வள்ளலாரின்
அணுக்கத்தொண்டர் சமரச பஜனை காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க
விவேக விருத்தி” என்னும் மாதாந்திர மின்னிதழில் (டிசம்பர் 2017) வெளிவந்தவை:
--அக்னிஹோத்ரம்
இராமானுஜ தாத்தாச்சாரியார்
இந்து
மதம் எங்கே போகின்றது – தொடர்-16
அதனால் எட்டு
வயதுக்குள் அவளை இன்னொருத்தன் கையில் பிடித்துக் கொடு. கல்யாணத்தில் இப்போது நிச்சயதார்த்தம்
என ஒரு சடங்கு வைக்கிறார்கள். சிலபேர் இதை நிச்சயதாம்பூலம் என்று சொல்கிறார்கள். ஏதோ
ஒன்றை சொல்லிவிட்டுப் போங்கள். ஆனால்… இதன் அர்த்தம் என்ன?... முன்பு எப்படி நடந்தது?...
என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?...
கிராமப்புறங்களில் சந்தையிலே ஆட்டையோ, கோழியையோ,
மாட்டையோ விற்பதற்காக வைத்து… பக்கத்திலே துண்டை கையால் மூடிக் கொண்டு விலை பேசுகின்றார்கள்
தெரியுமா?... இதன் பேர் தான் நிச்சயதார்த்தம். இன்னொரு முக்கியமான விசயம், இந்த நிச்சயதார்த்தத்தில்
மணப்பெண் மட்டும்தான் கலந்து கொள்வாள். மாப்பிள்ளைக்கு அங்கு வேலையே கிடையாது. இது
வெறும் லெளகீக சடங்கு. அதாவது மந்த்ரத்துக்கு இடமே இல்லை. ஆனால்… இன்று நிச்சயதார்த்தம்
என்ற பெயரில் திருமணத்துக்கு சமமான ஒரு சடங்கை உருவாக்கிவிட்டார்கள். வாத்யார்களை கேட்டால்
‘எல்லாம் பெரியவாள் சொன்னது…’ என்கிறார்கள்.
என்னை கேட்டால்…
இப்போது கல்யாணம் பண்ணி வைக்கும் புரோகிதம் பண்ணி வைக்கும் வாத்யார்களையெல்லாம் ஒரு
சிறைக்குள் போட்டு… அதாவது மறைச்சிறை அதுதான் வேதச்சிறை. அங்கே அவர்களுக்கு… உண்மையான
சடங்கு சம்ப்ரதாயங்களை கற்றுத் தரவேண்டும். வேதத்தில்… ஸ்மிருதிகளில் என்ன சொல்லப்பட்டிருக்கின்றது
என்பதை அர்த்தத்தோடு விளக்கி அவர்களுக்கு பயிற்சி கொடுத்து அதன்பிறகு அவர்களை வெளியே
அனுப்ப வேண்டும்.
சரி… சரி… நான்
என்ன சொன்னேன்?... எட்டு வயதுக்குள் அவளை இன்னொருத்தன் கையில் பிடித்துக் கொடு. அப்படியா…
‘மநுபிரபோ என்னால் முடியவில்லை. என் பெண் குழந்தையை கட்டிக் கொள்ள எந்த பொடிப் பயலும்
கிடைக்கவில்லை. அவளுக்கும் எட்டு வயது கடந்து விட்டது. இப்போது ருதுவாகி விட்டாளே…’
இப்படியாக ஒரு
ஏழை தகப்பன் மநுவிடம் மன்றாடுகின்றான் என்று வைத்துக் கொள்ளுங்கள். மநுவிடம் வாய்வழியாக
மனு போடுகின்றான் என கருதிக்கொள்ளுங்கள். அவனுக்கும்… அவனைப் போன்ற அப்பாக்களுக்கும்
மநு பதில் தருகின்றார்.
“பாணிக்கிரஹாப
நிகா மந்த்ராஹா
கன்யா ஸ்வே ப்ரதிக்ஷஹா…
நகன்யாஸீ…”
இது பதில் அல்ல.
தண்டனை எட்டு வயதுக்குள் பெண்ணுக்கு கல்யாணம் பண்ணவில்லை. அவள் ருதுவாகித்தான் கல்யாணம்
பண்ணி வைக்கின்றான். அவன் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?...
