வள்ளலார் செய்த சூரபத்ம சம்ஹாரம்
பேரன்புடையீர்! வணக்கம்!
இன்று (08.11.2013) மாலை திருச்செந்தூரில் சூரபத்ம் சம்ஹாரம் என்ற திருவிழா கோலாகலாமாக் கொண்டாடி முடித்துள்ளார்கள். யார் இந்த சூரபத்மன்? இவனை கொலைச்செய்த முருகன் யார்? எதற்காக கொலைசெய்தான்? யாருக்காக கொலைசெய்தான்? உண்மையில் இவர்கள் (முருகன் & அசுரன்) இந்த பூமியில் வாழ்ந்தார்களா? அல்லது முருகன் என்பவர் கடவுளா?
என்ற கேள்விக்கு கீழ்கண்டவாறு இந்து புராணம் விடை பகிர்கிறது...
,,, யாகத்திற்கு மருமகனை அழைக்க வந்தான். அவர் கடவுள் அல்லவா? மாமனாரை எழுந்து வரவேற்கவில்லை. இது தட்சன் மனதை நெருடியது. மாமனாருக்கு மரியாதை கொடுக்காத இவனை ஏன் யாகத்திற்கு அழைக்க வேண்டும் எனக் கருதி, மகளைப் பார்க்க வந்ததாகப் பொய் கூறி, மகளையும் யாகத்திற்கு அழைக்காமல் சென்று விட்டான். ஆனால், மற்ற லோகங்களுக்குச் சென்று பிரம்மா, திருமால், இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களை யாகத்திற்கு வர அழைப்பு விடுத்தான்.
ஈசன் வீட்டு மாமனார் இல்ல விழா அல்லவா? ஒருவர் விடாமல் அங்கு சென்றுவிட்டனர். சென்ற பின்தான் அங்கு ஈசனும், ஈஸ்வரியும் அழைக்கப்-படவில்லை என்பது தெரிந்து பயந்து போயினர். இந்த விஷயம் பார்வதியின் கவனத்திற்கு வந்தது. தந்தைக்குப் புத்தி புகட்டுவதற்காகப் பூலோகம் செல்ல கணவனிடம் அனுமதி கேட்டாள். மறுத்தார் ஈசன். அவரது சொல்லையும் மீறி, பூலோகம் சென்று தந்தையிடம் நியாயம் கேட்டாள்.
அவனோ மகளை அவமானப்படுத்தி அனுப்பி விட்டான். அவள் ருத்ர காளியாக மாறினாள். சிவனோ வீரபத்திரராக உருவெடுத்தார். இருவரும் யாக சாலையை அழித்தனர். தன் மாமனாருக்கு சாபம் ஒன்றைக் கொடுத்தார் சிவன்.
என் பக்தனாயினும், நீ ஆணவத்தால் என்னை அவமதித்தாய். எனவே, நீ ஆட்டுத் தலையுடன் திரிவாயாக. மறு ஜென்மத்தில் உனக்கு அசுர குணங்களே தலைதூக்கும். உன்னை அடக்க என்னில் பிறக்கும் ஒரு சக்தி உன்னிடம் வரும். சுப்பிரமணியன் என்ற சக்தியிடம் நீ தோற்றுப் போவாய்.
நீ சூரபத்மன் என்றும், பத்மாசுரன் என்றும் பெயர் பெறுவாய். நீ செய்த நற்செயல்களின் பலனாக அகில உலகமும் உனக்கு கட்டுப்பட்டிருக்கும். உன் இறுதிக் காலத்தில், சுப்பிரமணியன் உன்னை வதம் செய்வான் என்றார்.
இதன்படி மறுஜென்மத்தில் சூரபத்மனாகப் பிறந்தான் தட்சன். அழகுக் கோலத்தில் இருந்த பெண்மணி மீது ஒருசமயம் ஆசை கொண்டார் காசியப முனிவர். அதன் விளைவாக, அவர் பத்மாசுரன், சிங்கமுகன் என்ற மகன்களையும், அஜமுகி என்ற மகளையும் பெற்றார். அதன்பின் தன் தவறை உணர்ந்து மீண்டும் தவம் செய்யப் போய்விட்டார். இந்தப் பத்மாசுரனே உலகை அடக்கி ஆண்டான். அவனை திருச்செந்தூர் கடற்கரையில், முருகன் வதம் செய்தார்.
தான் இறக்கும் நிலையில், சூரபத்ம-னுக்குத் தன் முன்ஜென்ம நினைவு வந்தது. எதிரே நிற்பது தன் பேரன் என்பதைப் புரிந்துகொண்டான். மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தான்.
முருகா! என் முற்பிறவிப்படி நீ என் பேரனாகிறாய். உன்னை என் முதுகில் சுமக்க ஆசைப்படுகிறேன். நான் உன் மடியில் எந்நாளும் இருந்தால், என்னை மீண்டும் ஆணவம் ஆட்கொள்ளாது! என்றான்.
