Tuesday, December 6, 2016

குழந்தை பேறு

                                        குழந்தை பேறு

திருமணமான தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்றால் அவர்களுக்குள் இருக்கும் மன அழுத்தம் சொல்லி மாளாது. அவர்களுக்காகவே தன்வந்திரி தமது வைத்திய காவியம் என்னும் நூலில் குழந்தை வரம் கிடைக்க வழிவகை சொல்லியிருக்கின்றார்,

வாறான மங்கையர்கள் கெற்பமாக
        வறையுறேன் பசும்பாலும் வசம்புதானும்
நீறான விழுதியிலை மூலிதானும்
        நிலையான குப்பமேனி சமனாய்க்கூட்டி
காறான பால்தனிலே குழப்பியேதான்
        கனமாக விருவேளை கொண்டாயானால்
சேறான கிருமியது அற்றுப்போகும்
        செனிக்குமே பிள்ளையது செனிக்கும்பாரே.

செனிக்குமது பிள்ளையது பிறக்கும்பாரு
        தெளிவாகும் திரேகமது சொலிக்கும்பாரு
கனிக்குமே யிந்தமுறை பொய்யாதையா
        காசினியி லாருந்தான் சொல்லமாட்டார்
வனிக்குமே முறையோடே செய்தாயானால்
        மகாகோடி புண்ணியங்க ளெய்தும்பாரு
பனிக்குமே யிக்காவிய மதீதவித்தைப்
        பாடினேன் தன்வந்திரி பாடினேனே.

பசும்பால், வசம்பு, விழுதியிலை, குப்பைமேனி இவைகளை சம அளவாக சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்தக் கலவையை பசும்பாலில் கலந்து  காலை, மாலை உண்டு வர, கர்ப்ப கிருமிகள் நீங்கி குழந்தை பேறு உண்டாகும்.
இப்படி பிறக்கும் குழந்தையின் உடல் பொலிவாக இருப்பதுடன், சிறந்த புத்திசாலியாகவும் இருக்கும். மிகவும் அரிதான இந்த முறையை மற்றவர்கள் மறைத்து வைப்பார்கள். தன்வந்திரி இதனை பொதுவில் வைக்கிறேன். இது பொய்க்காது.

என்ன… அன்பர்களே… தன்வந்திரி சித்தரின் வைத்தியம் செய்து மழலை செல்வங்களை ஈட்டுங்கள். சந்தேகம் ஏதேனும் இருப்பின் சித்த வைத்தியரை தொடர்புகொள்ளுங்கள். விழுதியிலை என்பது என்ன? என எனக்குத் தெரியவில்லை. அதனை தக்கவரிடம் கேட்டு அறிந்துக்கொண்டால் மற்றது எளிதாகக் கிடைக்கூடியதுதான். செய்து பாருங்கள்… பலன் கிடைத்தால் மறக்காமல் பிறருக்கும் சொல்லுங்கள். உங்களுக்கு மகாகோடி புண்ணியம் கிடைக்கும்.



நீலகேசியின் நையாண்டி!

நீலகேசியின் நையாண்டி!

"நீலகேசி" என்னும் நூல், ஐஞ்சிறுங் காப்பியங்களில் ஒன்றெனப் போற்றப்படுகிறது. இந்நூல் தருக்க வகையைச் சார்ந்தது. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இந்நூலுக்கு "சமய திவாகர வாமன முனிவர்" என்பார் உரை எழுதியுள்ளார். இந்நூல் "குண்டலகேசி" என்னும் பெளத்த நூலுக்கு மறுப்பாக எழுந்த சமண நூல். இதன் காலம் யாது என்பதை திட்டவட்டமாக அறிய முடியவில்லை. இதன் எழுத்தமைதிக் கருதி இதனை கி.பி. நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டு எனக் கருத இடமிருக்கிறது.

கதை சுருக்கம்:
"நீலகேசி" என்பவள் திருவளங்காடு பக்கத்தில் இருக்கும் பழையனூர் என்னும் ஊரில்வசித்து வந்த பேய். அப்பேய், சமண முனிவரான முனிசந்திர முனிவர் என்பவரிடம், சமண ஆகமங்களைக் கற்று, "திருவறம்" என்று அழைக்கப்படும் சமண அறத்தை நிலை நாட்ட உறுதிப் பூணுகிறாள். அவ்வாறே, மற்ற சமயத்தாரிடம் முன் சென்று அவர்களிடம் வாதுசெய்து, சமண அறத்தை நிலை நாட்டுகிறாள். இதுதான் "நீலகேசி"யின் கதைச் சுருக்கம்.

