Sunday, April 28, 2013

மனு முறைகண்ட வாசகம்


                                            மனு முறைகண்ட வாசகம்                              28-04-2013
                                               ***************************

நண்பர்களே, நமது வள்ளலார் - குழந்தைகளுக்கும் நல்ல போதனை சொல்ல விழைந்தனர். அதன் விளைவாக அவரால் எழுதப்பட்டதே இந்த 'மனு முறைகண்ட வாசகம்' என்னும் நூல் ஆகும். இது 1854 ஆம் ஆண்டு அச்சு ஏட்டில் வெளிவந்தது. இந்நூல் வாயிலாக நமது குழந்தைகளுக்கு வள்ளலார் சொல்ல வந்த முக்கிய கருத்து யாதெனில் 'எவ்வுயிர்களிடத்தும் கொலைப் பாதகத்தை சமமாகக் கொள்ளவேண்டும்' என்ற நீதியை மிகவும் விரிவாக எடுத்தியம்பி இருக்கிறார்கள். இந்த நீதியை பொறுத்தமட்டில் வயதில் பெரியவர்களாக இருக்கும் நாமும் இன்னும் குழந்தைகளாகவே இருந்துக்கொண்டு தவறுகளை செய்வதால், நாம் அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது.

சோழ நாட்டிலே 'திருவாரூர்' என்னும் திருத்தலத்தில் 'மனுசக்கரவர்த்தி' என்ற மாமன்னர் மிகச்சிறப்பாக ஆட்சி செய்து வருகையிலே, ஒருநாள் அரசரின் மகன் தேரோடிக்கொண்டு வரும்போது எதிர்பாராவிதமாக ஒரு கன்றுக்குட்டி ஓடிவந்து தேரின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்து விடுகிறது. அதனைக் கண்ட தாய் பசு 'மனுசக்கரவர்த்தி' யிடம் நீதிக் கேட்க, 'மனுசக்கரவர்த்தி' தமது தீர்ப்பாக தமது ஒரே மகன் என்றும் பார்க்காமல் அவனையும் அந்த விபத்து நடந்தது போன்றே தேர் சக்கரத்தில் கிடத்தி கொன்று விடுகிறான். இது தான் கதையின் சுருக்கம்.

# இப்படிப்பட்ட கொலை பாதகத்தை தமது மகன் செய்ததற்கு யான் சென்றபிறவியில் என்ன பாவம் செய்தேனோ? என்று மன்னர் புலம்புவதாக கீழே உள்ள பாவப் பட்டியலை வள்ளலார் மிகவும் அருமையாக எழுதியிருக்கிறார். நாம் ஒவ்வொருவரும் இதனைப் படித்து இப்பாவங்களை செய்யாமல் புனிதர்களாகுவோம்...

நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!
மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!
குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ!
மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ!
உயிர்க்கொலை செய்வோர்க்க உபகாரஞ் செய்தேனோ!
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ!
ஆசைகாட்டி மோசஞ் செய்தேனோ!
வரவுபோக் கொழிய வழியடைத்தேனோ!
வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ!
பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ!
இரப்போர்க்குப் பிச்சை இல்லையென்றேனோ!
கோள் சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ!
நட்டாற்றிற் கையை நழுவவிட்டேனோ!
கலங்கி யொளித்தோரைக் காட்டிக்கொடுத்தேனோ!
கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ!
காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ!
கணவன்வழி நிற்போரைக் கற்பழித்தேனோ!
கருப்பமழித்துக் களித்திருந்தேனோ!
குருவை வணங்கக் கூசிநின்றேனோ!
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ!
கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ!
பெரியோர் பாட்டிற் பிழைசொன்னேனோ!
பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ!
கன்றுக்குப் பாலு‘ட்டாது கட்டிவைத்தேனோ!
ஊன்சுவை யுண்டு உடல் வளர்த்தேனோ!
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ!
அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்தேனோ!
குடிக்கின்ற நீருள்ள குளந் து‘ர்த்தேனோ!
வெய்யிலுக் கொதுங்கும் விருக்ஷ மழித்தேனோ!
பகைகொண்டு அயலோர் பயிரழித்தேனோ!
பொதுமண்டபத்தைப் போயிடித்தேனோ!
ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ!
சிவனடியாரைச் சீறி வைதேனோ!
தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ!
சுத்த ஞானிகளைத் தூஷணஞ் செய்தேனோ!
தந்தைதாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ!
தெய்வ மிகழ்ந்து செருக்கடைந்தேனோ!
என்ன பாவம் செய்தேனோ! இன்னதென்றறியேனே!

