Sunday, October 22, 2017

காரணப்பட்டு ச.மு.க. அறக்கட்டளை



காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” மின் மாத இதழில் அக்டோபர் 2017 மாதம் வெளியானது…

                                 காரணப்பட்டு ச.மு.க. அறக்கட்டளை
வரவு – செலவுகள்
நவம்பர் மாதம் – 2017


தேதி விவரம் வரவு செலவு இருப்பு
31.08.2017 இருப்பு கீ/கொ              8,425.50
11.09.2017 ஐந்தினை வெளியீட்டகம் (திருவருட்பா முன்பதிவு)            1,400.00          7,025.50
11.09.2017 வங்கிக் கட்டணம்                    3.00          7,022.50
13.09.2017 திரு.எம்.சண்முகநாதன் அவர்களிடமிருந்து அன்னதான நன்கொடை பெற்றது.          4,000.00          11,022.50
13.09.2017 அன்னதான செலவிற்காக எடுப்பு            4,000.00          7,022.50
18.09.2017 சத்திய பேரொளி அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்தது            1,000.00          6,022.50
18.09.2017 வங்கிக் கட்டணம்                    3.00          6,019.50
28.09.2017 திரு.என்.ஆனந்தகுமார் அவர்களிடமிருந்து நன்கொடை பெற்றது             333.00            6,352.50



செப்டம்பர் மாத இறுதியில் வங்கியிருப்பு ரூ.6,352.50 மட்டும் உள்ளது. ரொக்க இருப்பு ஏதுமில்லை என்பதனை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.

கும்பகோணம் திருநகரைச் சார்ந்த ஆன்மநேயர் திரு.எம்.சண்முகாநந்தன் ஐயா அவர்கள் காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையத்தில் அன்னதானம் வழங்க உரூபாய் நான்காயிரம் நன்கொடை அளித்தார். அவரது நன்கொடையிலிருந்து 14-09-2017 அன்று (வியாழன்) காரணப்பட்டு அருள் நிலையத்தில் அன்னதானம் சிறப்பாக வழங்கப்பட்டது. நன்கொடை வழங்கிய ஆன்மநேயர் திரு.எம்.சண்முகாநந்தன் ஐயா அவர்களையும் அவரது இனிய குடும்பத்தினர்களையும் அருள் நிலையம் சார்பாக வாழ்த்துகின்றோம்.  

தம்மை யார் என அறிமுகப்படுத்திக்கொள்ளாத ஆன்மநேயர் திரு.என்.ஆனந்தகுமார் ஐயா அவர்கள் மாதாமாதம் உரூபாய் முந்நூறு அல்லது அதற்கு சற்று மேம்பட்டத் தொகையினை நமது அறக்கட்டளை வங்கிக் கணக்கில் செலுத்தி வருகின்றார். அவரையும் அவரது இனிய குடும்பத்தினரையும் அருள் நிலையம் சார்பாக வாழ்த்துகின்றோம். நன்றி.

நன்றி.

இப்படிக்கு
தி.ம.இராமலிங்கம்
அறங்காவலர். / Trustee

வள்ளலார் வருகை



காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” மின் மாத இதழில் அக்டோபர் 2017 மாதம் வெளியானது…


வள்ளலார் வருகை

இப்புண்ணிய உலகிற்கு வள்ளலார் வருகை உற்ற தினம் 05-10-1823 ஆம் ஆண்டு ஆகும். வள்ளலாரின் வருகையினை பற்றி அவரது அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா குறிப்பிட்டிருப்பதை நாம் இப்போது காண்போம்.
உலகின்கண் உயிர்கள் உய்யும்பொருட்டு எல்லாம்வல்ல முழுமுதற் செழும்பொருளாகிய சிவபெருமான் ஆங்காங்குத் திருப்பதிகளில் எழுந்தருளித் திருவருள் பாலித்து வருகின்றார் என்பது இத்தேய முழுவதும் விளங்கும் சிவாலய விசேடத்தால் அறியக்கிடக்கின்றது. அங்ஙன்ம எழுந்தருளியிருக்கும் ஆலயங்களுல் பஞ்சபூத ஸ்தலங்கள் மேம்பட்டன. அவை திருவாரூர், திருவானைக்கா, திருவண்ணாமலை, திருக்காளத்தி, சிதம்பரம் என்பனவாம். இவ்வைந்தனுள்ளும் உருவம் - அருவுருவம் - அருவம் என்னும் மூவகை வழிபாட்டிற்கும், காணாபத்தியம் முதலிய அறுவகை யுட்சமயத்தாரால் போற்றப்படுவதற்கும் உரிய தெய்வத்தலமாயும் சிதாகாயப் பெருவெளியாயும் விளங்குவது சிதம்பரமே.

