வள்ளலாரின்
அணுக்கத்தொண்டர் சமரச பஜனை காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க
விவேக விருத்தி” என்னும் மாதாந்திர மின்னிதழில் (டிசம்பர் 2017) வெளிவந்தவை:
திருமந்திரம்
இந்த
மார்க்க உண்மை தெரிய வேண்டுமாகில் திருமந்திரத்தைக் கவனிக்கில் விளங்கும்.
திருமந்திரமும்
திருவாசகமும்
சாத்திரங்க
ளிற் சிறந்தது திருமூலர் திருமந்திரம் இஃது மொத்தம் எண்ணாயிரம்; தோத்திரங்களிற் சிறந்தது
திருவாசகம். இவற்றை ஊன்றிப் பார்க்கவும்.
---திருவருட்பிரகாச
வள்ளலார்
திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தால் 05-10-2000 வள்ளலார் வருவிக்கவுற்ற
தினத்தன்று திருஅருட்பா உரைநடை நூல் முதற்பதிப்பாக 3000 பிரதிகள் வெளிவந்தது. அந்நூலில்
பக்கம் 385-ல் மேற்காணும் வாசகங்கள் திருமந்திரத்தை பற்றி வள்ளலார் உரைக்கின்றார்.
இதனை ஏன் இவ்வளவு விரிவாக கூறுகின்றேன் என்றால்?... “இந்த மார்க்க உண்மை”… என்று தொடங்கும் வாசகத்தை தற்போது பதிப்பித்து வருகின்ற
திருஅருட்பா உரைநடை நூல்களில் “சன்மார்க்க உண்மை தெரிய வேண்டுமாகில்… என்று திரித்து
சிலருடைய விஷமத்தனத்தால் வெளியிடப்படுகின்றது. இதனை வன்மையாகக் கண்டிக்கின்றேன். வள்ளலாரை
பின்பற்றும் சன்மார்க்கிகளில் பலர் அறியாமையால் தற்போதய உரைநடை பதிப்பில் உள்ளதை படித்துவிட்டு
திருஅருட்பாவிற்கு ஈடாக திருமந்திரத்தை கருதத்தொடங்கிவிட்டனர்.
திருமந்திரம் உயிர் இரக்கத்தை எடுத்துரைக்கின்றதா? என்ற ஒரு கேள்வி
போதுமே! திருமந்திரத்திற்கும் சன்மார்க்கத்திற்கும் உள்ள வேறுபாட்டை அறிய. அனந்த வகை
சன்மார்க்கத்தில் திருமூலர் கூறுகின்ற சன்மார்க்கம் எதுவோ? அது எனக்குத் தெரியாது.
ஆனால் வள்ளலார் கூறும் சுத்த சன்மார்க்கம் அல்ல என்பது தெளிவு.
“இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரிய வொட்டாது, அசுத்த மாயாகாரிகளாகிய
சித்தர்கள் மறைத்து விட்டார்கள். சுத்தமாயாகாரியாகிய தெரிந்த பெரியோரும் இல்லை. சன்மார்க்கமும் இல்லை. சன்மார்க்கம் இருந்தால், அனுபவித்தறியாத அனுபவமும்
கேட்டறியாத கேள்வியும் நாம் கேட்டிருப்போம்.” என்று வள்ளலார் தமது பேருபதேசத்தில் உரைத்திருப்பதை
உணரவேண்டும். சன்மார்க்கம் இதுவரை இல்லை என்று சொன்னவர், சன்மார்க்க உண்மை தெரிய வேண்டுமானால்
திருமந்திரத்தை கவனிக்க வேண்டும் என எவ்வாறு சொல்லியிருக்கக் கூடும்?
அதற்கு அடுத்த உபதேசத்தில் திருமந்திரத்தின் இயல்பை வள்ளலாரே எடுத்துரைக்கின்றார்.
அதாவது, “சாத்திரங்களில் சிறந்தது திருமூலர் திருமந்திரம்” என்கின்றார். சுத்த சன்மார்க்கம்
எவ்வாறு சாஸ்திரத்தோடு ஒன்றிணையும்? சாத்திரத்தை வன்மையாக சாடவில்லையா வள்ளலார்? சாத்திரத்தை
சாடியவர்… சாத்திரங்களில் சிறந்த திருமந்திரத்தை எவ்வாறு சுத்த சன்மார்க்கத்திற்கு
பரிந்துரைப்பார்? ஞான மார்க்கம் கண்டவர் எவ்வாறு ஞானத்திற்கு முன் மார்க்கமான யோக மார்க்கத்தை
பரிந்துரைப்பார்?