மேலும் இந்த நூலில் வள்ளலார் பலவையான உவமைள் மற்றும் பழமொழிகளை 108 எண்ணிக்கை வரும்படி அமைத்துக் கையாண்டுள்ளது மிகவும் சிறப்பாக உள்ளது, அதனையும் இங்கே காண்போம்...

1. பாலோடு பழஞ் சேர்ந்தாற் போல
2. கட்டிய வஸ்திரம் அவிழ்ந்தவன் கைபோல
3. கண்களில்லாத முகமும், சூரியனில்லாத பகலும் போல
4. வலம் புரிச் சங்கு விலையுயர்ந்த வெண் முத்தினைக் கருப்பங் கொண்டது போல
5. அதிதியாரானவர் ஆதித்தனைப் பெற்றது போல
6. மல்லிகைக் கொடி மணமுள்ள மலரைப் பூத்தது போல
7. தூரதேசத்திற் போயிருந்த கப்பல் துறைமுகத்தில் வந்ததென்று சொல்லக்கேட்ட       வர்த்தகனைப் போல
8. தாகங்கொண்டு தவிக்குங் காலத்தில் சமீபத்தே தண்ணீருண்டென்று சொல்லக்கேட்ட தேச சஞ்சாரியைப் போல
9. இளம் சூரியோதயம் போல
10. கற்புள்ளவள் கணவனை உபசரிப்பது போல
11. படிப்பில் ஆசைவைத்தவன் பாடத்தைப் பாராட்டுவது போல
12. தன்னை உயர்ந்தவனாக்க நினைத்தவன் தருமத்தை வளர்ப்பது போல
13. முன் சிறுமையடைந்து பின் செல்வத்தைப் பெற்றவன் அச்செல்வத்தைப் பாதுகாப்பது போல
14. வாழை யிளங்குருத்துப் போல
15. அறிவில் ஆதிசேடனைப் போல
16. கட்டழகில் காமனைப் போல
17. ஆண்மையில் ஆண் சிங்கம் போல
18. நடையில் மத யானை போல
19. வாய்மையில் மார்த்தாண்டன் போல
20. கொடையில் கற்ப விருக்ஷம் போல
21. நெடுநாள் பிரிந்திருந்த கன்றினைக் கண்ட பசுவைப் போல
22. இடந்தெரியாதிருந்த புதையலை எதிர்ப்படக் கண்டவன் போல
23. மனோ வேகமும் பின்னடையத்தக்க வேகமான நடையுள்ள நான்கு குதிரைகளைக் கட்டிய மகா மேருவைப் போல
24. தேவேந்திரன் தியாகராஜ தரிசனஞ் செய்யப் போவது போல
25. மணமுள்ள மலரை வண்டுகள் சூழ்ந்தது போல
26. இனிய சுவையுள்ள தேனை ஈக்கள் சுற்றியது போல
27. பளிங்குச் சிமிழ்க்குள்ளிருந்து தோன்றுகின்ற பருத்த நீலக்கல் போல
28. செந்தாமரை மலர் போல
29. சிறிதே இமைத்து மனோரம்மியமாய் மலர் போல
30. வலம்புரி சங்கு போல
31. மத்தளம் போல
32. மந்தர மலைப் போல
33. வீணைத் தண்டு போல
34. கண்ணாடி போல
35. இளங்கன்று பயமறியாதது போல
36. இடியோசைக் கேட்ட நாகம் போல
37. விரிந்த பாற்கடலில் விஷம் பிறந்தது போல
38. எண்ணம் பொய்யாகும், ஏளிதம் மெய்யாகும் என்பது போல
39. குலத்தைக் கெடுக்கவந்த கோடாரிகாம்பு போல
40. மரபழிக்க வந்த வச்சிராயுதம் போல
41. பொன்கத்தி யென்று கழுத்தரிந்து கொள்வது போல
42. எவ்வுயிர்களையும் தம்முயிர் போல
43. கும்பகோணத்துப் பள்ளன் கொள்ளை கொண்டு போகத் தஞ்சாவூர்ப் பார்ப்பான் தண்டங் கொடுத்ததைப் போல
44. முற்ற நனைந்தார்க்கு ஈரமில்லை என்பது போல
45. சூரைக்காற்றில் அகப்பட்ட துரும்பைப் போல
46. பிணம் போல
47. பாவிக்குப் பாக்கியந் தங்காதது போல
48. இளங்கன்றை இறக்கவிட்டு மலட்டு பசு போல
49. மாதர்கள் காலிலணிந்த சிலம்போசை கேட்ட மாதவர் போல
50. அழுகுரலோசை கேட்ட அந்தணர் போல
51. சண்டை இரைச் சலைக் கேட்ட சற்சனர் போல
52. புலி முழக்கம் கேட்ட புல்வாய் போல
53. அடியற விழுந்த பனை மரம் போல
54. சாவியாய்ப் போன தன் பயிரைக் கண்ட தரித்திரனைப் போல
55. வெந்தப் புண்ணில் வேலுருவியது போல
56. விஷம் தலைக் கேறியது போல
