அன்பர்களுக்கு வந்தனம்!
வள்ளலார் இயற்றிய மூன்று பிரிவுள்ள ஜீவகாருண்ய ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டு
யாம் 330 குறள் வெண்பாக்களை இயற்றியுள்ளோம்.
"இறைவன் மனிதனுக்குச் சொன்னது ஜீவகாருண்ய ஒழுக்கம்.
மனிதன் இறைவனுக்குச்
சொன்னது அருட்பெருஞ்ஜோதி அகவல்.
மனிதன் மனிதனுக்குச்
சொன்னது திருக்குறள்.
இறைவன் இறைவனுக்குச்
சொன்னது திருவருட்பா."
எனவே, இறைவன் மனிதனுக்குச் சொன்ன ஜீவகாருண்ய ஒழுக்கத்தை அப்படியே குறள் வெண்பாவில்
நீங்கள் இங்குக் காணலாம்.
ஜீவகாருண்யம்
கடவுள் வாழ்த்து
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருங் குறளில் எழுத்து ருவாவான்
அருட்பெருஞ் ஜோதி யன். 1
கூற்றா யினும்கை கூப்புவான் அருள்
ஆற்றல் கொண்ட வனை. 2
இமைப் பொழுதில் இறத்தல் என்னும்
சுமை
நீக்குவான் ஜோதியன். 3
பித்தம் தெளிந்து பேரின்பம் வாய்க்கும்
சித்தம் உடை யார்க்கு. 4
காடுடைய வெருங் காயத்துள் அருட்ஜோதி
கூடு காண்பான் சன்மார்க்கி. 5
உலகெலாம் விளங்கும் உயிர்களில் மும்
மலமறுக்கும் ஜோதியன் அருள். 6
சமய மதமார்க்கங்களை சாடியே அவற்றுள்
சமரசம் காணும் ஜோதி. 7
ஆவலாய் வணங்கும் இவ்வுலக ஆண்டவர்
யாவர்க்கும் அருட்ஜோதி துணை. 8
பெருஞ்ஜோதி யான பெரும்பதி காணும்
வருங் காலம் நமது. 9
அண்டமெலாம் தேடினும் அகப்படான் அவன்
பிண்டத்தில் ஒளிந்திருப் பான். 10
அருட்பிரகாசர்
அருவாய் குருவாய் அருள்வான் வடலூர்
அருட் பிரகாச வள்ளல். 11
உரு மறைந்து உடலுயிரோடு உலாவுவான்
மருதூர் இராம லிங்கம். 12
ஐந்தொழில் செய்வானை அமரத்துவம் பெற
சிந்தனை செய் வீர். 13
மெய்யோனை முத்தேக மனிதனை யாரும்
தெய்வ மெனக் கொள்வீர். 14
எல்லாம் வல்லான் எல்லார்க்கும் நல்லான்
வல்லமை போற்றி புகழ். 15
சித்தி வளாகத்துள்ளானை சிற் சபையானை
முத்திக்கு முன் தொழு. 16
முன்னவன் யார்க்கும் மன்னவன் சுத்த
சன்மார்க்க னென்று ஏற்று. 17
உலகம் போற்றும் உத்தமனை நின்
கலகம் போக பணி. 18
எவ்வுயிரும் இன்புற் றிருக்க நினைந்து
அவ்வுயிராய் இருப்பான் பார். 19
நீத்தார் எல்லாம் நின்றுனைத் துதிக்க
செத்தார் எழுவர் இன்று. 20
வடலூர்
எவ்விதம் எப்படி ஏற்றினாலும் வடலூரை
எவ்வூரும் நின்று தொழும். 21
திவ்விய இடங்களும் தயவுநிலை வடலூர்க்கு
அவ்வூர் அடிமை யாகும். 22
பெரும்பதிப் பயனை பெறும்மிடம் வடலூர்
அருள் வெளி அது. 23
நரைதிரை மூப்பு நாடாதிருக்க வடலூர்
இரை ஒன்றே உண். 24
கருஉருவார் யாவரும் கதிபெற வடலூர்
வருவார் என்றே சொல். 25
சனிக்கோள் களெல்லாம் சுற்றும் வடலூர்
தனித் தலைமை வெளி. 26
வருந்தும் மானிடர் வந்தால் வடலூர்
தரும் நல்ல வரம். 27
ஆறறிவு நிலை ஏழறிவுக்காண வடலூர்
பேறறிவு பெற வரும். 28
சடங்கு ஆசாரம் சமயமதமும் வடலூர்
இடத்தில் இல்லை காண். 29
கொலை புலையற்று கருணையுடன் வடலூரில்
அலையென ஆடும் அருள். 30
ஞானசபை
அருட்பெருஞ் சித்தி அளித்து வெளிப்பட
வருவான் ஞான சபைக்கு. 31
தகரக் கண்ணாடி தடைபடா தொளிரும்
சிகராமன ஞான சபை. 32
சிற்றறிவும் இல்லா சீவர்கள் பேறறிவு
பெற்றிடும் ஞான சபை. 33
நற்செய்கை செய்யும் நண்பர்கள் எல்லாம்
கற்றிடும் பாடம் சபை. 34
திக்கெட்டும் அம்பலமிங்கு தில்லையும்
வந்து
சிக்கிடும் அழகைப் பார். 35
உண்மை விளக்கம் உண்டு இங்கோர்
பண்மை என்பது இல. 36
அருட்பெருஞ் ஜோதி அமர்ந்து விளையாடும்