சாதிமதம் சமயம்எனும் சங்கடம்விட் டறியேன்
சாத்திரச் சேற்றாடுகின்ற சஞ்சலம் விட்டறியேன்…(3318)
சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்
சாத்திரக் குப்பையும் தணந்தேன்…(4075)
சாத்திரம் புகன்று வாய் தடித்தேன்…(3571)
சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திர சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே…(5566)
சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி
நேத்திரங்கள் போற்காட்ட நேராவே…(5515)
சதுமறை ஆகம சாத்திரம் எல்லாம்
சந்தைப் படிப்புநம் சொந்தப் படிப்போ…(4955)
சாதி சமயங்களிலே வீதிபல வகுத்த
சாத்திரக் குப்பைகள் எல்லாம் பாத்திரம்அன்றெனவே…(5805)
இவ்வாறு
சாஸ்திரத்தை குப்பை என்றும் சேறு என்றும் சந்தைப் படிப்பு என்றும் சாடியவர் எவ்வாறு
சாத்திரங்களில் சிறந்த (குப்பைகளில் சிறந்த) திருமந்திரத்தை சுத்த சன்மார்க்கத்திற்கு
பரிந்துரைப்பார்? சுத்த சன்மார்க்கத்திற்கு திருஅருட்பா ஒன்றே ஆதாரம். திருமந்திரம்
சாஸ்திர யோக மார்க்கத்திற்கு தலை நூல் என்று அறிதல் வேண்டும். யோகம் கற்பவர்கள் திருஅருட்பாவை
நாடக்கூடாது. ஞானம் கற்பவர்கள் திருமந்திரத்தை நாடக்கூடாது. அவரவர்களுக்கு அவரவர் வீடு
மட்டுமே முக்கியம். வீட்டை மாற்றிக்கொள்ளும் ஆர்வம் உடையவர்கள் மாற்றிக்கொள்ளுங்கள்.
ஆனல் எனக்கு இரண்டு வீடுமே வேண்டும் என்றால் இயற்கை அதற்கு இடம் கொடுக்காது. ஒரு வீடுமின்றி
போவீர்கள்.
“இந்த மார்க்கம்…” என்று வள்ளலார் அறிவிப்பது
சாஸ்திர மார்க்கத்தையே என்று அறிய வேண்டும். “சாஸ்திர மார்க்கம் அறிய வேண்டுமாகில்
திருமந்திரத்தை படித்தால் போதும்” என்றே அவர் உரைக்கின்றார். நாம் “இந்த மார்க்கம்…”
என்பதை சன்மார்க்கம் என்று எடுத்துக்கொள்வது மிகவும் தவறு. எனவே பழைய படியில் உள்ளவாறே
(பதிப்பில்) இனி பதிப்பிக்கும் திருவருட்பா உரைநடை நூலில் “இந்த மார்க்கம்” என்றே அச்சடிக்கவேண்டும்.
அதனை நமது தவறான கற்பனைகளுக்கு இடம் கொடுத்து மனம் போன வழியெல்லாம் அச்சடிக்கக்கூடாது.
இதனை வள்ளலார் தெய்வ நிலையத்தார்க்கு ஒரு வேண்டுகோளாக வைக்கின்றேன். சன்மார்க்கிகளும்
உண்மை தெளிந்து இப்படி பதிப்பதை கண்டிக்க வேண்டும். மாற்று கருத்து இருக்கும் அன்பர்கள்
எம்மை தொடர்பு கொள்ளலாம். நன்றி.
--தி.ம.இராமலிங்கம்
திருமந்திரத்தில் புலால் உண்ணாமை, சீவனனைத்தும் சிவம் என்ற கருத்தை வலியுறுத்தும் எண்ணற்ற மந்திரங்கள் உள்ளது..
ReplyDeleteதங்களின் அறியாமை.... ஆண்டவன் சித்தம்.
உண்மைதான் ஐயா. திருமந்திரம் படிக்கும் சிவனடியார்களில் பெரும்பாலர்கள் ஏன் அசைவமாக இருக்கின்றார்கள்?
Delete