57. கடல் வெள்ளம் போல
58. நெருப்பில் விட்ட நெய்யைப் போல
59. குள்ளனைக் கொண்டு ஆழம் பார்க்க வந்தது போல
60. பேயைத் தெய்வமென்று பிள்ளைவரம் கேட்க வந்தது போல
61. கொல்லை ஆள்காட்டியைக் கூலி கேட்கவந்தது போல
62. விழலினிடத்து நிழலுக்கு வந்தது போல
63. வீட்டின் வாயிலில் வெள்ளெருக்குப் பூத்தது போல
64. பழைய தரித்திரனுக்குப் பணங்கிடைத்தது போல
65. இளங்கன்று எதிர் வரவுங் கண்கெட்டுக் கருத்தழிந் தவன் போல
66. பாலியப் பருவம் பயமறியாதது போல
67. மாதா பிதா செய்தது மக்களுக்கு போல
68. நுங்கு சூன்றெடுப்பது போல
69. காராட்டை வெள்ளாடு என்பது போல
70. அமங்கள வாரத்தை மங்கள வாரமென்பது போல
71. நாகப் பாம்பை நல்ல பாம்பு என்பது போல
72. எய்தவன் இருக்க அம்பை நோவது போல
73. அம்பு செய்துக் கொடுத்த கருமானை நோவது போல
74. தராசுக் கோல் போல
75. வாதியை மாத்திரம் வரவழைத்துக் கொண்டு நடுக்கொள்ளைக்காரன் நியாயந் தீர்தானென்பது போல
76. எழுத்தறியாதவன் ஏட்டை சுமந்தது போல
77. கண்ணில்லாதவன் கண்ணாடியைச் சுமந்து கொண்டது போல
78. தன் வீட்டு விளக்கென்று முத்தமிட்டால் சுடாது விடாது போல
79. ஆனை மதப்பட்டு அடவியழித்தது போல
80. காக்கை யேறி பனம்பழம் வீழ்ந்தது போல
81. அமுதமூட்டுகின்ற போது அதுவே விஷமாகிக் கொன்றது போல
82. பயனைத் தரும் விருசஷத்திலுள்ள பழத்தைப் பாராது பிஞ்சைப் பிடித்தது போல
83. வழிக்குத் துணையாக வருவான் போல் வந்து நடுகாட்டிற் பயங்காட்டிப் பணம் பறிக்கின்றவன் போல
84. கருத்தறியாதவன் சொன்னதே சொல்வான் போல
85. பறையடித்தாற் போல
86. பாய்மரச்சுற்றி அகப்பட்ட காக்கைப் போல
87. நீர்ச்சுழியிலகப்பட்ட வண்டு போல
88. அழுகின்ற குழந்தைக்குப் பழத்தை எதிர்வைத்துப் பராக்கு காட்டுவது போல
89. மனம் பேச வந்தது போல
90. மலையை எடுத்துண்டு வயிறு நோகின்றவனுக்குச் சுக்கிடித்துக் கொடுத்தது போல
91. கடுந்தவம் புரிந்து பெற்ற கவுத்துவ மணியைக் கடலிலெறிந்து விட்டுவா என்பதுபோல
92. பலநாள் வருந்தி வளர்த்த பஞ்ச வர்ணக்கிளியைப் பருந்துக்கிரையிட்டுவா என்பதுபோல
93. செய்தற்கரிய தவஞ்செய்து பெற்ற தேவாமுதத்தைச் சேற்றிற் கழித்துவா என்பதுபோல
94. இருதலைக் கொள்ளிக்குள் அகப்பட்ட எறும்பு போல
95. ஊசலாடுகின்றவனைப் போல
96. நடைத் தூக்கங் கொண்டவன் போல
97. பித்தம் பிடித்தவன் போல
98. எரியுங் கொள்ளியை யேறத்தள்ளுவது போல
99. நீண்டெரியும் நெருப்பில் நெய்விடுவது போல
100. கப்பல் உடைந்து கலங்கும் போது தெப்பமும் உடைந்தது போல
101. கொள்ளை கொண்டவனை விட்டு குறுக்கே வந்தவன்மேற் குற்றம் சாட்டியது போல
102. கொண்ட மனையாளிருக்க கூலி வாங்க வந்தவளைத் தாலிவாங்கச்   சொன்னதுபோல
103. நல்ல விதி நடுவே இருக்கக் கோணிய விதி குறுக்கே வந்ததது போல
104. சோறுண்ணும்போது தொண்டை விக்கிக் கொண்ட தென்பது போல
105. வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைந்த தென்பது போல
106. கிணறு வெட்டப் போனவிடத்தில் பூதம் புறப்பட்டது போல
107. கடைகொள்ளப் போகும்போது கள்ளனெதிர்ப் பட்டது போல
108. இழந்துவிட்ட பொருள் எதிர் வரபெற்றவர்கள் போல

மேலும் சில முக்கியமான பகுதிகளை இந்நூலிலிருந்து எடுத்துக்காட்ட விரும்புகிறேன்...

# மனுநீதி சோழனின் மாண்பு பற்றி வள்ளலார் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறார்...

கலிங்கர், குலிங்கர், வங்கர், கொங்கர், அச்சியர், கொச்சியர், தெங்கணர், கொங்கணர், தெலுங்கர் முதலான தேசத்து அரசர்களெல்லாம் திறகட்டி வணங்கினர்...

இவரது செங்கோல் ஆட்சியில் உலகமெங்கும் புலியும் பசுவும் கூடிப்போய் ஒரு துறையில் நீர்குடித் துலாவியும்,
சிங்கமும் யானையும் சேர்ந்து திரிந்தும்,
பருந்தும் கிளியும் பழகி மகிழ்ந்தும்,
கூகையும் காகமும் கூடிப்பறந்தும்,
பூனையும் எலியும் பொருந்தியிருந்தும் இந்தப்படி மற்றுமுள்ள விரோதமாகிய உயிர்களும் ஒன்றுக்கொன்று விரோதமில்லாமல் சினேகஞ்செய்து வாழ்ந்தன...

அவரது ஒப்புயர்வில்லா அரசாட்சியிலே,
பூவே பறிபடுவது,
புனலே சிறைபடுவது,
காற்றே அலைபடுவது,
கல்லே கடினமுடையது,
மாவே வடுபடுவது,
வாழையே குலைபடுவது,
வண்டே மதுவுண்பது,
பந்தே அடிபடுவது,
பரியே கட்டுண்பது,
நெல்லே குத்துண்பது,
நெற்கதிரே போர்படுவது,
வயலே வளைபடுவது,
மாதர் இடையே குறைபடுவது,
தரித்திரமே தரித்திரப்படுவது,
துக்கமே துக்கப்படுவது,
பொய்யே பொய்படுவது என்பதாக எந்தக் குற்றமும் இன்றி மேன்மையான ஆட்சி இருந்தது.

எமது விளக்கம்: மேன்மையான ஆட்சி எப்படி எனில் மேற்கண்டவாறு குற்றங்களையெல்லாம் குணமாக்கி அந்தக் குற்றங்களையெல்லாம் இயற்கையே செய்யும்படி விதித்து அந்தக் குற்றங்களினால் மக்களுக்கு நன்மையே உண்டாகும்படியான ஆட்சி இருந்த்து.
குற்றமேல்லாம் குணமாகக் கொண்ட ஓர் சிறப்பான ஆட்சியை நாம் இங்குக் காண்கிறோம்.

# மனுநீதி சோழனின் பரம்பரை அரசர்களின் பெயர்களை வள்ளலார்   கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்...
சூரிய குலத்திற்கு ஆதியாகிய மனுவென்பவரும் அவர் வழிக்குப் பின் வழியாகத் தோன்றிய குலோத்துங்க சோழர்,
திருநீற்றுச் சோழர்,
காவிரி கரைகண்ட சோழர்,
மனுநீதிச் சோழர்,
இராஜேந்திர சோழர்,
இராஜசூடாமணிச் சோழர்,
உறையூர்ச் சோழர்,
மண்ணளந்த சோழர்,
கங்கை கொண்ட சோழர்,
தேவர் சிறைமீட்ட சோழர்,
மரபுநிலை கண்ட சோழர்,
எமனை வென்ற சோழர்,
சுந்தரச் சோழர்,
மெய்ந்நெறிச் சோழர்.