எட்டு வயதை
தாண்டி பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைக்கின்ற அப்பா… மநுவிடம் போட்ட மனு என்ன ஆனது?...
இப்போது மந்திரி பிரதானிகளிடம் மக்கள் கொடுத்த மனு எப்படி குப்பைத் தொட்டிக்குப் போகின்றதோ
அதே மாதிரிதான்.
அதோடு நின்றால்
பரவாயில்லை. கூடவே… நீ ஏனடா உன் பெண்ணுக்கு எட்டு வயது வரை கல்யாணம் செய்யாமல் இருந்தாய்.
கன்னிகா தர்மத்தை கால்களில் போட்டு மிதித்து விட்டாயே. இது பாவம் என்று உனக்கு தெரியாதா?...
இந்த பாவத்துக்கு தண்டனை என்ன என்று உனக்கு தெரியாதா? என மநு ஸ்மிருதி அந்த அப்பாவி
அப்பாக்களை பார்த்து அதட்டுகின்றது.
இக்கால அப்பாக்களுக்கு
தெரியாமல் இருக்கலாம். அக்கால அப்பாக்களுக்கு மநு வகுத்த தண்டனைகள் தெரியும். அதனால்
அவர்கள் ஆடிப் போயிருக்கின்றார்கள். அந்த தண்டனையை அனுபவிப்பதை அவர்களால் கனவில் கூட
நினைத்துப் பார்க்க முடியவில்லை. அந்த அசிங்கத்தை செய்வதை விடவும் தங்கள் ஆயுளையே முடித்துக்
கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள் அந்த அப்பாக்கள்.
அப்படிப்பட்ட
அளவுக்கு அது என்ன தண்டனை?...
“மாஸி மாஸி
ரஜஸ்தஸ்யஹா
பிதா பிபதி கோனிதம்…”
இந்த ஸ்மிருதி
விதியை எழுதுவதற்கு என் பேனா கூசுகின்றது. இப்படிப்பட்ட ஒரு கருத்தை சுமந்து கொண்டிருப்பதற்காக
சமஸ்கிருத பாஷையே கூச்சப்படவேண்டும். அந்த விதியின் விளக்கத்தை உங்களுக்கு உங்களுக்கு
தமிழில் நான் சொல்லும்போது… தமிழின் தரம் கெட்டுவிடக் கூடாதே என நான் பயப்படுகின்றேன்.
அது என்னவென்றால்…
அடே… கையாலாகாத
அப்பா… உன் பெண்ணை எட்டு வயதிலேயே இன்னொருவனுக்கு நீ பிடித்துக் கொடுக்க வேண்டும்.
தவறிவிட்டாய், அவள் இப்போது ருதுவாகிவிட்டாள். ருதுவான பின் மூன்று வருடத்திற்குள்
நீ அவளுக்கு மணமுடிக்கவில்லையென்றால்… அவளாகவே சுயம்வரம் நடத்தி தன் கணவனை தேர்ந்தெடுத்துக்
கொள்ளலாம். ஆனாலும் ருதுவாகும்வரை நீ அவளை உன் வீட்டிலேயே வைத்திருப்பது எப்படிச் சரியாகும்?
அதனால் உனக்கு
இதோ தண்டனை… ருதுவாகி கல்யாணமாகாமல் அவள் இருக்கும் காலம் வரை… உன் பெண்ணுடைய பஹிஷ்டை
காலத்தில் அதாவது மாதவிலக்கு காலத்தில் வெளியேற்றப்படுமே கழிவு அதை அப்பாவாகிய நீ வீணாக்காமல்
அருந்த வேண்டும். இப்படியொரு தண்டனையை பெறுகிறோமே என நீ வருந்த வேண்டும். அதற்காகத்தான்
இந்த தண்டனை.
பெற்ற மகளிடம்
அப்பா செய்ய வேண்டிய காரியமாக மநு சொன்னதை தெரிந்து கொண்டீர்களா?... எழுதி முடித்தபின்
என் பேனாவுக்கே குமட்டிக்கொண்டு வருகின்றது. மரண தண்டனை விதித்து தீர்ப்பு எழுதிய பேனாவை
முனை குத்தி முறித்துப் போட்டு விடுவதைப் போல… இந்த பேனாவையும் தூக்கி எறிந்து விடலாமா
என தோன்றுகின்றது.