கருவறை யல்ல சபை. 37
எழுநூறு கோடிமனிதரிலும் எழுந்து
நடமாடும்
இழுக்கில்லா ஞான சபை. 38
இறந்தவர் உயிர்பெற்று எழுவர் பிறந்தவர்
இறவாமல் இருக்கும் சபை. 39
மூப்பினர் இளமை மீண்டும் பெறுவர்
காப்பாகும் ஞான சபை. 40
சித்திவளாகம்
கூட்டி லிருப்போனை கூடும் வளாகம்
காட்டிக் கொடாத வீடு. 41
அற்புத விளக்கம் அறியும் வளாகம்
பற்பலர் கூடும் வீடு. 42
தடைபடா விளக்கு தருகின்ற வளாகம்
விடைபல காணும் வீடு. 43
ஆண்டவன் கட்டளை இட்ட வளாகம்
வீணர்கள் காணா வீடு. 44
முத்தேகம் சித்திக்கும் முன்னவன்
வளாகம்
வித்தகம் புரிந்திடும் வீடு. 45
கோடிப்பங்கு உதவி கொடுக்கும் வளாகம்
வீடில்லாதவர் புகும் வீடு. 46
தீபம் முன்னிலையில் திருவிளங்கும்
வளாகம்
சாபம் நீக்கும் வீடு. 47
அருட் பெருஞ்ஜோதி ஆடுகின்ற வளாகம்
இருளகற்றும் சுத்த வீடு. 48
தங்கி இளைப்பாற தாங்குகின்ற வளாகம்
எங்கும் நிறை வீடு. 49
மேட்டுக் குப்பம் மேன்மைசித்தி வளாகம்
வீட்டுக்குள் நீடும் வீடு. 50
பரஜீவகாருண்யம்
பசித்துன்பம்
புசிக்க வழியன்றி பரிதவிக்கும் யார்க்கும்
பசியினால் வரும் பாழ். 51
தேவரும் தம்பசியைத் தடுக்க முயற்சி
யாவது செய்வர் உடன். 52
நரகரும் பசிவந்திட நரக வேதனையால்
கரம் பிசைவர் அயர்ந்து. 53
பெற்றோரும் பிள்ளையும் பாசம்நீங்கி
தங்களை
விற்று பசியாறுவர் பாரிலே. 54
புருடனும் மனைவியும் பசிநீக்க
ஒருவரை
ஒருவர் விற்க முனைவர். 55
உலகில் பசிக்கு ஆட்பட்டவர்கள்
தங்கள்
நிலஉடமை விற்று வாழ்வர். 56
உலகாளும் அரசனும் உறுபசி நேர்ந்தால்
கலங்கிப் போவர் கடுத்து. 57
பகைவரை வெல்லும் படைவீரரும் பசிவந்தால்
நகைக்க நடுங்கி சோர்வர். 58
துரும்பென வெறுத்த துறவியரும்
பசியால்
விரும்பி உண்பரே காண். 59
செத்தாரை எழுப்பும் சித்தரும்
பசிவந்திட
பித்தரை போல் திரிவர். 60
பசியின் சகியாமை
மானத்தில் சிறந்த மானிடரும்
பசிநேரிட
மானம் விட்டு கெஞ்சுவர். 61
சாதிமத ஆசாரிய சாதகனும் பசிவந்தால்
வீதியில் உணவு தேடுவர். 62
கல்விகேள்வி அறிவுடைய கனவானும்
பசியால்
துல்லிய அறிவை விடுவர். 63
புணர்ச்சி இன்பம் புரிந்திடும்
காமியும்பசியால்
உணர்ச்சி யற்று போவர். 64
அகங்காரம் கொண்டோரும் அவர்பசி
நீக்கியவரை
புகழ்ந்து உரைப்பர் மறந்து. 65
ஆடம்பர வாழ்வை இச்சித்தவனும் பசிவர
ஓடுவதெங்கே எனத் தெரியாது. 66
ஆதாரம் ஏதுமில்லா ஏழைகளின் பசித்துயரை
ஓதாமல் இருக்கப் படுமோ. 67
கூசி நின்றுபிச்சை கேட்டாலும்
கடிந்துப்
பேசி அனுப்ப ஏதுபுரிவர். 68
பொய்யனும் கள்வனும் பசியை நீக்கவே
அய்யோ தீது நினைவர். 69
அழியாப் பசியை ஒழித்தால் அஃதுஏழைக்கு
வழிபாட்டு இடம் அன்றோ. 70
பசியின்
அவத்தை
ஜீவஅறிவும் அறிவுக்கறிவான
ஜோதியறிவும் பசியால்
பாவப்பட்டு
மறை படும். 71
புருட
தத்துவமும் பிரகிருதி தத்துவமும்பசியால்
மருண்டு
சோர்வு படும். 72
மனம்புத்தி
சித்தம் மும்மலமும் பசிவந்திட குணங்கெட்டு பேதப் படும். 73
பிராணன்
சுழன்று பூதங்கள் புழுங்கிப்பசியால்
தராதரம்
இழந்து கெடும். 74
வாதபித்த
சிலேட்டுமங்கள் வயிற்றுப் பசியால்
நாதநிலை
மாறு படும். 75
காதுகள்
செவிடாகும் கண்கள் பஞ்சடையும்
ஈதனைத்தும்
தரும் பசி. 76
நாஉலர்ந்து
தோல்மெலிய நாசி குழைந்து
மாஉலகை
மறக்கும் பசி. 77
காரிருள்
சூழுற கைகால் சோர்வுறவாக்கும்
மாறிட
வைக்கும் பசி. 78
பற்கள்