          சிதம்பரமென்பது சர்வான்மாக்களுக்கும் பொதுவாய், சங்கார வழக்கறுக்கிற அம்பலமாய், களங்கமற்ற கனகமய ரூபமாய், சுத்தகேவலமாய், பூமிக்கு இருதய கமலமாய், யாவர்க்கும் புகலிடமாய், சாக்கிராதீதங் கழன்ற சுத்தமாய், பரஞானமாய், காணுந்தோறும் காணுந்தோறும் புதுமையாயிருப்பதாய், சத்தியஞான ரூபமாய், சுழுமுனாமார்க்கத்தி லெழுந்தருளி யிருக்கிற பிரகாச்மான ஞானமாய், தன்னைத் தரிசித்தவர்களுக்கு ஞானானந்தத்தைத் தோற்றுவிக்கும் பொருளாய், பசுபாசஞான நீக்கியிருப்பதாய், சர்வத்திற்கும் இடங்கொடுப்பதாய், பதமுத்திகளைக் கைவிட்டவிடமாய், மகா மாயைக்கு மேலாய், எப்பொழுது மெல்லாப் பாதத்திலும் விளங்கும் ஞானமாகிய சபையாய், சிவசொரூபமாய், தத்துவாதீத சிவபிரான் அனவரதத் தாண்டவத்திற்கு அதிட்டானமாய் விளங்குகின்றது.

          இச் சிதம்பரத்தினைச் சாமவேதீய சாந்தோக்கியோபநிடதம் சத் என்றும், சபா என்றும், கிருஷ்ண யசுர்வேதீய சுவேதாசுவதரோபநிடதம் பரம் என்றும், சத்தியம் என்றும், வாசசநேய பிருகதாரணியோபநிடதம் புண்டரீகம் என்றும், தைத்திரியோபநிடதம் குகையென்றும், ஞானானந்தம் என்றும், பரமவியோமம் என்றும், பரமாலயம் என்றும், பிருகதாரண்ணியோபநிடதம் சுத்தம் என்றும், தலவகாரோபநிடதம் சத்தியமாயதனம் (சத்தியாஸ்பதம்) என்றும் கூறும்.

          இத்தகைய சிறப்புவாய்ந்த சிதம்பரத்திற்கு வடமேற்கில் காததூரத்திலுள்ள மருதூர் என்னும் ஊரில் குருலிங்க சங்கம பத்தியிற் சிறந்து கல்வி கேள்விகளில் மேம்பட்டவராய்க் கருணீக குலத்தில் உதித்த இராமையப்பிள்ளை என்பவர் ஒருவர் விளங்கினர். அவர் அறம்வளர்ப்பவர். அன்பின்வழியிது உயிர் நிலை எனத் தேர்ந்தவர். தெளிந்த சித்தம் உடையவராய்ச் சிவனடியார்களுக்கு அமுது படைக்கும் நியமம் பூண்டொழுகினவர். அவர் இல்லறம் நடத்தி வருநாளில் அவர்க்கு மனைவியராக இருந்து ஒருவர்பின் ஒருவராக ஐந்து பேர் அரனடி அடைந்தனர். எனினும் தாம் கொண்ட ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கும் பொருட்டே இராமையப்பிள்ளை ஆறாவதுமுறை பொன்னேரி என்னும் கிராமத்திலுள்ள சின்னம்மை என்னும் பெண்மணியாரை விவாகஞ்செய்து கொண்டனர். கணவன் கொண்ட சைவ வொழுக்கத்திற் கேற்றபடி பணிவிடைபுரியும் உத்தம இயல்புவாய்ந்த அவ்வம்மையார் இராமையப் பிள்ளையுடன் உடலுயிர்போல் ஒத்து வாழ்ந்து தலைசிறந்த அன்போடு விளங்கினர்.