இங்கு ஒன்றைக் குறிக்க நினைக்கிறேன். இது சமய வரலாற்றாய்வில் மிகவும் முக்கியமானஒன்று. அது யாதெனின், நீலகேசி மற்ற சமயங்களிடம் வாது செய்தாள் என்று பார்த்தோம். அந்த சமயங்களாவன,

1.பெளத்தம்,
2.ஆசிவகம்,
3.சாங்கியம்,
4.வைசேடிகம்,
5.வேத மதம்,
6.பூத வாதம்.

மேற்குறிப்பிட்ட பட்டியலில், தற்போது பெருஞ்சமயங்களாக இருக்கும் சைவம், வைணவம் குறிக்கப்படவில்லையே என்ற கேள்விதான் அது? ஏன் குறிக்கப்படவில்லை. சிந்திக்க வைக்கும் கேள்விதான்? இல்லையா!
அக்கேள்விக்கு விடை பிறகுப் பார்ப்போம்.

"தீர்த்தன் திருநாமம் கொள்ளாத தேவுளவோ"!

முழுப்பாடல் விவரம்:

"பூர்ப்பம் பயந்தான் புகன்ற சுதக்கடலுட்
சார்த்திப் பிறவாத் தவநெறிக டாமுளவோ
சார்த்திப் பிறவாத் தவநெறிக டம்மேபோற்
றீர்த்தன் றிருநாமங் கொள்ளாத தேவுளதோ" - நீலகேசி (661)

"பூர்ப்பம் - பூர்வ+ஆகமம்,
சுதக்கடல் = சுருதக் கடல் = ஆகமக்கடல்".

- அருக பகவான் கூறிய ஆகம நெறிகளை (ஒழுக்க நெறிகளை) மற்ற சமயத்தார் எடுத்தியம்பிக் கொண்டது போல் அவனுக்குறிய திருநாமங்களைக் கூட தத்தம் கடவுளருக்குச் சூட்டிக் கொண்டார்கள் என்பது தான் மேலே சொன்ன பாடலின் பொருள்.

"தீர்த்தன் திருநாமம் கொள்ளாத தேவு (தெய்வம்) உளதோ" என்ற அடியில் பொதிந்திருக்கும் இலக்கிய நையாண்டிக் குறிப்பிடத்தக்கது.

இந்த அடியைப் படிக்கும் போதெல்லாம், தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், வளையாபதி, திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு போன்ற சமண நூற்களை, பின்னாளில், வலிந்து பொய்சமய சாயம் பூசியதையும், பிற்காலத்தில் சமணத் திருப்பதிகளை பிற சமயத் திருப்பதிகள் ஆக்கியதையும் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.

அம்மட்டோ, அருகன் திருப்பெயர்களைக்கூட பிற சமயத்தவர் உள்வாங்கி தத்தம் கடவுளருக்கு சூட்டிக் கொண்டதும் இங்கு நினைக்க வேண்டியிருக்கிறது.

காட்டாக, "திருக்குறளில்" கடவுள் வாழ்த்தில் வரும் "எண்குணன்" என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இப்பெயர் அருகனுக்கு வழங்கும் சிறப்பு பெயர்களில் ஒன்று. திருக்குறள் எழுந்தக் காலத்தில் அப்பெயர் அருக பகவானுக்கு வழங்கி வந்திருக்கிறது. சான்றாக, இளங்கோவடிகள் தாம் எழுதியச் சிலப்பதிகாரத்தில் - குமரவேல் முருகக் கடவுள், பிறவா யாக்கை பெரியோனான சிவபெருமான், வானளந்த திருமால் போன்ற பல கடவுளர்களை புகழ்ந்துப் பாடல்கள் எழுதியிருக்கிறார். ஆனால், வேறெந்த கடவுளுக்கும் "எண்குணன்" என்ற சொல்லைப் பயன் படுத்தாமல், அருகக் கடவுளுக்கு மட்டுமே பயன் படுத்துகிறார்.


மேலும், ஆரணி போளூர் வட்டத்தில் "திருமலை" என்ற மலை இருக்கிறது. இம்மலையில் 22ஆவது தீர்த்தங்கரரான "நேமிநாத சுவாமி"யின் 13அடி சிலையிருக்கிறது. இம்மலைக்கு"எண்குண இறைவன் குன்றம்" என்று பெயர்.


அவ்வண்ணமே "சூடாமணி நிகண்டு" அருகக் கடவுள் பெயர் தொகுதியில் "எண்குணன்"என்ற பெயரைச் சொல்கிறது. மற்ற சமயக் கடவுளர்க்கு அப்பெயர் சொல்லப்படவில்லை என்பது சிந்திதற்பாலது.

ஆனால், பின்னாளில் "எண்குணன்" என்ற சொல்லை, மற்ற சமயத்தாரும் உள்வாங்கிக் கொண்டு தத்தம் கடவுளருக்கு சூட்டிக் கொண்டனர்.

இரா.பானுகுமார்,
சென்னை.