தளருற பசைமேனி ரோமமும்
வெறிக்கிடச்
செய்யும் பசி. 79
நரம்பு
நாடிகள் நெலிந்து எலும்பும்குழைய
நரகவலி
ஊட்டும் பசி. 80
பசியின் கொடுமை
மூளை
சுருங்கஇதயம் மெல்லென வேக
ஆளை
அடிக்கும் பசி. 81
சுக்கிலம்
வெதும்பி சில்லென வற்றஈரலை
பக்கெனக்
கரைக்கும் பசி. 82
இரத்தமும்
சலமும் இறுகிக்காய மாமிசப்
புரதத்தைக்
கெடுக்கும் பசி. 83
வயிறு
பகீரென்று வற்றிச் சுருங்கி
உயிர்விடும்
அபாயம் பசி. 84
தினம்
மூன்றுவேளை தின்னாத வயிறு
சினம்
கொள்ளும் உன்னை. 85
இடுகாடு
செல்லா திருக்க இத்தேகத்திற்கு
கொடுப்பாய்
குடி கூலி. 86
மணியடித்தால்
சோறு மறந்து விட்டால்
மணி
வீட்டிலடிக்கும் பாரு. 87
உடல்
வருத்திவிரதம் இருப்பினும் பசி
அடக்க
வல்லீர் யார். 88
கடல்
வற்றினுமாகும் குடல் வற்றின்
மடல்
அனுப்புவான் பார். 89
சாப்பாட்டு
நேரம் சிறிதே மாறினும்
கூப்பாடு
போடு தம்பி. 90
உபகாரக்கருவி
அவத்தைகள் நீக்க அன்பைப் பொழிய
அவன் அளித்தது பசி. 91
அவத்தைகள் நீங்கி உறுபசியாற ஜீவனும்
தவமும் இன்ப முறும். 92
அறிவும் தத்துவமும் அகமும் முகமும்
எரித்தப்பசி நீங்க மலரும். 93
நரகசனன மரணவேதனைகள் நன்றே கூடி
பிறந்த வேதனையே பசி. 94
எங்கும் நிறைந்து என்றும் மாறாதஇறை
சங்கம இன்பமே பசியாறல். 95
அன்பின் உருவாய் இறைவனின் ஆற்றலாய்
என்று மிருப்பது உணவு. 96
சேர்ந்து வாழ சகத்தோரைக் கூடி
இருக்க வைப்ப துணவு. 97
இதயம் துடிக்க ஒருவருக் கொருவர்
உதவும் கருவி உணவு. 98
என்புதோல் போர்த்த உடம்பில் இறை
அன்பு என்பதே உணவு. 99
வயிற்றுக்கு அலையும் வறியோர்க் குதவும்
உயிர் இரக்கமே உணவு. 100
உயிரிரக்கம்
விடுத்தப் பசியெனும் விடமுண்டு காக்கும்
கடவுள் அருளே உணவு. 101
பசி வந்திட்டால் பெண்போகமும் விடுத்து
ருசிக்க வைப்ப துணவு. 102
ஏழைகள் வயிற்றில் எரிகின்ற பசியை
ஒழித்தலே உயிரி ரக்கம். 103
ஏழைகளின் விளக்கு அவியாமல் உணவு
வழங்கல் உயிரி ரக்கம். 104
ஜீவ ஆலயம் ஜீவித்துவிளங்க உணவு
ஈவதே உயிரி ரக்கம். 105
இயற்கை விளக்கம் ஆக்கையில் உணவால்
உயர்த்துதலே உயிரி ரக்கம். 106
கடவுள் இன்பம் கருதுவோர்க்கு உணவுத்
தடைநீக்கலே உயிரி ரக்கம். 107
தேகஜீவத் தத்துவம் தளராதிருக்க உணவு
போகமளிப்பது உயிரி ரக்கம். 108
பசியெனும் புலிப்பாய பலியாகும் ஏழையை
அசியால்பேணல் உயிரி ரக்கம். 109
பசியெனும் விடத்தால் பயந்தோனை உணவால்
வசியப்படுத்துதல் உயிரி ரக்கம். 110
இரக்கம்
தேள்சென்று வயிற்றில் தீண்டுதலைத் தடுக்கும்
உள்ளமே உயிரி ரக்கம். 111
குணங்கெடுக்கும் பசிப்பாவி குலைய வழங்கும்
உணவே உயிரி ரக்கம். 112
மானம்போகும் பசி மீளாதுதின மளிக்குமன்ன
தானமே உயிரி ரக்கம். 113
விதியால் சபிக்கப்பட்ட வறியவன் பசியை
மதியால் நீக்கல் இரக்கம். 114
இரவில் உணவுத்தேடும் ஏழைக்கு உணவிடும்
உறவன் நிலையே இரக்கம். 115
நடந்தும் கேட்டும் நினைந்தும் கிட்டாஉணவை
இடஞ்சென்று தருதல் இரக்கம். 116
வாய்விட்டு கேட்குமுன் வலிந்து உணவிட்டு
மெய்மானங் காப்பது
இரக்கம். 117
என்வினை முன்வினையோ
என்பவர் பசியை
தன்னன்பால் தீர்ப்பது
இரக்கம். 118
வாடி உயிரொடுங்கிய
விவேவிகளின் பசியை
தேடி ஆற்றுவது இரக்கம். 119
பசிபயம் விசாரப்
பேய்பிடித்த ஏழைகள்
புசிக்க பேய்விரட்டல்
இரக்கம். 120
தயவு
மாற்றுத் திறனாளிகளின்
மாறாப் பசியினை
ஏற்று நீக்குவது
தயவு. 121