அடப்பாவிகளா…?
வறுமைய்யாலோ, ஜாதக தோஷத்தாலோ… பெண்ணின் குறைபாடுகளாலோ கல்யாணம் தாமதமாகி எத்தனை பெண்கள்
வீட்டில் இருக்கின்றார்கள். ருதுவான பிறகு தான் கல்யாணமே பண்ண வேண்டும் என்பது பொதுவான
விழிப்புணர்வாளர்களின் கருத்து. அதையும் தாண்டி… மகளின் மாதவிலக்கை பருகச் சொல்கின்ற
மநு எத்தனை கடுமை?... கொடுமை…?
எரிகின்ற தீயில்
எது நல்ல தீ என்பது மாதிரி… இந்த தண்டனையிலிருந்து தப்பிக்க இன்னொரு பரிகாரத்தையும்
அருள்கின்றார் மநு. அப்படியா?... என்ன பரிகாரம்?...
உன் மகள் ருது
காலத்தில்… அவளது ப்ரம்ம ஹத்தி தோஷத்தை சாப்பிடவேண்டும் என்று சொன்னேன் இல்லையா…? அதிலிருந்து
நீ தப்பிக்க வேண்டுமானால்… அவளுடைய ஒவ்வொரு பஹிஷ்டையின்போதும் ஒரு பசுவை பிராமணனுக்கு
தானம் பண்ணிவிடு. இந்த கோ தானம்தான் உனக்கு பரிகாரம். அதாவது… மகள் ருதுவாகி கல்யாணம்
ஆகும் வரை அவளுக்கு எத்தனை பஹிஷ்டை நேருகின்றதோ… அத்தனை பசுக்களை தானம் பண்ண வேண்டுமாம்.
இப்போது புரிகின்றதா… எங்கு போய் எங்கு வருகின்றார் மநு என்று?
அந்த கோ தானம்
பண்ணுகின்ற செலவில் கல்யாணத்தையே நடத்தி விடலாம் என்கின்றீர்களா? கொடுமையான தண்டனை… அதிலிருந்து தப்பிக்க ‘வரும்படி’
தருகின்ற பரிகாரம். சரி… கோ தானம் கொடுத்தோ, கொடுக்காமலோ கல்யாணம் ஆகிவிட்டது.
அடுத்த ஒருவருடம்
வரை… அவளும் அவனும் தினமும் வீட்டில் ஒளபாசனம் பண்ணவேண்டும். அதென்ன ஒளபாசனம்?... அக்னி
காரியம் தம்பதிகள் தினமும் அக்னி வளர்த்து பண்ண வேண்டிய ஹோமம். இந்த ஒரு வருடம் வரை…
அவள் கணவன் வீட்டில் இருந்தாலும்… கணவனுக்கு பணிவிடைகள் செய்தாலும்… ஒரே மஞ்சத்தில்
படுத்தாலும் தேக சம்பந்தம் கொள்ளக்கூடாது.
ஒரு வருடம் கழித்து ஒளபாசன கடமைகளை முடித்த பின்னர்தான் சாந்தி கல்யாணம்.
இதற்கிடையில்…
ஒரே மஞ்சத்தில் படுத்திருக்கும் இருவரும் ஒன்றுசேரக் கூடாது என்பதற்காக மஞ்சத்தில்
அவளுக்கும் அவனுக்கும் இடையே ஒரு தர்பையை கிள்ளி போடுவார்கள். அந்த தர்பை தான் கந்தர்வன்.
அவன்… இருவரும் இணையாமல் பார்த்துக் கொள்வானாம். இப்போது இன்னமும் சிலர் சாஸ்திரத்துக்காக
இதைத் தொடர்கின்றார்கள் என்பது ஹாஸ்யம்.
இப்பழக்கம்
ஆதிகாலத்தியது. க்ருஹ சூத்திரம் சொல்வது இதன்படி வகுத்தவர்களாலேயே நடக்க முடியவில்லை.
என்ன ஆனது? அந்த ஒரு வருஷம்… 6 மாசங்களானது… அப்போதும் கஷ்டம்… என்னடா இவ்வளவு நாட்கள்
ஆகின்றதே என்று… கொஞ்சமாய் குறைந்து மூன்று மாதங்கள் ஆனது.