          இராமையப்பிள்ளை மருதூர் என்னும் கிராமத்திலும் அயல் கிராமங்களிலுமுள்ள  சிறுவர்களுக்குக் கல்வி பயிற்றிக் கொண்டும், கிராமக் கணக்கு வரைந்துகொண்டும் திருச்சிற்றம்பல முடையாரைச் சிந்தனை செய்துகொண்டும் காலங் கழிப்பராயினர்.

          அக்காலத்தில் அச்சின்னம்மையார் சபாபதி பிள்ளை, பரசுராமப் பிள்ளை என்னும் ஆண்மக்க ளிருவரையும், சுந்தரம்மாள், உணணாமுலையம்மாள் என்னும் பெண்மக்க ளிருவரையும் பெற்றெடுத்து அறிவறிந்த மக்களைப் பெற்ற பெருஞ் செல்வத்தைத் தன் நாயகருடன் அனுபவித்து வந்தனர்.

          சிவயோகியர்க்கு அமுது படைத்தது.

          இங்ஙனம் இல்லற நிகழ்த்து நாளில், ஒருநாள் உச்சிப் பொழுதில் சிவயோகியார் ஒருவர் திருநீறணிந்து அக்கமணிபூண்டு பசித்துன்பத்தால் திருமேனி களைத்தவராய்ச் சின்னம்மையாரிடம் வந்து சிறிது உணவு வேண்டினர். மண்ணினிற் பிறந்தார் பெறும் பெரும் பயன் அடியார்களை உண்பித்தல் என்று கடைப்பிடித்த அவ்வம்மையார் உள்ளங் குளிர்ந்து அச்சிவயோகியர்க்கு அன்புடன் தொண்டுசெய்து அறுசுவையுண்டி செய்திறப்பாட்டினால் பல பக்குவப்படுத்தி ஆசனத்தில் அவரை எழுந்தருளச் செய்து அமுது படைத்தனர். உண்டு இளைப்பாறிய சிவ யோகியர் அம்மையார்க்குத் திருநீறு கொடுத்து, 'என்போலும் ஓர் ஆண் மகவை விரைவிற் பெறக்கடவாய்' என வாழ்த்தி வரங்கொடுத்துச் சென்றனர். அந்நாள் தொடங்கிச் சிவ சிந்தனை நீங்காத சின்னம்மையார் முத்தினைக் கருவில் வைத்த செல்வச் செங்கரும்புபோல வயிறு வாய்க்கப் பெற்றனர்.

          வள்ளலார் திருவவதாரம்.

          கருணீககுல திலகவதியாகிய சின்னம்மையார் கலியுகம் 4925-ல் நிகழும், சுபானு வருஷம் புரட்டாசி மாதம் 21-ந் தேதி (1823-ஆம் வருடம் அக்டோபர் மாதம் 5 தேதி) ஞாயிற்றுக்கிழமை பூர்வபசஷம் துவிதியை சித்திரை நசஷத்திரம் நாலாம் பாதம் உதயாதி 29 3/4 க்குச் சிவயோகியர் அருளிய வரத்தின்படியே ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்க ஞானாசாரியராய் விளங்க வேண்டிய ஓர் ஆண்மகவைப் பெற்றெடுத்தனர். அஞ்ஞான இருள் அகற்றவந்த ஞான சூரியனாய்த் திகழ்ந்து சத்துவகுண மேலிட்டசைவக் குழந்தை பொலிவுற்று வளர்ந்து வந்து 'இராமலிங்கம்' என்னும் பிள்ளைத் திருநாமம் சூட்டப் பெற்றது.”