எவ்வொழுக்கத் தாராயினும்
எந்நாட்ட வாராயினும்
அவ்வன்பர் பசியாற்றல்
தயவு. 122
சத்துவ ஆகாரத்தைச்
சார்ந்த தாவரம்மிரு
கத்திற்கும் பசியாற்றல்
தயவு. 123
பறவை ஊர்வனத்திற்கும்
பசிவந்திட சத்துவ
இரை கொடுப்பது தயவு. 124
பத்தும் பறந்திடாது
பித்தம் பிடித்திடாது
சத்தை அளிப்பது
தயவு. 125
காலைமதியம் இரவு
காணும்பசிநீங்க தருமச்
சாலை நடப்பது தயவு. 126
கடும் பசிப்பிணியைக்
காணா உலகோர்க்கு
எடுத்து ரைப்பது
தயவு. 127
உள்ளார் யாவரும்
உணவில்லா ஏழைக்கு
அள்ளித் தருவது
தயவு. 128
பலர்கூடி பலன்காண
பாரில் பசித்தோரே
இலர்எனக் காண்பது
தயவு. 129
வீதிக்கொரு தருமச்சாலை
வாய்த்திட நல்
நீதிக் காண்பது
தயவு. 130
கொலைத்துன்பம்
வலியால் துடிக்கும் வெட்டுண்ட உயிரின்
வலியை அறிவர் யார். 131
கொலைச் செயலால் கடுந்துன்பம் அடைவது
விலை யில்லா உயிரே. 132
உயிரை விரட்டு மோர்வன் செயல்செய்வோர்
மயிரும் தப்பாது நரகில். 133
உடல் பரிணாமம் அடைய விடாது
குடலெ டுப்பான் அரக்கன். 134
குறித்த மதங்களும் களித்தசமயச் சடங்குகளும்
அறியாது கொலைத் துன்பம். 135
இறை இன்பம் அறியாதான் அன்பிலான்
அறியான் கொலைத் துன்பம். 136
ஐம்புலனும் நடுங்கி உடலில் ஓர்முடியும்
விம்மி துடிக்கும் கொலையாலே. 137
கொலைச் செய்து களித் திருப்பவன்
தலை பார்ப்பதும் பாவம். 138
மூச்சு ஓட்டத்தை முடக்கி அருள்
வீச்சை குலைக்கும் கொலை. 139
கொலைக் கருவி கையிலேந்தும் கடவுள்
சிலை வணங்குதல் பாவம். 140
கொலை
மறுத்தல்
மனிதனைக் கொல்லும் மனிதனின் நாட்டுப்பற்று
சனியனை துறந்து விடு. 141
பொருளால் கொலை புரிவோர் மனதை
அருளால் திருத்தி விடு. 142
பழிக்குப் பழியாகப் பாழும் கொலைபுரியும்
அழிச் செயலை விடு. 143
கோபத்தால் அடுத்தோரைக் கொலை செய்யும்
ஆபத்தை செய்யா திரு. 144
சுயநலம் வேண்டி சுற்றத்தாரை கொலைசெய்யும்
மனநலம் வேண்டா திரு. 145
தன்னை வெறுத்துத் தற்கொலை செய்யும்
வன்மனம் கொள்ளா திரு. 146
பெண்ணாசை மண்ணாசை பேராசைப் பேயால்
இன்னுயிர் எடுக்கா திரு. 147
தான்கொலை செய்வான் தன்னை கொலைசெய்
வானிடம் கெஞ்சுவான் ஏன். 148
சதிசெய்து கொலை செய்யும் எண்ணமளிக்கும்
மது குடியா திரு. 149
விட்டாலும் விடாத வஞ்சகர் கூட்டத்தின்
நட்பை நாடா திரு. 150
புலை
மறுத்தல்
அடித்துக் கொலைசெய்ய அழுது கண்ணீர்
வடித்ததை உணவாக ஏற்காதீர். 151
கொலை செய்வதோர்க் குற்றம் கொலைசெய்தப்
புலையை உண்பதும் குற்றம். 152
மாடுஆடு கோழிபன்றி முட்டைமீன் இனங்களை
நாட்டு மிருகம் உண்ணும். 153
உணவாக கால்நடைகளை உண்டீர் மனித
குணம் போனதைப் பாரீர். 154
பிறர்வீட்டுப் பிணத்தைப் பங்கிட்டு உண்பது
அறம் என்பான் மதவாதி. 155
விடுமுறை நாட்களில் விருந்தாக புலைநுகர
கடும் நரகம் போவர். 156
ஒன்றும் அறியாத உயிர்களைக் கொன்று
தின்றுடல் வளர்போர் பாவி. 157
கொலைபுலை தவிர்க்காது கோவிலில் மனித
அலைஎன கூட்டம் எதற்கு. 158
கொலைபுலை தவிர்த்தவன் கோவி லுருவாய்
மலைஎன இருப்பான் நமக்கு. 159
மெய்யறிந்தும் புலால் மறுக்காத புலையன்
தெய்வம் தொழுவது இழுக்கு. 160
ஆன்மநேயம்
அண்டஉயிர் யாவும் அவற்றுள் காணும்
பிண்டஉயிர் யாவும் உறவு. 161
இறையும் உயிரும் ஒன்றுடன் ஒன்று
உறையும் நிலை உணர். 162
ஒத்த உரிமை உடையது உயிர்களென்பர்
சித்த மரபு உடையர். 163
எல்லா உயிரும் என்னுயிர் என்பர்
நல்லார் அஃதிலார் யார். 164
