Tuesday, December 6, 2016

நீலகேசியின் நையாண்டி!

நீலகேசியின் நையாண்டி!

"நீலகேசி" என்னும் நூல், ஐஞ்சிறுங் காப்பியங்களில் ஒன்றெனப் போற்றப்படுகிறது. இந்நூல் தருக்க வகையைச் சார்ந்தது. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இந்நூலுக்கு "சமய திவாகர வாமன முனிவர்" என்பார் உரை எழுதியுள்ளார். இந்நூல் "குண்டலகேசி" என்னும் பெளத்த நூலுக்கு மறுப்பாக எழுந்த சமண நூல். இதன் காலம் யாது என்பதை திட்டவட்டமாக அறிய முடியவில்லை. இதன் எழுத்தமைதிக் கருதி இதனை கி.பி. நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டு எனக் கருத இடமிருக்கிறது.

கதை சுருக்கம்:
"நீலகேசி" என்பவள் திருவளங்காடு பக்கத்தில் இருக்கும் பழையனூர் என்னும் ஊரில்வசித்து வந்த பேய். அப்பேய், சமண முனிவரான முனிசந்திர முனிவர் என்பவரிடம், சமண ஆகமங்களைக் கற்று, "திருவறம்" என்று அழைக்கப்படும் சமண அறத்தை நிலை நாட்ட உறுதிப் பூணுகிறாள். அவ்வாறே, மற்ற சமயத்தாரிடம் முன் சென்று அவர்களிடம் வாதுசெய்து, சமண அறத்தை நிலை நாட்டுகிறாள். இதுதான் "நீலகேசி"யின் கதைச் சுருக்கம்.

இங்கு ஒன்றைக் குறிக்க நினைக்கிறேன். இது சமய வரலாற்றாய்வில் மிகவும் முக்கியமானஒன்று. அது யாதெனின், நீலகேசி மற்ற சமயங்களிடம் வாது செய்தாள் என்று பார்த்தோம். அந்த சமயங்களாவன,

1.பெளத்தம்,
2.ஆசிவகம்,
3.சாங்கியம்,
4.வைசேடிகம்,
5.வேத மதம்,
6.பூத வாதம்.

மேற்குறிப்பிட்ட பட்டியலில், தற்போது பெருஞ்சமயங்களாக இருக்கும் சைவம், வைணவம் குறிக்கப்படவில்லையே என்ற கேள்விதான் அது? ஏன் குறிக்கப்படவில்லை. சிந்திக்க வைக்கும் கேள்விதான்? இல்லையா!
அக்கேள்விக்கு விடை பிறகுப் பார்ப்போம்.

"தீர்த்தன் திருநாமம் கொள்ளாத தேவுளவோ"!

முழுப்பாடல் விவரம்:

"பூர்ப்பம் பயந்தான் புகன்ற சுதக்கடலுட்
சார்த்திப் பிறவாத் தவநெறிக டாமுளவோ
சார்த்திப் பிறவாத் தவநெறிக டம்மேபோற்
றீர்த்தன் றிருநாமங் கொள்ளாத தேவுளதோ" - நீலகேசி (661)

"பூர்ப்பம் - பூர்வ+ஆகமம்,
சுதக்கடல் = சுருதக் கடல் = ஆகமக்கடல்".

- அருக பகவான் கூறிய ஆகம நெறிகளை (ஒழுக்க நெறிகளை) மற்ற சமயத்தார் எடுத்தியம்பிக் கொண்டது போல் அவனுக்குறிய திருநாமங்களைக் கூட தத்தம் கடவுளருக்குச் சூட்டிக் கொண்டார்கள் என்பது தான் மேலே சொன்ன பாடலின் பொருள்.

"தீர்த்தன் திருநாமம் கொள்ளாத தேவு (தெய்வம்) உளதோ" என்ற அடியில் பொதிந்திருக்கும் இலக்கிய நையாண்டிக் குறிப்பிடத்தக்கது.

இந்த அடியைப் படிக்கும் போதெல்லாம், தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், வளையாபதி, திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு போன்ற சமண நூற்களை, பின்னாளில், வலிந்து பொய்சமய சாயம் பூசியதையும், பிற்காலத்தில் சமணத் திருப்பதிகளை பிற சமயத் திருப்பதிகள் ஆக்கியதையும் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.

அம்மட்டோ, அருகன் திருப்பெயர்களைக்கூட பிற சமயத்தவர் உள்வாங்கி தத்தம் கடவுளருக்கு சூட்டிக் கொண்டதும் இங்கு நினைக்க வேண்டியிருக்கிறது.

காட்டாக, "திருக்குறளில்" கடவுள் வாழ்த்தில் வரும் "எண்குணன்" என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இப்பெயர் அருகனுக்கு வழங்கும் சிறப்பு பெயர்களில் ஒன்று. திருக்குறள் எழுந்தக் காலத்தில் அப்பெயர் அருக பகவானுக்கு வழங்கி வந்திருக்கிறது. சான்றாக, இளங்கோவடிகள் தாம் எழுதியச் சிலப்பதிகாரத்தில் - குமரவேல் முருகக் கடவுள், பிறவா யாக்கை பெரியோனான சிவபெருமான், வானளந்த திருமால் போன்ற பல கடவுளர்களை புகழ்ந்துப் பாடல்கள் எழுதியிருக்கிறார். ஆனால், வேறெந்த கடவுளுக்கும் "எண்குணன்" என்ற சொல்லைப் பயன் படுத்தாமல், அருகக் கடவுளுக்கு மட்டுமே பயன் படுத்துகிறார்.


மேலும், ஆரணி போளூர் வட்டத்தில் "திருமலை" என்ற மலை இருக்கிறது. இம்மலையில் 22ஆவது தீர்த்தங்கரரான "நேமிநாத சுவாமி"யின் 13அடி சிலையிருக்கிறது. இம்மலைக்கு"எண்குண இறைவன் குன்றம்" என்று பெயர்.


அவ்வண்ணமே "சூடாமணி நிகண்டு" அருகக் கடவுள் பெயர் தொகுதியில் "எண்குணன்"என்ற பெயரைச் சொல்கிறது. மற்ற சமயக் கடவுளர்க்கு அப்பெயர் சொல்லப்படவில்லை என்பது சிந்திதற்பாலது.

ஆனால், பின்னாளில் "எண்குணன்" என்ற சொல்லை, மற்ற சமயத்தாரும் உள்வாங்கிக் கொண்டு தத்தம் கடவுளருக்கு சூட்டிக் கொண்டனர்.

இரா.பானுகுமார்,
சென்னை.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.