          இவ்வாறு வள்ளற்பெருமானின் வருகை குறித்து ச.மு.க. அவர்களால் பதியப்பட்டுள்ளது. அகத்தே கருத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்தில் அடைவித்திடவே நான் இறைவனால் இவ்வுலகிற்கு வருவிக்க உற்றேன் என்பார் வள்ளலார். இறந்தவரை எடுத்திடும்போது அரற்றுகின்ற உலகீர் இறவாத பெரும் வரம் நீர் ஏன் அடைய மாட்டீர்? மறந்திருந்தீர்… பிணி மூப்பில் சம்மதமோ? சன்மார்க்கம் ஒன்றே பிணி மூப்பு மரணம் சேராமல் தவிர்த்திடும்… இங்கே வம்மின் என்று உலகியலரை அழைக்கின்றார். அவர் வருவிக்கவுற்ற இம்மாதத்தில் அவரது அழைப்பை ஏற்று சன்மார்க்கம் சார்வது ஒவ்வொரு மனிதனின் பிறப்புரிமையாகும். சன்மார்க்கம் சார்வோம்… சாகாமல் இருப்போம்.

உடலும் உயரமும்



காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” மின் மாத இதழில் அக்டோபர் 2017 மாதம் வெளியானது…

                                        சித்தர்கள் பார்வை
                                               உடலும் உயரமும்

ஒவ்வொரு மனிதரும் அவரவர் கையின் அளவுப் படி தொண்ணூற்றாறு அங்குல உயரமே என்பர். (அவரவர் கையின் விரல் பருமன் ஒரு அங்குலம் எனக் கூறப்படும். அங்குலம், சாண், முழம், மார் என்பதும் கையின் அளவைக் கொண்டே கணிக்கப்படும்.) ‘எண் சாண் உடலம்’ என்பதும், ‘எறும்புக்கும் தன்கையால் எட்டு’ என்பதும் உடலின் உயரத்தைக் குறித்தே வழங்கப்படும்.

“சென்ம சரீ ரந்தொண்ணூற் றாற தென்னச்
செப்புமங் குலமவர்கள் கையாலே தான்”150

“எங்குல மெம்மின மென்பதொண் ணூற்றா
றங்குல மென்றரு ளருட்பெருஞ் ஜோதி” (வள்ளலார்)

என்பர், இந்த உயரத்தின் அளவு என்பது எல்லோருக்கும் பொது என்று உரைக்கப்படுகிறது. இவ்வாறு, ஒவ்வொரு வரின் உயரமும் ஒத்திருப்பதற்குக் காரணம் என்ன? என்பதற்குச் சித்தர்கள் கூறும் முறை அறிவியல் முறைக்கு ஒத்ததாகவே இருக்கும்.

“சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்
அக்கிரமத்தே தோன்றும் அவ் யோனியும்
புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால்விரல்
அக்கிரம் எட்டும் எண்சாண் அது ஆகுமே”151

ஆணும் பெண்ணும் கூடும் போது நாடியில் தோன்றும் சுக்கிலம் சுரோணிதம் என்னும் இரண்டும் கலந்து பெண்ணின் கருப்பையில் கருவாக அமையும். அக்கரு அமையும் வேளையில், பெண் விடுகின்ற மூச்சுக் காற்று, 12 அங்குல கன அளவு உடம்புக்குள் செல்கிறது. அதில் 8 அங்குல கன அளவு மட்டும் பெண்ணின் உடலுக்குள் தங்கிவிடுகிறது. மீதமுள்ள நான்கு அங்குல கன அளவுக் காற்று வெளியே வந்துவிடுகிறது. உடம்பில் சேர்ந்த 8 அங்குல கன அளவு காற்று, கருவாக அமைந்த குழந்தையின் உடலாக அமைந்து எட்டுச் சாண் என்ற அளவை அமைக்கிறது என்பது திருமூலர் கண்டறிந்த உயிரியல் முறையாகும்.