பயிர் வாடுதல்கண்டு பண்பு டையார்
உயிர் தான் வாடும். 165
இன்புற் றிருக்கவே உயிரெலாம் விரும்பும்
அன்பை ஈந்து வாழ். 166
உன்னுயிர் போலவே இங்கு மண்ணுயிரும்
இன்புற்று வாழ நில். 167
ஊன்றிய பிண்டத்தில் உயிரான இறையே
ஆன்மா என்று உணர். 168
ஓர்ஆன்மா வருந்த
ஓங்கிய பேரண்டமும்
சேர்ந்து வருந்தும்
ஆங்கே. 169
ஆன்மநேயம் ஆன்ம
அறிவு ஆன்ம
இன்பம் காண்பது வாழ்வு. 170
உயிர்பலி
பலிகேட்கும் மதவேத பாங்கெல்லாம் ஓர்
மலிவான மாய வழி. 171
அனாதியாம் உயிரை அனாதி கேட்குமென்ற
பனாதி சொல் பொய். 172
வழிபடு மிடங்களில் வயிற்றிற்காக பலியிடல்
இழிசெயல் எனச் சொல். 173
துடிக்க பலியிட்டு தொழுகிறோ மெனநா
தடிக்க உண்பது கயமை. 174
நேர்த்திக் கடனென நலிந்தஉயிரை பலியிட
யார் சொன்னது சொல். 175
எவ்வுயிருள்ளும் அவன் இருக்க அவனுக்கு
அவ்வுயிரை பலியிடல் ஏன். 176
கொலை புலைசார் கோவிலெலாம் கற்பனைக்
கலைகள் என்றே ஓது. 177
கருணைநிறை கடவுள் கொடும்பலி கேட்குமோ
அறிவு உண்டேல் கேள். 178
குடும்ப நலனென கோவிலில் பலியிடல்
அடுக்குமோ நீதியோ புகல். 179
பக்தி செய்யுமிடத்தில் பார்க்கவே நடுங்கும்
கத்திக் கென்ன வேலை. 180
அபரஜீவகாருண்யம்
தாக நீக்கம்
கடும் வெப்பத்தில் களைத்து வருவோர்க்கு
கொடுக்கும் நீர் அமுது. 181
உண்ணும் உணவுக்கு இடையில் அருந்த
தண்ணீர் தருவதும் தர்மம். 182
வேர்க்க உழவுசெய்யும் வேளாண் தாகம்
தீர்க்க தருவாய் தன்ணீர். 183
எண்ணற்றோர் கூடும் இடங்களில் தயவுடன்
தண்ணீர் பந்தல் அமை. 184
இயற்கை வழங்கும் இன்னமுத நீரை
விலைக்கு வழங்கல் பாவம். 185
குடிக்கும் நீருள்ள குளத்தைத் தூற்று
குடி யிருத்தல் பாவம். 186
தண்ணீர் இல்லா தளத்தில் இரக்கத்துடன்
கிணறு வெட்டுதல் நன்று. 187
இதயம் மிகத்துடிக்க இருண்டு விழுந்தார்க்கு
முதல் உதவியாம் நீர். 188
மயக்கம் வந்து மாளும் தருவாயில்
தயக்கமின்றி தருவாய் நீர். 189
அருளோடு விசாரித்து அன்போடு தண்ணீர்
தருவதும் இரக்கம் தான். 190
பிணி
நீக்கம்
அபாயப் பிணியை ஆகாரப் பக்குவத்தால்
உபாயம் தெரிந்து தெளி. 191
மிகுந்தப் பசியினால் மலிந்தப் பிணியினை
தகுந்த உணவால் தீர். 192
மனிதப் பிணியை முயங்கித் தீர்ப்போர்க்குக்
கனியாகும் கடவுள் அருள். 193
பற்பல பிணிகளுக்கு பாரில் விளையும்
சிற்சில இலையே மருந்து. 194
நோயால் நலிந்த நாட்டாரை பாரிலோர்
நாயும் மதிக்காது பார். 195
துன்பமே எந்நாளும் துய்க்கும் நோயாளிக்கு
உன்இன் முகமே மருந்து. 196
பிணி நீக்கும் பணி செய்வோர்க்கு
அணி யாகும் அன்பு. 197
நோய் தீர்க்கும் நல்லோரை இவ்வுலகம்
தெய்வ மென்றே தொழும். 198
பொருள் இல்லாதாரின் பிணியை நீக்கும்
அருள் உள்ளாரே குரு. 199
கடும்பிணிவாராது உயிரிரக்க முடையோர்க்கு
நீடுவாழு மவர் வீடு. 200
இச்சை நீக்கம்
தனித்த தேவைகளைத் தீர்க்க பொருளீட்டும்
பணி கொடுப்போர் மேலோர். 201
உலகியல் அறிவூட்டி அறியாமை நீக்கும்
கல்வி அளிப்பவ னாசான். 202
உடுக்க உடையளித்து இருக்க இடமளித்து
அடுத்தும் காப்பவன் தந்தை. 203
பாசமுடன் அணைப்பும் பண்புடன் ஊட்டி
நேசமாய் வளர்ப்பாள் தாய். 204
தத்தமது உடலிச்சை தீர்க்க பெண்கொடுத்த
சித்தன் தந்தைக்கும் மேலோன். 205
தனக்கோர் வாரிசை தருகின்ற மனையாட்டி
இனமான தாயினும் மேலாள். 206
பொன்மண் இச்சை பொருந்தா தெனினும்
தன்நிலை யறிந்து தீர். 207
