Wednesday, July 24, 2013

குழந்தை வளர்ப்பு



குழந்தை வளர்ப்பு

நண்பர்களே! குழந்தை பிறந்தவுடன் அதன் எதிர் காலத்தைத் தீர்மானிக்க வேண்டிய விதி நம் கையிலேயே அடங்கியுள்ளது.

தேசபிதா மகாத்மா காந்தி உலகிற்கே வழி காட்டினார். My Life is My Message என்று எடுத்துக்காட்டாய் வாழ்ந்தார்.

ஆனால் அவரது குடும்ப வாழ்க்கையில் - தம்முடைய மகனின் முறையான ஒழுக்கமுள்ள வாழ்க்கைக்கு சரியான பொறுப்பேற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் அவருடைய மகனின் வாழ்க்கை முற்றிலும் சீரழிந்து போனது. தாம் எப்படி இருக்க வேண்டும் என்று உலகில் வாழ்ந்துக் காட்டினாரோ, அதே போல இப்படி வாழக்கூடாது என்று அவருடைய மகனின் வாழ்க்கை பாடமாயிற்று.

அதனை தெரிந்து கொள்வதின் மூலம் மகாத்மாவின் அந்த குடும்பப் பாசத்தையும் குழந்தை வளர்ப்பையும் தெரிந்து கொள்வோம்.

ஆரம்ப நாளில் இருந்து கஸ்தூரிபாவுக்கும் காந்திஜிக்கும் தலைவலியாக இருந்து வந்தது, அவர்களுடைய மூத்த மகன் ஹரிலால் தான். தந்தை தன்னை அளவுக்கு அதிகமாக ஏமாற்றிவிட்டார் என்று ஹரிலால் கருதினார். தன்னை படிக்க வைக்காதது குறித்து அவருக்கு ஏகப்பட்ட வருத்தமும் எரிச்சலும் இருந்தன. எனவே காந்தியின் எதிரிபோலவே மாறிச் செயல்பட ஆரம்பித்தார். இந்நிலையில் அவருடைய மனைவி குலாபு காலமாகவே பைத்தியம் போல மாறிவிட்டார். ஹரிலால் இருபத்தி நான்கு மணி நேரமும் இரவும் பகலும் மாறி மாறிக் குடிக்க ஆரம்பித்தார்.

குடித்துவிட்டு சாலைகளில் கலாட்டா செய்வதும் காவலர்களால் பிடிக்கப்பட்டு தண்டனையை அடைவதுமாக இருந்தார். இந்நிலையில் ஒரு நாள் திடீரென முஸ்லீமாக மாறிவிட்டார். ஹரிலால் அத்துடன் காந்தியை பற்றி அவதூறாக கைக்கு வந்தபடியெல்லாம் பத்திரிக்கைகளில் திட்டித் தீர்த்தார்.

இவ்வளவு நடந்தும் கஸ்தூரிபாவினால் மகன் மீது கொண்டுள்ள பாசத்தையோ, ஹரிலாலுக்கு தன் தாயின் மேலுள்ள பாசத்தையோ விடமுடியவில்லை.

மனதில் மிரட்சியுடன், கவலையும், பயத்துடனும் கஸ்தூரிபா ஹரிலாலுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அன்புள்ள மகனே ஹரிலால்,

நீ குடித்து விட்டு மிகக்கேவலமான முறையில் சாலையில் நடந்து கொண்டதற்காக காவலர்களால் பிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதைப் பத்திரிக்கையில் படித்து தெரிந்துக் கொண்டேன்.

உன்னுடைய விஷயத்தில் அதிகாரிகள் இரக்கமும், அனுதாபமும் கொண்டிருப்பதாலும் மகாத்மாவின் மேல் மதிப்பும், மரியாதையும் கொண்டிருப்பதாலும் தான் இவ்வளவு தாராளமாக நடந்துக்கொண்டார்கள்.

உனக்கு நான் என்னதான் புத்திமதி சொல்வது? ஒழுக்கம் கெட்டுப்போகாதே! என்று நான் உன்னை நேரில் பார்க்கும் போதெல்லாம் கெஞ்சிக் கொண்டிருக்கிறேன். நீயோ மிகவும் கீழான நிலைக்கு யாரும் மாற்றப்படமுடியாத நிலைக்கு மோசமாகப் போய்க்கொண்டே இருக்கிறாய்!

இப்படிச் செய்து எங்களுக்கு சகிக்க முடியாத மனவேதனையைத் தருகிறாய் என்பதைப்பற்றி நீ எப்போதாவது யோசனை செய்து பார்த்தது உண்டா? இனி கொஞ்சநாள்தான் உயிரோடு நான் இருப்பேன்.