அடுத்தடுத்து
வந்த தலைமுறையினருக்கு மூன்று மாதமே பெருங்காலமாக இருந்தது. அப்புறம் பார்த்தார்கள்.
15 நாட்கள் ஆக்கினார்கள். அதுவும் தேய்ந்து 7 நாட்களானது. பின் கல்யாணம் ஆகி 3 நாட்கள்
கழித்து… இப்போது காலையில் கல்யாணம். ராத்திரி சாந்தி கல்யாணம்.
நமது செளகரியத்துக்கேற்ப
சாஸ்திரத்தை கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதை போல் ஆக்கி விட்டோம்…. என்பதற்காக சொல்ல
வந்தேன். சரி… மநு சொன்னபடி பால்ய கல்யாணம் பண்ணிக் கொண்டவர்கள் யாரையாவது காண்பிக்க
முடியுமா?
மநு தர்மப்படி…
எட்டு வயசுக்கு முன்பே கல்யாணம் செய்து கொண்ட ஒரே ஒரு ஜோடியையாவது காட்ட முடியுமா?...
என் காலத்தில் என் கண்களெதிரே எத்தனையோ பெண்களுக்கு மநு மணங்கள் நடந்திருக்கின்றன.
அவர்களை எனக்குத் தெரியும்… உங்களுக்குத் தெரியுமோ? தெரிந்திருக்க வாய்ப்பில்லையே?
அப்படியென்றால் எல்லாருக்கும் தெரிந்த… மிகப் பிரபல்யமான ஒரு ஜோடியை பிடித்து உங்களுக்கு
காட்ட வேண்டும். அதுவும் மநுமணம் செய்து கொண்டதால் அதாவது… பால்ய திருமணம் செய்து கொண்ட
ஜோடியாக இருக்க வேண்டும் அல்லவா?
சரி… இதோ உதாரணம்.
ராமர் – சீதா தெரியுமா?... அவர்கள்தான். சற்று முன்பு சொன்னேனே… பெண்குழந்தை மரப்பாச்சியை
வைத்து விளையாடிக் கொண்டிருக்கும். கூப்பிட்டு… கல்யாணம் பண்ணி வைத்து விடுவார்கள்
என்று. அதே போல் தான் ஜனகமகாராஜாவின் புத்ரியான சீதாதேவி விளையாடிக் கொண்டிந்த பருவத்திலேயே…
கல்யாணத்தை முடித்து விட்டார்கள்.
கல்யாணத்தின்போது
சீதாவுக்கு 6 வயது ராமனுக்கு 12 வயது. என்ன சொல்கின்றார் இவர். கம்பராமாயணத்திலே கம்பர்
வேறு மாதிரியல்லவா சொல்லியிருக்கின்றார். ராமரை சீதை பார்த்தபோது… சீதையின் தேகம் வெட்கத்தாலும்
வெப்பத்தாலும் சூடேறியது. அவள் படுத்திருந்த பஞ்சு மஞ்சம் இந்த சூடு தாங்க முடியாமல்
எரிய ஆரம்பித்தது. விரகச்சூடு தாங்காமல் அவளது பொங்கிய மார்பகம் அனல் கக்கியது.
சீதை தன் கழுத்தில்
போட்டிருந்த கருகமணி மாலைகள் இந்த சூடு தாங்கமுடியாமல் அறுந்து உதிர்ந்து கீழே உருண்டோடுகின்றன.
ராமன்… இப்படியாக சீதையை பாதித்தான்… அவளது கனவுகளை சோதித்தான்… என்றல்லவா கம்பர் எழுதியிருக்கின்றார்.
அப்படிப் பார்த்தால்
சீதைக்கு கல்யாண சமயத்தில் வயதுக்கு வந்த வயதாகத்தானே இருக்க முடியும்… என்று நமக்கு
நியாயமான சந்தேகம் எழலாம். கம்பர்… தமிழ்ச் சூழலில் கல்யாண பருவத்தில் சீதையை குழந்தையாக
காட்ட வேண்டாம் என நினைத்திருக்கலாம். ஆனால்… வால்மீகி ராமாயணத்தில்…
“தேஷாந் தாரக்நியாம்
பதி
சிந்தையா மாஸ தர்மாத்மா
சோபாத்யாய சபாந்த்த வஹா”… என்கின்றார் வால்மீகி.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.