அடியேன்
அடியேன் - என்று பலர்
சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம். அடியேன் என்று ஏன் சொல்கிறார்கள் என்று அப்படி சொல்பவர்களுக்கே
பெரும்பாலும் தெரியாது. ஒரு கட்டிடத்திற்கு அடி அதன் அஸ்திவாரம். ஒரு மரத்திற்கு அடி
அதன் ஆணி வேர். மனித தூல உடலுக்கு அடி அதை தாங்கி நிற்கும் பாதங்கள்.
இந்த மனித உடல் உண்டாவதற்கு
தாயின் கர்ப்பத்தில் ஒரு நாள் விந்து விழுந்து முளை கண்டிருக்குமல்லவா? அந்த முளை மனிதனுடைய
சூட்சம சரீரத்தில் இருக்கிறது. அதுதான் மனித தேகம் உண்டாவதற்கு அடி அதாவது அஸ்திவாரம்.
அதைத்தான் ஆண்டவனின் திருப்பாதம் என்பர். அந்தப் 'பாதம்' அறிந்தவர்க்கு அனைத்தும் விளங்கும்.
அப்பாதத்தை மற்றவர்களுக்கும் காட்டித்தர வல்லவர்கள் பிரம்ம நிஷ்டர்கள், சித்தர்கள்,
ரிஷிகள், குருமார்கள், அவதார புருடர்கள். அவர்களுடைய சீடன் ஒருவனுக்கு அவர்கள் அவனினுள்ளே
உள்ள அந்த அடியை காட்டித்தந்ததும், அந்த சீடன் தன்னை 'அடியேன்' என்று சொல்லிக்கொள்ள
தகுதி உடையவன் ஆகின்றான்.
அவன்தான் அடியேன் என்பதற்கு
உரிய உண்மையை அறிந்து, உணர்ந்து அந்த ஆசானிடம் அவ்வார்த்தையை (அடியேன் என்ற சொல்லை)
சொல்லத் தகுந்தவன். மற்றவர்கள் அவ்வார்த்தையை உபயோகிப்பது பிறரை ஏய்த்து வேலை வாங்குவதற்காக
அல்லது அவ்வார்த்தைக்குரிய உண்மை தெரியாமல் உரைக்கிறார்கள் எனலாம்.
இந்த இடத்தில் வடலூர் வள்ளலார்
அவர்களை அழைப்பது நல்லது. அவர்கள் தன்னுடைய அடியைக் கண்டு, 'திருவடி புகழ்சி' என்று,
இதுவரை தமிழில் இல்லாத 192 சீர்களைக்கொண்ட ஒரு தமிழ்ப்பாடலை பாடி புகழ்ந்துள்ளார்.
(அருணகிரியாரின் திருப்புகழ் பாடல்களில் 50 க்கும் அதிகமான சீர்கள் உண்டு, ஆனால்
192 சீர்களை உடையது இந்த 'திருவடி புகழ்ச்சி' மட்டுமே) அதனால்தான் அவரை 'இராமலிங்க
அடிகள்' என்று பெரியோர்களால் அழைக்கப்பட்டார். நம்மில் உள்ள இந்த அடியின் ஆடலைத்தான்
நடராஜர் என்று பலப்பாடல்களில் பாடியுள்ளார். உலக மக்களுக்கு புறத்தே உள்ள நடராஜர் சிலையினை
பாடியது போன்று தெரிந்தாலும், இதன் உண்மை (நம்மில் உள்ள அடியின் ஆட்டமே என்று) ஞானிகளுக்கு
வேறுவிதமாய் தோன்றும்.
மேலும் வள்ளலார் 'நடேசர்
கொம்மி' என்ற தலைப்புடன் ஐந்து பாடல்களை பாடியிருக்கிறார்கள். அவற்றில் முதல் பாட்டு,
காம மகற்றிய தூயனடி
- சிவ - காம செளந்தரி நேயனடி
மாமறை ஓது செவ்வாயனடி
- மணி - மன்றேனு ஞானவா காயனடி...
இந்தப் பாடலில் 'அடி'
என்னும் சொற்கள் நான்கையும் எடுத்துவிட்டு பாடினாலும் பாட்டின் பொருள் மாறாது. கொம்பயை
பாடிக் கைகொட்டி அடிப்பது பெரும்பலும் பெண்களே. அதனால் பாட்டின் 'அடி' என்று வரும்
சொல்லை கொம்மி அடிக்கும் பெண்களைக் கூறுவதாக மக்கள் நினைப்பர். அது அப்படி அன்று. வள்ளலார்
அவர்கள் உலக மக்களுக்கு ஒரு பொருளும், ஞான வழி பற்றிச் செல்வோர்களுக்கு வேறு ஒரு உண்மைப்
பொருள் தெரியும்படி பாடக்கூடிய வல்லவர். அந்த வகையில் இப்பாடலில் 'அடி' என்ற சொல்லை
உபயோகித்திருக்கின்றார்கள்.
காமம் அகற்றிய தூயன்
யார்?
சிவகாம செளந்தரி நேயன்
யார்?
மாமறை ஓதும் செவ்வாயன்
யார்?
மணிமன்றம் எனும் ஞானஆ
காயன் யார்?
இவர்களெல்லாம் ஒருவரே.
அந்த ஒருவர்தான் மனிதனுடைய சூட்சம சரீரத்தில் உள்ள 'அடி'. திருபாதமாக நம்முள் விளங்குபவர்.
அப்பெரும் அடியை, திருப்பாதத்தை அறிந்தவர்களே அடியார்கள். அடியேன் என்று சொல்லிக்கொள்ள
தகுதியுடையவர்கள். மற்றவர்கள் அல்ல. இனி மேற்கண்ட பொருளை மையமாகக்கொண்டு கீழ்வரும்
பாடல்களை படித்துப்பாருங்கள், உண்மை மிக விளங்கும்...
கொம்மிய டிப்பெண்கள் கொம்மி
யடி - இரு
கொங்கைகு லுங்கவே கொம்மி யடி
நம்மை யாளும்பொன் னம்பல வாணனை
நாடிக் கொம்மிய டியுங்க டி - பதம்
பாடிக் கொம்மிய டியுங்க டி.
காம மகற்றிய தூய னடி - சிவ
காம சவுந்தரி நேய னடி
மாமறை யோதுசெவ் வாய னடி
- மணி
மன்றெனு ஞானவா காய னடி
ஆனந்தத் தாண்டவ ராஜ னடி
- நமை
ஆட்கொண் டருளிய தேஜ னடி
தில்லைச்சி தம்பர சித்த னடி
- தேவ
சிங்கம டியுயர் தங்க மடி.
பெண்ணொரு பால்வைத்த மத்த
னடி - சிறு
பிள்ளைக் கறிகொண்ட பித்த னடி
நண்ணி நமக்கரு ளத்த னடி
- மிக
நல்லன டியெல்லாம் வல்ல னடி.
அம்பலத் தாடல்செய் ஐய னடி
- அன்பர்
அன்புக் கெளிதரு மெய்ய னடி
தும்பை முடிக்கணி தூய னடி
- சுயஞ்
சோதிய டிபரஞ் சோதி யடி.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம் 🙏
ReplyDeleteஅருட்பெருஞ்ஜோதி... நன்றி ஐயா
Deleteஅருட்பெருஞ்ஜோதி... நன்றி ஐயா
ReplyDelete