உன்னுடைய இந்த நடத்தையை பார்த்து பாபு உள்ளுக்குள் மனம் குலைந்து எவ்வளவு அழுகிறார் என்று உனக்கு தெரியுமா? உன்னுடைய நடத்தையை பற்றி தினமும் பாபுவிற்கு ஏகப்பட்ட கடிதங்கள் வருகின்றன. ஆனால் அவர் இதையெல்லாம் எப்படியோ தாங்கிக்கொள்கிறார். ஆனால், என்னால் பிறர் முகத்தினை பார்க்க முடியாதபடி வெட்கமாய் இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் காலை பத்திரிக்கையில் உன்னைப்பற்றி எந்த விதமான மோசமான செய்தி வந்திருக்கின்றதோ என்று மனப்போராட்டத்துடன்தான் திறக்கவேண்டியிருக்கிறது. வர வரப் பத்திரிக்கையை நினைத்தாலே பகீர் என்கிறது.

நீ எங்கே இருக்கிறாய்? எப்படித் தூங்குகிறாய்? எப்படி சாப்பிடுகிறாய்? என்று நான் கவலைபடாத தினமே இல்லை. ஒரு வேளை நீ இப்போது மாமிசம் கூட சாப்பிடுகிறாயோ?

உன்னை பார்க்க வேண்டும் என்று எனக்கு நிறைய ஆசை இருக்கிறது, ஆனால் நீ என்னையும் தூக்கி எறிந்து பேசிவிட்டால் என்ன செய்வது என்று பயமாகவும் இருக்கிறது.

பிள்ளையாய் பிறந்துவிட்டு பகைவனாய் நடந்து கொள்ள உனக்கு எப்படி மனம் வந்தது? நீ போகும் இடமெல்லாம் பாபுவை பற்றி இழிவாகப் பேசுகிறாய் என்று கேள்விபட்டேன். ஆனால் உன்மேல் அவர் தன் உயிரையே வைத்திருக்கிறார். ஆகவே நீ ஒழுக்கத்துடன் வாழவேண்டும், என்று அவர் நினைப்பதில் என்ன தவறு?

அவரால் உன்னை பற்றிய கவலைகளை ஒதுக்கிவிட்டு நாட்டுக்குப் பாடுபட முடியும். ஆனால் நான் உன்னை பொறுத்தவரை சாதாரண, சராசரி தாய்தான்!

எல்லாவற்றையும் நன்கு சிந்தி, உன்னைப் பற்றி உன் பிள்ளையையும், பெண்களும் அவமானத்தால் மனம் புழுங்குவதை நேரில் பார்த்தாவது திருந்துவாயா?

உன் அன்புள்ள
"பா"

இந்த கடிதம் ஹரிலாலுக்குக் கிடைத்த பிறகு அந்த பாச உள்ளம் பெரிதும் பொங்கிற்று, என்றாலும் தன்னை மாற்றிக்கொள்ள அவரால் இயலவில்லை.

உலக மகாத்மா, தன்னை பொருத்தமட்டில் தன்வாழ்வை பாழாக்கிய முதல் எதிரி என்று அவர் நினைத்ததுதான் காரணம், என்றாலும் 'பா' வைப் பார்க்க அவருக்கு ஆசை எழுந்தது.

ஒருநாள் கஸ்தூரிபாவும், மகாத்மாவும் ஜபல்பூருக்குப் புகை வண்டியில் வந்து கொண்டிருந்தனர். நள்ளிரவு வண்டி ஏதோ ஒரு நிறுத்தத்தில் நின்றது.

அலையென திரண்ட மக்கள் வெள்ளம் ஹரிஜன நிதிக்கு பணமாகவும், நகைகளாகவும் அள்ளி கொடுத்தனர். மகாத்மாவுக்கு 'ஜே' என்று பேரொலி வானை முட்டிற்று. அந்த மாபெரும் கூட்டத்தில் வீனையின் நரம்பொன்றில் பிசிறு ஏற்படுவது போல, தாளம் தப்பிய பாடல் ஒன்று ஒலிப்பதுபோல, 'கஸ்தூரிபாவுக்கு ஜே' என்று கேட்டது.

மிக அழுத்தமாகவும், உறுதியாகவும், சத்தமாகவும் பேரொலியையும் மீறிக் கேட்ட அந்தகுரல் சகலவிதமான நரம்புகளையும் சுண்டியிழுத்து ஜன்னல் வழியே, தன்னை வாழ்த்தும் மனிதன் யார்? என்று 'பா' வைப் பார்க்க வைத்தன,

-அது ஹரிலால்-

கிழிந்த அழுக்கேறிய ஆடைகளுடன், ஒட்டி உலர்ந்துபோன உடலுடனும், கண்கள் குழிவிழுந்து நிற்கவும் நடக்கவும் முடியாத ஒரு தள்ளாட்டத்துடன், சிவந்த உதடு வறண்டு வெடித்துப்போய் 'கஸ்தூரிபாவுக்கு ஜே' என்றார் அழுத்தமாக,

'ஐயோ... ஹரிலால்' பா கூவினார். இப்படியாகி விட்டாயே!

'சாப்பிட்டீர்களா அம்மா! இந்தாருங்கள் உங்களுக்காக நான் வாங்கிவந்த ஆரஞ்சுபழம்! இதை வாங்கக்கூட என்னிடம் காசுகிடையாது. நீங்கள் வருகிறீர்கள் என்று தெரிந்தவுடன் யாசித்து வாங்கிய பழம் இது! என் எதிரிலேயே உரித்து சாப்பிடுங்கள்.

