட்டுப் பிரிந்துவிடுவதில்லை. இறந்த உடலில் 11 நாட்களிலிருந்து
40 நாட்கள் வரை உடலைவிட்டுச் சென்றுவிட்ட அந்த இரண்டு வாயுக்களைத் தவிர மற்றவை அதன்
அதன் வேலைகளை நமது பிண உடலில் செய்து விட்டு நிம்மதியாக தங்கள் வீட்டைவிட்டு செல்கின்றன.
அதுவரை நமது பிண உடலில் முடியும், நகமும் வளரும். ஒரு சிறிய
அளவில் உயிர் சக்தி இன்னும் செயல்பட்டிருக்கின்றதை உணரலாம். உடலை விட்டு உயிர் பிரிவது
மெதுவாகவே நடைபெறுகிறது. எப்படி இவ்வுடல் உருவாக பத்து மாதத்திற்கு நமக்கு கருப்பை
தேவைப்பட்டதோ அதுபோல இவ்வுடல் அழிய மண்குழியில் பல வருடங்கள் இருக்க வேண்டியதுதான்
இயற்கை.
இறுதியாக இந்த பிண உடலை விட்டு வெளியேறுவது தனஞ்செயன் வாயு ஆகும்.
இது இறந்த உடலை வீங்க வைப்பதும். அழுக வைப்பதும், நவதுவாரங்களில் நுரை, நீர் வரச்செய்தல், உடம்பைப் நாற்றம் எடுக்கச் செய்தல்
இதன் வேலைகளாகும்.
எப்போது இவ்வேலை முடிகிறதோ அது வரை நமது பிண உடலில் வருடக் கணக்கில் அது இருக்கும்.
பிறகு தலையின் உச்சிக் குழி வெடித்து இது வெளியேறும்.
இதற்காகத்தான் நமது பிணங்களை கண்டிப்பாக 'சாகாஅருளர் வள்ளலார்'
அவர்கள் புதைக்க சொல்கிறார். மாறாக புதைக்காமல் எரித்துவிட்டால் முதலில் செல்லும் அந்த
இரண்டு வாயுக்களைத் தவிற மற்ற வாயுக்களின் வேலையை செய்யவிடாமல் தடுப்பதுடன் அதனை நெருப்பின்
வெப்பம் தாங்காமல் துன்பப்படுத்தி வலுக்கட்டாயமாக வெளியேற்றும் செயலும் ஒரு மனிதக்
கொலைக்குச் சமமே. மின் தகனம், எரித்தல் போன்ற நிகழ்வின் போது இறுதியாகச் செல்லக்கூடிய
தனஞ்செயன் வாயு, இடுக்காட்டில் கொண்டுபோய் தீ மூட்டியவுடன் பாதி உடம்பு வெந்தப் பின்பு
வெப்பம் தாங்காமல் 'டப்' என்று சப்தத்துடன் வெடித்து (துன்பத்துடன், அப்பிணத்திற்கே
சாபமிட்டு) வெளியேறும்.
இறந்த நபரை உயிருடன் மீண்டு வரச் செய்த யோகிகள் இந்த
தனஜய வாயுயின் உதவி கொண்டுதான் அப்படிச் செய்துள்ளார்கள்.
சில யோகிகள் / கடின சித்தர்கள் தமது உடலில் உள்ள தனஞ்செயன் உட்பட அனைத்து
வாயுக்களையும் தாம் இறக்கும்போது எடுத்துக்கொண்டு முழுமையாக உடலைவிட்டு விலகுவார்கள்.
தாம் இறந்தப் பிறகு தமது உடலில் எவ்வகையிலும் தாம் ஒட்டிக்கொண்டிருக்க விரும்பாமல்
இப்படிச் செய்வார்கள். இவ்வித சமாதியும் தவறான செயல்களாகும்.