கன்பூசியஸ்



காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” மின் மாத இதழில் அக்டோபர் 2017 மாதம் வெளியானது…

மாதம் ஒரு மகான்

கன்பூசியஸ்



உலகெங்கும் அறிஞர்கள் பிறப்பதுண்டு. அவ்வகையில் சீனாவில் கி.மு.551-ஆம் ஆண்டு ஷாண்டோங் மாநிலத்தில் உள்ள குபூ நகரில் கன்பூசியஸ் பிறந்தார். அவரது உண்மையான பெயர் “கொங் சியூ” ஆகும். கொங் என்பது குடும்பப்பெயர். இவரை மாஸ்டர் கொங் என அழைப்பர்.

கன்பூசியசின் தந்தை தமது 70-ஆவது வயதில் மறுமணம் செய்து கொண்டார். அவர்களது மூத்த மகனாகப் பிறந்தவர்தான் கன்பூசியஸ் ஆவார். அவருக்கு வயது நான்காகும்போது அவரது தந்தை இறந்தார். அதனால் குடும்பம் வறுமையில் வாடியது. பசியின் கொடுமையை சிறுவயதிலே அனுபவித்த காரணத்தால் தனது அறக்கருத்துகளில் பசியைப் போக்குதலை முக்கியமான அறமாக முன்வைத்தார் கன்பூசியஸ்.

தமது 20-ஆம் வயதில் திருமணம் செய்துகொண்டார் கன்பூசியஸ். அவரது திருமண வாழ்வு இனிமையாக அமையவில்லை. வறுமையை போக்கிக்கொள்ள பொய், சூது, களவு இல்லாத ஏதாவது ஒரு நல்ல வேலை கிடைத்தால் போதும், உடனடியாக ஏற்றுக்கொள்வேன் என்று கன்பூசியஸ் தனது வேலையில்லா நாட்களை பற்றிய குறிப்பு ஒன்றில் கூறுகின்றார்.

வேலைக்காக அலைந்து திரிந்த அவர் சின்னஞ்சிறு அரசாங்க வேலைகளை செய்து அதில் தனது  கடுமையான பணியின் சிறப்பு காரணமாக பதவி உயர்வினை அடைந்தார். கல்வியே நாட்டின் முன்னேற்றத்திற்கு முதுகெலும்பு என்று நம்பிய கன்பூசியஸ் அரசாங்கத்தின் உதவியோடு பெரிய கல்வி நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். தனது ஐம்பதாவது வயதில் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். அதன் பின் லூ மாநிலத்தின் முதல்வரானார். அவரது ஆட்சியில் குற்ற செயல்கள் ஒடுக்கப்பட்டன. பொறாமை கொண்ட அண்டை மாநில அரசர்கள் இவருக்கு எதிராக சதி செய்தனர். இடையூறுகளை சந்தித்துவந்த கன்பூசியஸ் முடிவாக அரசியலைவிட்டு ஒதுங்கி ஊர் ஊராக சுற்றி அலைந்து தனது அறக்கருத்துகளை பரப்பி வந்தார். இவரது தத்துவங்களை அரச நியதியாக ஏற்றுக்கொண்ட மாமன்னர் அதன்படியே சீனமக்கள் நடக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.

சீனாவின் முதல் தத்துவப் பேராசான் கன்பூசியஸே. இவர் மதம் சாராத ஒழுக்கமுறை ஒன்றினை உருவாக்குகின்றார். இது எளிய மனிதன் தன் வாழ்வின் தவறுகளைத் தானே திருத்திக் கொள்ள வழிவகை செய்தது.

மனிதன் இயல்பிலே தவறினை நோக்கி வசீகரப்படுகின்றவன், அவனை நல்வழிபடுத்த தொடர்ந்த நடவடிக்கைகள் தேவை, அதில் சிலவற்றை சமூகம் மேற்கோள்ளும், பெரும்பான்மை மாற்றங்களை தனிநபரே மேற்கொள்ள வேண்டும், நன்மையை ஏற்றுக் கொண்டு அதன் நெறிகளுக்கு ஏற்ப வாழ்வது என்பது ஒரு தொடர் போராட்டம் என்பதை கன்பூசியஸ் வலியுறுத்துகிறார்.