பலவித இச்சைகளை பாங்குடனே ஆய்ந்து
நலவழி தீர்ப்பவன் அரசன். 208
இச்சை யடக்க இச்சை கொண்டோன்
பிச்சை எடுப்ப தில்லை. 209
எல்லா உயிரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
நல்லிச்சை யாகும் இங்கு. 210
எளிமை நீக்கம்
மானங்கெடா வாழ்வை மேவியோர்க்கு உதவி
ஈனும் மனத்தோர் பெரியோர். 211
கொடிய வறுமையை களைத் தெறிந்து
நெடிந்துய வைப்பார் நல்லர். 212
உலகில் சிறந்துவாழ அறியாமையை நீக்கி
நலமுற செய்பவன் அறிவாளி. 213
தளர்ந்த அத்தருனம் தளர்வெலாம் நீக்கி
வளர்த்திடும் நல் நட்பு. 214
தாழ்வால் அடிமைத் தளை பூண்டோர்க்கு
வாழ் வளிக்கும் இரக்கம். 215
நலிந்த எளியோரை நாடி அவர்களுக்கு
வலிமை யூட்டல் அறம். 216
கடக்கும் பாதையில் கிடக்கும் பொருளின்
திடம் காப்பது இரக்கம். 217
நியாயம் பிறழ்ந்தால் நாட்டில் யார்க்கும்
தீயாகும் எளியோர் கோபம். 218
எளியாரை வலியார் அடக்கி ஆண்டால்
சளியாது இயற்கை எழும். 219
எளிமை யார்க்கும் அழகைக் கொடுக்கும்
வலிமையிலும் எளிமை நன்று. 220
பயம்
நீக்கம்
பசியும் கொலையும் புகட்டும் பயத்தை
அழிப்பதே நல் ஆன்மீகம். 221
பயம் பூஜ்ஜியமாக்க புகலும் மார்க்கத்தை
தயக்க மின்றி பற்று. 222
உன்னை யறியவிடாது உண்மை தெரியவிடாது
தன்னை மறைக்கும் பயம். 223
மதமும் சமயமும் மனிதரிடத்தே பயத்தை
நிதமும் ஊட்டி வளரும். 224
பயமும் மதமும் பின்னி பிணைந்திருப்பதை
நயமாய் உரைக்கும் சன்மார்க்கம். 225
சடங்கும் ஆச்சாரமும் சமய மதங்களும்
விடமெனக் கொள் பயந்து. 226
மூட நம்பிக்கை மூடர்களைப் பார்த்துச்
சாட பயங்கொள்ள லாகாது. 227
காலந்தோறும் வரும் கண்மூடி பழக்கத்தை
வாலறுத்து விட எழு. 228
மயக்கும் ஆச்சார மடசடங்கால் அடையும்
பயமே மரண மாகும். 229
மரணமிலா பெருவாழ்வு மானிடர் யாரும்பெற
இரக்கத்தால் அச்சம் தவிர். 230
கடவுள் வழிபாடு
ஜீவ வழிபாடு
உயிரிரக்க ஒழுக்கமே உண்மைக் கடவுள்
இயற்கை வழி பாடு. 231
காலமுள்ள போதே கடவுள் அருளைப்பெற
ஞாலத்தார் விழைதல் நலம். 232
ஒப்பற்ற பெருவாழ்வாம் ஆன்ம லாபத்தை
தப்பாமல் தயவால் பெறு. 233
காருண்ய வழியொன்றே கடவுள் அருளென்னும்
பேருண்மை காட்டும் இங்கு. 234
இரக்கத்தால் மட்டுமே இறையருள் நம்
கரத்தில் காணக் கிட்டும். 235
உயிர் இரக்கத்தால் அறிவும் அன்பும்
நயந்து உடன் விளங்கும். 236
ஜீவ காருண்யமின்றி சமயமதச் சடங்கால்
ஆவ தெல்லாம் பாவம். 237
சரியைகிரியை யோகஞான சாதனங் களன்றி
இரக்கமே தரும் பெருவாழ்வு. 238
ஆன்ம உருக்கமே இறை வழிபாடென்ற
சான்றும் வேண்டுமோ சொல். 239
இறைநிலை யறிந்து அம்மய மாதல்
உயிரிரக் கத்தா லாகும். 240
பசியாற்றல்
அறிவுவிளங்கிய ஜீவர்களின் இறை வழிபாட்டுக்கு
அறனாகும் ஜீவ வழிபாடு. 241
பசியாற்று வித்தலை புரியும் சமுசாரிகள்
வசிக்கும் வீடே வீடு. 242
சர்வசக்தி தாமடைய சமுசாரிகள் பசியாற்றும்
விரதம் ஒன்றே வழி. 243
அயலாரை விடுத்து உறவோரின் பசிநீக்கல்
உயர்வு என்பது இல். 244
உறவோரை விடுத்து அயலாரின் பசிநீக்கல்
சிறந்தது என்பது இல். 245
உறவோர் அயலாரின் உறுபசிகண்டு அதைநீக்கி
அறத்தொடு நிற்றல் உயர்வு. 246
இருதிறத்தார் பசிநீக்க இல்லறத்தில் ஈன்ற
பொருளை சிக்கனம் செய். 247
விவாக காரியங்களில் விநோத சடங்கைவிட்டு
விவேக நாட்டம் காண். 248
ஆடம்பர சடங்குகள் ஆபத்து வருங்கால்
கூடியோரைக் காப்பது இல். 249