ஆனால், ஜீவசமாதி எய்திய யோகியின் உடலில் இருந்து இந்தப் பத்துவித
வாயுக்களுமே வெளிவருவது இல்லை, எனவே இவர்கள் விரும்பும்போதோ அல்லது இறைவன்
விரும்பும் போதோ இவர்களால் மீண்டும் இவ்வுலகில் உலா வரயியலும். இவர்களுக்கும் மரணிப்பதற்கு
கால நிர்ணயம் உண்டு. எனவே இவ்வகையான ஜீவசமாதி பழக்கத்தை 'சாகாஅருளர் வள்ளலார்' கைவிடச்
சொல்கிறார்.
இதில் என்ன வேடிக்கை என்றால், நம்மால் கடின சித்தர்கள் யார்? ஜீவ சமாதி அடைந்தவர்கள்
யார்? என்று கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும். ஏனென்றால் அவர்களது அனுபவம் அவர்களுக்குத்தான்
தெரியும். பாம்பின் கால் பாம்பு மட்டுமே அறியும்!
எனவேதான் நண்பர்களே, நலம்சார் பண்பர்களே, இறைசார் அன்பர்களே நமது 'சாகாஅருளர்
வள்ளலார்' இதனை உலகியலர்களுக்கு "சமாதிக் கட்டளை" என்றே நமக்கு கட்டளை (ORDER) இடுகின்றார்.
ஓர் அரசின் அதிகாரத்தை பெற்றவர்கள் மட்டுமே கட்டளை இடமுடியும் என்பது தெரிந்ததே. அதுபோல
'சாகாஅருளர் வள்ளலார்' அருட்பெருஞ்ஜோதி' ஆண்டவரின் 'செங்கோலை' பெற்று அண்ட சராசரங்களையும்
தற்போதும், எப்போதும் ஆட்சி செய்து வருகின்றார், அப்படிப்பட்ட சாகாஅருளரின் அரசக் கட்டளைதான்
இது. இதனை மீறுபவர்கள் தாங்களகவே சுடுகாட்டில் தண்டித்துக்கொண்டுவிடுகிறார்கள் என்பதனைக்
கவனிக்க வேண்டும்.
அது என்ன 'சமாதிக் கட்டளை' என்பதனை பார்ப்போம்...
இக்கட்டளை நமது 'சாகாஅருளர் வள்ளலார்' 30-03-1871 ஆம் ஆண்டு தமது அரச ஆணையாக
வெளியிட்டார், அதனை அப்படியே இங்கே மீண்டும் (26-04-2013) இவ்வுலக மக்களுக்காக சாகாஅருளரின்
ஆணைப்படி வெளியிடுகிறேன்.
அன்புள்ள நீங்கள் சமரச வேதசன்மார்க்க சங்கத் தருமச் சாலைக்கு மிகவும் உரிமையுடையீர்க
ளாகலின் உங்களுக்கு உண்மையுடன் அறிவிப்பது.
நீங்களும் உங்களை அடுத்தவர்களும் சிற்றம்பலத் தந்தையார் திருவருளாற் சுகமாக
வாழ்வீர்களாக,
கர்மகால முதலிய பேதங்களால் யார்க்காயினுந் தேக ஆனி நேரிட்டால் தகனஞ் செய்யாமல்
சமாதியில் வைக்கவேண்டும். இறந்தவர்கள் திரும்பவு மெழுந்து நம்முடன் இருக்கப் பார்ப்போம்
என்கிற முழு நம்பிக்கையைக் கொண்டு எவ்வளவுந் துயரப்படாமலும் அழுகுரல் செய்யாமலும் சிற்றம்பலக்
கடவுள் சிந்தையுடனிருக்க வேண்டும். புருடன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் வேண்டாம்.
மனைவி இறந்தால் புருடன் வேறு கல்யாணப் பிரயத்தனஞ் செய்யவேண்டாம். பிள்ளைகள் இறந்தால்
சஞ்சலிக்க வேண்டாம். கர்ம காரியங்கள் ஒன்றுஞ் செய்யவேண்டாம். தெரிவிக்கத்தக்கவர்களுக்குத்
தெரிவித்து ஒரு தினத்தில் நேரிட்டவர்களுக்கு நேரிட்டமட்டில் அன்ன விரயஞ் செய்ய வேண்டும்.