யமக வர்க்கம்

யமக வர்க்கம் 

1. எண்ணங்கள் மனதிலிருந்து உண்டாகின்றன. அவைகளுக்கு மனதே முதன்மையானது. எண்ணங்கள் மனதினாலே உண்டாக்கப்படுகின்றன. ஆகையினால் ஒருவன் தீய எண்ணங்களோடு பேசினாலும் சரி, தீய செய்கைகளைச் செய்தாலும் சரி, அவற்றினால் உண்டாகும் துக்கங்கள், இழுத்துச் செல்லும் எருதுகளைப் பின் தொடர்ந்து போகும் வண்டிபோல, அவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றித் தொடர்கின்றன. அதுபோல ஒருவனுடைய நல்லெண்ணங்கள், செயல்கள் அவனை எப்போதும் நீங்காத நிழல் போன்று அவனைப் பின் தொடர்கின்றன.

 சிற்றின்பத்தை அடைய விரும்பியும், பஞ்சேந்திரியங்களை அடக்காமலும், மிதமிஞ்சிய உணவை உண்டும், சோம்பல் கொண்டும், சுறுசுறுப்பில்லாமலும் இருக்கிறவனை, மன்மதன் பலமற்றமரத்தைச் சூறாவளிக்காற்று பெயர்த்து வீழ்த்துவது போல, வீழ்த்தி விடுவான். சிற்றின்பம் கெட்டது என்று கண்டும், பஞ்சேந்திரியத்தை அடக்கியும், மித உணவு கொண்டும், பக்தியும் சுறுசுறுப்பும் அடைந்தும் உள்ள ஒருவனை, கற்பாறையாலான மலையைச் சூறாவளிக்காற்று அசைக்க முடியாதது போல, மன்மதனால் அசைக்க முடியாது.

யாரேனும் ஒருவர் மஞ்சள் சீவர ஆடையை உடுத்திக் கொள்ள விரும்புவாரானால், அவர் மாசுள்ள மனமுடையவராய் தன் அடக்கமும் உண்மையும் இல்லாமலிருப் பாரானால், மஞ்சள் சீவர ஆடை உடுப்பதற்கு அவர் தகுதியுள்ளவர் ஆகமாட்டார். மனமாசுகளை நீக்கி, ஒழுக்கத்தில் நிலைபெற்று நின்று, தன்னடக்கமும் மெய்யுணர்வும் ஒருவர் பெற்றிருப்பாரானால், திண்ணமாக அவரே மஞ்சள் சீவர ஆடை உடுப்பதற்கு அவர் தகுதியுள்ளவர் ஆவார்.


சாரம் (மெய்க்காட்சி) அற்றவைகளைச் சாரம் உள்ளவையென்றும், சாரம் உள்ளவைகளைச் சாரம் அற்றவையென்றும் கொண்டிருப்பவர், தவறான காட்சியையுடையவராய் இருப்பதனால், அவர் மெய்க்காட்சியை அடைய மாட்டார். சாரமுள்ளதைச் சாரம் என்றும், சாரம் அற்றதைச் சாரம் அற்றது என்றும் காண்கின்றவர், மெய்க்காட்சியைக் கொண்டிருப்பதானாலே, மெய்யை அவர் அடைகின்றார்.

செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும்

செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும்

உலகின் கடைசி நாள் பற்றி இயேசு கூறுகின்றார். இது சிறிய உவமையாக இருந்தாலும் ஒரு நீண்ட பின்னுரையை இயேசு கூறுகின்றார்.- மத்தேயு 25:31-46 

ஓர் ஆயர் தமது மந்தையில் செம்றியாடுகளும் வெள்ளாடுகளும் கலந்து போயிருப்பதைக் கண்டு. மாலைவேளயில் மந்தையை தன்முன் கூட்டி செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்தினார்.

செம்மறியாடுகள் நீதிமான்களாவார்கள் வெள்ளாடுகள் பாவிகளாவர்கள். ஆயர் ஆடுகளை பிரித்தது போல ,உலக முடிவில் இயேசு திரும்ப வந்து நீதிமான்களை தீயவரிடமிருந்து பிரிப்பார் எனபது இதன் பொருளாகும். 

பின்பு இயேசு தம் வலப்பக்கத்தில் (நீதிமான்கள்) உள்ளோரைப் பார்த்து," என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, நீங்கள் என்னோடு வாருங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள் தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள் அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள் . நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள் நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள் சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்" என்பார். அதற்கு நேர்மையாளர்கள்"ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக் கொண்டோ ம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்? எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத்தேடி வந்தோம்?" என்று கேட்பார்கள். அதற்கு இயேசு,"மிகச் எழியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்" எனப் பதிலளிப்பார்.

பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து,"சபிக்கப் பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை. நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை" என்பார்.
அதற்கு அவர்கள்,"ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்?" எனக் கேட்பார்கள். அப்பொழுது அவர்,"மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" எனப் பதிலளிப்பார். இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள்.