ஹரிலால்... உனக்கா இந்த கதி? யாசகமாக வாங்கும்படி ஆகிவிட்டது தலை எழுத்துதானே! ஐயோ... என் மகனே! என்னிடம் வந்துவிடு! பாவுவிடம் பேசு! ஏன் பேசமாட்டேன் என்கிறாய்?

'மன்னியுங்கள்... பா! இவ்வளவு சிரமும் பட்டு நடக்க முடியாமல், தூங்காமல் நள்ளிரவில் காத்திருந்து வந்தது உங்களைப் பார்க்கத்தான். பாபு உலகத்துக்கு மகாத்மா, ஆனால் எனக்கு என்னை பொறுத்தவரையில் நீங்கள் மட்டும்தான் தெய்வம்! உங்களால்தான் பாபுவிற்கு இப்படியொரு புகழும், மரியாதையும் மதிப்பும் கிடைத்திருக்கிறது'.

'ஹரிலால், போனது போகட்டும்! எங்களுடன் வா' மகாத்மா கெஞ்சினார் பிள்ளையிடம்!

'முடியாது! நான் யாரை பார்க்கவேண்டும் என்று நினைத்தேனோ யாருக்காக இங்கே வந்தேனோ அந்த வேலை முடிந்து விட்டது, நான் போகிறேன்'

'பா... அந்த பழத்தை சாப்பிடுங்கள்'

'ஹரிலால்... கெட்டுப்போகாதே! உடம்பை பார்த்துக்கொள்' வண்டி நகரத் தொடங்கியது.

ஹரிலாலுக்கு நான் ஒன்றும் தரவில்லையே - தாய் பாசம் தவித்தது.

'இந்தா மாதுளம் பழத்தை கொடு' காந்திஜி கூற ஜன்னல் வழியே எட்டி மாதுளை பழத்தை 'பா' நீட்ட அதைப் பெற ஹரிலால் கையை நீட்ட, ஆனால் பெற முடியாதபடி வண்டி வேகம் எடுக்க -

பழத்தை பெற நீட்டிய கைகளை மடக்கிகொண்டு - 'கஸ்தூரிபாவுக்கு ஜே' என்று உரத்த குரலில் கத்தினார்.

புகைவண்டியின் அரக்க ஒலியையும் - மக்கள் வெள்ளத்தின், 'மகாத்மாவுக்கு ஜே' ஒலியையும் மீறி கஸ்தூரிபாவின் செவிகளில் அது மீண்டும் வந்து தாக்கிற்று.

நிலைகுலைந்து வண்டியுனுள் சாய்ந்தார் 'பா'. இந்த இக்கட்டான நிலமை உருவாக காரணம் யார்?

விதி என்று சொல்லலாமா? அல்லது தாய் தகப்பனாரின் நேரடிக் கண்காணிப்பில்லை என்று கூறலாமா?

பேரறிஞர், மகான், பார் அட்லா பட்டம் பெற்ற பெரிய பாரீஸ்டர், உலகப்பிதா, இவருக்கே இந்நிலமை ஏற்பட்டது என்றால், முறையாக குழந்தை வளர்க்கப்படவில்லை என்றால் எதை சொல்லமுடியும்? இன்றைய நாளேடுகளில் மிகவும் வெறுக்கத்தக்க நிகழ்வாக பாலியல் பலாத்காரம்தான் தினமும் அரங்கேறுகிறது. இதற்கெல்லாம் காரணம் பிள்ளைகளைவிட அவர்களை வளர்த்த பெற்றோர்கள்தான் மிக அதிக அளவில் காரணமாக இருக்கிறார்கள் என்பதை அறிந்து ஒவ்வொரு பெற்றோரும் மிகவும் பொறுப்பான முறையில் தங்களது பிள்ளைகளை, வள்ளலார் கூறும் ஜீவகாருண்ய ஒழுக்கம், இந்திரிய ஒழுக்கம்,
ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம், கரண ஒழுக்கம் போன்ற ஒழுக்கங்களை குழந்தை பருவம் தொடங்கி சொல்லிக்கொடுத்து வளர்த்தால் இவ்வுலகத்தின் எதிர்காலம் இறைவனின் சொர்க்கமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.


எனவே குழந்தை வளர்ப்பில் விதி என்பதுடன் நம்முடைய பங்கும் மிக முக்கியம் என்று ஒவ்வொரு தம்பதியரும் உணரவேண்டும்.

பொய்யாத மொழியும்மயல் செய்யாத செயலும்வீண்
           போகாத நாளும் விடயம்
     புரியாத மனமும்உட் பிரியாத சாந்தமும்
           புந்திதள ராத நிலையும்
எய்யாத வாழ்வும்வே றெண்ணாத நிறைவும்நினை
           என்றும்மற வாத நெறியும்
     இறவாத தகவும்மேற் பிறவாத கதியும்இவ்
           ஏழையேற் கருள்செய் கண்டாய் (2594)

அருட்பெருஞ்ஜோதி      அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை           அருட்பெருஞ்ஜோதி

 



No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.