இவ்வாறு உண்மையாக நம்பிச் செய்யுங்கள். செய்திருந்தால், சமரசவேத சன்மார்க்க சங்கமும்
மேற்படி தருமச்சாலையும் நிலைபெற விளக்கஞ் செய்யும் பொருட்டாகவும் சிதம்பரஞ் கோயில்
திருச்சபைகளைப் புதுக்கி நிலைபெறவிளக்கஞ் செய்யும் பொருட்டாகவும் கருணை கூர்ந்துஎனது
தந்தையாராகிய எல்லாம் வல்ல திருச்சிற்றம்பலக் கடவுள் பார்வதிபுரம் சமரச வேதசன்மார்க்க
சங்கத் தருமச்சாலைக்கு எழுந்தருளிக் காட்சி கொடுக்குந் தருணம் மிகவும் அடுத்த சமீபமாக
விருக்கின்றது அந்தத் தருணத்தில் சாலைக்கு உரியவர்களாகியிருந்து இறந்தவர்களையெல்லாம்
எழுப்பிக் கொடுத்தருளுவார். இது சத்தியம். இது சத்தியம். இந்தக் கடிதம் வெளிப்பட்டறிந்து
கொள்ளாமுன் இறந்து தகனமானவர்களையும் எழுப்பியருளுவார். இது வெளிப்பட்டறிந்த பின் தகனஞ்
செய்தல் கூடாது அது சன்மார்க்கத்திற்கு தக்கதல்ல. ஆகலில் மேற்கண்டபடி உண்மையான நம்பிக்கையுடன்
வாழ்வீர்களாக.
எனக்கு உலக அறிவு தெரிந்தது தொட்டு எனது தந்தையார் திருவருளை நாம்அடையும்
வரையில், என்னுடன் பழகியும் என்னை நம்பி யடுத்தும் என்னைக் கேள்வியால் விரும்பியும்
எனக்கு உரிமைப்பட்டும் இருந்து இறந்தவர்களையெல்லாம் எழுப்பிக் கொடுத்து சமரச சன்மார்க்க
சங்கத்தை விருத்தி செய்விக்கத் திருவுள்ளத்துக் கருதிய பெருங்கருணை வள்ளல் சாலைக்கு
உரியவர்களாகி யிருந்தும் அவநம்பிக்கையுடன் இருக்கின்றவர்கள் விஷயத்திலும் இந்த உபகாரம்
செய்தேயருளுவர். ஆனால் அவர்கள் சன்மார்க்க சங்கத்திற்கு மாத்திரம் அருகராகார்கள். ஆகலில்
நம்பிக்கையுடன் இருங்கள். பெரிய களிப்பை யடைவீர்கள். இது சத்தியம். இது சத்தியம்.
பிரமோதூத வருடம் பங்குனி மாதம் 18. பார்வதிபுரம்.
இப்படிக்கு
சிதம்பரம் இராமலிங்கம்
அன்பு நண்பர்களே மேற்கண்ட கட்டளையில் 'சமாதி வற்புறுதல்' அல்லாது சில கர்ம
காரியங்கள் மூட நம்பிக்கைகளையும் விடும்படி ஆணை பிறப்பித்துள்ளதை கவனித்து அதன்படி
ஒழுக விழைவோம். நாம் இன்னும் சில எடுத்துக்காட்டுகளை 'திருஅருட்ப்பா'விலிருந்து எடுத்து
கூற விழைகிறேன்...
●
இறந்தவர்கள் உயிர்பெற்று வருவது ஞானசிருஷ்டி
ஆதலால், ஞானத்தோடு வருவார்களா முன்னிருந்த அறிவோடுதான் வருவார்களா என்றால்? இந்த மானிடதேகம்
ஆண்டவரது சிருஷ்டி அன்று, மாயா சிருஷ்டி. முன்னிருந்த ஞான அஞ்ஞானனத்தோடுதான் வருவார்கள்.