திரு அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை – 2

திரு அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை – 1





“உ” – உரை

“உ” என்ற எழுத்தை வள்ளற்பெருமான் திரு அருட்பெருஞ்ஜோதி அகவல் எழுதத்துவங்குகையில் முதலில் குறிப்பிட்டுள்ளார்கள். அவ்வெழுத்தின் பொருள்,

        தமது திருவுடம்பில் செயல்படுகின்ற திருஉயிரைக்குறித்துதான் அவ்வாறு “உ” என்கிற குறியீடாக எழுதியுள்ளார்கள். எல்லா உயிர்களின் பொருட்டும் எமது உயிரானது திரு அருட்பெருஞ்ஜோதி அகவலை எழுதுகின்றது என்று பொருள்.

        சுத்த சன்மார்க்கம் என்றாலே அது உயிர் சம்பந்தமுடையது. நமது உயிர் உடலைவிட்டு ஏகக்கூடாது. அதுபோல எவ்வுயிரும் துன்பபடக்கூடாது என்கின்ற உயர்ந்த நோக்கமுடையது சுத்த சன்மார்க்கம். தமிழில் உள்ள எண்களை சொல்லும்போது அவ்வெண்கள் எல்லாம் ‘உ’கரத்தில் முடிவதாய் அமைந்திருக்கும். வேறு எந்த மொழி எண்களுக்கும் இச்சிறப்பு கிடையாது. அதாவது ‘ஒன்று’, ‘இரண்டு’ என்று தமிழ் எண்களை தொடர்ந்து உச்சரிக்கும்போது ‘உ’, ‘உ’ என்ற சப்தத்துடன் முடிவதைப் பார்க்கலாம். எவ்வாறு எண்களுக்கு ஒரு முடிவென்பது இல்லையோ, அவ்வாறே உயிர்களின் எண்ணிக்கைக்கும் முடிவென்பதே கிடையாது என்பதைக் குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதே நமது தமிழ் எண்களின் ஒலிகள். அப்படிப்பட்ட உயிர்களுக்கிடையே உள்ள ஆன்ம நேயத்தை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்ததே ‘உ’ என்கின்ற தொடக்கம்.   
  
 “திருச்சிற்றம்பலம்” – உரை

அடுத்ததாக “திருச்சிற்றம்பலம்” என்ற சொல்லினை எழுதியிருப்பார். இச்சொல்லின் பொருள், திரு+சித்+அம்பலம் என்று பிரியும். ‘திரு’ என்பது இறைவனைக்குறிக்கும். ‘சித்’ என்பது அறிவைக்குறிக்கும். ‘அம்பலம்’ என்பது வெளியைக்குறிக்கும். இறைவன் அறிவே வடிவாக வெளியில் இருக்கின்றான். வெளி  என்பது அண்டம். நமது உடம்பில் கழுத்துக்கு மேல் உள்ள முகம் முழுதும்  அண்டத்தைக்குறிக்கும். அந்த முகம் என்னும் அண்டத்தில் அறிவே வடிவமாக புருவ மத்தியில் இறைவன் விளங்குகின்றான். இதனைக் குறிப்பதுதான் ‘திருச்சிற்றம்பலம்’ என்னும் சொல்.

இப்படி அறிவே வடிவமான இறைவனுடன் எனது “உ” என்கிற உயிரானது அம்பலத்தில் கலந்ததால், திரு அருட்பெருஞ்ஜோதி அகவலை இறை அறிவே எழுதுகின்றது என்பதை குறிப்பதற்காக ‘உ’ என்றும் ‘திருச்சிற்றம்பலம்’ என்றும் வள்ளற்பெருமான் அருளியிருக்கின்றார். 

அருட்பெருஞ்ஜோதி யருட்பெருஞ்ஜோதி
       அருட்பெருஞ்ஜோதி யருட்பெருஞ்ஜோதி    -2

உரை:

1.   அருட்பெருஞ்ஜோதி:-

ஜோதியே இறைவன் என்பது வள்ளல் வாக்கு. அந்த ஜோதி என்பது சாதாரணமாக இல்லாமல் மிகப்பெரிய உருவம் உடையதாக உள்ளது. அதனால் அதனை ‘பெருஞ்ஜோதி’ என்கிறார். ஜோதி என்றால் அது நம் ஊண கண்களுக்குத் தெரிந்துதானே ஆகவேண்டும். பெரிய ஜோதி என்கிறார்! ஆனால் நம்மால் அதனை கண்டு களிக்க முடியவில்லையே! ஒரு வேளை பொய் சொல்கின்றாரோ?