ஏழைக்குப் பசியாற்ற அருள்திரு விவாகத்தால்
வாழையடி வாழைஎன வரும். 250
சமுசார வாழ்வு
ஏழையின் திருப்தி
இன்பமே சமுசாரிகளின்
ஊழை ஓட்ட வல்லது. 251
குன்மம் சூலை குஷ்டநோயும்
பிறர்பசியாற்ற
புன்பட்டு ஓடும்
பார். 252
சந்ததி இல்லாதார்
சங்கடந்தீரதாம் பசியாற்ற
விந்ததில் உயிர்
வரும். 253
அற்பவயது தமக்கென்று
ஆய்ந்த சமுசாரிகள்
அற்பபசியை நீக்கஆயுள்
நீடும். 254
வறியவரின் பசியைநீக்க
வானறிவும் கல்வியும்
அரியசெல்வ போகமும்
பெறுவர். 255
கோடை வெயிலும் குளிருமே அன்னக்
கொடை யளிப்ப வர்க்கு. 256
பெருமழை பெருங்காற்று பெரும்பனி பேரிடியும்
வருத்தாது பசியாற்றும் சமுசாரிக்கு. 257
சிக்கனஞ்செய்து பசியாற்றும் சமுசாரிக்கு எங்கும்
எக்கனமும் வராது பிணி. 258
விஷக்காற்று விஷசுரம் விடூசிகைப் பிணிகளும்
விஷப்பசி நீக்கினாரை விடும். 259
தாயுள்ளம் கொண்டு தருமமிடுவோரை அரசனும்
தெய்வமும் அவமதி யார். 260
பசியின் பயன்
பெரு நெருப்பும் பெருகியஆற்று வெள்ளமும்
தரும வழியாரைத் தொடா. 261
கள்ளரும் விரோதியும் கருணை யுடையோரை
எள்ளி கலக்கப் படார். 262
விளைநிலம் உழைப்பின்றியும் விளையும் பசிக்
களை எடுக்கும் சமுசாரிக்கு. 263
வியாபார இலாப விருத்தி
பிறர்பசிபோக்கும்
நியாய முடையார்க் குண்டு. 264
உத்தியோகக் கெடுதி இல்லா மேன்மையுறுவர்
பித்தனுக்கும் பசி தீர்ப்பவர். 265
தேவரும் மனிதரும் தபசியும் சமுசாரிகள்
யாவர்க்கு மாணை பசியாற்றல். 266
தருமத்தைக் கடவுளே தடுத்தாலும் பசியாற்றும்
கருமத்தை விடாது செய். 267
போகியும் பிறரது பசியாற்ற நினைத்தபோது
யோகியு மாவர் நன்று. 268
கூனிகுறுகியோர் பசியைக் கலைத்த யோகி
ஞானியு மாவர் சிறந்து. 269
இடர்கலைந்து பசிநீங்கி இன்பம் கண்டவர்
கடவுளைக் கண்ட வராவர். 270
பசிநிலை
இத்தரையில் பசியாறி இறையின்பம் காண்பவர்
முத்த ருமாவர் நயந்து. 271
மெய்யெல்லாம் பசிநீக்கி மகிழச் செய்தாரை
தெய்வமாகப் பாவிப்பர் பசித்தோர். 272
எண்ணமெலாம் மகிழ உறுபசி நீக்கியோர்
உண்மைக் கடவுளு மாவர். 273
ஒழுக்க முடையாரின்பசி அழுக்கை நீக்கியாரை
விழுந்து தொழுவர் யாரும். 274
தாக்கிய கடும்பசித் துன்பம் யார்க்கும்
போக்கி உத்தம னாகுக. 275
மறக்காது பசிப்பிணியாற்றி
மோட்ச வீட்டின்
திறவு கோலைப் பிடி. 276
பசிப்பிணி யாற்றாத
பக்தன்யோகி ஞானியும்
வசிக்க மீண்டும்
பிறப்பர். 277
ஈயாது இரங்காது
ஈடுபடும் கடவுள்வழிபாடு
மாயா ஜால மாகும். 278
இழியாது பசிப்பிணி
யாற்றுவது எக்காலத்தும்
அழியா இன்பம் தரும். 279
ஊழ்வினை யகற்றி
உறுபசி நீக்குவோரென்றும்
வாழ்க வாழ்க நீடுவாழ்க. 280
ஆன்ம இன்பம்
இம்மை இன்பம்
ஈன்ற மனிதப்பிறப்பு அழியும் முன்னே
ஆன்ம இன்பம் அடை. 281
சிறிய கரணங்களால் சிறியமுயற்சி மாயா
நெறியே இம்மை இன்பம். 282
சிறிய விடயங்களை சிலநாள் அனுபவிக்க
அறிவது இம்மை இன்பம். 283
தேகக்கரண புவனபோகத் தாழ்வின்றி நல்ல
ஏகஅறிவே இம்மை லாபம். 284
பசிப்பிணி நோய்கொலை போன்ற தடையின்றி
வசிப்பதே இம்மை லாபம். 285
உறவினர் சினேகர் அயலாரும் கூடித்தழுவி
உறவாடுதல் இம்மை லாபம். 286
சற்குண மனைவிநல் சந்ததிகள் பெற்ற
சிற்றின்பமே இம்மை லாபம். 287
விடய இன்பங்களை வருந்தி முயன்றுநேர்
பட வாழ்தல் பெருமை. 288
அன்பு தயைஒழுக்க அருங்குணங் களுடன்
இன்புசெய் வாழ்தல் பெருமை. 289
அகத்தூய்மை பொறுமை ஆளும் வாய்மைப்