ஆனால் கிஞ்சித்து ஞான விசேஷம் உண்டாயிருக்கும். ஆதலால், மீள தரிசன விசேஷத்தால் மந்தம்
நீங்கி ஞானம் விளங்கும். - திருஅருட்பா
●
தாயுமானவர் முதலானவர்கள் சுத்த சன்மார்க்கிகள் அல்லர்; மத சன்மார்க்கிகள்
என்று ஒருவாறு சொல்லலாம். இதில் நித்திய தேகம் கிடையாது. இது சாதக மார்க்கமே அன்றுச்
சாத்தியமில்லை. நாளைச் சுத்த சன்மார்க்கம் வழங்கும் போது இவர்கள் யாவரும் உயிர்பெற்று
மீள வருவார்கள். முன்னிருந்த அளவைக் காட்டிலும் விசேஷ ஞானத்தோடு சுத்த சன்மார்க்கத்துக்
குரியவர்களாய் வருவார்கள்; சாத்தியர்களாய் இரண்டறக் கலப்பார்கள். - திருஅருட்பா
● இஃது தூற்றாமல் வைக்க:
சமரச வேத சன்மார்க்க சங்கம் கூடி விளங்கும் காலம் எது? அது நமக்கு அறிவு
வந்த நாள்தொட்டு அந்நாள் பரியந்தம் இறந்து போன நமது சிநேகர், உறவினர், அடுதோர், வார்த்திபர்,
வாலிபர், பாலியர், குமாரர், ஆண்மக்கள், பெண்மக்கள் என்பவர் எல்லாம் உயிர்பெற்று எழுந்து
மேற்குறித்த சங்கத்தில் கூடி விளங்கும் காலமாகும். இது விஷயத்திற் றருக்கஞ் செய்யப்படாது.
உண்மை. - திருஅருட்பா
மேலும் தமது திருஅருட்பாவில் 'சமாதி வற்புறுத்தல்' என்ற தலைப்பில் பத்து பாடல்களையும் பாடியருளியுள்ளார்கள். அதில் ஒரு பாடலை மட்டும் இங்கு காண்போம்.
பிறந்தவரை நீராட்டிப் பெருகவளர்த்
திடுகின்றீர் பேய ரேநீர்
இறந்தவரைச் சுடுகின்றீர் எவ்வணஞ்சம்
மதித்தீரோ இரவில் தூங்கி
மறந்தவரைத் தீமூட்ட வல்லீரால்
நும்மனத்தை வயிரம் ஆன
சிறந்தவரை எனப்புகழச் செய்துகொண்டீர்
ஏன்பிறந்து திரிகின் றீரே. (5608)
மேலும் தமது திருஅருட்பாவில் 'சமாதி வற்புறுத்தல்' என்ற தலைப்பில் பத்து பாடல்களையும் பாடியருளியுள்ளார்கள். அதில் ஒரு பாடலை மட்டும் இங்கு காண்போம்.
பிறந்தவரை நீராட்டிப் பெருகவளர்த்
திடுகின்றீர் பேய ரேநீர்
இறந்தவரைச் சுடுகின்றீர் எவ்வணஞ்சம்
மதித்தீரோ இரவில் தூங்கி
மறந்தவரைத் தீமூட்ட வல்லீரால்
நும்மனத்தை வயிரம் ஆன
சிறந்தவரை எனப்புகழச் செய்துகொண்டீர்
ஏன்பிறந்து திரிகின் றீரே. (5608)
நண்பர்களே, சன்மார்க்க சங்கம் கூடி விளங்கும் காலம் எது? என்று நமது 'சாகாஅருளர்
வள்ளலார்' கூறிய விளக்கத்தில் நமது புத்திக்கு எட்டாத ஒன்றைக் கூறியிருப்பதை அவரே அறிந்து,
இவ்விஷயத்தை விவாதம் செய்யக்கூடாது என கட்டளையிடுவதை கவனித்து, அப்படிப் பட்ட காலம்
இன்னும் வரவில்லை என்பதனையும் கவனித்து, ஆனால் அக்காலம் மிக சமீபத்தில் இருப்பதையும்
கவனித்து நாம் மரணமிலா வாழ்வை பெறவில்லை யெனில் அடுத்தாக நாம் செய்யவேண்டியது நாம்
நம்மை எரித்துக்கொள்ளாமல் புதையுறுவோம், காலம் கனியும்போது நாம் உயிர்பெற்று எழுவது
உண்மை.
