Sunday, October 22, 2017

வள்ளலார் வருகை



காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” மின் மாத இதழில் அக்டோபர் 2017 மாதம் வெளியானது…


வள்ளலார் வருகை

இப்புண்ணிய உலகிற்கு வள்ளலார் வருகை உற்ற தினம் 05-10-1823 ஆம் ஆண்டு ஆகும். வள்ளலாரின் வருகையினை பற்றி அவரது அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா குறிப்பிட்டிருப்பதை நாம் இப்போது காண்போம்.
உலகின்கண் உயிர்கள் உய்யும்பொருட்டு எல்லாம்வல்ல முழுமுதற் செழும்பொருளாகிய சிவபெருமான் ஆங்காங்குத் திருப்பதிகளில் எழுந்தருளித் திருவருள் பாலித்து வருகின்றார் என்பது இத்தேய முழுவதும் விளங்கும் சிவாலய விசேடத்தால் அறியக்கிடக்கின்றது. அங்ஙன்ம எழுந்தருளியிருக்கும் ஆலயங்களுல் பஞ்சபூத ஸ்தலங்கள் மேம்பட்டன. அவை திருவாரூர், திருவானைக்கா, திருவண்ணாமலை, திருக்காளத்தி, சிதம்பரம் என்பனவாம். இவ்வைந்தனுள்ளும் உருவம் - அருவுருவம் - அருவம் என்னும் மூவகை வழிபாட்டிற்கும், காணாபத்தியம் முதலிய அறுவகை யுட்சமயத்தாரால் போற்றப்படுவதற்கும் உரிய தெய்வத்தலமாயும் சிதாகாயப் பெருவெளியாயும் விளங்குவது சிதம்பரமே.

          சிதம்பரமென்பது சர்வான்மாக்களுக்கும் பொதுவாய், சங்கார வழக்கறுக்கிற அம்பலமாய், களங்கமற்ற கனகமய ரூபமாய், சுத்தகேவலமாய், பூமிக்கு இருதய கமலமாய், யாவர்க்கும் புகலிடமாய், சாக்கிராதீதங் கழன்ற சுத்தமாய், பரஞானமாய், காணுந்தோறும் காணுந்தோறும் புதுமையாயிருப்பதாய், சத்தியஞான ரூபமாய், சுழுமுனாமார்க்கத்தி லெழுந்தருளி யிருக்கிற பிரகாச்மான ஞானமாய், தன்னைத் தரிசித்தவர்களுக்கு ஞானானந்தத்தைத் தோற்றுவிக்கும் பொருளாய், பசுபாசஞான நீக்கியிருப்பதாய், சர்வத்திற்கும் இடங்கொடுப்பதாய், பதமுத்திகளைக் கைவிட்டவிடமாய், மகா மாயைக்கு மேலாய், எப்பொழுது மெல்லாப் பாதத்திலும் விளங்கும் ஞானமாகிய சபையாய், சிவசொரூபமாய், தத்துவாதீத சிவபிரான் அனவரதத் தாண்டவத்திற்கு அதிட்டானமாய் விளங்குகின்றது.

          இச் சிதம்பரத்தினைச் சாமவேதீய சாந்தோக்கியோபநிடதம் சத் என்றும், சபா என்றும், கிருஷ்ண யசுர்வேதீய சுவேதாசுவதரோபநிடதம் பரம் என்றும், சத்தியம் என்றும், வாசசநேய பிருகதாரணியோபநிடதம் புண்டரீகம் என்றும், தைத்திரியோபநிடதம் குகையென்றும், ஞானானந்தம் என்றும், பரமவியோமம் என்றும், பரமாலயம் என்றும், பிருகதாரண்ணியோபநிடதம் சுத்தம் என்றும், தலவகாரோபநிடதம் சத்தியமாயதனம் (சத்தியாஸ்பதம்) என்றும் கூறும்.

          இத்தகைய சிறப்புவாய்ந்த சிதம்பரத்திற்கு வடமேற்கில் காததூரத்திலுள்ள மருதூர் என்னும் ஊரில் குருலிங்க சங்கம பத்தியிற் சிறந்து கல்வி கேள்விகளில் மேம்பட்டவராய்க் கருணீக குலத்தில் உதித்த இராமையப்பிள்ளை என்பவர் ஒருவர் விளங்கினர். அவர் அறம்வளர்ப்பவர். அன்பின்வழியிது உயிர் நிலை எனத் தேர்ந்தவர். தெளிந்த சித்தம் உடையவராய்ச் சிவனடியார்களுக்கு அமுது படைக்கும் நியமம் பூண்டொழுகினவர். அவர் இல்லறம் நடத்தி வருநாளில் அவர்க்கு மனைவியராக இருந்து ஒருவர்பின் ஒருவராக ஐந்து பேர் அரனடி அடைந்தனர். எனினும் தாம் கொண்ட ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கும் பொருட்டே இராமையப்பிள்ளை ஆறாவதுமுறை பொன்னேரி என்னும் கிராமத்திலுள்ள சின்னம்மை என்னும் பெண்மணியாரை விவாகஞ்செய்து கொண்டனர். கணவன் கொண்ட சைவ வொழுக்கத்திற் கேற்றபடி பணிவிடைபுரியும் உத்தம இயல்புவாய்ந்த அவ்வம்மையார் இராமையப் பிள்ளையுடன் உடலுயிர்போல் ஒத்து வாழ்ந்து தலைசிறந்த அன்போடு விளங்கினர்.