புகழோடு வாழ்தல் பெருமை. 290
மறுமை
இன்பம்
பெரியதேக கரணங்கள் பெற்று பெருமுயற்சியால்
துரியம் காண்பது மறுமை. 291
கலங்காத கரணங்கள் காணும் திருமேனியே
மலங்காணா பெரிய தேகம். 292
ஏகநிலை இனிதுற ஈட்டுங்கரணங்கள் பெரிய
தேக கரணங்க ளாகும். 293
நெருங்கியே நீடுவாழ்வை நினைப்பற நினைப்பதுவே
பெரும் முயற்சி யாம். 294
அன்புருவமாகி அருளுருவ மாகிபலநாள் காணும்
இன்பமே மறுமை வாழ்வு. 295
இம்மை நற்குணத்துடன் இணைந்து துரியத்தில்
தம்மைக் காண்பது மறுமை. 296
அருளின் ஏகதேசத்தில் அடைவது இம்மை
மறுமை இன்ப லாபம். 297
மறுமை இன்பம்காண மறவாது இம்மை
நெறி பிடித் தொழுகு. 298
மறுமையும் இம்மையும் மரணத்திற்கு பின்னே
உறும் இன்ப மல்ல. 299
மரணத்திற்கு பின்பே மறுமை என்பவர்
இரக்க மில்லா தார். 300
பேரின்பம்
இயற்கை இன்பத்தை எக்காலத்தும் அனுபவிக்க
இயங்கும் இன்பம் பேரின்பம். 301
இயற்கை விளக்கம் உண்மை வடிவாகி
வயங்கு மின்பம் பேரின்பம். 302
இன்புருவம் எய்தி எல்லாந் தானாகும்
அனுபவமே பேரின்ப லாபம். 303
சுத்தபொன் வடிவாகி சுதந்தரம் பெறுதல்
சுத்த தேகத்தின் பெருமை. 304
வான நிலையாகி விளங்குதலே பூரண
ஞான தேகத்தின் பெருமை. 305
பஞ்ச பூதங்களும் பேரின்பம் பெற்றோர்க்கு
அஞ்சி ஒடுங்கும் ஒன்றாய். 306
அண்டங்களை அணு வாகக்கண்டு அணுவை
அண்டமாகக் காண்பர் ஞானதேகி. 307
கடவுளறிவு கடவுள்செய்கை கடவுள னுபவ
முடனிருப்பர் ஞான தேகியர். 308
சடமாகிய துரும்பும் சுத்ததேகியர் பார்வைப்
படஐந்தொழில் செய்யும். 309
அருட் பூரணத்தாலே ஆகும்பேரின்ப லாபம்
அருள் பெற முயலுக. 310
இறையருள்
அருளென்பது
இறைவனின் இயற்கை விளக்க
அருட்
சத்தி என்றுணர். 311
அறிவார்
நினைவார் அனுபவிப்பார் சொல்வார்
அறியும்
வண்ணமுடைய தருள். 312
அறிவாரறியும்
வண்ணம் ஏகதேசம் விளக்கி
பூரண
விளக்கமே அருள். 313
எவ்விடங்
களிலும் எக்காலத்தும் நீக்கமற
அவ்விடம்
விளங்கும் அருள். 314
விளங்கும் அருளை விரைந்து பெறஉயிர்
வளி போற்றி அடை. 315
ஆன்ம தயவில் ஆழ்ந்தால் கடவுள்தயவு
தானே வந்து சூழும். 316
சன்மார்க்க மென்பது ஜீவ காருண்யமே
என்று அறிவர் மேலோர். 317
ஜீவ காருண்யம் இல்லாமை எல்லாம்
பாவ காரியமே யாகும். 318
கடவுள் இன்பவனுபவம் கூடி பூரணமாதலே
கடவுள் வழிபா டாகும். 319
ஆன்ம உருக்கம் உண்டாகஆக ஆன்மாவில்
ஊன்றிய இறையருள் பூக்கும். 320
ஆன்ம உண்மை
ஆன்ம இனமெல்லாம் ஒத்த உரிமை
சான்றது என்று அறி. 321
பசிபிணி கொலை படும் தடைகளை
நசிக்க வரும் அருளாற்றல். 322
வரும்சுக துக்கங்களை ஆன்மாவே யறியும்
கரண இந்திரியங் களறியா. 323
இத்தேகம் போல்முன் தேகமும்பின் தேகமும்
சித்திக்கும் வரை வரும். 324
தேக போகங்கள் தன்னிச்சையாலும் கடவுள்
ஏகவும் வருவது இல்லை. 325
முதல் சிருஷ்டியின்விதி முயற்சி தவறின
அதனால் வந்தன பிறவித்தொடர். 326
எக்காலத்தும் உள்ளது ஆன்மா அதனை
ஆக்கவும் அழிக்கவும் ஆகா. 327
விட்ட தேகத்தில் விட்ட ஜீவகாருண்யத்தால்
துட்ட பிறவிகளே பெருகும். 328
மூடத்தால் ஆன்மா பந்தப்பட்டு பூதாகாரியதேக
மெடுத்து பிறந்து அழும். 329
பூதாகாரிய தேகம் பெறமாயையே முதற்
ஆதார மாகி நிற்பான். 330
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqRElxOHRMUG1xaVU/view?usp=sharing
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.