தாத்தாக்கள், பேரன்களை முதுகில் சுமந்து செல்வது இப்போதும் எப்படி வழக்கமோ, அதேபோல, அந்த ஆசையை சூரபத்மனும் வெளியிட்டான். இதன்படி, சூரனின் ஒரு பகுதி உடலை மயிலாக மாற்றி அதன் முதுகில் அமர்ந்தார் முருகன். ஒரு பகுதியை சேவலாக்கி தன் கொடியில் அமர்த்தி, தன் கைப்பிடியில் வைத்துக்கொண்டார்.
என்ன அன்பர்களே, கதை எப்படியிருக்கிறது. நமது குடும்பங்களில்கூட இப்படிப்பட்ட மோசமான சம்பவங்கள் நடைபெறாது. ஆனால் இறைவனின் குடும்பங்களில் எப்படி அடித்துக்கொண்டு மாய்கிறார்கள் பாருங்கள். ஒருவருக்கொருவர் பொறாமையுடன், நயவஞ்சக உணர்வுடன், காம பார்வையுடன் உலாவருகிறதை இக்கதை நமக்கு கூறுகிறது. உண்மையில் நமது குடும்பங்களைப்பார்த்து இறைவனின் குடும்பங்கள் திருந்தவேண்டும். நாம் இந்தக்கதையினை உண்மைஎன்று நம்பினால் கூட இதனை எப்படி திருவிழாவாக கொண்டாடமுடியும்? இப்படிப்பட்ட மோசமான திருவிழாக்களில் கலந்துக்கொள்ளும் முன்பு, நம்மவர்களே சற்று சிந்திப்பீர்.
முருகப்பெருமானையே தமது முழுமுதற்கடவுளாக நினைத்துப் பலபாடல்கள் பாடிய வள்ளலார் இதனை சற்று சிந்தித்து பார்த்தார். அதன்பிறகு என்ன நடந்தது? 'எல்லாவற்றையும் விட்டுவிட்டேன்' என்று திடமாகக் கூறினார். அதுமட்டுமல்ல அதன் உண்மையினை தெளிந்து அதனை உலகிற்கு எடுத்துரைக்கவும் அவர் தயங்கவில்லை. சுப்பரமணியன் என்பது என்ன? என்று விளக்கம் அளித்துள்ளார்.
நாம் தற்போது சூரபத்ம சம்ஹாரம் பற்றி வள்ளலார் என்ன கூறுகிறார் என்பதனை இங்குப் பார்ப்போம்...
பதுமாசுரன் என்பது = பதுமம்+அ+சுரன்
பதுமம் - நாபி (கொப்பூழ்)
அ - அவா
சுரன் - சுழித்து எழுதல்
நாபியினிடமாய் அடங்காமல் எழும்பும் குணத்தை அடக்கியும், தடைபடாதது பத்மாசுரனாகிய அவா/ஆசை.
கஜமுகம் என்பது மதம் (வெறி).
சிங்கமுகம் என்பது மோகம்.
இவைகளை வெல்வது அதாவது மதம் மற்றும் மோகத்த்தை வெல்வது என்பது நமது ஐந்தறிவாலும் உபசத்தியான பஞ்சசத்தியாலும் கூடாது.
ஐந்தறிவு என்பது - பார்க்கும் அறிவு, கேட்கும் அறிவு, தொடும் அறிவு, நுகரும் அறிவு, ருசிக்கும் அறிவு.
பஞ்சசத்தி என்பது - பரையாற்றல், முந்தையாற்றல், விருப்பாற்றல், அறிவாற்றல், வினையாற்றல் என்பதாகும்.
மேற்கண்ட சத்திகளாலும் அறிவாலும் மதம் மற்றும் மோகத்தை அடக்கக்கூடாது ஆதலால் சிவத்தால் தடைபட்டது. அதாவது மதத்தையும் மோகத்தையும் ஒழிக்கமுடியவில்லை.
சுப்பிரமணியம் என்னும் சண்முகரால் அழிக்கப்படவேண்டியது எப்படி எனில்,
மேற்கண்ட பஞ்ச சத்தியோடு அனன்னியமாகிய (பஞ்சத்தியோடு ஒன்றியது) சம்வேதனை (சுத்த அறிவு ஆற்றல்) என்னும் அருட்சத்தியையுங் கூட்டிச் சுத்த அறிவே வடிவாகிய ஆறறிவு என்னும் முகங்களோடு,
சுத்தஞானம் சுத்தக்கிரியை என்னும் சத்தியுடன்,
கூர்மை பொருந்திய வேல் என்னும் விவேகத்தால்,
தயாவடிவாய் ஆசையென்னும் மதம், மோகங்களை நாசம் செய்வதே சூரசம்ஹாரம் ஆகும்.
மயில் வாகனம் என்பது என்னவெனில், மேற்படி தத்துவங்களான மதம், மோகம் ஆகியவைகள் நாசமடைந்தபின்னும் அவற்றின் அக்கிரமம் (வரம்புமீறிய செயல்) அதிக்கிரமம் (நெறிதவறுதல்) கெட்டுக் கிரமம் (ஒழுங்கு) மாத்திரம் இருப்பது.