          இராமையப்பிள்ளை மருதூர் என்னும் கிராமத்திலும் அயல் கிராமங்களிலுமுள்ள  சிறுவர்களுக்குக் கல்வி பயிற்றிக் கொண்டும், கிராமக் கணக்கு வரைந்துகொண்டும் திருச்சிற்றம்பல முடையாரைச் சிந்தனை செய்துகொண்டும் காலங் கழிப்பராயினர்.

          அக்காலத்தில் அச்சின்னம்மையார் சபாபதி பிள்ளை, பரசுராமப் பிள்ளை என்னும் ஆண்மக்க ளிருவரையும், சுந்தரம்மாள், உணணாமுலையம்மாள் என்னும் பெண்மக்க ளிருவரையும் பெற்றெடுத்து அறிவறிந்த மக்களைப் பெற்ற பெருஞ் செல்வத்தைத் தன் நாயகருடன் அனுபவித்து வந்தனர்.

          சிவயோகியர்க்கு அமுது படைத்தது.

          இங்ஙனம் இல்லற நிகழ்த்து நாளில், ஒருநாள் உச்சிப் பொழுதில் சிவயோகியார் ஒருவர் திருநீறணிந்து அக்கமணிபூண்டு பசித்துன்பத்தால் திருமேனி களைத்தவராய்ச் சின்னம்மையாரிடம் வந்து சிறிது உணவு வேண்டினர். மண்ணினிற் பிறந்தார் பெறும் பெரும் பயன் அடியார்களை உண்பித்தல் என்று கடைப்பிடித்த அவ்வம்மையார் உள்ளங் குளிர்ந்து அச்சிவயோகியர்க்கு அன்புடன் தொண்டுசெய்து அறுசுவையுண்டி செய்திறப்பாட்டினால் பல பக்குவப்படுத்தி ஆசனத்தில் அவரை எழுந்தருளச் செய்து அமுது படைத்தனர். உண்டு இளைப்பாறிய சிவ யோகியர் அம்மையார்க்குத் திருநீறு கொடுத்து, 'என்போலும் ஓர் ஆண் மகவை விரைவிற் பெறக்கடவாய்' என வாழ்த்தி வரங்கொடுத்துச் சென்றனர். அந்நாள் தொடங்கிச் சிவ சிந்தனை நீங்காத சின்னம்மையார் முத்தினைக் கருவில் வைத்த செல்வச் செங்கரும்புபோல வயிறு வாய்க்கப் பெற்றனர்.

          வள்ளலார் திருவவதாரம்.

          கருணீககுல திலகவதியாகிய சின்னம்மையார் கலியுகம் 4925-ல் நிகழும், சுபானு வருஷம் புரட்டாசி மாதம் 21-ந் தேதி (1823-ஆம் வருடம் அக்டோபர் மாதம் 5 தேதி) ஞாயிற்றுக்கிழமை பூர்வபசஷம் துவிதியை சித்திரை நசஷத்திரம் நாலாம் பாதம் உதயாதி 29 3/4 க்குச் சிவயோகியர் அருளிய வரத்தின்படியே ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்க ஞானாசாரியராய் விளங்க வேண்டிய ஓர் ஆண்மகவைப் பெற்றெடுத்தனர். அஞ்ஞான இருள் அகற்றவந்த ஞான சூரியனாய்த் திகழ்ந்து சத்துவகுண மேலிட்டசைவக் குழந்தை பொலிவுற்று வளர்ந்து வந்து 'இராமலிங்கம்' என்னும் பிள்ளைத் திருநாமம் சூட்டப் பெற்றது.”

          இவ்வாறு வள்ளற்பெருமானின் வருகை குறித்து ச.மு.க. அவர்களால் பதியப்பட்டுள்ளது. அகத்தே கருத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்தில் அடைவித்திடவே நான் இறைவனால் இவ்வுலகிற்கு வருவிக்க உற்றேன் என்பார் வள்ளலார். இறந்தவரை எடுத்திடும்போது அரற்றுகின்ற உலகீர் இறவாத பெரும் வரம் நீர் ஏன் அடைய மாட்டீர்? மறந்திருந்தீர்… பிணி மூப்பில் சம்மதமோ? சன்மார்க்கம் ஒன்றே பிணி மூப்பு மரணம் சேராமல் தவிர்த்திடும்… இங்கே வம்மின் என்று உலகியலரை அழைக்கின்றார். அவர் வருவிக்கவுற்ற இம்மாதத்தில் அவரது அழைப்பை ஏற்று சன்மார்க்கம் சார்வது ஒவ்வொரு மனிதனின் பிறப்புரிமையாகும். சன்மார்க்கம் சார்வோம்… சாகாமல் இருப்போம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.