Sunday, October 22, 2017

கன்பூசியஸ்



காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” மின் மாத இதழில் அக்டோபர் 2017 மாதம் வெளியானது…

மாதம் ஒரு மகான்

கன்பூசியஸ்



உலகெங்கும் அறிஞர்கள் பிறப்பதுண்டு. அவ்வகையில் சீனாவில் கி.மு.551-ஆம் ஆண்டு ஷாண்டோங் மாநிலத்தில் உள்ள குபூ நகரில் கன்பூசியஸ் பிறந்தார். அவரது உண்மையான பெயர் “கொங் சியூ” ஆகும். கொங் என்பது குடும்பப்பெயர். இவரை மாஸ்டர் கொங் என அழைப்பர்.

கன்பூசியசின் தந்தை தமது 70-ஆவது வயதில் மறுமணம் செய்து கொண்டார். அவர்களது மூத்த மகனாகப் பிறந்தவர்தான் கன்பூசியஸ் ஆவார். அவருக்கு வயது நான்காகும்போது அவரது தந்தை இறந்தார். அதனால் குடும்பம் வறுமையில் வாடியது. பசியின் கொடுமையை சிறுவயதிலே அனுபவித்த காரணத்தால் தனது அறக்கருத்துகளில் பசியைப் போக்குதலை முக்கியமான அறமாக முன்வைத்தார் கன்பூசியஸ்.

தமது 20-ஆம் வயதில் திருமணம் செய்துகொண்டார் கன்பூசியஸ். அவரது திருமண வாழ்வு இனிமையாக அமையவில்லை. வறுமையை போக்கிக்கொள்ள பொய், சூது, களவு இல்லாத ஏதாவது ஒரு நல்ல வேலை கிடைத்தால் போதும், உடனடியாக ஏற்றுக்கொள்வேன் என்று கன்பூசியஸ் தனது வேலையில்லா நாட்களை பற்றிய குறிப்பு ஒன்றில் கூறுகின்றார்.

வேலைக்காக அலைந்து திரிந்த அவர் சின்னஞ்சிறு அரசாங்க வேலைகளை செய்து அதில் தனது  கடுமையான பணியின் சிறப்பு காரணமாக பதவி உயர்வினை அடைந்தார். கல்வியே நாட்டின் முன்னேற்றத்திற்கு முதுகெலும்பு என்று நம்பிய கன்பூசியஸ் அரசாங்கத்தின் உதவியோடு பெரிய கல்வி நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். தனது ஐம்பதாவது வயதில் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். அதன் பின் லூ மாநிலத்தின் முதல்வரானார். அவரது ஆட்சியில் குற்ற செயல்கள் ஒடுக்கப்பட்டன. பொறாமை கொண்ட அண்டை மாநில அரசர்கள் இவருக்கு எதிராக சதி செய்தனர். இடையூறுகளை சந்தித்துவந்த கன்பூசியஸ் முடிவாக அரசியலைவிட்டு ஒதுங்கி ஊர் ஊராக சுற்றி அலைந்து தனது அறக்கருத்துகளை பரப்பி வந்தார். இவரது தத்துவங்களை அரச நியதியாக ஏற்றுக்கொண்ட மாமன்னர் அதன்படியே சீனமக்கள் நடக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.

சீனாவின் முதல் தத்துவப் பேராசான் கன்பூசியஸே. இவர் மதம் சாராத ஒழுக்கமுறை ஒன்றினை உருவாக்குகின்றார். இது எளிய மனிதன் தன் வாழ்வின் தவறுகளைத் தானே திருத்திக் கொள்ள வழிவகை செய்தது.

மனிதன் இயல்பிலே தவறினை நோக்கி வசீகரப்படுகின்றவன், அவனை நல்வழிபடுத்த தொடர்ந்த நடவடிக்கைகள் தேவை, அதில் சிலவற்றை சமூகம் மேற்கோள்ளும், பெரும்பான்மை மாற்றங்களை தனிநபரே மேற்கொள்ள வேண்டும், நன்மையை ஏற்றுக் கொண்டு அதன் நெறிகளுக்கு ஏற்ப வாழ்வது என்பது ஒரு தொடர் போராட்டம் என்பதை கன்பூசியஸ் வலியுறுத்துகிறார்.