நம்மால் அளக்க முடியாத நெடுந்தொலைவில் உள்ள நட்சத்திர ஒளியைக்கூட நமது கண்கள் பார்த்துவிடுகின்றன. ஆச்சரியம்தான்! சூரிய ஒளி, சந்திர ஒளி, நாம் உருவாக்கிய மின் ஒளி, தீப ஒளி போன்றவைகளை நமது கண்கள் பார்த்துவிடுகின்றன. இவைகளைவிட பெரிய ஜோதியாக விளங்கும் இறைவனை ஏன் நமது கண்களால் பார்க்க முடியவில்லை?

வீறும் பெருவெளி ஜோதி – மேலும்
வெட்ட வெளியில் விளங்கிய ஜோதி. – 4566

‘வீறும்’ என்றால் ‘பிரகாசம்’ எனப்பொருள். பெரிய வெளி என்பது, கோள்கள், நட்சத்திரங்கள், வாயுக்கள், கற்கள் இவைகள் போன்ற பொருட்களை உடைய மிகப்பெரிய வெளியை பெருவெளி என்கிறோம். இப்படிப்பட்ட பெருவெளி எங்கும் அருட்பெருஞ்ஜோதி பிரகாசம் நிறைந்துள்ளது. மேலும் அவைகளையும் கடந்த ஏதுமற்ற வெட்ட வெளியில்கூட அருட்பெருஞ்ஜொதியின் மயம்தான் என்கிறார்.

ஆனால் உண்மையில் அவ்வாறு இருக்கின்றதா? நாம் பூமியிலிருந்து வானத்தை (அண்டத்தை) பார்க்கிறோம். வெளியானது நீல நிறமாகக் காட்சியளிக்கின்றது. இரவில் இருளாக காட்சியளிக்கின்றது. சூரிய ஒளி நமது காற்று மண்டலத்தில் பட்டு சிதறுகின்றது. அந்த வெள்ளொளியை காற்றானது சிதறியடிக்கும்போது  நீல நிறத்தை மட்டும் நமக்கு காட்சியாகக் கொடுக்கின்றது. அதுபோல் இரவில் சூரியன் மறைந்துவிடுவதால் நமக்கு  வெளியானது இருளாகத் தெரிகின்றது.

பெரிய ஜோதியானது மகா பிரகாசமாக அண்டம் முழுதும் பரவி யிருப்பதாக வள்ளலார் உரைக்கின்றார். அது உண்மையானால்  நமது பூமிக்கு இரவு பகலே வரக்கூடாது. என்றும் பகலாக அல்லவா இருக்க வேண்டும்! அண்டம் முழுதும் வெளிச்சமாகத்தானே இருக்கவேண்டும்! நமது காற்று மண்டலத்தை விட்டு  வெளியில் சென்று நாம் அண்டத்தை  நோக்கினால் நீல நிறம் மறைந்து எல்லாம் இருளாகவே தெரியும். எங்கும் ஜோதி மயம் என்பதை பொய்யாக்கி, எங்கும் இருள் மயமே நிறைந்திருப்பதை காணலாம். ஆகவே உண்மையில் வெளிகளெல்லாம் இருள் மயமாகத்தான் இருக்கின்றது.

அதனால்தான் “அருட்பெருஞ்ஜோதி” என்கிறார். அரு+இருள்=அருள், என்று பிரித்து பொருள் அறிதல் வேண்டும். இறைவன் என்கிற பெருஞ்ஜோதியானது தம்மை மறைத்துக்கொண்டு மாயா உருவமாக அதாவது  அருவமாக / இருளாகவே எங்கும் காட்சியளிக்கிறார். நாம் நமது மூன்றாவது  கண்ணை திறந்து பார்க்கும்போதுதான் அந்த இருள் என்கிற மாயை விலகி எல்லாம் பட்டப்பகல் போலத் தெரியவரும். நமது  இரண்டு கண்களால், இந்த விண்வெளியில் எத்தனை கோடி ஒளி ஆண்டுகள் தூரம் கடந்து சென்று பார்த்தாலும் அந்த அருட்பெருஞ்ஜோதி அருவமாகவே/இருளாகவே தெரியும். இதனைத்தான் வள்ளலார் ‘பெருஞ்ஜோதி’ அருவமாக இருக்கின்றது என்று தமது முதல் ‘அருட்பெருஞ்ஜோதி’யில் குறிப்பிடுகின்றார்.
இருளும் ஒளியும் ஒன்றாகவே கலந்து இருக்கின்றன. இப்படி கலந்து இருக்கும் இவைகளை நாம், அன்னப்பறவை எவ்வாறு பாலில் கலந்துள்ள நீரினை விடுத்து பாலை மட்டும் அருந்துகின்றதோ! அவ்வாறு நாம் இருளிலிருந்து ஒளியினை மட்டும் காணவேண்டும். இதனை ‘விகங்க நியாயம்’ என்பார் வள்ளலார். ஒளியினை கண்டுவிட்டால் அங்கு  இருள் இருக்காது. நாம் இருளினை பார்ப்பதால் அங்கு ஒளி தென்படவில்லை.  இருள் என்பது  ஒளியின் அருவமாகும். ஒளி என்பது  இருளின் அருவமாகும்.  