யாம் இந்த சமாதி வற்புறுத்தலை நமது 'சாகாஅருளர் வள்ளலார்' அவர்களுக்கு முன்
வாழ்ந்த அருளாளர்களின் வாழ்க்கைநெறியினை எடுத்துக்காட்டி விளக்க முற்படலாம் என்று முனைந்தபோது
திருக்குறள் முதல் திருமந்திரம் வரை முன்னுக்கு பின் முரணாகவே உள்ளதால் அதிலிருந்து
எதனையும் எடுத்துக்காட்டாமல் தவிர்த்துள்ளேன். ஆனால் தெரிந்தோ தெரியாமலோ இவ்வுலகில்
வாழ்ந்து மறைந்த நாகரிகங்களான 'மொகஞ்சதாரோ, ஹரப்பா, எகிப்த்து' போன்ற நாகரிங்களில்
வாழ்ந்த நமது மூதாதையர்கள் தங்களது உடல்களை புதைத்தது மட்டுமின்றி அதனை அழியாமல் பாதுகாக்கவும் செய்தனர் என்பது அனைவர்களுக்கும்
தெரிந்த ஒன்றே.
மதங்களின் வழியினை பார்க்கும்போது கூட புதைக்கும் பழக்கமே பரவலாக இருப்பதை
தற்போதும் நாம் பார்க்கலாம். கிறுத்து, இஸ்லாம், தற்போதய சமணர்கள், தற்போதய புத்தசமயத்தினர்,
போன்றோர்களை எடுத்துக்காட்டாக கூறலாம். ஆனால் இந்து மதத்தில் ஆரியர்களின் கலப்பு வந்தபிறகுதான்
அவர்களின் ஒருபகுதியினர், ஆரியர்களின் வழக்கத்திற்கு உட்பட்டு தமது பிணங்களை எரிக்கத்தொடங்கினர்.
இந்து மக்களின் ஒருபகுதியினர் பிணங்களை புதைக்கவே செய்கின்றனர். ஆரிய சூழ்ச்சியால்
இந்து மதம் மட்டும் இவ்வாறு பிளவுபட்டுள்ளது. ஆனால் ஆரியர்களும் தெய்வ நிலையடைந்தவர்கள்
என்று கருதக்கூடியவர்களை எரிக்காமல் புதைத்து சமாதி வழிபாட்டிற்கு அடிகோள்வதை கவனிக்கவேண்டும்.
இறுதியாக தற்போத விஞ்ஞானம் இதைப்பற்றி என்ன கூறுகிறது என்பதனையும் பார்த்துவிடுவோம்...
இறந்தவர்களை பிழைக்க
வைக்கும் காலம் விரைவில்
இறந்த பின் மனித உடலை பதப்படுத்தி வைப்பது, விஞ்ஞானமும் மருத்துவமும் வளரும்போது,
அதாவது இன்னும் 25 ஆண்டுக்குள் மரணத்தை விஞ்ஞானிகள் வென்றுவிடுவார்கள் என்ற நம்பிக்கை
உள்ளது. அப்படி ஒரு நிலை வரும்போது பதப்படுத்தப்பட்டுள்ள தங்கள் உடல்களும் உயிர் பெறும்
என்று நம்புகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். செத்தவர்களை பிழைக்க வைக்கும் இந்த
ஆராய்ச்சி மற்றும் அது தொடர்பான அதிசய தகவல்கள்;
இயற்கையாக மரணமடைந்த பிறகு ஒருவரது உடலை குளிர் நிலையில் பதப்படுத்தி வைப்பதுதான்
கிரையோஜெனிக் முறையாகும்.