தவறு செய்தவர்களாக ஒதுக்கபட்ட குற்றவாளிகள், வேசைகள், திருடர்களை தேடிச்சென்று சந்தித்து அவர்களுடன் வாழ்க்கையின் நோக்கம் குறித்து விரிவாக உரையாற்றியிருக்கிறார் கன்பூசியஸ், நான்ஷி என்ற அழகான இளம்பெண்ணை தேடிச்சென்று அவளுடன் தங்கி போதனைகள் செய்திருக்கிறார் கன்பூசியஸ், இதை ஒரு குற்றமாக அவரது சீடர்களில் சிலரே சொல்லிய போது தான் மனிதர்களை அவர்களின் செயல்களைக் கொண்டு பேதம் பார்ப்பதில்லை, மனித இயல்பை அறிவதே எனது வேலை என்கிறார் கன்பூசியஸ்.

தனது மகனின் எதிர்பாரத மரணம், நண்பர்களின் சாவு, தான் நேசித்த ஆட்சியாளர்கள் அதிகாரப்போட்டியில் படுகொலை செய்யப்பட்டது என்று தனது முதிய வயதில் தொடர்ந்த வேதனையில் வீழ்த்த கன்பூசியஸ் சில மாதங்கள் யாருடனும் ஒருவார்த்தை கூட பேசாமல் மௌனமாக வாழ்ந்திருக்கிறார், சீனாவில் இன்று கன்பூசியஸ் ஒரு கடவுளை போல வழிபடப்படுகிறார். இவரது நீதிநூல் சீனாவின் தேசிய அடையாளமாக கருதப்படுகிறது…

அவரது கடு​மையான முயற்சி​யையும் உ​ழைப்​பையும் கண்ட சீனர்கள் அவரைத் தெய்வமாகவே கருதி மதிக்கத் தொடங்கினர். தன்​னை மக்கள் ​தெய்வமாகக் கருதுவ​தைக் கன்பூசியஸ் விரும்பவில்லை. ஏனெனில் மதம் மனித​னை அடி​மையாக்குகிறது என்ப​தை உணர்ந்திருந்ததால் மதத்தின் மீது அவருக்கு நம்பிக்கையில்லாதிருந்தது.

மக்கள் மதத்தின் மீதான ​தே​வையற்ற சம்பிராதாயங்களில் மூழ்கி மூடநம்பிக்கைக்கு ஆளாகின்றனர் என்றும், மக்களின் அறியாமைப் போக்குவதற்கு பதில் மதம் அவர்களை அறிவற்ற பேதைகளாக மாற்றுகிறது என்றும், மதவெறி பிடித்தவர்கள் சிந்திக்க மறுக்கிறார்கள் என்றும் கூறிய கன்பூசியஸ் தாம் மதத்தை வெறுப்பதாக அஞ்சாது தனது கருத்துக்க​ளை வெளிப்படையாகவே கூறினார்.

‘உனக்கு என்ன நிகழக்கூடாது என்று நினைக்கிறாயோ அதனை மற்றோருக்குச் செய்யாதே.’

‘வாழ்க்கை  மிக எளிமையானது. நாம்தான் அதைச் சிக்கலாக்கிக் கொள்ளத் துடிக்கிறோம்.’

‘அறிவைப் பயன்படுத்தி நம் அறியாமையை ஒப்புக்கொள்வதுதான் உண்மையான அறிவு.’

‘இருள் இருள் என்று சொல்லிக் கொண்டு சும்மா இருப்பதை விட ஒரு சிறிய மெழுகுவர்த்தியை ஏற்றி வை.’

‘உலகின் மிகப் பெரிய ஆயுதம் மெளனம்தான்.’

‘சரியானது எது என்று உணர்ந்த பின்பும், அதை செய்யாமல் இருப்பது மகா கோழைத்தனம்’.

‘ஒவ்வொன்றும் அழகுடையதே. ஆனால் எல்லார் கண்களும் அதைக் காண்பதில்லை.’

‘தகாதனவற்றைக் கேட்கவும் பார்க்கவும் தொடங்கிவிட்டாய் எனில் தகாதனவற்றைச் செய்யத் தொடங்கிவிட்டாய்.’

‘நீ எங்கும் நில்லாதவரை, எவ்வளவு மெதுவாக நடந்தாலும் பொருட்டில்லை.’

‘கோபம் வருகிறதா, சற்றே அதன் விளைவுகளை எண்ணிப்பார்.’

‘உன் நேசிப்பிற்குரிய வேலையைக் கண்டுபிடி, பிறகு ஒருநாளும் நீ பணியாற்ற வேண்டி இராது.’

‘கற்றனவற்றை எண்ணாதவன் தோற்கிறான். எண்ணியவற்றைக் கற்காதவன் ஆபத்தில் சிக்குகிறான்.’

இவைபோன்ற கன்பூசியசின் சிந்தனைகள் உலகெங்கும் பிரசித்தி பெற்றது. ஓயாத உழைப்பினாலும் வறுமையில் வாடியதாலும் நோய்வாய்ப்பட்ட கன்பூசியஸ் தன்னு​டைய  70-ஆவது வயதில் ஓய்வெடுக்கத் தொடங்கினார். ஒரு மலைப்பாங்கான பகுதியில் வாழ்ந்த அவர் தமது வாழ்நாளின் இறுதிக் காலத்தைச் சீடர்களுக்கு உபதேசம் செய்வதில் கழித்தார். கன்பூசியஸ் தமது தத்துவக் கருத்துக்களையெல்லாம் ஒன்று ​சேர்த்து, “வசந்தமும் இலையுதிர்க் காலமும்” என்ற நூலை உருவாக்கினார். கன்பூசிய​ஸை ​நோய் தாக்கி அவ​ரை மரணப் படுக்​கையில் தள்ளியது.

மரணப் படுக்கையிலிருந்த கன்பூசியஸிடம் அவரது சீடர்களுள் ஒருவர், குரு​வே எங்களுக்குக் கடைசியாக ஏதாவது அறிவுரை கூறுங்கள் என்றார். கன்பூசியஸ் தன் வாயைத் திறந்து காட்டி,

என் வாயில் என்ன தெரிகிறது? என்றார்.
“நாக்கு” என பதில் அளித்தார் சீடர்.
பற்கள் இருக்கிறதா? என்று கேட்டதும்,
“இல்லை” என்றார் சீடர்.
இதிலிருந்து என்ன தெரிகிறது?  என்றார் கன்பூசியஸ்.
எனக்கு ஒன்றும் புரியவில்லையே என்றார் சீடர்.

“நாக்கு மென்மையானது. பல் வலிமை மிக்கது. நாக்கு பிறந்தது முதல் நம் உடல் உறுப்புகளுள் ஒன்றாக உள்ளது. பல் பிறகுதான் முளைக்கிறது. வயது முதிர முதிர கீழே விழுந்து விடுகிறது. நாக்கு அப்படியே உள்ளது. நாக்கைப் போல மென்மையானவர்களாக இருங்கள். நீண்டநாள் வாழ்வீர்கள்” என்று இறுதியாகக் கூறினார்.

இவ்வாறு கூறிய கன்பூசியஸ் தமது 71-ஆவது அகவையில் கி.மு 479-ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு விண்ணுலக​டைந்தார். அவரது மறைவிற்குப் பிறகு அவர்மீது ​கொண்டிருந்த நன்மதிப்பால் சீனமக்கள் அவரது கொள்கைகளை ‘கன்பூசியனிஸம்’ என்று ஒரு மதமாகவே மாற்றி அத​னை மதித்துப் பின்பற்றத் தொடங்கினர். சீனாவில் பெளத்தம் உள்ளிட்ட பல்​வேறு மதங்கள், கருத்துக்கள், மாறுதல்கள் ​தொடர்ந்து வந்தாலும் 2500 ஆண்டுகளாக இன்றும் கன்பூசியனிஸம்நிலைத்து நிற்கிறது என்பது ​போற்றுதற்குரிய ஒன்றாகும். இதற்கு கன்பூசியஸின் உயர்ந்த சிந்த​னைக​ளே காரணமாகும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.