        மருட்பெரு மாயை முற்றும் மடிந்தன வினைக ளோடே
இருட்பெருந் தடையை  நீக்கி இரவியும் எழுந்த தன்றே. – 5306

நம்மை ஏமாற்றுகின்ற மாயை நம்மளவில் முற்றும் அழியவேண்டும். நமது வினைகள் ஓட வேண்டும். அப்போதுதான் இருளான பெருந் தடையை நீக்கி அருட்பெருஞ்ஜோதி பிரகாசம் எனும் சூரியன் எழுவதை நாம் இவ்வண்டத்தும், பிண்டத்தும் காணலாம். இப்படிப்பட்ட மாயையினைத்தான் திரைகளாக உருவகப்படுத்தியதை ஞானசபையில் நாம் காண்கின்றோம்.
         
2. அருட்பெருஞ்ஜோதி:-

        முதலில் சொல்லப்பட்ட ‘அருட்பெருஞ்ஜோதி’ என்பது பெருஞ்ஜோதியின் இயல்பை குறித்து வந்தது. இரண்டாவதாக வருகின்ற ‘அருட்பெருஞ்ஜோதி’ என்பது பெருஞ்ஜோதியின் பெயரைக் குறித்து வந்தது. அதாவது ‘பெருஞ்ஜோதி’யாக உள்ள அவ்விறைவனுக்கு வள்ளலார் வைத்த பெயர் “அருள்” என்பதாகும்.  அருள்+பெருஞ்ஜோதி என்று பிரித்தறிய வேண்டும். அருள் என்கிற பெயருடைய பெருஞ்ஜோதி என்று இதற்கு பொருள்.

நமக்கு அருவமான இருளானது அருவுருவமான ஜோதியாகக் காட்சியளிக்கும்போது, அந்த பேரொளியின் பிரகாசத்தால் நாம்பார்ப்பது செம்பொருளாகிய ‘சுத்த சிவம்’ ஆகும். ‘சுத்த சிவம்’ என்கின்ற இறைவனை நமக்குக் காட்டிக்கொடுப்பது ‘பெருஞ்ஜோதி’ என்கிற பிரகாசம் ஆகும். பெருஞ்ஜோதியின் தயவன்றி சுத்த சிவம் தோன்றாது. எனவே அந்த தயவிற்கு ‘அருள்’ என்று பெயர் வைத்து ‘அருட்பெருஞ்ஜோதி’ என்று வழங்குகின்றார். ‘அருள்’ என்பது பெருஞ்ஜோதிக்கு காரணப்பெயராக அமைந்துள்ளது. பெருஞ்ஜோதி நமக்கு எதனை அருள்கின்றது? என்ற வினா எழுகின்றது. சுத்த சிவ சன்மார்க்க நிலையில் நம்மை நிறுத்தி என்றும் இறவாத ஒளிதேகத்தை நமக்கு அருளுகின்றது. எனவேதான் அந்த பெருஞ்ஜோதிக்கு ‘அருள்’ என பெயர் வைத்தார் வள்ளலார். நமக்கு இறவா நிலையை கொடுக்கும் நிகழ்வுக்கு அருள் எனப்பெயர். அந்த அருளை கொடுக்கும் பெருஞ்ஜோதிக்கு அருட்பெருஞ்ஜோதி என்று பெயர்.

‘சுத்த சிவம்’ என்பதே இறைவன். ‘பெருஞ்ஜோதி’ என்பது சுத்த சிவத்தின் பிரகாசம். அப்பிரகாசத்திற்கு வள்ளலார் வைத்த பெயர் அருள் அல்லது கருணை. எனவே, சுத்த சன்மார்க்க சாதனமாம் ‘கருணையும் சிவமுமே பொருளெனக் காணும் காட்சி’யே அருட்பெருஞ்ஜோதி காட்சியாகும்.  

தவறாத வேதாந்த சித்தாந்த முதலாச்
        சாற்றுகின்ற அந்தமெலாம் தனித்துரைக்கும் பொருளை
இவறாத சுத்தசிவ சன்மார்க்க நிலையில்
        இருந்தருளாம் பெருஞ்சோதி கொண்டறிதல் கூடும்
எவராலும் பிறிதொன்றால் கண்டறிதல் கூடா
        தென்ஆணை என்மகனே அருட்பெருஞ்சோ தியைத்தான்
தவறாது பெற்றனைநீ வாழ்கஎன்ற பதியே
        சபையில்நடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே. – 4179