பூர்வ வண்ணமாய் விரிந்து ஆடுவது இயல்பாததால், அவற்றை அசைய விடாமல் மத்தியில் ஏறி இருப்பதாகிய சுத்த அறிவே சண்முகம். விகல்பஜாலமே (மாயை) மயில் ஆகும். (ஒருபொருளைக்கண்டால் அது அப்பொருள்தானா? என எழும் ஐயமே விகல்பம். ஜாலம் என்பது ஏமாற்றும் வித்தை)
இவ்வண்ணமே அண்டத்திலும் உண்டு.
மேலும், நமது புருவ மத்தியில் ஆறுபட்டையாய் மணிபோல் ஒர் ஜோதியிருக்கின்றது. அந்த ஜோதியே சண்முகம்.
மேற்படி சூர தத்துவத்தை (மதம் மற்றும் காமம்) தயாவடிவாய் ஒழிக்கும்போது மேற்படி தத்துவம் மகாமாயை மாமரமாகவும், மாச்சரியம் (பகைமை) சேவலாகவும், விசித்திரமாயை (அழகாக இருப்பதுபோன்ற மாயை) மயிலாகவும், மகாமதம் (அடங்காத வெறி) யானைமுகமாகவும், அதிகுரோதம் (மிகையான கோபம்) சிங்கமாகவும் விளங்கும்.
இப்பொழுது நாம் முதலில் எழுப்பிய கேள்விக்கு விடைகாண்போம்.
1. யார் இந்த சூரபத்மன்?
நமது உடம்பில் உள்ள கொப்பூழ்கொடியிலிருந்து சுழன்று வீறுகொண்டு எழக்கூடிய அவா/ஆசை எண்ணும் வெறி மற்றும் காமம்.
இவனை கொலைச்செய்த முருகன் யார்?
நமது உடம்பில் புருவமத்தியில் உள்ள ஆறுபட்டையாய் உள்ள மணிபோல் உள்ள ஓர் ஜோதிதான் முருகன். அந்த ஜோதியினை எவர் காணுகிறார்களோ அவர்களே முருகன். அவர்களால் மட்டுமே ஆசைகளை வதம் செய்யமுடியும். அவர்களே ஞானி.
எதற்காக கொலைசெய்தான்?
தன்னுடைய மனிதப்பிறவி மேம்படுவதற்காக ஆசைகளை கொலைசெய்தான். நாமும் அப்படியேதான் நமது ஆசைகளை கொலைசெய்ய வேண்டும்.
யாருக்காக கொலைசெய்தான்?
தனக்காகவும், தன்னைப்போல் மற்றவர்களும் ஆசைகளை கடக்கவேண்டும் என்பதற்காக கொலைசெய்தான். நாமும் அவ்வாறே நமக்காகவும் மற்றவர்களுக்காகவும் நமது ஆசைகளை கொலை செய்யவேண்டும்.
உண்மையில் இவர்கள் (முருகன் & அசுரன்) இந்த பூமியில் வாழ்ந்தார்களா? அல்லது முருகன் என்பவர் கடவுளா?
இல்லை. இவர்கள் நமது உடலில் உள்ள தத்துவங்களே ஆகும். ஏற்கனவே கூறியபடி நமது புருவமத்தியில் உள்ள ஆறுகோணமாய் உள்ள ஜோதிமணியையே நாம் முருகன்/ஆறுமுகன் என்கிறோம். எனவே நமது அகத்தில் உள்ள அந்த ஜோதிமணியே கடவுள். புறத்தில் ஏதுமில்லை.
எனவே அன்பர்களே, அகத்தில் உள்ளதை புறத்தில் கூறமுயன்றதின் விளைவுதான்- புராணங்களும் முருகன்/ஆறுமுகன் என்னும் புறத்தில் உள்ள பொய் தெய்வங்களும் என்பதை இதிலிருந்து நாம் அறிய வேண்டும். உண்மையில் சூரசமஹாரம் என்பது நமக்குள் உள்ள ஜோதியினைக்கண்டு தயவின் குணம்கொண்டு, மாமாயைகளான ஆசைகளை வெல்வதே என்று தெளியவேண்டும். வள்ளலாரைப்போன்று எத்தனையோ ஞானிகள் இப்படிப்பட்ட சூரசம்ஹாரத்தை தங்களது அகத்தில் செய்திருக்கிறார்கள், நாமும் செய்வோம்.
இதற்குமேலும் உண்மைஅறியாது புராணக்கதைகளையே உண்மை என்று நம்பி திருச்செந்தூர் சென்று பட்டிக்காட்டான் மிட்டாய்கடையை வேடிக்கைப் பார்த்ததுபோன்று நாமும் வேடிக்கை பார்த்துவந்தால், நம்மைப்போன்று ஏமாளி இவ்வுலகில் யாரும் இல்லை.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி