சத்திய ஞான சபை
உலகத்தினிடத்தே பெறுதற்கு
மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்களே!
அறிவு வந்த கால முதல்
-
# அறிந்து அறியாத அற்புத
அறிவுகளையும்,
# அடைந்து அறியாத அற்புத
குணங்களையும்,
# கேட்டு அறியாத அற்புதக்
கேள்விகளையும்,
# செய்து அறியாத அற்புதச்
செயல்களையும்,
# கண்டு அறியாத அற்புதக்
காட்சிகளையும்,
# அனுபவித்து அறியாத
அற்புத அனுபங்களையும்
இது தருணந் தொடங்கிக்
(25-01-1872ஆம் ஆண்டு முதல்) கிடைக்கப் பெறுகின்றேன், என்று உணருகின்ற ஓர் சத்திய உணர்ச்சியாற்
பெருங்களிப்புடையேனாகி இருக்கின்றேன்.
நீவிர்களும் அவ்வாறு
பெற்றுப் பெருங்களிப்பு அடைதல் வேண்டும் என்று எனக்குள்ளே நின்று நிறைந்து எழுந்து
வெளிப்பட்ட எனது சுத்த சன்மார்க்க லசஷியமாகிய ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமைப் பேராசை
பற்றியே இதனைத் தெரிவிக்கின்றேன்.
# இயற்கையில் தானே விளங்குகின்றவராய்
உள்ளவரென்றும்,
# இயற்கையில் தானே உள்ளவராய்
விளங்குகின்றவர் என்றும்,
# இரண்டுபடாத பூரண இன்பமானவர்
என்றும்,
# எல்லா அண்டங்களையும்,
# எல்லா உலகங்களையும்,
# எல்லாப் பதங்களையும்,
# எல்லாச் சத்திகளையும்,
# எல்லாச் சத்தர்களையும்,
# எல்லாக் கலைகளையும்,
# எல்லாப் பொருள்களையும்,
# எல்லாத் தத்துவங்களையும்,
# எல்லாத் தத்துவிகளையும்,
# எல்லா உயிர்களையும்,
# எல்லாச் செயல்களையும்,
# எல்லா இச்சைகளையும்,
# எல்லா ஞானங்களையும்,
# எல்லாப் பயன்களையும்,
# எல்லா அனுபவங்களையும்,
# மற்ற எல்லாவற்றையும்
தமது திருவருட் சத்தியால்
-
# தோற்றுவித்தல்,
# வாழ்வித்தல்,
# குற்றம் நீக்குவித்தல்,
# பக்குவம் வருவித்தல்,
# விளக்கஞ் செய்வித்தல்,
# முதலிய பெருங்கருணைப்
பெருந்தொழில்களை இயற்றுவிக்கின்றவர் என்றும்,
# எல்லாம் ஆனவர் என்றும்,
# ஒன்றும் அல்லாதவர்
என்றும்,
# சர்வ காருண்யர் என்றும்,
# சர்வ வல்லபர் என்றும்,
# எல்லாம் உடையவராய்த்
தமக்கு ஒருவாற்றானும் ஒப்புயர் இல்லாத் தனிப்பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதியர் என்றும்,
# சத்திய அறிவால் அறியப்படுகின்ற
உண்மைக் கடவுள் ஒருவரே,
# அகம் புறம் முதலிய
எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய்யறிவென்னும் பூரணப் பொது வெளியில் அறிவார்
அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார்.
அவ்வாறு விளங்குகின்ற
ஒருவரேயாகிய கடவுளை இவ்வுலகினிடத்தே ஜீவர்கள் அறிந்து அன்பு செய்து அருளையடைந்து அழிவில்லாத
சத்திய சுகபூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல்,
# பலவேறு கற்பனைகளாலும்,
# பலவேறு சமயங்களிலும்,
# பலவேறு மதங்களிலும்,
# பலவேறு மார்க்கங்களிலும்,
# பலவேறு லசஷியங்களைக்
கொண்டு
நெடுங்காலமும் பிறந்து
பிறந்து அவத்தை வசத்தர்களாகிச் சிற்றறிவும் இன்றி விரைந்து விரைந்து பல வேறு ஆபத்துகளினால்
துன்பத்தில் அழுந்தி இறந்து இறந்து வீண் போகின்றார்கள்.
இனி இச்சீவர்கள் விரைந்து
விரைந்து இறந்து இறந்து வீண்போகாமல்,
# உண்மை அறிவு,
# உண்மை அன்பு,
# உண்மை இரக்கம்
முதலிய சுபகுணங்களைப்
பெற்று நற்செய்கை உடையவராய் -
# எல்லாச் சமயங்களுக்கும்,
# எல்லா மதங்களுக்கும்,
# எல்லா மார்க்கங்களுக்கும்
உண்மை பொது நெறியாகி
விளங்குஞ் சுத்த சன்மார்க்கத்தைப் பெற்று -
# பெருஞ் சுகத்தையும்,
# பெருங் களிப்பையும்
அடைந்து வாழும் பொருட்டு,
மேற்குறித்த உண்மைக் கடவுள் தாமே திருவுள்ளங்கொண்டு சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய
லசஷியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற ஓர் ஞானசபையை இங்கே தமது திரு அருள் சம்மதத்தால்
இயற்றுவித்து, "இக்காலம் தொடங்கி (25-01-1872ஆம் ஆண்டு முதல்) அளவு
குறிக்கப்படாத நெடுங்காலம் அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகளெல்லாம் விளங்க யாமே
அமர்ந்து விளையாடுகின்றோம்" என்னும் திருக்குறிப்பை வெளிப்படுத்தி, அருட்பெருஞ்
ஜோதியராய் வீற்றிருக்கின்றார்.
ஆகலின், அடியிற் குறித்த
தருணந் தொடங்கி (25-01-1872ஆம் ஆண்டு முதல்) வந்து வந்து தரிசிக்கப் பெறுவீர்களானால்,
# கருதிய வண்ணம் பெற்றுக்
களிப்படைவதும் அன்றி,
# இறந்தவர் உயிர்பெற்று
எழுதல்,
# மூப்பினர் இளமையைப்
பெற்று நிற்றல்
முதலிய பலவகை அற்புதங்களைக்
கண்டு பெருங்களிப்பும் அடைவீர்கள்.
இங்ஙனம்
சிதம்பரம் இராமலிங்கம்.
அன்பர்களே! மேற்கண்ட
வாசகங்கள் வள்ளலார் அவர்கள் வெளியிட்டார்கள். இதன் நோக்கம் பேருண்மைக் கடவுள் அருட்பெருஞ்ஜோதி
எழுந்தருளுகின்ற ஞானசபையினை இவ்வுலக மக்களிடையே விளம்பரம் செய்யும் பொருட்டு எழுதி
வெளியிட்டவையாகும்.
25-01-1872 ஆம் ஆண்டுத்
தொடங்கி தற்போது 141 ஆண்டுகள் ஆகின்றன. வள்ளலாரின் வாய்மையினை அறிந்த உலக மக்கள் உண்மை
இறையை வணங்கி அருள் பெறுவதற்காக உலகின் பல மூளைகளிலிருந்து வடலூர் வந்த வண்ணம் இருக்கின்றனர்.
கடந்த 140 வருடங்களில் வடலூர் வளர்ச்சியினை பார்க்கும்போது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின்
அருளினை நாம் புரிந்துக்கொள்ள முடிகிறது.
இத்தருணத்தில் வள்ளலார்
மீண்டும் வருகின்ற நாட்களும் மிக அருகில் இருப்பதாக உணர்கிறோம். எனவே வருகின்ற காலத்தில்
வடலூர் பெருவெளி சர்வதேச நகரமாகும் என்பதில் சந்தேகம் இல்லை. வடலூர் பெருவெளியை 'உத்தர
ஞான சிதம்பரம்' என்பார் வள்ளலார். அதாவது சிதம்பரத்திலிருந்து வடதிசையில் இவ்விடம்
அமைந்துள்ளதால் இதற்கு 'வடலூர்' என்றுபெயர். உத்ரம் என்றால் வடக்குதிசை எனப் பொருள்.
உலகமெ லாந்தொழ உற்ற தெனக்குண்மை
ஒண்மைதந்தே
இலகஎ லாம்படைத் தாருயிர்
காத்தருள் என்றதென்றும்
கலகமி லாச்சுத்த சன்மார்க்க
சங்கம் கலந்ததுபார்த்
திலகமே னாநின்ற துத்தர ஞான
சிதம்பரமே. (4048)
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.