இங்கே நாம் ஒன்றை கவனிக்கவேண்டும். ‘அரும்பெரும்ஜோதி’ என்பதும் ‘அருட்பெருஞ்ஜோதி’ என்பதும் ஒன்றல்ல. ‘அரும்பெரும்ஜோதி’ என்பது சைவ சமயக் கடவுளான ‘சிவன்’/’ஈசன்’ என்பவரைக் குறிக்கும். இந்த சிவபெருமானை குறித்து ‘அருட்பெருஞ்ஜோதி’ என்றும் ‘அரும்பெரும்ஜோதி’ என்றும் வள்ளலாரும் பாடியுள்ளார். அருமை + பெருமை + ஜோதி = ‘அரும்பெரும்ஜோதி என்றாயிற்று. அருமையும் பெருமையும் வாய்ந்த ஜோதி என்னும் இறைவன் என்பது பொருள். எனினும் ‘அருட்பெருஞ்ஜோதி’ என்பது ‘சுத்த சிவம்’ என்றும் இதுவரை யாராலும் அறிவிக்கப்படாத ‘தனிக்கடவுள்’ என்றும் தமது இறுதி அனுபவ முடிபாக வள்ளற்பெருமான் அருளியுள்ளார். அருள் + பெரும் + ஜோதி = அருள் நிறைந்த ஜோதி என்றாயிற்று. எனவே நாம் இவை இரண்டிற்கும் உள்ள பொருள் அறிந்து அதன்படி நடத்தல் வேண்டும். 

‘அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ ரேதிரு
        அம்பல வாணரே வாரீர்
        அன்புடை யாளரே வாரீர். – 4354

‘ஆதிஅ னாதிஎன் றாரணம் போற்றும்
        அரும்பெருஞ் ஜோதியீர் வாரீர்
        ஆனந்த நாடரே வாரீர். - 4364
       
3.           அருட்பெருஞ்ஜோதி:-

முதலில் அருட்பெருஞ்ஜோதியின் இயல்பையும், இரண்டாவதாக
அருட்பெருஞ்ஜோதியின் பெயரையும் பார்த்தோம். மூன்றாவதாக வருகின்ற அருட்பெருஞ்ஜோதியினை அருட்டு+பெருஞ்ஜோதி என்று பிரித்து பொருள் அறிதல் வேண்டும். அருட்டு என்றால் எழுப்புதல் எனப்பொருள். பெருஞ்ஜோதியாம் பிரகாசம் யாரை எழுப்புகின்றது? எவ்வுலகிலுமுள்ள செத்தாரை எல்லாம் எழுப்புகின்றது. செத்தாரை எழுப்பும் சன்மார்க்க காலம் பிறந்துவிட்டதை இந்த மூன்றாவது  அருட்பெருஞ்ஜோதி நமக்கு தெரிவிக்கின்றது.

        செத்தாரை எழுப்புதல் என்பது  அறிவில்லாதவனுக்கு அறிவூட்டும் செயல் என்பது  போன்று சிலர் கருதுகின்றனர். ஆனால் வள்ளற்பெருமான் அந்நோக்கில் சொல்லவில்லை.  உயிர் பிரிந்து இறந்தவர்களை எல்லாம் மீண்டும் உயிரோடு எழுப்புதல் பற்றியே  சொல்லியிருக்கின்றார்.

        “சமரச வேத சன்மார்க்க சங்கம் கூடி விளங்கும் காலம் எது? அது நமக்கு அறிவு வந்த நாள்தொட்டு அந்நாள் பரியந்தம் இறந்து போன நமது சிநேகர், உறவினர், அடுத்தோர், வார்த்திபர், வாலிபர், பாலியர், குமாரர், ஆண்மக்கள், பெண்மக்கள் என்பவர் எல்லாம் உயிர்பெற்று எழுந்து  மேற்குறித்த சங்கத்தில் கூடி விளங்கும் காலமாகும். இது விஷயத்தில் தருக்கஞ் செய்யப்படாது. உண்மை.” (திருவருட்பா-உரைநடை நூல்-பக்கம்-544)

        இச்செய்தியினை  உண்மை என நம்புதல் வேண்டும். இவ்விஷயத்தில் நாம் எந்த ஒரு  கேள்வியினையும் எழுப்ப வேண்டாம் என அவரே தடைவிதித்துவிட்டார். இவ்வுலகில் இதுவரை இறந்தவர்களை எல்லாம் எழுவார்களா? என்றால் இல்லை. வள்ளற்பெருமானுக்கு சுத்த சன்மார்க்க அனுபவம் வந்த நாள்முதல், சுத்த சிவத்தை கண்ட நாள்முதல் இவ்வுலகில் இறந்தார்களை எல்லாம் ‘பெருஞ்ஜோதி’யாம் பிரகாசம் எழுப்பியருளும். இந்தச் செய்தியினைத்தான் மூன்றாவதாக அமைந்துள்ள ‘அருட்பெருஞ்ஜோதி’ நமக்குத் தெரிவிக்கின்றது.