# மதியுடைய மந்திரிகள், தங்களுடைய மன்னருக்காக உண்மையை / நீதியை நிலைநாட்ட தயங்கி (ஜால்ரா அடிப்பது - தற்போது சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்தில் எதற்கெடுத்தாலும் மேசையைத் தட்டி பாராட்டுவதைக் இங்கே குறிப்பிடலாம்) தங்களது வாதத்தால் குற்றத்தை மறைக்க முயன்றபோது, அதற்கு மனுநீதி சோழன் தங்களது மதியுடைய மந்திரிகளை கடிந்துரைப்பதாய், வள்ளலார் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்...

சந்திர சூரியர் திசை மாறினாலும், சமுத்திரந் தடை மீறினாலும், மகா மேரு நிலை குலைந்தாலும் மனங்கலங்காது, விவகாரங்களிற் பழுது வாராது பாதுகாக்கின்ற குணத்தையுடைய நீங்கள் இன்று, நீதி இல்லாத சில குறும்பரசரைக் கூடி, இவ்வரசர்,

1. தூளி என்றால், நிர்தூளி என்றும்,
2. கரும்பு கசப்பு என்றால், எட்டிக்காய் போன்று கசப்பு என்றும்,
3. தாயைக் கொலை செய்வது தக்க தென்றால், வேதத்தின் முதற்காண்டதில் விதித்திருக்கின்ற தென்றும்,
4. வெள்ளத்தில் கல் மிதக்குமா என்றால், ஆற்றில் அம்மி மிதக்கக் கண்டோமென்றும்,
5. காக்கை வெளுப்பென்றால், நேற்றைப் பொழுதில் நிற்கக் கண்டோமென்றும்,
6. கல்லின் மேல் நெல் முளைக்குமென்றால், கொத்தால் ஆயிரம், குலையால் ஆயிரம் என்றும்,
7. கள்ளனைப் பிடிக்கலாமோ என்றால், பிடித்தால் பெரும் பாவமல்லவோ என்றும்,
8. பொய் ஆயிரமட்டுஞ் சொல்லலாமோ என்றால், ஐயா, ஐயாயிரமட்டுஞ் சொல்லாமென்றும் விதியிருக்கின்றதென்றும்,
9. பெண்சாதியுள்ளவனுக்குப் பிள்ளை கொடுப்பது யார் என்றால், ஐயா, பெண் கொடுத்தவனே பிள்ளை கொடுக்க வேண்டுமென்றும்,
10. ஒருவன் மனையாள் மற்றொருவனைக் கூடலாமோ என்றால், அடக்கத்தில் ஆயிரம்பேரோடு கூடினாலும் குற்றமில்லை என்றும்,
11. இந்தக் கழுவில் இவனை ஏற்றலாமோ என்றால், கழுவுக்குத் தக்க கனமில்லை என்றும்,
12. என்பிள்ளையும் எச்சரிக்கைக் காரன் பிள்ளையும் ஒருவனை ஒருவன் உதாசினமாகத் திட்டினாராம் - இதற்கு என்ன செய்யலாமென்றால், உமது சற்புத்திரன் வாய்க்குகச் சர்க்கரையிட வேண்டும் - மற்றவன் வாய்க்கு மண்ணிட வேண்டும் என்றும்
சொல்லுகின்ற துர்மந்திரிகளைப் போல நியாயம் பாராது நயிச்சிய வார்த்தைகளைச் சொன்னீர்கள்...

# மதியுடைய அரசர்களின் நீதி எவ்வாறு இருக்கவேண்டும் என்று வள்ளலார் கீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றார்...

1. தன்னைக் கொடுத்தாவது தருமத்தைத் தேடவேண்டும்,
2. தாய் தந்தை யிடத்திலாயினுந் தராசுக்கோல் போலச் செப்பமாக நின்று தீர்ப்புக் கொடுக்க வேண்டும்,
3. ஒருவரிடத்துச் தண்டனை விதிக்கும்போது, எவ்வுயிர்களுந் தன்னுயிர்போன்று எண்ணுவதும்,
4. எந்தப் பொருள் எந்தப் பிரகாரமா யிருந்தாலும் அந்தப் பொருளின் உண்மையை அறிந்து கொள்வதும்,
5. உருவு நோக்காது அறிவை நோக்குவதும்,
6. ஊழ்வினை நோக்காது செய்வினை நோக்குவதுமாக இருக்கவேண்டும்.

மேற்கண்ட சிறப்புகளையுடையதாய் வள்ளலார் இயற்றிய 'மனுமுறைகண்ட வாசகம்' என்னும் நூல் விளங்கி வருகிறது. நீங்களும் படித்து பயன் பெறவும்.

--தி.ம.இராமலிங்கம்.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி


 
                                             


















No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.