தவறு செய்தவர்களாக ஒதுக்கபட்ட குற்றவாளிகள், வேசைகள், திருடர்களை தேடிச்சென்று சந்தித்து அவர்களுடன் வாழ்க்கையின் நோக்கம் குறித்து விரிவாக உரையாற்றியிருக்கிறார் கன்பூசியஸ், நான்ஷி என்ற அழகான இளம்பெண்ணை தேடிச்சென்று அவளுடன் தங்கி போதனைகள் செய்திருக்கிறார் கன்பூசியஸ், இதை ஒரு குற்றமாக அவரது சீடர்களில் சிலரே சொல்லிய போது தான் மனிதர்களை அவர்களின் செயல்களைக் கொண்டு பேதம் பார்ப்பதில்லை, மனித இயல்பை அறிவதே எனது வேலை என்கிறார் கன்பூசியஸ்.

தனது மகனின் எதிர்பாரத மரணம், நண்பர்களின் சாவு, தான் நேசித்த ஆட்சியாளர்கள் அதிகாரப்போட்டியில் படுகொலை செய்யப்பட்டது என்று தனது முதிய வயதில் தொடர்ந்த வேதனையில் வீழ்த்த கன்பூசியஸ் சில மாதங்கள் யாருடனும் ஒருவார்த்தை கூட பேசாமல் மௌனமாக வாழ்ந்திருக்கிறார், சீனாவில் இன்று கன்பூசியஸ் ஒரு கடவுளை போல வழிபடப்படுகிறார். இவரது நீதிநூல் சீனாவின் தேசிய அடையாளமாக கருதப்படுகிறது…

அவரது கடு​மையான முயற்சி​யையும் உ​ழைப்​பையும் கண்ட சீனர்கள் அவரைத் தெய்வமாகவே கருதி மதிக்கத் தொடங்கினர். தன்​னை மக்கள் ​தெய்வமாகக் கருதுவ​தைக் கன்பூசியஸ் விரும்பவில்லை. ஏனெனில் மதம் மனித​னை அடி​மையாக்குகிறது என்ப​தை உணர்ந்திருந்ததால் மதத்தின் மீது அவருக்கு நம்பிக்கையில்லாதிருந்தது.

மக்கள் மதத்தின் மீதான ​தே​வையற்ற சம்பிராதாயங்களில் மூழ்கி மூடநம்பிக்கைக்கு ஆளாகின்றனர் என்றும், மக்களின் அறியாமைப் போக்குவதற்கு பதில் மதம் அவர்களை அறிவற்ற பேதைகளாக மாற்றுகிறது என்றும், மதவெறி பிடித்தவர்கள் சிந்திக்க மறுக்கிறார்கள் என்றும் கூறிய கன்பூசியஸ் தாம் மதத்தை வெறுப்பதாக அஞ்சாது தனது கருத்துக்க​ளை வெளிப்படையாகவே கூறினார்.

‘உனக்கு என்ன நிகழக்கூடாது என்று நினைக்கிறாயோ அதனை மற்றோருக்குச் செய்யாதே.’

‘வாழ்க்கை  மிக எளிமையானது. நாம்தான் அதைச் சிக்கலாக்கிக் கொள்ளத் துடிக்கிறோம்.’

‘அறிவைப் பயன்படுத்தி நம் அறியாமையை ஒப்புக்கொள்வதுதான் உண்மையான அறிவு.’

‘இருள் இருள் என்று சொல்லிக் கொண்டு சும்மா இருப்பதை விட ஒரு சிறிய மெழுகுவர்த்தியை ஏற்றி வை.’

‘உலகின் மிகப் பெரிய ஆயுதம் மெளனம்தான்.’

‘சரியானது எது என்று உணர்ந்த பின்பும், அதை செய்யாமல் இருப்பது மகா கோழைத்தனம்’.

‘ஒவ்வொன்றும் அழகுடையதே. ஆனால் எல்லார் கண்களும் அதைக் காண்பதில்லை.’

‘தகாதனவற்றைக் கேட்கவும் பார்க்கவும் தொடங்கிவிட்டாய் எனில் தகாதனவற்றைச் செய்யத் தொடங்கிவிட்டாய்.’