4.   அருட்பெருஞ்ஜோதி:-

நான்காவதாக அருளப்பட்டுள்ள ‘அருட்பெருஞ்ஜோதி’ என்பது அணு ஆற்றலை எடுத்தியம்புகின்றது. ‘அரு+பெரு+ஜோதி’ என்று பிரிக்க வேண்டும். ‘அரு’ என்றால் ‘அணு’ எனப்பொருள். அணு என்றால் என்னவென்று நமக்கெல்லாம் ஓரளவுக்குத் தெரியும். நமது ஊனக்கண்களால் காணமுடியாத மிகச்சிறிய துகளை அணு என்கின்றோம். இப்படிப்பட்ட இந்த அணுக்கள்தான் பொருட்களாகவும் பொருள் அற்றதாகவும் இருக்கின்ற நமது உலகம் உட்பட இந்த விண்வெளியை ஆட்சி செய்துவருகின்றது.

அப்படிப்பட்ட அணுவிற்குள் என்னதான் இருக்கின்றது. மிக மிகச்சிறிய துகளுள் அப்படி என்னதான் இருந்துவிட முடியும்? என்றே நினைக்கத் தோன்றும். ஆனால் அந்த அணுக்குள் பல அண்டங்களை அடுக்கிவிடும் அளவிற்கு இடம் இருக்கின்றது. அண்டம் எங்கே? அணு எங்கே? இது எப்படி சாத்தியமாகும்? ஆனால் அதுதான் உண்மை. அவ்வணுவிற்குள் ‘பெருஞ்ஜோதி’யே இருக்கின்றது. ஊசிக்காதுக்குள் ஒட்டகத்தை புகுத்த முடியும் என்பதை இயற்கை செய்துமுடித்திருக்கின்றது.

‘அன்பெனும் அணுவில் அமைந்த பேரொளியே’ என்பார் வள்ளலார். நமது உடம்பும் நமது உடம்பை சுற்றியுள்ள வெற்றிடங்களும் அணுக்களாலே கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்த அணுக்கள் எல்லாம் ‘பெருஞ்ஜோதி’யாகவே இருக்கின்றன. இதனால்தான் ‘உள்ளும் புறமும் வள்ளல் இருக்க வாட்டம் ஏன்?’ என்கிறார் வள்ளலார். அணுக்களுக்கு உள்ளும் அணுக்களுக்கு வெளியும் பெருஞ்ஜோதியே இருக்கின்றது. எனவே யாதொன்று பற்றியும் வாட்டம் கொள்ளக்கூடாது என்கிறார் வள்ளலார். 

ஓர் அணுவை அண்டமாக்குவதும், ஓர் அண்டத்தை அணுவாக்குவதும் ‘பெருஞ்ஜோதி’யின் அனுபவமாகும். அணு முதல் அண்டம் வரை எல்லாம் ஜோதி மயமே! ‘அரு’ என்ற அணுவையும் ‘பெரு’ என்ற அண்டத்தையும் ஆளுகின்றவன் ‘ஜோதி’ என்ற இறைவனே ஆகும். இதனையே ‘அருட்பெருஞ்ஜோதி’ என்று நான்காவது முறையாக எடுத்தியம்புகின்றார் வள்ளற்பெருமான்.  

நமது ஊனக்கண்களுக்கு இருளாகவே காட்சியளிக்கும் அருட்பெருஞ்ஜோதி, அருள் என்கின்ற பெயரைத் தாங்கி நமக்கு இறவா வரத்தை அளிக்கும் அருட்பெருஞ்ஜோதி, இறந்தாரை எல்லாம் எழுப்புகின்ற அருட்பெருஞ்ஜோதி, சிறிதினும் சிறிதாய் பெரிதினும் பெரிதாய் இருக்கின்ற அருட்பெருஞ்ஜோதி என்று இந்த நான்கு பொருள்களில் அடங்குகின்றன திரு அருட்பெருஞ்ஜோதி அகவலின் முதல் இரண்டு வரிகள்.

இதற்கு மேற்பட்டு ‘அருட்பெருஞ்ஜோதி’ என்று நாம் எங்கெங்கு படிக்கவோ, பிறர் ஓத கேட்கவோ நேர்ந்தாலும் அதற்கு மேற்காணும் நான்கு பொருளையும் ஒருங்கே நினைத்து நாம் தியானித்து வந்தோமானால் நமக்கு சுத்த சிவத்தின் பிரகாச காட்சியும், இறவா வரமும், செத்தாரை எழுப்புகின்ற திறமும், அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்கிற உண்மையும் பெற்று சுத்த சன்மார்க்கியாக்கும் வல்லமை இந்த ‘அருட்பெருஞ்ஜோதி’ என்கின்ற சொல்லுக்கு உண்டு. - TMR