ஒருவருக்கு மரணம் என்பது பல வழிகளில் ஏற்படலாம். இருப்பினும் பொதுவாக ஒருவரது
மரணம் என்பது இருதயத் துடிப்பு நின்றுபோவதுதான். இருதயம் நின்றுபோனப்பிறகு உடலின் மற்ற
உறுப்புகளுக்கு இரத்தம் செல்வது நின்றுவிடுகிறது. இதன் காரணமாக முதலில் இதயமும் அதைத்
தொடர்ந்து உடலின் மற்ற உறுப்புகளும் செயல் இழக்கின்றன. இருதயம் நின்றுப்போனப் பிறகும்
சில மணிநேரங்களுக்கு மூளையின் முக்கிய திசுக்கள் உயிரோடு இருக்கும். அந்த மூளைத் திசுக்களை
பாதுகாப்பதுதான் இந்த கிரையோஜெனிக் முறையின் முக்கிய அம்சமாகும்.
இந்த தொழில் நுட்பத்தின்படி ஒருவர் மரணம் அடைந்ததும் தனது உடலை பாதுகாக்க
விரும்பினால் அதை செய்துக் கொடுக்க பல நிறுவனங்கள் அமெரிக்காவில் உள்ளன. இதில் தங்கள்
பெயர்களை பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.
இந்த நிறுவனத்தினர் தங்களிடம் பதிவு செய்தவர்கள் இயற்கையாக மரணம் அடைந்த
தகவலை அறிந்ததும் உடனே அவரது வீட்டிற்கு விரைந்து சென்று உடலை தங்களது அலுவலகத்திற்கு
கொண்டுவருகிறார்கள். அங்கு அவ்வுடலின் திசுக்கள் மற்றும் பிறபாகங்களில் உள்ள தண்ணீரை
அகற்றும் பணி முதலில் நடக்கிறது. திசுக்களில் தண்ணீர் இருந்தால் அதன் காரணமாக அந்த
உடல் சீக்கிரம் அழுகிவிடும். எனவே முதலில் நீரை எடுத்துவிடுகின்றனர். பிறகு அந்த உடலுக்குள்
கிளிசரால் மற்றும் சில இரசாயன கலவைகளைச் செலுத்துகிறார்கள். இதன் மூலம் உடல் குளிவிக்கப்படும்
போது உறைநிலையில் உடல் பனிக்கட்டியாக மாறுவதில்லை. மேலும் சாதாரண நிலைக்கு உடலைக் கொண்டுவரும்போது
அது எந்த மாற்றமும் இன்றி பழைய நிலைக்கு அடைய இந்த இராசயனக் கலவை உதவுகிறது.
உடலை பாடம் செய்தப் பின்னர் அதனை குளிர வைக்கும் பணி நடைபெறுகிறது, பின்னர்
அவ்வுடலை ஒரு குளிர் பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கின்றனர். இந்த முறைப்படி மனித உடல்
மைனஸ் 196 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கொண்டுசெல்லப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. உடலை
பாதுகாக்கும் பணியில் திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது.
உடலை கிரையோஜெனிக் முறைப்படி பாதுகாக்க பலர் ஆர்வம் காட்டினாலும் இதுவரை
யாரையும் உயிர்பிக்கும் சாதனை நடக்கவில்லை. நானோ டெக்னாலஜி எனப்படும் நுண்ணுயிர் தொழில்நுட்பம்
மூலம் இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் காலம் விரைவில் வரும் என்பது விஞ்ஞானிகளின் கனவாக
உள்ளது.
இந்த தொழில் நுட்பம் மூலம் சேதமடைந்த மனித திசுக்களை புதுபிக்க முடியும்
என்ற அளவுக்கு இப்போதய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இது தொடருமானால் 2040 - ம் ஆண்டில்
இறந்தவரைப் பிழைக்க வைக்கும் அதிசயம் நடக்கும் என்கிறார்கள்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
We are being fooled by so many things. This is an eye opener for me.
ReplyDeleteநன்று
DeleteAllah the almighty is the first light and the everlasting brightest light.
ReplyDeleteYes. But Allah's followers are all non vegetarian. why? Go Vegan / Pure Vegetarian. Brightest Light can like only kindness. Thank you.
Delete