‘நீ எங்கும் நில்லாதவரை, எவ்வளவு மெதுவாக நடந்தாலும் பொருட்டில்லை.’

‘கோபம் வருகிறதா, சற்றே அதன் விளைவுகளை எண்ணிப்பார்.’

‘உன் நேசிப்பிற்குரிய வேலையைக் கண்டுபிடி, பிறகு ஒருநாளும் நீ பணியாற்ற வேண்டி இராது.’

‘கற்றனவற்றை எண்ணாதவன் தோற்கிறான். எண்ணியவற்றைக் கற்காதவன் ஆபத்தில் சிக்குகிறான்.’

இவைபோன்ற கன்பூசியசின் சிந்தனைகள் உலகெங்கும் பிரசித்தி பெற்றது. ஓயாத உழைப்பினாலும் வறுமையில் வாடியதாலும் நோய்வாய்ப்பட்ட கன்பூசியஸ் தன்னு​டைய  70-ஆவது வயதில் ஓய்வெடுக்கத் தொடங்கினார். ஒரு மலைப்பாங்கான பகுதியில் வாழ்ந்த அவர் தமது வாழ்நாளின் இறுதிக் காலத்தைச் சீடர்களுக்கு உபதேசம் செய்வதில் கழித்தார். கன்பூசியஸ் தமது தத்துவக் கருத்துக்களையெல்லாம் ஒன்று ​சேர்த்து, “வசந்தமும் இலையுதிர்க் காலமும்” என்ற நூலை உருவாக்கினார். கன்பூசிய​ஸை ​நோய் தாக்கி அவ​ரை மரணப் படுக்​கையில் தள்ளியது.

மரணப் படுக்கையிலிருந்த கன்பூசியஸிடம் அவரது சீடர்களுள் ஒருவர், குரு​வே எங்களுக்குக் கடைசியாக ஏதாவது அறிவுரை கூறுங்கள் என்றார். கன்பூசியஸ் தன் வாயைத் திறந்து காட்டி,

என் வாயில் என்ன தெரிகிறது? என்றார்.
“நாக்கு” என பதில் அளித்தார் சீடர்.
பற்கள் இருக்கிறதா? என்று கேட்டதும்,
“இல்லை” என்றார் சீடர்.
இதிலிருந்து என்ன தெரிகிறது?  என்றார் கன்பூசியஸ்.
எனக்கு ஒன்றும் புரியவில்லையே என்றார் சீடர்.

“நாக்கு மென்மையானது. பல் வலிமை மிக்கது. நாக்கு பிறந்தது முதல் நம் உடல் உறுப்புகளுள் ஒன்றாக உள்ளது. பல் பிறகுதான் முளைக்கிறது. வயது முதிர முதிர கீழே விழுந்து விடுகிறது. நாக்கு அப்படியே உள்ளது. நாக்கைப் போல மென்மையானவர்களாக இருங்கள். நீண்டநாள் வாழ்வீர்கள்” என்று இறுதியாகக் கூறினார்.

இவ்வாறு கூறிய கன்பூசியஸ் தமது 71-ஆவது அகவையில் கி.மு 479-ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு விண்ணுலக​டைந்தார். அவரது மறைவிற்குப் பிறகு அவர்மீது ​கொண்டிருந்த நன்மதிப்பால் சீனமக்கள் அவரது கொள்கைகளை ‘கன்பூசியனிஸம்’ என்று ஒரு மதமாகவே மாற்றி அத​னை மதித்துப் பின்பற்றத் தொடங்கினர். சீனாவில் பெளத்தம் உள்ளிட்ட பல்​வேறு மதங்கள், கருத்துக்கள், மாறுதல்கள் ​தொடர்ந்து வந்தாலும் 2500 ஆண்டுகளாக இன்றும் கன்பூசியனிஸம்நிலைத்து நிற்கிறது என்பது ​போற்றுதற்குரிய ஒன்றாகும். இதற்கு கன்பூசியஸின் உயர்ந்த சிந்த​னைக​ளே காரணமாகும்.